Kalangalil aval vasantham 15

15

காரிலிருந்து இறங்கியவன் வேக நடையிட்டு அந்த பிரம்மாண்ட கட்டிடத்தினுள் நுழைந்தான். சுற்றிலும் எட்டு மிக பிரம்மாண்டமான கட்டிட பிரிவுகள். அதற்குள் பல தொகுப்புகள், பல வர்த்தக தளங்கள்!

அதற்கெல்லாம் நடுநாயகமாக அமைந்திருந்தது சென்ட்ரல் யூனிட். ஆமாம் அப்படித்தான் அழைப்பார்கள் அனைவரும். ஒவ்வொரு பிரிவையும் இயக்குவது இங்கிருப்பவர்கள் தான். அத்தனை அலுவலகங்களுக்கும் உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டே, உற்பத்தி நிலையங்களையும் பார்வையிட்டபடி இருக்கும் மிக முக்கியமான கேந்திரம்.

சேர்மன் ஆஃபீஸ்.

ஜுபிட்டருக்கு என்று செபியில் லிஸ்ட் செய்யப்பட்ட ஐந்து வணிகங்களும், லிஸ்ட் செய்யப்படாமல் இருக்கும் எட்டு வணிகங்களும் உண்டு.

ஓசூரில் இரும்பு ரோலிங் மில்லும், புதுச்சேரியில் பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலையும், திண்டிவனத்துக்கு அருகில் சர்க்கரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும், சிறு நிதி நிறுவனம், பெரு வணிக நிதி நிறுவனம் ஆகியவை செபியில் கண்காணிப்பில், மும்பை மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனங்கள். அவை இல்லாமல், கட்டுமான நிறுவனம் போன்றவை எல்லாம் லிஸ்ட் ஆகாதவை. அதாவது அவைகளின் நிர்வாகத்தில் மாற்றம் எதுவும் செய்தால் செபிக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் செபியின் கண்பார்வையில் இருக்கும் நிறுவனங்களில் என்ன நடந்தாலும், அது செபிக்கு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இவை அல்லாமல், சென்னை ஐபிஎல் தனியாக இயங்கும் சுதந்திரமான நிறுவனம். அவற்றின் நிர்வாகம் ஜுபிடர் தான் என்றாலும், அதை லிஸ்ட் செய்ய முடியாது. அதன் நிர்வாகிகள் தனி.

இத்தனையும் தாண்டி பல ட்ரஸ்ட்டுகள் உண்டு. குழந்தைகளுக்கான கல்விக்கு, ஊனமுற்றோருக்கு உதவ, சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட என்று பல அறக்கட்டளைகள். வரி சுமையை குறைக்கவும், நல்ல காரியங்களை செய்யவும் என அவற்றை கண்காணிப்பதும் இந்த அலுவலகங்கள் தான். அவற்றின் வயது அத்தனையும் நூறாண்டுகளை கடந்திருக்கின்றன.

அவை அத்தனையும் பாரம்பரியமாக அந்த குடும்பத்தால் போற்றிப் பாதுகாக்கப்படும் மரியாதை. அதை தாண்டி சமூகத்துக்கு அவர்களால் திருப்பி செலுத்தப்படும் நன்றி. யார் இருந்தாலும் இல்லாமலிருந்தாலும் சுயமாக, இடைவிடாமல் இயங்கும் ஒரு இயந்திரம் தான் அந்த அறக்கட்டளைகள்.

அவற்றின் நிர்வாகமும், இந்த அலுவலகங்களின் மூலமாகத்தான்!

செக்யுரிட்டி பவ்யமாக கதவை திறந்து விட, எதிர்பட்டவர்களின் வியந்த பார்வையும், அதற்கடுத்த மரியாதையான வணக்கத்தையும் பெற்றுக் கொண்டு லிப்ட்டினுள் நுழைந்தான் ஷான். அது பிரத்யோக லிப்ட். அதை சேர்மன் மற்றும் போர்ட் மெம்பர்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்.

அவன் பின்னே கடமையின் முழு உருவமாக ப்ரீத்தி. கையில் சிறிய லேப்டாப் மற்றும் சில பைல்ஸ். ஆழ்ந்த நீல நிற பென்சில் ஸ்கர்ட், வெண்மை நிற டாப்ஸ். கண்களில் கூலர்ஸ். கால்களில் சிறு ஹீல்ஸ் வைத்த வெட்ஜஸ். தூக்கி போடப்பட்ட தீபிகா படுகோன் டாப்நாட்.

லிப்ட் உள்ளே இருவர் மட்டும் இருக்க, ஷானை ஆழ்ந்து பார்த்தாள். முந்தைய தினம் எதுவுமே நடவாததை போல முகத்தை வைக்க எங்கு கற்றான் என்று கேட்க தோன்றியது. அதையும் தாண்டி அந்த லைட் ப்ளு ஷர்ட், ஆழ் நீல நிற சூட் என்று படு ஸ்மார்ட்டாக இருந்தவனின் மேலிருந்து அவளால் கண்களை எடுக்க முடியவில்லை. இத்தனை நாட்களில் அவன் சூட் அணிந்து பார்த்ததே இல்லை எனலாம். அதற்கு தேவையும் ஏற்பட்டது இல்லை. ஜுபிடர் போர்ட் மீட்டிங்கில் ஷான் கலந்து கொண்டதே இல்லை. கலந்து கொள்ள முடியாது எண்பது அவனது பிடிவாதம். கட்டுமான நிறுவன போர்ட் மீட்டிங் என்பது ஏதோ சம்ப்ரதாயம் என்பதற்காக நடத்தப்படுவது. அதிலெல்லாம் இவன் சூட் அணிந்து கலந்து கொண்டதில்லை.

சாதாரணமாக ஜீன்ஸ் டிஷர்ட் அணிந்தும் கூட இருக்கிறான். அங்கெல்லாம் அவனைப் பொருத்தமட்டில் வேலை மட்டுமே முக்கியம். உடைகளுக்கான முக்கியத்துவம் எல்லாம் குறைவுதான். ஆனால் இங்கு அப்படியல்ல. வேலையும் முக்கியம், தோற்றமும் முக்கியம் அதை காட்டிலும் எந்த பக்கமிருந்து வேண்டுமாலும் கத்தி பாயக்கூடும் என்ற நிலை வேறு! அதனால் சிறு ஓட்டையும் இருக்கக் கூடாது என்பதால், அவனது தோற்றத்தில் கூடுதலாக சிரத்தை எடுத்திருக்கிறான் என்பது புரிந்தது.

அதிலும் இத்தனை வருடங்களில் இத்தனை மிடுக்காக உடையுடுத்தி இப்போதுதான் பார்க்கிறாள் என்பதை அவள் வெளிப்படையாகவே உணர்த்த, வாயில் ஈ போகும் போல பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்து புருவத்தை உயர்த்தி என்னவென கேட்டான் ஷான்.

தலையை இடம் வலமாக ஆட்டி ஒன்றுமில்லையென கூறினாலும், மெலிதாக அவன் கிண்டலாக புன்னகைத்ததில் அவள் தலையை சொரிந்து கொண்டாள், “யு ஆர் வெரி ஸ்மார்ட் டுடே பாஸ்.” என்றபடி சின்ன அசட்டுப் புன்னகையோடு.

“இப்பதான் தெரியுதா?” என்று கேலியாக கேட்டுவிட்டு மணியை பார்த்தான். அது ஒன்பதை தொட்டது. போர்ட் மீட்டிங்குக்கு இன்னும் அரை மணி நேரமிருந்தது.

“இன்னைக்குத்தான நீங்க இவ்வளவு ஸ்மார்ட்டா ட்ரெஸ் பண்ணி பார்க்கறேன்.” என்றவள், மிதமாக தீண்டிய குளிரை அனுபவித்தபடியே தன்னிடம் இருப்பவற்றை எல்லாம் இன்னொரு முறை சரி பார்த்துக் கொண்டாள்.

“அந்த கொழ கொழ கொரியன் மூஞ்சிங்கள மட்டும் சைட் அடிச்சுட்டு இருந்தா பக்கத்துல அழகா, ஹேன்சம்மா இருக்கவங்களை கண்ணுக்கு தெரியாதாம் ப்ரீத்தி…” என்று அந்த நேரத்திலும் அவன் வார,

“ஹேன்சம்மா? யார சொல்றீங்க பாஸ்?” வேண்டுமென்றே கண்களால் துழாவினாள்.

“கீழ நின்னுட்டு இருந்த செக்கியுரிட்டிய சொன்னேன்…” சிரிக்காமல் கூற, அவனைப் பார்த்து புன்னகைத்தவள்,

“அவர் ஹேன்சம் மட்டுமில்ல, செம ஹாட்…” ஹஸ்க்கி வாய்ஸில் கூறவும் சேர்மன் ஆஃபீஸ் பகுதியில் மின்தூக்கி நிற்கவும் சரியாக இருந்தது.

“ஹாட்டா? உன்னோட டேஸ்ட் இவ்வளவு ஹெவியா இருக்கும்ன்னு நான் எக்ஸ்பெக்ட்டே பண்ணலை…” என்று லேசாக சிரித்தவன், மின்தூக்கியிலிருந்து வெளியேறி அந்த தலைமை அலுவலகத்தை அடைந்தான். அத்தனை அலுவலகங்களுக்கும் அதுதான் இதயம்.

அலுவலகம் பரபரப்பாக இருந்தது. போர்ட் உறுப்பினர்கள் மற்றும் இயக்குனர்கள் என ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தனர். அவசரகால சந்திப்பு என்பதை அந்த இடத்தை தொற்றிக் கொண்டிருந்த சிறு பதட்டம் கூறியது.

அவனை கண்ட வினாடி, ஆகாஷ், மாதேஸ்வரனின் தனி உதவியாளன் அவசரமாக அவனை நோக்கி வந்தான். சராசரி உயரம், மாநிறம், சுறுசுறுப்பு வெளிப்படையாக தெரிந்தது.

ப்ரீத்தியின் கண்கள் சுற்றிலும் அளவெடுத்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொருவரையும் கண்களால் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை ஷான் உணர்ந்தாலும், அவனும் அவனது எக்ஸ்ரே பார்வையால் ஒவ்வொருவரையும் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தான். அவர்கள் கண்களிலிருந்த கூலர்ஸ் அதை கச்சிதமாக்கிக் கொண்டிருந்தது.

“ஹலோ சர்… ஐம் ஆகாஷ்…” பவ்யமாக அவன் கைக்கொடுக்க, ஒரு நிமிடம் யோசித்த ஷான், சிறு புன்னகையோடு அவனது கையை இறுக்கமாக குலுக்கினான்.

அந்த இறுக்கம் கைகளில் மட்டுமில்லை, அவனிடமும் தான்!

“சேர்மன் வந்தாச்சா?” என்று ஷான் கேட்கும் போதே, சேர்மன் என்று சிறு பலகை பொறித்த அறைக்குள்ளிருந்து வெளிப்பட்டார் மாதேஸ்வரன்.

“வெல்கம் ஷான்…” பெரிய புன்னகையோடு இரு கைகளையும் பரந்து விரித்து அவர் அழைக்க, அதே புன்னகையோடு, அவரை அணைத்தபடி,

“தேங்க்ஸ் மேடி…” என்றான். முன்னாளில் அதுதான் அவனது அக்மார்க் அழைப்பு. அந்த அழைப்பு அவரது புன்னகையை இன்னும் விரிய வைத்தது.

உடனிருந்த கிருஷ்ணன் நாயருக்கும் சாலமனுக்கும் சூழ்நிலை புரியாவிட்டாலும் முகம் முழுக்க புன்னகையாக இருக்கும் மாதேஸ்வரனை கண்டபோது அந்த உற்சாகம் அவர்களையும் தொற்றிக் கொண்டது. அதோடு ஷானை, அப்படியொரு கோலத்தில், பக்கா ப்ரொஃபஷனலாக கண்டதில் இனிய அதிர்ச்சி வேறு! முந்தைய தினத்தின் அதிர்ச்சி அவனை தாக்கி முடமாக்கி இருக்கும் என்று எண்ணியவர்களுக்கெல்லாம் அவனது இந்த அவதாரம் கண்டிப்பாக அதிர்ச்சிதான். சிலருக்கு இனிமையாக, சிலருக்கு புதுமையாக, சிலருக்கோ கடுமையாக!

“ஹே என்ன மேன் இப்படியொரு ஷாக் கொடுக்கறே?” சாலமன் கேட்டே விட,

“இதுக்கே ஷாக்கா? வெய்ட் மேன்… இன்னும் இருக்கு…” என்று பெரும் குரலில் சிரித்தபடி மாதேஸ்வரன் தான் பதில் கொடுத்தார்.

அவர்களின் அனைவரின் புன்னகை முகத்தை சிறு புன்னகையோடு பார்த்தபடி ஷான் பின்னால் நிற்கும் ப்ரீத்தியை பார்த்தார் மாதேஸ்வரன். உள்ளுக்குள் அவள் மேல் நன்றி மேலிட்டது. முந்தைய தினம் அத்தனை கோபமாக கிளம்பிய மகனை மலையிறக்கியவள் அவள் தானே!

அவளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் என்று நினைத்துக் கொண்டவர்,

“ப்ரீத்திம்மா, கல்லு மண்ணையெல்லாம் விட்டுட்டு உன்னை எப்படி இங்க வர விட்டார் உன்னோட எம்டி?” என்று சிரிப்போடு கேட்க,

“சொல்லீட்டீங்கல்ல, இன்னும் எவ்வளவு நேரம் நான் வெயில்ல காயனுமோ?” பாவமாக கூறுவதை போல புன்சிரிப்போடு ப்ரீத்தி கூற,

“அப்படீன்னா சைட் இன்ஸ்பெக்ஷனுக்கு கேரவன் கேப்பீங்க போல இருக்கே?” என்ற ஷானை பார்த்து, “ஒய் நாட் பாஸ்?!” பவ்யமாக கேட்டாள்.

“சியூர். ஆனா அப்புறமா உன்னோட பேமன்ட்ல டிடக்ட் பண்ணிடுவேன்… என்ன ஓகேவா?” அலட்டிக்கொள்ளாமல் கேட்ட ஷானை இடைமறித்தார் நாயர்.

“டார்லிங்… நான் இருக்கும் போது நீ எதுக்கு கம்பெனி கிட்ட கேட்கற?” என்றவரை பார்த்த மற்றவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அங்கிள்… இது உங்களுக்கே ஓவரா தெரியலையா?” சிரித்தபடி ஷான் கேட்க,

“எது ஓவர்? உனக்கு என் டார்லிங்கோட வால்யு தெரியல ஷான். பாவம் என் ப்ரீத்தி…”

“கஷ்டம் தான்.” என்றவன், ப்ரீத்தியை பார்த்து, “உங்க டார்லிங் கிட்ட பேசி முடிச்சுட்டு வாங்க மேடம். போர்ட் மீட்டிங்க போஸ்ட்போன் பண்ணிடலாம்.” என்று வாயில் அதக்கிய புன்னகையோடு கூறிய ஷானை பார்த்து சிரித்தனர் கிருஷ்ணன் நாயர், சாலமனோடு மாதேஸ்வரனும்.

“எக்ஸ்கியுஸ் மீ ஜென்டில்மேன். நானும் உங்க டிஸ்கஷன்ல கலந்துக்கலாமா?” குரல் வந்த திசையை பார்த்தனர் அனைவரும்!

ரவி நின்று கொண்டிருந்தான்!

வைஷ்ணவியின் சார்பில் போர்ட் மீட்டிங்கில் பெரும்பாலும் கலந்து கொள்வது எல்லாம் இவன் தான். அவள் ரவிக்கு பவர் ஆப் அட்டார்னி கொடுத்திருந்தாள். திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகியிருந்தாலும், ரவியை மாதேஸ்வரன் இன்னும் போர்ட் இயக்குனராக்கவில்லை. உறுப்பினர் மட்டும் தான். அது மாதேஸ்வரனுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. வைஷ்ணவியின் பவர் ஆப் அட்டார்னி மூலமாகத்தான் அவன் இயங்கிக் கொண்டிருந்தான். அதுவே அவனுக்குள் கசப்பை விதைத்திருந்தது.

அவனை பார்த்ததும் சஷாங்கனின் புன்னகை விரிந்தது.

“ஹாய் மாமா…” தானாக முன்வந்து பேசியவனை பார்த்தபோது ரவியால் நம்ப முடியவில்லை. ஆனால் அவன் அதை காட்டிக் கொள்ளவில்லை. ப்ரீத்தி எப்போதும் போல உணர்வுகளை காட்டிக் கொள்ளாத முகத்தோடு நின்றிருந்தாலும், ரவியை கண்டத்தில் உள்ளுக்குள் கோபம், ஆக்ரோஷம், எரிச்சல் என அனைத்தும் பரவிக் கிடந்தது.

அவள் காட்டிக் கொள்ளாதது அவளுக்கு பெரிய விடயமில்லை. ஆனால் ஷானின் முகத்தில் இவ்வளவு பெரிய புன்னகையை அவள் எதிர்பார்க்கவில்லை. ஃபைலை சரி பார்ப்பது போல தலை குனிந்து கொண்டாள்.

“நீ இல்லாமையா ரவி?” என்ற நாயர், வாய் கொள்ளா புன்னகையோடு அவனை அணைத்து வரவேற்றார்.

“நான் இல்லாமத்தான் என்னன்னெவோ நடக்குதே அங்கிள்?” பூடகமாக மண்டையிலடிக்க முயன்றான் ரவி.

“நீங்க இல்லாம எதுவுமே நடக்காது ரவி. எனக்கு வைஷ்ணவியும் ஷானும் ஒன்னு தான்…”

“ஜஸ்ட் எ ஜோக் மாமா.” மாமனாரை பார்த்து சிரித்தான் ரவி.

“இது ஜோக்கே இல்ல மாமா. நீங்க இல்லைன்னா நான் இல்லை…” பூடகமாக பேச உனக்குத்தான் தெரியுமா? இந்தா பிடி வாங்கிக் கொள் என்று பொடி வைத்தான் ஷான்.

அவனது அந்த பேச்சில் லேசாக புருவத்தை சுருக்கினான் ரவி. முதல் நாள் ஸ்வேதாவின் வீட்டில் இவனாடிய ருத்ர தாண்டவத்தை அறிவான். மாயா கூறியிருந்தாள். ஆனால் தன்னை பற்றி ஏதேனும் தெரிந்திருக்குமா என்று அவனால் கணிக்க முடியவில்லை. ஸ்வேதாவின் நெற்றியில் இவன் துப்பாக்கியை வைத்தது முதற்கொண்டு தெரியும்.

ஆனால் அதற்காக அவள் இவனை காட்டிக் கொடுத்திருப்பாளா என்ன? அவளது பல விஷயங்கள் அவன் கையில் இருக்கும் போது, அவள் அப்படியொரு முட்டாள்தனத்தை கண்டிப்பாக செய்திருக்கப் போவதில்லை. அப்படியொன்று நடக்கவில்லை என்பதை மாயா மூலமாக அவன் திண்ணமாக அறிந்திருந்தான்.

“என்னோட மச்சானோட இந்த திடீர் மாறுதலுக்கு என்ன காரணமோ?” நகைச்சுவையாக கேட்பதைப் போன்ற தொனியில் அவன் கேட்க, மாதேஸ்வரன் முந்திக் கொண்டார்.

“என்ன காரணமா இருந்தா என்ன ரவி? என் பிள்ளை இங்க வந்துட்டான். அதுவே போதும்…” என்றவர், நேரத்தை வீணாக்க முயலாமல், ஆகாஷிடம் திரும்பி,

“மீட்டிங் ஆரம்பிச்சுடலாம் ஆகாஷ். நல்ல நேரம் முடியறதுக்குள்ள ரிசொல்யுஷன் பாஸ் பண்ணனும்.” என்று அவசரபட்டார்.

நல்ல விஷயங்களை தள்ளிப் போடுவதில் அவருக்கு எப்போதுமே உடன்பாடு இருந்ததில்லை. அதிலும் இந்த விஷயத்தை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக முடித்தாக வேண்டும் அவருக்கு.

வராது வந்த மாமணியின் மனம் மாறுவதற்குள் இழுத்து பிடிக்க வேண்டாமா?

“என்ன டீட்டைல்ஸ்? என்ன ரிசொல்யுஷன் மாமா? ஒண்ணுமே சொல்லாம ரகசியமா செய்யறீங்க? டிரக்டர்ஸ்க்கு முன்னமே ஒரு நோட்டீஸ் குடுக்க மாட்டீங்களா? அப்படியென்ன அர்ஜன்ட் ரிசொல்யுஷன்?”

முக மாற்றத்தை திறமையாக வெளிப்படுத்தாமல், முடிந்தளவு இயல்பாக இருக்க முயன்றான் ரவி. அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் ஷான். ஓரப் பார்வையாக பார்த்தபடி தன் கையிலிருந்த ரிசொல்யுஷன் ட்ராஃப்ட்டை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி.

“ரகசியமெல்லாம் இல்ல ரவி. ஓவர் போன், வைஷ்ணவி மேடம் கிட்ட சொல்லியாச்சு. கம்பெனிக்கு அடுத்த லீடர்ஷிப்ப ரெடி பண்ண வேண்டாமா? இவ்வளவு நாள் ஷான் பிடி குடுக்கல. இப்ப சரின்னு சொல்லிட்டார். அதான், அர்ஜென்ட் போர்ட் மீட்டிங் போட்டு, ஷானை டைரக்டர்ல இருந்து ஆப்பரேஷன்ஸ் சீஃப்பா ப்ரொமோட் பண்றதுக்கு ரிசொல்யுஷன் பாஸ் பண்ணலாம்ன்னு ப்ளான். ரிசொல்யுஷன் பாஸ் பண்ணி செபிக்கு அதை ஃபார்வர்ட் பண்ணனும் இல்லையா? இந்த ப்ரோசீஜர் முடிஞ்சாத்தான் நாம அஃபிஷியலா ஷானை சீஈஓ வாக்க முடியும். நீ என்ன சொல்ற ரவி?”

கிருஷ்ணன் நாயர் பொறுமையாக விளக்கினார். ஆனால் ரவிக்குள் ஒரு பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது.

“எப்படி நீங்க ஓவர் ஃபோன் நோட்டிஃபை பண்ணுவீங்க? ரிட்டர்ன் நோடிபிகேஷன் கொடுக்க வேண்டாமா?” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான் ரவி.

அவனது குமுறலை பார்த்தும் பார்க்காதது போல ரசித்துக் கொண்டிருந்தான் ஷான். எதுவும் பேசவில்லை. மற்றவர்கள் பேசட்டும், இது தனக்கான நேரம் அல்ல!

“ரிட்டர்ன் நோடிபிகேஷன் கொடுத்து, அப்புறமா மீட்டிங் நடத்தற அளவு இப்ப டைம் இல்ல சர்…” கம்பெனி செக்கரட்டரி மேகவண்ணன் அமைதியாக கூற, அது ரவிக்குள் இன்னுமே பிரளயத்தை அதிகப்படுத்தியது.

அவ்வளவு விரைவாக என்றால் என்ன விஷயம்?

இது சாதாரண நகர்வாக தெரியவில்லை. கண்டிப்பாக இல்லை. இது மொத்தமாக தனக்கு வைக்கும் ஆப்பு என்பதை புரிந்து கொண்டாலும், அது எப்படி என்று யோசிக்க முடியவில்லை.

மற்றவர்களை பகடை காய்களாகவே வைத்து விளையாடிப் பழகி விட்டவன். இப்போது அதற்கு மாறாக நடக்கும் போது, அவனுக்கு என்ன நேர்கிறது என்று புரியவில்லை.

“அந்த அளவு அவசரம் எதுக்கு மேகவண்ணன்?”

“ஐபிஎல் டீம்ஸ் மீட்டிங் இருக்கு ரவி சர். அதுக்கு சேர்மன் சார்பா அங்க கலந்துக்க ஷான் சர்க்கும் பர்மிஷன் தரணும். அந்த ரிசொல்யுஷனையும் பாஸ் பண்ணனும்.”

மின்னாமல் முழங்காமல் அணுகுண்டை அவன் மேல் எறிந்துவிட்டு அவர் வேலையை பார்க்க போனார்.

எத்தனை வருட தவம், இப்போது அவன் அடைந்திருக்கும் உயரம்! கம்பெனியுள்ளும் அவன் வரக் கூடாது, கிரிக்கெட் வாரியம் பக்கமும் அவன் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்று எத்தனை வருடங்களாக வேலை பார்த்திருக்கிறான். எத்தனை தகிடுதத்தங்களை செய்திருக்கிறான். அது அத்தனையும் ஒரே நொடியில் கலைந்து போவதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது.

ஆனால் ஷானோ வெகு அமைதியாக மற்றவர்களை பேச விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் போலவே ப்ரீத்தி.

“ஐபிஎல் மீட்டிங்ல நானாவது இருக்கேனா? இல்லை எனக்கு பதிலா ஷானோட செக்ரட்டரி மிஸ். ப்ரீத்தி கலந்துக்குவாங்களா?” கிண்டலாக கேட்ட ரவியை அதிருப்தியான பார்வை பார்த்தார் மாதேஸ்வரன்.

“ரவி, ஹோல்ட் யுவர் டங்க். ப்ரீத்தி ஷானுக்கு அசிஸ்ட் பண்றதுனால பர்சனல் அசிஸ்டன்ட் ஆகிற மாட்டா. ஷீ இஸ் அ சிவில் இஞ்சினியர் தேர்.” பார்த்ததோடு மட்டுமில்லாமல், சற்று கடுமையாகவே கூறினார். எதற்காகவும் ப்ரீத்தியை அவர் விட்டுக் கொடுப்பதாக இல்லை.

“சாரி டூ இன்டரப்ட் சர். ரவி சர் சொல்றதுல எந்த தப்பும் இல்லை. நான் ஷான் சாருக்கு அஸிஸ்ட் பண்றது எனக்கு பெருமை, சந்தோஷம். அன்ட் ஹீ இஸ் மை பாஸ். இந்த விஷயத்தை இதுக்கு மேல பேச வேண்டாம் சர்…” மென்மையாக கூறினாலும், கடினமாகக் கூறினாள் ப்ரீத்தி.

“இப்ப எதுக்காக ப்ரீத்தி பற்றின பேச்சு…” என்று மெலிதாக புன்னகைத்தவன், “வாங்க மாமா… நாம ரெண்டு பேருமா சேர்ந்தே ஐபிஎல் மீட்டிங்க்ஸ் அட்டென்ட் பண்ணலாம். ஐ ம் வெரி ஈகர் டூ அசிஸ்ட் யூ. எனக்கும் கொஞ்சம் வேலை சொல்லி தாங்க… உங்க அனுபவம், எனக்கு பாடம்…”

‘இவ்வளவு அடக்கம் எங்க இருந்துய்யா உனக்கு வந்துச்சு?’ என்று ஆச்சரியமாக ப்ரீத்தி அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மாதேஸ்வரனுக்குள் ஒரேடியாக குளிர்ந்து போனது.

இவன் அல்லவா என்னுடைய மகன் என்று மனதுக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார் அவர்.

“இப்ப நான் வோட் பண்ண மாட்டேன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?” குதர்க்கமாக கேட்ட ரவியை, ஒரு மாதிரியாக பார்த்த மாதேஸ்வரன்,

“நீங்க வோட் பண்ண முடியாதுன்னு சொல்ற அளவு என்னாச்சு ரவி? நீங்க தானே ஷானோட வெல்விஷர். அவனோட வளர்ச்சில உங்க பங்கும் இருக்க வேண்டாமா?” தன்மையாக அவர் கேட்டாலும், ரவிக்கு எரிச்சலாக இருந்தது.

“இல்ல மாமா. நத்திங்… ஜஸ்ட் சும்மா தான் கேட்டேன்.”

குடித்துக் கொண்டு, ஸ்வேதாவே கதியென்று இருந்த அம்மாஞ்சி ஷான் இல்லையிவன். வேறு! கண்டிப்பாக நிச்சயமாக வேறு! இத்தனை நாட்களில் இவ்வளவு இணக்கமாக பேசியவன் இல்லை. ஆனால் இப்போது இவனது இணக்கம், அது ரவிக்கு சரியாக படவில்லை.

அதன் பின் போர்ட் மீட்டிங்கும் வெற்றிகரமாக நடந்தது. வேறு வழியில்லாமல் ஷானுக்கு ஆதரவாகவே ஓட்டளித்து தீர்மானத்தை வெற்றி பெற செய்திருந்தான் ரவி.

ரவியின் வாயிலாகவே குகைக்குள் நுழைந்திருந்தான் ஷான்.

உள்ளே இருப்பது புலியா? அல்லது வெறும் கழுதைப்புலியா?

அமைதியாக காரினுள் அமர்ந்தவன், ஓட்டுனர் இருக்கையில் இருந்த ப்ரீத்தியை பார்த்து புன்னகைத்தபடி,

“தி கேம் ஸ்டார்ட்ஸ் நவ் பேபி…” என்றான்!

பதிலுக்கு அமைதியாக புன்னகைத்தாள் ப்ரீத்தி!