Rose – 18

8e13ab6a69323bedd73c37d0b2cabf61-57421846

அத்தியாயம் – 18

அங்கிருந்து நேராக வீடு வந்த யாழினி வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். அங்கே நிலவிய அமைதி, அவளுக்கு வெறுப்பைத் தந்தது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதுபோல, ஒவ்வொரு நபர்களின் சுயரூபமும் தெரிய வரும்போது மனதளவில் துவண்டுதான் போனாள்.

டீன் ஏஜ் வயதிலிருந்து அண்ணா என்றழைத்தவனின் சுயரூபம் கண்டு, ‘எல்லோருக்கும் அவரவர் பக்கமிருக்கும் நியாயம் மட்டும்தான் புரியுது. இவங்க பாசமெல்லாம் உதட்டளவில் தான்’ கசந்த புன்னகையுடன் கலங்கிய விழிகளைத் துடைத்து கொண்டாள்.

தலைவலி ஒரு பக்கம் வின் வின் என்றது. மெல்ல எழுந்து டீ போட்டு குடித்தாள். ஊட்டியின் குளிருக்கு இதமாக இருக்க, அவளது செல்போன் சிணுங்கி அவளின் கவனத்தை ஈர்த்தது.

ராம்குமார் வீடு சென்று நடந்ததை சொல்லியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அவர்களுடன் பேசும் மனநிலை இல்லாமல் போனை எடுக்காமல் இருந்தாள். கடைசியாக வைஜெயந்தி அழைக்க, இதுக்குமேல் தவிர்த்தால் அவர்கள் நேரில் கிளம்பி வரக்கூடும் என்பதால் அழைப்பை ஏற்று பேசினாள்.

“ஹலோ அம்மா சொல்லுங்க” குரலில் தடுமாற்றத்தை மறைத்தபடி பேச தொடங்கினாள்.

 “உன்னை வீட்டில் இறக்கிவிட்டு வந்ததாக ராம் சொல்றான், நீ இங்கேயே இருக்க வேண்டியதுதானே? ஏன் அங்கே போன?” அவரின் குரல் கண்டிப்புடன் ஒலிக்க, ராம்குமார் பேசியது மனக்கண்ணில் வந்துபோனது.

வானில் மிதக்கும் மேகங்கள் ஓரிடத்திலேயே நிரந்தரமாக நிற்பதில்லை. காற்றின் வேகத்திற்கு ஏற்றார்போல நகர்ந்து அல்லது கலைந்துசெல்லும் முகில் போன்ற உறவுகளுக்காக வருத்தப்பட வேண்டிய அவசியம் என்ன?

அந்த கேள்வி மனதில் எழுந்தபோதும், அவன் செய்த நன்மைகளை மனதில் கொணர்ந்தாள். செய்த நன்றியை மறப்பவன் மனிதரை மறக்கக்கூடாது என்பதால், “வீட்டில் எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கிறது ஜெயந்திம்மா. அதுதான் நேராக இங்கே வந்துட்டேன்” அவரை சமாளிக்கும் விதமாக கூற, வைஜெயந்திக்கு அவளின் குரலில் இருந்த தடுமாற்றம் புரிந்தது.

“நீ ஏன் ஒரு மாதிரி பேசற?” அவர் அடுத்த கேள்வியைத் தொடுக்க, மௌனத்தை மட்டுமே பதிலாக தந்தாள். சில நேரங்களில் மௌனம் பல பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கும் என்பதால், அதையே கடைப்பிடித்தாள் யாழினி.

“சரிம்மா வீட்டில் வேலை அதிகமாக இருக்கு, நான் அப்புறம் போன் பண்றேன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டு நிமிர்ந்தாள்.

ஒரு வாரமாக உபயோகப்படுத்தாமல் இருந்ததால், வீடு முழுவதும் தூசாக இருந்தது. அதை வேடிக்கைப் பார்க்க முடியாமல், அனைத்தையும்கூட்டி சுத்தம் செய்துவிட்டு, கிச்சன் கிளினிங் முடித்தாள்.

அன்றைய பொழுது வேகமாக ஓடிமறைய, கடிகாரம் மணி ஐந்து என்றது. அந்த வேலைகளை முடித்த கையோடு ஒரு குளியலைப் போட்டுவிட்டு வந்தாள். ஒருபக்கம் பசி வயிற்றைக் கிள்ள, மீண்டும் ஒரு கப் டீ போட்டு அறையின் ஜன்னலோரம் போய் நின்றாள்.

மாலைநேரம் வானில் கார்முகில் திரண்டு மலையின் முகட்டினில் முகாமிட, மெல்ல நகர்ந்து தூரம் செல்லும் மேகங்களை வேடிக்கைப் பார்க்கலானாள் யாழினி. சில்லென்ற காற்று வந்து அவளின் கூந்தலைச் செல்லமாக கலைத்துச் செல்ல, சடசடவென்று மழை பொழிய மண்வாசனை மனதை வருடிச் சென்றது.

காலிங்பெல் அடிக்கும் சத்தம் அவளின் கவனத்தை ஈர்க்க, ‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்?’ என்ற சிந்தனையுடன் கதவைத் திறந்தாள். மழையில் சொட்ட சொட்ட நனைந்து வந்திருந்த யாதவைக் கண்டு கேள்வியாகப் புருவம் உயர்த்தினாள்.

“வீட்டுக்கு வருகின்ற வழியில் கார் ரிப்பேர் ஆகிடுச்சு. மெக்கானிக் ஷாப்பில் விட்டுட்டு நடந்து வருகின்ற வழியில் மழை வந்துவிட்டது” அவன் தயக்கத்துடன் சொல்ல, “வாங்க…” அவனை வீட்டினுள் அழைத்துவிட்டு வழிவிட்டு விலகி நின்றாள்.

அவன் வீட்டினுள் நுழைந்ததும் கதவை நன்றாக திறந்து வைத்துவிட்டு, “ஒரு நிமிஷம்” என்றபடி உள்ளே சென்றவளைப் பார்வையால் பின்தொடர்ந்தான் யாதவ். அதை அவள் கவனித்ததாக தெரியவில்லை.

கொஞ்ச நேரத்தில் ஒரு கையில் டவலும், இன்னொரு கையில் காஃபி கப்புடன் வந்தாள். தன்மீது கோபம் இருந்த போதும், வீடு தேடி வந்தவனை உபசரிக்கும் அவளின் குணம் கண்டு, ‘என்னவள்’ என்ற எண்ணம் நெஞ்சினில் ஊர்றேடுத்தது.

இரண்டையும் அவன் முன்பிருந்த டேபிளில் வைத்துவிட்டு, “நீங்க தலையைத் துவட்டிட்டு, சூடாக காஃபியை குடிச்சிடுங்க” தன் செல்போனை வாசலில் போடப்பட்டிருந்த கூடை ஊஞ்சலில் அமர்ந்த யாழினி, டீயை சுவைத்தபடி மழையை வேடிக்கைப் பார்த்தாள்.

வீட்டின் சொந்தக்காரி வெளியே இருக்க, தான் மட்டும் எப்படி உள்ளே உட்காருவது என்ற எண்ணம் தோன்ற வெளியே இருந்த சேரில் அமர்ந்தான். ஓரவிழிகளால் அவளது நடவடிக்கையைக் கவனித்த யாதவ் தலையைத் துவட்டிவிட்டு, காஃபியைப் பருகினான்.

மழை ஒருபக்கம் கொட்டித் தீர்க்க, குளிருக்கு இதமாக டீ, கூடை ஊஞ்சலின் ஆட்டமும் யாழினியின் மனதிற்கு நிறைவைத் தந்தது. அத்துடன் பாடல் கேட்டால், இன்னும் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்ற தன் செல்போனில் பாடலை ஒலிக்க விட்டாள்.

“காதல் என்பது” என்று தொடங்கும்போது, யாதவ் பார்வை அவளின் மீது படிந்தது.

யாழினி கோபத்துடன் பாடலை மாற்ற நினைக்க, “இந்த பாடலே பாடட்டும் விடு இனியா” என்றவனின் விழிகள் அவளிடம் காதலை யாசித்தன. எத்தனையோ முறை அவன் பாடிய பாடல், ஒவ்வொரு முறை அவனின் குரலில் கேட்கும்போதும் தன்னையே மறந்துவிடுவாள்.

ஆனால் இன்றோ அவளுக்கு கசப்பாக இருக்க, பாதி பாடலில் ஆப் செய்தவளின் விழிகள் லேசாக கலங்கியது. அவளை சாமதானம் செய்ய அந்த பாடலால் மட்டுமே முடியும் என்பதால், தன் செல்போனில் அந்த பாடலை நின்ற இடத்தில் இருந்து ஒலிக்க விட்டான்.

“காற்றில் ஆடும் கைகள் நெருங்கி நெருங்கி துரத்தும்
விரலைப் பிடித்து நடக்க விருப்பம் நெருப்பை கொழுத்தும்
உந்தன் அருகில் நானும் இருந்தால் நிமிடம் நொடிகள் என கரையும்
என்னை விலகி நீயும் பிரிந்தால் நேரம் பாரமாய் கனக்கும்
உன் அருகில் இருந்தால் என்ன இனி வேண்டும்
உலகம் கையில் வந்ததாய் எண்ணம் ஒன்று தோன்றும்
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்” அவனின் மனதைப் பிரதிபலிப்பது போல பாடல் ஒலிக்க, யாதவ் பார்வை தன்னவளின் மீது படிந்தது.

அவன் விழிகளை நேருக்கு நேராக சந்தித்த யாழினியின் மனமோ,

“காதல் வருவது புரிவதில்லையே…

அதை கடவுள்கூட தான் அறிவதில்லையே…

பூக்கள் பூப்பது தெரிவதில்லையே..

அதை யாரும் எங்குமே பார்த்தில்லையே…” பாடலின் வரிகளை முணுமுணுக்க, மழையும் மெல்ல நின்றது.

காலையிலேயே வைஜெயந்தி மூலமாக விஷயத்தை அறிந்திருந்த யாதவ், அதை தாயிடம் ஒப்பித்தான். அவன் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த மீனலோட்சனி, “இருவருக்கும் சீக்கிரமே திருமணத்தேதியைக் குறிக்கிறேன்” என்றார்.

அந்த சந்தோசமான விஷயத்தை தன்னவளிடம் பகிரும் எண்ணம் தோன்ற, “நீ நினைத்த மாதிரி நம்ம கல்யாணம் சீக்கிரமே நடக்கப் போகிறது” என்றான் பளாரென்ற புன்னகையுடன்.

“மழை விட்டுவிட்டது கிளம்புங்க சார்!” வாசலை நோக்கி கைகாட்டிய யாழினி, பட்டென்று எழுந்து வீட்டிற்குள் சென்றாள். யாதவ் முகத்தில் அறைவாங்கியதைப் போல உணர்ந்தாள். அவ்வளவு உதாசீனம் அவளின் பேச்சிலும், செயலிலும்!

“என்னடி உன்னையே சுற்றி வருகின்றேனே! என் தவறை மன்னித்து ஏற்றுகொள்ள மாட்டாயா?” என்ற கேள்வியுடன் அவளின் பின்னோடு சென்றான்.

எந்தவிதமான சலனமும் இல்லாமல் அவனை ஏறிட்ட யாழினி, “உங்களை நான் மன்னிக்கணுமா? அதனால் நான் இழந்த எல்லாமே கிடைத்துவிடுமா?” என்றவளின் குரலில் ஒரு தடுமாற்றம், அவனின் சிந்தனையைத் தூண்டியது.

இதுநாள்வரை நெஞ்சுக்குள் எரியும் நெருப்பை அணைக்க முடியாமல், அனைத்தையும் மறைக்க முடியாமல் அவள் தவிக்கின்ற தவிப்பு அவள் மட்டுமே அறிந்தது.

“தவறு செய்த நானே அதை சரி செய்கிறேன்னு சொல்றேனே! அதை ஏன் புரிஞ்சிக்காமல் ஏதேதோ பேசற… என்னவோ மூணாவது மனுசனைப் போல, மழை விட்டுவிட்டது கிளம்புன்னு சொல்றே, இது உனக்கே சரியென்று தோன்றுகிறதா?” அவன் கோபத்தில் வெடிக்க, அப்போதும் பொறுமையை இழுத்துப் பிடித்தாள்.

“இங்கே பாருங்க! உங்க விளக்கத்தை கேட்க நான் தயாராக இல்ல. எனக்கு இந்த ஊரில் நல்ல பெயர் இருக்கு. நீங்க இப்படி அடிக்கடி வந்து போவதால், என்னைத்தான் வேசிமாதிரி பார்ப்பாங்க. உங்களோட வாலிப இச்சையைத் தீர்க்க ஏராளமான இடமிருக்கு, அங்கே போங்க. அடிக்கடி எதாவது காரணம் சொல்லி வீட்டுக்கு வர வேலை வேண்டாம்” அவள் கண்டிப்புடன் கூற, வேசி என்ற வார்த்தை அவனை வெகுவாக பாதித்தது.  

தன்னையும் அறியாமல் அவளைக் கைநீட்டி அறைந்த யாதவ், “ஏண்டி என்னை வார்த்தையால் கொல்ற?! ஏற்கனவே உனக்கு சொல்லிருக்கேன், இந்த மாதிரி பேசாதேன்னு, அதை ஏன் கேட்கவே மாட்டேங்குற?” கையை உதறிவிட்டு நிமிர்ந்து பார்க்க, யாழினி அவனையே இமைக்காமல் நோக்கினாள்.

“நான் சொன்னேனே! என்னை விட்டுட்டுப் போகாதேன்னு நீ கேட்டியா?” அவள் கண்களில் கண்ணீர் வழிய கேட்க, அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

இருவரின் நினைவலைகளும் பின்னோக்கி நகர்ந்தது…

இளவேனில் காலத்தின் கடும் வெயிலின் தாக்கமின்றி மிதமான குளிர்காற்று வந்து முகத்தில் மோதியது. அவன் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பும் கடைசி நாள். கிட்டதட்ட ராம்குமாரின் வீட்டினர் ஏர்போர்ட் வந்துவிட, அதை அறியாமல் அவர்களின் வீட்டிற்கு சென்று பார்த்தான்.

அவர்கள் முன்னதாக கிளம்பி சென்றுவிட்ட தகவல் கிடைக்க, அங்கிருந்த பூக்களின் மீது அவனின் பார்வை படிந்தது. இரவு பொழிந்த மழையில் நனைந்த மலர்கள் ரம்மியமாக காட்சியளித்தது.

அதை அவன் மனதினுள் ரசித்தபடி வேகமாக நடக்க, “கிருஷ்! வெயிட் எ மினிட்”  குரல்கேட்டு சட்டென்று திரும்பிப் பார்த்தான். சற்றுத்தொலைவில், சீன்ஸ் அண்ட் டாப் அணிந்திருந்தவளின் மீது அவனின் பார்வை படிந்தது.

எங்கோ அவளைப் பார்த்த ஞாபகம் மட்டுமே இருக்க, அது எங்கே எப்போது என்ற கேள்வி மனத்தைக் குடைந்தது.

வீட்டின் முன்பிருந்த ரோஜா செடிகளில் பூத்திருந்த பூவைப் படும்படாமல் தொட்டு ரசித்து, “திஸ் இஸ் ஃபார் யூ” ஒற்றை ரோஜாவைப் பறித்து சிறுவனின் கையில் கொடுத்த பெண்ணின் பளிங்குமுகம் அவனை வெகுவாக ஈர்த்தது.

கண்ணில் குறும்பு மின்ன காட்சியளித்தவளை இமைக்காமல் நோக்கி, ‘இந்தியா கிளம்பற கடைசி நிமிடத்தில் தான், இவளைப் பார்க்கணும்னு விதியா?’ மனதிற்குள் சலித்துக்கொண்டே காரின் கதவைத்திறந்து ஏறினான்.

இந்தியா வந்து இடைபட்ட வருடங்களில் அவளின் காந்தம் மின்னும் விழிகள், அவன் மனதில் ஆழமாக பதிந்து போயிருந்தது. சொந்த மண்ணில் கால்பதித்த பின்னரும் அவளின் நினைவுகள் அவனைத் துரத்தியது. அவன் விரும்பிய படிப்பை முடித்து, மருத்துவனாக பணியாற்ற தொடங்கினான்.

அன்றும் அந்த நிகழ்வு கனவாக வர, அவளைக் கட்டித் தழுவும் ஆசையில் தூக்கத்தில் புரண்டவன், கட்டிலில் இருந்து புரண்டு கீழே விழுந்த பிறகே கண்டது கனவென்று புரிய, “ச்சே! இன்னைக்கும் கனவில் வந்து தூக்கத்தை கெடுத்துட்டா…” என்றான் கோபமாக.

‘ஒருநாள் பார்த்ததுக்கே, ஐந்து வருடமாக கிறுக்கனாக மாறி இருக்கியே! அவளோடு ஈருடலும், ஒருயிருமாய் வாழ்ந்திருந்தால்…” மனம் கேள்வி எழுப்ப, அவனின் இதயத்துடிப்பு சட்டென்று அதிகரித்தது.

எங்கோ சென்ற சிந்தனைக்கு கடிவாளமிட்டு எழுந்து பால்கனிக்குச் சென்றான். காலைநேரத்தில் தோட்டத்தில் பூத்திருந்த வண்ண ரோஜாக்கள், அவனை வாவென்று அழைப்புவிடுக்க, மீண்டும் அவளின் பளிங்கு முகம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.

‘இது சரிபட்டு வராது!’ தலையை உதறிவிட்டு பக்கத்தில் இருந்த உடற்பயிற்சி அறைக்குள் சென்று மறைந்தான்.

சிறிதுநேரத்தில் குளித்துவிட்டு வந்து உடையை மாற்ற, அவளை மீண்டும் சந்திக்கும் ஆசை அதிகரித்தது. அவன் மனதில் இருந்த அமெரிக்கா மோகமும், லிவ்விங் டூ கேதர் வாழ்க்கையின் மீதான ஈடுபாடும் ஒன்றாக கை கோர்த்தது.

மீண்டும் அங்கே செல்ல சொல்லி மனம் கட்டளையிட்டது. தன் லேப்டாப்பை எடுத்து அமர்ந்த யாதவ், அமெரிக்காவிற்கு டிக்கெட் புக் செய்தான். அடுத்த பதினைந்து நாளில் பயணம் என்பது முடிவாக, அதற்கான பணிகளில் மும்பரமாக இறங்கினான்.

அவன் மருத்துவமனையில் லீவ் கேட்ட விஷயமறிந்து நண்பனைத் தேடி வந்தான் ராம்குமார். “யாதவ்” என்ற அழைப்புடன் அறைக்குள் நுழைய, யாதவ் பயணத்திற்கு தயாராகி நின்றிருந்தான் யாதவ்.

தன் உயிர் நண்பனின் சிரிப்பைக் கண்டு, ‘இவனுக்கு இன்னைக்கு என்னாச்சு?!’ அவன் யோசிக்க, தன்னுடைய டிக்கெட்டை காட்டினான் யாதவ்.

அதைப் பார்த்தும், “டேய்! நீ மறுபடியும் அமெரிக்காபோறீயா?” அதிர்ச்சியுடன் கேட்டான் ராம்குமார்.

“லிவ்விங் டூ கேதர் வாழ்க்கை வாழ வேண்டுமென்ற ஆசை வந்திடுச்சு. அதன் அமெரிக்கா போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றவன் கூற, ‘உன்னை எல்லாம் திருத்தவே முடியாது’ மனதிற்குள் முணுமுணுக்க, அதைப் படித்துவிட்டான் யாதவ்.

“லிவ்விங் டூ கேதர் வாழ்க்கையை ஏன் அவ்வளவு தூரம் கிளம்பி போகணும், இப்போ இந்தியாவில் சர்வசாதாரணமாகிடுச்சு!” ராம்குமார் கூற, அதை அவன் காதிலேயே வாங்கவில்லை.

“தெரியும்! ஆனால் இங்கே இருக்கிற பெண்கள் அதுக்கெல்லாம் சரியென்று தலையாட்டினாலும், பின்னாடி பிரச்சனை செய்வாங்கடா. அவங்களே மாறினாலும் மனசு மாறவே மாறது” என்றவன் விளக்கம் தர, “ஓ” என்றான் ராம்.

“அதே அமெரிக்கா பெண்கள் அப்படி இல்லப்பா!” – யாதவ்.

“அங்கேயும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் தரும் பெண்கள் இருக்காங்க மச்சி” மதுராவின் நினைவினில், தன் நண்பனிடம் விடாமல் வாதாடினான் ராம்குமார்.

“நான் அங்கேதான் போக போறேன். எனக்கு பிடித்த பெண்ணோடு கொஞ்சநாள் வாழ்ந்துவிட்டு, பிடித்தால் அடுத்த கட்டம் நோக்கி நகர்வேன். இல்லன்னா இந்தியா ரிட்டர்ன் ஆகிடுவேன்.” யாதவ் அழுத்தம் திருத்தமாக கூற, ராம் தலையில் அடித்துக் கொண்டான்.

“மச்சி விதி வலியது! அங்கேயும் தமிழ் பெண்ணிடம் நீ வாக்கப்பட போறேன்னு தெரிஞ்சிடுச்சு. இத்தனை நாளாக உன் வாழ்க்கையில் வராத காதல் அவள் மேல் கன்னாபின்னான்னு வரும், அப்போ புரியும்” என்றவன் சாபம் கொடுக்க, அதைக்கேட்டு வயிறு வலிக்க சிரித்தான்.

தன் நண்பனை அமெரிக்காவிற்கு வழியனுப்பிய ராம்குமார், “ஆண்டவா இவனை நல்ல குடும்ப பெண்ணிடம் மாட்டிவிடு. தன்னுடைய கொள்கை தவறுன்னு இவன் உணரணும்” என கடவுளை வேண்டிட, வரம் கேட்டதும் கிடைத்தது.