jeevanathiyaage_nee-25

JN_pic-f67e029e
akila kannan

ஜீவநதியாக நீ…  

அத்தியாயம் – 25

வருடம். இரெண்டாயிரத்தி இருபத்திஜந்துக்களை  கடந்திருந்தது.

  கல்லூரி வளாகம்.

                     தாரிணி வகுப்பை எடுத்து கொண்டிருந்தாள். கண்ணாடி அணிந்திருந்தாள். ஒற்றை முடியில் மெல்லிய நரை. அவள் வகுப்பு எடுக்கும் பாங்கு அத்தனை அம்சமாக இருக்க, மாணவமாணவிகள் வகுப்பை கூர்மையாக கவனித்து கொண்டிருந்தனர். ஆனால், வகுப்பில் அமர்ந்திருந்த யாழினியின் கவனம் வகுப்பில் கூர்மையாக இருந்தாலும், அவள் மனதை அரித்துக் கொண்டிருந்தது ஒரு சந்தேகம்.

      அது இன்றைய சந்தேகம் மட்டுமில்லை. பல நாள் சந்தேகம். ‘இன்று கேட்டுவிட வேண்டும். ஆனால், எப்படிக் கேட்பது?’ என்ற ஐயத்தோடு அவள் முகத்தை சுளித்து எங்கோ பார்த்தபடி அமர்ந்திருக்க, தாரிணி வகுப்பு முடியும் வரை அவளை அமைதியாக கண்காணித்து விட்டு,  “யாழினி கிளஸ்ஸை கவனிக்கலையா? என் கூட வா” தாரிணியின் குரல் அழுத்தமாக ஒலித்தது.

யாழினியும் அவள் கூட செல்ல, “என்ன பிரச்சனை?” தாரிணி யாழினியின் முகத்தை ஆழமாக பார்த்து  கேட்க,

“மேம், எனக்கு ஒரு சந்தேகம். அந்த கேள்விக்கு பதில் தெரியாமல் என்னால் கிளஸ்ஸை கவனிக்கவே முடியாது.” யாழினி முகத்தை சுருக்கி கொண்டு கூற, தாரிணிக்கு அவள் குறும்பு பேச்சில் புன்னகை எட்டி பார்த்தது. “அப்படி என்ன சந்தேகம் யாழினி? தீர்த்து வச்சிருவோம்” தாரிணி நட்போடு பேசினாள்.

“மேம், உங்களை பார்க்கும் பொழுது, எனக்கு எங்க அப்பா நியாபகம் வருது. உங்களை பிக்கப் பண்ண உங்க ஹஸ்பேண்ட் வரும் பொழுது நான் சாரை பார்த்திருக்கேன். எனக்கு சாரை பார்க்கும் பொழுது எங்க அம்மா நியாபகம் வருது.” யாழினி கூற, தாரிணி உறைந்து நின்றாள்.

“இதை நான் என் அம்மா, அப்பா கிட்ட சொல்லிருக்கேன். அவங்க என்னை கிளாஸை கவனின்னு சொல்லிட்டாங்க. ஆனால், என்னால் உங்க கிளாஸை மட்டும் கவனிக்கவே முடியலை. நீங்க எனக்கு என்னவோ ரொம்ப நெருக்கம் மாதிரி தோணுது.” யாழினி கூற, உறைந்து நின்ற தாரிணியின் கண்களில் கண்ணீர் கோர்க்க, சட்டென்று சூழ்நிலை கருதி அவள் அதை உள்ளிழுத்து கொண்டாள்.

“உங்களுக்கும் அப்படி தோணுதா மேம்?” யாழினி தன் சந்தேகத்தை அதிதீவிரமாக கேட்க, தன்னையும் மீறி ‘ஆம்…’ என்று தலையசைத்த தாரிணி, சுதாரித்துக்கொண்டு, “எனக்கு எல்லா மாணவர்களை பார்த்தாலும், என் பெண் சத்யாவையும், என் பையன வருணையும் பார்க்குற மாதிரி தான் இருக்கும். அதுக்காக எல்லார் கிட்டையும் நான் இந்த சந்தேகத்தை கேட்க முடியுமா யாழினி?” தாரிணி இப்பொழுது அவளை சமன் செய்து கொண்டு புன்னகையோடு கேட்க, யாழினி தாரிணியை யோசனையோடு பார்த்தாள்.

யாழினி என்ன பேசுவது என்று தெரியாமல் விழிக்க, “உங்க அம்மா, அப்பா சொல்றது தான் சரி. கிளாஸை மட்டும் கவனி யாழினி. உனக்கு வேற எந்த சிந்தனையும் வர கூடாது. அம்மா, அப்பா சொல்றதை கேளு யாழினி.” தாரிணி புன்னகையோடு சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.

வகுப்பு முடிந்து மாலை நேரம் நெருங்கியிருக்க, யாழினி கல்லூரி வாசலில் நின்று கொண்டிருந்தாள். தாரிணி ஜீவாவிற்காக காத்திருக்க, ‘என்ன யாழினி இன்னும் கிளம்பாம இங்க நிக்குறா? தினமும் இப்படி தான் நிக்குறா…’ அவள் பார்வை யாழினியின் பக்கம் சென்றது. ‘எதுவும் பேச கூடாது. பேசினால், எதையாவது உளறிடுவேன்’ தாரிணி மெளனமாக அவளை கண்காணிக்க, ஜீவா பைக்கில் அங்கு வந்தான்.

தாரிணி தன் கல்லூரி படிப்பையும், மேற்படிப்பையும் முடித்து  கல்லூரியில் பல வருடங்களாக பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்க, ஜீவா அவன் ஆரம்பித்த கோச்சிங் சென்டரிலிருந்து மேலும் மேலும் வளர்ந்து இன்று பெயர் சொல்லக்கூடிய  பிசினெஸ் புள்ளியாக இருக்கிறான்.

     எத்தனை வேலை இருந்தாலும், தாரிணியை வீட்டிற்கு அழைத்து செல்வது அவன் பொறுப்பு. கார் இருந்தாலும், ஜீவா பைக்கில் அழைத்து செல்வது தான் தாரிணிக்கு பிடிக்கும் என்பதால், அவன் அந்த வழக்கத்தை இத்தனை வருடமும் விடாமல் செய்து கொண்டிருந்தான்.

தாரிணி யாழினியை பார்த்தபடி ஜீவா அருகே சென்றாள். “தாரிணி” அவன் உல்லாசமாக அழைக்க, அவள் அவனை கவனிக்காமல் அங்கு நின்று கொண்டிருந்த யாழினியை நோட்டமிட்டபடி வண்டியில் ஏறினாள். “ப்ரோபஸ்ஸோர் மேம், என் வேலைக்கு இடையில், உன்னை பிக்கப் பண்ண வந்தா நீ என்னை கண்டுக்க மாட்டேங்குற” அவன் தன் மனைவியை வம்பிழுத்தான்.

“உங்க தங்கை பொண்ணு உங்களை வலை போட்டு தேடுறா” அவள் பைக்கில் ஏறியபடி முணுமுணுக்க, அவன் வண்டியை நிறுத்தினான். அவன் கண்கள் யாழினியின் பக்கம் திரும்பியது. “யாழினிக்கு நாம யாருனு தெரியுமா தாரிணி?” அவன் கேட்க,

“தெரியாது ஜீவா. யாழினி ரொம்ப நாள் நம்மை கண்காணிக்குறா. நாம தான் அவ நம்மளை கண்காணிக்குறதை கவனிக்கலை போல. ஆனால், யாழினி நம்மளை சீக்கிரம் கண்டுபிடிச்சிருவா. ரொம்ப பாசக்கார பொண்ணு. பயங்கர தைரியசாலி. புத்திசாலியும் கூட.” தாரிணி யாழினியை பாராட்ட, “என் தங்கை கீதா மாதிரி” அவன் வாத்சல்யத்தோடு கண்ணாடி வழியாக யாழினியை பார்த்தபடி கூறினான்.

அவன் முதுகில் சொத்தென்று அடித்தாள் தாரிணி. “ஏன், அவ எங்க அண்ணா மாதிரி இருக்கலாம். இல்லை, அத்தை என்னை மாதிரி இருக்கலாம்” அவள் வம்பிழுக்க, ஜீவா பெருங்குரலில் சிரித்தான். “என்ன சிரிப்பு?” அவள் இப்பொழுது முகத்தை சுளிக்க, “நான் யாழினி கிட்ட பேசட்டுமா தாரிணி?” அவன் குரல் ஏக்கத்தோடு ஒலித்தது.

“என்னனு பேசுவீங்க?” தாரிணி கேட்க, “….” அவனிடம் மௌனம். அவன் கண்களில் ஏமாற்றம். “கிளம்பு ஜீவா இங்கிருந்து. அவ உன்னை பார்க்க தான் நிக்கறா” அவள் இன்று யாழினி கேட்ட கேள்வியையும் சேர்த்து கூற, ஜீவா வண்டியை கிளப்பினான்.  இவர்கள் கிளம்பியதும் யாழினியும் கிளம்பிவிட, அதை ஜீவாவும் கண்ணாடி வழியாக உறுதி செய்து கொண்டான்.

“எனக்கு பயமா இருக்கு ஜீவா.” தாரிணி குரலில் வருத்தம் தொனிக்க, “என்ன பயம் தாரிணி?” அவன் கேட்க, “இப்ப தான் நம்ம வாழ்க்கை பிரச்சனை இல்லாம போய்கிட்டு இருக்கு. கஷ்ட்டப்பட்டு உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கோம். நம்ம பையன் வருணும் நல்லா படித்து இப்ப மாஸ்டெர்ஸும் பன்றான். அதே நேரத்தில், படிப்புக்கு இடையில் பொறுப்பா உனக்கு பிஸினெஸ்லயும் உதவி செய்யறான்” தாரிணி பேசிக்கொண்டே போக, “இதுல நீ பயப்படுற மாதிரி ஒண்ணுமே இல்லை தாரிணி” ஜீவா கேலி பேசினான்.

“ஜீவா, உனக்கு எப்பப்பாரு விளையாட்டு தானா?” அவள் கழுத்தை நொடிக்க, “சரி கிளாஸ் எடுங்க ப்ரொபெஸர் மேடம்” அவன் புன்னகையோடு கூற, “சத்யா, வருண் மாதிரி இல்லை ஜீவா. கொஞ்சம் உங்களை மாதிரி துடுக்கா, என்னை மாதிரி கொஞ்சம் அவசர கொடுக்கா இருக்கிறா. நாம யாழினி கிட்ட பேசப்போக, வேற எந்த பிரச்சனையும் வந்திற கூடாதில்லை?” தாரிணி கேள்வியோடு நிறுத்தினாள்.

“தாரிணி, ரொம்ப பயப்படாத. சத்யா வயசு அப்படி. இளம் இரத்தம் வேகவேகமா துடிக்குது. நமக்கு துடிக்காததா? நல்லா படிக்கிறா. இப்ப கூட நான் அவ கிட்ட பேசிட்டு தான் வரேன். வருணோட ஒப்பிட்டு பார்க்காத. எல்லாரும் ஒன்னு போல இருக்க முடியாதில்லை?” ஜீவா அவளை சமாதானம் செய்தான்.

“நான் நமக்காக மட்டும் யோசிக்கலை. நாம பேச போக, யாழினி படிப்பும் பாதிக்கப்பட கூடாது ஜீவா” தாரிணியின் குரலில் கவலை இருக்க, “அதெலாம் கீதா பார்த்துப்பா.” ஜீவா நம்பிக்கையோடு கூறினான்.

***
ரவியின் வீட்டில்.

              “கீது…” ரவி அழைக்க, “வீட்டில் கல்யாண வயசில் பையனும், காலேஜ் போற பெண்ணும் இருக்காங்க. உங்களுக்கு என்ன கீத்து?” கீதா சிடுசிடுக்க, “என்ன டீச்சரம்மா ரொம்ப கோபமா இருக்கிற மாதிரி தெரியுது.” ரவி அவள் கைகளை பிடித்து அருகே அழைத்து அமர வைத்து கேட்டான். “போதுங்க இந்த கண்ணாம் பூச்சி ஆட்டம்” அவள் குரல் வருத்தத்தோடு ஒலித்தது.

“என்ன கண்ணாம்பூச்சி ஆட்டம்? எனக்கு புரியலை கீதா” சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்த அவன் சிகையை கோதியபடி, தன் மனைவியை பார்த்தான். “உங்களுக்கா புரியாது? புரிஞ்சும் புரியாத மாதிரியும் இருப்பீங்க” கீதாவின் முகத்தில் கோபம் எள்ளும் கொள்ளுமாக வெடித்தது.

“என்ன உங்க அண்ணா விஷயமா?” அவன் அவள் தோள் பிடித்து கேட்க, அவளிடம் மௌனம்.  “என்ன இது இத்தனை வருஷம் இல்லாம இப்ப திடீருன்னு?” அவன் கண்கள் சுருங்க, “யாழினி… யாழினி… ரொம்ப கேள்வி கேட்குறா” கீதாவின் குரல் உள்ளே செல்ல, ‘இல்லை இது காரணம் இல்லை’ ரவி கணித்துக் கொண்டாலும், தன் மனைவியின் பேச்சுக்கே இசைந்தான்.

“நான் தாரிணி இருக்கிற காலேஜ்ல யாழினியை சேர்க்க வேண்டாமுன்னு சொன்னேன். இத்தனை வருஷமா வேற ஸ்கூல், வேற இடம் அப்படின்னு  போய்டுச்சு. நீ இந்த காலேஜல சேர்த்தது தான் எல்லாத்துக்கும் காரணம். அதுவும் இந்த வீட்டில் யாருக்கும் தாரிணி அங்க இருக்கிறது தெரியாது.” ரவி கொஞ்சம் கோபமாக பேச, “அது சரி, உங்க அப்பா பேச்சுக்கு தான் என்னை கல்யாணம் பண்ணீங்க. என் ஆசைக்கு என்ன மதிப்பு?” கீதா முகத்தை திருப்பி கொண்டு கண்கலங்க,

“கீது…” அவன் கோபம் மொத்தத்தையும் ஒதுக்கிவிட்டு, அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான். “கீதா, இப்படி பேசலாமா? உனக்கு என் அன்பும் தெரியும்  என் நிலைமையும் தெரியும். தெரிஞ்சிகிட்டே இப்படி பேசினா என்ன அர்த்தம்?” அவன் கேட்க, “யாழினியை சாக்கு வச்சி நான் காலேஜ் பக்கம் போறேன். யாருக்கும் தெரியாமல் என் அண்ணனை பார்க்கணும்னு எனக்கு தலை எழுத்து. காலேஜில் அப்பப்ப என் அண்ணனை பார்க்குறேன். அண்ணனும் வருவான்” கீதா கூற, ரவி அவளை மௌனமாக பார்த்தான்.

“இப்ப யாழினிக்கு ஏதோ சந்தேகம் வந்திருச்சு” கீதா கூற, “இதுக்கு எதுக்கு இவ்வளவு கவலை படுற? எத்தனை நாள் உண்மையை மறைக்க முடியும்? தள்ளி இருக்கிற வரைக்கும் பிரச்சனை இல்லை. இனி யாழினி கிட்ட மறைக்க முடியாது. யாழினி கிட்ட சொல்லிட வேண்டியது தானே?” ரவி அசட்டையாக கேட்டான். “யாழினி எனக்கு பிரச்சனை இல்லை. உங்க மகன் தான் எனக்கு பிரச்சனை” அவள் கோபமாக கூற,  “ஷங்கர் உனக்கு மகன் இல்லையா கீதா?” அவன் குரலில் வருத்தம்.

“என் மகனா அவனை எங்க வளர விட்டீங்க? உங்க தங்கை இல்லாத வருத்தத்தை மறைக்க, உங்க அப்பா, ஷங்கரை முழுசா அவங்க பொறுப்பில் எடுத்துகிட்டாங்க. அவன் உங்களை மாதிரி வளர்ந்து நிக்குறான். தாத்தா சொல்றது தான் சரி. தாத்தா சொல்றதை தான் கேட்கணும் அப்படின்னு. உங்க அப்பாவுக்கு வயசாகிருச்சுனு அவங்களையும் எதிர்க்க முடியலை. என் பையனையும் கண்டிக்க முடியலை” கீதா கூறிவிட்டு மடமடவென்று அறையை விட்டு செல்ல எத்தனிக்க,

“கீது…” அவன் அவள் கைகளை பிடித்து நிறுத்தினான். “எத்தனை வயசானலும் நீ அப்படியே இருக்க கீது” அவன் சமாதானம் செய்யும் விதமாக கூற, அவள் அவனை முறைக்க, “நமக்கு கல்யாணமான நாளிலிருந்து நீ வருத்தப்பட்டா எனக்கு பிடிக்காது கீது” அவன் குரல் தழைந்தே ஒலித்தது. “என்ன வேணும் உனக்கு? எதுக்கு சுத்தி வளைத்து பேசுற?” அவன் கண்களை சுருக்கி கேட்டான்.

“என் அண்ணாவையும், வருணையும் நம்ம பையன் எதிரி மாதிரி பார்க்குறான். மாமா அப்படித்தான் சொல்லி கொடுத்திருக்காங்க. உண்மையை உடைக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. ஆனால், உண்மையை சொன்னால், ஷங்கர் அவங்களை இன்னும் எதிரியா பார்க்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. அவன் மனசில் அவ்வளவு வெறுப்பை விதைச்சிருக்காங்க. பல வருஷமா நான் போராடியும் என்னால் இதை சரி செய்ய முடியலை” கீதா குரலில் விரக்தி.

“ஷங்கரும், வருணும் சந்திக்காத மாதிரி பார்த்துக்கோங்க. நீங்களும் என் அண்ணனும் அடிச்சிக்கிட்டதையே என்னால் தாங்க முடியலை. நம்ம பசங்களும் இதையே பண்ணா… நான்…” அவள் வார்த்தையை முடிக்குமுன், “கீதா…” அவன் அவளை தன் அணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தான்.

“அப்படி எதுவும் நடக்காது கீதா. அவங்க இரண்டு பெரும் ஒரே பிசினெஸ் லைன்ல தான் இருக்காங்க. ப்ராஜெக்ட் டெண்டர் எடுக்கறது, அப்படி இப்படின்னு ஆயிரம் மீட்டிங் இருக்கும். அவங்க சந்திப்பை எப்படி தடுக்கிறது கீதா?” ரவி இயலாமையோடு கூற, “எங்க அண்ணன் கூட என்னை சேர்த்து வைக்க தான் முடியலை. குறைந்தபட்சம் அடுத்த தலைமுறை சண்டை போடுறதையாவது தடுத்து நிறுத்துங்க” கீதா கண்டிப்போடு கூற, ரவி தன் மனைவியை கவலையோடு பார்த்தான்.

“அப்பா…” அழைத்து கொண்டே ரவியின் கழுத்தை கட்டி கொண்டு நின்றாள் யாழினி. “யாழு…” அவன் தன் மகளின் தலையை கோத, “ஏதாவது பிரச்சனையா அப்பா?” தன் தந்தையின் முகத்தை பார்த்தபடி தலை சாய்த்து கேட்டாள்.

“அம்மா, முகமும் சரி இல்லையே. பாட்டி தாத்தா எதுவும் சொன்னாங்களா? என்னனு கேட்டிருவோம்? இல்லை, சங்கர் அண்ணா எதுவும் சொன்னானா? அவனை கம்பு வச்சி அடி வெளுத்திருவோம்” யாழினி தலை அசைத்து அசைத்து இருவரையும் பார்த்து கேட்க,

“அதெல்லாம் இல்லை யாழு. உனக்கு இன்னைக்கு கிளாஸ் எப்படி போச்சு?” ரவி அக்கறையாக கேட்க, “அப்பா, கிளாஸ் ரொம்ப ரொம்ப நல்லா போச்சு. அதுலயும் என் ப்ரோபெஸ்ஸர் தாரிணி மேம் ஸோ ஸோ ஸ்வீட். அவங்க ஹஸ்பேண்ட் கூட இந்த வயசிலும் உங்களை மாதிரி செம்ம ஹண்ட்ஸாம் அப்பா.” யாழினி கண்சிமிட்டி கூற,

‘தாரிணி…’ என்ற பெயரில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும், அதை ஒதுக்கி தன் கவனத்தை மகள் பக்கம் திருப்பினர்

“ஹலோ, யாருக்கு வயசாகிருச்சு?” ரவி கேட்க, கீதா இப்பொழுது அவனை பார்த்து கேலியாக சிரித்தாள். “உங்க அம்மாவுக்கு தான் வயசாகிருச்சு.” ரவி அவளை கேலி செய்ய, “இல்லை அப்பா. அம்மா இப்பவும் ஹீரோயின் மாதிரி தான் இருக்காங்க” தன் தாயை யாழினி கட்டிக்கொள்ள, “அது சரி… அம்மா, பொண்ணு கூட்டணி முன்னாடி, இந்த ரவி அம்பேல்” அவன் இரு கைகளையும் தூக்க, “நீங்க இல்லைனா, நாங்க யாருமே இல்லையே…” கீதா ரவியை பார்த்து சொல்ல, “அம்மா, அப்பா கூட்டணி முன்னாடி நான் அம்பேல்…” இப்பொழுது யாழினி கைகளை தூக்கினாள்.

மூவரும் சிரிக்க, “அப்பா, நாம பேசிக்கிட்டே இருந்ததில் நான் முக்கியமான விஷயத்தை கேட்க மறந்துட்டேன். நான் கேட்பேன் நீங்க நோ சொல்ல கூடாது” யாழினி அன்பு கட்டளையிட, “அப்படி என்ன கேட்க போற யாழு?” ரவி சிரிக்க, யாழினி வைத்த கோரிக்கையில் இருவரும் அதிர்ந்து நின்றனர்.

நதி பாயும்…