siraku19

siraku cp-3ebaf757

siraku19

சிகு 19

அந்த ப்ளாக் ஆடி ஒய்யாரமாகப் போய்க்கொண்டிருந்தது.  ஏதோ தனக்குள் ஒரு பொக்கிஷத்தை வைத்திருப்பது போல மேடு பள்ளங்களில் பதவிசாக ஏறி இறங்கியது. காரின் தரமா? அல்லது அதை ஓட்டுபவனின் லாவகமா? எதுவென்று தெரியவில்லை. உள்ளே அமர்ந்திருந்த அஞ்சனாவிற்கு அந்தப் பயணம் சுகமாக இருந்தது. அறையைக் காலி பண்ணிவிட்டு கார் பார்க்கிங்கிற்கு இருவரும் வந்தபோது கிளம்புவதற்கு எல்லாம் தயாராக இருந்தது. ஷியாம் காரின் முன்கதவைத் திறந்துவிட்ட‌ போது பெண்ணால் எதுவும் பேச முடியவில்லை. அமைதியாக ஏற்றுக்கொண்டாள்.

“எங்கப் போறோம் சீனியர்?” கார் அவளின் வீட்டிற்குப் போகும் பாதையில் போகவில்லை.

“எதுக்கு இவ்வளவு அவசரம்? போனதும் தெரிஞ்சுக்கலாம்.” அதற்குமேல் அவன் எதுவும் பேசவில்லை. ட்ரைவிங்கில் கவனமாகிவிட்டான். ஆனால் அவன் பார்வை மட்டும் அவளை அடிக்கடி மொய்த்துக் கொண்டிருந்தது. பட்டுப்புடவை, பூ என்று பார்க்க அத்தனை அமர்க்களமாக இருந்தாள். புதிதாய் தோன்றியிருந்த தாய்மையின் பொலிவு அந்த அழகியைப் பேரழகியாக மாற்றியிருந்தது. 

“ஸீட்டை அட்ஜஸ்ட் பண்ணணுமா? கால் வைக்க இடம் வசதியா இருக்கா?”

“இல்லையில்லை, இதுவே வசதியாத்தான் இருக்கு.” 

“ம்… அப்போ நல்லா சாஞ்சு ரெஸ்ட் எடுத்துக்கோ.” அத்தோடு பேச்சை முடித்தவன் காரின் சவுண்ட் சிஸ்டத்தை ஒலிக்கவிட்டான்.

என் கண்ணனுக்கு காதல் வந்தனம்… என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்… 

இனிமையாகப் பாடல் ஒலிக்க இவளைத் திரும்பி ஒரு புன்னகைப் பார்வைப் பார்த்துவிட்டுச் சாலையில் மீண்டும் கவனமானான் ஷியாம். அவன் கை இயல்பாக ஸ்டியரிங்கில் தாளம் போட்டது. அவனது உல்லாச மனநிலை பெண்ணுக்குள் ஒருவித கிலியை உண்டு பண்ணியது. சற்றுமுன் ஹாஸ்பிடல் அறைக்குள் நடந்த அனைத்தும் அவள் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன. காட்சிகளின் கனம் தாங்க முடியாமல் ஸீட்டில் தலையைச் சாய்த்தாள் அஞ்சனா.

ஷியாம் மிகப்பெரிய முடிவை மிகவும் சுலபமாக எடுத்திருப்பது போலத் தோன்றியது. என்றோ நடந்து முடிந்த ஒரு ஆசையை இன்று அவன் புதுப்பிக்க நினைப்பது அவளைப் பொறுத்தவரை முட்டாள்தனம். அறிவீனத்தின் உச்சக்கட்டம். மிக இலகுவாக இன்று அவன் அவளை நெருங்கிவிட்டான். ஆனால் அந்த நொடிகளில் அவள் பனிப்பாறை போல இறுகிப் போனதை அவன் அறிய நியாயமில்லை. உருகி உருகி அவனைக் காதலிக்கும் ஒரு பெண்தான் அவனுக்குத் தேவை. உறைந்து போன இந்தப் பனிப்பாறை அவனுக்கெதற்கு? ஆனால் அந்தப் பனிப்பாறையையும் உருகச்செய்யும் செப்படி வித்தை அவனுக்கு அத்துப்படி என்று அவள் அறியமாட்டாள்.

கார் ஹாஸ்பிடலில் இருந்து ஒரு முப்பது நிமிடங்கள் பயணம் செய்து அந்த ஊரை அடைந்தது. அஞ்சனா அப்போதும் அவனைத் திரும்பிப் பார்க்க அவன் ஏதும் பேசவில்லை. பிரதான சாலையிலிருந்து ஒரு கிளைச்சாலையில் அந்த ப்ளாக் ஆடியை வளைத்துத் திருப்பினான். சாலையின் உள்ளே கார் செல்லச்செல்ல அந்த வீதியின் அழகையும் அங்கு வாழும் மனிதர்களின் செழுமையையும் கவனித்தாள் பெண். பெரிய தோட்டங்களோடான வீடுகள் அந்த வீதியில் அனேகமாகக் காணப்பட்டன. வீடுகள் ஒவ்வொன்றும் சாலையிலிருந்து சற்று உள்ளே கட்டப்பட்டிருந்தன. நான்கைந்து வீடுகள் தாண்டியிருப்பார்கள். அவள் காதில் அலைகளின் ஓசை கேட்டது.

“இந்தப் பக்கம் பீச் இருக்கா சீனியர்?” அவள் கேள்வியில் அவளைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தவன் பதிலேதும் சொல்லவில்லை. கார் இன்னும் கொஞ்சதூரம் அந்தச் சாலையின் உள்ளே செல்ல அங்கே ஆர்ப்பரிக்கும் கடல் சற்றே தொலைவில் தெரிந்தது. வீதியின் கடைசியில் இருந்த அந்த வீட்டின் முன்பாக காரை நிறுத்தினான் ஷியாம். தார்ப்பாதை என்றாலும் கடலை அண்மித்த இடம் என்பதால் மணல்‌ பட்டுப்போல இருந்தது. காரை விட்டிறங்கியவன் நடந்து சென்று அந்தப் பெரிய கேட்டைத் திறந்துவிட்டு வந்தான். வெளியே இருந்து பார்க்கும் போதே வீட்டின் அமைப்பு, சுற்றிவர இருந்த தோட்டம், வரிசையாக நின்ற சவுக்கு மரங்கள் என அனைத்தும் பெண்ணுக்குப் புலப்பட்டது. பழைய காலத்து ஆங்கிலேயர் பாணியில் அமைக்கப்பட்ட வீடுபோலக் காட்சியளித்தது அந்த வீடு. சுற்றிவர இருந்த மதில், கேட் என அனைத்தும் வித்தியாசமாக அதே சமயம் ரசனைக்குரியதாக இருந்தது. 

காரை உள்ளே செலுத்திய ஷியாம் அதை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்திவிட்டு அமைதியாகத் தனது ஸீட்டில் சாய்ந்து கொண்டான். அவன் முகத்தைத் திரும்பிப் பார்த்தாள் அஞ்சனா. ஏதோ ஒருவித நிறைவு அந்த முகத்தில் அப்போது தெரிந்தது. எதையோ சாதித்துவிட்ட திருப்தியோடு ஓய்வாக அமர்ந்திருப்பது போல இருந்தது அவனது தோற்றம்.

“சீனியர்!”

“ம்…” சட்டென்று கலைந்தான் ஷியாம்.

“இது யாரோட வீடு? நாம இப்போ எங்க வந்திருக்கோம்?” 

“வாழ்க்கை சில நேரங்கள்ல கனவு போல இருக்கில்லை அஞ்சு?” சம்மந்தமே இல்லாமல் பேசினான் அவன்.

“என்ன சொல்றீங்க நீங்க?!”

“நீ முதல்ல இறங்கு.” என்றவன் இறங்கி வந்து அவள் பக்கக் கதவைத் திறந்துவிட்டான். எல்லாம் குழப்பமாக இருந்த போதிலும் பெண் எதுவும் பேசாமல் காரை விட்டிறங்கியது. அந்த வீடும் அது இருந்த சுற்றுச்சூழலும் அஞ்சனாவை மிகவும் கவர்ந்தன. உப்புக் கலந்த கடற்காற்று மேனியையும் நாசியையும் தடவிச் சென்றது. கால்புதையும் வெண்மணல் பரப்பு.

“பிடிச்சிருக்கா?” அருகில் கேட்ட குரலில் கவனம் கலைந்தாள் பெண். இவள் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தான் ஷியாம். அவன் முகத்திலும் ஓர் இளம் புன்னகை. 

“இது… யாரோட வீடு?” பதில் சொல்ல மாட்டான் என்று தெரிந்தும் கேள்வி கேட்டாள் அவள். ஆனால் இப்போது அவன் பதில் சொன்னான்.

“என்னோட வீடு, நான் இங்கதான் இருக்கேன், அப்போ‌ என்னைச் சார்ந்தவங்களும் இங்கதானே இருக்கணும் அஞ்சு?” அவனது கேள்விக்கு அவளுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. திணறியபடி அவள் நின்றிருக்க பெண்ணின் கரம்பிடித்து அவன் உள்ளே அழைத்துச் சென்றான். மகனின் கார்ச்சத்தம் கேட்டு சுந்தர்ராம் அப்போதுதான் வெளியே வந்தார். இன்றைக்கு வருவதாக நேற்றே மகன் சொல்லிவிட்டுப் போயிருந்ததால் அவனை வரவேற்க உற்சாகமாக வந்தார் தந்தை. வந்தவர் பார்த்ததெல்லாம் பெண்ணின் கரம் கோர்த்தபடி வந்து கொண்டிருந்த மகனைத்தான். இவரைக் கண்டதும் அஞ்சனாவின் நடை தடைப்பட்டது.

“வா அஞ்சு.” அவளைக் கொஞ்சம் வற்புறுத்தி அழைத்து வந்தான் டாக்டர்.

“வாம்மா.” ஆரம்ப கட்ட அதிர்ச்சி நீங்கியதும் மகிழ்ச்சியோடு தன் மருமகளை வரவேற்றார் சுந்தர்ராம்.

“கண்மணீ… இங்க வா, வந்து பாரு யாரு வந்திருக்காங்கன்னு.” அந்தக் குரலில் கண்மணி கூட உள்ளேயிருந்து வந்தவர் வாசலில் நின்றிருந்த விருந்தாளியைப் பார்த்து மலைத்துப் போனார். அவரின் மலைப்பை விட அதிகமான அதிர்ச்சியை இளையவளின் முகம் காட்டியது. 

“சீனியர்… நான்… நான் எங்க வீட்டுக்குப் போகணும்.” கண்மணியை பார்த்ததும் அஞ்சனாவின் குரல் திக்கித் திணறியபடி வந்தது. அவள் வார்த்தைகள் அவனுக்குக் கோபத்தை மூட்டின.

“இதுதான் உன்னோட வீடு, நாந்தான் உன்னோட புருஷன்! புரிஞ்சுதா உனக்கு?” காட்டமாக மகன் கேட்ட கேள்வியில் பெற்றவர்கள் இருவரும் திகைத்துப் போனார்கள். புதுச்சேலை கட்டிப் பூவும் பொட்டுமாக நின்றிருந்த இளையவளின் கண்களில் தெரிந்த கலக்கத்தை அப்போதுதான் அவர்கள் கவனித்தார்கள்.

“ஷியாமா? என்னடா ஆச்சு? ஏன் அஞ்சனாவை சத்தம் போடுறே?” இது சுந்தர்ராம்.

“என்னால முடியலைப்பா! எல்லாப் பக்கமும் என்னை இப்பிடிப் போட்டு வதைச்சா நான் என்னதான் பண்ணுறது? மத்தவங்களையெல்லாம் விடுங்க, இவ என்னைப் புரிஞ்சுக்கணுமா இல்லையா? இன்னமும் ஏன் ப்பா இவ என்னை இப்பிடிக் கொல்லுறா? என்னைக்குப்பா இவ என்னைப் புரிஞ்சுக்கப் போறா?” வாசலில் நின்று கத்திய மகனை அருகில் சென்று அரவணைத்துக் கொண்டார் அப்பா.

“அமைதியா இரு.” அவர் பேச ஆரம்பிக்கும் போதே கண்மணி உள்ளேப் போய்விட்டார். அந்தச் செய்கை அங்கிருந்த அனைவருக்கும் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல இருந்தது.

“முடியாம இருக்கிற பொண்ணு, இப்பிடிச் சத்தம் போடாதே ஷியாமா, கொஞ்சம் விட்டுப்பிடி.” சுந்தர்ராம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் வாசலுக்கு வந்தார் கண்மணி. இப்போது அவர் கையில் ஆரத்தித் தட்டு இருந்தது. இந்தச் செய்கையை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை.

“நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க.” கணவருக்குக் கட்டளைப் போட்டவர் ஒன்றாக நின்றிருந்த இளையவர்கள் இருவருக்கும் ஆரத்தி எடுத்தார். ஒருவருக்கு ஒருவர் ஏற்றாற்போல அந்த இணை பார்க்க அத்தனை அழகாக இருந்தது. சுந்தர்ராமிற்கும் அந்த நொடி மனம் மிகவும் மகிழ்ந்து போனது. இது ஷியாமின் மனைவி! இன்னும் சில மாதங்களில் இந்த வீட்டில் இரண்டு குழந்தைகள்! நினைக்கும் போதே அவருக்கு இனித்தது. கண்மணி ஆரத்தி எடுத்து முடித்திருக்க அஞ்சனாவின் அருகில் வந்த மனிதர், 

“உள்ள வாம்மா, இதைவிட என்ன வேணும் உனக்கு?” என்றார் முறுவலோடு. நடப்பவற்றை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் நம்பவும் இயலாமல் தன்னைத் தாண்டி ஆரத்தித் தட்டோடு வெளியே வீதிக்குப் போனவரைத் திரும்பிப் பார்த்தாள் அஞ்சனா. ஆரத்தியை வெளியே கொட்டிவிட்டு மீண்டும் வீட்டுக்குள் வந்து கொண்டிருந்ததார் அவர்.  இவர்களுக்கு அருகில் வந்தவர்,

“இன்னமும் ஏம்மா வாசல்ல நிற்கிறே? வலது காலை எடுத்து வெச்சு உள்ளே வா.” என்றார் சற்றே அதிகாரமாக. அஞ்சனாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. 

“அஞ்சு!” ஷியாமின் குரலில் சட்டென்று திரும்பியவள் அவன் இழுத்த இழுப்பிற்கு அவன் பின்னோடே உள்ளேப் போனாள். சுந்தர்ராமிற்கும் கண்மணிக்கும் மகனின் மனநிலை சரியாகப் புரியவில்லை. அஞ்சனா தங்கள் மகன் காதலித்த பெண். காலங்கடந்திருந்தாலும் இன்றைக்கு தங்கள் மகனின் குழந்தைகள் இரண்டை அவள் சுமந்து கொண்டிருக்கிறாள். எப்போதிருந்தாலும் இந்த வீட்டுக்கு அவள் வரவேண்டிய பெண்தான். அதை அவர்கள் ஏற்காவிட்டாலும் இது ஷியாமின் முடிவு. அதை அவன் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. ஆனால் அதைச் செய்ய சில முறைகள் இருக்கின்றனவே! இப்படித் தடாலடியாக அஞ்சனாவோடு மகன் வந்து நிற்பான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. 

“ஷியாமா, இங்க வா.” அம்மா அழைக்கவும் ஹாலை அடுத்தாற் போல இருந்த டைனிங் ஏரியாவிற்குச் சென்றான் மகன். அழகான மரவேலைப்பாடு கொண்ட தடுப்பு ஒன்று ஹாலையும் அந்த இடத்தையும் பிரித்திருந்தது. பெரிய டைனிங் டேபிளும் அங்கே போடப்பட்டிருந்தது. 

“அஞ்சனா!” அழைத்தது சாட்சாத் கண்மணியேதான். அந்த அழைப்பில் மருண்டு விழித்த பெண் சுந்தர்ராமை பார்த்தது.

“போம்மா, எதுக்கு இப்பிடிப் பயப்பிடுறே?” என்றவர் மருமகளையும் அழைத்துக்கொண்டு அங்கே வந்தார். சுவரில் அழகான வேலைப்பாடோடு ஒரு பெரிய கண்ணாடி மாட்டப்பட்டிருக்க அங்கே ஒரு சிறிய மரத்தாலான வட்டமேசை போடப்பட்டிருந்தது. கலையம்சம் பொருந்திய ஒரு சில பொருட்கள் அந்த மேசையில் இருக்க அதிலிருந்த குங்குமச் சிமிழை எடுத்தார் கண்மணி. அஞ்சனாவின் நெற்றியிலிருந்த ஸ்டிக்கர் பொட்டை அகற்றிவிட்டவர் குங்குமத்தை மகனிடம் நீட்டினார். ஷியாமின் ஆச்சரியத்திற்கு இப்போது அளவே இல்லாதிருந்தது. அம்மாவிடமிருந்து இப்படியொரு இணக்கத்தை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிர்ந்து போனான்.

“ஏதோவொரு அவசரத்துல அஞ்சனாவை இங்க கூட்டிட்டு வந்துட்டே, ஆனாலும், அதுக்குன்னு சில முறைகள் இருக்குதில்லைப்பா…”

“அம்மா சொல்றதுதான் கரெக்ட் ஷியாமா, மத்ததை அப்புறமாப் பார்த்துக்கலாம்.” இப்போது குங்குமத்தை அந்தப் பெண்ணின் நெற்றியில் வை என்ற ஆணை அதிலிருக்க அஞ்சனாவை பார்த்தான் ஷியாம். ஓரெட்டுப் பின்னோக்கி அவள் நகர அவன் முகம் இப்போது கடுகடுத்தது. 

“என்னோட புள்ளையைப் பத்தித்தான் நீ அப்ப யோசிக்கலை, இப்ப உன்னோட புள்ளையைப் பத்தியும் யோசிக்க மாட்டியாம்மா?” வருத்தம் கலந்தப் புன்னகையோடு கண்மணி தன்னிடம் கேட்க அஞ்சனா திகைத்துப் போனாள். நியாயமான கேள்விதானே?! தன்னை உருகியுருகிக் காதலித்த இவனை அவள் என்றைக்கு நினைத்துப் பார்த்திருக்கிறாள்?! உடன்பிறந்தவனுக்குக் கட்டுப்பட்டு, குடும்ப மானத்துக்கு அஞ்சி, ஊர் உலகத்துக்குப் பயந்து… இப்படித்தானே அவள் முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. என்றைக்கு அவள் இவனை, இவன் மனதை, இவன் ஆசைகளை நினைத்துப் பார்த்திருக்கிறாள்?! இப்போது ஷியாமின் பெருவிரலும் சுட்டுவிரலும் ஒன்றாகச் சேர்ந்து குங்குமத்தை அள்ளி அவள் நெற்றியில் தீற்றிவிட்டன. 

“இங்கேயும் வை.” அம்மா அவள் நெற்றி வகிட்டைக் காட்ட அங்கேயும் அவன் விரல்கள் குங்குமக் கோலம் போட்டன. அவ்வளவுதான் விஷயம் என்பது போல கண்மணி கிச்சனுக்குள் போய்விட உலகம் மறந்து நின்றிருந்த மகனின் தோளில் தட்டிவிட்டு அப்பாவும் அப்பால் போய்விட்டார். அஞ்சனாவின் நிலைமை சொல்லில் வடிக்க இயலாததாக இருந்தது. இமைக்க மறந்து இமைகள் நனைய நின்றிருந்தாள். 

“அஞ்சு…” அந்த வார்த்தை பஞ்சின் மென்மையோடு வந்து வீழ்ந்தது. மூக்கு, கன்னம் என அவள் முகமெங்கும் அவன் அள்ளித் தீற்றிய குங்குமத்தின் வண்ணம். அவள் புடவைத் தலைப்பை எடுத்தவன் அந்த மதிமுகத்தை லேசாகத் துடைத்துவிட்டான். 

“ஷியாம்… நான் சொல்றதை நீங்கக் கேட்கமாட்டீங்களா?” கலங்கிய அவள் குரலைக் கேட்ட பின்பும் அவன் இல்லையென்பது போலத் தலையாட்டினான்.

“உங்கம்மா உங்கம்மான்னு இதுவரை சொன்னே, இன்னமும் என்ன அஞ்சு?” அவளை நெருங்கிய அவன் குரல் சரசம் பண்ணியது. 

“அப்போ நான்?”

“நாந்தான் நீ, நீதான் நான்.” அவன் சுலபமாக முடித்தான். 

“ஷியாம், சாப்பிடலாமா?” உள்ளேயிருந்து அப்பா குரல் கொடுக்கச் சட்டென்று அவளிடமிருந்து விலகினான் ஷியாம். மனதெல்லாம் மத்தாப்பு வெடித்தாற் போல இருந்தது. மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.

“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேம்மா, ப்ளீஸ்… எனக்கு அந்த சந்தோஷத்தை முழுசாக் குடு அஞ்சனா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்.” ஷியாம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுந்தர்ராம் கைகளில் இரண்டு பாத்திரங்களோடு டைனிங் டேபிளை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

“இதோ வர்றேன் ப்பா.” அவரோடு போய் இணைந்து கொண்டவன் தானும் உதவி பண்ணினான். இது அவர்கள் வீட்டில் எப்போதும் நடப்பதுதான். அன்றைக்கு மகன் வருவான் என்று முன்னமே தெரிந்திருந்ததால் கண்மணி பெரிய விருந்தே வைத்திருந்தார். ஆனால் இளையவளின் வருகை மட்டும்தான் அவர்கள் எதிர்பாராதது. 

அஞ்சனா நடப்பது எதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் அமைதியாக நின்றிருந்தாள். உள்ளுக்குள் எண்ண அலைகள் முட்டி மோதி வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தன. இங்கேதான் வரப்போகிறோம் என்று ஷியாம் சொல்லாமல் அழைத்து வந்ததன் நோக்கம் இப்போது அவளுக்குப் புரிந்தது. சொல்லியிருந்தால் நிச்சயம் அவள் இங்கு வர மறுத்திருப்பாள்.‌ எதற்காகத் தன்னை அவன் இங்கே அழைத்து வந்திருக்கிறான்?! அவன் அம்மாவிற்குப் பிடிக்காத பெண் அவள். இன்றைக்கு இதமாக நடந்து கொண்டாலும் தனது மனநிலையை அன்றைக்கு கண்மணி தெளிவாக அவர்கள் வீட்டிற்கு வந்து காட்டியிருந்தாரே! மகனின் பிடிவாதம், வீட்டுக்கு வராமல் அவன் செய்த போராட்டம் அந்தத் தாயை இறங்கி வரச்செய்திருக்கிறது. ஒருவகையில் பார்த்தால் தன்னைப் பெற்றவளை ப்ளாக் மெயில் செய்து இந்தளவிற்குக் கொண்டு வந்திருக்கிறான் ஷியாம். 

அந்த எண்ணமே அவளுக்குள் ஒரு வலியை உருவாக்கியது. தலை லேசாகச் சுழல்வது போல இருந்தது. யாருக்குமே பிடிக்காத இந்தத் திருமணத்தை ஏன் இத்தனைப் பிடிவாதமாக நடத்திக்கொள்ளப் பார்க்கிறான் ஷியாம்?! கண்மணி இன்றைக்கு அவளைப் பார்த்துக் கேட்ட கேள்வி பெண்ணை மிகவும் வதைத்தது. அவர் மகனைப் பற்றி நான் ஒரு காலத்தில் நினைக்கவில்லைதான், காத்திருக்கவில்லைதான். ஆனால் இன்றைக்கு அவனை அவள் முழுமூச்சாக எதிர்ப்பதன் நோக்கம் அவன் நன்மை கருதித்தானே! அவன் நல்லதொரு வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காகத்தானே!

“அஞ்சனா, வாஷ்ரூம் அங்க இருக்கு.” சுந்தர்ராம் காட்ட ஷியாம் அதன் கதவைத் திறந்துவிட்டான். லைட்டை ஆன் பண்ணிவிட்டு அவள் முகம் பார்த்தான். உள்ளே நுழையப்போனவளிடம்,

“ஃபேஸ் வாஷ் பண்ண வேணாம் அஞ்சு.” என்றான் இதமாக. அவன் விழிகள் அவள் நெற்றிக் குங்குமத்தின் மீது நிலைத்திருந்தது. அவள் கதவை மூடிக்கொண்டாள். அந்த வீடு நல்ல விசாலமாக நான்கைந்து அறைகளோடு காணப்பட்டது. வீடு முழுவதும் பழைய பாணியில் ஓடுகள் வேயப்பட்டிருந்தன. அதனால் நல்ல குளுகுளுவென குளிர்ச்சியாக இருந்தது. கூடவே கடற்காற்று. உள்ளேயிருந்த கண்ணாடி முன் போய் நின்றாள் பெண். எல்லாவிதமான வசதிகளோடும் அதிநவீனமாக இருந்தது அந்த பாத்ரூம். கண்ணாடியில் தெரிந்த அவள் பிம்பம் அவளுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்தது. இத்தனை நாளும் அவள் வைத்தபோது அழகாகத் தெரியாத முகம் இன்றைக்கு அவன் வைத்த குங்குமத்தில் எப்படி இத்தனை அழகாகிப்போனது!

“அஞ்சு! சீக்கிரமா வா.” வெளியே ஷியாமின் குரல் அவளை அழைத்தது. அவசர அவசரமாகத் தன் தேவைகளை முடித்தவள் வெளியே வந்தாள். தலை இன்னும் கொஞ்சம் பாரமாக இருந்தது. முகத்தில் வந்து மோதிய சாப்பாட்டின் மணத்தில் தலை மேலும் சுற்றியது. 

“உட்காரும்மா.” இது சுந்தர்ராம். அப்பாவும் அம்மாவும் மேசையின் ஒருபுறம் அமர ஷியாம் மறுபுறத்தில் அவளுக்காக ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டான். அவள் அமர்ந்தவுடன் அவளுக்கு அருகே அவனும் அமர்ந்து கொண்டான். அவளுக்கான உணவை அவன் ப்ளேட்டில் பரிமாறிக் கொடுக்க,

“என்னால இவ்வளவு சாப்பிட முடியாது சீனியர்.” என்றாள் மெல்ல. அவள் ப்ளேட்டில் இருந்த உணவை வெகு இயல்பாக அவன் ப்ளேட்டில் குறைத்தவன் மீதியை அவளிடம் கொடுத்தான். 

“ஏம்மா?” இது சுந்தர்ராம். 

“சாப்பிட முடியலையா என்ன?” கவலையோடு கேட்டது கண்மணி. இருவருக்கும் புன்னகையைப் பதிலாகத் தந்தவள் ஒவ்வொரு கவளமாக மிகவும் சிரமப்பட்டு உள்ளே இறக்கிக் கொண்டிருந்தாள். ஆண்கள் இருவரும் கலகலவென பேச்சில் கவனமாகிவிட்டார்கள். பாதியில் எழும்ப முடியாமல் அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமை காத்தாள் பெண். இவள் மேல் ஒரு கண்ணை வைத்திருந்த கண்மணி அவள் சரியாக உண்ணாததைக் கவனித்திருந்தார். கிச்சனுக்குள் போனவர் அங்கிருந்த ஊறுகாய் பாட்டிலை எடுத்து வந்து திறந்து அவள் முன்பாக நீட்டினார். அவ்வளவுதான்! அதுவரை அடக்கி வைத்திருந்த அனைத்தும் புரட்டிக் கொண்டு வர முன்பு அவள் பயன்படுத்திய வாஷ்ரூமை நோக்கி ஓடினாள் பெண்.

“அஞ்சு!” பதறியடித்துக் கொண்டு ஷியாம் போவதற்குள்ளாக அவள் குடம் குடமாக வாந்தி எடுத்திருந்தாள். கையைக் கழுவிக்கொண்டு அவள் தலையைத் தாங்கிப் பிடித்தான் ஷியாம். அத்தனை சுலபத்தில் அவள் நிறுத்திவிடவில்லை. நான்கைந்து நாட்கள் உண்டதெல்லாம் வெளியே வந்தாற்போல கொட்டித்தீர்த்தாள். 

“அஞ்சு…” சின்க்கின் டேப்பை திறந்துவிட்டவன் அவள் முகத்தை நிமிர்த்தினான். ஒரு கையால் நீரைப் பிடித்து அவள் வாயைத் துடைத்துவிட்டான். 

“வாந்தி வரும்னா ஏற்கனவே சொல்லமாட்டானாங்க இவன்? இப்பிடி அத்தனையையும் அந்தப் பொண்ணுக்கு முன்னாடி கடை பரப்பிவெச்சுச் சாப்பிட்டா வாந்தி வராம வேற என்னங்கப் பண்ணும்?” வெளியே கண்மணி மகனை கணவரிடம் குறை கூறுவது கேட்டது. 

“அஞ்சும்மா, என்னப் பண்ணுது உனக்கு?” அவனின் குரலில் தலையை நிமிர்த்தியவள் அவன் மேலேயே சாய்ந்து கொண்டாள்.

“ஷியாம்… என்னால முடியலை.” நடக்கவும் திராணியற்றவள் போல அப்படியே நின்றிருந்தாள் பெண்.

“ஏன் கண்மணி, ஷியாம் பொறக்கிறதுக்கு முன்னாடி நீயும் இப்பிடித்தான் வாந்தி எடுத்தேயில்லை? அப்போ உங்கம்மா என்னவோ சொல்லுவாங்கல்லை?”

“உண்டாகியிருக்கும் போது வாந்தியெடுத்தா பொறக்கப்போற கொழந்தைக்கு நல்லா முடி இருக்கும்னு சொல்லுவாங்க.” வெளியே நடந்த பேச்சுவார்த்தையில் ஷியாம் இங்கே புன்னகைத்தான்.

“அட ஆமா! சரியாத்தான் சொல்லியிருக்காங்க! ஷியாமுக்கு நல்ல முடிதானே!”

“ஆனாப் பையனாப் பொறந்துட்டானே! அவனுக்காவது பொண்ணு பொறக்கட்டுங்க, அழகா ஜடை போடலாம்.” 

“பொண்ணில்லை, பொண்ணுங்க.” சொல்லிவிட்டு வெடிச்சிரிப்புச் சிரித்தார் சுந்தர்ராம்.

“அப்பிடீன்னா?!”

“ட்வின்சாம்.”

“அப்பிடியா?!” இப்போது வாயைப் பிளந்தார் கண்மணி. 

“உங்களுக்கெப்பிடித் தெரியும்?”

“முந்தாநாள் ஹாஸ்பிடல் போயிருந்தேன், அப்போ அஞ்சனாதான் சொன்னா, ரெண்டும் பொண்ணாப் பொறந்தா சூப்பரா இருக்குமில்லை கண்மணி?” இப்போது அவர்கள் பேச்சு அஞ்சனாவின் காதிலும் விழுந்திருக்கும் போலும். அவன் மார்பில் சாய்ந்தபடியே அண்ணார்ந்து பார்த்தாள். ஷியாமின் முகத்தில் புன்னகை இருந்தது. அந்தப் புன்னகையின் வசீகரத்தில் இமைக்க மறந்து அவனையே பார்த்திருந்தாள் பெண். அவள் பார்வையின் வீரியத்தில் அவனும் தன்னைச் சில நொடிகள் தொலைத்திருந்தான். வெளியே பெற்றோரால் அவன் குழந்தைகளைப் பற்றிப் பேசப்பட்ட பேச்சு அவனுக்கு இனித்தது. அவர்களைச் சுமந்துகொண்டு இப்போது அவஸ்தைப்படும் இந்தப் பெண் அவனுக்கு அதைவிட அதிகமாக இனித்தது.

“அஞ்சு…” அந்த நொடி இன்பத்தின் உச்சம் என்று உணர்ந்தான் ஷியாம். இயல்பாக அவளை அணைத்திருந்த கை இப்போது அவள் இடையைத் தழுவியது. அவளின் உடலில் ஓடிய சிலிர்ப்பை அவனும் உணர்ந்தான். பெண் மெதுவாக விலக அவளின் விலகலை அவன் ரசிக்கவில்லை.

“அஞ்சு ப்ளீஸ்…” என்றான் கெஞ்சுதலாக. எல்லாவற்றுக்கும் அவளிடம் அவன் கெஞ்ச வேண்டியிருந்தது. அந்த மார்பிலிருந்து அவள் முகத்தை மெதுவாக விலக்கிக் கொண்டாள். அவள் கன்னத்தோடு தன் கன்னம் உரசியவன் அங்கே தன் இதழ்களைப் புதைக்க முயன்றான். 

“ஷியாம்…” அவள் முழுதாக இப்போது விலகினாள். அவன் தோள் மேல் கிடந்த தன் ஒன்றிரண்டு கூந்தல் சுருள்களை கையால் விலக்கிக் கொண்டாள். ஷியாமிற்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. இப்படி விலகும் பெண்ணை எப்படித் தன் வழிக்குக் கொண்டு வருவதென்று தெரியாமல் தவித்து நின்றான். 

அருகில்தான் இருக்கிறாள். அதீத அழகால் கொல்கிறாள். அணைக்கத் துடித்தால் அகல்கிறாள். இதழ் கொடுக்க மறுக்கிறாள். தழுவ நினைத்தாள் தடுக்கிறாள்! 

“இன்னும் எத்தனை நாளைக்கு அஞ்சு?” அவன் கேள்வியில் அவள் கண்கள் அலைப்புற்றன. அந்த முகத்தைத் தன் இரு கைகளாலும் பற்றியவன் அந்தக் கண்களையே பார்த்தான். அவனைத் தவிர்க்க முயன்றவள் ஒரு கட்டத்தில் அது இயலாமல் போக அவன் கண்களையே சரணாகதி அடைந்தாள்.

“நான் எவ்வளவு தூரம் உனக்காக இறங்கி வர்றேன்னு உனக்கு இன்னும் புரியலை அஞ்சு, உன்னைக் காயப்படுத்திடக் கூடாதுன்னு என்னையே நான் எவ்வளவு கன்ட்ரோல் பண்ணிக்கிறேன்னும் உனக்குத் தெரியாது, ரொம்ப முடியாம இருக்கே, இல்லைன்னா என்னோட டீலிங் வேற மாதிரி இருக்கும்.” அந்த வார்த்தைகளில் அஞ்சனா கண்களை மூடிக்கொண்டாள். ஐந்து வருடங்களுக்கு முன்னால் இந்த வார்த்தைகளை இவன் சொல்லியிருந்தால் அவள் நாணியிருக்கக் கூடும். ஆனால் இப்போது கண்கள் கரித்தது. லேசாக நனைந்த அந்த இமைகளை அவனும் கவனித்தான். ஆனாலும் பேச்சை நிறுத்தவில்லை. 

“உன்னோட வயித்துல இருக்கிற கொழந்தைங்க பொறக்கிறதுக்கு முன்னாடியே இந்த ஷியாம் யாருன்னு அவங்களுக்குத் தெரியணும், அவங்க உன்னை எப்பிடி இப்போ உணருவாங்களோ அதேமாதிரி என்னையும் அவங்க உணரணும், இப்பிடி நீ தள்ளித்தள்ளிப் போறதுல எனக்கு உடன்பாடில்லை அஞ்சு, அதை நீ முதல்ல புரிஞ்சுக்கணும்.” பெண்ணின் கண்ணிலிருந்து இப்போது கண்ணீர் வழிந்தது. மயிலே மயிலே என்றால் அது என்றைக்கும் இறகு போடாது. அதை ஷியாம் இப்போது புரிந்து கொண்டான்.

“இந்தச் சமயத்துல ஒரு பொண்டாட்டிக்கிட்ட எப்பிடி நடக்கணும், எப்பிடி நடக்கக்கூடாதுன்னு புருஷன்மாருக்கு சொல்லிக்குடுக்கிற டாக்டர் நான், நீ எனக்கே பாடம் எடுக்கிறியா? இன்னும் கொஞ்ச நாள்தான், அதுக்கப்புறம் எல்லாத்துக்கும் ரெடியா இரு.” அதற்கு மேலும் அங்கே தாமதிப்பது சரியென்று படாததால் வெளியே போனான் ஷியாம். அஞ்சனா கொஞ்சம் தாமதித்து வெளியே வந்தாள். 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!