Rose – 1

Rose – 1
அத்தியாயம் – 1
நீலநிற வானில் வெள்ளையாடை அணிந்த முகிலினங்கள் எங்கோ தவழ்ந்து செல்றது. வளரும் மதியின் அழகைக் கண்ட விண்மீன்கள் ஆங்காங்கே நின்று கண்சிமிட்டியது. அந்த ரம்மியமான இரவு பொழுதில் சாலைகளுக்கு ஒளியூட்ட, இரு புறமும் இருந்த மின்விளக்குகள் பளிச்சென்று ஒளிவீசியது.
சில்லென்ற காற்று வந்து முகத்தில் மோத , “உங்க வீட்டில் எல்லோரும் அசதியில் தூயிருப்பாங்க ராம். அவங்களை இந்த நேரத்தில் போய் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்ற யாதவின் கார், கோகுலம் எஸ்டேட் பெயர்பலகையைத் தாங்கி நின்ற சாலையில் சீரான வேகத்தில் பயணித்தது.
“கீர்த்தியின் திருமணப்பேச்சை எடுத்ததிலிருந்தே, வீட்டில் எல்லோரும் ஏதோவொரு வேலையாக பிஸியாகத்தான் இருக்காங்கடா” ராம்குமாரின் பார்வை சின்னஞ்சிறு லைட்ஸ் மூலமாக பிரகாசமான ஒளிவீசிய வீட்டின் மீது படிந்து மீண்டது.
தன் வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு இறங்கிய யாதவ், “உன்னைப் பார்க்கவே ரொம்ப சோர்வாக இருக்கிறன்னு நல்லாவே தெரியுது. இன்னைக்கு நைட் எங்க வீட்டில் தங்கிக்கோ” என்றவனை மறுத்துப் பேச மனம் வரவில்லை ராமிற்கு.
முன்னே சென்ற யாதவ் தன் வசமிருக்கும் சாவியைக் கொண்டு கதவைத் திறந்து, லைட் சுவிச்சைப் போட, அதுவரை இருண்டிருந்த வீட்டில் வெளிச்சம் பரவியது.
அவனுக்காக காத்திருந்த மீனலோட்சனி அமர்ந்த நிலையிலேயே உறங்கிப் போயிருந்தார். திடீரென்று வெளிச்சம் முகத்தில்பட, அவரின் உறக்கம் கலைந்தது.
யாதவ் கிருஷ்ணா – ராம்குமார் இருவரையும் கண்டவுடன், “மருத்துமனையில் வேலை அதிகமா? உனக்காகத்தான் சாப்பிடாமல் காத்திட்டு இருந்தேன்” சாப்பாடு எடுத்து வைக்க, டைனிங் டேபிள் நோக்கி நகர்ந்தார்.
அவரது செயலைக் கண்டு யாதவிற்கு கோபம் தலைக்கேற, “சும்மா அக்கறை இருக்கிற மாதிரி நடிக்க வேண்டாம்னு சொல்லுடா. நான் தேடியபோது அரவணைக்க ஆளில்லையாம். அன்னைக்கு பிஸ்னஸ் முக்கியம்னு போக தெரிந்ததுல்ல, இப்போ நீங்க காட்டும் பாசம் எனக்கு தேவையில்ல” வீடே அதிரும்படி கத்திய யாதவ், இரண்டிரண்டு படிகளாகத் தாவி மாடிக்குச் சென்றான்.
“அவன் கோபம் தெரிஞ்ச விஷயம்தானே ஆன்ட்டி. எல்லாமே சீக்கிரம் சரியாகிடும்”திகைத்து நின்ற மீனலோட்சனிக்கு ஆறுதல் சொன்னான் ராம்குமார்.
அந்த வருத்தத்தை மனதோடு மறைத்த மீனாலோட்சனி, “நீங்க இருவரும் சாப்பிட்டீங்களா?” என்று கேட்க, அவனும் தலையாட்டிவிட்டு நண்பனைப் பின்தொடர்ந்தான்.
சமைத்த உணவுகளை எடுத்து வைத்துவிட்டு அறைக்குச் சென்று மறைய, ‘என்னவோ இவனை வேண்டாம்னு தூக்கிப் போட்ட மாதிரி பேசறானே! இந்நேரம் அவங்கப்பா இருந்திருந்தால், தாய் – மகன் இருவருக்கும் நடுவே இவ்வளவு பெரிய பிளவை ஏற்பட விட்டிருப்பாரா?!’ மனதினுள் நினைத்தபடியே யாதவின் அறைக்குள் நுழைந்தான்.
அதற்குள் அலுப்புதீர குளியல் போட்டுவிட்டு வெளியே வந்தவனைப் பார்வையால் அளந்தான் ராம்குமார். அலையலையாய் கேசமும் ஆறடிக்கு சற்றே குறைவான உயரத்தில் இருந்தான். எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாத கலையான முகம், திடகாத்திரமான உடல்வாகும் அவன் கம்பீரத்தைப் பறைசாற்றியது.
தன்னை இமைக்காமல் பார்த்தவனிடம், “என்னை சைட் அடிச்சது போதும், முதலில் போய் குளிடா” துண்டைத் தூக்கி அவன்பக்கம் வீசிவிட்டு பால்கனி நோக்கிச் சென்றான் யாதவ்.
பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அவன் அமர்ந்தவனின் பார்வை வானில் இருந்த பிறை நிலாவின் மீது மையம்கொள்ள, ‘உங்கமேல் நான் வைத்த காதலும் இந்த பிறைநிலா போலதான், நாளுக்கு நாள் வளர்ந்து பௌர்ணமி ஆகிடும்’ குறும்புடன் கண்சிமிட்டிச் சிரித்தவளின் முகம் நினைவில் வந்து போனது.
அதேநேரம் குளித்துவிட்டு பால்கனிக்கு வந்த ராம், “டேய் நல்லவனே! முதலில் போய் தூங்குடா! இந்த சிந்தனையெல்லாம் பகலில் வச்சுக்கோ” நண்பனின் காலை வாரினான்.
சட்டென்று தன் முகபாவனைகளை மாற்றிக் கொண்ட யாதவ், “குட் நைட்” என்றதும், “இனி பேசி பயனில்லை” ராம்குமார் அங்கிருந்த சோபாவில் படுத்துக் கொண்டான். அவன் உறங்கிய சிறிதுநேரத்தில் படுக்கையில் வந்து விழுந்தான் யாதவ்.
ஒரு பெண்ணுடன் சிரித்துப் பேசிக்கொண்டு, சாலையில் சீரான வேகத்தில் பயணித்தான். எதிரே வந்த கார் ஒன்று அவனின் கண்முன்னே விபத்துக்குள்ளான காட்சி, அவனை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.
தன் காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த விபத்து நடந்த இடத்தை நோக்கி ஓடினான். டிரைவிங் சீட்டில் அமர்ந்திருந்த பெண் ஸ்டேரிங்கில் கவிழ்ந்து கிடந்தாள். கதவுகள் ஜாம்மாகி இருக்க, மறுபக்கம் கதவைத் திறந்து அவளை இருகரங்களில் ஏந்தினான்.
அவளின் முகம் முழுவதும் ரத்தமாக இருக்க, “கிருஷ்ணா ப்ளீஸ் என்னை விட்டுட்டு போகாதே!” அந்தக்குரல் அவன் உயிர்வரை சென்று தீண்டியது. அந்த பெண்ணின் முகத்தைக் கூர்ந்து கவனித்தவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது.
“இனியா” வீடே அதிரும்படி கத்தியவன் படுக்கையில் இருந்து எழுந்து அமரந்தான்.
அவனது அலறல் சத்தத்தில் ராம்குமாரின் உறக்கமும் பறிபோக, “ஏய் என்னாச்சுடா! எதுக்காக இப்போ உயிரே போன மாதிரி கத்தின?” பதட்டத்துடன் நண்பனின் அருகே சென்றான்.
அந்த கனவின் தாக்கத்தில் இருந்து மீளாமல், “இனியா என்னை விட்டுட்டுப் போகாதே! நீ இல்லன்னா நான் செத்துப் போயிடுவேன். எனக்கு நீ வேணும்” முணுமுணுத்த யாதவிற்கு அந்த ஏசி அறையிலும் வேர்த்துக் கொட்டியது.
“ஏதாவது கேட்ட கனவு கண்டாயா?!” ராம்குமார் கேட்டதும், தான் கண்டது கனவென்று உணர்ந்தான் யாதவ். பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டலை எடுத்து நீட்ட, அதை வாங்கி மடமடவென்று குடித்தவனின் பார்வை கடிகாரத்தின் மீது படிந்தது.
அதிகாலை நான்கு என்றது கடிகாரம். விடியற்காலை நேரத்தில் காணும் கனவுகள் பலிக்கும் என்ற உணர்வே அவனை நிம்மதியிழக்க செய்தது எனலாம். தன்னுடைய செல்போனை எடுத்து யாருக்கோ அழைத்தான் யாதவ்.
அவனது செயல்பாடுகளைக் கவனித்த ராமோ, ‘அமெரிக்கா போகும்போது இருந்த சந்தோசம், வரும்போது அவன் முகத்தில் இல்லையே! இவனோட இயல்பான குணமே மாறிடுச்சு’ என்ற நினைவில் சோபாவில் சரிந்தான்.
மறுபக்கம் ரிங் போய்கொண்டே இருந்ததே தவிர யாரும் போனை எடுக்கவில்லை என்றதும், “ப்ளீஸ் பிக்கப்… பிக்கப்..” யாதவ் மீண்டும் பொறுமை இழந்து கத்த, ராமிற்கு கோபம் வந்தது.
“டேய் தங்கச்சி கல்யாண வேலை தலைக்குமேல் இருக்குடா. ப்ளீஸ் என்னைக் கொஞ்சநேரம் தூங்க விடு!” என்ற அதட்டலில், தன்னுடைய செல்போனை எடுத்துக்கொண்டு பால்கனியில் சென்று அமர்ந்தான் யாதவ்.
‘இவனை எல்லாம் திருத்தவே முடியாது’ மனதிற்குள் புலம்பியவன் கண்ணை மூடி தூங்க முயன்றான்.
யாதவ் சிந்தனை முழுவதும் அவளைச் சுற்றி மட்டுமே வட்டமிட, இதுவரை தான் செய்வது சரியென்று நினைத்திருந்தவன், முதல்முறையாக தான் எடுத்த முடிவு தவறோ என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கினான்.
கடந்த ஆறு மாதங்களாகவே, அவனுக்குள் நிகழ்ந்திருந்த மாற்றங்கள், அவனை இவ்வாறு யோசிக்க வைத்தது எனலாம். அமெரிக்காவில் இருந்து கிளம்பும் கடைசி நேரத்தில்,
‘இன்று விட்டால் இனி அவளைப் பார்க்க வாய்ப்பில்லை. ஒருமுறை அவளை நேரில் சந்திக்க வேண்டும்’ மனம் தவித்த தவிப்பை புறம்தள்ளிவிட்டு இந்தியாவிற்கு ப்ளைட் ஏறினான்.
சொந்த மண்ணில் காலடி எடுத்து வைத்த சந்தோசத்தில் ஒருசில நாட்கள் இயல்பாகக் கழிந்தன. முதலில் வேலை செய்த ஹாஸ்பிட்டலில் சென்று பணியில் சேர்ந்துவிட்டான். அதன்பிறகு அவளது நினைவுகள் மெல்ல அவனை ஆக்கரமித்தன.
அதற்கான காரணம் என்னவென்று அவன் ஆழ்ந்து சிந்திக்கவில்லை. நாட்கள் யாருக்கும் நிற்காமல் ரேக்கைக்கட்டிப் பறந்தது.
இன்று கண்ட கனவு அவனது நிம்மதியைக் குலைத்தது. அவனது சந்தோசம் எங்கோ சென்று ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி காட்டியது. ஒரு இனம்புரியாத உணர்வு அவனை ஆளுகை செய்ய, அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க முடியாமல் அவனது மூளை வேலை நிறுத்தம் செய்தது.
திடீரென்று வாழ்க்கையே சூனியமாகிவிட்டதுபோல தோன்றவே, ‘அவளது மடியில் தலை சாய்த்து விழி மூடினால் போதும். இந்த வெறுமை நொடியில் காணாமல் போய்விடுமே…’ மனம் செல்லும் திசையை உணர்ந்தவனின் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது.
தனக்குள் நிகழும் திடீர் மாற்றங்களுக்கு காரணம் காதல் என புரிய, கடந்த சில நாட்களாக தன்னைச் சூழ்ந்திருந்த வெறுமைக்கூட காணாமல் போனது. சில்லென்ற காற்று வந்து முகத்தில் மோத, அவனது பார்வை தோட்டத்தின் பக்கம் சென்றது.
மழையில் நனைந்திருந்த மலர்கள் தலையசைத்து, அவனை வாவென்று அழைப்பது போலவே இருந்தது. அனைத்து பூக்களும் வாசனையால் மற்றவரின் மனம் கவரும். ரோஜா மட்டுமே ஒருவிதமான கவர்ச்சியுடன் கண்ணைப் பறிக்கும்.
அதன் தனித்தன்மையே முள்ளோடு பூத்தாலும், அதிலொரு கம்பீரமும், நிமிர்வும் இருக்கும். பூக்களின் ராணிபோல காட்சியளிக்கும் ரோஜாப்பூவை என்றாலே, அவனுக்கு அப்படியொரு விருப்பம். தன் வீட்டின் தோட்டம் முழுவதும் பலவண்ண நிறங்களில் ரோஜா பூச்செடிகளை பதியம்போட்டு வளர்த்திருந்தான் யாதவ்.
ஊட்டி குளிர் பிரதேசம் என்பதல், பூக்கள் கொத்து கொத்தாக பூத்தன. அந்த இடமே பிருந்தாவனம்போல காட்சியளித்தது. தன் காதலை உணர்ந்த தருணத்தை மனதினுள் அசைபோட, ரோஜாவைப் போல கம்பீரமான தோற்றமுடைய தன்னவளின் முகம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.
அதிகாலை நேரத்தின் நிசப்தத்தைக் கலைக்கும் விதமாக, ராம்குமாரின் வீட்டின் காம்பவுண்ட் உள்ளே ஒரு கார் நுழைந்தது. அந்த சத்தம்கேட்டு யாதவ் திரும்பிப் பார்க்க, காரின் கதவைத் திறந்து இறங்கினாள். ஒரு நிமிஷம், தன் கண்கள் காண்பது கனவா? நனவா? புரியாமல் அதிர்ச்சியில் மூச்சுவிட மறந்து சிலையாகி நின்றான் யாதவ்.
கொஞ்ச நேரத்தில் ராம்குமாரின் செல்போன் சிணுங்கும் சத்தத்தில் தன்னை மீட்டுக் கொண்டான். அவன் பார்வை அவளைத் தேட, அந்த இடமே வெறுமையாக காட்சியளித்தது.
தன் பின்னந்தலையில் செல்லமாக தட்டி, ‘இந்த காதல் வந்தாலே, பார்க்கும் பெண்ணெல்லாம் காதலியாக தெரியும்னு சொல்வாங்க. அதுமாதிரி ஏதோ ஒரு பெண்ணைப் பார்த்துட்டு லூசுத்தனமாக யோசிக்கிறேனோ?’ தனக்குதானே சொன்னபடி அறைக்குள் சென்றான்.
ராம்குமாரின் செல்போன் அடித்த வண்ணமிருக்க, “ஐயோ என்னைத் தூங்கவிடாமல் இம்சை பண்றாங்க” என்றபடி அழைப்பை ஏற்றுப் பேச தொடங்கினான்.
“……………..” மறுப்பக்கம் சொன்னதைக் கேட்டு, “நிஜமாவா அம்மா!” அவனது முகம் பளிச்சென்று பிரகாசமானது.
இங்கே அறைக்குள் அங்குமிங்கும் நடைபயின்ற யாதவ், ‘ராம் வீட்டுக்கு வந்த பெண் யாரென்று தெரிஞ்சிக்கணுமே’ உடலில் இருந்த ஒவ்வொரு செல்லும் அடம்பிடித்தது.
அதை அறியாமல் தாயுடன் பேசிய ராமோ, “நைட் வொர்க் முடிச்சிட்டு வரும்போது லேட் ஆகிடுச்சுமா. அதுதான் நம்ம யாதவின் வீட்டிலேயே தங்கிட்டேன், இதோ இப்போவே வர்றேன்மா” அழைப்பைத் துண்டித்துவிட்டு நிமிர்ந்தான்.
யாதவின் மனநிலையை அறியாத ராம்குமார், “அமெரிக்காவில் எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்த பெண் தமிழ் கத்துக்கிட்ட விஷயம்கூட சொன்னேன் இல்ல” என்ற கேள்விக்கு குத்துமதிப்பாக தலையாட்டி வைத்தான் யாதவ்.
“அவ நம்ம கீர்த்தி கல்யாணத்துக்கு இந்தியா வந்திருக்கிறா!” உற்சாகத்துடன் கூற, ‘ஒருவேளை அவளாக இருக்குமோ?!’ யாதவின் உள்ளுணர்வு உடனே அங்கே செல்லும்படி கட்டளையிட்டது.
அவனுக்குள் நிகழும் போராட்டம் இன்னதென்று உணராமல், “கிட்டத்தட்ட எனக்கு இன்னொரு கீர்த்தி மாதிரின்னே சொல்லலாம். இன்னைக்கு அவளை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன் வா” நண்பனின் கையைப்பிடித்து இழுத்துச் சென்றான் ராம்குமார்.
சிவசந்திரன் – வைஜெயந்தி மற்றும் தங்கை கீர்த்தனா என்று ராம்குமாரின் மொத்த குடும்பமும் ஹாலில் கூடியிருக்க, “இந்த ராமண்ணா டெய்லி போன் போட்டு, என் தூக்கத்தையே கெடுத்துட்டாங்கம்மா” என்றவளின் குரல்கேட்டு, அவள்தான் என யாதவ் மனம் ஆனந்தக் கூச்சலிட்டது.
ராம்குமார் – யாதவ் கிருஷ்ணா இருவரும் வீட்டினுள் நுழைந்தனர்.
ஜீன்ஸ் பேண்ட் அண்ட் ஒயிட் டாப் அணிந்திருந்தவளின் தோற்றத்தை, அவளின் முன்பிருந்த ஆளுயரக் கண்ணாடி காட்டியது. வட்ட முகத்தில் சோகத்தின் சுவடுகள் இல்லாமல் இருக்க, அவளது விழிகளில் தெரிந்த மின்னல் காந்தம்போல அவனை ஈர்த்தது.
வீட்டின் நிலகதவின் மீது சாய்ந்து நின்றவனின் மனமோ, அவளைப் பார்த்த சந்தோசத்தில் எகிறிக் குதித்தது. அவனையும் அறியாமல் கண்களில் கண்ணீர் திரையிட்டது.
‘தான் வந்த விஷயத்தை சொல்ல வேண்டாம்’ என தன் சமிஞ்சையின் மூலமாக பெற்றவர்களிடம் ராம்குமார் கூற, அதைப் புரிந்துக் கொண்டு அவர்களும் சரியென்று சைகை செய்தனர்.
“சென்னை வந்ததும் ராம் அண்ணாவிடம் ஊட்டி முகவரி வாங்கிட்டேன். அங்கிருந்து கோவை வரை இன்னொரு பிளைட்” தன்னுடைய பயணம் பற்றி உற்சாகத்துடன் சொல்லும் ஆர்வத்தில் இருந்தவளோ, தன் பின்னோடு வந்து நின்ற ராம்குமாரைக் கவனிக்கத் தவறினாள்.
சிவசந்திரன் வேண்டுமென்றே, “அப்போ அண்ணனிடமும் திறமையாக பொய் சொல்ல கத்துக்கிட்டேன்னு சொல்லு” அவளை வம்பிற்கு இழுக்க, அவரைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டி சிரித்தாள் சின்னவள்.
“தமிழ் கத்துக்கும் முன்பு, அவ்வளவு பொய் சொல்ல தெரியாதுப்பா. இப்போ சரளமாகப் பொய் பேசுவேனே” கட்டை விரலை உயர்த்திக் காட்டித் திரும்பியவளின் பார்வை ராமின் மீது நிலைத்தது.
‘ராமண்ணா எப்போ வந்துச்சுன்னு தெரியலயே! ஐயோ இது தெரியாமல் உண்மையெல்லாம் உளறிட்டேயே யாழினி’ மானசீகமாக தலையில் கைவைக்க, அவனைப் பார்த்து அசடுவழிய சிரித்தாள்.
“என்னிடமே திறமையாகப் பொய் பேச கத்துகிட்டே!” அவளை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டு, அவளை நலம் விசாரித்தான். அவனுக்கு பதில் சொன்னவளின் பார்வை, அவனின் பின்னோடு நின்றிருந்த யாதவின் மீது கேள்வியாகப் படிந்தது.
அவளின் பார்வை சென்ற திசையை நோக்கிய ராம்குமார், “நீ ஏன்டா அங்கேயே நின்னுட்டே!” என்றதும் சட்டென்று சுதாரித்த யாதவ் மெல்ல அவர்களின் அருகே வந்தான்.
“இவன் என் உயிர் நண்பன் யாதவ் கிருஷ்ணா” தொடர்ந்து,
“இவளோட பெயர் மதுரயாழினி. என் உடன்பிறவா தங்கை” இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.
அவனைப் பார்த்தும் அழகாகப் புன்னகைத்த யாழினி, “உங்களைப் பற்றி அண்ணா நிறைய சொல்லியிருக்காங்க. இன்னைக்குதான் உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு” என்றதும், யாதவ் அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்றான்.