pm11
pm11
ஃபீனிக்ஸ் – 11(ஈற்றியல் பதிவு)
விடுதி என்பதே மறந்து, உறவினர் வீட்டிற்கு வந்திருப்பதுபோல எப்போதும் ஆள் நடமாட்டமும், கலகலப்புமாய்.
தங்கியிருப்பது அனைவருமே பெண்கள்தான்.
அதனால் பேச்சிற்கும், கலகலப்பிற்கும் பஞ்சமில்லை.
பகலில் உரிய நபர்களை பணித்து, வேண்டியவற்றைப் பார்த்துக் கொள்ளக் கூறிவிட்டால் அனைத்தையும் எடுத்துச் செய்ய நம்பிக்கையான ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அதனால் மேற்பார்வை என்றளவில் எனது தந்தைக்கு இலகுவான பணிதான்.
எனது தாய், விடுதியில் உணவு மேற்பார்வையிடல், வேண்டிய பொருள்கள் வாங்கப் பணிப்பது, வாங்கிய பொருள்களைக் கொண்டு, என்று, என்ன உணவு என்று தீர்மானிப்பது போன்றவற்றை இதுவரை பார்த்துக் கொண்டிருந்தார்.
தற்போது ஷ்யாமின் தாயும் அங்கிருப்பதால், ஆளுக்கொரு வேலை என அவர்களாகவே பிரித்துப் பார்த்துக் கொண்டார்கள்.
நேரம் செல்வதே தெரியாது.
பொழுதிற்கும் வேலை சரியாக இருக்கும். ஆனால் தற்போது சிலநாள்களாக, வெளியூர் பயணங்களை மேற்கொள்ள இயலாத நிலை என்று புலம்பல்கள் பெரியவர்களிடம் அவ்வப்போது தொடர்ந்தது.
“ஒரு நல்ல நாளு, பெரிய நாளுக்கு கோவிலுக்குக்கூட போக முடியலை. சொந்த பந்த வீட்டு விசேசங்களுக்கு போயி, அக்கடானு இருக்க முடியல. வெந்நிய ஊத்துன மாதிரி, போனதும் ஓடி வர மாதிரியிருக்கு”, என என் காதுபடவே தாய் பேசத் துவங்கியிருந்தார்.
அதனாலேயே மாற்று ஏற்பாடாக வேறொரு நபரையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி ஒரு பெண்மணி சமீப காலமாய் பணிக்கு வரத் துவங்கியிருந்தார்.
அதிலும் நிறை, குறைகள் அலசப்பட்டது.
“என்ன அது இஷ்டத்துக்கு மிஞ்சற மாதிரி போட்டு, சாப்பாட்டையெல்லாம் வீணாக்குது. யாருக்கு வந்த விதியோ, கோழிக்கு வந்த கொள்ளக் கேடேன்னு, எனக்கென்னனு இருந்தா எப்டி இதை நல்லா கொண்டு போறது”, என என்னிடம் புகாராக வந்தது.
வேறு யாரேனும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என காரண, காரியத்தோடு என்னிடம் விசயத்தை மேலும் கொண்டு வர, வேறு நபரை நியமித்திட முடிவு செய்யப்பட்டது.
அந்த நினைப்போடு மாலையில் வந்ததும், வழமையான பேச்சிற்குப் பிறகு சற்றே ஓய்வெடுக்க எனதறைக்குச் சென்றுவிட்டேன்.
வந்த அசதி தீர்ந்து, வயிறும் உணவைத் தேட, நீண்ட நேரத்திற்குப்பின் இரவு உணவிற்காக எழுந்து வந்தேன்.
மூவரும் அன்றும் பழைய கதைகளைப் பேசியபடி அறைக்குள் இருந்தனர்.
அட்டாச்டு டாய்லட் வசதியோடு, சற்று பெரிய அறை அது.
இரவில் இந்நேரத்தில் என்ன பேச்சு என யோசித்தபடியே மெதுவாக வந்தேன்.
ஷ்யாம் என்கிற பேச்சைக் கேட்டதும் தயக்கம் வந்திட, அறைக்குள் நுழையாமல் அப்படியே வெளியே நின்றுவிட்டேன்.
“உங்ககிட்ட சொல்றதுக்கென்ன…”, என நிறுத்திய அத்தை, “ஷ்யாம் உண்மையில இப்ப இல்லை. ஆனா ஷ்ரவந்தைத்தான் ஷ்யாம்னு கூப்பிடறோம்”, என்றவர்
“செத்தவனைப் பத்தி கெட்டதாக இருந்தாலும் சொல்லக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனாலும் மனசுக்குள்ள வச்சிக்கிட்டு இன்னும் எத்தனை நாளுக்குத்தான் விசனப்படறது. அதான் ரெண்டு பேருகிட்டயும் இன்னிக்கு ஷ்யாமைப் பத்தி சொல்லணும்னு தோணுது”, என தயக்கத்தோடு துவங்கிட
கால்கள் புரையோடியதுபோன்ற உணர்வு எனக்குள். நிற்க இயலாத நிலைபோல மாயத் தோற்றம் வந்து மறைந்தது.
‘அப்டி என்னத்தை இந்த அத்தை சொல்லப் போறாங்க’, என்கிற பதைபதைப்போடு நான் வெளியில்…
“என்ன விசயம் பங்கஜம்?”, எனது தந்தை கேட்க
“உங்க பொண்ணை கல்யாணம் பண்ணனும்னு வந்து அவங்கப்பாகிட்ட முதல்ல கேட்டது இவனில்லை”
“என்ன சொல்றீங்கண்ணீ”, பதறிக் கேட்டார் தாய்.
“ஷ்யாம்தான் வந்து கேட்டான். கேட்ட பத்தே நாள்ல அவனை மலேசியாவுக்கு அனுப்பிட்டாரு எங்க வீட்ல. அப்ப சின்னவனும் இங்க இல்லை. அவனும் தொழில் விசயமா வெளிநாடு போயிருந்தான்”
‘எதுக்கு இப்ப அத்தை இதையெல்லாம் இவங்ககிட்ட சொல்லணும். போய்த் தடுத்து விடுவோமா?’, என மனம் உந்த, மறுமனம் சற்றே காத்திரு என்றது.
“…அதுபோலத்தான் இவனையும் அனுப்பிருக்காகன்னு நெனைச்சேன்.
ஆனா அங்க போனவனை வரவிடாம வேற வேற வேலையக் குடுத்தே நாளக்கடத்தின பின்னதான் எனக்கு ஏதோ சரியில்லைனு புரிஞ்சது.
அப்ப உங்கண்ணன்கிட்ட கேட்டேன்”, பங்கஜம்
“யாரு நம்ம நர்மதா அக்கா வீட்லயா?”, என எனது தாய் உறவுமுறை பாராட்டிப் பேசிட
“ம்ஹ்ம்.. ஆமா. அவ வீட்லதான ஷ்யாமை தங்க வச்சிருந்தார். அதுல ஏதோ உள்நோக்கம்னு புரிஞ்சது.
நானும் பொறுக்க மாட்டாம என்ன, ஏன்னு கேட்டேன். அதுக்கு வேலை முடிஞ்சதும் மெதுவா வருவான்னு சொன்னாரு.
போன ஆறு மாசம்வரை இங்க வரேன்னு எங்கிட்ட போனப்போட்டு போட்டு, புலம்புனவன் அப்புறம் என்னனே தெரியல. டக்குனு அமைதியாகிட்டான்!”, என பங்கஜம் அத்தை நிறுத்தியதும்
என்னிதயம் முன்பைக் காட்டிலும் அதிகமாகத் துடிக்கத் துவங்கியது.
“நானும் அவன் வரட்டும்னு இருந்தேன். எனக்கும் விசயம் ஏதோ அங்க இருக்குன்னு பட்டுச்சு. போனைப் போட்டு என்னத்தை பேசிகிட்டுனு வந்தபின்ன கேட்டுக்கலாம்னு இருந்தேன்.
பய இங்க வரதுக்கே இரண்டு வருசத்துக்கிட்ட ஆயிருச்சு. வந்ததும், கூப்பிட்டுக் கேட்டேன்.
‘அத்தை பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்’னு சொல்லிட்டான்.
நானும் என்னடா போகும்முன்ன ஜனனியத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னியேன்னு கேட்டேன். அதுக்கு அந்தப் பொண்ணு நமக்கு ஒத்து வரும்னு தோணலைம்மானு சொன்னான்.
‘என்னடா திடுதிப்புனு அந்தப் பொண்ணைத்தான கல்யாணம் பண்ணுவேன்னு வந்து ஒத்தக்கால்ல நின்ன! இப்ப இப்டி மாத்திச் சொல்றியே. என்னடா திடீர்னு ஆச்சு அப்டினு கேட்டேன். அதுக்கு அந்தப் புள்ளைக்கு எம்மேல அப்டியொரு அபிப்ராயம் இருக்கற மாதிரித் தெரியலை. அத்தோட நம்ம அத்தை மக ரத்னாவையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்னு விசயத்தை சொல்லி முடிச்சிட்டான்.
எனக்கு என்னடா இது புது விசயமா இருக்கேனு இன்னும் விசாரிச்சா, அத்தைக்காரி அங்க பிஸினெஸ் ஆரம்பிச்சுத் தரேன்னு சொன்னதோட, பெண்ணையும், மாப்பிள்ளையும் உனக்கு அவதான், உனக்கு ஏத்தவன் அவந்தான்னு ரெண்டு பேருகிட்டயும் மாறி மாறிச் சொல்லிச் சொல்லியே மனசை வேப்பிலை அடிக்காமலேயே மாத்திருந்திருக்கா.
இவனும் அத்தை பேச்சுல மயங்கினதோட அத்தை மகளையும் புடிச்சுருக்குனு சொல்லிட்டு வந்திட்டான்.
நாந்தான் மனசு கேக்காம, பதறிப்போயி, அப்ப ஜனனியோட நிலைமைனு கேட்க, அந்தப் பொண்ணை இன்னுமா அவங்கப்பா கல்யாணம் பண்ணிக் குடுக்காம இருக்காருனு கேட்டான். ஆமாடா. நல்லா யோசி. அந்தப் புள்ளைக்கு வாக்குக் குடுத்திருந்தா பெண் பாவம் பொல்லாதது பாத்து முடிவெடுன்னு சொன்னேன்.
அதுக்கு ஷ்யாம், ‘அது இதுவரை வாயத் திறந்து பேசுனதே கிடையாது. என்னைப் புடிச்சிருக்குனும் சொன்னது கிடையாது. நாந்தான் ஒத்துவரும்னு அது பின்ன சுத்துனேன். இப்ப நாந்தான் ரத்னாவையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்னுட்டான்.
கொஞ்சம் யோசிச்சு எதுனாலும் செய்யுடான்னேன்.
நம்ம அப்பா சொல்றதை வச்சிப் பாக்கும்போது, அத்தை பொண்ணுதான் சரினுபடுதும்மா’, என ஷ்யாம் அவன் மனதைக் தெளிவாக பங்கஜத்திடம் கூறியதாகக் கூறினார் அந்தத் தாய்.
“அதுக்குமேல அவனை நானும் வற்புறுத்தலை. நம்ம ஜனனி இப்டி அவம்மேல உசிரா இருந்தது அப்ப எனக்குத் தெரியலை.
வந்த ஒரு வாரத்துலயே வினையா கிளம்பி டூர் போனானுங்க.
போன இடத்துலதான் இப்டியாகிருச்சு”, என்றதோடு மகனை இழந்த துக்கம் தாங்காமல் அப்போதும் அழும் பங்கஜம் அத்தையின் குரல் வெளிவரை கேட்டது.
ஆனால் தற்போது என் கண்ணில் நீர் வரவில்லை.
“..அதுல இருந்து மீளவே ரொம்ப நாளாச்சு”, என இடைவெளி விட்டவர், அத்தோடு அழுகையினூடே பேசியதால் மூக்கு அதனது வேலையைக் காட்ட, அதை சிந்தும் சத்தமும் கேட்டது.
“…அத்தோடயும் பிரச்சனை தீரலை. பதற்றத்துல புள்ளைங்க பொழச்சாப் போதும்னுதான் சாமி கும்பிட்டேன். ஒருத்தனை எங்கிட்ட இருந்து பறிச்ச கடவுள்கிட்ட மன்றாடி மடிப்பிச்சை கேட்டு, ஒருத்தனை மட்டும் தக்க வச்சிகிட்டோம்.
முதல்ல ஷ்ரவந்த் அதான் சின்னவனைத்தான் இல்லைனு நினைச்சோம்.
அடிபட்ட பதட்டத்துல பேரை மாத்திக் குடுத்திருந்திருக்குக. எங்களுக்கும் அதலாம் அப்ப யோசிக்கத் தோணலை.
அப்டித்தான் குழப்பத்தோட எங்ககிட்ட ஒப்படைச்சாங்க. அதுலயும் ஒருத்தவன் போயிட்டான், ஒருத்தன் போராடிக்கிட்டு கிடந்தான்.
ஆனா ஷ்யாம்தான் எங்களை விட்டுட்டுப் போயிருந்திருக்கான். ஆனா எல்லா ரெக்கார்டுலயும் ஷ்ரவந்துன்னு வந்துருச்சு.
இடைப்பட்ட நாளுல உயிரோட இருந்தவனும் ஆஸ்பத்திரிலயேதான் இருந்தான். அப்ப ஷ்யாம்னு கூப்பிட்டே பழகியாச்சு. அப்புறம் இவன் சரியாகி வந்து, நான் ஷ்ரவந்துன்னு சொன்னான்.
புள்ளை புழச்சி வந்ததே எங்களுக்குப் போதும்னு போயிருச்சு.
அதுல இருந்து மீண்டு வரவே ரொம்ப நாளாச்சு.
எல்லா ரெக்கார்டும் மாறுனது எல்லாம் அப்புறம்தான் தெரிய வந்துது.
அதையெல்லாம் பெரிசா யோசிக்கல.
இவனைத் தேத்தி, நல்லா பழையபடிக் கொண்டு வரவரை வேற எந்த யோசனையும் ஓடலை.
அப்புறந்தான் கொஞ்சம் கொஞ்சமா வெளியில நடக்கிறத கவனிக்க ஆரம்பிச்சேன்.
அப்போ ஜனனிய ரொம்ப நாளா பாக்கவே முடியலை. ரொம்ப நாளுக்கப்புறம் ஏதேச்சையா ஒரு நாளு பாக்க முடிஞ்சது. ஆனா புள்ளை ஆளே மாறி இளைச்சுப் போயிருந்துச்சு.
ஆனா அது கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னு தெரிய வந்திச்சு.
ஷ்யாம் போனதிலயே அவங்கப்பா ரொம்ப மனசொடைஞ்சு போயிட்டார்.
அதுக்கப்புறம் எதையும் எடுத்துச் செலுத்தற நிலையில அவரு இல்ல.
அப்போ, ஜனனிய கவனிச்சிட்டு இருந்த நான், ஒரு வேளை நம்ம ஷ்யாமை நினைச்சித்தான் இப்டி தன்னந்தனியாவே இருக்கோனு மனசுல உறுத்தல். அத்தோடத்தான் அந்தப் புள்ளைய கல்யாணம் பண்ணிக்கறியானு சின்னவங்கிட்ட கேட்டேன்.
முதல்ல கல்யாணமே வேணானு சொன்னவன், ஜனனிய பத்தி சொன்னதும் நிதானமாக கேட்டுட்டு, யோசிச்சு சொல்றேன்னான். ரெண்டு நாள்ல மறுபடியும் என்னடானு கேட்டேன்.
உடனே சரினுட்டான். அதான் எல்லாம் சரியாகிரும்னு நினைச்சு ரெண்டு பேரையும் ஒன்னு சேத்தேன்.
ஆனா, அந்தக் கடவுளுக்கே பொறுக்கலை.
ஆளுக்கொரு திசையில தெரியுதுங்க”, என மீண்டும் மூக்கு சிந்தும் சத்தம் கேட்டது.
“ஊமை ஊரக் கெடுக்கும், பெருச்சாளி பேரக் கெடுக்குங்கற மாதிரியில்ல நம்ம வீட்ல நடந்திருக்கு”, இது என் தாய்
“பெத்தவங்க எதுக்கு இருக்கோம். அதுவா எதையோ நினைச்சு இப்ப வீணா வாழ்க்கையில்லாம தனிமரமா நின்னா நாம என்னம்மா செய்ய முடியும்”, விரக்தியோடு என் தந்தை
“நம்ம புள்ளைங்க நல்லா இருந்தா நமக்கும் சந்தோசம். இல்லைனா நிம்மதியே இல்லாம என்ன வாழ்க்கைனு இருக்குண்ணே! இதையெல்லாம் பாத்துக்கிட்டு கஷ்டப்படறதுக்கு, போயி சேந்துட்டாக்கூட நல்லாயிருக்கும்னு தோணுது”, என குறுகுறுக்கும் நெஞ்சோடு மனதில் உள்ளதைப் பட்டெனக் கூறிவிட்டார் பங்கஜம் அத்தை.
எனது தாய், “இதைப் போயி நாம எடுத்துச் சொன்னா நம்பவும் செய்யாது. என்னத்தைச் சொல்லி என்னாகப் போகுது. அது தலையெழுத்து இதுதான்னா நாம தலைகீழா நின்னாலும் ஒன்னும் மாறாது”, என உளன்ற மனதோடு உரைக்க
“அவனும் வேற பொண்ணு பாக்கறேன்னா ஒத்துக்க மாட்டிங்கறான். இதுவும் இப்டித் தனி மரமா நிக்கிது. நான் வீட்டை விட்டு இங்க வந்தா பயந்துகிட்டு, கல்யாணத்துக்கு சரினு சொல்லுவான்னு பாத்தேன். அதையெல்லாம் கண்டுக்கிட்டதாவே தெரியலை. உனக்கு எங்க இருக்கணுமோ இருனு அம்போனு விட்டுட்டடான். என்ன பாவம் செஞ்சோமோ தெரியலை”, என பங்கஜம் அத்தை புலம்புத் துவங்க
இதைக் கேட்ட எனக்கோ, உண்மையை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், எழுந்த அழுகையை அடக்கியவாறு, அறைக்குள் செல்லாது வந்த வழியே திரும்பி எனது அறையை நோக்கிச் சென்றுவிட்டேன்.
அழுகை பொங்கி வந்தது.
அறையை அடைத்துக் கொண்டு கதறித் தீர்த்தேன்.
‘ஒருத்தி பைத்தியம் மாதிரி ஒருத்தனை நினைச்சி மருகிக்கிட்டு இருக்க, அவ நமக்கு ஒத்து வரமாட்டானு அவனாவே முடிவு பண்ணிட்டு அவம்போக்குல போயிச் சேந்திருக்கான். நான் ஒரு லூசா இருந்ததுக்கு யாரை இப்ப நோக’, எனக்குள் வைத்துப் புலம்பினேன்.
பங்கஜம் அத்தையின் பேச்சைக் கேட்ட பெற்றவர்களின் நிலைப்பாடு என்ன?
அடுத்து வந்த நாள்களை எவ்வாறு கடந்தேன், என்ன செய்தேன்?
—————————-