rathaiyin thedal enna?!

ராதையின் தேடல் என்ன?

“இதயம் விழித்தேன் என்ற நிகழ்ச்சியில், உங்களோடு  இணைந்திருக்கும் நான் உங்கள் உதயா!” என்று அவன் குரலை மனதினுள் ரசித்தபடி, தனது அறையில் அமர்ந்திருந்தாள் மைவிழி.

“மழைத்துளி மண்ணை நனைத்ததும், கமழ்ந்து எழும் மண்வாசனை போன்றது காதல். அந்த நொடி நெஞ்சினில் எழும் சில்லென்ற ஒரு உணர்வை வார்த்தைகளால் வடித்துவிட முடியாது. அந்த காதலை நீங்கள் உணர்ந்த தருணம் பற்றி என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்றவன் அலைபேசியின் இலக்கத்தைக் கூற தொடங்கினான்.  

அதுவரை அவளின் அருகில் அமைதியாக அமர்ந்திருந்த வித்யா, “இவன் எதுக்காக கிருஷ்ண ஜெயந்தி அன்று, இப்படி காதலை ஏலம் விடுகிறான். எனக்கு ஒண்ணுமே புரியல” வாய்விட்டு புலம்பிய தாயைப் பார்த்து அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

“எனக்கு என்னவோ இன்னைக்கு தான், காதலைப் பற்றி பேச சரியான நாளென்று தோணுதும்மா. கிருஷ்ணர் மண்ணில் பிறக்காமல் போயிருந்தால், காதல் பற்றி நமக்கு தெரியாமல் போயிருக்கும். ராதையை அவர் எவ்வளவு தூரம் விரும்பினார் என்று நமக்கு தெரியாதா?” என்று சொல்லும்போது பாடல் ஒலித்தது.

“உங்கப்பா வரட்டும், காதல் பற்றி பேசுவதைப் போட்டுக் கொடுக்கிறேன்” என பொய்யாக மிரட்டிவிட்டு மாடிக்குச் சென்றார்.

தனக்கு பிடித்த கிருஷ்ணனின் பாடலில் மெய்மறந்த மைவிழி, “ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ.. பாவம் ராதா…” பாடல் ஒலிக்க, அதனுடன் சேர்ந்து பாடிய மகளின் குரலை மனதிற்குள் ரசித்தார்.

அந்த நிகழ்ச்சி முடியும் வரை கேட்டுக் கொண்டிருந்த மைவிழி, கடைசி காலராக தான் இருக்க  வேண்டும் என்ற ஆசையில் அழைப்பு விடுக்க, அவளின் நல்ல நேரமோ என்னவோ சீக்கிரம் லைன் கிடைத்தது.

“ஹலோ உதயா! நான் கோவையில் இருந்து மைவிழி பேசறேன்” என்றாள்.

“ஹாய்… ம்ம் உங்களோட காதலை எங்கே எப்படி உணர்ந்தீங்க என்று சொல்லுங்க” என்றான் உற்சாகத்துடன்.

“அதுக்கு முன்னாடி நீங்க உங்களோட காதலை உணர்ந்த தருணத்தை சொல்லுங்க” குறும்புடன் கேட்ட மகளை வித்யா முறைக்க, ‘சும்மா அம்மா’ என்றாள்.

“நான் எங்க பாட்டி வீட்டுக்குப் போயிருக்கும் போது, பக்கத்து வீட்டில் இருந்து சிறுபிள்ளைகளின் கூச்சல் அதிகமாக கேட்டது. நானும் ஆர்வத்துடன் எட்டிப் பார்க்க மாமரத்தின் மீது அமர்ந்துகொண்டு திரண்ட மாங்காயை பறித்து கீழே போட்டாள்”  அந்தக் காட்சியை அழகாக வர்ணிக்க, “ம்ம்” என்றாள்.

“கார்மேகம் திரண்டு இருந்த வானத்தில் கண்ணைப் பறிக்கும் மின்னல் வெட்டியது. சற்று நேரத்தில் சில்லென்று காற்று வீசிட, சத்தமின்றி மழை பொழிய தொடங்கியது. தன் நாசியைத் துளைத்த மண்வாசனையை நுகர்ந்த தருணத்துடன், அவள் குழந்தை போல மழையில் நனைவதைக் கண்டு என் மனம் பறிப்போயிடுச்சு” என்றவன் மனக்கண்ணில் அவளின் பிம்பம் தோன்றி மறைந்தது.

“அந்த பெண்ணோட பெயர் சொல்லலாமே!” என்றவள் ஆசையாக கேட்க, “அவளோட பெயர்தான் உங்களுக்கும் வச்சிருக்காங்க மைவிழி” என்றான் குறுநகையுடன்.

தன்னுடைய பெயரைக் கேட்டு அவள் மூச்சுவிட மறந்து சிலையாகி நின்றுவிட, “உங்களுக்காக செம்மீனா விண்மீனா பாடல்” அவளைத் திகைப்பில் ஆழ்த்திவிட்டு, தனக்கு பிடித்த பாடலை ஒலிபரப்பினான்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் மைவிழி குழப்பத்துடன் வலம்வர, அந்த வார இறுதியில் அவளைப் பெண்பார்க்க வந்தனர். அந்த நாளின் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் குழப்பத்துடன் காபி கொண்டு போய் கொடுத்தாள்.

“யாதவ் இதுதான் பொண்ணு நல்லா பார்த்துக்கோ” என்ற தமக்கையின் கேலி குரல் அவன் காதை எட்டவில்லை.

தன் முன்னே பதுமையாய் நின்றிருந்தவளின் முகத்தில் இருந்த குழப்பத்தைக் கண்டு, மற்றவர்கள்பார்க்காத நேரத்தில் உதடு குவித்து முத்தமிட்டவனை கண்டு அவளின் விழிகள் வியப்பில் விரிந்தது.

 “அக்கா எனக்கு பொண்ணு ஓகே” என்றான் குறும்புடன்.

இரு வீட்டினருக்கும் சம்மதம் என்ற காரணத்தால், “இன்னைக்கு நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம். இந்த மாத கடைசியில் திருமணம் வைக்கலாம்” மைவிழி தந்தை சொல்லவே, மற்றவர்களுக்கும் அதுவே சரியென்று தோன்றியது.

தாங்கள் கையோடு எடுத்து வந்திருந்த புடவையை மாற்ற சொல்லி, “இந்த மோதிரத்தை அவ கையில் போட்டு விடு” என்றார் ராஜியின் கணவன்.

அவனும் மோதிரத்தை வாங்கிகொண்டு  நிமிட, அவனை முறைத்தபடி  கையை நீட்டினாள். அவளின் கரத்தை மென்மையாகப் பற்றிவன் உள்ளங்கையில் வருடிவிட்டு மோதிரத்தை அணிவித்தான். ஏனோ அவன் மீது கோபம் வர மறுத்தது.

வீட்டினர் கிளம்பும்போது கதவுவரை சென்றவன், ‘நான் போயிட்டு வர்றேன்’ என்று தலையசைத்துவிட்டு செல்வதை பிரம்மிப்புடன் பார்த்தாள்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைய, இரு வீட்டினரும் ஜவுளி எடுக்க ஒன்றாக சென்றனர்.

அவள் முகத்தில் இருந்த வாட்டத்தைக் கவனித்த யாதவ், “உனக்கு என்னை பிடிக்கவில்லையா?” என்றான் மெல்லிய குரலில்.

தன் முன்பு கிடந்த சேலைகளின் மீது பார்வையைப் பதித்தவள் மெளனமாக இருக்க, “உன்னைவிட நிறம் குறைவாக, பனை மரத்தில் பாதி உயரத்தில் இருக்கிறவனை கட்டிக்கணுமா என்று நினைக்கிறாயா?” என்று தன் வளர்ச்சியை அவன் குறைக் கண்டுபிடிக்க, சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

களையான முகத்தில் வசீகரமும், உயரத்திற்கு ஏற்ற உடல்வாகும் கொண்டு, கம்பீரமான ஆண்மகனை பிடிக்கவில்லை என்று சொல்ல முடியவில்லை. தான் ரொம்ப மெலிந்து இருப்பது, மற்றவர்களின் கண்டால் கட்டாயம் கேலி செய்ய வாய்ப்புண்டு என்றே நினைத்தாள்.

“என்ன பதில் சொல்லாமல் இருக்கிற?” அவன் கேள்வி கேட்க, தனக்கு பிடித்த நிற சேலையை வருடினாள்.

“அன்னைக்கு நீங்க செய்தது பிடிக்கல. மத்தபடி நான்தான் உங்களுக்கு மேச் இல்லன்னு தோணுது” என்றாள்.

அவன் சொன்னதை மனதிற்குள் குறித்துக் கொண்டவன் வேண்டுமென்றே, “முத்தம் கொடுத்ததை சொல்றீயா?” அவன் ரகசியம் கேட்க, “உங்களை” என்றாள் அதட்டலோடு.

அதே சமயம் தமக்கையின் பார்வை தங்களின் மீது படிவத்தை உணர்ந்து, “அக்கா இவளுக்கு பிடிச்ச கலரில் தான் கோட் போடணும்னு கண்டிசன் போடுறா… நாங்க இருவரும் போய் பார்த்துட்டு வருகிறோம்” என்றவன் மாமனாரின் முகம் பார்க்க, அவரும் சரியென்று தலையசைத்தார்.

இருவரும் லிப்ட்டிற்குள் நுழைய, “இப்போ உன்  கோபத்தைக் காட்டு” என்றவுடன் அவள் திகைத்து விழிக்க, “ஐ லவ் யூ” என்றவன் கண்ணிமைக்கும் நொடியில் கன்னத்தில் முத்தமிட்டு திரும்ப, அதற்குள் லிப்ட் கதவுகள் திறந்தது.

மைவிழி கோபத்துடன் அவனை அடிக்க செல்ல, “லிப்ட்டில் போய் கோபத்தைக் காட்டு” குறும்புடன் கண்ணடித்த யாதவை பார்த்து அவள் முகம் சிவக்க, அதை மனதினுள் ரசித்தான்.

“எனக்கான உடையை நீயே தேர்ந்தெடு” என்றவன் பேச்சை மாற்ற, “இப்படி எல்லாம் எடுத்து எனக்கு பழக்கம் இல்ல” என்றாள் சிணுங்கலோடு.

“இனிமேல் பழகிக்கோ மையூ” என்றவன் பிடிவாதமாக நின்றுகொள்ள, நேரம்  செல்வதை உணர்ந்து அவனுக்கான உடையைத் தேர்ந்தெடுத்தாள்.

ஒவ்வொரு முறை சர்ட் எடுத்து அவன் மீது வைத்து பார்க்கும் போதும், அவளின் முகத்தில் தோன்றி மறையும் உணர்வுகளை புன்னகையுடன் ரசித்தான்.

இருவரும் மீண்டும் புடவை செக்சனுக்குள் நுழைய, “உனக்கு எடுக்க இவ்வளவு நேரமா?” என்றாள் ராஜி.

“நான் தேர்ந்தெடுத்து இருந்தால், இந்நேரம் வீட்டுக்கே போயிருக்கலாம் அக்கா. உங்களுக்கு நான்தான் எடுப்பேன்னு அடம்பிடித்து இவ்வளவு நேரம் பண்ணிட்டா. கடையில் இருக்கும் சேல்ஸ்மேன் ரொம்ப பாவம்” மொத்த பழியையும் அவளின் மீது தூக்கிப்போட்டவனை நிஜமாகவே முறைத்தாள்.

“நீ செய்யும் சேட்டையை அப்படி சொல்வதால், அவரை முறைக்கிறாயா மையூ” என்றார் வித்யா.

“அம்மா” என்றவள் தொடங்க, “சரி சீக்கிரம்  எடுங்க. பில் போட்டுட்டு கிளம்பலாம்” என்று பேச்சை மாற்றிவிட்டு, தன்னவளைப் பார்த்து பழிப்புக் காட்டினான்.

அவன் செய்த சேட்டையில், தனக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மையை மறந்தே போனாள். மற்ற ஆண்களைப் போல இல்லாமல் யாதவ் கலகலப்பான பேச்சும், எந்தநேரமும் வம்பிழுக்கும் குணமும் அவளை வெகுவாகக் கவர்ந்தது.

இருவரின் திருமணமும் இனிதாக நடந்து முடிய, நாள் சரியில்லை என்று முதலிரவு தள்ளிப் போனது. அத்துடன் அவளை யாதவ் அறைக்கு செல்லவும் அனுமதிக்கவில்லை.

பகல்நேரங்களில் தன்னவளை தள்ளி நின்று பார்ப்பவனைக் கண்டு, இப்போது அவள் குறும்புடன் கண்சிமிட்டிவிட்டு செல்வது வழக்கமானது. ஏனோ அவனுடன் விளையாடுவது அவளுக்கு பிடித்திருக்க, அதை அவனும் கண்டுகொண்டான்.

சில சமயங்களில் தனியாக வந்து சிக்கும் மனையாளை முத்தத்தில் மூழ்கடித்துவிட்டு, தங்களுக்குள் எதுவுமே நடக்கவில்லை என்பதுபோல அவன் நடிப்பதை பார்த்து அவளுக்கு கோபம் வருவதற்கு பதிலாக வெக்கமே வந்தது.

ஒருவாரம் சென்றவுடன் அவர்களைத் தனிக்குடித்தனம் வைத்ததோடு நில்லாமல், அவர்களுக்கு முதலிரவும் ஏற்பாடு செய்தனர்.

அதே சமயம் உறவுக்கார பெண்ணொருத்தி, “ராஜி என்ன இந்த பொண்ணு வயதுக்கு தகுந்த உடம்பு இல்லாமல் இவ்வளவு மெலிந்து இருக்கிறா? நல்லா விசாரித்தாயா? ஏதாவது பரம்பரை இருக்க போகுது” என்று சொல்ல, அது மைவிழியின் மனதை வெகுவாக பாதித்தது.

அப்போது வெளியே சென்றுவிட்டு உள்ளே வந்த யாதவ் காதில் அந்த பெண்மணி பேசியது விழுகவே, “ஒன்னு உடம்பு அதிகமாக இருக்கும் பெண்ணைப் பார்த்தால், தின்றே சொத்தை அழித்துவிடுவாள் என்று சொல்றீங்க. ஒல்லியாக இருக்கும் பெண்களைப் பார்த்தால் நோயா என்று விசாரிக்கிறீங்க. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?” என்றான் வெறுப்புடன்.

“நேற்று வந்ததும் அவ உனக்கு சொக்குபொடி போட்டு மயக்கிவிட்டாளா? என்னவோ உலக அழகியை கட்டிட்டு வந்த மாதிரி பேச்சைப் பாரு” அவர் வரம்பு மீறி  பேச, “என் பொண்டாட்டி எனக்கு உலக அழகிதான்” என்றான் அழுத்தத்துடன்.

அத்துடன் நிறுத்தாமல் அனைவரின் முன்னிலையில், கலங்கி நின்றிருந்த மைவிழி மீது அவன் பார்வை படிந்தது. அவள் ஒல்லியாக இருப்பதை தவறாக பேசும் இவர்களின் வாயை அடைக்க வேண்டுமே என்று யோசித்தவனை அவள் வலியுடன் பார்த்தாள்.

சட்டென்று அவளை நெருங்கியவன் இரு கரங்களில் அவளை ஏந்திக்கொண்டு, “ஒல்லியாக அதுவும் ரொம்ப மெலிந்து இருக்கும் என் மனைவியை இப்படி தூக்கிட்டுப் போக வசதியாக இருக்கு பெரியம்மா” என்று கண்சிமிட்டியவன் மாடிக்குச் செல்ல, மற்றவர்கள் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தனர்.

அவளைக் கீழே இறக்கிவிட்ட கணவனை திகைப்பும் நோக்கியவளிடம், “அழகான தருணத்தை மனதில் பொக்கிஷமாக சேர்த்து வைக்க பழகு. இந்த மாதிரி கசடு நிரம்பிய வார்த்தைகளை காதிலேயே வாங்காதே” என்று சொல்லி, அவளின் கன்னம் தட்டிவிட்டு விலகிச் சென்றான்.

தன்னுடைய கணவனுக்கு தன்னை பிடித்திருக்கிறது என்ற உணர்வே அவளின் மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மையை போக்கியது. அன்றிரவு முழு அலங்காரத்துடன் பதுமையாக வந்தவளை இமைக்காமல் நோக்கினான்.

அவனது பார்வையைக் கண்டு அவளின் பதட்டம் அதிகரிக்க, “நம்ம கொஞ்சநேரம் பேசலாமா?” என்றாள் தயக்கத்துடன்.

அவளை இழுத்து அருகே அமரவைத்து, “இங்கே எல்லாம் செயல்தான்” என்றவன் கரங்களோ அவளின் கன்னத்தை வருட, அவள் உடல் சிலிர்த்து அடங்கியது.

அவளின் பளிங்கு முகத்தை இரு கரங்களில் ஏந்தி, துடிக்கும் உதடுகளில் தேன் அருந்த நெருங்கினான். புரியாத உணர்வில் அவள் மனம் சிக்கித் தவிக்க, அதை மனதிற்குள் ரசித்தான்.

“ஒரு ஐ லவ் யூ சொல்லு… உன்னை எதுவும் செய்யாமல் அப்படியே விட்டுவிடுகிறேன்” என்று நிபந்தனை விதிக்க, அவனின் விழிகளை சந்தித்தாள். இருவருக்குமான நெருக்கம் வெகுவாக குறைந்திருக்க, அவன் சொன்னதை நம்ப முடியாமல் திகைத்து விழித்தாள்.

“நம்ம லவ் மேரேஜ் பண்ணல. அதனால் சொல்ல முடியாது” வெடுக்கென்று கூறிவிட, “யார் சொன்னா?” என்றான்.

“எனக்கே தெரியும்” முறைப்புடன் அவன் கரங்களை விலக்கி, சற்று தள்ளி கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள்,

“அப்படியா?” அவளை நம்பாமல் கேட்க, “பின்னே இல்லையா?” என்றாள்.

அவன் இடமும் வலமும் தலையசைத்து அவளது கூற்றை இல்லையென்று மறுத்துவிட, “என்னை முதலில் எங்கே பார்த்தீங்க?” என்றாள்.

“போன வருடம் எங்க பாட்டி வீட்டிற்கு போனபோது…” அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கு சிரிப்புதான் வந்தது.

அவன் காரம் புரியாமல் கேள்வியாக நோக்கிட, “எப்.எம்.மில் உதயாவின் இதயம்  விழித்தேன் நிகழ்ச்சியை நீங்களும் கேட்பீங்களா? கிருஷ்ண ஜெயந்தி அன்று தன்னுடைய காதலைப் பற்றி, அவர் பேசியதை அப்படியே உல்டா பண்ணி சொல்றீங்க. இதை நான் நம்பணுமா?” என்று கேட்டுவிட்டு அவள் சிரிக்க, அவன் இமைக்காமல் அவளையே நோக்கினான்.

“அன்னைக்கு அவரிடம் பேசியது கூட நான்தான் தெரியுமா?” என்றாள் பெருமையாகவே.

அவன் இமைகள் மூடித் திறந்து, “நீதான் என்று எனக்கு நல்லாவே தெரியும்” என்றவன் ஆழ்ந்த குரலில் சொல்ல, சட்டென்று நிமிர்ந்து அவனது விழிகளை நோக்கினாள்.

அவன் கண்ணில் இருந்த காதலைக் கண்டு, “உதயா?!” என்றவள் திணறலோடு வார்த்தைகளை உச்சரிக்க, அவன் தலையசைத்து ஒப்புக் கொண்டான்.

தன்னவன் கொடுத்த அதிர்ச்சியில் அவள் மூச்சுவிட மறந்து சிலையாகிட, “உன்னை முதல் முறை பார்த்தபோதே, என்னை உன்னிடம் இழந்துவிட்டேன். அன்னைக்கு உன்னிடம் பேச வாய்ப்பே கிடைக்கல”  இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

விடுமுறையின் போது மாமாவின் வீட்டில் சென்று தங்கியது நினைவு வரவே, “மீண்டும் பாட்டியின் இழப்பிற்கு வந்தபோது, நீ அங்கிருந்து சென்றுவிட்ட தகவல்தான் கிடைத்தது” அவன் இதயத்தில் பொத்தி வைத்திருந்த காதலை கூற, அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

‘ஒரு வருடமாக என்னைக் காதலிக்கிறாரா?’ என்றவள் நம்ப முடியாத திகைப்பில் அமர்ந்திருக்க, அந்த நாளின் நினைவில் அவன் முகம் கனிந்தது.

“மறுபடியும் நண்பர்களோடு டூர் சென்றபோது, கோவைக் குற்றாலத்தில் மீண்டும் உன்னை சந்தித்தேன். அன்னைக்கு பஸ்ஸில் நீ அனைவரிடமும் பேசிட்டே வர, உனக்கு பின் சீட்டில் அமர்ந்து உன் ரசனையை ரசித்தபடி வந்தேன்” அவன் கண்ணில் தெரிந்த காதல் அவளை வாயடைக்க வைத்தது.

“அப்போதும் நீ என்னை கவனிக்கவே இல்ல” என்றவன் குரல் வருத்தத்துடன் ஒலிக்க, அதில் தன்னிலைக்கு மீண்டவள் பேச தொடங்கினாள்.

“நான் ரொம்ப ஒல்லியாக இருப்பேன், ஒரு காற்று அடித்தால் கீழே விழும் அளவுக்கு இருக்கும் உன்னை எல்லாம் யார் பார்ப்பாங்கன்னு எல்லோரும் கேலி செய்வாங்க. அந்த கேலி கிண்டல்கள் காலப்போக்கில், எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிடுச்சு” கலங்கிய விழிகளை மறைக்க நினைத்து அவள் தலைக்குனிய, சட்டென்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

பாலைவனத்தில் சுடுமணலில் நடந்து வந்தவளுக்கு இளைப்பாற  இடம் கிடைத்தது போல எண்ணம் தோன்றவே, “நான் பார்க்கும் எல்லா இடங்களிலும் பசங்களோட பார்வை மீடியம் சைஸ் உள்ள பெண்கள் பக்கம்தான் போகும். நீ எல்லாம் சைட் அடிக்க கூட ஆகாத பீஸ் என்று சொல்வாங்க.” என்று அவள் விசும்பலோடு கூற, அவளின் தலையை வருடிவிட்டு ஆறுதல் படுத்தினான்.

“நான் ரொம்ப ஒல்லியாக இருப்பதால், என்னை யாரும் காதலிக்க போவதில்லை என்ற எண்ணத்தால் இருந்துவிட்டேன்.” என்ற மனையாளின் நெற்றி வகிட்டில் முத்தமிட்டான்.

“நீங்க மட்டும் எப்படி என்னை இவ்வளவு தூரம் காதலிக்கிறீங்க என்று புரியல” புரியாமல் கேட்க, அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

“காதல் என்பது ஒரு அழகான உணர்வு. அது நெஞ்சில் இருந்து வரும். நீ நினைக்கிற மாதிரி கலர், ஹைட் அண்ட் சைஸ் பார்த்து வராது. சில பெண்கள் ஜீரோ சைஸ் ஆகமாட்டோமா என்று வருத்தத்தில் இருக்காங்க, இவ என்னன்னா ஒல்லியாக இருக்கேன்னு ஒப்பாரி வச்சிட்டு இருக்கிறா” கிண்டலடித்து, அவளின் நெற்றியில் செல்லமாக முட்டினான்.

அவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள், “என்னோட கவலை எனக்குதானே தெரியும். கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சு, பெண்ணை உடம்பை தேத்த சொல்லுங்க. நீ எல்லாம் சாப்பிடுவதே இல்லையான்னு என்னன்னா கேட்கிறாங்க தெரியுமா?” சிறுபிள்ளைபோல கோபத்துடன் புகார் பத்திரம் வாசித்தவளின் மீது காதல் பெருக்கெடுத்தது.

“அப்போ கலவை வாங்கி பூசிவிடலாமா?” என்றவன் குறும்புடன்  கேட்க,

“ஐயோ அப்படி பூசினால் வெள்ளையாக இருக்கும் நான் கருப்பாக மாறிவிட மாட்டேனா?” கணவன் முகத்தை கவலையுடன் முகம் பார்க்க, அவளின் உதடுகளில் முத்தமிட்டு நிமிர்ந்தான்.

“என் அறிவாளி பொண்டாட்டி, அதுக்கு பெயிண்ட் இருக்கு வாங்கி அடிக்கலாம்” என ஐடியா கொடுத்தவனின் நெஞ்சில் அடித்தவளின் கரங்களைத் தடுத்து, “இப்போ என் காதலைப் பற்றி சொல்லட்டுமா? இல்ல வேண்டாமா?” என்றான் சீரியசான குரலில்.

“ஆமா இல்ல அதை மறந்தே போயிட்டேன். அப்புறம் என்னை எங்கே பார்த்தீங்க” அவனிடமிருந்து விலக நினைத்தவளை இழுத்து தன்மீது போட்டு, அவளின் இடியுடன் கரம் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“அப்புறம் எங்கக்காவை கூப்பிட ஸ்கூலுக்குப் போனபோது, சின்ன வாண்டுகளோடு வம்பு வளர்த்தபடி நீ வருவதை பார்த்தேன். காட்டன் சேலையில் இருந்த உன்னை மெய் மறந்து பார்த்தேன். உன்னை செல்லில் போட்டோ எடுத்து வைத்துச்சுகிட்டேன் என்றவன் கூற, அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவன் மறுகன்னத்தைக் காட்ட, “நீங்க முழுசாக சொல்லுங்க” என்றாள் வெட்கத்துடன்.

அவளை மேலும் சிவக்க வைத்துவிட்டு, “எங்க அக்காவிடம் நூல்விட்டு பார்த்ததில்,  அங்கே நீ ட்ரைனிங் டீச்சராக வேலை செய்யும் விஷயம் தெரிந்தது. அப்புறம் என்ன அக்காவிடம் உன்னை பிடிச்சிருக்குன்னு கொடு போட்டு காட்டினேன், அவ ரோடு போட்டுட்டா” என்றான்.

“அன்னைக்கு எப். எம்.மில் பேசியது நான்தான் என்று உங்களுக்கு தெரியுமா?” என்றவுடன், “ஓ நல்லா தெரியும்” என்று கூறி அவளிடம் சில அடிகளை பரிசாக வாங்கினான்.

“அப்புறம் அந்த ஜவுளிக்கடையில்…” என்றவள் தொடங்க, “உன்னை உம்முன்னு பார்க்க பிடிக்கல. அதுதான் வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்தேன்” என்றான் சிரிப்புடன்.

“இப்போ சொல்வீயா ஐ லவ் யூ?” என்றவன் கேட்க, “எனக்கு தூக்கம் வருதுங்க. மத்த விஷயத்தை நாளை பேசலாம்” என்று நழுவ பார்த்தவளைக் கண்டு, நிஜமாகவே அவனுக்கு கோபம் வந்தது.

“இவ்வளவு நேரம் கதை கேட்டுட்டு இப்படி சொன்னால் என்ன அர்த்தம்?” என்றவன் கேட்க,

“நானா கதை சொல்ல சொன்னேன்” வேகமாக கணவனைவிட்டு விலகி தலையணையில் முகம் புதைத்தவளின் குறும்பை ரசித்தான்.

“குட் நைட்” என்றவள் விடிவிளக்கை போட்டுவிட்டு விழிமூட, அவளின் அருகே படுத்த யாதவ் அவளை இழுத்து அணைத்துக்கொண்டு உறங்க முற்பட்டான்.

“கொஞ்சம் கை எடுங்க யாது!” என்றவளை இன்னும் இறுக்கியணைத்து, “முடியாது” என்றான் அழுத்தமாக.

“எனக்கு இப்படி படுத்தால் தூக்கம் வராது” என்றவள் கூற,

“எனக்கு இருட்டைக் கண்டால் பயம். சோ உன்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டுதான் தூங்குவேன்” அவளிடம் வேண்டுமென்றே பிடிவாதம் பிடித்தான்.

“இத்தனை நாளாக யாரை கட்டிப்பிடித்து தூங்கினீங்க?” அவள் கேட்க, “ம்ம் தலையணையில் தான்” என்றவன் சிலநொடிகளில் உறங்கிவிட, அவனது சீரான சுவாசம் கண்டு அவளுக்கு தூக்கம் தொலைந்தது.

யாதவ் மாதிரி ஆண்களைப் பார்ப்பது அபூர்வம் என்றே நினைக்க தோன்றியது. இந்த காலத்தில் நேரில் சந்தித்து பத்துநாள் பலகிவிட்டால், காதல் என்று சொல்வார்கள்.  

எந்தநேரமும் அந்த பெண்ணின் நிலையை உணராமல், தனக்கு பிடித்ததை அவள் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களின் நடுவே அவன் மட்டும் தனித்து தெரிந்தான்.

அவன் நினைத்தால் இந்த நிமிடமே அவளுடன் ஈருடல் ஒருயிராய் கலந்துவிட முடியும். அதற்கான உரிமை இருந்தபோதும், தன்னவளின்  விருப்பம் வேண்டும் என்று நினைக்கும் கணவனின் காதலை புரிந்து கொண்டால்..

அத்துமீறாத கண்ணியத்தில் கவரபட்ட மைவிழிக்கு, கணவன் மீது காதல் வந்தது. அவன் கையணைப்பு தந்த பாதுகாப்பில் இமைமூடி உறங்க தொடங்கினாள்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் அழகாக நகர்ந்தது. அன்று மாலை யாதவ் சோர்வுடன் வீடு திரும்பிட, அவளின் குரல் சமையலறையில் இருந்து ஒலித்தது.

ஹும்ம் ஆஆ எழில் முக ராதா இமைகளின் ஓரம்…

குழல் ஊதும் கண்ணனை வரவேற்கிறாள்…

கர மலர் எந்த கார்மேக வண்ணன் கரையில்லா

கடல்போல அலைபாய்கிறான்..

ராதையின் தேடல் என்ன கண்ணன் மறந்ததில்லை..

தேவகி பாலனின்றி ராதை கண்ணில் தூக்கமில்லை..

ராதை கண்ணில் தூக்கமில்லை” அவள் ரசனையுடன் பாட, மெல்ல அவளின் பின்னோடு சென்று இடையோடு கரம் கொடுத்து அணைத்துக் கொண்டான்.

“இந்த யாதவ் கிருஷ்ணனை இவ்வளவு பிடிக்குமா? உன் குரலில் இருக்கும் ஏக்கத்தை தீர்க்கத்தான் காத்துட்டு இருக்கேன் மையூ.” அவளின் தோளில் இதழ்பதிக்க, மெல்லிய தேகம் சிலிர்த்தது.

“நான் பாட்டுதான் பாடினேன்” என்றவளை தன்பக்கம் திருப்பி, ஒரு விரல் கொண்டு அவளின் முகத்தை நிமிர்த்தி, விழிகளில் தன் பார்வை கலக்கவிட்டான்.

அவனது விழி வீச்சினை தாங்க முடியாமல், “ஐ லவ் யூ யாதவ். மனைவி என்றபோதும் எல்லை மீறாமல், என் மனம் புரிந்து நடந்து கொள்ளும் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” பரந்த மார்பினில் முகம் புதைக்க, அவளை இறுக்கியணைத்து கொண்டான்.

ஏனோ மனையாளின் மனதை வென்ற யாதவ் மனதில் காதல் பொங்கிப் பெருகியது. அவளின் குறையை நிறையாக பார்க்கும்போது அங்கே ஆணின் காதல் வெற்றியடைகிறது என்று உணர்ந்தான்.

சிலநொடிகளுக்கு பிறகு அங்கே வளையோசை இன்னிசை கீதம் சொல்ல, கண்ணன் தன் காதலை செயலில் காட்ட, அவளின் செல்ல சிணுங்கள் வீடெங்கும் எதிரொலித்தது.