Malar – 4

gcpstagingtestingtag_34b3556e_1589692232457_cmprsd_40-becc71ba

அத்தியாயம் – 4

அதற்குள் ரோடு கிராஸ் சென்ற வெற்றி, “நீங்க நினைச்ச மாதிரி இந்த ஏரியாவில் டெய்லர் கடையோ, ஜவுளிகடையோ இல்ல. மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடமாக இருக்கு” என்று சொல்ல அவளின் கவனம் வேறுபுறம் திரும்பியது.

அவள் பார்வையை சுழற்ற அந்த கடை அமைத்திருந்த இடம் அவளுக்கு பிடித்து இருக்க வெற்றியின் புறம் திரும்பியவள், “இடம் ஓகே கடையை பார்த்தால்..” என்று அவள் முடிக்கும் முன்னாடியே ஒரு பைக் அவர்களை உரசுவதுபோல  அவர்களின் அருகே வந்து நிற்க இவளுக்கு திக்கென்றது.

“இந்தாங்க சார் கடை சாவி” என்று அந்த ஆள் கடையின் சாவியை வெற்றியிடம் கொடுக்க, “வாங்க போய் பார்க்கலாம்” என்றான். அவனின் வேகத்தை கண்டு ஆச்சரியமடைந்த செவ்வந்தி, “எப்படிங்க? மேஜிக் பார்க்கிற மாதிரி இருக்கு எனக்கு” என்று வியந்தாள்.

 “நான் கடையின் ஓனரிடம் பேசிட்டு தான் உங்களை கூட்டிட்டு வந்தேன்” என்று சொல்ல அவளுக்கு அவனின் செயல் உற்சாகத்தைக் கொடுத்தது. இருவரும் சென்று கடையை பார்த்தனர்.

அவளுக்கு திருப்தியாக இருக்க அட்வான்ஸ் மற்றும் வாடகை பற்றி அவனிடம் கேட்க, “ஐம்பதாயிரம் அட்வான்ஸ், மாதம் பத்தாயிரம் வாடகை” என்றான். அதற்கு மேல் எதுவும் பேசாமல் ஓனரை சந்தித்து அட்வான்ஸ் கொடுத்து கடையின் சாவியை வாங்கிகொண்டனர்.

“என்னங்க உங்களுக்கு எல்லாமே ஓகே தானே” என்று கேட்க, “என்னங்க இப்படி கேட்கிறீங்க. நிஜமாவே இப்படியொரு இடம் நான் தேடினாலும் கிடைக்குமான்னு தெரியல. ரொம்ப சந்தோசமாக இருக்கு வாங்க ஏதாவது  சாப்பிடலாம்” என்று அழைத்தாள்.

வானில் இருள் நன்றாக சூழ்ந்து இருப்பதை அப்போதுதான் கவனித்த செவ்வந்தி உடனே தன் கைகடிகாரத்தை திருப்பிப் பார்க்க மணி ஏழை நெருங்கிக்கொண்டிருந்தது. மீண்டும் அதே காஃபி ஷாப் உள்ளே நுழைந்தனர்.

இருவரும் அவர்களின் இடத்தில் சென்று அமர, “நீங்க தேடியமாதிரி இடம் கிடைத்துவிட்டது. இனி தொழிலை தொடங்குங்க” என்று சொல்லும்போது தந்தையின் மனம் மனதினுள் வந்து போனது.

அவனின் முகம் மாறுவதை கவனித்த செவ்வந்தி,“ மணி ஏழாக போகுது உங்களை வீட்டில் தேட மாட்டாங்களா?” என்று அவள் பேச்சை மாற்றிட, “எதுக்கும் கைலாகதவனை யார் தேட போறாங்க” என்று அவன் கேட்ட கேள்வியில் பட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவனின் மனதில் இருக்கும் காயம் உணர்ந்து, “என்னங்க பட்டுட்டு இப்படியொரு வார்த்தை சொல்லிட்டிங்க. அன்னைக்கு என் பணத்தை காப்பாற்றி கொடுத்தீங்க. இன்னைக்கு எனக்கு தொழில் தொடங்க நல்ல இடம் பார்த்து கொடுத்து இருக்கீங்க. உங்களிடம் நிறைய டேலன்ட் இருக்கு” என்றாள் புன்னகையுடன்.

அவன் எதுவும் பேசாமல் இருக்க, “இன்னைக்கு நான் வெற்றிகரமாக தொழில் தொடங்க நீங்களும் ஒரு காரணம். நீங்க இல்லன்னா முதல் நாளே என் கனவு கலைந்து காணாமல் போயிருக்கும். சோ இன்னொரு முறை அப்படி பேசாதீங்க” என்று கண்டிப்புடன் கூற அவனோ மறுப்பாக தலையசைத்தான்.

“நான் தொட்டது எதுவும் தொலங்காதுன்னு எங்க குடும்பமே ஒதுக்கி வெச்சிருக்கு. இந்த விஷயம் எல்லாம் சொன்னால் உங்களுக்கு புரியாதுங்க” விரக்தியுடன் கூறியவன் அவளின் முகத்தை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தான்.

அவனின் பேச்சில் எதிர்மறையான சொற்கள் இருப்பதை கவனித்த செவ்வந்தி, “ஏங்க நெகட்டிவாக பேசறீங்க? அவங்க சொல்றாங்க  இவங்க சொல்றாங்கன்னு உங்களை ஏன் நீங்க குறைச்சு மதிப்பிடுறீங்க” என்று சொல்ல அவன் பதில் பேசாமல் இருந்தான்.

அவள் பேசுவது அவனின் மனகாயத்திற்கு மருந்தாக இருந்தபோதும் அவனிடம் வெளிப்படையாக பேச அவனால் முடியவில்லை. ஏதோவொன்று இடையில் நின்று தடுத்தது.

அதே நேரத்தில் அவனின் செயல்களும் பேச்சும் அவனின் கருத்தை கவர்ந்தது. அவன் தன்னோடு இருக்கும்போது அவள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதுபோல உணர்ந்தாள். அதனால் உடனே மனதில்பட்ட விஷயத்தை பட்டென்று அவனிடம் கேட்டுவிட்டாள்.

அவளின் கேள்வியில் ஒரு நிமிடம் அவனுக்கு தூக்கிவாரிப்போட்டது.

பேரர் இருவருக்கும் காஃபி கொண்டு வந்து வைக்க இருவரின் இடையே பலத்த அமைதி நிலவிட, “ஏங்க நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்க அதிர்ந்து நிமிர்ந்தான் வெற்றி.

அவளிடமிருந்து இப்படியொரு கேள்வியை அவன் எதிர்பார்க்கவே இல்லை என்று அவனின் அதிர்ச்சியே அவளுக்கு உணர்த்தியது. ஆனாலும் மனம் தன் கேள்விக்கான பதிலுக்காக காத்திருந்தது.

“என்னங்க திடீர்ன்னு இப்படி கேட்டுட்டீங்க” அவனின் குரல்  அப்படமான அதிர்ச்சியை வெளிபடுத்தியது.

அவள் எப்போதும்போல அமைதியான முகத்துடன், “இதில் என்ன தப்பு இருக்கு. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. அதட்டல் மிரட்டல் இல்லாத பேச்சும், அசடு வழியாத உங்களின் கம்பீரம், உங்களின் திறமை எல்லாமே பிடிச்சிருக்கு அதன் கேட்டேன்” என்றதும் சட்டென்று நிமிர்ந்து அவளைப்  பார்த்தான்.

பச்சை நிற புடவையில் இடையை தழுவும் கூந்தலும், நேரான நெற்றி, வளைந்த புருவங்கள், ஒளி மின்னும் கண்கள், வெள்ளை நிற மூக்குத்தி அணிந்த சின்ன மூக்கு, ரோஜா நிற உதடு. அதை தாண்டி அவனின் பார்வை செல்லவில்லை.

தன் தந்தையின் பணம் பார்த்தும், தன்னிடம் இருக்கும் வசதிகளைப் பார்த்தும் தன்னிடம் காதலை சொன்ன பல பெண்களை அவன் பார்த்து இருக்கிறான். ஏன் ஜனனி கூட அவனிடம் இருக்கும் வசதிகளை நினைத்துதான் காதலை சொன்னாள் என்ற உண்மை அவனுக்கு தெரியும்.

தன்னை தானாக விரும்பும் அவளின் குணம் அவனுக்கு பிடித்தது. எனக்கு உன்னை பிடித்து இருக்கிறது என்று முகத்திற்கு நேராக சொல்லும் அவளின் துணிச்சலில் அவன் மனம் அவளிடம் பறிபோனது போல உணர்ந்தான். ஆனால் ஜனனி இருக்கும்போது அவளின் விருப்பத்தை ஏற்க அவனின் மனம் இடம் தரவில்லை.

“இல்லங்க நான் காதலிக்கும் விஷயம் உங்களுக்கு தெரியாமல்..” என்று அவன் தொடங்க கைநீட்டி தடுத்த செவ்வந்தி, “அன்னைக்கு நீங்க விளையாட்டுக்கு சொல்றீங்கன்னு நினைச்சேன்” என்றாள் பதட்டபடாமல்.

அவளின் மனநிலை உணர்ந்து காயபடுத்தி பார்க்கும் எண்ணம் இல்லாமல், “எனக்கு உங்க மனநிலை புரியுதுங்க. இரண்டு முறை பார்த்த என்னைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது இல்ல. அதனால் நான் இதை பெருசாக எடுத்துக்கல..” என்றவனை அவள் கேள்வியாக நோக்கிட தன் காதலியைப் பற்றி அவளிடம் கூறினான்.

“நான் ஜனனின்னு ஒரு பெண்ணை காலேஜ் படிக்கும்போது இருந்து காதலிக்கிறேன். எனக்கு வேலை கிடைக்கவில்லை என்ற காரணத்தால் இன்னும் வீட்டில் பேசாமல் இருக்கோம். அதனால் உங்க விருப்பத்தை என்னால் ஏற்க முடியலங்க” என்று அவன் பட்டென்று உண்மையைப் போட்டு உடைத்தான்.

அதை சொல்லும்போது அவனின் இதயத்தின் ஓரத்தில் சுருக்கென்று ஒரு வலியை உணர்ந்தான். அதற்கான காரணத்தை அவன் தெளிவாக யோசிக்கவில்லை. ஒருவேளை யோசித்து இருந்தால் அவனுக்கு புரிந்து இருக்குமோ?

வெற்றியின் மனதை ஏதோவொரு வழியில் சலனபடுத்திவிட்ட செவ்வந்தியோ அவனின் மறுப்பிற்கான காரணத்தை முழு மனதாக ஏற்றுக்கொண்டு, ‘நம்ம கொடுத்து வெச்சது அவ்வளவுதான்’ என்று நினைத்து கொண்டாள்.

“ஆனால் ஒரு விஷயங்க” வெற்றியின் குரல் அவளின் கவனத்தை திசை திருப்பியது.

“அடுத்த நிமிடம் இது நடக்கும்னு குறிப்பிட்டு சொல்ல யாராலும் முடியாதுங்க. இன்னைக்கு நானும், ஜனனியும் எடுத்த முடிவில் மாற்றம் வரல என்றாலும் திடீர் திருப்பம் வந்தாலும் வரலாம். சோ நீங்க இதெல்லாம் நினைத்து மனசை குழப்பிக்காதீங்க” என்றதும் உதட்டை கடித்து பார்வையை வேறுபுறம் திருப்பிவிட்டாள் செவ்வந்தி.

அவள் முகம் திருப்பிட இவனின் மனதினுள், ‘இன்னைக்கு உங்க விருப்பத்திற்கு தடை சொல்றேன்னு நினைச்சு வருத்தபடாதீங்க. நீங்கதான் என் வாழ்க்கையில் வரணும்னு இருந்தால் கண்டிப்பா அதை யாராலும் மற்ற முடியாது. இன்னைக்கு நடப்பதை வைத்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம்’ என்று நினைத்துக் கொண்டான்.

அதற்கான காரணம் என்னவென்று அவனுக்கே தெரியாதபோது நாம் என்ன செய்ய முடியும்?

அவனின் நிதர்சனமான பேச்சில் தன்னை மீட்டெடுத்த செவ்வந்தி, ‘வாழ்க்கையின் நெளிவு சுழிவு தெரிந்து பேசுகிறான்’ என்று நிமிர அவளின் மீது பார்வையை பதித்து இருந்தான்.

அவன் தன் பதிலை எதிர்பார்ப்பது புரிந்து, “ஒரு பெண்ணோட வாழ்க்கையை கெடுத்து நான் வாழணும்னு எப்போது யோசிக்க மாட்டேன். அது நிலைக்கவும் நிலைக்காது. என்னவோ என் விருப்பத்தை கேட்க தோணுச்சு கேட்டேன் அவ்வளவுதான்” என்று இயல்பாக பதில் சொன்ன செவ்வந்தி எழுந்து சென்றாள்.

அவளின் பேச்சில் இருந்த மாறுதலை உணர்ந்து, ‘பட்டுன்னு பதில் சொல்லி அவங்கள தேவை  இல்லாமல் வருத்தப்பட வெச்சிட்டோமோ?’ அவனின் மனம் கவலை கொண்டது.

அவனின் மனத்தைக் காயப்படுத்த நினைத்தவர்களும் வார்த்தைகள் என்ற கல்லால் அடித்து காயப்படுத்தியவர்களும் ஏராளம். அந்த வலியை எல்லாம் கடந்து வந்த வெற்றிக்கு இன்று ஏனோ மனம் வலித்தது. அவளை தெரிந்தே காயப்படுத்திவிட்டதாக நினைத்து மனம் வருந்தினான்.

சிறிதுநேரத்தில் தன்னை சமாளித்துக்கொண்டு எழுந்து வெளியே வரவே வேகமாக அவனின் அருகே சென்றவள், “ஸாரிங்க என் விருப்பத்தை நான் நேரடியாக கேட்டேன். உங்களுக்கு விருப்பம் இல்லன்னு சொல்லிட்டிங்க. அதனால் எப்போதும் போல இருக்கலாம்” என்றதும் அவனின் மனம் லேசானது.

“சரி வாங்க நான் உங்களை வீட்டில் இறக்கி விடுகிறேன்” என்றதும் அவனின் மனநிலை அறிந்து அவளும் மறுப்பு சொல்லவில்லை.

அவன் நேரடியாக வீட்டின் முன்னே வந்து இறக்கிவிட்டு, “ஸாரிங்க” என்றான்.

“பரவல்லங்க” என்று சொல்லிவிட்டு அவள் வீட்டிற்குள் செல்ல அவன் வண்டியை எடுத்துகொண்டு கிளம்பினான்.

இதை வாசலில் நின்று பார்த்த மரகதம், “என்னம்மா இந்நேரத்திற்கு ஒரு பையனோடு வந்து இருங்கற” என்றார் நேரடியாகவே. சட்டென்று அவளின் நடை தளர்ந்தது.

பெண்கள் என்னதான் நல்ல குணம்நலன் உடையவர்களாக இருந்தாலும் ஒரு பையனோடு பைக்கில் வந்து இறங்குவதை பார்த்தால் அவளை தவறாக கணித்து உடனே அதற்கு கண்ணு, மூக்கு வைத்து பேசிவிடுவார்கள்.

நாம் என்ன நினைத்தாலும் ஊரார் வாயை மூட முடியாது என்று புரிந்துகொண்டு, “அவர் என் அத்தை பையன் அம்மா. இந்நேரம் தனியாக போக வேண்டான்னு என்னை வீட்டில் கொண்டு வந்து இறக்கிவிட்டுவிட்டு போறார்” என்று சொன்னவளின் பதிலில் வீட்டுகார அம்மாவின் முகம் மலர்ந்தது.

“ஓஹோ அப்படியா கண்ணு அப்போ சரிம்மா” என்றவர் வீட்டிற்குள் செல்ல, ‘எல்லோரும் இப்படிதான் இருக்கிறாங்க’ என்று நினைத்துகொண்டு வீட்டிற்குள் சென்றாள்.

இரவு உணவை செய்து சாப்பிட அமர்ந்தபோது அவளின் செல்போன் சிணுங்கியது. திரையில் தெரிந்த பெயரை கண்டவுடன் மற்ற விஷயங்களை ஒதுக்கிவிட்டு உடனே போனை எடுத்து, “சொல்லு மைதிலி” என்றாள்.

“என்னடி ஊருக்கு போய் ஒரு மாசம் ஆச்சு. இன்னும் ஒரு போன் பண்ணாமல் இருக்கிற என்ன விஷயம்?” என்ற அவளின் கோபத்தை கண்டு கலகலவென்று சிரித்துவிட்டாள் செவ்வந்தி.

“இல்ல மைதிலி கொஞ்சம் அலைச்சல் அதிகம்டி. நான் இங்கே தனியாக சிக்கிட்டு படும்பாடு பற்றி சொன்னால் நீ கண்ணீர் வரும் வரை சிரிப்ப” என்று சொல்லி அவள் அங்கு வந்த நாளில் இருந்து நடந்த அனைத்தையும் அவளிடம் பகிர்ந்தாள்.

அவள் அனுபவித்த கஷ்டங்களை நினைத்து மைதிலியின் மனம் வருந்தினாலும், “உனக்கு நல்லா வேண்டும். இங்கே இருந்து போறேன்னு என்னை தவிக்க விட்டுட்டு போன இல்ல அனுபவி மகளே அனுபவி” அவள் சாபம் கொடுத்தாள்.

“ஏண்டி எனக்கு நீயும் சாபம் கொடுக்கிற” என்றாள் அவள் எரிச்சலோடு.

“ஏதோ என்னால் இப்போது அதுதான் செய்ய முடியும்” என்று அவள் சலிப்புடன் சொல்ல இருவரும் சிரித்துவிட்டனர்.

வெகுநேரம் தோழியுடன் பேசிவிட்டு படுக்கையில் சரிந்த செவ்வந்தியின் விழிகளை தழுவினாள் நித்திராதேவி. அதே நேரத்தில் தன் தூக்கத்தை தொலைத்துவிட்டு பால்கனியில் நடைபயின்றான் வெற்றி.

அவன் தூங்காமல் இருப்பதை கவனித்த ஜமுனா, “என்ன அண்ணா இந்நேரம் வரை தூங்காமல் இருக்கிற” என்ற கேள்வியுடன் அவனை நெருங்கினாள்.

சட்டென்று திரும்பிய வெற்றி, “இல்லடா இன்னைக்கு என்னவோ தெரியல தூக்கமே வரல” என்றான் சிரிக்க முயன்றபடி.

அவனின் மனவருத்தம் அவளை பாதிக்க, “அண்ணா அப்பா அம்மாவை நினைத்து வருத்தப்பட்டுட்டு இருக்கிறாயா?” என்ற கேள்விக்கு அவன் மறுப்பாக தலையசைத்தான்.

“வேற எதுக்காக நீ தேவை இல்லாமல் தூக்கத்தை கெடுத்துக்கிற” என்று அடுத்த கேள்வியை தொடுத்தாள் ஜமுனா.

தங்கையிடம் விஷயத்தை எப்படி சொல்வதென்று தடுமாறிய வெற்றி, “இல்ல ஜமுனா மனசு ஏனோ பாரமாகவே இருக்கு. அதுதான் என்ன காரணம்னு யோசனை பண்ணிட்டு அப்படியே பால்கனியில் நின்னுட்டேன்” என்று வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தான்.

அண்ணன் தன்னிடம் தேவை இல்லாமல் பொய் சொல்வதில்லை என்ற நிதர்சனம் உணர்ந்து இருந்ததால், “சரிண்ணா நீ போய் தூங்கு. அப்போ எல்லாமே சரியாக போயிடும்” என்று சொல்லிவிட்டு அவள் அறையைவிட்டு வெளியேறினாள்.

செவ்வந்தியின் பேச்சில் அவனின் மனதில் சலனம். நேர் கொண்ட பார்வையால் மனதை வீழ்த்திவிடும் வித்தை அவளிடம் இருப்பதை கண்டுகொண்டான். அதே நேரத்தில் அவளின் நேர்மறையான எண்ணங்கள் அவனுக்குள் சந்தோசத்தைக் கொடுத்தது. விடியும் வரையில் தூங்காமல் ஏதேதோ சிந்தனையில் விழித்து இருந்தவன் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் உறங்கிப் போனான்.