siraku14

siraku cp-6012b8cc

siraku14

சிகு 14

தனது பணி நேரத்தை முடித்துக்கொண்டு ஷியாம் அந்த அறைக்கு வந்தபோது அஞ்சனா அமைதியாகக் கட்டிலில் அமர்ந்திருந்தாள். அப்போதும் அவளருகில் அந்த ஃபைல் இருந்தது. ஸ்கேன் செய்த பிற்பாடு இன்றைக்கு அவன் கொடுத்த படங்கள் அடங்கிய ஃபைல். 

“டின்னர் ஆச்சா?” கேட்டபடி அங்கிருந்த சோஃபாவில் வந்தமர்ந்தான் டாக்டர்.

“ஆச்சு சீனியர்.”

“சாப்பாடு ஓகேவா? இல்லை வேற ஏதாவது ஏற்பாடு பண்ணணுமா?”

“ஐயையோ! இதுவே ரொம்ப நல்லா இருக்கு.” சொன்னவளின் முகத்தைப் பார்த்தான் ஷியாம். கோப தாபங்கள், கவலைகள் ஏதுமின்றி நிர்மலமாக இருந்தது. 

“வேற ஏதாவது வேணுமா அஞ்சு?”

“ம்ஹூம்… எதுவும் வேணாம் சீனியர்.” பதில் சொல்லிவிட்டு அப்போதும் அவள் அமைதியாகத்தான் அமர்ந்திருந்தாள். இன்றைக்கு முழுவதும் அவள் வீட்டார் யாரும் வந்து அவளைப் பார்க்கவில்லை. அதைப்பற்றிப் பெண் ஏதாவது பேசுவாள் என்று ஷியாம் நிறையவே எதிர்பார்த்தான். ஆனால் அவள் அதைப்பற்றி எதுவுமே பேசாதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போதும் அவள் விரல்கள் அந்த ஃபைலை வருடிய படியே இருக்கவும் ஷியாமிற்கு அவளது மனநிலைப் புரிந்தது. எழுந்து அவளருகே வந்தவன் அந்த ஃபைலை எடுத்தான். 

“சீனியர்… அது…” பெண் பதறியது.

“இன்னைக்கு முழுக்க நீ தூங்கலை, இப்பவாவது கொஞ்சம் தூங்கலாமே, எத்தனைத் தடவைதான் அந்த ஃபைலையே பார்த்துக்கிட்டு இருப்பே?” 

“தூக்கம் வரலையே!”

“அஞ்சு… உங்கம்மாவை வரச்சொல்லட்டுமா? அவங்கக் கூட இருக்கணும் போல இருக்கா உனக்கு?”

“இல்லையில்லை, எதுக்கு அவங்களை வீணா சிரமப்படுத்திக்கிட்டு, நான் நாளைக்கு ஃபோன் பண்ணிப் பேசிக்கிறேன்.” அப்போதுதான் அவனைக் கவனித்தாள் பெண்.

“உங்களுக்கு நைட் ட்யூட்டியா சீனியர்?”

“இல்லைம்மா, இப்பதான் ட்யூட்டி முடிஞ்சு வர்றேன்.”

“அப்போ வீட்டுக்குப் போகலை?!”

“இல்லை.” அவள் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்த ஷியாம் கட்டிலின் மேல் காலை நீட்டி வாகாக அமர்ந்து கொண்டான். 

“சாப்பிட்டீங்களா?”

“ம்ஹூம்.”

“ஏன்?”

“சாப்பிடப் புடிக்கலை.”

“வீட்டுக்கு… போகலையா?” தயங்கியபடி மீண்டும் கேட்டாள் பெண். நாற்காலியில் சாவகாசமாகத் தலையைச் சாய்த்துக் கண்களை மூடிக்கொண்டான் டாக்டர். பதிலேதும் சொல்லவில்லை.

“உங்களைத்தான் கேட்கிறேன்?”

“ஏன்? நான் இந்த ரூம்ல இருக்கிறது உனக்குப் புடிக்கலையா?”

“நான் என்னக் கேட்கிறேன், நீங்க என்ன சொல்றீங்க?” அவளின் சினம் கலந்த குரலில் தலை சாய்த்தபடியே கண்களை மட்டும் திறந்து பார்த்தான் ஷியாம்.

“அஞ்சுக்கு கோபமெல்லாம் வருது!” அவன் கண்கள் அப்போது சிரித்தது. அவளுக்குக் கொடுக்க வேண்டிய வைட்டமின் மாத்திரைகளோடு ட்யூட்டியில் இருந்த நர்ஸ் அறைக்குள் நுழைந்தாள். 

“சிஸ்டர்.”

“சொல்லுங்க மேடம்.”

“டாக்டர் இன்னும் டின்னர் எடுக்கலை, என்னால கட்டிலை விட்டு எந்திரிக்க முடியாது, நீங்க ஏதாவது ஏற்பாடு பண்ணுறீங்களா? ப்ளீஸ்…”

“ஒன்னும் ப்ராப்ளம் இல்லை மேடம், இந்த ரூம் நம்பரை கேன்டீன்ல சொன்னா ஃபூட் குடுப்பாங்க.”

“ப்ளீஸ்… ஒரு பிளேட் கொண்டு வர்றீங்களா?” அவள் கேட்கவும் டாக்டரை பார்த்தாள் நர்ஸ். எதுவும் பேசாமல் ஒரு புன்னகையோடு தலை சாய்த்திருந்தான் ஷியாம். அவன் செயலே சம்மதம் என்பது போல இருக்க நர்ஸ் வெளியே போய்விட்டாள். 

“ஏன் வீட்டுக்குப் போகலை?” உரிமையான கேள்வி.

“புடிக்கலை.” ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது.

“சாப்பிடவும் புடிக்கலை, வீட்டுக்குப் போகவும் புடிக்கலைன்னா என்ன அர்த்தம்?”

“ஹாஸ்பிடல்ல இருக்கப் புடிச்சிருக்குன்னு வெச்சுக்கோயேன் அஞ்சு.”

“விடிஞ்சாப் பொழுது சாயுற வரைக்கும் ஹாஸ்பிடல்லதானே இருக்கீங்க? அப்புறமென்ன? வீட்டுக்குப் போகலாமில்லை?” 

“ஏய் பொண்ணே! என்னைக் கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடு.” அவன் சொல்லும் போதே நர்ஸ் உள்ளே நுழைந்தாள். கையிலிருந்த உணவை டாக்டரிடம் நீட்டினாள்.

“தேன்க் யூ.” அவன் சொல்ல வேண்டிய நன்றியை அவள் சொன்னாள். மாத்திரைகளை அவளிடம் கொடுத்துவிட்டு ரத்த அழுத்தத்தைச் சோதித்தாள் நர்ஸ். 

“எப்பிடி இருக்கு?” அவன் சாப்பிட ஆரம்பித்திருந்தான்.

“நார்மலா இருக்கு டாக்டர்.”

“குட்.” சொல்லிவிட்டுச் சாப்பாட்டைத் தொடர்ந்தவனை அந்த நர்ஸ் ஒரு குறுகுறுப்போடு பார்த்தாள். பழக இனிமையான மனிதர்தான் இந்த டாக்டர். ஆனாலும் இதுபோல மிகவும் உரிமையுடன் அவர் எந்த நோயாளியுடனும் இதுவரைப் பழகி அவள் பார்த்ததில்லை. அந்த நர்ஸை பொறுத்தவரை அஞ்சனா வெறும் நோயாளி. டாக்டரின் மனதிலிருக்கும் எண்ணங்களை அவள் அறியமாட்டாள். தனது வேலையை முடித்துக்கொண்டு நர்ஸ் ரூமைவிட்டு வெளியே போய்விட்டாள். சரியாக அந்த நேரம் பார்த்து அவன் அலைபேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான் ஷியாம். அவன் அப்பா அழைத்துக் கொண்டிருந்தார்.

“முக்கியமான கால் இல்லைன்னா முழுசாச் சாப்பிட்டு முடிங்க சீனியர்.” அவள் பேச்சைக் கேட்பவன் போல புன்னகைத்துவிட்டு ஃபோனை அணைத்து மேசை மேல் வைத்துவிட்டான். அவள் முன்பாக அப்பாவோடு பேசும் எண்ணம் அவனுக்கும் இல்லை. ஆனால் அவள் பேச்சை ஆரம்பித்தாள். 

“விரும்பத்தகாத விஷயங்கள் இன்னைக்கு நடந்து போச்சு.” 

“அதைப்பத்தி நான் பேச விரும்பலைம்மா.” சாப்பாட்டை முடித்தவன் எழுந்து அங்கிருந்த சின்க்கில் கையைக் கழுவிக் கொண்டான்.

“ஆனாப் பேசுறது நல்லதுன்னு எனக்குத் தோணுது.” 

“பேசி ஒன்னுமே ஆகப்போறதில்லை, உன்னோட மறுப்பு என்னைப் பாதிக்கும், கோபப்பட வெக்கும், இப்போ அப்பிடி எதுவும் நடக்கவேணாம் அஞ்சு, இழப்புகளைத் தாங்குற சக்தி உனக்குமில்லை, எனக்குமில்லை, புரிஞ்சுக்கோ.” ஃப்ரெஞ்ச் வின்டோவின் அருகில் போய் நின்று வெளியே தெரிந்த வானத்தைப் பார்த்தபடி பேசினான் ஷியாம்.

“புரிஞ்சுக்க மறுக்கிறது நீங்கதான்.” 

“சரி, நீ சொன்னதை நான் ஏத்துக்கிறேன், எனக்கு ஆசைப்பட மட்டுந்தான் தெரிஞ்சிருக்கு, போராடத் தெரியலை, அடையத் தெரியலை, அனுபவிக்கத் தெரியலை, எதுவுமேத் தெரியலை.”

“ஏன் இப்பிடியெல்லாம் பேசுறீங்க?” அவள் குரல் திடமாகத்தான் வந்தது.

“வலிக்குது அஞ்சு, நானும் சாதாரண மனுஷந்தானே? தோல்விகள் எனக்கும் வலியைக் குடுக்குந்தானே? அதையேன் யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க? ஒரு தரம் தோத்துப் போனேன், உசிரை உருவி வெளியே போட்ட மாதிரி இருந்துச்சு, என்னோட இயலாமை… பொறுத்துக்கிட்டேன், திரும்பவும் தோத்துப் போன்னா எப்பிடி அஞ்சு? எதுக்காக நான் திரும்பத் திரும்பத் தோத்துப் போகணும்?” 

“எதுவும் இப்போப் பழைய மாதிரி இல்லையே?”

“ஏனில்லை? நீ இருக்கே, நான் இருக்கேன், கூடவே நமக்காக இன்னும் ரெண்டு உயிர்கள் இருக்கு, இதைவிட உனக்கு என்ன வேணும் அஞ்சு?”

“நானில்லையே ஷியாம்!” சட்டென்று உடைந்த அவள் குரல் மீண்டும் அவனைப் பெயர் சொல்லி அழைத்தது. அந்தக் குரலில் அவளருகே அவசரமாக வந்தவன் அந்தக் கட்டிலில் அமர்ந்து கொண்டான். அவன் கை அவள் ஒற்றைக் கன்னத்தை வருடியது.

“இல்லையேம்மா, இதோ இருக்கியே! ஸ்கூல்ல பார்த்த அதே அஞ்சு, சொல்லப் போனா… அதைவிட அழகியா மாறியிருக்கிற என்னோட அஞ்சு, உன்னைப் புடவையில பார்க்கும் போது எனக்கு எப்பிடி இருக்குத் தெரியுமா? இந்த மனசுக்குள்ள எவ்வளவு ஆசை இருக்குத் தெரியுமா?” அவன் பேச்சில் அவள் வெடித்து அழுதாள். அவள் என்றால் அஞ்சனா என்கின்ற அவள் மட்டும்தானா? இதுவரை அவள் வாழ்ந்த வாழ்க்கை அதில் சேர்த்தியில்லையா?! ஆனால் அவளின் கசப்பான கடந்தகாலத்தை அவன் கண்டுகொள்ளவேயில்லை.

“வேணாம் அஞ்சு, அழாதே!‌‌ இந்தக் கவலை, அழுகை, வேதனைக்கெல்லாம் இது நேரமில்லை, என்னால முடிஞ்ச வரை உன்னைப் பாதுகாக்கத்தான் நான் நினைக்கிறேன், மத்தவங்க என்னைப் புரிஞ்சுக்கலைன்னாக் கூடப் பரவாயில்லை, நீ என்னைப் புரிஞ்சுக்கோ, எனக்கு அது போதும்.”

“மத்தவங்கன்னு இங்க யாருமே இல்லை, அவங்க உங்க அம்மா.”

“உன்னை வேணாம்னு சொன்னாங்கன்னா அந்த அம்மா எனக்கு வேணாம்.”

“அது தப்பு.”

“இருந்துட்டுப் போகட்டும், நான் தப்பானவனாவே இருக்கிறேன், என்னோட வாழ்க்கையில நீ வருவியா இருந்தா எந்தத் தப்பைப் பண்ணவும் நான் தயார் அஞ்சு.”

“அப்பிடி என்ன இருக்கு எங்கிட்ட?” அவளுக்குப் புரியவில்லை.

“தெரியாது, என்ன இருக்கு, என்ன இல்லைன்னுப் பார்த்தெல்லாம் லவ் வராது, மனசு ஆசைப்பட்டிடுச்சு, காரண காரியமெல்லாம் தெரியாது, உன்னைத் தாண்டி இன்னொரு பொண்ணு மேல அந்த ஆசை வரமாட்டேங்குது, நான் என்னப் பண்ணட்டும்?”

“நம்மைச் சுத்திக் குடும்பம், சமுதாயம்னு நிறைய விஷயங்கள் இருக்கு.”

“இருக்கட்டுமே! எனக்காக உன்னோட கண்ணையும் காதையும் கொஞ்சம் மூடிக்கோ, அவ்வளவுதான்.” அவன் பேசிக்கொண்டிருக்கும் போது மீண்டும் அவன் அலைபேசி சிணுங்கியது. எழுந்து வந்து பார்த்தான். அப்பாதான் திரும்பவும் அழைத்துக் கொண்டிருந்தார். 

“சொல்லுங்கப்பா.” அழைப்பை ஏற்ற ஷியாம் ஃப்ரெஞ்ச் வின்டோவை திறந்து கொண்டு தோட்டத்திற்குள் வந்துவிட்டான்.

“ஷியாம், என்னப்பா இன்னும் வீட்டுக்கு வரலை? நைட் ட்யூட்டியா என்ன?!”

“இல்லைப்பா, ட்யூட்டி முடிஞ்சு ரொம்ப நேரமாச்சு, வீட்டுக்கு வரப்புடிக்காம ஹாஸ்பிடல்ல உட்கார்ந்திருக்கேன்.” அவன் நிஜத்தைப் பேசினான்.

“என்னப் பேசுற நீ?!” மகனின் பதிலில் அப்பா திகைத்துப் போனார்.

“கொஞ்ச நாளைக்கு என்னை இப்பிடியே என்னோட போக்குல விட்டிருங்கப்பா, என்னால முடியலை.” சலிப்பாக வந்த அவன் குரலில் உண்மையிலேயே சுந்தர்ராம் பதறிப்போனார்.

“என்னாச்சு ஷியாம்? ஏதாவது பிரச்சினையா? அந்தப் பொண்ணு வீட்டுல ஏதாவது சொல்றாங்களா?”

“இந்த உலகத்தையே என்னால சமாளிக்க முடியுங்கிற தைரியம் எனக்கு இருக்குப்பா, ஆனாப் பிரச்சினை நம்ம வீட்டுல இருந்து முளைக்குதே? இதை நான் எங்கப் போய் சொல்ல?”

“புரியலை ஷியாம்.” அப்பா கேட்கவும் அன்று நடந்து முடிந்த அனைத்தையும் மகன் அப்பாவிடம் கொட்டிவிட்டான். அம்மா செய்த கலாட்டா, அதைத்தொடர்ந்து பெண்ணின் உடலில் ஏற்பட்ட உபாதை என எதையும் அவன் மறைக்கவில்லை.

“என்ன சொல்றேப்பா?!” மனிதர் திகைத்துப் போனார்.

“இன்னைக்கு மட்டும் அஞ்சுக்கு ஏதாவது ஆகியிருந்தா என்னோட நிலைமை என்னப்பா? என்னால அதை நெனைச்சுக்கூடப் பார்க்க முடியலை! அது அவளோட கொழந்தைங்க மட்டுமில்லைப்பா, என்னோடது!‌ நான் ஆசையாசையா…” அதற்கு மேல் பேசமுடியாமல் மகன் நிறுத்திவிட்டான். என்னதான் ஆண்பிள்ளை என்றாலும் அவனும் ஒரு சாதாரண மனிதன்தானே?! தன் அப்பாவிடம் பேசும்போது ஷியாம் உடைந்துவிட்டான்.

“கவலைப்படாதே, ஒரு ஆபத்தும் வராது, எல்லாரும் நல்லா இருப்பாங்க, எனக்கு நடந்தது எதுவும் தெரியாதுடா.”

“இட்ஸ் ஓகேப்பா, நம்ம அம்மா இப்பிடிப் பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கலை, நான் அவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் இப்பிடி நடந்துக்கிறாங்கன்னா அப்ப என்னப்பா அர்த்தம்? என்னோட ஆசை அவங்களுக்கு முக்கியமில்லை, அப்பிடித்தானே?”

“ம்…”

“ரெண்டு செட் ட்ரெஸ் அனுப்புங்கப்பா ட்ரைவர்கிட்ட, எங்கேயாவது தொலைஞ்சு போறேன்.”

“ஷியாமா! டேய்… இப்பிடியெல்லாம் பேசாதே! அதான் அப்பா இருக்கேன்ல, எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன், நீ அஞ்சனாவை கவனமாப் பார்த்துக்கோ.” அதற்கு மேல் பேசாமல் அழைப்பைத் துண்டித்த மனிதர் நேராக மனைவியிடம் வந்தார். படுக்கையறையில் ஏதோ வேலையாக இருந்த கண்மணி கணவரின் வருகையை உணர்ந்து திரும்பிப் பார்த்தார். வந்ததும் வராததுமாக சுந்தர்ராம் மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். 

“எவ்வளவு தைரியம் உனக்கு?! இவ்வளவு விஷயம் இன்னைக்கு நடந்திருக்கு! ஆனா எதுவுமே நடக்காத மாதிரி அமைதியா நடமாடிக்கிட்டிருக்கே!” கணவரின் அடியில், உறுமலில் கண்மணி ஆடிப்போய்விட்டார். 

“அதான் அவன் அவ்வளவு சொன்னானில்லை? அவனுக்கு அந்தப் பொண்ணைத்தான் புடிச்சிருக்கு! உனக்கும் எனக்கும் என்னப் புடிக்குங்கிறது இப்போ முக்கியமில்லை! பச்சைப் புள்ளைக்குச் சொல்லுற மாதிரித் தெளிவா அவ்வளவு பேசியிருக்கேன், அதையெல்லாம் யோசிக்காம நீ பாட்டுக்குக் கிளம்பிப் போயிருக்கே? பெரிய இவமாதிரிப் பேசிட்டு வந்திருக்கே!” மீண்டும் அந்த இடமே அதிரும் வண்ணம் சத்தம் போட்டார் மனிதர்.

“ட்யூட்டி முடிஞ்சு இன்னும் அவன் வீட்டுக்கு வரலை, எங்க இருக்கேன்னுக் கேட்டா ஹாஸ்பிடல்ல இருக்கானாம், எனக்கு வீட்டுக்கு வரப்புடிக்கலைன்னு சொல்றான், இதுக்குத்தான் வெளிநாட்டுல இருந்தவனை அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி இங்க வரவெச்சியா?”

“அந்தப் பொண்ணு இப்போ எப்பிடி இருக்காளாம்?” கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கேட்டார் கண்மணி.

“ஓஹோ! உனக்கு அந்த அக்கறை வேற இருக்கா?”

“நான் தப்பான எண்ணத்தோட அங்கப் போகலை.”

“அப்போ எதுக்குப் போனே? உம் பையனுக்குப் பொண்ணு கேட்டுப் போனியா?”

“உங்களால எப்பிடி இதையெல்லாம் இவ்வளவு சாதாரணமா எடுத்துக்க முடியுது?” கண்மணியின் கண்ணீர்க்குரல் இது.

“இங்கப்பாரு கண்மணி, உம் பையன் சொல்றதை நீ ஏத்துக்கோ, இல்லை ஏத்துக்காமப் போ! அது உனக்கும் உம் பையனுக்கும் நடுவுல நடக்கிற விஷயம், ஆனா அதைத் தூக்கிக்கிட்டு அந்த வீடு வரைக்கும் போன பாரு, அது ரொம்பத் தப்பு.”

“…”

“அவங்க உங்கிட்ட வந்து மாப்பிள்ளைக் கேட்டாங்களா? எந்தத் தைரியத்துல கிளம்பி நீ அங்கப் போனே?”

“அவங்க மனசுல அந்த எண்ணம் வந்திடக்கூடாதில்லை.”

“வரலைன்னா மட்டும் உன்னோட பையன் விட்டிருவானா? ஷியாமை நீ புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானா?”

“எனக்கு இந்தக் கல்யாணம் நடக்கக்கூடாது, அவ்வளவுதான்!” ஆங்காரமாகச் சொன்னார் கண்மணி. இப்போது சுந்தர்ராம் ஒரு பெருமூச்சு விட்டார்.

“உன்னைத் திருத்த முடியாது, உம் பையனைத் தட்டிக்கேட்கத் துப்பில்லாம ஊரான் வீட்டுப் பொண்ணுக்கிட்ட உன்னோட வீரத்தைக் காட்டிட்டு வந்திருக்கே, ஒரு பையனைப் பெத்து அவனைக் கொஞ்சம் படிக்க வெச்சுட்டா உன்னை மாதிரி பொம்பளைங்களுக்கு எங்க இருந்துடி இவ்வளவு ராங்கி வருது? பையனுக்குக் கல்யாணமா பேசுறே? அந்தப் பையனே இனி உன்னோட முகத்துலயும் முழிக்க மாட்டான், அதை முதல்லப் புரிஞ்சுக்கோ.” அதற்கு மேல் மனிதர் அங்கே நிற்கவில்லை. அறையை விட்டு வெளியே போய்விட்டார்.

***

அப்பாவுடன் பேசி முடித்த ஷியாம் உள்ளே போகாமல் இன்னொரு ஃபோனை பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்தான். இந்த ஒரு அழைப்பிற்காகவே புது ஃபோன், சிம் என அனைத்தையும் அவனுக்குச் சம்பந்தமில்லாத பெயரில் ஏற்பாடு செய்திருந்தான். இப்போதும் கூட தான் தொடர்புகொள்ளப் போகும் நபருக்குத் தனது தடயங்கள் எதையும் கொடுக்காத வண்ணம் பல புதிய தொழில்நுட்பங்களை அந்த ஃபோனில் பதிவிறக்கம் செய்திருந்தான். 

“ஹலோ புது மாப்பிள்ளை சார், எப்பிடி இருக்கீங்க?” இவனை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் அழைப்பை ஏற்றுவிட்டான் தருண். 

“யாருங்கப் பேசுறது?” தருணின் குரலில் ஏகப்பட்டக் குழப்பம். ஷியாம் என்ற ஒரு நபரை தருண் இதுவரை அறியமாட்டான். அதுமட்டுமல்லாது இப்போது ஒலித்துக்கொண்டிருந்த ஷியாமின் குரலும் அவன் சொந்தக்குரல் அல்லாது வேறு குரலாக இருந்தது. 

“என்னப் பங்காளி இப்பிடிச் சுத்த பேக்கா இருக்கீங்க? எவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சு உங்கம்மா உங்களுக்குப் பொண்ணு தேடுறாங்க, உங்களைச் சுத்தி யாரெல்லாம் இருக்காங்கன்னு தெரியாம நீங்கப் பாட்டுக்கு அந்த டப்பா பிஸினஸை கட்டிக்கிட்டு அழுறீங்க?!” 

“யோவ்! யாருய்யா நீ?!” இப்போது தருணின் குரலும் காரமாக வந்தது. 

“எமன்டா, உன்னோடக் கதையை முடிக்க வந்த எமன்! பொம்பளைக்கிட்டயா உன்னோட வீரத்தைக் காட்டுற? பரதேசி நாயே! அம்மாப் போடுற தாளத்துக்குத் தப்பாம ஆடுற நாயி நீ! உனக்கு இன்னொரு பொண்ணுத் தேவைப்படுதா?” 

“டேய்! யாருடா நீ?!” தருணின் குரல் இப்போது லேசாக இறங்கியிருந்தது.

ஏனென்றால் அந்த ரிப்போர்ட் வந்த பிற்பாடு பெண் என்ற வார்த்தை அவனுக்கு லேசாகக் கசந்தது.

“அட! என்னப் பங்காளி சட்டுன்னு டல்லாகிட்டீங்க?‌ நிதானமில்லாம நேத்து ஒரு வீட்டுவாசல்லப் போய் நின்னு சத்தம் போட்டீங்களே, அந்த வாய்ஸ் எனக்கு வேணுமே இப்போ.” அவன் குரலில் கேலி இப்போது.

“ஓ… அவ்வளவு தைரியம் வந்திடுச்சா அவளுக்கு? ஏதோ ட்ரீட்மெண்ட் பண்ணிக் கொழந்தைப் பெத்துக்கிறேன்னு ஊர் பூராச் சொல்லிட்டு உங்கூடத்தான் இருக்காளா இப்போ?” தருணின் வார்த்தைகளும் இப்போது தாறுமாறாக வந்து வீழ்ந்தன. குரலில் ஏளனம்.

“அடப்போங்கப் பங்காளி, உங்களால நான் இப்போ ரொம்பச் சோகமாகிட்டேன்! இத்தனை நாளும் ஒரு வெங்கமட்டையோடக் குடும்பம் நடத்தினது போதும், இனி உனக்குச் சொர்க்கத்தை நான் காட்டுறேன்னு எவ்வளவு கெஞ்சிப் பார்த்தேன், ம்ஹூம், ஒத்துக்கலையே!”

“டேய்!” தருண் எகிறினான். அவனுக்கு எங்கேயோ வலித்தது.

“ஆனாச் சத்தியமா அடுத்தது நீங்க சொன்ன மாதிரித்தான் பங்காளி, இந்த ட்ரீட்மெண்ட்டு க்ரீட்மெண்ட்டெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது.” 

“தைரியம் இருந்தா நேர்ல வந்துப் பேசுடா.”

“வர்றேன் வர்றேன்… ரிப்போர்ட்டோட வர்றேன், அம்மா பார்த்து வெச்சிருக்கிற வீட்டுக்கு நீங்க புதுமாப்பிள்ளை மாதிரிப் போவீங்கல்லை, அப்போ வர்றேன்டா நான்!” ஷியாமின் குரலும் இப்போது உயர்ந்தது. 

“யாருடா நீ? என்னடா ஹாஸ்பிடல் நடத்துறானுங்க? கண்ட நாயெல்லாம் என்னென்னமோப் பேசுது? கேஸ் போடுறேன்டா அந்த ஹாஸ்பிடலுக்கு எதிரா நான்!”

“போடு, ஹாஸ்பிடல் மேல கேஸ் போடு, நீ போய் நின்னியே ரிப்போர்ட்டுக்குன்னு ஒரு டாக்டர்கிட்ட, அவன் பேர்ல கேஸ் போடு, ஹாஸ்பிடலோட லைசென்ஸ், டாக்டரோட ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் எல்லாத்தையும் தூக்கு, தூக்கிட்டு?! சார் இன்னொரு கல்யாணம் பண்ணிடுவீங்களா?” 

“…” சட்டென்று அமைதியானான் தருண் அப்போது. பேசுபவன் ஆதாரமில்லாமல் பேசவில்லை என்றுத் தோன்றியது.

“டப்பா பிஸினஸ் பண்ணுற உனக்கே இவ்வளவு இருந்தா, கஷ்டப்பட்டு முட்டி மோதி ரேங்க் வாங்கி யூனிவர்ஸிட்டியில இடம்புடிச்சுப் படிச்சி இன்னைக்கு உன்னோட கண்ணுல விரலைவிட்டு ஆட்டுற நிலைமைல இருக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்?!” உறுமினான் ஷியாம்.

“யாரு நீ? உனக்கென்ன வேணும்?”

“பெருசா ஒன்னுமில்லைப் பங்காளி, எந்தப் பிரச்சினையும் பண்ணாம டைவர்ஸ் கேஸ் கூடிய சீக்கிரம் முடியணும், அதை விட்டுட்டு உன்னை வாழ விடமாட்டேன், நாசம் பண்ணிடுவேன்னு வீரவசனம் பேசிக்கிட்டுத் திரிஞ்சா நீ சொன்னதை நான் பண்ணிடுவேன், அடுத்தவாரம் சார் அம்மாவோட ஒரு வீட்டுக்குப் போறீங்கல்லை? அங்க வந்து நிற்பேன், அந்த ரிப்போர்ட்டோட, ஜாக்கிரதை!”

அதற்கு மேல் ஷியாம் அவனோடு பேசவில்லை. அழைப்பைத் துண்டித்துவிட்டான். இதுகூட அவளுக்காக. எத்தனைச் சீக்கிரமாக அவளைத் தன்னருகே கொண்டு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனைத்தும் நடக்கவேண்டும் என்று ஷியாம் நினைத்தான். 

ரிசப்ஷனில் இருக்கும் பெண் இவனை அழைத்து அவன் வீட்டு ட்ரைவர் வந்திருப்பதாகத் தகவல் சொன்னாள். இவன் ரூமிற்குள் நுழையும் போது பெண் லேசாகக் கண்ணயர்ந்திருந்தது. நித்திரையின் போதும் அவள் கரமொன்று அந்த ஃபைல் மேலேயே இருந்தது.

“ஒவ்வொரு வருஷத்துக்கும் ஒன்னு பெத்துக்கலாம்டா.” ஒரு குறுஞ்சிரிப்போடு சொன்னவன் உல்லாச மனநிலையோடு வெளியே போனான். 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!