பொதிகை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எட்டு கட்டு மாளிகை. ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது என்று ஒவ்வொருவரும் எழும் நேரம் ஒவ்வொன்றாலும் ஆறு மணிக்கெல்லாம் பொதிகை பரபரப்பாக துவங்கி விடும். மாநில அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் இருவரும் இருக்கும் வீடு. போதாதற்கு குண்டலகேசியும், சித்தார்த்தும் அதி முக்கியமான வியாபார திமிங்கலங்கள்.
சித்தார்த், வயது இருபத்தி ஏழு. மாநிறம். ஈஸ்வரியின் பிரதிவார்ப்பு, உருவத்தில் மட்டும். குணத்தில் சாணக்கியன். எங்கே அடிக்க வேண்டும், எங்கே பதுங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவன். அவனுக்கு அரசியலில் இறங்கி பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்பதெல்லாம் நோக்கமில்லை. பதவியிலிருக்கும் பத்து பேரை கைக்குள் வைத்துக் கொண்டு எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பவன், அதையே செய்தும் வருகிறான். திருமணத்தில் நாட்டமில்லை. அதற்காக பெண்களிடம் கண்ணியம் காத்துக் கொண்டும் இல்லை. அவன் தேவைக்கு பாவை. அவ்வளவுதான்!
வளையாபதிக்கு அவனைப் பற்றி நன்றாகவே தெரியும். ஆனால் அவனை அவரால் கட்டுப்படுத்த முடியாது. திருமணம் செய்து வைத்து விட்டால் சற்று நிம்மதியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும் அவருக்கு பிடி கொடுக்காமல் சுற்றிக் கொண்டிருந்தான் சித்தார்த். திருமணம் அவனுக்கு தடைக் கல் என்பது அவன் எண்ணம்.
அவனது இந்த குண விசேஷங்களுக்கு காரணம் குண்டலகேசி. நூறு சித்தார்த்துக்கு சமம் அவர். வஞ்சம், சூழ்ச்சி என்று அனைத்து நரித்தந்திரங்களின் மொத்த உருவம். வளையாபதி அரசியலில் இருந்தாலும், மனைவிக்கு நேர்மையானவர். ஆனால் குண்டலகேசி அப்படியல்ல! அவருடனே இருந்த சித்தார்த் படித்தது அவரது குணத்தைதான். அதை வளையாபதி உணர்ந்த போது, காலம் கடந்திருந்தது. மகன், அவரது பிடியை விட்டு நழுவியிருந்தான்.
குண்டலகேசியின் முதல் மகன், நிலவன் வியாபாரத்தில் அடியெடுத்து வைத்திருப்பவன். வயது இருபத்தி ஐந்து. படிப்பு, பெயருக்கு ஒரு இஞ்சினியரிங் டிகிரி. தந்தையின் குணங்களில் பாதியை கொண்டவன். ஷார்ட் கட் எதுவென்று யோசிப்பவன். அவனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எந்த வழியையும் உபயோகித்துக் கொள்ள தயங்காதவன். சித்தார்த்தின் மறுபதிப்பு! வியாபாரம் மட்டுமல்ல, அனைத்திலும் சித்தார்த் தான் இவனுக்கு முன்னோடி.
இரண்டாவது மகன் நந்தனுக்கு நிவேதாவை போல அரசியலில் ஆர்வம். அவ்வப்போது கூட்டங்களுக்கு நிவேதாவுடன் போவான். நேர்மையாளன். கம்யுனிஸ சித்தாந்தங்கள் மேலும், சமூக அரசியலிலும் ஆர்வம் அதிகம். நீதி அனைவருக்கும் சமமானது என்ற பொதுவுடைமை கொள்கையுடையவன். சமூக நீதியின் முக்கியத்துவத்தை அறிந்தவன். பிற்போக்குத்தனங்களை வெறுப்பவன். குண்டலகேசிக்கும் இவனுக்கும் ஏழாம் பொருத்தம் தான்.
கடைக்குட்டி பிரகதி அனைவருக்குமே மிகவும் ஸ்பெஷல். மொத்த குடும்பத்தின் செல்லகுட்டி. பிபிஏ இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி. வாழ்க்கை அவளை பொறுத்தவரை அழகானது, வண்ணமயமானது, அனுபவிக்க வேண்டியது. பிடித்தது ஓவியமும் காதலும். பிடிக்காதது பொய்கள்.
வளையாபதியின் தங்கை மணிமேகலை. அவரது குடும்பமும் பொதிகையில் தான் இருந்தார்கள். இப்போது பாதி திருச்சிவாசி, பாதி சென்னைவாசிகள். ஒரே தங்கையை பிரிய மனமில்லாமல் கூடவே வைத்துக் கொண்டார்கள் வளையாபதியும் குண்டலகேசியும். அவரது கணவர் சிந்தன் மிகப் பிரபலமான சினிமா இயக்குனர். இரண்டு முறை தேசிய விருது பெற்றவர். கொஞ்சம் பீத்தல் பீதாம்பரம்.
மணிமேகலையின் முதல் மகன், ரிஷபன், சாப்ட்வேர் இஞ்சினியர். அமெரிக்கா ரெட்மண்ட் வாஷிங்டனில் ஜாகை. சென்னை ஐஐடியில் பிடெக், அகமதாபாத் ஐஐஎம்மில் எம்பிஏ படித்து முடித்தவனை, மைக்ரோசாப்ட் வாரியணைத்துக் கொண்டது. நல்ல பதவி. வயது இருபத்தி எட்டு. இன்னும் திருமணம் முடிக்காமல் வீக்கென்ட் பார்ட்டி, டேட்டிங் என்று வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் கட்டிளங்காளை.
ரிஷபனுக்கு நிவேதாவை திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பது மணிமேகலையின் விருப்பம், ஆசை. ஆனால் ரிஷபனே இன்னமும் செவி சாய்க்காமல் இருப்பதுதான் அவரது கோபம். ஆனாலும் அவ்வப்போது அவனை கெஞ்சிக் கொண்டிருக்கிறார். அவன் தலையாட்டினால் தானே, அண்ணனிடம் பேச முடியும்!
இரண்டாவது; இரட்டையர், வித்யா, சத்யா. வயது இருபத்தி ஆறு. இதில் வித்யா ஆர்கிடெக்சர் முடித்து, இன்டீரியர் டிசைனிங்கில் மேற்படிப்பை முடித்து, அதையே தொழிலாகவும் கொண்டவள். சென்னைவாசி. யாருடைய பிரச்சனையிலும் தலையிட மாட்டாள். அதே போல யாரையும் தன்னுடைய விஷயங்களில் தலையிடவும் விட மாட்டாள். கறார் பேர்வழி. எதுவாக இருந்தாலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான்.
சத்யா பேஷன் டிசைனிங்கில் பட்டம் பெற்று தற்போது தனியாக சென்னையில் பொட்டிக் நடத்தி வருகிறாள். ஊரின் முக்கால்வாசி விஐபிகளின் திருமதிகளும் செல்விகளும் இவளது கஸ்டமர்கள். அதுவுமில்லாமல், பல சினிமா நட்சத்திரங்களுக்கும் டிஸைனர். புன்னகை முகம் மாறாமல் காரியம் சாதிப்பதில் சமர்த்தி. கோபம் காட்ட வேண்டிய இடங்களில் கூட புன்னகைத்தே வெற்றி கொள்வாள். அதனால் வீட்டின் அத்தனை பேரின் பிரியத்தையும் சேர்த்து வைத்திருப்பவள்.
மகள்கள் இருவருக்கும் சென்னையில் தொழில் என்பதாலும் சிந்தனுக்கும் பாதி நேரம் சென்னை தான் வாசம் என்பதாலும் மணிமேகலைக்கு காடாறு மாதம், நாடாறு மாதம் தான்!
குண்டலகேசியின் மனைவி மாதவிக்கு கைவினை பொருட்கள் மற்றும் ஆண்டிக் சிற்பங்களின் மேல் விருப்பம் அதிகம். கூடவே ஓவியமும் கூட! அவரது ஆர்ட் காலரி தான் அவரது மூச்சுகாற்று! கூடவே தஞ்சாவூர் ஓவியங்களையும், தட்டுகளையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். தன்னளவில் மிசஸ் பர்பெக்ட். கணவரின் தகிடுதத்தங்கள் குள்ளநரித்தனங்கள் எல்லாம் தெரிந்தாலும், அதை தெரிந்தது போல காட்டிக் கொள்ள மாட்டார்.
குண்டலகேசி பயப்படுவது என்றால் மாதவியின் பார்வைக்கு மட்டும் தான். எதாவது பிரச்சனை என்று வந்தால் சாஷ்டங்கமாக காலில் விழுந்து விடுவார். அதை வைத்தே மாதவி அவரை ஆட்டி வைப்பதும் உண்டு. ஆட்டி வைக்கிறார் என்பதற்காக மாதவி ஒன்றும் கெட்டவரில்லை. குண்டலகேசியை மாதவியால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்பதால் தான் அந்த அவதாரம். மற்றபடி பிரச்சனைகளுக்குள் போகாதவர். மூத்தவர் ஈஸ்வரிக்கு அனுசரித்து போய்விடுவார். எதுவாக இருந்தாலும் மூத்தவர் சொல்வது சரியாக இருக்கும் என்ற இவரது நிலையும் தான் பொதிகையை கட்டி வைத்திருக்கிறது என்பதும் உண்மை.
ஈஸ்வரி அனைவரின் ஆணிவேர். பெரிதாக அவருக்கு வெளியுலக படாடோபங்களின் மேல் விருப்பமிருந்ததில்லை. அடுப்படியே திருப்பதி, ஆம்பிடையானே வெங்கடாசலபதி என்னும் ரகம். வீட்டுக்கு அடுத்து, அவருக்கு விருப்பமானவை கோவில்கள், பூஜை, விசேஷங்கள். மிக மிக எளிமையானவர். பிள்ளைகளின் வளர்ச்சியை பார்த்து மட்டுமே சந்தோஷப்படுபவர். எதன் மேலும் பெரிதாக ஆசையில்லாதவர்.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு குண விசேஷத்தோடு இருப்பதாலும் முழு வீடும் அதிகார கேந்திரமாக இருப்பதாலும் வெற்றி யாரோடும் அவ்வளவாக ஒட்ட மாட்டான். தாமரை இலை தண்ணீர் தான்.
மாடியிலிருந்து கம்பீரமாக இறங்கி வந்தாள் நிவேதா. எப்போதும் போல காட்டன் சுடிதார். பொதுக்கூட்டம் மற்றும் முக்கியமான மீட்டிங் என்றால் மட்டும் காட்டன் புடவை. காதில் மிகச்சிறிய வைரத் தோடு. கழுத்தில் மிகச்சிறியதாக வைர பென்டன்ட் கொண்ட மெல்லிய செயின், இடது கையில் ஆப்பிள் வாட்ச், வலது கையில் வெறும் மோதிரம் மாத்திரம். அதை தவிர யாதொரு அலங்காரமுமில்லாமல் டைனிங் டேபிளில் வந்தமர்ந்தவளை பார்த்த ஈஸ்வரி முறைத்தார்.
“வெறுங்கையா இப்படி இருக்காதன்னு எத்தனை தடவை சொல்றது நிவி?” எரிச்சலாக கேட்டார் ஈஸ்வரி.
“எனக்கிதுதான் வசதியா இருக்கு. நீ சொன்னதுக்காகத்தான செயின் போட்டுட்டு போறேன்?”
“எது? நீ போட்டுட்டு இருக்கறதுக்கு பேர் செய்னா?”
“பின்ன? இதுக்கு பேர் மோதிரமா?” கழுத்திலிருந்ததை காட்டிக் கேட்க,
“கொஞ்சம் அடக்கமா பேசு நிவி. இவ்வளவு வாய் தப்பு…” முறைத்தபடியே ஈஸ்வரி கூறிக் கொண்டிருக்கும் போது வெற்றி அந்த பக்கமாக வந்தான், வளையாபதியை பார்க்க!
பக்கத்திலிருந்த அவுட்ஹவுசில் தான் அவனது ஜாகை. ஒரே தங்கை, வெண்பா. படிப்பது எம்ஏ ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன், டெல்லி லேடி ஸ்ரீராம் காலேஜில். அதற்கு முன் கொடைக்கானலில் போர்டிங் ஸ்கூலில் தான் படித்தாள். தன் தங்கையை வெற்றி தன்னுடன் பொதிகையில் தங்க விட்டதேயில்லை. பதினைந்து வயதில், பத்தாவது முடித்தவுடன் இங்கு வந்தான். வெண்பா பிறந்த கொஞ்ச நாளில், நோய் கண்ட தாய் இறக்க, இவன் பத்தாவது படிக்கும் போது தந்தையும் ஒரு விபத்தில் இறந்து போனார். அப்போது வெண்பாவுக்கு வயது ஏழு தான்.
நிர்கதியாக நின்றவர்களை பார்த்துக் கொள்ள உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் என யாரும் முன்வரவில்லை. சுமையாக எண்ணினார்களோ என்னவோ!
வெற்றிவேலின் தாயின் வழியில் வளையாபதியும் குண்டலகேசியும் ஒன்று விட்ட, இரண்டு விட்ட என்ற வகையில் தூரத்து அண்ணன் முறை.
கண்களில் வெறுமையை சுமந்து நின்ற வெற்றியையும், பயத்தோடு இருந்த வெண்பாவையும் பார்க்கும் போதே மனம் கனத்து போனது ஈஸ்வரிக்கு.
வளையாபதியிடம் தனது கருத்தைக் கூற, மறுநொடி எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருவரையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டார். கூட்டிக் கொண்டு வந்ததோடு நில்லாமல், வெண்பாவை கொடைக்கானலில் போர்டிங் பள்ளியில் சேர்த்தும் விட்டார் ஈஸ்வரி.
காரணம், வீட்டிலிருந்த பிள்ளைக் கூட்டம் தான். புதிதாக வந்த இருவரையும் யாரும் சேர்த்துக் கொள்ளவே இல்லை என்பதோடு, ராகிங் செய்வது போல ஒவ்வொருவரும் இருவரையும் பந்தாடினர். வெற்றி அனைவரையும் விடப் பெரியவன் என்பதால், அனைத்தையும் பொறுத்துக் கொண்டான், அவர்களை சமாளிக்கவும் செய்தான். ஆனால் வெண்பாவுக்கு அது தெரியவில்லை.
ஏழு வயது குழந்தை அவர்களையெல்லாம் பார்த்து இன்னமும் பயந்து அழுதது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர், இதுகளை அடக்க முடியாது என்று முடிவெடுத்து, அவளை போர்டிங் பள்ளியில் சேர்த்து விட்டார்.
லீவுக்கு வரும் போதெல்லாம் வெண்பாவை அரட்டி வைக்கும் கூட்டத்தை போகப் போக பழகிக் கொண்டாள் அவள். இல்லை பழக்கி வைத்தான் வெற்றி. ஆனால் கூடுமானவரை அவளை பொதிகைக்கு அழைத்து வருவதை தவிர்த்து விடுவான். விவரம் தெரிந்த பிறகு, விடுமுறைகளுக்கு வெண்பாவை அழைத்துக் கொண்டு கிராமத்து வீட்டுக்கு சென்று விடுவான்.
தந்தை இறந்தாலும், மகாதானபுரத்தில் வீடு அப்படியேதான் இருந்தது. அதனால் பிரச்சனையில்லை. அவனது இந்த செயல் ஈஸ்வரிக்கு பெரும் நிம்மதியாக இருந்தது. பின்னே என்ன நினைப்பதாம்?
சிறு பிள்ளையென கூட நினைக்காமல், சித்து, நிலவன், ரிஷபன் என்று கூட்டமாக அந்த பிள்ளையை கொடுங்கோல் தனமாக நடத்துவதை எப்படி அவரும் பொறுப்பார்?
மொட்டை வெய்யிலில் முட்டிப் போட செய்வது, கிள்ளி வைப்பது, சிறு தவறுகளுக்கெல்லாம் அடிப்பது, வேலைக்காரர்களை விட மோசமாக நடத்துவது என அனைத்தும் நடந்தது. அதுவும் அவர்கள் முன் உணவுண்டு விடக் கூடாது. ஏன் தான் சாப்பிட்டோமோ என்று எண்ண வைத்து விடுவார்கள்.
அதனால் அவர்கள் யார் முன்னும் வெற்றி சாப்பிட மாட்டான். எதுவும் குடிக்க மாட்டான். நல்ல ஆடை உடுத்த மாட்டான். ஏன்… பேசக் கூட மாட்டான். ஆனால் இவையெல்லாம் பயத்தால் அல்ல… அவனுக்கு அவர்களோடு பிரச்சனையை வளர்த்துக் கொள்ள தேவையில்லை. ஆனால் விடுமுறைக்கு வரும் வெண்பா மாட்டிக் கொள்வாள்.
ஒவ்வொரு நாளும் அவளை அழ வைப்பார்கள். எத்தனை முறை ஈஸ்வரி பார்த்துப் பார்த்து வெண்பாவை காப்பாற்றுவதாம்? அதனால் அவர் சொல்லாமலே, தங்கையை அழைத்துக் கொண்டு விடுமுறைக்கு மகாதானபுரத்துக்கு வெற்றி சென்றபோது உள்ளுக்குள் நிம்மதி படர்ந்தது.
அவரால் பிள்ளைகளை கட்டுப்படுத்த முடியாது என்பதல்ல, ஆனால் கேசி அதை விரும்புவதில்லை. வளையாபதிக்கு இதையெல்லாம் பார்க்க நேரமிருந்ததில்லை. மற்றவர்களும் அவரவர் வேலைகளில் ஆழ்ந்து இருக்கையில் தஞ்சமென வந்த பிள்ளைகள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.
இதை ஈஸ்வரி உணரும் முன் வெற்றி உணர்ந்து கொண்டான், அந்த வயதிலேயே!
அவனை பொறுத்தமட்டில் படிக்க வைத்து, அன்னமிடும் குடும்பம் தெய்வத்துக்கு சமம். அதற்கு முன் மற்ற சிரமங்கள் ஒரு பொருட்டாக தெரியவில்லை. அதை யாரிடமும் புகார் தெரிவிக்கவும் நினைக்கவில்லை.
ஈஸ்வரி வளையாபதியின் முகத்தைப் படிப்பான், அதன் படி மட்டுமே செயல்படுவான். இப்போது வரை அப்படித்தான்.
“உக்காரு வெற்றி. சாப்பிடலாம்…” என்றவர், அவனுக்கும் ஒரு தட்டு வைக்க, நிவேதா முறைத்தாள்.
‘எனக்கு நீ சமமா?’ என்றது அவள் பார்வை.
“வேணாம்மா. டிபன் ஆச்சு.” என்று அவன் மறுக்க, திரும்பி நிவேதாவை பார்த்து முறைத்தவர்,
“மணி எட்டு தானடா ஆகுது? அதுக்குள்ள சாப்பிட்டியா?” கேள்வியாக அவனைப் பார்த்தபடி கேட்டார். அவருக்குத் தெரியும், யார் இருந்தாலும் வெற்றி சாப்பிட உட்கார்ந்து விட மாட்டான், எப்போதுமே. அதுவும் சுயசமையல் ஆரம்பித்த பின், அவன் அங்கே உண்பது அரிதாகித்தான் போனது.
காரணம் தான் தெரிந்ததாயிற்றே!
“ம்ம்ம்… ஆச்சுமா”
“என்ன செஞ்ச?” எதிலாவது மாட்ட மாட்டானா என்று அவர் கேட்க, அவனோ யோசிக்காமல்,
“தோசை வார்த்துகிட்டேன்…” என்றான்.
“மாவு அரைச்சியா?” விட்டேனா என்று ஈஸ்வரி கிடுக்கி பிடி போட,
“இல்லம்மா… நேத்து நைட் பேக்கட் மாவு வாங்கி வெச்சுட்டேன்…” என்று பதிலுக்கு நழுவினான்.
“ஏன் மாவு கூட இங்க வாங்க மாட்டியாடா?” அவருக்கு கஷ்டமாக இருந்தது. கூடவே அவனது சுயமரியாதையை நினைத்து பெருமையாகக் கூட இருந்தது.
“இன்னைக்கு வாங்கிக்கறேன் ம்மா…” அவ்வளவுதான் அவனது பதில். ஆனால் வாங்க மாட்டான். அதுவும் அவருக்கு தெரியும். அவனால் ஈஸ்வரியின் மனதை காயப்படுத்த முடியாது. அவனுடைய சுயமரியாதையையும் விட்டுத்தர முடியாது.
“பார்க்கறேன். நீ என்ன பண்றன்னு…” என்று ஈஸ்வரி ஹீனமாக கூற,
“எனக்கு டிபன் வைப்பியா?இல்ல அவனையே கொஞ்சிட்டு இருப்பியா?” கடுப்பாக அவள் கேட்க,
நிவேதாவை திரும்பியும் பார்க்காமல் வளையாபதியின் அறையை நோக்கிப் போனான் வெற்றி. அன்றைய அவரது நிகழ்ச்சி நிரல்களை முடிவு செய்வது அப்போதுதான்.
“பாவம் பண்ணாத நிவி. பசியோட ஒருத்தர் வராங்கன்னா அவங்களை சாப்பிட சொல்லணும். இப்படி முறைச்சு விரட்ட கூடாது. அதுவும் நம்ம வெற்றிடி…” எப்போதும் போல நிவேதாவை கெஞ்சினார் ஈஸ்வரி. இந்த வயதில் நிவிக்கு இவ்வளவு அகங்காரம் ஆகாது என்பது அவரது எண்ணம். ஆனால் அரசியலும், செல்வாக்கும் அவளது அகங்காரத்தை இன்னமும் அதிகமாக்கியதே தவிர குறைக்கவில்லை.
“அவன் தான் சாப்ட்டேன்னு சொல்றானில்ல… என்னமோ நான் தான் அவனை பட்டினி போட்டு கொல்ற மாதிரி பேசற…”
“அவனை பார்த்தா சாப்ட்ட மாதிரி தெரியுதா?”
“அவன் சாப்பிடலைன்னாலும் நான் தான் காரணமா?” எகிற தயாரானாள் நிவேதா.
“அதுங்களையே தூக்கி வெச்சுட்டு ஆடு. எனக்கு டிபனும் வேணாம் ஒன்னும் வேணாம்…” என்று அவள் கோபமாக எழுந்தாள்.
“நிவி…” அழுத்தமாக அழைத்தார் ஈஸ்வரி. உணவின் மீது கோபத்தைக் காட்டுவது அவருக்கு பிடிக்காத ஒன்று. அவரது அந்த அழுத்தமான அழைப்பிற்கு யாராக இருந்தாலும் பணிந்து தானாக வேண்டும்.
கோபமாக எழுந்தவள், மெளனமாக அமர்ந்தாள்!
அவரும் எதுவும் பேசாமல் தட்டில் பூரி மசாலாவையும் வைக்க, அந்த பூரி முடியும் போது வேலையாள் முறுகலாக வார்த்த தோசையை கொண்டு வர, ஈஸ்வரி எடுத்து அவளுக்குப் பரிமாறினார்.
எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்து எழுந்தவள்,
“இன்னைக்கு நான் வர லேட்டாகும் ம்மா…” என்று கூற,
“ஏன் நிவி?”
“தொகுதியை சுத்தி ஒரு ரவுண்ட்ஸ் போலாம்ன்னு இருக்கேன். இன்னைலருந்து ஸ்டார்ட் பண்றேன். ஒவ்வொரு ஏரியாவா முடிச்சா கரெக்டா இருக்கும்…”
“கூட வெற்றியை கூட்டிட்டு போ…” என்றவரை முறைத்தாள்.
“இன்னைக்கு அவன், அப்பா கூட டெல்லி போறான்… தெரிஞ்சா பேசு. எதுக்கெடுத்தாலும் வெற்றி வெற்றிங்காத… அதான் வாசு இருக்கான், சேகர் இருக்கான்ல…” பல்லைக் கடித்தபடி நிவி கூற,
“ஆமா ஈசு. நான் தான் நைட்டே சொல்லிட்டு இருந்தேன்ல. அதோட வெற்றி எனக்குத்தான் பிஏ. உன் பொண்ணுக்கு தான் வாசு இருக்கான்ல…” என்றபடி வளையாபதி வர, பின்னாலேயே வெற்றியும் வந்தான்.
“யார் இருந்தா என்ன? வெற்றி இருந்தா தான் எனக்கு நிம்மதியா பொண்ணை வெளிய அனுப்ப முடியுது…” என்று முனகினார் ஈஸ்வரி.
“அதுக்காக என்கிட்ட பாதி, உன் பொண்ணுகிட்ட பாதின்னு தம்பியை பிரிச்சு குடுத்துடலாமா?” வளையாபதி வாய்விட்டு சிரிக்க, நிவிக்கு அது பிடிக்கவே இல்லை. அதிலும் தன் தந்தை அவனை உரிமையாக தம்பி என்பதையோ, குடும்பத்தில் ஒருவர் என்று ஈஸ்வரி நடத்துவதையோ ஒரு போதும் அவளால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. அவள் மட்டுமில்லை. அவளது அண்ணன், தம்பிகள் என்று அனைவரும் அப்படித்தான்.
“எனக்கு பாதியெல்லாம் வேண்டாம். நீங்களே மொத்தமா வெச்சுக்கங்க.” வலது கையை உயர்த்தி கூறியவளை பார்க்கையில் வளையாபதியின் சிரிப்பு இன்னமும் அதிகமாகியது.
ஈஸ்வரி வளையாபதிக்கு தட்டை வைக்க, “வெற்றிக்கொரு தட்டு வை ஈசு..” என்றவர் வெற்றி பக்கம் திரும்பி, “டேய் தம்பி, உட்காரு…” என்றவரின் வார்த்தையை மீற முடியாமல் அமர்ந்தான்.
இதுதான் வெற்றி! வளையாபதியின் வார்த்தைகளே அவனது சாசனம்!
ஈஸ்வரி நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டார். வெற்றி நிவேதாவை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. எப்படியும் முறைப்பாள். அதுபோலத்தான் முறைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவளது முறைப்பெல்லாம் வளையாபதியிடம் செல்லுபடி ஆகாதல்லவா!
அவசரமாக மூன்று பூரிகளை மட்டும் பியைத்து வாயில் போட்டுக் கொண்டவன், எழுந்து கொண்டான். சித்தார்த் வருவதற்குள்ளாகவாவது எழுந்து விட வேண்டுமே என்ற தவிப்பு அவனுக்குள். ஆனால் அதை அவன் காட்டிக் கொள்ளவில்லை.
ஈஸ்வரிக்கு அவனைப் புரியும் என்பதால், “நிதானமாத்தான் சாப்பிடேன்டா… உங்க அய்யா வந்தாதான ப்ளைட்ட புடிப்ப? இல்ல நீ தனியா போய் புடிக்கப் போறியா?” என்று கேட்க, மெலிதாக புன்னகைத்தான்.
வளையாபதி பக்கம் திரும்பியவன், அதே புன்னகையோடு, “முன்னாடி ஆபீஸ்ல இருக்கேன் ய்யா…” என்றவன் நிவியை திரும்பியும் பார்க்காமல் வேக எட்டுக்களை வைத்து அகன்றான்.
நிவி தான் அவன் காட்டிய அந்த மெல்லிய புன்னகை முகத்திலேயே உறைந்து அமர்ந்திருந்தாள்.
“குட் மார்னிங் அம்மி…” என்று குதித்தபடியே பிரகதி வந்ததோ, தொம்மென்று நிவி பக்கத்திலேயே குதித்து அமர்ந்ததோ, “எனக்கெல்லாம் குட் மார்னிங் இல்லையாடா சின்னகுட்டி?” என்று வளையாபதி கேட்டதோ, கூட நிவியின் மண்டையில் உரைக்கவில்லை.
“வெற்றி மாமா எங்க அம்மி?” என்று ஈஸ்வரியிடம் அவள் கேட்ட கேள்வியில் தான் மீண்டாள் நிவி.
“ஆபீஸ்ல இருக்கான் பிரகாக்குட்டி…” என்று ஈஸ்வரி கூறிய பதிலை பெற்றுக் கொண்ட பிரகதி, “எனக்கொரு ஸ்ட்ராங் காபி போட்டு வை அம்மி. மாம்ஸ் கிட்ட ஒரு வேலை சொல்லிருந்தேன்… என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன்…” என்று குதித்துக் கொண்டே கூறியவள் போக முயல, அவளது கையை பிடித்துக் கொண்டாள் நிவி.
கோபச் சிவப்பில் அவளது முகம் செந்தணலாக கொதித்துக் கொண்டிருந்தது.
“என்ன நிவிக்கா?” அப்பாவியாக பிரகதி கேட்க,
“அவனெல்லாம் உனக்கு மாமாவா?” பல்லைக் கடித்தபடி கேட்ட நிவேதாவை பார்க்கும் போதே தெரிந்தது, மண்டையில் கொட்டு கன்பார்ம் என!
“அம்மி… வெற்றி மாமா முறைன்னு தான சொன்ன?” பெரியம்மாவை பாவமாக பார்த்துக் கேட்டாள் பிரகதி. பாவம் சிறுபிள்ளை, அப்பாவி! பெரியதுகள் எல்லாம் இதை ஒப்புக்கு சப்பாணியாக கூட ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டதில்லையே!
“ஆமா சின்னக்குட்டி. வெற்றி மாமா முறைதான்…” ஈஸ்வரி அழுத்தமாக கூற,
“ம்மா யார் யாரை எங்க வைக்கனுமோ அங்க வை… சும்மா உறவு கொண்டாடிகிட்டு இருக்காத.” கோபமாக அழுத்தமாக கூறியவள் நிமிர்ந்து பார்க்க, வெற்றி நின்று கொண்டிருந்தான்.
அவனது முகம் துடைத்து வைக்கப்பட்டு இருந்தது, அதிலிருந்து யாரும் எந்த உணர்வையும் பிரித்துப் பார்த்து விட முடியாது என்பது போல!