Rose – 19

1b2a8460094fd3a103b8a0a682ef9dd4-a187b9d7

Rose – 19

அத்தியாயம் – 19

திடீரென்று யாரிடமும் சொல்லாமல் யாழினி அமெரிக்கா சென்ற விஷயம் அறிந்த ராம்குமார், மெல்ல மருத்துவமனை வந்து சேர்ந்தான். யாழினி முன்புபோல எந்தவொரு விஷயத்தையும் வெளிப்படையாக பேசுவதில்லை என்பதை உணர்ந்தே இருந்தான் ராம்குமார்.

அவனது முகத்திலிருந்த கலக்கத்தைப் பார்த்ததும், ‘என்னைப் பிடிக்கலன்னு சொல்லிட்டாளோ?’ தான் மனதில் நினைத்ததை நேரடியாகக் கேட்க முடியாமல் தடுமாறினான் யாதவ்.

இன்றைய நிலையில் யாதவிற்கு தான் அவளின் காதல் தேவையே தவிர, யாழினிக்கு அவன் இல்லை. அன்று அவளை வேண்டாமென்று உதறும்போதும் கல்போல சமைந்து நின்றவளின் பிம்பம், இன்று மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. 

இன்று திருமணத்திற்கு சம்மதம் கேட்டால், கட்டாயம் உடனே சரியென்று தலையாட்ட மாட்டாள் என்பது மட்டும் திண்ணம். அவன் செய்த காரியத்திற்கு, அவள் அன்று கொடுத்த பதிலடி கொடுத்தது ஞாபகம் வந்தது.

‘ஒருநாளும் தனக்கு வாழ்க்கைத் தரும்படி கேட்கவோ, அவனின் வாழ்க்கைக்கு இடையூறு தரவே மாட்டேன்!’ கணீர் குரலில் கூறிய யாழினி பார்வைக்கான அர்த்தத்தைத் தாமதமாகப் புரிந்து கொண்டான்.  அன்றே அவளின் காதல் மனதைப் புரிந்து கொள்ளாமல் போன, தன் மடத்தனத்தை நினைத்து மனம் நொந்தான்.

தன் மனதில் தோன்றிய எதிர்மறையான சிந்தனைக்கு தானே வழிவகுத்து கொடுத்ததுபோல தோன்றவே ‘எந்தவொரு விஷயத்தையும் யோசிக்காமல் செஞ்சிட்டு, இன்னைக்கு இப்படியொரு இக்கட்டில் சிக்கி இருக்கேன். யாழினி நல்லா யோசித்து ஒரு முடிவு சொல்லட்டும். அதுவரை ராமிடம் இதைப்பற்றி பேச வேண்டாம்’ முடிவு எடுத்தான்.

திடீரென்று கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்ற சிந்தனையில் நின்றிருந்த ராம்குமாரைப் பார்த்தும், “என்னடா இப்படி மரம் மாதிரி நிக்கிற? பெசண்ட் உனக்காக காத்திருப்பாங்க. முதலில் போய் வேலையைக் கவனி, மற்ற விஷயத்தை அப்புறம் பேசலாம்” என்றான் யாதவ்.

அவனும் சரியென்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகரவே, யாதவ் தன் வேலையைக் கவனிக்க சென்றான். அவளது வரவை ஆவலோடு எதிர்பார்த்தவனாக, ‘யாதவ் ஒரு முடிவெடுத்தால், அதிலிருந்து பின்வாக மாட்டான்’ என்ற உறுதியில் இருந்தாள்.

அடுத்த இரண்டு நாட்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைய, முற்றிலுமாகப் பொறுமை இழந்தான் ராம்குமார். யாழினி அமெரிக்கா சென்றிருந்ததால், நேரடியாக மிருதுளாவிற்கு போன் போட்டு விஷயத்தை அறிந்து கொண்டான்.

சென்னை வந்து இறங்கிய யாழினி, அடுத்த பிளைட்டில் கோவை ஏர்போர்ட் சென்றடைந்தாள். அங்கிருந்து காரில் ஊட்டி நோக்கி பயனித்தவளின் மனம், ஏனோ ஆல்கடல்போல ஆர்பரிப்பின்றி அமைதியாக இருந்தது.

அன்றிரவு பதினோரு மணியளவில் யாழினி வீடு வந்து சேர்ந்தாள். மீண்டும் தனிமை அவளை சூழ்ந்துகொள்ள, பயணக்களைப்பு தீர குளித்துவிட்டு படுக்கையில் விழுந்தாள். யாதவ் பற்றிய சிந்தனையில் படுக்கையில் அங்குமிங்கும் புரண்டவள், எப்போது உறங்கினாள் என அவளுக்கே தெரியாது.

காலை சுள்ளென்று சூரியஒளி முகத்தில் விழவே, அவளது உறக்கம் கலைந்தது. சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு, தன் உடமைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

யாழினி அலுவலகம் செல்ல தயாராகி வெளியே வரும்போது, காலிங்பெல் அடிக்கும் சத்தம்கேட்டு கதவைத் திறந்தாள். வீட்டின் வாசலில் சிவசந்திரனின் மொத்த குடும்பமும் நின்றிருக்க கண்டவளின் முகம் பூவாய் மலர்ந்தது.

“எல்லோரும் முதலில் உள்ளே வாங்க” அவர்களை இன்முகமாக வரவேற்ற யாழினி, மூவரும் வீட்டினுள் நுழைய வழிவிட்டு விலகி நின்றாள். சிவசந்திரன் – வைஜெயந்தி முதலில் செல்ல, ராம்குமார் அவர்களைப்  பின்தொடர்ந்தான்.

“எங்களுக்கு உன் ஞாபகம் இருக்கு, நீதான் எங்களை மறந்துட்டே!” சிவசந்திரன் கூற, “அது என்னவோ உண்மைதாங்க” கணவனுக்கு ஆதரவாக பேசினாள் வைஜெயந்தி.

அவர்களை ஹாலில் அமர சொல்லிவிட்டு சமையலறை நோக்கி சென்ற யாழினியோ, “இந்த நிறுவனத்தை வாங்கியதில் இருந்து ஓய்வாக உட்கார நேரமே இல்ல. அப்பாவின் நினைவுநாள் என்பதால் அமெரிக்கா போயிட்டு நேற்றுதான் வந்தேன். இதோ இன்னைக்கு வேலைக்கு கிளம்பியாச்சு!” என்றாள் சிரிப்புடன்.

இந்த தகவலைக்கேட்டு பெரியவர்கள் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொள்ள, ராம்குமார் மட்டும் மௌனத்தைக் கடைபிடித்தான். திடீரென்று சிவசந்திரன் – வைஜெயந்தி இருவரும் யாழினியை சந்திக்க செல்வதாகக் கூற, “யாழினியிடம் நானும் கொஞ்சம் பேசணும்மா” அவர்களோடு இணைந்து கொண்டான்.

யாழினி மூவருக்கும் காஃ போட்டு எடுத்து வந்தவள், “அப்புறம் அம்மா என்ன விஷயம்? என்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க” காஃபி கையில் கொடுத்தபடியே விசாரித்தாள்.

“இன்னும் எத்தனை நாள் உன்னை தனியாகவே இருன்னு விடுவது யாழினி? நீ தனியொரு மனிஷியாக நிறுவனத்தை நடத்துவதைக் கண்டு, நிறையபேர் உன்னை மருமகளாக ஆக்கிக்க நினைக்கிறாங்க” சிவசந்திரன் இயல்பாகப் பேச, யாழினியின் முகத்தில் மென்மை போய் கடுமை பரவியது.

தன் கணவனைப் தொடர்ந்து, “எங்களிடம் இதைப்பற்றி இலைமறைகாயாக சொல்லிட்டு இருக்காங்க, நாங்களும் அவங்களை எத்தனை நாள்தான் சமாளிக்கிறது” வைஜெயந்தி விஷயத்தைப் பக்குவமாகக் கூற, ராம்குமார் எதுவும் பேசாமல் அவளையே ஆழ்ந்து நோக்கினான்.

இந்த விஷயம் அறிந்ததும் யாழினியின் முகம் மாறியதைக் கண்ட ராம்குமார், “அம்மா அவளையும் கொஞ்சம் பேச விடுங்க” அவளின் சிந்தனை செல்லும் திசையைக் கண்டுபிடிக்க நினைத்தான்.

தனக்கு ஆதரவாகப் பேசிய தமையனைப் பார்த்தும், “ஸாரிம்மா! நான் இந்த துறையில் இன்னும் நிறைய சாதிக்கணும்னு நினைக்கிறேன், அதனால் திருமணம் பற்றி மட்டும் பேசாதீங்க!” அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க, அவளிடம் எப்படி எடுத்துச் சொல்லி புரிய வைப்பதென்று யோசித்தனர்.

அவளது முகத்தில் வந்துப்போன உணர்வுகளை உன்னிப்பாகக் கவனித்த ராம்குமார், “எல்லோருக்கும் மதுராவைப் பிடிக்கலாம், அதுக்காக அவ கல்யாணத்திற்கு சம்மதிக்க வேண்டிய அவசியம் இல்லையே!” என்றான்.

தன் மகனின் கருத்தில் இருந்த நியாயம் புரிய, “நீ சொல்வதும் உண்மைதான். ஆனால் அதுக்காக அவளோட விருப்பபடி இருன்னு விடுவது சரியில்ல. நாளைக்கு நம்மள எல்லோரும் தப்பா பேசுவாங்க” நிதர்சனத்தை எடுத்துரைத்தார் சிவசந்திரன்.

யாழினி எந்தவொரு கேள்விக்கும் பதில் பேசாமல் மெளனமாக நின்றிருக்க, “நம்ம யாதவ்கூட யாழினியை விரும்புவதாகவும், இவளோட விருப்பத்தைக் கேட்க சொன்னான். நம்ம மதுராவிற்கு ஏற்ற ஜோடி என்றால் அது அவன் மட்டும்தான்!” இடைவெளிவிட்டான் ராம்குமார்.

இந்த தகவலை அறிந்த பெரியவர்களின் முகம் பிரகாசமாக மாறிட, “யாதவ்க்கு யாழினியைக் கட்டிக் கொடுப்பதில் எனக்கு சம்மதம். ஆனால் அவளுக்கு திருமணத்திலேயே விருப்பமே இல்லன்னு சொன்னபிறகு, அதைபற்றி பேசி யாருக்கு என்ன பயன்?” அவளின் மீது பார்வையைப் பதித்தபடியே கூறினான்.

யாதவ் திருமணத்திற்கு சம்மதம் கேட்ட விஷயம் அறிந்த யாழினி, “அண்ணா சும்மா போட்டு வாங்காதீங்க. அவரெல்லாம் திருமணமே செய்ய மாட்டேன்னு சொல்லும் ஆசாமி” என்றாள் கிண்டலாகவே.

மற்றவர்களைவிட யாதவ் கொள்கைகளை நன்கு அறிந்தவள். அவனது கொள்கைக்காக தன்னையே வேண்டாமென்று உதறிவிட்டு வந்தது ஞாபகம் வந்தது. அந்த ஆறு மாதங்கள் அவளின் வாழ்க்கையில் மறக்க முடியுமா?!

அவன் திருமணத்திற்கு சம்மதம் கேட்ட விஷயம் அறிந்த யாழினிக்கு சிரிப்பு வரவே, “அண்ணா குட் ஜோக். ஆனால் இதை நம்ப நான் தயாராக இல்லை” என்றாள்.

திடீரென்று அவள் முகத்தில் வந்து போன குழப்பமான உணர்வைக் கவனித்த ராம்குமார், யாதவ் சொன்ன விஷயத்தை ஒரு வரி மாறாமல் அப்படியே யாழினியிடம் கூறினான்.

அவன் சொல்லி முடிக்கும் வரை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த யாழினி சிந்திக்க தொடங்கினாள். ஆயிரம்தான் அமெரிக்கா மண்ணில் பிறந்து வளர்ந்திருந்தாலும், மற்றவர்களைப்போல் வாழ அவளால் முடியவில்லை.

இன்று வரை யாதவ் மீதான காதல் குறையவில்லை. அவனைத் தவிர வேறொரு ஆணை மணக்கவும் அவளால் முடியாது. அவனே திருமணத்திற்கு சம்மதம் கேட்டதை நினைத்தும், அதுவரை நெஞ்சில் இருந்த வெறுமை காணாமல் போவதை உணர்ந்தாள்.

அவள் யாரிடம் இதயத்தை தொலைத்தாளோ, அவனிடமே தன்னை மீட்டெடுக்க வழி கிடைத்தது. இதுவரை நடந்ததை மறக்க முடியாமல் போனாலும், இனி வரும் காலத்தில் எல்லாமே மாறும் என்ற நம்பிக்கை நெஞ்சில் வந்தது.

‘திருமணம் வேண்டாமென்று பிடிவாதமாக நின்றவள், இதற்கு என்ன பதில் சொல்ல போகிறாளோ?’ அங்கிருந்த மூவரின் மனமும் நிலைகொள்ளாமல் தவிக்க, ஒரு முடிவுடன் நிமிர்ந்தாள்.

அவளது முகத்தில் வந்துப்போன கலவையான உணர்வை உன்னிப்பாகக் கவனித்த ராம்குமாரிடம்,  “ஏற்கனவே ஒருமுறை யாதவ் தான், எனக்கு ஏற்ற ஜோடின்னு நீங்க சொல்லி இருக்கீங்க அண்ணா. இன்னைக்கு அவரே என்னைக் கல்யாணம் செய்ய சம்மதிக்கும்போது, நான் மறுப்பு சொன்னால் சரிவராது” அவள் இடைவெளிவிட, பெரியவர்களின் முகம் பூவாக மலர்ந்தது.

பெரியவர்களின் கண்ணைப்  பார்த்து பேசும் தைரியம் இழந்தவள், “இங்கே யாரையும் எனக்கு தெரியாது அண்ணா. அந்த பதட்டத்தில் தான் திருமணம் வேணாம்னு சொன்னேன், ஆனால் யாதவ் பற்றி நீங்க நிறைய சொல்லியிருக்கீங்க. அதனால் தான் இப்போ திருமணத்திற்கு சம்மதம் சொல்றேன்” என்றாள்.

அவளது சம்மதம் இவ்வளவு சீக்கிரம் கிடைக்குமென்று எதிர்பார்க்காத ராம்குமார், “நான் உடனே யாதவிடம் விஷயத்தைச் சொல்லி, அவங்க அம்மா மூலமாக முறைப்படி பெண்கேட்க சொல்றேன்” செல்போனை எடுத்துகொண்டு வெளியே சென்றான்.

யாழினியின் இந்த முடிவு பெரியவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க, “இதைதான் உன்னிடம் எதிர்பார்த்தோம். நம்ம ராம் போலவே யாதவ் ரொம்ப நல்ல பையன். உன்னை உள்ளங்கையில் வைத்து தாங்குவான்” என்றாள் வைஜெயந்தி.

“உன்னை வெளியாட்களுக்கு கல்யாணம் செய்துகொடுக்க எங்களுக்கு விருப்பமே இல்ல. அதனால்தான் யார் கேட்டாலும், இப்போதைக்கு ஐடியா கிடையாதுன்னு சொல்லிட்டு இருந்தோம். மீனாலோட்சனி உன்னை நல்ல வச்சுக்குவாங்க. சரியான நேரத்தில் கரெக்டான முடிவெடுத்திருக்கிற” சிவசந்திரன் சிரித்தபடியே கூற, யாழினி பதில் பேசாமல் மெளனமாக நின்றிருந்தாள்.

இந்த விஷயத்தை ராம்குமாரின் மூலமாக அறிந்த யாதவ், “டேய் நிஜமாவா சொல்றே” சந்தோசத்தில் சிறகில்லாமல் வானில் பறந்தான். தன்னவள் உடனே சம்மதம் சொல்வாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

“நீ முதலில் ஆன்ட்டியிடம் உண்மையைச் சொல்லி, யாழினியைப் பெண் கேட்க சொல்லு” ராம்குமார் அழைப்பைத் துண்டித்தான். தான் இருக்கும் இடம், பொருள் மற்றும் ஏவல் மறந்து சிறுவனைப்போல், நடுஹாலில் குத்தாட்டம் போட்டான்.

தன் மகனுக்கு சீக்கிரம் திருமணமாக வேண்டுமென்று கோவிலில் வேண்டுதல் வைத்துவிட்டு வீடு திரும்பிய மீனாலோட்சனி, ‘என் மகனை இப்படி சந்தோசமாக இருப்பதைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு’ மனதினுள் நினைத்தவரின் விழிகள் கலங்கியது.

“என்ன விஷயம் யாதவ்” என்றபடி அருகே சென்ற மீனா,கோவிலில் இருந்து கொண்டுவந்த விபூதியை மகனின் நெற்றியில் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.

யாழினியின் சம்மதம் கிடைக்கும் வரை தாயிடம் விஷயத்தை சொல்ல வேண்டாமென்று முடிவில் இருந்த யாதவ், “அம்மா உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்” என்றான்.

“என்னன்னு சொல்லுப்பா” – மீனா மலர்ந்த முகமாக விசாரிக்க,

“நான் யாழினியை உயிராக நேசிக்கிறேன். அவளுக்கு அப்பா, அம்மா யாரும் இல்ல. அவளோட விருப்பம் கேட்டுட்டு உங்ககிட்ட சொல்ல நினைச்சேன், அவளும் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாள்” உண்மை முழுவதையும் மனதோடு மறைத்துவிட்டு, மேலோட்டமாக விஷயத்தைக் கூறினான் யாதவ்.

அவன் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த மீனலோட்சனி, “நீ யாரை சொல்ற?” சந்தேகமாகக் கேட்டு வைத்தார்.

“நம்ம நிறுவனத்தை விலைக்கு வாங்கினாளே மதுர யாழினி! அவளைத்தான் அம்மா உயிராக காதலிக்கிறேன்” என்று சொல்ல, மீனாவின் முகம் இறுகியது.

தன் மகனைத் திருமணம் செய்ய அவர் சம்மதம் கேட்டபோது, ‘லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ ஆசை!’ அவள் அன்று சொன்னது, இன்று நினைவில் வந்து போனது.

“யாதவ் அவள் உனக்கு வேண்டாம்டா!” என்ற தாயை அதிர்வுடன் நோக்கினான்.

அவளை நினைத்து அருவருப்பில் முகம் சுளித்த மீனா, “அமெரிக்கா மண்ணில் பிறந்தவளுக்கு, இந்திய கலாச்சாரத்தின் மீது ஈர்ப்பு வரலாம். ஆனால் கடைசிவரை ஒருவனுக்கு ஒருத்தியாக அவளால் வாழ முடியாது. இன்னும் சொல்ல போனால்…” அவர் இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருப்பாரோ?!

தன்னவளின் தங்கமான குணத்தை தாய் தவறாக பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், “அம்மா நிறுத்துங்க” வீடே அதிரும்படி கத்தியிருந்தான் யாதவ். இம்முறை அவனை அதிர்வுடன் பார்ப்பது மீனாவின் முறையாயிற்று!

“அம்மா அவளைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அன்னைக்கு கல்யாண மண்டபத்தில் அவள் பேசியதை வைத்து, அவளோட கேரக்டரை தப்பாக கணிச்சிருக்கீங்க. என்னோட இனியா அப்படிப்பட்டவள் கிடையாது” அதை சொல்லும்போது மகனின் முகத்தில் இருந்த உறுதி மீனாவைத் திகைப்பில் ஆழ்த்தியது.

தன் தாயை நேருக்கு நேராக பார்த்த யாதவ், “அவளோட வாக்கியத்தில் பிழை இல்ல, உங்க மகனோட புத்தியில் தான் கோளாறு போதுமா! ஒருவர் ஓரிடத்தில் பேசவதை வைத்து, அவங்களைத் தவறாக எடை போடுவதுதானே மனிதனோட இயல்பு. அதுக்கு நீங்க ஒன்றும் விதிவிலக்கு இல்லையே!” என்றவன் வெறுப்புடன் பார்வையைத் திருப்பினான்.

“யாதவ் நீ என்ன சொல்ற?” மீனா புரியாத பார்வை பார்த்து வைத்தார்.

தன் தாயின் கண்களை நேராக சந்திக்க முடியாமல், “உங்களிடம் விளக்கம் கொடுக்க முடியாதும்மா. நீங்க நினைக்கிற மாதிரி அவள் ஆம்பளை தேடும் வர்க்கம் இல்ல. ஒரு முறை கைக்கு கிடைத்த போக்கிஷத்தின் மதிப்பு தெரியாமல் தொலைச்சிட்டேன். இன்னொரு முறை அவளை இழக்க முடியாதும்மா” யாதவ் விழிகள் ஏனோ கலங்கியது.

காதல் தோல்வியைக்கூட கடந்து வர முடிந்த ஆண்களால், ஒரு பெண்ணின் உண்மையான காதலை இழக்க முடிவதில்லை. ஆணென்ற கர்வமின்றி கண்ணீர்விட வைக்க, ஒரு பெண்ணின் காதல் மட்டுமே முடியும்.

தன் மகனின் கண்ணீருக்கு பின்னோடு இருப்பது மதுர யாழினி என்று அறிந்த மீனாவோ,“எனக்கு சம்மதம்!” என்றார்.

தன் தாயுடன் முறைப்படி யாழினியைப் பெண்கேட்டு செல்ல, சிவசந்திரன் – வைஜெயந்திக்கு அளவற்ற மகிழ்ச்சி. அன்றே நிச்சயதார்த்தம் முடிய, அடுத்து வந்த சுபதினத்தில் இருவருக்கும் சிம்பிளாக கோவிலில் திருமணம் என்று முடிவானது!

Leave a Reply

error: Content is protected !!