PunnagaiMannan-3

புன்னகை மன்னன்

அத்தியாயம் – 3

“அர்ஜூன்! எங்க போயிட்டு வர்றே?”

“ஃப்ரெண்ட்டைப் பார்க்கப் போனேன் மதுரா.”

“அந்தப் ப்ரீத்தி எப்ப இருந்து உனக்கு ஃப்ரெண்ட் ஆனா? எங்கிட்ட நீ சொல்லவே இல்லையே!” மதுரா சரியாகப் பிடிக்கவும் தலையில் கையை வைத்துக் கொண்டான் அர்ஜூன். அதற்கிடையில் யாரோ அவளிடம் பற்ற வைத்திருந்தார்கள்.

“இங்கப்பாரு மதுரா… நம்மக்கூடப் படிக்கிற பொண்ணு உங்கூடப் பேசணும்னு சொல்லும் போது… என்னால தவிர்க்க முடியாது.”

“அவ என்னப் பேசப் போறான்னு உனக்கு நல்லாவே தெரியும் அர்ஜூன். அப்படியிருந்தும் போயிருக்க நீ?”

“ஹேய்… புரிஞ்சுக்கோடி. அப்படி சட்டுன்னு ஒரு பொண்ணு முகத்தைப் பார்த்துச் சொல்ல முடியாது மதுரா.”

“ஏன்? என்னோட முகத்தைப் பார்த்துச் சொல்லலை நீ? உனக்கும் எனக்கும் ஒத்துவராதுன்னு நீ சொல்லலை.”

“மதுரா… என்ன பேசுறே நீ?”

“அப்படி என்னத்தை அர்ஜூன் நான் பேசிட்டேன். இதுவே ஒரு பையன் கூப்பிட்டு நான் போயிருந்தா…”

“ஏய்! என்னடி வாய் நீளுது.”

“ஆ… கோபம் வருதில்லை. அது மாதிரித்தானே எனக்கும். அந்தப் ப்ரீத்தி உன்னைப் பார்க்குற பார்வையிலேயே லவ் வழியுது. அது இந்த டெல்லிக்கே தெரியும். உனக்குத் தெரியலையா அர்ஜூன்? ஸோ… நீ வேணுமின்னே போயிருக்கே. அப்படி என்னத்தைச் சொன்னா… உன்னோட ப்ரீத்தி?” அவள் நீட்டி முழக்கிக் கேட்கவும் பாக்கெட்டில் இருந்த அந்தக் காகிதத்தை எடுத்து நீட்டினான் அர்ஜூன்.

“ஓ… லவ் லெட்டர் குடுக்குற அளவுக்கு வந்துட்டாளா அவ. நாளைக்கு அவளை வெச்சுக்கிறேன். அவளைச் சொல்லிக் குத்தமில்லை அர்ஜூன். என்னைச் சொல்லணும். வேலியில்லாத பயிர்னா போறதும் வர்றதும் மேயத்தான் பார்க்கும். இனி இந்த ஹாஸ்டல் ரூம்ல நீ இருக்கிற வேலையெல்லாம் சரிவராது. பேசாம எங்கூட வந்து என் ஃப்ளாட்ல தங்கு.”

“ஏய் மதுரா! என்ன பேசுற நீ? நான் எப்படி உன்னோட ஃப்ளாட்ல வந்து தங்க முடியும்?”

“அப்படிக் கேளு அர்ஜூன்! உன்னால தங்க முடியாது. ஏன்னா… நீ எங்கூடத் தங்கினா நீ என் ஆளுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிரும் பாரு. அதனால நீ வரமாட்டே.”

“மதுரா… நீ புரியாமப் பேசுற. தனியா உங்கூட நான் எப்படித் தங்க முடியும் மதுரா? அது நல்லா இருக்காது.”

“ஏன்? தங்கினா என்ன அர்ஜூன்?‌ நாளைக்கு எங்கப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது இது ஒரு பேச்சா வந்திடும்னு பயப்பிடுறியா அர்ஜூன்.” அவள் கொதித்துக் கொண்டிருக்க அர்ஜூன் தலையில் அடித்துக் கொண்டான். ஆனால் அவள் பிடிவாதமே இறுதியில் வென்றது.

அவன் சிந்தனையைக் கலைத்தது போன்.

அர்ஜூன்.” தயாளன் தன் நண்பனை அழைத்த குரலில் அத்தனை மகிழ்ச்சி இல்லை.

“சொல்லு தயா… கண்டுபிடிச்சுட்டியா?” ஆனால் அர்ஜூனின் குரல் பரபரத்ததை இங்கிருந்தே தயாளனால் புரிந்து கொள்ள முடிந்தது.

“ம்…”

“சொல்லு தயா… ஏன் தயங்குறே?”

“அர்ஜூன்… நீ நினைக்கிற நிலைமையில மதுரா இப்போ இல்லை.” தயாளன் எதையோ சொல்லத் தயங்குவதைப் போல இருந்தது அர்ஜூனுக்கு.

“புரியலை.”

“இந்தப் புள்ளியிலேயே அவங்களை விட்டு நீ விலகுறது நல்லதுன்னு எனக்குத் தோணுது அர்ஜூன்.” தன் நண்பனின் வார்த்தைகளில் சற்று நிதானித்தான் அர்ஜூன். சட்டென்று எதுவும் சொல்லிவிடவில்லை…

“அதுக்காகவா இந்த ஏழு வருஷமும் நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன் தயா?”

“அர்ஜூன்… உன்னோட கஷ்டங்களைக் கூடவே இருந்து பார்த்ததால தான் சொல்லுறேன். வேணாம்… எல்லாத்தையும் விட்டுரு.”

“சொல்லு தயா… எம் மதுரா எப்படி இருக்கா?” கேட்டவன் குரலில் ஆர்வத்தையும் தாண்டிய வலியே இப்போதுத் தெரிந்தது. தயாளன் கண்களை ஒரு முறை இறுக மூடித் திறந்தான்.

“இப்போ அவ உன்னோட மதுரா இல்லை அர்ஜூன்.”

“ஓ… நீ அந்த சஞ்சீவைச் சொல்லுறியா? அது வெறும் கண்துடைப்பு தயா. தங்கை பையனைக் கட்டி வெச்சுட்டா நான் மதுரா பின்னாடிப் போக மாட்டேன்னு உதய நாராயணன் போட்டத் தப்புக் கணக்கு தயா அது. அதை நீயும் நம்பாதே.”

“அர்ஜூன்… நான் சொல்லுறதைக் கேளு.”

“மதுரா இன்னைக்கு வரைக்கும்… ஏன்? இந்த நிமிஷம் வரைக்கும் எம் மதுராவாத்தான் இருப்பா. அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை தயா.”

“உன்னோட மதுராக்கு இப்போ ஒரு பொண்ணு இருக்கான்னு நான் சொன்னாக் கூட நீ இதையே தான் எங்கிட்ட திரும்பச் சொல்லுவியா அர்ஜூன்?”

“………………”

“அர்ஜூன்!”

“திரும்பச் சொல்லு தயா. நீ சொன்னது எங்காதுல சரியா விழலை.”

“அர்ஜூன்…‌ அர்ஜூன்… உன்னோட காது சரியாத்தான் வேலை பண்ணுது. நீ, நான் சொன்னதைத்தான் இப்போ கேட்டே. அதுதான் உண்மையும் கூட அர்ஜூன். புரிஞ்சுக்கோ.” தயாளன் குரலில் அத்தனை சலிப்புத் தெரிந்தது. குழந்தைக்குச் சொல்வதைப் போல சொல்லிக் கொண்டிருந்தான்.

“நீ என்ன சொல்றே தயா?”

“மதுராக்கு ஆறு வயசுல ஒரு பொண்ணு இருக்கு.”

“நீ பார்த்தியா?”

“ம்… இன்னைக்குத்தான் வந்து இறங்கினாங்க. கனடாலதான் இருந்திருக்கா. நம்ம ஆளுங்க இருக்கிற இடமா இல்லாம, கொஞ்சம் ஒதுக்குப் புறமா இருக்கா.”

“ஓ…”

“யாரும் கண்டு பிடிக்க முடியாத அளவுக்குப் பக்காவா ப்ளான் பண்ணி இருக்கிற மாதிரித் தான் தோணுது.”

“ம்…” அந்த பதில் உறுமலாகத்தான் வந்தது.

“மீட் பண்ண ஏற்பாடு பண்ணு தயா.”

“அர்ஜூன்!”

“சொன்னதைச் செய் தயா.”

“இதுக்கப்புறமும் மீட் பண்ணி நீ என்ன பண்ணப் போறே அர்ஜூன்?”

“பழைய கணக்கு பாக்கி இருக்கு தயா. அதைத் தீர்த்துக்கணும். ஏற்பாடு பண்ணு.”

“என்ன பண்ணுறேன்னு புரிஞ்சு தான் பண்ணுறியா?”

“ம்… நல்லாவே புரியுது.”

“அபிராமி ஆன்ட்டிக்குத் தெரிஞ்சா என்னைக் கொன்னுடுவாங்க.”

“நீ ஏற்பாடு பண்ணுறியா? இல்லை… நானே ஏற்பாடு பண்ணட்டுமா?”

“அர்ஜூன்… மதுரா கூப்பிட்ட உடனேயே வருவான்னு எனக்குத் தோணலை.”

“அப்போ தூக்கு.”

“அர்ஜூன்!” தயாளன் மிரண்டு போனான்.

“நான் சொன்னதை நீ செய் தயா. இல்லைன்னா இந்தப் புள்ளியிலேயே நீ விலகிடு. என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியும்.” அர்ஜூன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

தயாளன் கொஞ்ச நேரம் அப்படியே அவன் ஆஃபீஸில் அமர்ந்து விட்டான்.‌ அர்ஜூனை நெடுநாட்களாக அவனுக்குத் தெரியும். மதுராவையும் அவனுக்குத் தெரியும். பெரிதாக அந்தப் பெண்ணோடு பழக்கம் இல்லை என்றாலும் பார்த்திருக்கிறான்.

அந்தப் பிரிவைத் தாண்டத் தன் நண்பன் எத்தனைத் தூரம் தன்னைத் தொழிலுக்குள் புகுத்திக் கொண்டான் என்றும் அவன் அறிவான்.

ஆரம்பத்திலேயே தயாளன் அவளைத் தேடலாமா என்று கேட்டபோது அர்ஜூன் மறுத்து விட்டான். என்ன நடந்தது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

மாயமாக மதுரா மறைந்துப் போயிருந்தாள். இவர்கள் காதல் அவள் வீட்டில் தெரிய வந்த போது எல்லாப் பணக்கார அப்பாக்களையும் போலத்தான் அவள் அப்பாவும் நடந்து கொண்டார்.

அர்ஜூனை ஆட்கள் வைத்து அடித்து நொறுக்கி இருந்தார். அவன் ஹாஸ்பிடலில் இருந்த போது ஒரு முறை அந்தப் பெண் வந்துப் பார்த்துவிட்டுப் போனது. அதன்பிறகு அவள் வரவேயில்லை.

தடுத்திருப்பார்கள் என்று எல்லோருக்குமே நன்றாகப் புரிந்தது. அர்ஜூன் ஒரு மாதம் ஹாஸ்பிடலில் தான் இருந்தான். அவன் அப்பாவும், ஆன்ட்டியும் தான் கூடவே இருந்துப் பார்த்துக் கொண்டார்கள்.

முழுதாகத் தேறி அவன் வீட்டுக்கு வந்தபோது அத்தனையும் தலைகீழாக மாறிப் போயிருந்தது. மதுரா புகைபோல மாயமாகிப் போயிருந்தாள். விசாரித்த போது அத்தைப் பையனோடுத் திருமணமாகிவிட்டதாகச் சொன்னார்கள்.

ஆனால் அர்ஜூன் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. அவனுக்கு அத்தனை நம்பிக்கை அந்தப் பெண்ணின் மேல். உறுதியாகத் தான் இருந்தான்.

தேடிப் பார்க்கலாமா என்று தயாளன் திரும்பத் திரும்பக் கேட்டபோதும் மறுத்து விட்டான். தொழில்… தொழில் என்று அதற்குள்ளேயே மூழ்கிப் போனான். அவன் கனவுகளை எல்லாம் நனவாக்க அவனுக்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டது.

அவன் உழைப்பைப் பார்த்து தயாளனே மிரண்டு போயிருக்கிறான். தூங்குவானா? ஓய்வெடுப்பானா? எதுவுமே தெரியாது. உழைப்பு… உழைப்பு… அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அது மட்டும் தான்.

**************

தனது ரிவோல்விங் செயாரில் சுழன்ற படி அமர்ந்திருந்தான் அர்ஜூன். நெற்றியின் மத்தியில் நரம்பொன்று புடைத்திருந்தது. தயாளன் சொன்னதை அவனால் நம்ப முடியவில்லை.

குழந்தையா! அதுவும் மதுராவிற்கா? தான் சம்பந்தப் படாமலா? குழப்பமாக இருந்தது. தத்தெடுத்திருப்பாளோ?

ம்ஹூம்… சாத்தியமில்லை. அதற்கு அவள் குடும்பம் அனுமதிக்காது. தராதரம் இல்லாதவனைக் காதலிக்கவே அனுமதிக்காதவர்கள், யாரோ பெற்றக் குழந்தையை வளர்க்கவா அனுமதிப்பார்கள்?

கண்களை லேசாக மூடிக்கொண்டான் அர்ஜூன். குறும்புத் தனங்களின் உறைவிடமான அந்த முகம்தான் அந்தக் கண்களுக்குள் வந்து நின்றது.

‘அர்ஜூன்!’ ஆங்காரமாகக் கத்தினாள் மதுரா.

‘என்னாச்சு மதுரா? எதுக்கு இப்போ இப்படிக் கத்துறே?’

‘நீ எதுக்கு அந்தப் பொண்ணுங்க முன்னாடி வயலினைத் தூக்கிக்கிட்டு வந்த?’ அவள் கண்களில் அத்தனைக் கோபம்.

‘என்னப் பேசுறே நீ?’ அந்தக் காய்ச்சல் வந்த பிறகு பெண் அவனிடம் கொஞ்சம் அதிகமாகத்தான் உரிமை எடுக்கிறது. அர்ஜூனும் கண்டு கொள்வதில்லை.‌ ஆனால் இன்று அவள் பேசியது எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல இருந்தது.

‘அந்தப் பொண்ணுங்க முன்னாடி நீ வயலின் ப்ளே பண்ணலைன்னு இப்போ யாரு அழுதா? நீ பாட்டுக்கு வாசிக்கிறே… அவளுங்களும் உருகிப் போய்க் கேக்குறாளுங்க.’

‘கேட்டா என்ன இப்போ? யாருக்குத் தான் மியூசிக் பிடிக்காது? பிடிச்சிருக்கு… கேக்குறாங்க. அதுக்கு நீ ஏன் குதிக்கிறே?’ இப்போது அர்ஜூனுக்கும் கோபம் வந்தது.

அர்ஜூன் அத்தனை அருமையாக வயலின் வாசிப்பான். அது ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் இன்று அந்த விஷயம் எப்படியோ நண்பர்கள் வரை கசிந்திருந்தது. பிடித்துக் கொண்டார்கள்.

தவிர்க்க முடியாமல் இவனும் சம்மதித்திருந்தான். வான் நிலா… நிலா அல்ல… உன் வாலிபம் நிலா… இந்தப் பாடல் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

தனக்குப் பிடித்த பாடலை அவன் உலகம் மறந்து இசைக்கக் கூடியிருந்தவர்களும் தங்களை மறந்து அந்த இசையை ரசித்தார்கள். இதில் இவளுக்கு என்ன பிரச்சனை வந்தது?

‘ஆமா… அப்படித்தான் குதிப்பேன். ஏன்னா நீ வாசிக்கிறதை நான் மட்டும் தான் கேக்கணும். உன்னை உருகி உருகி நான் மட்டும் தான் ரசிக்கணும்.’ இப்போதும் ஆவேசமாகக் கத்தியவள் மூச்சு வாங்கினாள்.

அர்ஜூன் அவளை ஒரு தினுசாகப் பார்த்தான். அவள் பேசுவது அவனுக்குப் புரியவில்லை.

‘மதுரா!’ என்றான் ஆச்சரியமாக. அவன் அழைத்தது தான் தாமதம். அவன் அருகில் பறந்து வந்தவள் அவன் முகத்தைத் தன்னை நோக்கி இழுத்தாள். அவன் நடப்பை உணரும் முன்னமே அவன் இதழ்களைச் சிறை செய்திருந்தாள் பெண்.

அர்ஜூன் திடுக்கிட்டுப் போனான்.

அவனுக்குத் தெரியும். அவன் மீதான அவள் பார்வைகளின் வித்தியாசத்தை சமீப காலமாக அவனும் உணர்ந்து தான் இருந்தான். என்றாவது ஒரு நாள் வெடிக்கும் என்றும் தெரியும். ஆனால்… இப்படி எதிர்பார்த்திருக்கவில்லை.

ஏதோ ஒரு வேகத்தில் அவனை நெருங்க முடிந்தவளுக்கு விலக மனம் இருக்கவில்லை. அவன் தோளில் தன் முகத்தைச் சாய்த்துக் கொண்டாள்.

சற்று நேரம் போன பின்தான் அவனிடத்திலிருந்து அவள் செய்கைக்கான எந்தவொருப் பிரதிபலிப்பும் வரவில்லை என்பதை உணர்ந்தது பெண் மனம்.

‘அர்ஜூன்!’ அவள் கலவரமாக அழைக்கவும் அவளைத் தன்னிடமிருந்து பிரித்தான் அர்ஜூன்.

‘அர்ஜூன்!’ அவள் குரலையும் தாண்டி இப்போது முகத்தில் கலவரம் தோன்றியது.

‘இது நடக்கிறதுக்கான சாத்தியக்கூறுகள் கொஞ்சமும் இல்லை மதுரா.’

‘அதுக்காக?’

‘சொன்னாப் புரிஞ்சுக்கோ.’

‘நான் சொன்னா எங்க வீட்டுல புரிஞ்சுக்குவாங்க.’

‘அப்போ புரிய வைச்சுட்டு வா.’

‘அர்ஜூன்… என்னைக் கேலி பண்ணுறீங்களா?’ இப்போது அந்தக் குரலில் வலி தெரிந்தது.

‘நானே வந்து இப்படியெல்லாம் பண்ணுறதால என்னைச் சீப்பாப் பார்க்குறீங்களா அர்ஜூன்?’

‘மதுரா!’ அர்ஜூன் கர்ஜித்தான். மதுரா அதற்கு மேல் பேசாமல் போய்விட்டாள். கண்கள் கலங்கிய படிப் போகும் பெண்ணை ஒரு வலியோடுப் பார்த்திருந்தான் அர்ஜூன்.

*************

அர்ஜூனுக்குப் பரபரப்புத் தாங்க முடியவில்லை. அந்தக் கட்டிடத்தின் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்த படி இருந்தான்.

நகரின் ஒதுக்குப் புறத்தில் அமைந்திருந்த கட்டிடம் அது. முழுதாக முடிந்திருக்கவில்லை. தயா அவனை இங்குதான் வரச்சொல்லி இருந்தான்.

மதுரா இந்தியா வந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. இதுவரை அவள் ஹாஸ்பிடலை விட்டு எங்கேயும் வெளியே வராததால் அவளை நெருங்குவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.

இன்று அவள் கோயில் வரை வந்திருப்பதாக தயாளன் சொல்லி இருந்தான். சேதி கேட்ட மாத்திரத்தில் பறந்து வந்திருந்தான் அர்ஜூன். அவன் கண்களில் ஆர்வம் வழிந்தது.

ஏழு ஆண்டுகளுக்குப் பின் அவளைப் பார்க்கப் போகிறான். தன்னை விட்டுப் போயிருந்த வசந்தத்தின் வருகைக்காக வாசலையே பார்த்திருந்தான் அர்ஜூன்.

ஃபோன் அடித்தது. எடுத்துப் பார்த்தான். தயாளன் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

“சொல்லு தயா.”

“கார் வந்திடுச்சு அர்ஜூன். கோயிலுக்கு வந்தவங்களை பிரகாரத்தைச் சுத்தும் போது மிரட்டிக் கூட்டிக்கிட்டு வந்திருக்காங்க.”

“எதுக்கு தயா மிரட்டணும்?” அர்ஜூனின் குரலில் கோபம் அளவுக்கு மீறியே தெரிந்தது.

“பின்ன என்ன பண்ண முடியும் அர்ஜூன்? மிஸ்டர்.அர்ஜூன் உங்களைப் பார்க்கணும்னு சொல்லுறார். வந்து கார்ல ஏறுங்கன்னு சொன்னா வந்திருவாங்களா?” இப்போது தயாளன் குரலிலும் எரிச்சல் தெரிந்தது.

“சரி… சரி… விடு தயா. நான் பார்த்துக்கிறேன்.”

“ம்… ரொம்ப நேரம் எடுக்காத அர்ஜூன். சந்தேகம் வரும்.”

“என்ன தயா? ஏழு வருஷத்துக்கு அப்புறம் பார்க்கிறேன். இப்படிச் சொன்னா எப்படி?”

“உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை. பார்த்து நடந்துக்கோ.” தயாளன் பேச்சை நிறுத்திய நேரம் உள்ளே நுழைந்தாள் மதுரா.

அர்ஜூன் ஆனந்தத்தில் அப்படியே உறைந்து போனான். கண்கள் கூட லேசாகக் கலங்கி விட்டிருந்தது. இமைகள் வேலை நிறுத்தம் செய்திருந்தன.

புடவை கட்டி இருந்தாள். கையில் அர்ச்சனைத் தட்டு. நெற்றி வகிட்டில் குங்குமம். ஒற்றைப் பின்னலில் கொஞ்சம் மல்லிகைப்பூ. ஆளே மாறிப் போயிருந்தாள்.

தான் அன்றுப் பார்த்தக் குறும்புப் பெண் இவளல்ல. அவள் நடையில் இப்போது நிதானம் அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது. உடம்பு லேசாக சதை போட்டிருந்தது.

ஒரு சின்னப் பதட்டத்தோடு உள்ளே நடந்து வந்தவள் யாரையும் காணததால் கண்களை லேசாகச் சுழல விட்டாள். அர்ஜூன் அனைத்தையும் உள்ளிருந்த படிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தக் கண்கள் இப்போதுத் தன்னைப் பார்க்கும் போது… நினைவே சுகமாக இருக்க ஆர்வம் தாங்காமல் வெளியே வந்தான் அர்ஜூன். அரவம் கேட்கவும் அந்தத் திசையில் திரும்பினாள் மதுரா.

“அர்ஜூன்!” அவள் வாயிலிருந்து சத்தம் வரவில்லை. ஆனால் கண்கள் நிலைகுத்த, உதடுகள் தன்பாட்டில் முணுமுணுத்தது.

“மதுரா!” அர்ஜூனின் குரல் கரகரப்பாக வந்தது. பேச இருவருக்குமே வாய் வரவில்லை. ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தபடி அப்படியே உறைந்து நின்றிருந்தார்கள்.

அந்தக் கணம் அப்படியே நின்று போகக் கூடாதா என்று அவன் மனம் பிரார்த்தித்துக் கொண்டது.

“அப்பா எப்படி இருக்காங்க?” மௌனத்தைத் தானே முதலில் உடைத்தான் அர்ஜூன்.

“ம்… இப்போ கொஞ்சம் பரவாயில்லை.” அவள் தடுமாறவில்லை. ஆனால்… லேசாகத் தயங்குவது போலத் தெரிந்தது.

“எப்படி இருக்க மதுரா? கோயிலுக்குப் போயிருந்தியா என்ன?”

“ம்… ஆமா. அர்ஜூன்… வீட்டுல தேடுவாங்க. நான் சீக்கிரமாப் போகணும்.” பேச்சுவார்த்தை சுமுகமாகவே போய்க் கொண்டிருந்தது.

“போகலாம்… போகலாம். என்ன அவசரம்? இப்போ தானே வந்தே மதுரா?” பேசியபடி அவன் அருகில் வர அண்ணார்ந்து பார்த்தாள் மதுரா. அந்தக் கண்களில் தெரிந்த கலவரத்தைப் பார்த்து அர்ஜூன் லேசாகத் திகைத்தான்.

பக்கத்தில் வந்தவன் தன் நெற்றியை அவளுக்காகக் காட்ட… வெகுவாகத் தயங்கிய படி அதில் திருநீற்றைப் பூசி விட்டாள். அர்ஜூனின் கண்கள் தன் மனைவியாகத் தவறிய காதலியை அளவெடுத்தது.

அர்ச்சனைத் தட்டிலிருந்த குங்குமத்தை எடுத்தவன் அவள் நெற்றி வகிட்டை நோக்கிக் கொண்டு போக அவசரமாக அவன் கைப்பற்றித் தடுத்தாள் பெண்.

“மதுரா!”

“அர்ஜூன்… வேண்டாம்.”

“ஏன்?”

“சொன்னாக் கேளுங்க. வேண்டாம் அர்ஜூன். நான் போகணும்.” புதிதாக அவனை மரியாதையாக வேறு அழைத்தாள்.

“ம்…” எதுவுமே பேசாமல் அர்ச்சனைத் தட்டிலிருந்த பழத்தை எடுத்தவன் அதை ஒரு கடி கடித்து விட்டு அவளிடம் நீட்டினான். வாங்கினாள், ஆனால் உண்ணவில்லை.

அர்ஜூனிற்கு எங்கேயோ இடித்தது. அவள் வாங்கிக் கொண்ட பழத்தை மீண்டும் வாங்கியவன் அவள் வாயருகே அதைக் கொண்டு போனான். தவித்துப் போய்ப் பார்த்தவள் விழிகள் இப்போது லேசாகக் கலங்கியது.

“ம்…” அவன் விடவில்லை. அந்த வற்புறுத்தலில் லேசாக அவள் பழத்தைக் கடிக்க… மீதியை சாவகாசமாக அவன் உண்டு முடித்தான்.

“சொல்லு மதுரா… கூட இருக்கிற குட்டிப் பொண்ணு யாரு?” அந்த ஒற்றைக் கேள்வியில் மதுரா தூக்கிவாரிப் போட அவனைப் பார்த்தாள்.

“உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“இந்தக் கேள்வி முட்டாள்தனமாத் தோணலையா மதுரா உனக்கு?”

“அர்ஜூன்… ப்ளீஸ்…”

“எங்கேயோ ஒரு மூலையில போய் மறைஞ்சுக்கிட்டே. கண்டுபிடிக்க முடியலை தான். அதுக்காக? சொந்த ஊருக்கு வரும்போதும் மிஸ் பண்ணுறதுக்கு நான் முட்டாள் இல்லையே!”

“…………….”

“பொண்ணு யாரு?”

“என்… என்னோட பொண்ணுதான்.”

“உன்னோட பொண்ணுன்னா? உனக்கும் அந்த சஞ்சீவுக்கும் பொறந்த குழந்தையா?”

“………………”

“இந்த மௌனத்துக்கு அர்த்தம் ‘ஆமா’வா… ‘இல்லை’யா.”

“அர்ஜூன்… ப்ளீஸ். நான் போகணும்.”

“ஏன் என்னை விட்டு ஓடுறதுலயே குறியா இருக்க மதுரா?அப்படி என்ன பண்ணிடப் போறேன் உன்னை நான். கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டுப் போ.”

“எம் பொண்ணுதான்.”

“ஓ… கல்யாணம் பண்ணின கையோட குழந்தையையும் பெத்துக்கிட்டு நீ சந்தோஷமா இருந்திருக்கே. நீ இன்னைக்கு வரைக்கும் எம் மதுராவாத்தான் இருப்பேன்னு நான் இங்க கேணையன் மாதிரி இருந்திருக்கேன்.”

“அர்ஜூன்…”

“இது நியாயமே இல்லையே மதுரா. இதுக்காகத்தான் இத்தனை நாள் நான் காத்துக்கிட்டு இருந்தேனா?” அவன் கேட்ட தொனியில் திக்பிரமை பிடித்து நின்றிருந்தாள் மதுரா.

error: Content is protected !!