Rose – 20

images - 2022-12-21T003333.701-9280385f

அத்தியாயம் – 20

இரு வீட்டினரும் கல்யாண வேலையைக் கவனிக்க நேரம் சரியாக இருந்தது. அவர்களின் திருமணத்திற்கு ஜவுளி எடுக்கவும், பத்திரிகை அடிக்கவும் ஊரை அழைக்கவும் நாட்கள் பறந்தது. தன் சம்மதத்தை சொன்னதோடு யாழினி மௌனமாகிவிட, ஒவ்வொரு விஷயத்திலும் தனி கவனம் செலுத்தினான் யாதவ்.

மயில் கழுத்து நிறத்தில் சேலையைத் தேர்வு செய்து, நந்தவனத்தில் கண்ணன் – ராதை ஜோடியாக நிற்பதைப்போல் ஓவியத்தை தேர்வு செய்து, இரு இதயங்கள் இணையும் இடத்தில் யாதவ் கிருஷ்ணா வேட்ஸ் மதுர யாழினி என்ற பெயர் வரும்படி திருமணப் பட்டுப்புடவையைப் பிரத்யோகமாக நெய்ய சொன்னான்.

தனக்கு திருமணம் முடிவானதும் ராம்குமாரின் வீட்டில் சென்று தங்கிவிட்டாள் யாழினி. அவளுக்கு தேவையான அனைத்தையும் சிவசந்திரன் – வைஜெயந்தியும் கவனமாக செய்ய, ராம்குமார் மற்ற வேலைகளைக் கவனித்தான்.

அவள் எதிர்பார்த்து போலவே திருமண வேலை வேகமாக நடக்க, மீனாலோட்சனி இயல்பாக அவளிடம் பேசவில்லை. அவரின் பார்வையை வைத்தே மனதைப் படித்த யாழினி, சிறு புன்னகையுடன் அவரைக் கடந்துவரப் பழகிக் கொண்டாள்.

திருமணத்திற்கு முதல்நாள் பியூட்டி பார்லரில் இருந்து வந்த பெண்மணி யாழினிக்கு மெகந்தி வைக்க, “யாதவ் உன்மேல் வைத்திருக்கும் காதலை, மருதாணி சிவப்பதை வைத்தே கண்டுபிடித்து விடலாம்” என்றார் வைஜெயந்தி.

“இயற்கையாகவே மருதாணி சிவக்கும் பொருள். என் கை மருதாணி சிவந்தால், அவர் காதல் உண்மையாகிடுமா?” அவளின் உதடுகள் இகழ்ச்சியாக வளைந்தது.

“உன்மேல் அன்பு இல்லாமல்தான், ராமிடம் விஷயத்தை சொல்லி உன்னை திருமணம் செய்ய கேட்டனா?” சிவசந்திரன் குறும்புடன் புன்னகைக்க, அவளின் விழிகள் வலியைப் பிரதிபலித்தது. சிலநொடிகள் அவளது முகத்தில் தோன்றி மறைந்த கருமையை மற்றவர்கள் கவனிக்க தவறினர்.

இருளாக இருந்த வானில் ஐந்தாம் பிறை பூரண ஒளிவீசியது. வைகறை நேரம் நெருங்கும் வேலையில் மெல்ல வெளிச்சம் பரவியது. இன்னிசை கீதம் வாசித்த பறவைகள் கூட்டைவிட்டுப் பறந்து சென்றது. அவர்களின் மணநாள் இனிதாக விடிந்தது!

காலை பிரம்ம முகூர்த்ததில் பட்டுவேட்டி சட்டையில் யாதவ் கிருஷ்ணா மணவறையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை நிறைவுடன் சொன்னான். இரு வீட்டினருடன் பழகியவர்கள், சொந்த பந்தங்கள் என அளவாக அழைக்கப்பட்டிருந்தனர்.

கொஞ்ச நேரத்தில் மணமகளை அழைக்க, யாதவ் நிமிர்ந்து அவள் வரும் திசையை நோக்கினான். அவன் தேர்வு செய்த பட்டுப்புடவையில் அளவான அலங்காரத்தில் தோழியர் புடைசூழ நடந்து வந்தாள் மதுர யாழினி.

வானத்து தேவதை தரையிறங்கி வந்ததுவிட்டதோ என ஊர்மக்கள் ஆச்சரியத்தில் இருக்க, யாதவ் கிருஷ்ணாவின் அருகே அவளை அமர வைத்தனர். இருவரின் ஜோடிபொருத்தமும் கண்டு மூக்கில் விரல் வைக்காத ஆட்களே இல்லை.

ஐயர் பொன் தாலியை யாதவ் கையில் கொடுக்க, அந்த மங்கள நாணை யாழினியின் கழுத்தில் கட்டினான். அந்த நிமிடம் அவளையும் அறியாமல் விழிகள் கலங்கிட, தன் பெருவிரல் கொண்டு துடைத்துவிட்ட கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் விழிமூடி திறந்து, ‘உனக்காக நான் இருக்கிறேன்!’ விழியசைவில் அவளுக்கு உணர்த்துவிட்டு, தன்னில் சரிபாதியான அவளின் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்தான். அந்த நொடி அவளின் உடலெங்கும் ஒருவிதமான சிலிர்ப்பு ஓடி மறைந்தது.

அதே சமயம், சிவசந்திரன் – வைஜெயந்தி மற்றும் ராம்குமாரின் விழிகளில் ஆனந்த கண்ணீர். எங்கோ பிறந்து வளர்ந்த பெண்ணை, இதோ இன்று நல்லவனின் கையில் பிடித்துகொடுத்த நிறைவு அவர்களின் கண்ணில் தெரிந்தது.

ஆனந்தன் – சௌந்தர்யா இருவரும் மணமக்களை நிறைவுடன் வாழ்த்திட, மகன் செய்த தவறை அவனே சரி செய்வது தெரியாமல், யாழினி மீது கோபமாக இருந்தார் மீனலோட்சனி. அனைத்து சடங்குகளும் இனிதாக முடிய, மணமக்கள் வீடு வந்து சேர்ந்தனர். அவர்களை வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுக்கப்பட்டு, முறைப்படி வீட்டிற்குள் நுழைந்தாள்.

தன் வாழ்க்கையில் இப்படியொரு நாள் வரப்போவதில்லை என்ற எண்ணத்தைப் பொய்யாக்கி, அவளின் கண்முன்னே அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. அவளை பூஜை அறைக்கு அழைத்துச் சென்ற மீனா, “விளக்கு ஏற்று!” என்றார்.

அத்தனை பேர் சுற்றியிருந்த போதும், அவளின் மனம் தனிமையை உணர்ந்தது. இந்த வாழ்வு நிலைக்குமா என்ற பயம் நெஞ்சினில் எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. யாழினியின் கலக்கத்தை அவளின் முகம் காட்டிக் கொடுக்க, அவளின் கையைப் பிடித்து அழுத்தினான்.

அவனது ஸ்பரிசத்தில் புது தைரியம் கிடைக்கவே, “சரிங்க அத்தை!” என்று விளக்கேற்ற, மீனாவின் முகம் மெல்ல இறுகியது.  தன்னருகே நின்ற கணவனை அவள் கேள்வியாக நோக்கிட, அவனோ முழு மனதுடன் பெரியவர்கள் சொல்வதை செய்தான்.

அதுவரை இளகியிருந்த அவளின் மனமோ, ‘இவனை நம்பாதே!’ அறிவுரை வழங்கவே, அவனது செயல்கள் வெறுப்பைப் பரிசளித்தது. தன் மனம் எதை எதிர்பார்த்து இந்த பந்தத்திற்குள் நுழைந்தது என்று புரியாத நிலையில் இருந்தாள் யாழினி!

பால் மற்றும் பழம் தந்துவிட்டு வந்த உறவினர்கள் சொல்லிவிட்டுச் செல்ல, “யாழினி மாதிரி ஒரு தங்கமான பெண்ணைப் பார்க்கவே முடியாது. அமெரிக்கா மண்ணில் பிறந்தாலும், அவள் விரும்பியது இந்திய கலாச்சாரத்தை தான். உனக்கு ஒரு பெண் இல்லை என்ற குறையே வராமல் பார்த்துக்குவா” வைஜெயந்தி மீனாவிடம் பெருமையாக கூறினார்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல யாழினி சொன்ன சொல், அவரின் மனதில் ஆழமாக பதிந்து போனது. அவளின் மீது நம்பிக்கை ஏற்பட மறுத்ததால், வெறும் புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார் மீனா.

“உண்மைதான் ஆன்ட்டி! திருமணமே வேண்டாமென்று சொன்ன மதுரா, யாதவ் மாப்பிள்ளை என்று சொன்னதும் சரின்னு சம்மதம் சொன்னாள். இருவரின் ஜோடி பொருத்தம் பார்த்து ஊரே வியந்தனர். நீங்க இருவருக்கும் சுத்திப் போடுங்க” – ராம்குமார்.

தன் நண்பன் பேசியதைக்கேட்டு யாதவ் சிரிக்க, “ஏற்கனவே தாய் இழந்து, தந்தையின் அரவணைப்பும் இல்லாமல் வளர்ந்த பெண். அவளாக ஏதாவது தவறு செய்தால் தயவுசெய்து மன்னித்துவிடுங்க. மத்த பெண்கள்போல அடம்பிடிக்க மாட்டாள், இருமுறை பொறுமையாக எடுத்துச் சொன்னாள் புரிஞ்சிக்குவா!” – யாழினியின் குணத்தைப் பற்றி சிவசந்திரன் கூற, மீனா பதிலேதும் சொல்லவில்லை.

தாயின் நடவடிக்கைகளைக் கவனித்த யாதவ் தான், “நீங்க யாழினி பற்றி பயப்படவே வேண்டாம். நான் அவளைப் பத்திரமாக பார்த்துக்கிறேன்”  உறுதி கொடுத்த பிறகே, மூவரும் வீட்டிற்குச் சென்றனர்.

அவள் என் உயிர் என்று யாதவ் சொன்ன ஒரே காரணத்திற்காக மட்டுமே யாழினியைத் திருமணம் செய்ய சம்மதித்தார் மீனா. ராம்குமார் முறைப்படி அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு வர, யாழினி கையில் பால் செம்பு கொடுத்து அறைக்கு அனுப்பினர்.

முதலிரவு அறைக்குள் நுழையும்போது நிகழும் படபடப்பு ஏற்பட, தன் மனதை சமன்செய்த யாழினி அறையின் கதவைத் திறந்து  உள்ளே நுழைந்தாள். படுக்கையறை எந்தவிதமான அலங்காரமும் இல்லாமல் இருக்க, ஏனோ நிம்மதி பெருமூச்சுடன் நிமிர்ந்தாள்.

தன் அறையின் கதவைத் தாழிட்டு திரும்பிய யாதவ், “வெல்கம்! உன் மனநிலை எனக்கு புரியுது. நமக்கு எப்போ ஃலைப் ஸ்டார்ட் செய்ய தோணுதோ, அப்போ!” என்றவனைக் கையமர்த்தி தடுத்தாள் யாழினி.

அவன் கேள்வியாக நோக்கிட, “சும்மா நல்லவன் வேஷம் போடதே! அதை என்னால் சகிச்சுக்க முடியல. நம்ம கேட்டவுடன் கல்யாணத்திற்கு சம்மதித்தவள், இப்போது சம்மந்தமே இல்லாமல் பேசறாளே என்று யோசிக்காதே! அதுக்கு விளக்கம் நான் தர்றேன்” அவனின் நேர்கொண்ட பார்வையுடன் அவனை எதிர்கொண்டாள்.

“அமெரிக்கா மண்ணில் பிறந்து வளர்ந்தாலும், எனக்கு இந்திய கலாச்சாரம் மீது ஈர்ப்பு வர காரணம் என்னோட பேரன்ட்ஸ் அப்புறம் நீ! ஆனால் என் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிய உன்னிடம் வாழ்க்கை கொடுன்னு கேட்டு என்னைக்குமே வந்து நிற்க மாட்டேன்னு உனக்கு நல்லாவே தெரியும்” அவள் ஏற்றயிறக்கத்துடன் சொல்ல, யாதவ் மெளனமாக நின்றிருந்தான்.

“இதுக்கு நான் வளர்ந்த நாடும் ஒரு காரணம். அங்கே ஆண் – பெண் இருவருமே யாரையும் சார்ந்து இருக்கக்கூடாதுன்னு பதினைந்து வயதிலேயே கைடு பண்ணிடுவாங்க” இடைவெளிவிட, அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் நெஞ்சைக் குத்திக் கிழித்தது.

அவன் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை உன்னிப்பாக கவனித்த யாழினி, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியும். அதை உன் கண்முன்னாடியே செய்தும் காட்டிட்டேன். அன்னைக்கு என் மனசில் இருந்த காதலைக் கொன்ற பாவத்திற்கு தான், இன்னைக்கு காதல் உன் மனசில் விதையாக விழுந்து விருச்சமாக வளர்ந்து நிற்குது” என்றாள்.

யாதவ் பதில் பேச முடியாமல் இறுகிப்போய் நின்றிருக்க, “அந்த காதல் தான் என்னை இழக்க முடியாதுன்னு சொல்லுது. அதன் வெளிப்பாடுதான் இந்த கல்யாணம். என் கணக்கு சரியா?!” அவள் சந்தேகமாகப் புருவம் உயர்த்தினாள்.

அவளது மனக்கணக்கு அனைத்தும் சரியாக இருப்பதைக் கண்டவன், ‘இவளோ தூரம் கணித்திருக்கிறாளே!’ அவன் மனதிற்குள் வியக்க, அவள் உதடுகளில் கசந்த புன்னகை தோன்றி மறைந்தது.

“உன்னோடு ஈருடல் ஒருயிராய் வாழ்ந்த எனக்கு தெரியாதா? ஆனால் என் மனசில் அந்த பழைய காதல் செத்துப் போச்சு. நீ என் வாழ்க்கையை அழிச்சிட்டு, இன்னொரு பெண்ணோடு வாழ்ந்திருந்தாலும் பெரிசாக கவலைப்பட மாட்டேன்” இடைவெளிவிட, சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“அப்புறம் எதுக்கு திருமணத்திற்கு சம்மதம் சொன்னே” என்றான் எரிச்சலோடு.

“இருங்க அதுக்குதான் வந்துட்டு இருக்கேன்” தொடர்ந்து,

“நான் நினைச்சிருந்தால் உன் வாழ்க்கையை இல்லாமல் செய்ய இரண்டு நொடி போதும்டா. உன்னை அமெரிக்காவில் இருந்து இந்தியா பக்கம் வரவிடாமல் செய்திருக்க என்னால் முடியும். அன்றைய நிலையில் என் காதல் அதை செய்ய விடல” என்றவளின் குரல் லேசாகக் கரகரத்தது.

தன்னை சமன் செய்ய விழியை மூடிதிருந்து, “இன்னைக்கும் எனக்கு நீ தேவை இல்லைதான். அமெரிக்காவாக இருந்திருந்தால் உன்னை ஏறெடுத்துக்கூட பார்த்திருக்க மாட்டேன். ஆனால் இந்த ஊரில் கலாச்சாரம் இருக்கே! நீ லிவ்விங் டூ கெதர் லைப் வாழ வந்து, என் வாழ்க்கையை வீணடிச்சிட்டேன்னு சொன்னாலும், ஊசி இடம் தராமல் நூல் எப்படி நுழையும்னு கேட்பாங்களே” என்றவளின் விழிகள் கோபம் மட்டுமே!

அவனை நேருக்கு நேராக பார்த்து, “யாரிடம் நடந்ததை சொல்லாமல் போனாலும், மனசாட்சி என்னை கேள்வி கேட்குதே! உன்னிடம் நானாக வாழ்க்கை தரச்சொல்லி கேட்கல. ஆனால் நீ தரப்போகும் தாலியும், மனைவி என்ற அந்தஸ்தும் தானே, இந்த சமூகத்தில் எனக்கு மதிப்பை தரும். அதுக்காக மட்டும்தான் இந்த கல்யாணத்திற்கு சம்மதிச்சேன்!” அவள் கூறிய வார்த்தை அவன் மனதை சுக்குநூறாக உடைத்தது.

அவனறிந்த யாழினிக்கு அன்பை வெளிப்படுத்த மட்டுமே தெரியும். தன் கண்முன்னே நிற்கும் பெண்ணின் புதிய பரிமாணம் கண்டு யாதவ் வாயடைத்துப்போய் நின்றிருக்க, அவன் முகத்திற்கு நேராக சொடக்குப் போட்டாள்.

அவன் திகைத்து விழிக்க, “அந்த ரூம் சாவியைக் கொடு!” பக்கத்தில் இருந்த அறைகதவைக் கைகாட்டி கேட்டாள்.

யாதவ் அறை முற்றிலும் பெரியது. யாதவ் அதை பெரிய கிளாஸ் ரூம் போல இருப்பதாக தந்தையிடம் கூறவே, அந்த அறையை இரண்டாகப் பிரிக்கும் விதமாக சுவர் எழுப்பிய கோகுல், அந்த அறைக்குச் செல்ல கதவையும் வைத்தார்.

மற்றொரு அறைக்குள் பாத்ரூம் முதற்கொண்டு சகல வசதியும் இருந்தது.  ஆனால் வெளியே செல்ல வேறு பாதை கிடையாது. மீண்டும் இந்த அறைக்கே வந்துதான் ஆகவேண்டும். அந்த ஒரு காரணத்திற்காகவே அவள் கேட்டதும் மறுப்பு சொல்லாமல் சாவியை எடுத்து நீட்டினான்.

அதைக் கையில் வாங்கிய யாழினி, “இன்றிலிருந்து அது என்னோட ரூம். அதுக்குள் நீ வரவே கூடாது. அப்புறம் என்னோட திங்க்ஸ் எல்லாமே அங்கே இருப்பதால், நான் ரூமை பூட்டி சாவியை எடுத்துட்டு போயிடுவேன்” என்றாள்.

“நான் இல்லாத நேரத்தில் கதவை உடைக்கவோ,  தாழ்பாழைக் கழட்டு வைக்கும் வேலையெல்லாம் வேண்டாம்.  உங்க அம்மா முன்னாடி சந்தோசமாக இருப்பதாக சீன் கிரியேட் செய்ய நினைச்சு கை வச்சே, அப்புறம் நடக்கறதே வேற” அவனுக்கு கட்டளையிட்ட யாழினி அந்த அறையின் கதவைத் திறந்து உள்ளே என்று பூட்டிவிட்டாள்.

அந்த கதவைப் பார்த்து பெருமூச்சு விட்ட யாதவ், “இனியா உன்னிடம் இப்படியொரு மாற்றத்தை எதிர்பார்க்கல. உப்பு தின்றவன் தண்ணீர் குடிச்சே ஆகணும். என் காதல் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. சீக்கிரமே நீ மனசு மாறுவே” படுக்கையில் சரிந்து விழிமூட, உறக்கம் அவனிடம் கண்ணாமூச்சி காட்டியது.

இரவு வெகுநேரம் விழித்திருந்த யாதவ் விடிந்தபிறகு நன்றாக உறங்கிவிட, காலையில் எழுந்து குளித்து உடை மாறிவிட்டு அறையின் கதவைத் திறந்தாள். தன் கணவன் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதைக் கண்டவளின் விழிகள் அவனை ரசித்தது.

சட்டென்று தலையை உதறிவிட்டு தன்னிலைக்கு மீண்ட யாழினி, “இவனோட சுயரூபம் தெரிந்தும், மயங்காதே என் மனமே! அவன் நல்லவன் இல்லை” மனதிற்கு கடிவாளமிட நினைத்து கூற, “ரொம்ப நன்றி!” என்றான் யாதவ்.

யாழினி அதிர்வுடன் அவனைத் திரும்பிப் பார்க்க, “நீ மனசுக்குள் பேசுவதாக நினைத்து வாய்விட்டு பேசிட்டு இருக்கிற இனியா. உன்னோட கோபம் நியாயமானது தான்” என்ற கணவனை அவள் எரிச்சலோடு நோக்கினாள்.

“நீ என்னை வெறுத்து ஒதுக்கும்போது, உன்மேல் உள்ள காதல் இன்னும் அதிகமாகுது இனியா. ஐ லவ் யூ! அப்புறம் இந்த சமூகம், அந்தஸ்து பற்றி பேசின இல்ல” என்றவன் நெற்றியை வருடிவிட்டு, இரண்டே எட்டில் அவளை நெருங்கினான்.

சட்டென்று சுயநினைவு வரப்பெற்ற யாழினி பின்னோக்கி நகர, “உன் அனுமதி இல்லாமல் தொட மாட்டேன்” என்றவன் பார்வை அவளின் கழுத்தில் இருந்த ஹார்ட் செப் லாக்கெட்,  நித்தியக்கல்யாணி பூப்போல விரிந்திருந்தது.

யாதவ் – யாழினி இருவரும் இணைந்திருந்த நான்கு புகைப்படம் இருக்க, “நான் லிவ்விங் ரிலேஷன்ஷிப் வாழ தான், அமெரிக்கா வந்தேன். இதை என்னைக்கு உன் கழுத்தில் அணிவித்தேனோ, அன்னைக்கே நீ என் மனைவி ஆகிட்டே! என் மனைவியிடம் நான் உரிமை எடுத்துக்க யாரிடமும் பர்மிசன் கேட்க தேவையில்லை” என்றவன் அந்த லாக்கெட்டை மூடிவிட்டு, அவளைவிட்டு விலகி நின்றான்.

“உனக்கு மஞ்சள் கயிறு மீது நம்பிக்கை, எனக்கு இந்த லாக்கெட் மீது நம்பிக்கை. அவ்வளவு தான் வித்தியாசம்! இன்று வரை இந்த லாக்கெட்டை நீ போட்டு இருக்கிறன்னா, உன் மனசில் ஒரு ஓரத்தில் நான் இருக்கேன்னு தானே அர்த்தம்! தேங்க்ஸ் பேபி!” என்றவன் டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் சென்றான்.