Rose – 8

gettyimages-sb10069782l-001-2048x2048-18a9e293

அத்தியாயம் – 8

அன்று நைட் முக்கியமான ஆக்ஸிடென்ட் கேஸ் மருத்துவமனையில் அட்மிட் ஆகவே, அவன்தான் இருதய அறுவை சிகிட்சை செய்தான். புயலின் காரணமாக மழை வெளியே வெளுத்து வாங்க, காலைப்பொழுது ரம்மியமாக விடிந்தது.

ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த காற்றில் மண்வாசனை புத்துயிர் கொடுக்க, தன்னுடைய செல்போனில் மணியைப் பார்த்தான். எதர்ச்சியாக யூடூபிற்கு செல்ல, அவன் கட் செய்து வெளியே வர நினைக்கும்போது யாழினியிடம் பேட்டி எடுக்கும் காட்சி ஒளிபரப்பானது.

அதைப் பார்த்துவிட்டயாதவ் கோபத்துடன்  இருக்கையைவிட்டு எழுந்தான். தாய் நிறுவனத்தை விற்றுவிட்டதாக சொன்னபோது, சந்தோசத்தில் துள்ளியது உள்ளம். அதனால் அதை வாங்கியது யாரென்ற கேள்வியைக் கேட்க மறந்திருந்தான்.

தனக்கு பிடிக்காத நிறுவனம் என்று தெரிந்தே வாங்கிய அவளை என்ன செய்யலாம் என்ற சிந்தனையுடன் மருத்துவமனையில் இருந்து கிளம்பினான். நேராக வீட்டிற்குச் சென்று தாயிடம் சண்டை போடலாம் என்று நினைத்தவன், நொடியில் தன் முடிவை மாற்றிக் கொண்டான்.

மழையில் நனையும் மலர்களின் மீது பார்வைப் பதித்தபடி பால்கனியில் நின்றாள் யாழினி. சிலுசிலுவென்று காற்று வந்து உடலைத் தழுவிச் செல்ல, மழைச்சாரலும் அவளின் பளிங்கு கன்னத்தில் முத்தமிட்டு வடிந்தது.

“யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே… கண்ணனோடு தான் ஆட…

பார்வை பூத்திட பாதை பார்த்திட… பாவை ராதையோ வாட…

இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட…

இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட…

ஆயர்பாடியில் கண்ண இல்லையோ… ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ… பாவம் ராதா…” யாதவின் நினைவினில் நின்றவளின் உதடுகள் முணுமுணுத்தது இந்த பாடலைத் தான்.

யாழினி வீட்டின் முன்பு காரை நிறுத்தி இறங்கிய யாதவ், காலிங்பெல்லை அழுத்திவிட்டு அமைதியாக நின்றான். திடீரென்று காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்க, ‘யாரது?’ யோசனையுடன் சென்று கதவைத் திறந்தாள்.

அவளின் சிந்தனையின் நாயகனே எதிரே நிற்க கண்டு அவளின் முகம் பூவாக மலர்ந்தது. முன்னிரவு வேலையின் காரணமாக கண்விழித்ததால், அவனது விழிகளிரண்டும் சிவந்திருக்க, “என்ன விஷயம்?” அவனை வாசலில் நிற்க வைத்தே கேள்வி கேட்டாள்.

காட்டன் புடவையில் கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளித்த தன்னவளை சீண்டிப் பார்க்கும் எண்ணம் தோன்றியது. அதைக்கடந்து அவள் செய்த செயல் ஞாபகம் வரவே, “உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” அவளைக் கடந்து உள்ளே சென்றான்.

அவனது அனல் பார்வையில் இரத்தம் சூடேற, “என்ன இவ்வளவு கோபமாக இங்கே வந்திருக்கான்” குழப்பத்துடன் அவனைப் பின்தொடர்ந்தாள்.

வீட்டிற்குள் நுழைந்தவனின் பார்வை வீட்டைச்சுற்றி வலம் வர,அவனிடம் தனியாக வந்து மாட்டிக் கொண்ட மடத்தனத்தை நினைத்து மனம் நொந்து போனாள் யாழினி.

அவனது முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் மெளனமாக நின்றவளிடம், “கோகுலம் எஸ்டேட் எப்போ வாங்கினே” நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

யாழினியின் புருவங்கள் சிந்தனையில் சுருங்க, “இப்போ அதைப்பற்றி ஏன் கேட்கிறீங்க” என்றாள் எரிச்சலோடு.

அவளின் மீது மூண்ட கோபத்தை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டு, “கேட்ட கேள்விக்கு பதில்” என்றவன் குரலில் வேங்கையின் சீற்றம் தெரிந்தது.

யாதவின் கோபத்தைக் கண்டு உள்ளுக்குள் குளிர் பரவியபோதும், “கோகுலம் எஸ்டேட், பேக்டரி இரண்டுமே கீர்த்தனா கல்யாணத்திற்கு முன்பே வாங்கிட்டேன். அதை நிர்வாகம் செய்துட்டு இருப்பது நானே!” மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு, அவனைத் தீர்க்கமாக நோக்கினாள்.

இத்தனை நாளாக இந்த விஷயம் தெரியாமல் இருந்திருக்கிறோமே என்ற எண்ணமே அவனுக்கு கோபத்தை வரவழைத்தது. திமிராக நின்றிருந்த யாழினியின் தோரணை அவனின் சினத்திற்கு தூபம் போட்டது.

தன்னவள் மீது காட்ட முடியாத கோபத்தை அருகில் இருந்த ஃபிளவர் வாஸிடம் காட்டினான். கண்ணாடி குவளை கீழே விழுந்து சில்லு சில்லாய் உடைய, அதிலிருந்த ரோஜாப் பூக்கள் சிதறி காலடியில் விழுந்தது.  அவர்களின் உறவைப் போலவே அதுவும் உடைந்து போனதை நினைத்து மனதிற்குள் வருத்தினாள் யாழினி.

எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் என்ற கோட்பாடு உண்மை என்றபோதும், எதை செய்ய வேண்டாம் என்று தடுக்கிறார்களோ, அதை செய்து காட்டும் பிடிவாதக்குணம் இருவருக்குமே உண்டு.

“நான் வெறுக்கும் நிறுவனத்தை, நீ எதுக்காகடி விலைக்கு வாங்கின? என்மீது கோபமிருந்தால், அதை நேரடியாக என்னிடம் காட்ட வேண்டியதுதானே… அதைவிட்டுட்டு எதுக்காக இப்படி செஞ்சே சொல்லு இனியா?!” குரலை உயர்த்திய யாதவைக் கண்டு, அவளின் இதயம் இளகிட மறுத்தது.

அந்த நிறுவனத்தை வாங்கியது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டு, ‘தன்னுடைய தனிபட்ட வாழ்க்கைக்கும், நான் நிறுவனத்தை நிர்வாகம் செய்வதற்கும் என்ன சம்மதம்?’ குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள்.

அவனை  சீண்டிவிடும் விதமாக, “உனக்கு பிடிக்காத நிறுவனமா? அப்போ இன்னும் ரொம்ப நல்ல நிலைக்கு கம்பெனியைக் கொண்டு வரணுமே!” யாழினி நக்கலாகக் கூற, அவளின் மீது பார்வையைப் படரவிட்டான் யாதவ்.

“ஐயோ நான் சொல்றது உனக்கு புரியுதா? அன்னைக்கு அந்த நிறுவனம்தான் என்னை எங்க அம்மாவிடமிருந்து பிரித்தது. இன்னைக்கு உன்னை என்னிடமிருந்து பிரிக்கிறது” உச்சகட்ட கோபத்தில் கூறினான்.

மருத்துவம் படித்த தந காதல் சிறுபிள்ளைத்தனமான பேசுவது சிரிப்பை வரவழைக்க, ‘இந்த காதல் வந்தால் மனுசனின் மனநிலை இப்படியெல்லாம் மாற்றுகிறதே!’ நினைத்ததும், யாழினிக்கு அடிவயிற்றில் இருந்து சிரிப்பு பீறிட்டுக் கிளம்பியது.

யாதவ் எரிச்சலோடு அவளைப் பார்க்க, “அமெரிக்காவில் எம்.டி. முடிச்ச உங்களிடம் இப்படியொரு குறுகிய மனப்பான்மை இருக்கும்னு நான் நினைக்கல. பெண்கள் நிர்வாகம் செய்ய தகுதி இல்லாதவங்கன்னு நினைச்சீங்களா? நான் இதை உங்களிடம் எதிர்பார்க்கவே இல்ல” விளையாட்டாக ஆரம்பித்து கண்டிப்புடன் முடிக்க, அவனுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேற விழிகள் இரண்டும் சிவந்தது.

“ஐயோ! நான் அந்த அர்த்தத்தில் சொல்லல இனியா. இந்த நிறுவனத்தை விலைக்கு முன்னுக்கு கொண்டுவர, எங்கம்மா என்னைவிட்டு விலகிப் போனாங்க. அதே மாதிரி நீயும் என்னைவிட்டு நிரந்தரமாக பிரிஞ்சி போயிடுவியோ…” அவன் சொல்லும் போதே, “ஒரு நிமிஷம்” இடையிட்டாள் யாழினி.

“நம்ம ரெண்டு பெரும் என்ன சேர்ந்த வாழ்கிறோம். இனி வாழ்க்கையில் உங்களுக்கு இடமில்லன்னு நான் முடிவு செய்து ரொம்ப நாளாச்சு. அதனால் தேவையில்லாமல் மனக்கோட்டை கட்டாதீங்க” அவனை விரல் நீட்டி எச்சரிக்க, யாதவ் இயலாமையுடன் அவளைப் பார்த்தான்.

அவனது கூர்மையான பார்வை அவளைக் கூறுபோட, “நான் இந்தியாவில் இருக்க, எனக்கொரு பிடிப்பு வேணும்னு தான், இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கினேனே தவிர, உங்களோடு சேர்ந்து வாழும் எண்ணத்தில் இல்லை” தீர்க்கமான பார்வையுடன் மீண்டும் தொடர்ந்தாள்.

“உங்க மொத்த வெறுப்பும் இந்த கம்பெனி மீது இருக்குன்னா, என் மொத்த காதலும் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் இருக்கும். நான் இஷ்டப்பட்டு வாங்கிய எந்தவொரு பொருளையும் ஏன் வாங்கினே, எதுக்கு வாங்கின என்ற கேள்வியைக் கேட்க உனக்கு உரிமை இல்லை” இடையில் ஏதோ சொல்ல வந்தவனைக் கையமர்த்தி தடுத்தாள்.

“முதலில் நான் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லி முடிச்சிடுறேன்” அவள் கூறிய வார்த்தைகள் அவளின் மனதில் ஈட்டியாகப் பாய்ந்தது.

“என்னைப் பொறுத்தவரை யாதவ் என்ற ஒருத்தன் என் வாழ்க்கையில் வரவே இல்ல. உன்னோட தனிபட்ட விருப்புவெறுப்புகளைப் பற்றி கவலைப்பட எனக்கு நேரமில்லை, சோ வீட்டுக்கு வரும் வேலை வேண்டாம்” என்றவள் இடைவெளிவிட, யாதவ் புருவங்கள் முடிச்சிட்டது.

“இன்னொரு முறை உரிமையாக வந்து கத்தி சத்தம்போட்டு ஆர்ப்பாட்டம் செய்தே, தனியாக இருக்கும் பெண்ணிடம் தப்பாக நடக்கப் பார்த்தான்னு கம்பிளைன்ட் கொடுத்திடுவேன்” அவனின் முகத்திற்கு நேராக விரல்நீட்டி எச்சரித்தாள்.

அதுவரை இழுத்துப் பிடித்த பொறுமைக் காற்றில் பறக்க, “என்னடி சொன்னே?!” அடிக்க கையோங்கியவனின் கரங்கள் தானாக கீழே இறங்கியவனின் பார்வை, விழிகளின் வழியாக அவளின் உயிர்வரை ஊடுருவிச் சென்றது.

“நீ அடித்தால் வாங்கிட்டு கண்ணைக் கசக்கும் பெண்களின் வரிசையில் நான் கிடையாதுன்னு உனக்கு நல்லாவே தெரியும். அப்புறம் என்ன சொன்னே, உங்கம்மாவை உன்னிடமிருந்து பிரித்த நிறுவனமா?!” என்றபடியே அவனை நோக்கினாள் யாழினி.

அவன் கோபம் கொஞ்சம் மட்டுப்பட, அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதைப் பொறுமையாகக் கேட்க, “அந்த நிறுவனம் இல்லன்னா, இன்னைக்கு டாக்டராக இருந்திருக்க முடியாது. ஏதோவொரு சின்ன நிறுவனத்தில் மாத சம்பளம் வாங்கும் ஆளாக இருந்திருப்பே” இடைவெளிவிட, அவனுக்கு ஏதோ புரிவதுபோல இருந்தது.

“எந்தவொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கம் இருக்கும். அதை முதலில் ஆராய்ந்து பேச பழகு. சும்மா நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு குதிப்பதை முதலில் நிறுத்து” யாழினி தெளிவாகக் கூற, தாயின் பக்கம் என்ன நியாயம் இருக்கிறது புரியாமல் குழம்பினான் யாதவ்.

அவனைத் தீர்க்கமாக ஏறிட்ட யாழினி, “அவங்க இல்லன்னா இன்னைக்கு நீயும் இல்ல. தாயின் பாசத்தின் ஆழத்தை உணராத நீயெல்லாம் காதலின் மகத்துவத்தைப் புரிஞ்சிப்பன்னு நினைப்பதே முட்டாள்தனம்” ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தத்துடன் பொறுமையாக உச்சரித்தாள்.

தன் மனதின் வலியை அவளுக்குள் கடத்திவிட்டு, “நீயும் என்னை இவ்வளவு தூரம் காயப்படுத்துவேன்னு கனவிலும் நினைக்கல” என்றவன் வாயிற்கதவை நோக்கி செல்ல, “ஒரு நிமிஷம்” மீண்டும் அவனைத் தடுத்தாள் யாழினி.

அவன் நின்ற இடத்திலிருந்து திரும்பிப் பார்க்க, காலடியில் கிடந்த ரோஜா பூக்களைக் கையில் எடுத்துகொண்டு அவனின் எதிரே வந்து நின்றாள். யாதவ் விழிகளை சலனமே இல்லாமல் ஏறிட்ட யாழினி, “ஐ ஹெட் யூ கிருஷ்ணா” அவனின் கையில் பூவைத் திணித்தாள்

அவன் சிலையாகி நின்றது சில நொடிகள் மட்டுமே!

அந்த பூக்களைக் கையில் வாங்கிய யாதவ், “தேங்க்ஸ்! என்னவளுக்கு காதலை மட்டும் தான் காட்ட தெரியும்னு நினைச்சேன். வெறுப்பைக் கூட முகத்திற்கு நேராக சொல்லும் தைரியம் உனக்கு இருக்குன்னு இன்னைக்கு தான் தெரியும்” என்றவன் வீட்டைவிட்டு வெளியேற, அவன் சென்ற திசையைப் பார்த்தபடி விக்கித்து நின்றாள் மதுர யாழினி.

தன்னவளிடம் கோபத்தைக் காட்டிவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பிய யாதவ் மனம் எங்கும் அவளின் நினைவுகள் மட்டுமே ஆக்கிரமித்தது.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்திவிட்டு, சீட்டில் சாய்ந்து இமைகளை மூடினான். தாயின் அன்பை இழந்தவனின் வாழ்க்கையில், வரமாய் வந்தவள் என்றே சொல்லலாம்.

அதுவரை அவன் வகுத்து வைத்திருந்த கொள்கைகள் காற்றில் காணாமல் போனது விந்தையிலும் விந்தை தான். ஒரு காலகட்டத்தில் காதலே வராது என்று உறுதியாக சொன்னவன், பெண்ணவளிடம் மனதைப் பறிக்கொடுத்தை என்னவென்று சொல்வது?!

அவன் கேட்காதபோது அன்பை வாரி வழக்கும் சுரபியாக இருந்தவள், காதலை எதிர்பார்க்கும் வேளையில் கானல் நீராக காட்சியளிக்கிறாள். இன்று அவளிடம் கண்ட மாற்றம் அவனை மொத்தமாக வீழ்த்தியது. தன்னவளின் காதலைப் பேசும் காந்த விழிகளில் இருந்த வெறுப்பு அவனைக் காயப்படுத்தியது.

கடைசியாக தன் மீது உள்ள வெறுப்பை அவனின் முகத்திற்கு நேராக காட்டிய அவளின் துணிவைக் கண்டு, அவனது நம்பிக்கையின் ஆணிவேரும் ஆட்டம் கண்டது. தன் கையை ஸ்டேரிங்கில் குத்தி கோபத்தை வெளிபடுத்திய யாதவ் காரை எடுத்தான்.

அன்றிரவு வரை எங்கெங்கோ சுற்றிவிட்டு வீட்டிற்குள் நுழைய, வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு மீனா பதட்டத்துடன் எழுந்து சென்றார். அவனது தலை தாறுமாறாக கலைந்து கிடக்க, சர்ட் கசங்கி இருந்தது. ஆதரவற்ற சிறுவனைப்போல் வந்து நின்ற மகனைப் பார்த்து தாயுள்ளம் பதறியது.

அதை சாமர்த்தியமாக மறைத்துவிட்டு, “இன்னைக்கு மருத்துவமனையில் வேலை அதிகமா? சரி போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்” அவர் பேச்சை மாற்ற, மைந்தனோ மாடிப்படிகளை கடந்து அறைக்குச் சென்றான்.

அவன் குளித்துவிட்டு வருவதற்குள் சாப்பாட்டை எடுத்து வைத்த மீனலோட்சனி, “ஈஸ்வரி நீ கிளம்பு” அவளை அனுப்பிவிட்டு சாப்பிட அமர, அவனும் குளித்துவிட்டு கீழிறங்கி வந்தான்.

மற்ற ஆண்களைவிட கொஞ்சம் உயரம் அதிகம் என்றபோதும், கம்பீரமாக நடந்து வந்த மகனின் மீது பார்த்து உள்ளம் பூரிக்க, அதை வெளிக்காட்டாமல் இலகுவாக மறைத்தார். அவன் டைனிங் டேபிளில் வந்து அமர, பல வருடங்களுக்குப் பிறகு தன் மகனுக்கு சாப்பாடு பரிமாறினார்.

மீனலோட்சனி பக்கத்தில் அமர்ந்து சாப்பிட தொடங்க, “இன்னைக்கு சமையல் நல்லா இருக்கும்மா” என்றவனை இமைக்காமல் நோக்கியவரின் விழிகள் கலங்கிட, “அம்மா” அதட்டினான் மகன்.

‘நான் நிறுவனத்தை விற்காமல் இருந்திருந்தால், இவன் என்னோடு இயல்பாகப் பேசியிருப்பானா?’ தாயுள்ளம் சிந்திக்க, அவரின் எண்ணவோட்டம் அறிந்து அவரின் கையைப் பிடித்து அழுத்தினான்.

அவனது சிறு ஸ்பரிசம் மீனாவின் மனத்திற்கு இருந்த காயத்திற்கு மருந்தாக அமைந்தது.  தன்னுடைய விலகல் தாயின் மனத்தைக் காயப்படுத்தி இருப்பது புரிய, அவரை எப்படி சமாதானம் செய்வது என்று மூளையைக் கசக்கி சிந்தித்தான் யாதவ்.

“அப்போ இருந்த மனநிலையில் உங்க பக்கம் நியாயம் இருக்கும்னு சிந்திக்காமல் இருந்துட்டேன். இன்னைக்கு நீங்க ஃபீல் பண்ணுவதைப் பார்த்தால், உங்க பக்கமும் ஏதோவொரு நியாயம் இருக்குமோன்னு இப்போ தோணுது” மனதில் தோன்றிய வார்த்தைகளைக் கோர்வையாக கூற, அந்த வாக்கியம் மிகப்பெரிய ஆறுதலை அவருக்கு பரிசளித்தது.

தன் மகனின் கேசத்தைக் கோதிய மீனாவோ, “என்னை இவ்வளவு தூரம் புரிஞ்சிகிட்டதே போதும் கண்ணா. அந்த நிறுவனத்தை உனக்காக தான் விற்றேன்” தாயின் முகத்தைக் கனிவுடன் நோக்கினான்.

தாய் – மகன் உறவென்பது கடைசிவரை உடன் வரும பந்தம். தாலிக்கொடியின் உறவு இல்லையென்றாலும், தொப்புள்கொடி உறவை யாராலும் பிரிக்க முடியாது. தந்தையின் இறப்பில் தொடங்கிய பிரிவு இன்று சுமுகமாக மாறியது.

இடைபட்ட காலத்தில் இருவரின் கவனமும் இலக்கை நோக்கி இருந்தது. அவர்களின் சந்தோசமான தருணத்தை அதற்கு ஈடாக இழந்து இருக்கும் உண்மை புரிந்தது.

தான் நிறுவனத்தை ஏற்று நடத்த என்ன காரணம் என்று யாதவும் கேட்கவில்லை, மீனாவும் சொல்லவில்லை. இருவரும் மனமும் வெவ்வேறு சிந்தனையில் இருக்க, அந்த இடத்தில் பலத்த அமைதி நிலவியது.

மீனா அறைக்குச் செல்ல, “குட் நைட் மாம்” என்ற யாதவ் பார்வை அவரையே பின்தொடர்ந்தது.