Poo 10

Poo 10

ஆயுபோவன்!

 

தன்னைப் பார்த்து மலர்ந்த முகமாக வணக்கம் வைத்த அந்த விமான தேவதைக்கு பல்லவியும் பதில் வணக்கம் வைத்தாள். உடலெங்கும் மயில் கண்கள் பதித்த நீல நிறப் புடவையை அந்தப் பெண் ஒரு தினுசாகக் கட்டியிருந்தார். 

 

கொழும்பு கட்டுநாயக்க (பண்டாரநாயக்க) விமான நிலையத்தை அந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் இந்தியாவிலிருந்து வந்தடைந்திருந்தது. தான் கொண்டு வந்திருந்த சிறிய ஹான்ட் லக்கேஜைத் தூக்கிய படி வெளியே வந்தாள் பல்லவி. 

 

புதிய இடம் புதிய மனிதர்கள். பாஷை வேறு அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இலங்கையின் தலைநகரம் என்பதால் அங்கு பெரும்பாலானோர் சிங்கள மொழியே பேசினார்கள். 

 

விமான நிலையத்திற்கே உரித்தான கடமைகளை முடித்துக்கொண்டு சுற்றும்முற்றும் பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள் பல்லவி. எதிரே பெரிய சிலையாகக் கருணாமூர்த்தி புத்த பகவான் அமர்ந்திருந்தார். அந்த சிலையைப் பார்க்கும் போது மனதுக்குள் ஏதோவொரு அமைதி பரவியது. உலகத்தில் அன்பை மட்டுமே விதைத்த மனிதர். உயிர்களிடத்தில் அன்பைக் காட்டக் கற்றுக்கொடுத்த மேதை. இவரைப் போல எல்லோரும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருக்கும்.

 

எண்ணமிட்ட படியே வந்தவள் அவளது உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். இப்போது மனதுக்குள் சிறு கலக்கம். எல்லாம் நினைத்தது போல நடக்குமாஅதீத நம்பிக்கைதான். இருந்தாலும் அப்போது அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஒட்டு மொத்தமாகக் குடும்பமே அவளை எதிரியாகப் பார்க்கும்போது அவளால் என்னதான் செய்ய முடியும்கிடைத்த கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள்.

 

வெளியே வந்தபோது ஏசியின் குளிர் நின்று போய் உஷ்ணக் காற்று முகத்தில் மோதியது. கூட்டத்திற்கு நடுவே ‘பல்லவி‘ என்ற பெயர் பலகையைத் தாங்கிய படி ஒரு பெண் நின்றிருந்தாள். அவள் கண்கள் மனிதர்களைத் துழாவிக் கொண்டிருந்தது.

 

கவிதா?” இது பல்லவி. தன் பெயரைத் தாங்கி நின்ற பெண்ணுக்கு அருகில் வந்தவள் மெதுவான குரலில் கேட்டாள்.

 

நீங்க… பல்லவியோ?” அந்தப் பெண்ணும் சற்றுத் தயங்கியது.

 

ஆமா… மிஸஸ். பல்லவி மாதவன்.”

 

அடடே! வாங்கோ வாங்கோ! வெல்கம் டூ ஸ்ரீ லங்கா.” ஸ்நேகமான புன்னகையோடு வரவேற்றது பெண். பல்லவியின் மனதுக்குள் ஏதோ ஒரு ஆறுதல்.

 

பயணமெல்லாம் எப்பிடிசுகமா இருந்துதோ?”

 

ம்… நல்லா இருந்ததுங்க.”

 

பார்த்தா அப்பிடித் தெரியலையே… சோர்ந்து போய் தெரியுறியள்.” கலகலவென அந்தப் பெண் பேச பல்லவி சிரித்தாள். பேசிய படியே அவர்கள் செல்ல வேண்டிய வாகனத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். பல்லவிக்கு எந்தச் சிரமமும் கொடுக்காமல் எல்லாவற்றையும் கவிதாவே பார்த்துக் கொண்டாள்.

 

இந்தாங்கோஇந்தக் குஷனைத் தலைக்கு வெச்சிட்டு நிம்மதியாக் கொஞ்ச நேரம் தூங்குங்கோ. நாம இன்னும் ஒரு ரெண்டரை மணித்தியாலம் ட்ராவல் பண்ணணும்.”

 

ஓ…”

 

ம்… ஏர்போர்ட் கொழும்புல இருக்கு. ஆனா நான் வேலைப் பார்க்குறது கண்டியில. கேள்விப்பட்டிருக்கீங்களோ?”

 

இல்லை… கொழும்பு தெரியும்… ஆனா… கண்டி…”

 

அது தெரிஞ்ச கதைதானே. பக்கத்து நாடென்டு பெயர்தான். உங்களுக்கெல்லாம் எங்கன்ட நாட்டைப்பத்தி ஒன்டும் தெரியாது.” சிரித்துக்கொண்டே கவிதா சொல்ல பல்லவியும் சிரித்தாள்.

 

நல்ல வடிவா ஆக்ட்ரெஸ் மாதிரி இருக்கிறியள். சிரிக்கேக்குள்ள இன்னும் வடிவா இருக்கு.” இந்த வெளிப்படையான பாராட்டை பல்லவி எதிர்பார்க்கவில்லை. திணறிப் போனாள்.

 

அட! முகம் லேசாச் சிவக்குது. வெக்கப் படுறியளோ?” கவிதா சிரித்தபடி கேலிப்பண்ண பல்லவியும் வாய்விட்டுச் சிரித்தாள். அவள் இருக்கும் மனநிலையில் சிரிப்பென்ற ஒன்றே மறந்து போயிருக்க மனது இப்போது லேசாக உணர்ந்தது.

 

கவிதாவின் பேச்சும் சிரிப்பும் பல்லவியின் புண்பட்ட மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. எந்தப் பேதமும் பாராட்டாமல்புதிதாகப் பார்த்திருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் இயல்பாகப் பழகியது பெண்.

 

ஆங்காங்கே வழியில் நிறுத்தி சூடாக உண்பதற்கு குடிப்பதற்கு என்று பல்லவியின் தேவைகள் அனைத்தையும் கேளாமலேயே கவனித்துக் கொண்டது.

 

மறந்தும் நீ யார்எதற்காக சொந்த நாட்டை விட்டு இங்கே வந்திருக்கிறாய்உன் பிரச்சனை என்னஎதுவும் ஆராயப்படவில்லை. 

 

வந்துவிட்டாயாவா. கவலைகளை மறந்து விட்டு என்னோடு கலகலப்பாக இரு என்று கைகொடுத்த அந்தப் பெண்ணை பல்லவிக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

நேரம் செல்லச் செல்ல மெல்லிய குளிர் உடம்பைத் தாக்கியது. பல்லவி சேலைத் தலைப்பை இழுத்து மூடிக்கொண்டாள். கார் மலைப்பாதையில் ஏறிக்கொண்டிருந்தது.

 

குளிருதோ?”

 

லைட்டா.”

 

எங்கன்ட நாடு சின்னது என்டபடியா டக்கு டக்குன்னு வெதர் மாறும். கொழும்பு கடல் மட்டம். வெயிலா இருக்கும். ஒரு மூனு மணிநேரம் பிரயாணம் பண்ணினா கண்டி. நல்ல குளிர். பேந்து திரும்பவும் ஒரு நாலு மணித்தியாலம் ஓடினா திரும்பவும் கடல்மட்டம். இருநூத்தி இருபத்தைஞ்சு கிலோமீட்டர் அகலம்தானே. அதனால்தான் நிறைய வெளிநாட்டுக் காரருக்கு எங்கன்ட நாடென்டா நல்ல விருப்பம்.”

 

ஓஹோ!” 

 

இன்னும் கொஞ்ச நேரந்தான். நீங்க வடிவா சாஞ்சு ரெஸ்ட் எடுங்கோ.”

 

சரிடா.” பல்லவிக்கும் இரண்டு நாட்களாக ஓய்வில்லாத ஓட்டம். உடம்பை அந்த இதமான குளிர் வருடிக் கொடுக்க மெதுவாகக் கண்ணயர்ந்தாள். 

 

தன்னை யாரோ உலுக்கவும் மெதுவாகக் கண்களைத் திறந்தாள் பல்லவி. தேயிலைத் தோட்டங்கள் சுற்றிவர இருக்க அவர்கள் வந்த வாகனம் அழகான ஒரு வீட்டின் முன்பாக நின்றிருந்தது.

 

வீடு வந்திட்டு பல்லவி.”

 

ஓ… தூங்கிட்டேன் கவிதாஸாரி.” புன்னகையோடே பல்லவி இறங்க அவள் உடமைகளை இருவருமாக வீட்டின் உள்ளே எடுத்துச் சென்றார்கள்.

 

வீடு ரொம்ப அழகா இருக்கு. உங்க வீடா?” பல்லவி ஆர்வமாகக் கேட்க கவிதா சிரித்தாள்.

 

நீங்க எதுவும் கேக்காம இருந்தியள் என்டா நான் வீணாப் பொய் சொல்ல வேண்டி வராது. ஆனா ஒன்டு மட்டும் உண்மை பல்லவி. நீங்க பாதுகாப்பான இடத்துலதான் இருக்கிறியள். அதைப்பத்தி மட்டும் பயப்பட வேண்டாம்.”

 

இதற்கு மேல் என்ன கேட்பதுகவிதா கொடுத்த டீயைக் குடித்துவிட்டு சாப்பாட்டை அப்போதைக்குத் தவிர்த்துவிட்டு குளியலை முடித்தாள் பல்லவி. உடம்பும் மனதும் ஏதோ ஒரு சொல்லத் தெரியாத வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது. 

 

கட்டிலில் வீழ்ந்தால் போதுமென்று தோன்றவே ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு படுத்துக் கொண்டாள். சுற்றிவர இருந்த பசுமையும் அவள் தங்கியிருந்த இடத்தின் அழகும் இப்போது அவரும் என்னோட கூட இருந்திருந்தால்… என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. 

 

கை இப்போது தானாக ஃபோனை எடுத்தது. அவள் விமான நிலையத்தை அடைந்த போதே அந்தப் புது சிம்மிற்கு ஒரு ஃபோட்டோ வந்திருந்தது. மாதவன் நடந்து போவதுபோல எடுக்கப்பட்டிருந்தது அந்தப் புகைப்படம்.

 

ஏதோ ஒரு வேகம் வந்தவள் போல அந்தப் படத்திற்கு முத்தங்கள் வைத்தாள் பெண். கண்களைக் கரித்துக் கொண்டு கண்ணீர் பெருகியது. வெடித்துக் கிளம்பிய கேவலை முடிந்த மட்டும் அடக்கி விழுங்கினாள். 

 

மாதவனைப் பிரிந்தது உயிரையே உருக்கியது என்றால் பவானி நடந்துகொண்ட விதம் இன்னும் வேதனை அளித்தது. அவள் குடும்பத்தினர் நடந்ததைக் கூட அவளால் குறைக் கூற முடியவில்லை. அந்த இடத்தில் பவானி கூட இருக்கும்போது அவர்கள் வேறு எப்படித்தான் நடந்து கொள்ள முடியும்?!

 

ஆனால் இதுவரைக் காலமும் இருந்த தனது மாமியார் திடீரென்று மாதவனின் அம்மாவாக ஆகிப்போனதைத்தான் அவளால் தாங்கவே முடியவில்லை.

 

கௌதமை சந்தித்துவிட்டு வீடு வரும்போதே பல்லவி ஒரு முடிவிற்கு வந்திருந்தாள். தான் எடுத்திருந்த முடிவை யாருக்குத் தெரிவிக்காவிட்டாலும் பவானிக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை இருந்ததால் அவரை அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றாள். கூடவே வந்த துளசியைத் தடுத்துவிட்டு இருவரும் மேலே போனார்கள்.

 

பல்லவி நேரடியாக விஷயத்திற்கு வந்த போது பவானி எதுவுமே பேசவில்லை. கடைசியாக அவள் கௌதமின் கோரிக்கையைச் சொன்ன போதும் மௌனமாகவே நின்றிருந்தார்.

 

என்ன செய்யப் போகிறாய்எங்கே போகப் போகிறாய்எதுவுமே அவர் கேட்கவில்லை. கேட்டிருந்தாலும் பல்லவி சொல்லி இருப்பாளா என்பது சந்தேகம்தான். இருந்தாலும் அவரின் அரவணைப்பான ஒரு வார்த்தைக்காக அப்போது அவள் மனது ஏங்கியது என்னவோ உண்மைதான். கன்னத்தில் கண்ணீர் கறையோடு கண்ணயர்ந்தாள் பல்லவி.

 

***

 

மாதவன் நேராக பல்லவியின் வீட்டிற்குத்தான் வந்திருந்தான். கௌதம் ஆஃபீஸிற்கு பல்லவி வந்ததாகச் சொன்னதால் நிச்சயம் அவள் அம்மா வீட்டில்தான் இருப்பாள் என்று அவனுக்குத் தெரியும். 

 

வீடே அமைதியாக இருந்தது. இவன் தலையைக் காணவும் அத்தனைப் பேரும் ஓடி வந்தார்கள். பவானி கண்ணீரோடு நிற்கவும் மாதவனுக்கு ஒருமாதிரி ஆகிப்போனது.

 

ஒன்னுமில்லைநான் நல்லாத்தான் இருக்கேன்.” என்றான் சமாதானம் சொல்வது போல.

 

உள்ளே வாங்க மாப்பிள்ளை.” சரோஜா அழைக்கவும் உள்ளே வந்தவன் கண்கள் மனைவியைத் தேடியது.

 

பல்லவி எங்க?” மாதவனின் கேள்வியில் அத்தனைப் பேரின் வாயும் பூட்டுப் போட்டுக் கொண்டன.

 

குளிச்சுட்டு வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம். பல்லவி இப்போ வந்திடுவா.” என்ன தோன்றியதோசரோஜா இப்படிச் சொல்லவும் மாதவனும் எழுந்து உள்ளே போனவன் குளித்துவிட்டு வந்தான்.

 

அத்தைபல்லவி இன்னும் வரலையா?”

 

இல்லை மாப்பிள்ளை… நீங்க சாப்பிடுங்க. இதோ வந்திடுவா.” அத்தைப் பரிமாற அமைதியாக உண்டு முடித்தான் மாதவன். அதற்கு மேலும் மனைவியைப் பார்க்காமல் அவனால் இருக்க முடியவில்லை.

 

எங்க போயிருக்கான்னு சொல்லுங்க. நான் போய் கூட்டிட்டு வர்றேன்.”

 

பல்லவிக்கா இங்க இல்லை அத்தான்.” துளசி சட்டென்று சொல்ல மாதவனின் கண்கள் இடுங்கியது.

 

இங்க இல்லைன்னா எங்கஊர்லயா?” இப்போது மகனின் கண்கள் அம்மாவைப் பார்த்தது.

 

பல்லவிக்கா எங்கன்னு யாருக்குமே தெரியாது. அம்மா அக்காவை அடிச்சாங்க.” தன் பல்லவி அக்காவிற்கு அந்த வீட்டில் நடந்த அக்கிரமம் பொறுக்காமல் சமையம் வாய்த்ததென்று போட்டுக் கொடுத்தாள் துளசி.

 

என்ன?!” உட்கார்ந்திருந்த நாற்காலியை உதறிக்கொண்டு மாதவன் எழும்ப பவானி பயந்து போனார். சரோஜா இப்போது ஓவென்று கண்ணீர் வடித்தார்.

 

நீங்க போயிடுங்க மாப்பிள்ளை… எம்பொண்ணை விட்டுத் தூரப் போயிடுங்க. நீங்க தள்ளி நின்னாலே எங்கப் பொண்ணு எங்கக்கிட்ட வந்திடுவா.” கதறி அழுதார் சரோஜா.

 

அத்தை… பல்லவி எங்க?” மாதவனின் கர்ஜனையில் அந்த வீடு அதிர்ந்தது. இதுவரை தான் அதிகம் பேசியிராத மாமனார் முன்னால் வந்து நின்றான் மாதவன்.

 

பல்லவி எங்கநானில்லாதப்போ எம் பொண்டாட்டியைப் பார்த்துக்க வேண்டிய கடமை உங்களுக்குத்தானே இருக்கு. இன்னுமே உங்களுக்குப் பொறுப்பு வரலையா?” விட்டால் தியாகராஜனை அடித்துவிடும் வேகத்தில் நின்றிருந்தான் இளையவன்.

 

உங்கம்மா இந்த வீட்டுல இருக்கும்போது எனக்கு அந்த உரிமை இல்லையே தம்பி.” தியாகராஜனும் இப்போது வாயைத் திறந்தார்.

 

அதுக்காக… உங்கப் பொண்ணு வீட்டை விட்டுப் போகும் போது கையைக் கட்டிக்கிட்டு நீங்க சும்மா பார்த்துக்கிட்டு நிப்பீங்களா?”

 

எம் பொண்ணு தப்புப் பண்ணி இருக்கா. அதை…”

 

அப்பிடி நான் சொன்னேனா?” தியாகராஜனை முந்திக்கொண்டு கேட்டான் மாதவன். அவன் குரலில் சுருதி ஏறியிருந்தது.

 

நீங்க சொல்லலை. ஆனா உங்கம்மா இங்க வந்து எம் பொண்ணைப் பத்திப் புகார்தான் சொன்னாங்க.”

 

சொன்னாநீங்க அப்பிடியே ஏத்துப்பீங்களாஉங்கப் பொண்ணை நம்ப மாட்டீங்களா?”

 

எங்கப் பொண்ணை நாங்க நம்பாம வேற யாரு நம்பப் போறாஆனா அப்போ பாதிக்கப்பட்டு நின்னது உங்க அம்மா. நாங்க வேற என்னப் பண்ண முடியும்?”

 

ஏன்எனக்கொன்னுன்னா அது எங்கம்மாவை மட்டுந்தான் பாதிக்குமாபல்லவியைப் பாதிக்காதா?”

 

பல்லவியை மட்டுமில்லைஉங்களுக்கு ஒரு கஷ்டம்னா எங்களையுமே அது பாதிக்கும் தம்பி. ஆனா அது உங்கம்மாக்குப் புரியலை. வீட்டுக்கு வந்த மூத்த மாப்பிள்ளை இருக்கும்போதே சந்தையில பொருளை விக்குற மாதிரி எம் பொண்ணைப் பத்தி அத்தனையையும் கடைப் பரப்பினாங்க.” இப்போது மாதவனின் கண்கள் தன் அம்மாவை எரித்தது. கண்கள் கலங்க பவானி தலையைக் குனிந்து கொண்டார். 

 

இந்தக் கதையெல்லாம் கேக்க இப்போ எனக்கு நேரமில்லை. எம் பல்லவி எங்கஅதை மட்டும் எனக்குச் சொல்லுங்க.”

 

தெரியாது.” தியாகராஜன் சட்டென்று பதில் சொல்ல பக்கத்தில் இருந்த சுவரில் ஓங்கிக் குத்தினான் மாதவன்.

 

உங்கம்மாவுக்குத் தெரியும் அத்தான்.” இப்போது துளசி வாயைத் திறக்க ஒட்டுமொத்த வீடுமே அவள் பக்கம் திரும்பியது. மாதவன் அந்தச் சின்னப் பெண்ணிடம் ஓடி வந்தான்.

 

என்ன நடந்தது துளசி?” 

 

பல்லவிக்கா அவங்க முன்னாடி வேலைப் பார்த்த ஆஃபீஸுக்குப் போகணும்னு சொன்னாங்க. மனோகர் அத்தானும் நானும் கூடப் போனோம். உள்ள போய் பேசிட்டு வந்தாங்க. அதுக்கப்புறமா ஏழு மணிக்கு வெளியே கிளம்பிப் போனாங்க. நானும் கூட வரவான்னு கேட்டதுக்கு வேணாம்னு சொல்லிட்டாங்க.”

 

ம்… மேல சொல்லு.” ஏழு மணிக்கு பல்லவி எங்கே போனாள் என்பதுதான் அவனுக்குத் தெரியுமே. தாடை இறுகியது மாதவனுக்கு.

 

போன கொஞ்ச நேரத்துலேயே அக்கா திரும்பி வந்துட்டா. உங்கம்மாவோட ஏதோ பேசினாநான் பார்த்தேன். அதுக்கப்புறம் சட்டுன்னு கிளம்பி வெளியே போயிட்டா.”

 

அக்கா அந்த நேரத்துல வெளியே போறாளேஎங்கப் போறான்னு நீ கூடக் கேக்க மாட்டியா துளசி?”

 

அக்கா கையில எதுவுமே எடுத்துக்கலை அத்தான். ஹான்ட் பேக் மட்டுந்தான் இருந்துச்சு. அதால எனக்கு எந்த சந்தேகமும் வரலை.”

 

ம்…” உறுமியவன் பவானியை அண்ணார்ந்து பார்த்தான்.

 

பல்லவி எங்க?” மகனின் ஆக்ரோஷமான கேள்விக்கு பதிலளிக்காமல் உள்ளே போன பவானி கையில் எதையோ எடுத்துக்கொண்டு வந்து மகனிடம் நீட்டினார். ஏதோ கடிதம் போல இருக்கவும் அவசரமாகப் பிரித்தான் மாதவன். பல்லவிதான் எழுதி இருந்தாள்.

 

அன்புள்ள அத்தானுக்கு,

 

பல்லவி எழுதிக் கொள்வது. நான் எப்போது ‘அத்தான்‘ என்று அழைத்தாலும் நீங்கள் விழுந்து விழுந்து சிரிப்பதுதான் வழமை. இப்போது சிரிக்கும் மனநிலையில் நீங்கள் இல்லாவிட்டாலும் எனக்காகக் கொஞ்சம் சிரியுங்கள்.

 

இதைப் படிக்கும்போது மாதவனின் கண்கள் லேசாகக் கலங்கியது. மேற்கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கடிதத்தைப் படித்தான்.

 

உங்களோடு ஒரு இரண்டு மாத காலங்கள்தான் வாழ்ந்திருக்கிறேன் என்றால் என்னால் நம்ப முடியவில்லை. ஏதோ பலகாலம் வாழ்ந்த நிறைவு எனக்குள்.

 

உங்களை விட்டுக் கொஞ்சம் தூரமாகப் போகிறேன். தவறான எந்த முடிவுக்கும் வரமாட்டேன். என்னைத் தேடாதீர்கள். நம்மைச் சுற்றி இருக்கும் கண்கள் நம்மைக் கவனித்தபடி இருக்கின்றன. என்னோடு நீங்கள் இருக்க வேண்டும் என்ற ஆசையை விட நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. 

 

அத்தையைக் கோபிக்காதீர்கள். பல்லவியை அவர்களுக்குப் பிடிக்கும். அதை விட அவர்கள் மகனை அவர்களுக்கு இன்னும் அதிகமாகப் பிடிக்கும். அவர்கள் நிலையில் நான் இருந்திருந்தாலும் இப்படித்தான் நடந்திருப்பேன். 

 

கையில் போதியளவு பணம் இருக்கிறது. அதனால் வீணாக என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நிம்மதியாக இருங்கள். யாரோடும் வீணான சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.

 

தோட்டத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். கிணற்றில் அடிக்கடி இரவு நேரங்களில் குளிக்க வேண்டாம். உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள். 

 

எப்போதும் உங்கள் நினைவுகளுடன்,

 

உங்கள் பல்லவி.

 

அந்தக் காகிதத்தில் முகத்தைப் புதைத்த மாதவனின் தோள்கள் குலுங்கியது. திகைத்துப்போன தியாகராஜன் ஓடி வந்து தனது இளைய மருமகனைத் தோளோடு அணைத்துக் கொண்டார். அவர் கரம் மாதவனின் முதுகை ஆதரவாகத் தடவியது.

 

 

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!