roja04

roja cp-0b0fa835

roja04

  • Azhagi
  • August 15, 2022
  • 0 comments

ரோஜா 4

திருவிழா ஆகிறேன் இப்பொழுதுநீ

எனக்குள் தொலைவது எப்பொழுது

பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அந்த ப்ளாக் ஆடியை வளைத்துத் திருப்பினான் சத்யன். மனம் முழுவதும் ஏதோ ஒரு சொல்லத் தெரியாத குழப்பம் சூழ்ந்திருந்தது. குடும்பத்தில் இருந்த அத்தனைப் பேரும் அவனுக்கு இப்போது விசித்திரமாகத் தெரிந்தார்கள். பெரியம்மாவின் கண்களில் எப்போதும் இப்பொழுதெல்லாம் கண்ணீர் தான். கேட்டால் பெண்ணைப் பெற்றவள் இல்லையா? கல்யாணம் நடக்கப் போகிறது. அந்த வேதனை என்ற பதில் கிடைத்தது. ஆனால் அது சப்பைக்கட்டு என்று சத்யனுக்குத் தெரியும்.

சின்ன மாமாவும் அம்மாவும் ஓயாது ரகசியம் பேச ஆரம்பித்திருந்தார்கள். அதில் அவ்வப்போது அப்பாவும் இணைந்து கொள்கிறார். எதுவோ சரியில்லை என்று புரிந்தது. ஆனால் அந்த ‘எது’ எதுவென்றுதான் புரியவில்லை. ஆனால் நடப்பது எல்லாவற்றிற்கும் மலர்விழிக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சத்யனின் ஆழ்மனது அடித்துச் சொன்னது. காரைக் கடைக்கு முன்னால் நிறுத்தியவன் நிதானமாக இறங்கினான். இவன் வரும் பொழுதுகளிலெல்லாம் பக்கத்துக் கடைக்காரன் எதற்கு இப்படி வெறித்து வெறித்துப் பார்க்கிறான் என்று சத்தியமாக சத்யாவிற்குப் புரியவில்லை. இதையெல்லாம் கவனிக்கும் மனநிலையிலும் இப்போது அவன் இல்லை.

மலர்விழி ஏதோ ஒரு பூங்கொத்தோடு அப்போது ஐக்கியமாகி இருந்தாள். கடையில் வேறு யாரும் இருப்பது போலவும் சத்யனுக்குத் தோன்றவில்லை. இவன் உள்ளே நுழையும் போது இன்னிசையாக ஒலித்த அந்த மணிகளின் வரவேற்பு நாதம் மலரை அண்ணார்ந்து பார்க்கச் செய்தது. அந்தப் பார்வை சத்யனை ஒரு நொடி… ஒரேயொரு நொடி சலனப்படுத்தியது. ஆனாலும் சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டான்.

“ஹலோ சார். வாங்க வாங்க.” மலர்ந்த புன்னகையோடு மலரோடு மலராக வரவேற்றது மலர்.

“ம்…” ஒரு தலையசைப்போடு உள்ளே நுழைந்தான் சத்யா.

“சொல்லுங்க சார்.” இப்போது சத்யனை இலகுவாக நேர்கொண்டு பார்த்துப் பேச மலரால் முடிந்தது. அன்றைக்கு அவர்கள் குடும்பத்தை மண்டபத்தில் வைத்துப் பார்த்ததில் இருந்து மலரின் மனம் லேசாக சமன்பட்டிருந்தது. பெரிய இடம். பார்த்தாலே புரிந்தது. நல்ல பாரம்பரியமான குடும்பமாக நிச்சயம் இருப்பார்கள். இதில் தான் எங்கே? வாழ்க்கை இதுவரை நிறைய யதார்த்தங்களை அவளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதையும் தாண்டி எப்படி அவளால் தனக்கென்று சுயநலமாக ஒரு முடிவெடுக்க முடிந்தது! அவளை மட்டுமே உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவை எப்படி அவள் மறந்து போகலாம்? தனக்கென்று ஒரு வாழ்க்கையை மலர் அமைத்துக் கொண்டால் அம்மாவின் நிலைமை என்ன? இதெல்லாம் எப்படி அவளுக்கு மறந்து போனது? இதுவரை அவள் எதையும் மறந்தவள் இல்லைதான். எதிரில் நிற்பவன் தான் தற்காலிகமாக எல்லாவற்றையும் மறக்க வைத்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டாள்.

“மலர்… வெட்டிங் க்கு எத்தனை டேபிள் புக் பண்ணணும்னு… சொல்லணும். டேபிள் டெக்கரேஷன்…”

“சொல்லுங்க சார்… பண்ணிடலாம்.”

“இல்லைம்மா… இப்போ ஒவ்வொரு வீட்டுல இருந்தும் எத்தனைப் பேரு வர்றாங்கன்னு தெரிஞ்சா ஈஸியா இருக்குமில்லை?”

“ஆமா சார்.” மலருக்கு சத்யனின் பேச்சும் நடவடிக்கைகளும் புதிதாக இருந்தது. அவன் கொஞ்சம் தடுமாறினாற் போலத் தோன்றியது.

“அம்மா உங்க வீட்டுக்கு வந்து இன்வைட் பண்ணுவாங்க. நீங்க எத்தனை பேர் வருவீங்க மலர்?”

“ஓ…‌ சார், நான் பொதுவா இதுமாதிரி ஃபங்ஷனுக்கெல்லாம் போக மாட்டேன் சார். அதுலயும் அம்மா…”

“நோ நோ… அம்மா அன்னைக்கே சொன்னாங்கல்ல. கண்டிப்பா நீங்க வரணும். வீட்டுல வேற யாரெல்லாம் இருக்காங்க?” சத்யனுக்கு ஏனோ மலரைக் குடைந்தால் தன் வீட்டு ரகசியம் வெளியே வரும் என்று எதுவோ ஒரு பட்சி சொன்னது.

“அம்மா இது மாதிரி இடத்துக்கெல்லாம் போக மாட்டாங்க சார்.”

“ஏன்? அப்பா விருப்பப்பட மாட்டாங்களா?” அந்தக் கேள்வியில் மலர் சிரித்தாள்.

“ஏன் மலர்?‌ என்னாச்சு? நான் எதுவும் தப்பாக் கேட்டுட்டேனா?”

“இல்லை சார். நான் சின்னப் பொண்ணா இருக்கும் போதே என்னோட அப்பா இறந்துட்டாங்களாம்.”

“ஓ… ஐம் சாரி. அப்போ… வீட்டுல?” சத்யனின் நெற்றியில் மட்டுமல்ல உள்ளத்திலும் சில சுருக்கங்கள்.

“நானும் அம்மாவும்தான்.”

“ஓ…” அவன் சுருங்கிய முகம் ஏனோ மலருக்கு ஆறுதலாக இருந்தது. இன்று வரை நிறையப் பேர் கேட்ட விஷயம் தான். இருந்தாலும் இன்று கேட்ட ஆளும் கிடைத்த அனுதாபமும் அவளுக்குப் பிடித்திருந்தது.

“அப்போ… எப்படி மலர்?” கேட்ட பிறகுதான் நாம் கோடு தாண்டுகிறோம் என்று புரிந்தது சத்யனுக்கு.

“தப்பா எடுத்துக்காதீங்க மலர். ஏதோ ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன்.”

“ஐயோ… இதுல என்ன சார் இருக்கு? அக்கறையிலதானே கேக்குறீங்க.”

“அம்மா வேலைப் பார்த்தாங்களா என்ன?” அவனுக்கு மலரையும் தாண்டி அவள் வீட்டு விபரங்கள் தேவைப்பட்டன.

“ஆமா சார். அம்மா ஒரு பிரைவேட் கம்பெனியில வேலைப் பார்த்தாங்க. கொஞ்ச நாள் முன்னாடி தான் வேலையை விட்டாங்க. அதுவும் என்னோட வற்புறுத்தல்ல தான்.”

“ஓ… எந்தக் கம்பெனி அது?” இயல்பாகப் பேச்சுக் கொடுத்த படியே தனக்குத் தேவையான விஷயங்களை மலரிடமிருந்து வாங்கிக் கொண்டான் சத்யா. மலருக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. கேட்பது அவனல்லவா? அனைத்தையும் சொல்லி இருந்தாள்.

“ஓகே மலர், பொக்கே டிஸைன்ஸ் எப்பக் கொண்டு வருவீங்கன்னு கீர்த்தனா கேட்டா. முடிஞ்சா அவளுக்கு ஒருதரம் ஃபோன் பண்ணிப் பேசிடுங்க.”

“சரி சார்.”

“அப்போ நான் கிளம்புறேன்.”

“ஓகே சார். பை.” இலகு போலச் சொல்லி வழியனுப்பி வைத்தாலும் அதன்பிறகு அலைபாய்ந்த மனதைக் கட்டுப்படுத்த மலர் வெகுவாகத் திணறிப் போனாள். இதுவரைக் கல்யாணக் கனவுகள் அவளுக்கு வந்ததில்லை. வரவும் அவள் அனுமதித்ததில்லை. அவள் அழகின் பிரதிபலிப்பாக எத்தனையோ விண்ணப்பங்கள் அவளுக்கு வந்ததுண்டு. ஆனால் அது எதையும் மலர் கண்டு கொண்டதில்லை. அவள் உலகம் முழுவதும் வியாபித்து நின்றது அம்மா சித்ரலேகாதான்.

அப்பா அம்மா வாழ்ந்த வாழ்க்கை எப்படியென்று மலருக்குத் தெரியாது. அதுவும் அப்பாவின் முகம் கூட மலருக்குச் சரியாக ஞாபகம் இல்லை. அவர் சம்பந்தப்பட்ட எதுவுமே அவள் ஞாபக அடுக்குகளில் ஒட்டியிருக்கவில்லை. குமுதா அத்தையிடம் கூட பலமுறை கேட்டிருக்கிறாள். அவர்கள் காலனியில் வசிக்கும் அம்மாவின் நெருங்கிய தோழி குமுதா.

“மலர்க்குட்டிக்கு எதுக்கு இப்போ அதெல்லாம்.” இப்படியேதான் இருக்கும் குமுதாவின் பதில். அம்மா, அப்பாவைப் பத்தி அவர் கூட வாயைத் திறக்க மாட்டார். ஆனால் மலருக்கு வெகுவாகப் புரிந்தது. அம்மா, அப்பாவுடனான வாழ்க்கையில் அத்தனை சுகப்படவில்லை என்று. அதனாலேயே அவள் உலகம் அம்மாவாகிப் போனது. இத்தனை அழகோடு இளமையில் துணையையும் இழந்து விட்டுத் தனக்காகவே வாழ்ந்த அம்மாவைத் தங்கத் தட்டில் வைத்துத் தாங்க வேண்டும். அது மட்டும்தான் அவளது நோக்கம்.

அன்றுவரை இருந்த அவளது மன சங்கல்பத்தை முதன் முறையாக உடைத்தது அன்று தான் பார்த்த அந்த நான்கு சட்டங்களுக்குள் இருந்த முகம்தான். அந்த முகம்தான் அவளை அடியோடு நிலைகுலைய வைத்தது. ஆனால்… அதே முகமே மீண்டும் அவளை வழமைக்கும் திருப்பி இருந்தது. குடும்பம் என்ற ஒற்றைச் சொல்லில் மலரின் மயக்கத்தைத் தீர்த்து வைத்திருந்தது அந்த முகம். பாரம்பரியத்தோடு தலைநிமிர்ந்து நிற்கும் அவர்கள் எங்கே? அம்மாவும் மகளுமாய் தனித்து நிற்கும் இவர்கள் எங்கே?! மலர் பெருமூச்சொன்று விட்டாள்.

விலகி விலகிப் போனாலும் அவளைத் தேடி வந்து இம்சிக்கும் அந்தக் கம்பீரத்தை அவள் கண்கள் அள்ளிக் கொண்டன. காலம் அவளுக்கு வரையறை விதித்திருக்கிறது. நடக்க இருக்கும் இந்தத் திருமணம்தான் அவளுக்கான காலம். அதற்குள்ளாகத் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் அற்புதமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டாள் பெண். சொந்தமாக இல்லாவிட்டாலும் சொர்க்கமாக இருப்பவனை நினைப்பதற்கும் ரசிப்பதற்குமா தடை? மலர் இனிவரும் நாட்களைச் சந்திக்க முழுதாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள். காலம் விரிந்து கிடக்கிறது. முடிந்தவரை நினைவுகளையும், நிழலுருவையும் சேகரித்துவிட்டு பிற்பாடு அனைத்தையும் கடைபரத்தி ரசிக்கலாம். மீண்டும் பூக்களோடு ஐக்கியமாகிப் போனாள் மலர்.

***

சத்யன் அந்த ப்ளாக் ஆடியை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு ஃபோனை எடுத்தான். அவன் அழைக்கும் முன்னமே அவனை அழைத்துக் கொண்டிருந்தான் நண்பன்.

“அகில், சொல்லுடா மச்சான்.”

“சத்யா… என்னடா நடக்குது?”

“என்னடா? மாமாவை ஃபாலோ பண்ணினியா?”

“ஆமாண்டா… ஆனா…” நண்பன் சொல்லத் தயங்கவும் சத்யாவின் இதழ்களில் ஒரு விசித்திரமான புன்னகை அரும்பியது.

“யாராவது லேடியா?”

“மச்சான்!”

“அகில்… நான் இப்போ ஒரு லேடியோட டீடெயில்ஸ் உனக்கு அனுப்புறேன். அனேகமா நீ சொல்ற லேடி இவங்களாத்தான் இருக்கும். எனக்கு அவங்களைப் பத்தி ஃபுல் டீடெயில்ஸ் வேணும்டா.”

“சரிடா மச்சான்.”

“பேசிக்கிட்டாங்களா?”

“இல்லைடா சத்யா. மாமாக்கு அந்த ஐடியா இருக்கிற மாதிரித் தெரியலை. கொஞ்சம் மறைஞ்சு நின்னுதான் பார்த்தாங்க. ஆனா அப்போ நீ அவங்க முகத்தைப் பார்க்கணுமே.”

“ம்… மேல சொல்லு.”

“அவ்வளவு சந்தோஷப் பட்டாங்கடா. கண்ணெல்லாம் கலங்கிப் போச்சு.”

“ஓ…”

“மச்சான்… ஏதாவது ப்ராப்ளமாடா?”

“எனக்கே ஒன்னும் புரியலைடா. ஆனா சீக்கிரமாக் கண்டு பிடிச்சிடலாம். நான் சொன்ன டீடெயில்ஸ்ஸை நீ கொஞ்சம் சீக்கிரமாக் குடுத்தா எல்லாம் தெளிவாகிடும்.”

“ஓகே டா. இன்னைக்கே முடியுமான்னு பார்க்கிறேன்.”

“தான்க் யூ டா மச்சான். பை.” ஃபோனை வைத்த சத்யாவின் முகத்தில் கலவையான உணர்வுகள் தோன்றி மறைந்தன.

***

திருமணம் இனிதாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒட்டுமொத்தக் குடும்பமுமே ஒன்றாக நின்று தங்கள் பெண்ணின் கல்யாணத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் பெரிய இடம் என்பதால் ஜனக்கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. இந்த ஒரு மாத காலத்தில் மலருக்கு அந்தக் குடும்பத்து அங்கத்தினர்கள் எல்லோரும் நன்றாகவே பரிட்சயம் ஆகிப் போனார்கள். அதற்குக் காரணம் வத்சலா. 

மலர் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகள் நடக்கும் போதும் எப்படியாவது குடும்பத்தைப் பெருமட்டிற்குக் கூட்டிவிடுவார். அத்தனைப் பேரும் இருப்பது போலப் பார்த்துக் கொள்வார். இதை மலர் உணராவிட்டாலும் சத்யன் புரிந்து கொண்டான். வத்சலா தெளிவாகக் காய் நகர்த்துவது அவனுக்குப் புரிந்தது. அன்று அவன் நண்பன் அகிலிடம் பேசிய அடுத்த நாளே சித்ரலேகாவின் ஜாதகம் அவன் கைகளுக்கு வந்திருந்தது. குறிப்பிடும் படியாக எதுவுமே அதில் இருக்கவில்லை.

ஐந்து வயதுப் பெண் குழந்தையோடு அன்றிலிருந்து சிங்கிள் மதராக வேலை செய்யும் ஒரு பெண் அந்த சித்ரலேகா. கணவர் இறந்து போயிருந்தார். சத்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை. இதில் மாமா எங்கே வந்தார்?! இருந்தாலும் அவனுக்கு எல்லாம் தெளிவுறத் தெரிய வேண்டியிருந்தது.‌ ஏனென்றால் இதில் சம்பந்தப்பட்டிருப்பது அவர்கள் எல்லோருக்கும் பிரியமான ஞானபிரகாஷ் மாமா. அந்த சித்ரலேகாவின் வாழ்க்கைப் பக்கங்களை இன்னும் கொஞ்சம் முன்னோக்கிப் புரட்டச் சொல்லி நண்பனுக்குக் கட்டளைப் போட்டான் சத்யன்.

அப்போது ஞானபிரகாஷின் பெயர் லேசாக அடிபட்டது. சத்யன் உஷாரானான். குடும்பத்தில் யாரும் இதைப்பற்றி எதுவும் வாயைத் திறக்கவில்லை. மாமா கூட அமைதியாகத்தான் நடமாடிக் கொண்டிருந்தார். ஆனால் அவனுக்குத் தகவல் தேவைப்பட்டது. ஒரு நாள் பெரிய மாமா வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து அவர்கள் வீட்டுக்குப் போய் அத்தையின் வாயைப் பிடுங்கினான் சத்யன். லட்டுப் போல அத்தனைத் தகவல்களும் கிடைத்தன. உள்வாங்கிக் கொண்டான். மறந்தும் யாரிடமும் எதுவும் பேசவில்லை.

பெரிய மாமாவின் மனைவி வனஜாவிற்கு தன் மைத்துனர் சாதாரண குடும்பத்தில் காதல் கொண்டது அப்போது கோபமாக இருந்தாலும் இன்று வரைத் தன்னந்தனியாக அவர் நின்றுபோனது வருத்தமாக இருந்திருக்கும் போலும். கொட்டித் தீர்த்து விட்டார்.

“என்னாச்சு அத்தை?”

“நீயே சொல்லு சத்யா. ரொம்பச் சாதாரணக் குடும்பம். பொண்ணு நல்ல லட்சணமாத்தான் இருந்தா.”

“நீங்க பார்த்தீங்களா அத்தை?”

“ம்… ஒரு ஃபோட்டோ பார்த்தேன். உங்க சின்ன மாமாவும் அந்தப் பொண்ணும் நிக்குற மாதிரி.”

“ஓ…”

“உங்கத் தாத்தா ஆடித் தீர்த்துட்டாரு. அப்போதான் வத்சலாக்கு உங்கப்பாவோட ஜாதகம் வந்திருக்கு. நல்லப் பொருத்தம் வேற. அதைப் பண்ணிடலாம்னு பேச்சு வந்தப்போ இந்தப் பிரச்சனை.”

“மாமா எதுவும் சொல்லலையா?”

“என்ன சொல்ல முடியும்? உங்கத் தாத்தாவைப் பத்தி உனக்குச் சரியாத் தெரியாது சத்யா. சொன்னா சொன்னதுதான்.” சத்யனுக்கு அவ்வளவும் போதுமானதாக இருந்தது. பலத்த யோசனையோடு வீடுவந்து விட்டான். சின்ன மாமா இத்தனை ஆழமான மனிதரா?‌ காதலித்த பெண்ணை நினைத்துக் கொண்டு இன்றுவரை தனக்கென ஒரு துணையைத் தேடாமல் வாழ்கிறார் என்றால், அது எத்தனை ஆழமான காதலாக இருந்திருக்க வேண்டும்!

ஞானபிரகாஷைப் பற்றி சத்யனுக்கு மிக நன்றாகத் தெரியும். மிகவும் கலகலப்பான மனிதர். வீட்டிலும் சரி ஆஃபீஸிலும் சரி… அவரை எல்லோருக்கும் பிடிக்கும். பழக இனிமையான மனிதர். தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது எப்படி என்று அவரிடம் கற்க வேண்டும். விரும்பிய படிப்பைக் கற்க வீட்டில் வசதி இருந்த போதும் சத்யன் குடும்பத் தொழிலை நாடக் காரணமே சின்ன மாமாதான். அதில் லோகேந்திரனுக்கு வருத்தம் உண்டு. தன்னைப் போல தன் பையனும் என்ஜினியர் ஆகவேண்டும் என்பது அவர் ஆசை. ஆனால் சத்யன் மாமனைப் போல வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்கு ஏற்றாற் போல தனது தகுதிகளை வளர்த்துக் கொண்டு ஹோட்டல் தொழிலில் இறங்கி விட்டான். இளையவர்கள் தொழிலில் இறங்கிய பிறகு அவர்கள் குடும்பத் தொழில் அடுத்த கட்டத்திற்குப் போனது என்று தான் சொல்ல வேண்டும். இப்போது மலேஷியாவில் ஒரு கிளை திறக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

“கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” அந்தச் சத்தத்தைத் தொர்ந்து மண்டபம் கொஞ்ச நேரம் திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது. ஆரவாரம் கொஞ்சம் ஓய்ந்த பிற்பாடு மண்டபத்திற்குள் நுழைந்தார்கள் அம்மாவும் மகளும். சித்ரலேகா இப்படியான ஃபங்ஷனுக்கெல்லாம் போவதே இல்லை. சுற்றிவர இருப்பவர்களின் சுடுசொற்கள் அவரைச் சுருங்கச் செய்திருந்தது.

அப்போதெல்லாம் மலர்விழி சின்னக் குழந்தை. அவளுக்கு இதுவெல்லாம் புரிவதில்லை. ஏதாவது ஒரு நல்ல நிகழ்விற்குச் சந்தோஷமாகக் கிளம்புவதும் பிற்பாடு அம்மா தனிமையில் கண்ணீர் வடிப்பதும் அந்தச் சின்ன மனதிற்கு அப்போது புரியவில்லை. ஆனால் காலப்போக்கில் அம்மா இந்த மாதிரி இடங்களுக்குப் போனால் அழுவார் என்பது மட்டும் தெரிந்து போனது. அதுவே அப்படியான இடங்களைத் தவிர்ப்பதற்கும் போதுமானதாக இருந்தது. ஆனால் அன்று வத்சலா வீடு தேடிவந்து பத்திரிகை வைத்த போது மறுக்க முடியவில்லை.

“நான் இந்த மாதிரி ஃபங்ஷனுக்கெல்லாம் போறதில்லைங்க. ஆனா மலர் கண்டிப்பா வருவா.” நயமாக மறுத்தார் சித்ரலேகா.

“மலர் மட்டும் வர்றதா இருந்தா நான் கடைக்குப் போயே பத்திரிகை வெச்சிருப்பேனே?‌ நீங்களும் கண்டிப்பா வரணும். அதுக்காகத்தான் வீடு தேடி வந்திருக்கேன். எந்தக் காரணமும் சொல்லக் கூடாது. நீங்க கண்டிப்பா வந்து எங்கப் பொண்ணை ஆசிர்வாதம் பண்ணணும்.”

“அது வந்து…”

“ம்ஹூம்… இந்த இழுக்கிற வேலையெல்லாம் வெச்சுக்கக் கூடாது. நீங்க கண்டிப்பா வர்றீங்க.” எழுந்து வந்து சித்ரலேகாவின் கையைப் பிடித்துக் கொண்ட வத்சலா அழுத்தமாகச் சொன்னார். அதற்கு மேல் சித்ரலேகாவும் மறுக்கவில்லை. மலருக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அம்மாவோடு இப்படியெல்லாம் ஊர் சுற்றி எத்தனை நாட்கள் ஆகின்றன!

“வத்சலா… உங்க முகம் எனக்கு ரொம்பப் பரிட்சயமானதா இருக்கு. நீங்க எந்தக் காலேஜ்?” சித்ரலேகா கேட்டபோது வத்சலாவின் கண்கள் பளிச்சிட்டன. அவர் நிச்சயமாக சின்னண்ணா ஞானபிரகாஷின் காலேஜ் இல்லை.‌ அதனால் தைரியமாகக் காலேஜ் பெயரைச் சொன்னார்.

“ஓ… அப்போ நீங்க நான் படிச்ச காலேஜ் இல்லை…” சித்ரலேகா சிந்தனையில் ஆழவும் வத்சலாவிற்கு சிரிப்பு வந்தது. இன்னும் தன் எதிரில் நிற்கும் பெண் தன் அண்ணாவை மறக்கவில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? என் முகத்தில் அவர் பார்ப்பது என் சின்ன அண்ணனையா?!

அன்று காலையில் குளித்து முடித்து விட்டு ஈரத்தலையோடு பாத்ரூமை விட்டு வெளியே வந்த அம்மாவை மலரின் கண்கள் ஆழ்ந்து கவனித்தது. வெறுமையாக இருந்த அந்த நெற்றியில் அவள் மனக்கண் அவசரமாக ஒரு ஒற்றைச் சிவப்புப் பொட்டை வைத்துப் பார்த்தது. அம்மா அழகியென்று மலருக்குத் தெரியும். ஆனால் இத்தனை அழகா! இப்போதே இப்படியென்றால் கல்லூரிக் காலத்தில் அம்மா எப்படி இருந்திருப்பார்?!

“அம்மா!”

“என்ன மலர்?”

“இன்னைக்கு ஃபங்ஷனுக்கு நான் சொல்ற மாதிரித்தான் நீங்க ட்ரெஸ் பண்ணிக்கணும்.”

“அம்மா ஃபங்ஷனுக்கு வர்றதே பெரிய விஷயம். இதுல நீ ரூல்ஸ் எல்லாம் போட்டா நான் வரவே மாட்டேன்.” கறாராக சித்ரலேகா சொல்ல மலரின் முகம் வாடிப் போனது. ஆனால் அம்மா அதைக் கண்டுகொள்ளவில்லை. ஊர் வாயைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். சாதாரண ஒரு புடவையில் பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் எளிமையாகத் தயாராகி வந்து நின்ற அம்மாவைப் பார்த்தபோது மலருக்கு நெஞ்செல்லாம் வலித்தது.

என்ன மாதிரியான கோலம் இது? ஊமையாய் அழுத படிதான் மலர் அம்மாவை அழைத்துக்கொண்டு மண்டபத்திற்கு வந்திருந்தாள். அன்று காலை ஆறு மணிக்கெல்லாம் ஒரு முறை மண்டபத்திற்கு வந்து எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் போயிருந்தாள் பெண். பதினொரு மணிக்கு மேல் முகூர்த்தம். அம்மாவும் பெண்ணும் நிதானமாகவே வந்திருந்தார்கள். 

“மலர்!” அழைத்தபடி வத்சலா இவர்களை நோக்கி வாயெல்லாம் பல்லாக வந்து கொண்டிருந்தார்.

“ஆன்ட்டி.”

“என்ன மலர்? இவ்வளவு நிதானமா தாலி கட்டி முடிஞ்சதுக்கு அப்புறமா அம்மாவும் பொண்ணும் கிளம்பி வர்றீங்க? நான் எவ்வளவு நேரமா உங்களை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன் தெரியுமா? என்னங்க இது?” சித்ரலேகாவைப் பார்த்து வத்சலா குறைப்படவும் அவர் சிரித்தார்.

“நான் இந்த மாதிரி ஃபங்ஷனுக்கெல்லாம் போறதே இல்லை வத்சலா. நீங்க அவ்வளவு வற்புறுத்திக் கூப்பிட்டதாலதான் வந்தேன்.”

“எந்தக் காலத்துல இருக்கீங்க நீங்க?”

“எந்தக் காலத்துல இருந்தாலும் நம்ம மக்கள் எப்பவும் ஒரே மனநிலையிலதானே இருக்காங்க?” இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே யாரோ வத்சலாவை அழைக்கவும்,

“வாங்க… பொண்ணையும் மாப்பிள்ளையையும் பார்க்கலாம்.” என்றார்.

“இல்லை வத்சலா, நீங்க போங்க. நாங்க கொஞ்ச நேரம் இருந்துட்டுக் கிளம்புறோம்.”

“என்னங்க நீங்க? எதுக்கு இப்படித் தயங்குறீங்க?”

“இல்லை வத்சலா. ப்ளீஸ்…” சித்ரலேகா மறுக்கவும் மலரின் முகத்தைப் பார்த்தார் வத்சலா. அந்த முகத்தில் அத்தனை சோகம், வருத்தம். வத்சலாவிற்கும் வலித்தது. 

“சரி மலர்… அம்மா கொஞ்சம் லேட்டா மாப்பிள்ளை பொண்ணைப் பார்க்கட்டும். நீ வா எங்கூட.” மலரின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போய்விட்டார் வத்சலா. சித்ரலேகா அமைதியாகத் தன்னைச் சுற்றி இருந்த அலங்காரங்களை நோட்டம் விட்டார். அத்தனையும் அவர் மகளின் கைவண்ணம். பார்க்க அந்த இடம் ஏதோ பூ உலகம் போல காட்சியளித்தது. அத்தனை நேர்த்தி, அழகு. கூடிய சீக்கிரத்தில் இது போலவொரு மண்டபத்தில் மலருக்கும் கல்யாணம் பண்ணிப் பார்க்க வேண்டும்.

“லேகா…” அந்தக் குரலில் விலுக்கென்று திரும்பினார் சித்ரலேகா. அவருக்குப் பின்னால் அவரையே பார்த்தபடி நின்றிருந்தார் ஞானபிரகாஷ். அந்தக் கண்களில் அத்தனை வலி தெரிந்தது. சிலையென நின்றிருந்தார் சித்ரலேகா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!