Rose – 6

images - 2022-11-03T122812.165-f82b9722

அத்தியாயம் – 6

அன்றைய காலைப்பொழுது ரம்மியமாக விடிய, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில்லென்ற தென்றல் காற்றில் அசைந்தாடிய மரத்தின் கிளைகளில் இருந்த உதிர்ந்த பூக்களோ, பச்சைப் பசையேல் என்ற புல்வெளியின் அழகினை மெருகேற்றிக் காட்டியது.

தன் தூக்கம் மெல்ல களைய படுக்கையைவிட்டு எழுந்த யாதவ் குளியல் போட்ட கையோடு, “ஈஸ்வரி அக்கா காஃபி” குரல் கொடுத்தபடியே மாடிப்படிகளில் வேகமாக இறங்கி வந்தான்.

சமையலறையில் மகனுக்காக காஃபி போட்ட மீனா, அதை எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்கு வந்தார். வெகுநாட்களுக்கு பிறகு அன்னை சமையலறையில் இருந்து வெளியே வந்ததைக் கண்டு, “உங்களுக்கு அங்கே என்ன வேலை” என்றான் வேண்டாவெறுப்பாக.

“நீ நிறுவனத்தை விற்க சொன்னே, அதை செய்துவிட்டேன் யாதவ். அப்பா கட்டிக்காப்பத்திய தொழிலை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து, அதை இப்போ உனக்காக வித்துட்டேன். அதில் வந்த பணத்தை பேங்கில் போட்டாச்சு. கொஞ்சம் இடம் வாங்கி போட்டு இருக்கேன்” அவர் எங்கோ பார்த்தபடி கூற, அவன் முகம் சட்டென்று பிரகாசமானது.

இனி தாயைப் பிரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னுடைய தேவைகளை கவனித்துக்கொள்ள அம்மா இருக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு உற்சாகத்தைக் கொடுக்க, “தேங்க்ஸ் அம்மா” அவரின் அணைத்து சிறுபிள்ளை போல கன்னத்தில் முத்தமிட்டான்.

தன் மகனின் செயலைக் கண்டு, “டேய் என்னடா இப்படி சின்னப் பையன் மாதிரி செய்யற?! சீக்கிரமே உனக்கொரு கால் கட்டுப் போடணும்” என்ற மீனாவின் விழிகளில் கண்ணீர் உற்றேடுத்தது.

மெல்ல அவனின் கன்னம் வருடிய மீனாவோ, “என்னிடம் இயல்பாகப் பேச உனக்கு இவ்வளவு வருஷம் தேவைப்பட்டிருக்கு இல்லடா” குரல் கரகரக்க கேட்டிருந்தார்.

அவன் பதில் பேசாமல் மெளனமாக நின்றிருக்க, “சரி விடு! நடந்து முடிந்ததைப் பேசி யாருக்கு என்ன இலாபம்?” தன் மனதைத் தேற்றிக் கொடு காஃபி கப்பைத் திணித்தார்.

தன் தாயின் மன வருத்தத்தைப் போக்க நினைத்த யாதவ், “மீனும்மா ஒரு கப் டீ கிடைக்குமா?” கிண்டலாகக் கேட்க, அவனின் குறும்புத்தனம் கண்டு தோளில் செல்லமாக நான்கு அடியைப் போட்டார் மீனா.

சிறுவயதில் இருந்தே அவனுக்கு ரொம்ப பிடித்தது டீ மட்டும்தான். தன்னைவிட நிர்வாகம் தான் முக்கியம் என்ற முடிவெடுத்த நாளில் இருந்தே, தேயிலை பக்கம்கூட திரும்பிப் பார்க்க மாட்டான்.

தாயின் மீது மூண்ட கோபம் தேநீர் மீதும் திரும்பியது. அதனால் இந்நாள்வரை பிடிக்காத காஃபியை விரும்பி குடிப்பதாகக் காட்டிக் கொண்டான்.

இதை அறிந்திருந்த மீனாவோ, “இல்ல உனக்கு காஃபி ரொம்ப பிடிக்குமே! அதையே குடி!” அவர் பிடிவாதமாகக் கூற, “அம்மா ப்ளீஸ் உன் கையால் டீ போட்டுக் கொடுங்க, நான் குடிக்கிறேன்” என்றவன் அவரை சமையலறைக்கு அழைத்துச் சென்றான்.

கடைசியில் அவனின் பிடிவாதமே வெல்ல, “ஆனாலும் உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாதுடா. பாவம்  எனக்கு வரப்போகின்ற மருமகள். உன்னிடம் சிக்கிட்டு என்ன பாடுபட போகிறாளோ” என்றபடியே அவனுக்கு டீ போட்டுக் கொடுத்தார்.

“அம்மா நார்மல் மாமியார் மாதிரி வரப்போகின்ற மருமகளிடம் என்ன குத்தம் சொல்லலாம்னு யோசிங்க. நீங்களும், என் மனைவியும் போடும் சண்டையை வேடிக்கைப் பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருக்கேன் தெரியுமா?” என்ற மகனின் காதைப் பிடித்து வலிக்காமல் திருகினார்.

தன் அன்னை நிறுவனத்தை விற்றுவிட்டதாக சொன்னதுமே, அவரின் மீதான கோபம் காணாமல் போனது. இத்தனை நாளாக மனதினுள் பூட்டி வைத்திருந்த பாசத்தை இரட்டிப்பாகக் காட்டினான் மைந்தன்.

அவனது அன்பு மழையில் நனைந்த மீனாவும், “நீ நினைப்பதெல்லாம் கனவிலும் நடக்காது மகனே! என் மருமகளுக்கு நான்தான் ஃபுல் சப்போர்ட் பண்ணுவேன்” என்று கூறியவர், அவனுக்கு விருப்பமான உணவை சமைக்கத் தொடங்கினார்.

“அதையும் பார்க்கலாம்” என்றவன் பின் வாசலின் வழியாக தோட்டத்திற்கு சென்றான். வெகுநாட்களுக்கு பிறகு மீனா தந்த டீயை ரசித்துப் பருகிய யாதவ், தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தான்.

தன்னைச் சூழ்ந்திருந்த குழப்ப மேகங்கள் விலகி நெஞ்சமெங்கும் ஒருவிதமான நிம்மதி பரவியது. ஆனாலும் உள்ளத்தின் ஓர் ஓரத்தில் அவளின் நினைவுகள் வந்து செய்த தவறை உணர்த்தி மனதை வதைத்தது.

தன் மகன் தோட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு, “என்னப்பா இங்கே வந்து உட்கார்ந்துட்டே! ஹோஸ்பிட்டல் போகலையா?” என்றபடி வந்த தாயைப் பார்த்து அவனின் முகம் பிரகாசமானது.

“அப்பா இறப்பிற்கு பிறகு எனக்குள் நானே இறுகிப் போயிட்டேன். மற்றவர்களுக்காக வெளியே சிரித்தாலும், நெஞ்சினில் ஏதோவொரு வெற்றிடம் இருக்கும். வெகுநாட்களுக்கு பிறகு இன்னைக்கு தான், மனசு ரொம்ப லேசாக இருக்கு” இலக்கின்றி வானத்தை வெறித்த மகனைக் கனிவுடன் நோக்கினாள் மீனா.

அந்த பார்வையில் இருந்த வெறுமை மனதை பாதிக்க, அதற்கான காரணம் என்னவென்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதே சமயம் யாழினியின் டிக்கியைக் காரில் வைத்த ராமைப் பார்த்த யாதவ், “என்னடா உன் தங்கச்சியை அமெரிக்காவிற்கு பார்சல் செய்யற போல” தன் நண்பனை வம்பிற்கு இழுத்தான்.

அவனிடம் இயல்பாகப் பேச முடியாமல், “இல்லடா! யாழினி புதுசாக வீடு வாங்கி பால்காய்ச்சி போறாள். அங்கேதான் எல்லோரும் போயிட்டு இருக்கோம். நீயும் வருகிறாயா?” என்று கேட்தபடியே யாதவை நெருங்கினான் ராம்குமார்.

அதற்குள் விசில் வரும் சத்தம்கேட்டு மீனலோட்சனி சமையலறைக்கு சென்றுவிட, இந்த விஷயம் யாதவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. சில காலமாக அவள் எடுக்கின்ற முடிவுகளை நினைத்து தலைவலி ஒருபக்கம் முணுக்கென்றது.

தன்னவளின் திடீர் முடிவு மனதை பதைபதைக்க வைத்திட, “உங்க வீட்டில் இருப்பதில் அவளுக்கென்ன பிரச்சனை?” யாதவ் பல்லைக் கடிக்க, அவனது மனதை நொடியில் படித்துவிட்டான் ராம்.

“எங்க வீடு அவளுக்கு பாதுகாப்பான இடம்னு உனக்கு புரியுது. ஆனால் யாழினி ரொம்ப பிடிவாதமாக இருக்கிறாடா. ஆயிரம்தான் நான் தங்கச்சின்னு சொன்னாலும், மத்தவங்க கண்ணுக்கு அது தப்பாகத்தானே தெரியும். அதனால் ஒதிங்கிப் போக முடிவெடுத்தாளோ என்னவோ?” ராம் புலம்பித் தள்ள, யாதவிற்கு நிதர்சனம் புரிந்தது.

அவளின் முடிவில் இருக்கும் நியாயம் மூளைக்கு புரிந்தபோதும், யாதவின் காதல் மனம் அதை ஏற்க மறுத்தது. ராம்குமாரின் வீட்டில் அவள் நிரந்தரமாக இருப்பது மற்றவர்களின் பார்வைக்குத் தவறாக தோன்றும். அவள் தனியாக இருக்க இந்த சமூகம் விடாதே!

இது ஒன்றும் அமெரிக்கா கிடையாதே என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்க, “அண்ணா வாங்க கிளம்பலாம்” சட்டென்று நிமிர்ந்த யாதவின் பார்வை தன்னவளின் மீது படிந்தது.

எந்தவிதமான ஒப்பனைகளும் இன்றி மாசுமருவற்ற பால்நிலவுபோல ஜொலித்த முகம் கண்டு, ‘எதுக்கு இந்த பிடிவாதமோ?!’ மனதினுள் நினைத்த யாதவ் எழுந்து வீட்டிற்குள் சென்றான்.

தன்னுடைய அறைக்குச் சென்ற யாதவ், “இவளுக்கு என்ன பைத்தியமா? அவ்வளவு பெரிய வீட்டை விட்டுட்டு அங்கே போய் எதை சாதிக்க போறாளாம்?” கோபத்தில் கூண்டுக்குள் அடைபட்ட புலிபோல  அங்குமிங்கும் நடைப் பயின்றான்.

“இதென்ன அமெரிக்கா வா… அவளுக்கு ஏதாவது பிரச்சனைன்னா, அந்த சமயத்தில் யார் வந்து காப்பாற்றுவார்?” வாய்விட்டு புலம்பியவனின் மனம் ஒருநிலையில் இல்லை.

இத்தனை நாளாக தன்னவள் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாள் என்ற நினைவில், தானுண்டு தன் வேலையுண்டு என்று நிம்மதியாக இருந்தான். இன்று காலை ராமின் மூலமாக அவள் தனியாக வீடெடுத்து தங்கும் விஷயமறிந்து அவன்மனம் தவியாய் தவித்தது.

காரின் கதவைத்திறந்து டிரைவர் சீட்டில் ராம்குமார் அமர, முன்பக்க கதவைத் திறந்து ஏறினாள் யாழினி. பின் சீட்டில் சிவசந்திரன் – வைஜெயந்தியும் உட்கார கார் கிளம்பியது. அந்த பயணம் அமைதியாகவே முடிய, யாழினி புதிதாக வாங்கியிருக்கும் வீட்டின் முன்பு காரை நிறுத்தினான்.

அவளது உடமைகளை எடுத்து வீட்டின் முன்பு வைத்துவிட்டு நிமிர்ந்து பார்க்க, காம்பவுண்ட் சுவருடன் கூடிய அழகிய வீடு அனைவரின் மனதையும் வெகுவாகக் கவர்ந்தது. அதுவும் பாதுக்காப்பிற்காக வீட்டின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பார்த்த பிறகே ராம்குமாரின் முகம் தெளிந்தது.

வாசலில் நிழலுடன் கூடிய வராண்டாவில் மர ஊஞ்சல் அமைக்கப்பட்டிருந்தது.  வீட்டின் முன்பு இடம் காலியாக இருக்க, அதை சுத்தம் செய்ய ஆள்களை நியமித்து இருந்தாள் யாழினி. ஒரு ஹால், சமையலறை, பூஜையறை மற்றும் படுக்கையறையுடன் அட்டாச் பாத்ரூம் இருந்தது.

சிவசந்திரன் – வைஜெயந்தி இருவரும் வீட்டைச்சுற்றி பார்த்துவிட்டு வருவதற்குள், வீட்டிற்குத் தேவையான பொருட்களைப் பக்கத்திலிருந்த பர்னிச்சர் கடையில் வாங்கி வருவதாக சொல்லிவிட்டுச் சென்றான் ராம்குமார்.

பூஜைக்கு தேவையான சாமான்களை எடுத்து வைத்த யாழினியிடம், “வீடு கட்சிதமாக இருக்கும்மா” வைஜெயந்தி நிறைவுடன்.

“நீ கேமரா வைத்தது தான் எனக்கு நல்லதுன்னு தோணுச்சு. இங்கே உன்னைத் தனியாக விட்டுட்டு போகவே மனசில்ல. இப்போ கொஞ்சம் நிம்மதியாக இருக்கு” சிவசந்திரன் சொல்லும் போதே, வீட்டின் வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

அவளுக்கு வேண்டிய உதவியைச் செய்த வைஜெயந்தி, “நீ போய் ராமா வந்திருக்கிறான்னு பாரு, நல்ல நேரம் முடிவதற்குள் பால்காய்ச்சிவிடலாம்” என்று கூற, அவளும் சரியென்று தலையாட்டிவிட்டு வாசலுக்கு விரைந்தாள்.

“அண்ணா” என்றபடி வந்த யாழினி முகம் பளிச்சென்று பிரகாசமாகி சட்டென்று இருளடைந்தது.

ராம்குமாரின் பின்னோடு வந்தவனைக் கண்டவுடன், ‘இவனை யாரு இப்போ இங்கே கூப்பிட்டா. இந்த அண்ணாவுக்கு அறிவே இல்ல’ மனதிற்குள் தமையனை வறுத்தெடுக்க தொடங்க, தன்னவளைப் பார்த்து இமைக்க மறந்தான் யாதவ்.

பச்சை நிற பட்டுப்புடவையில் அழகு ஓவியமாகத் திகழ்ந்தவளைக் கண்டு அவன் கோபம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனது.  என்ன என்பதுபோல யாதவ் புருவத்தை ஏற்றியிறக்க, அதில் தன்னிலைக்கு மீண்டாள் யாழினி.

இருவரின் பார்வைப் பரிமாற்றத்தைக் கவனிக்காத ராம், “எல்லாமே வாங்கிட்டேன் யாழினி. பால் காய்ச்சி முடிச்சதும் உள்ளே இறக்கி வைக்க சொல்றேன். அப்புறம் மத்த வேலைகளைப் பார்க்கலாம்” என்று சொல்ல, அவளும் சரியென்று தலையாட்டினாள்.

அதற்குள் அவனுக்கொரு முக்கிய போன் வர, “நீ உள்ளே போடா. நான் கால் பேசிட்டு வர்றேன்” ராம் அங்கிருந்து நகர்ந்தான்.

அவனின் தலை மறையும் வரை பொறுமையாக நின்றிருந்த யாழினி, “உங்களை யார் இங்கே வர சொன்னது?” கோபத்தில் எரிந்து விழுந்தாள்.

“என் காதலி வீடு வாங்கி பால்காய்ச்சும் போது, நான் பக்கத்தில் இல்லாமல் இருந்தால் நல்ல இருக்காதே! அதான் கிளம்பி வந்துட்டேன்” மெல்லிய குரலில் கூறி, அவளைப் பார்த்து கண்சிமிட்டினான் யாதவ்.

அவனை ஏறயிறங்க திமிராக ஒரு பார்வைப் பார்த்தவள், “யாருக்கு யார் காதலி? சும்மா கற்பனையில் கோட்டைக் கட்டாமல், இப்படியே போயிடுங்க. வீட்டுக்குள் வந்தீங்க நடக்கறதே வேற” அவனை மிரட்டிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தாள் யாழினி.

அவளது மிரட்டலுக்கு பயப்படாமல் நின்றிருந்த யாதவ் மனமோ, ‘என்னைவிட்டு போக மனமில்லாமல், இங்கேயே வீடெடுத்து தங்கும் அளவுக்கு வந்திருக்கிற. இதிலிருந்தே உன் மனசு எனக்கு புரியாத இனியா!’ மனதினுள் அவளை சீராட்டிக் கொண்டு, ராம்குமாரை அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்றான்.

இருவரையும் பார்த்து புன்னகைத்த வைஜெயந்தி, “வா யாதவ்! இப்போதான் இவனிடம் சொல்லி உன்னைக் கூப்பிட சொல்லலாம்னு நினைச்சேன், அதுக்குள் நீயே வந்துட்டே” வரவேற்றார்.

யாழினி பாலைக் காய்ச்சி எடுத்து வந்து பூஜையறையின் புகைப்படங்களின் முன்னே வைக்க, ஆண்கள் மூவரும் வந்து நின்றனர். வைஜெயந்தி சொல்வதை உள்வாங்கிச் செய்யும் யாழினியைக் கனிவுடன் ஏறிட்டான் யாதவ்.

அனைத்தும் நல்லபடியாக முடியவே, எந்த பொருட்களை எங்கே வைப்பது என்ற சிந்தனையுடன் வீட்டைச் சுற்றி வந்தாள் யாழினி. அவள் சொன்ன இடத்தில் பொருட்களை வைத்த ராம்குமார், “சரி நாங்க கிளம்பறோம்” என்று அவளிடம் விடைப்பெற்றான்.

அவர்களுடன் கேட் வரை சென்ற யாதவ், “ஐயோ பைக் சாவியை அங்கேயே வச்சிட்டேன். ஒரு நிமிஷம் அதை எடுத்துட்டு வர்றேன்” மீண்டும் வீட்டினுள் நுழைந்தான்.

அவனைப் பார்த்த யாழினி ஏதோ திட்டுவதற்கு வாய் திறக்க, “ஷ்!” என்ற யாதவ், பின்னோடு மறைத்து வைத்திருந்த பார்சலை எடுத்து அவளிடம் நீட்டினான்.

என்ன இது என்பதுபோல யாழினி அவனைப் பார்க்க, “இது என்னோட ஸ்மால் கிப்ட்” என்றான் யாதவ் குறும்புடன்.

அதுவொரு போட்டோ பிரேம் என்பது மட்டும் புரிந்தது. அத்தோடு அதை வாங்காமல் அவன் அங்கிருந்து செல்ல போவதில்லை என்பதை வெடுக்கென்று வாங்கிக் கொண்டாள்.

“ம்ம் சீக்கிரம் பிரித்து பாரு” என்றவன் அவசரப்படுத்த, “யாதவ் சாவி கிடைத்தா?” வாசலில் நின்று குரல் கொடுத்தான்.

“எங்கே வெச்சேன்னு தெரியலடா” இவன் இங்கிருந்து குரல் கொடுக்க, அவனைக் கொலைவெறியுடன் நோக்கிய யாழினி, ‘இப்போ கிப்ட் ஒண்ணுதான் கேடு’ மனதினுள் அவனை வறுத்தேடுத்தபடியே அதைப் பிரித்தாள்.

அவளுடைய பெற்றோரின் புகைப்படத்தை கொஞ்சம் பெரிது செய்து பிரேம் போட்டு எடுத்து வந்திருந்தான்.  அதைப் பார்த்து விழிகள் இரண்டும் கலங்கிட, “தேங்க்ஸ்!” என்றவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.

“தேங்க்ஸ் அப்படி சொல்லக்கூடாது” என்ற யாதவ் கண்ணிமைக்கும் நேரத்தில் அவளின் இதழோடு இதழ் பதித்தான். அவனின் திடீர்தாக்குதலில் சிலையாகி நின்ற யாழினி, அவனின் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டாள்.

சட்டென்று உதாரித்து தரையில் கால் ஊன்றி நின்றவன், “சரியான பிடிவாதக்காரி” அவளின் தாடையைப் பிடித்து செல்லம் கொஞ்சியவனின் கையைத் தட்டிவிட்டு முறைத்தாள் யாழினி.

அதுக்குமேல் அங்கிருந்தால் சரிவராது என்பதால், “பாய் ஸ்வீட்டி” அவன் வீட்டைவிட்டு வெளியேற, வீடே வெறுச்சோடிப் போனது. அவளை மெல்ல தனிமை சூழ்ந்தது.