Rose – 4

0b919940aa3aba79dd3825952abdb2f5-6b7436eb

அத்தியாயம் – 4

கீர்த்தனாவின் திருமண நாளும் இனிதாகவே விடிந்தது.

அந்த பிரமாண்டமான மண்டபத்தின் மணவறையில் மாப்பிள்ளையாக வீற்றிருந்த அரவிந்தன், ஐயர் சொல்லும் மந்திரங்களை திரும்ப சொன்னான். இரு வீட்டினரின் சொந்தபந்தங்களும் மண்டபத்தில் கூடியிருக்க, மணப்பெண் அலங்காரத்தில் மேடை ஏறினாள் கீர்த்தனா.

அவளை அரவிந்தனின் பக்கம் அமரவைக்க, இருவரின் ஜோடிப் பொருத்தம் பார்த்து வியந்தனர். முதல் வரிசையில் அமர்ந்திருந்த மதுரயாழினியோ செல்போனின் உதவியுடன் திருமண சடங்குகளின் பின்னோடு அர்த்தங்களை புரிந்து கொண்டாள்.

இந்தியாவில் திருமணம் இப்படித்தான் நடக்கும் என்று ஏற்கனவே ராம்குமார் சொல்லி அறிந்திருந்தாலும், இன்று அதை நேரில் காணும்போது உள்ளம் சந்தோசத்தில் துள்ளியது.

தன்னருகே யாரோ வந்து அமரும் ஆராவாரம்கேட்டு திரும்பிப் பார்க்க, மீனலோட்சனியைப் பார்த்தும் விழிகளிரண்டும் வியப்பில் விரிய, “மேடம் நீங்க இங்கே எப்படி?” என்றாள் யாழினி.

வாடாமல்லி நிற பட்டுச்சேலையைப் பந்தமாக உடுத்திக்கொண்டு, கம்பீரமாக அமர்ந்திருந்தவளின் நிமிர்வு மனத்தைக் கவர்ந்தது. அத்துடன் நீளமான கருங்கூந்தலை பின்னலிட்டு மல்லிகைப் பூவைச் சூடி, நெற்றியில் வட்ட பொட்டு வைத்து, காதில் ஜிமிக்கி அணிந்து, மூக்குத்தி மின்ன அளவான ஒப்பனையில் தேவதைபோல காட்சியளித்த பெண்ணை பார்த்து இமைக்க மறந்தார்.

அவள் முகத்திற்கு நேராக கையை அசைக்க சட்டென்று தன்னிலைக்கு மீண்ட மீனாவோ, “நீ இங்கே என்னம்மா செய்யற?” அவள் கேட்ட கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கேட்டார்.

“அமெரிக்காவில் எங்க குடும்பமும், ராம் அண்ணாவின் குடும்பமும் பக்கத்திலேயே இருந்தோம். அவங்க குடும்பம் தான் எனக்கு தமிழ் சொல்லி தந்தாங்க. இந்தியா கலாச்சாரமும் அவங்களால் அறிந்ததுதான். இப்போ கீர்த்தனா கல்யாணத்திற்காக தான் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கேன்” இயல்பான புன்னகையுடன் சரளமாகப் பேசினாள்.

ஏனோ அவளைப் பார்க்கும்போது, அவரின் மனதில் இனம்புரியாத உணர்வு எழுந்தது. அதற்கான காரணம் என்னவென்று அவர் யோசிக்க, மிக அருகில் இருந்த மீனாவின் முகசாயல் யாழினியின் சிந்தனையைத் தூண்டிவிட்டது.

இருவரின் எண்ணவோட்டத்தைத் தடுக்கும் விதமாக, “அம்மா வாங்க…” என்ற அழைப்புடன் அங்கே வந்தான் ராம்குமார்.

பட்டுவேட்டி சட்டையில் நின்றவனைக் கண்டவுடன், “தங்கை திருமணம் என்றதும் உன்னைக் கையிலேயே பிடிக்க முடியல!” என்றார் மீனா புன்சிரிப்புடன்.

மீனாவின் வார்த்தைகளில் தெரிந்த கனிவு மனதிற்கு நிம்மதியைக் கொடுக்க, “பின்னே சந்தோசம் இல்லாமல் எப்படி இருக்கும். என்னையே கிண்டல் பண்றீங்க… கொஞ்சம் அங்கே பாருங்க, உங்க மகனை!” அவன் கைகாட்டிய திசையில் யாதவ் கிருஷ்ணா பம்பரமாகச் சுழன்றான்.

மற்றவர்களை வரவேற்று உபசரிப்பதைக் கண்டு, அவரின் மனம் நிறைந்துபோக, “கீர்த்தனாவுக்கு ரெண்டு அண்ணா!” மகனின் மீது பார்வையைப் பதித்தபடி.

ராம், ‘உங்க மகன்’ என்று கைகாட்டிய திசையில் பார்வையைச் செலுத்திய யாழினிக்கு கோபம் தலைக்கேறியது. பெற்ற தாய் உயிருடன் இருக்கும் போதே, அதை மறைத்து பொய் சொன்னவனை என்ன செய்தால் தகும் என்ற ரீதியில் பார்த்தாள்.

‘அத்தனை உண்மைகளையும் மறைத்து அடுக்கடுக்காகப் பொய் சொல்லி, ச்சே நினைக்கவே அருவருப்பாக இருக்கு…’ அவனின் மீதான வெறுப்பு பன்மடங்காகப் பெருகியது.

அவளது சிந்தனையோட்டத்தை உணராமல், “அப்புறம் அம்மா இவ என்னோட இன்னொரு தங்கை மதுரயாழினி” மீனாவிற்கு அவளை அறிமுகப்படுத்தினான் ராம்.

அதற்குள், “ராம் இங்கே ஒரு நிமிஷம் வாப்பா” சிவசந்திரன் அழைக்க, “ஒரு நிமிஷமா இதோ வர்றேன்” மீனாவிடம் சொல்லிவிட்டு அவசரமாக அங்கிருந்து நகர்ந்தான்.

யாதவ் செய்த தவறுக்கு அவரை உண்டில்லை என்று ஆக்கிவிடும் நோக்கத்துடன் அவரின் பக்கம் திரும்ப, ‘அவன் செய்த தவறுக்கு இவரை தண்டித்து என்ன பயன்?!’ அவளின் மனம் நியாயமான கேள்வியைக் கேட்டது.

“என்னைப் பற்றி உனக்கு அவ்வளவு தெரியாது இல்ல. எங்களுக்கு ஊட்டிதான் பூர்வீகம். கோகுலம் எஸ்டேட் என்று சொன்னால், இந்த ஊருக்குள் தெரியாத ஆட்களே இருக்க முடியாது” அதை சொல்லும்போது அவரின் குரலில் இருந்த கர்வத்தைக் கண்டு வியந்தாள் யாழினி.

கொஞ்சம் இடைவெளிவிட்ட மீனலோட்சனி, “அங்கே ராமிற்கு பக்கத்தில் நிற்பது என் மகன் யாதவ் கிருஷ்ணா, இருதய நிபுணராக இருக்கான்” அவர் யாரிடமோ பேசுவதாக நினைத்தவளின் கவனம் முழுவதும் மனமேடையின் மீதே இருந்தது.

யாழினியிடம் இயல்பாகப் பேசும் தாயைப் பார்த்த யாதவின் புருவங்கள் மேலேறியது. இதழ்களில் புன்னகை அரும்ப வீற்றிருந்த காதலியின் மீதிருந்து பார்வை அகற்ற முடியாமல் திண்டாடினான் யாதவ். அவளின் அருகாமை வேண்டுமென்று குழந்தையாக மனம் அடம்பிடிக்க, இரண்டே எட்டில் அவளை நெருங்கினான்.

யாதவின் நல்ல நேரமோ இல்லை யாழினியின் கெட்ட நேரமோ தெரியவில்லை. அவளின் இடதுபுறம் ஒரு இருக்கை காலியாக இருக்க, “காலையில் இருந்து ஓடியோடி காலெல்லாம் வலிக்குது” என்றபடி அவளின் அருகே அமர்ந்தான்.

அவன் குரல்கேட்டு திரும்பிய யாழினி வியப்புடன் இடது புருவத்தை உயர்த்திவிட்டு, மீண்டும் தன் கவனத்தை மேடையின் பக்கம் திருப்பிவிட்டாள். அவனை முன்னே பின்னே  பார்த்தே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு இருந்தது அவளின் செய்கை!

யாதவின் மீது பார்வையைப் பதித்திருந்த மீனலோட்சனி, “யாழினி இப்படி கேட்கிறேன்னு தப்பாக நினைக்காதே!” பீடிகையுடன் தொடங்கிய தாயின் குரலில் இருந்த மாற்றம் அவனை சிந்திக்க வைத்தது.

“உன்னைப் பார்த்தும் எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. என் மகனை நீ கல்யாணம் செய்து கொள்கிறாயா?” தன் மனதில் தோன்றிய விஷயத்தை நேரடியாகக் கேட்டுவிட, யாழினிக்கு ஜிவ்வென்று கோபம் தலைக்கேறியது.

தன் வெறுப்பை வெளிப்படையாக காட்ட முடியாமல் அவள் மெளனமாக இருக்க, “அம்மா” அதட்டிய மகனின் குரலில் சட்டென்று சுதாரித்தார் மீனா.

“ஏய் நான் என் மனசில்பட்ட விஷயத்தை யாழினியிடம் கேட்டேன், நீ ஏன் காரணமே இல்லாமல் என்னை அதட்டற?” மீனாவின் பார்வை இப்போது யாழினியின் மீதே நிலைத்தது.

அதுவரை இருந்த பொறுமைக் காற்றில் பறக்கவிட்ட யாழினி, “ஸாரி! எனக்கு இந்த காதல், கல்யாணம் மீதெல்லாம் நம்பிக்கையே இல்ல. பிடிக்கும் வரை சேர்ந்து வாழ்வது, பிடிக்கலன்னா குட்பாய் சொல்லி விலகிப் போகும் லிவ்விங் டூ கெதர் ஃலைப் தான் எனக்கு பிடிக்கும்” சாந்தமான முகத்துடன், இதழ்களில் புன்னகையைத் தவழ கூறினாள்.

அதைக்கேட்டு மீனாவின் முகத்தில் அருவருப்பில் முகம் சுளிக்க, ‘இவரின் மனதில் தரம் தாழ்ந்து போகிறேனே…’ பெருமூச்சுடன் நினைத்தவளின் கவனம் மேடையின் பக்கம் திரும்பியது. தன் சொன்ன வார்த்தைகளை ஒரு வரி மாற்றாமல் திரும்ப படித்தவளைக் கண்டு அதிர்ந்துப் போனான் யாதவ்.

தன் மகனின் முகத்தில் வந்துபோன உணர்வைக் கவனிக்க தவறிய மீனாவோ, “இந்திய கலாச்சாரம் மீது கொண்ட ஈடுபாட்டினால், தமிழ் கற்றுக் கொண்டதாக சொன்னே! இப்போ இப்படி மாத்திப் பேசறீயே…” அவளை ஆழம் பார்த்தார்.

“நீங்க சொல்வது உண்மைத்தான். அதுக்காக, கணவனே கண்கண்ட தெய்வம்னு, காலம் முழுக்க அவனுக்கு பணிவிடைகள் செய்து வாழ என்னால் முடியாது. அதனால்தான் அப்படிச் சொன்னேன்” சிரித்தபடி விளக்கம் கொடுக்க, யாதவ் முகம் சட்டென்று மாறியது.

இரண்டு நாட்களாக அவனின் மனதை அழுத்திய பாரம் காணாமல் போனது. ஆம் அவள் தன்னிடம் நடிக்கிறாள் என்ற விஷயத்தை அவளின் பதிலில் இருந்தே உணர்ந்த யாதவ், “அவங்களுக்கு ஏன் தேவை இல்லாமல் விளக்கம் கொடுக்கிற?” அடிக்குரலில் அவளிடம் சீற, சட்டென்று திரும்பி அவனைக் கேள்வியாக நோக்கினாள்.

கொஞ்சம் தெளிந்த அவனைக் குழப்பிவிடும் விதமாக, “நீங்க எதுக்காக சம்மதமே இல்லாமல் ஆஜர் ஆகிறீங்க மிஸ்டர்?” யாழினி நேரடியாகக் கேட்க, சட்டென்று அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் தலையைக் குனிந்தான் யாதவ்.

மீனா இவர்களைக் கவனிக்கும் முன்பே, “கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” ஐயரின் குரல்கேட்டு அவன் நிமிர அரவிந்தன் – கீர்த்தனாவின் கழுத்தில் மங்கல நாணைக் கட்டி, நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்துவிடும் காட்சியை கண்டான்.

அந்தக்காட்சி அவனுக்குள் வலியைக் கொடுக்க, தன் உணர்வுகளை மறைக்க நினைத்த யாழினி சட்டென்று எழுந்து மண்டபத்தின் வாசலை நோக்கி நடந்தாள். அவளின் பின்னோடு செல்ல நினைத்த மகனைத் தடுத்தார் மீனாலோட்சனி.

 “இப்போ உங்களுக்கு என்ன வேணும்?” என்றான் எரிச்சலோடு.

மற்றவர்களின் கவனத்தைக் கவராத வகையில், “வா இருவரும் சாப்பிடப் போலாம்” என்று கூற, அவரின் கையைப் பட்டென்று உதறினான் யாதவ்.

“முதலில் அந்த நிறுவனத்தை வித்துட்டு வாங்க. அப்போ நீங்க சொல்லும்படி கேட்கிறேன்” கோபத்தில் வார்த்தைகளைவிட, அவனைத் தீர்க்கமாகப் பார்த்தார் மீனாலோட்சனி.

“அந்த நிறுவனத்தை விற்ற பிறகுதான், உன்னிடம் பேசிட்டு இருக்கேன் யாதவ்” மீனா சொல்ல, அதைக் காதிலேயே வாங்க யாதவ் அங்கே இல்லை. அவர் சொல்ல தொடங்கும்போதே, அவன் அங்கிருந்து சென்றிருந்தான்.

திருமண மண்டபத்தின் மாடிக்குச் சென்ற யாழினியின் பார்வை இலக்கின்றி வெறித்தன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலைகள் அரணாக அமைந்த ஊரில் தேயிலை தோட்டங்கள் பச்சை பசையேல் என காட்சியளித்தது.

வானத்தைத் தொடும் அளவிற்கு நெடு நெடுவென்று வளர்ந்திருந்த யூகலிப்டஸ் மரத்தின் இலைகளில் வந்த தைல வாசனை நாசியைத் துளைத்தது. அவள் விழிநீர் ஊற்றாக பெருக்கெடுத்து கன்னத்தில் வழிய, அதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைப்பது பெரும்பாடாக இருந்தது.

அந்த மரத்தின் கிளையின் மீது விளையாடிய அணில்களின் பக்கம் கவனம் திரும்பியது. ஒன்றையொன்று விரட்டிகொண்டு மரத்தின் கிளைகளின் மின்னல் வேகத்தில் இறங்கவும், மீண்டும் கூச்சலிட்டு ஏறுவதுமாக இருந்தது.

ஒரு அணில் மரத்தின் உச்சியை அடைந்து குரல்கொடுக்க, மற்றொரு அணில் துரத்திக் கொண்டு ஓடும் காட்சியைக் கண்டு அவளின் கவலைகள் மறந்தது. அங்குமிங்கும் ஓடும் காட்சி அவளது கவலையைப் பின்னுக்குத் தள்ளி, அவளது உதடுகளில் புன்னகை அரும்பியது.

அவன் மீது கொண்ட நேசம், உடலில் கடைசி மூச்சு உள்ளவரை அவளது இதயத்தில் நீங்கமற நிறைந்திருக்கும். அவன் ஏற்படுத்திய காயம் தான், அவளை இப்படிப் பேச வைக்கிறது. ஒரு மனம் அவளைத் தண்டிக்கச் சொல்ல, மற்றொரு மனம் அவன் மீதான காதலில் கரைந்தது.

தந்த நேசம் அறிய மறந்த நீயும்

தந்தது மொத்தம் காதலே அறியாயோ…

வேண்டும் நீ… வேண்டாம் நீ…

மனம் சண்டையிட சமரசம்

செய்கிறேன் அதையும் நானே…

என்றும் உனக்காய் பூத்திட்ட

பூவாய் நீ விரல் தீண்ட

காத்திருக்கிறேன்…

நீ தொடும் வேளையில்

முள்ளாய் மாறிப் போகிறேன்…

என் செய்வேன் நானும்…

தீர்வு சொல்வாய் என் மன்னவா…” எண்ணவோட்டத்திற்கு ஏற்றார்போல் கவிதை தோன்ற, அதை முணுமுணுத்தன உதடுகள்.

அவளின் பின்னோடு அழுத்தமான காலடியோசை கேட்டு இதயம் தடதடக்க, “யாழினி!” என்ற அழைப்புடன் வந்தான் யாதவ். தன் மனத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்த யாழினி சட்டென்று திரும்பினாள்.

யாழினியின் முகம் முகிலினம் இல்லாத வானம்போல நிர்மலமாக காட்சியளித்தது. அவளின் மனம் போலவே முகமும் இருக்க, அதிலிருந்து அவனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“அம்மாகிட்ட எதுக்காக அப்படி பேசின?” என்றான் கோபத்துடன்.

“உங்க பெயர்… ம்ம் யாதவ். உங்களுக்கு நிஜமாவே என்ன பிரச்சனை? எதுக்காக நான் போகின்ற இடத்திற்கு வந்து இப்படி இம்சை பண்றீங்க?” அவனை நேரடியாகக் கேட்க, அவனுக்கு சுர்ரென்று கோபம் வந்தது.

“யாழினி நிறுத்து உன்னோட நடிப்பை.  நீ அம்மாவிடம் பேசியதும், எனக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு” அவன் கூறவே, அவளும் அலட்சியமாக முகத்தைத் திருப்பினாள்.

“ஓ!  அவங்களை நறுக்குன்னு நாலு கேள்வி கேட்கணும்னு தொனுச்ச். நீயே என்னை வேண்டாம்னு சொன்னபிறகு, உன்னைத் தெரிந்த மாதிரி காட்டி சிம்பதி கிரியேட் பண்ணுவேன்னு எதிர்பார்த்தியா?” யாழினி அவனிடம் எரிந்து விழுக, அவனின் பொறுமைக் காற்றில் பறந்தது.

அவர்களுக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம். ஆனால் பெற்ற தாயின் முன்பு தரம் தாழ்ந்து போகும்படி பேசினாயே என்று தனக்காக சண்டையிடும் அவன் மீது காதல் பெருக்கெடுக்க, தன் உணர்வுகளை மனதோடு மறைத்தாள்.

அவனுக்கு தக்க பதிலடிக் கொடுக்க நினைத்து, “பின்னே உன்னைக் கட்டிக்க சொன்னதும், சரின்னு கோவில் மாடு மாதிரி தலையாட்டணுமா?” பதிலுக்கு அவனையே கேள்விகேட்டு திகைக்க வைத்தாள்.

யாதவ் பார்வை விழிகளின் வழியாக ஊடுருவிச் செல்ல, “எங்கம்மா விருப்பத்தைச் சொன்னால், அதை மறுக்க முடியாது என்ற வார்த்தை போதுமே!” கிடுக்குப்பிடி போட்டவனின் விழிகள் குறும்புடன் நகைத்தன.

“நீயாக எதையோ கற்பனைப் பண்ணிட்டு வந்து சும்மா உளறாதே!” அவனது பார்வையைத் தவிர்த்து வேறு திசையை நோக்கினாள் யாழினி.

“என்னைக் காயப்படுத்தி பார்க்கும் எண்ணத்தில் தான், உன்னை நீயே தரம் தாழ்த்திக்கிட்டேன்னு ஒத்துக்கோ” என்றபடி அவளது மனதைப் படிக்க முயன்றான்.

“உன்னோட கற்பனை வளம் அருமை! நல்ல காதல் கதைகள் எழுதினால், எதிர்காலத்தில் பெரிய எழுத்தாளராக வரலாம்” என்றாள் எரிச்சலோடு.

அவன் உதடுகளில் புன்னகை விரிய, “நம்ம காதல் கதையை சீக்கிரமே காவியமாக எழுத முயற்சி பண்றேன். இப்போ நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளு” என்றவனை யாழினி வெட்டும் பார்வை பார்க்க, அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான் யாதவ்.

அவன் நெருக்கம் தன்னைப் பலகீனமாக்கிவிடும் என்று உணர்ந்து, இரண்டடி பின்னே நகர்ந்தவளின் விழிகளில் தெரிந்த எச்சரிக்கை உணர்வைக் கண்டு விக்கித்துப் போய் நின்றான்.