sontham – 12

DYn20p_VMAAOTzq

அத்தியாயம் – 12

காலையில் எப்பொழுதும் போலவே பஸ்ஸ்டாப் வந்த மது தன்னுடைய தோழிகளைப் பார்த்து சிரிக்க, “ஹே மது வந்துட்டா” காயத்ரி உற்சாகமாக சொல்லவே மற்ற தோழிகளும் அவள் வரும் திசையைத் திரும்பிப் பார்த்தனர்.

தன் முகத்தில் சுருலேன விழுந்த முடியை ஒதுக்கியபடியே சாலையில் நடந்து வந்தவளைப் பார்த்த மற்றதோழிகள், ‘செம அழகிதான்’ என்று நினைத்து பெருமூச்சு விட்டனர்.

அதற்குள் அவர்களின் அருகில் வந்த மதுஸ்ரீ, “ஹாய் காயூ.. என்ன இரண்டு நாளாக நீ காலேஜ் பக்கமே வரல என்ன மேடம் விஷயம்..?” என்று விஷமமாகச் சிரித்தவளைப் பார்த்து முறைத்தாள் காயத்ரி மதுவின் உயிர்தோழி.

“ஏண்டி இரண்டு நாளாக ரொம்பவே முடியல. அதனாலதான் காலேஜ் பக்கமே நான் வரலன்னு என்னிடம் சொன்ன. இப்போ மது என்னவோ சொல்றா இங்க என்னடி நடக்குது?” என்று காயத்ரியிடம் மற்றொருத்தி கேட்டதும் வாய்விட்டு சிரித்தாள் மது.

அதற்குள் பஸ் வந்துவிட மூவரும் பஸில் ஏறவே, ‘மகளே நீ கிளாஸ்க்கு வருவ இல்ல அப்போ உன்னைக் கவனிச்சுக்கிறேன்..’ என்று மனதில் கறுவிக்கொண்டே பஸில் ஏறினாள் காயத்ரி. அவர்கள் பஸில் சென்று கல்லூரிக்குள் நுழையும்போது காரில் வந்து இறங்கினாள் ஸ்ரீமதி.

“ஹாய் மதி இன்னைக்கும் காரிலேயே வந்துட்டியா?” என்று உற்சாகமாக கேட்டாள் காயத்ரி.

“நான் என்ன மது மாதிரின்னு நினைச்சியா காயூ?” வழக்கம்போல வம்பிற்கு இழுத்த மதியை பார்த்து, “ஏண்டி வந்தும் அவளை வம்பிற்கு இருக்கிற?” என்று தோழிக்காக பரிந்து வந்தாள் மது. பஸ் ஸ்டாப்பில் தன்னை மற்ற தோழிகளிடம் மாட்டிவிட்டதோடு நில்லாமல், இப்போது மதியிடமும் கோர்த்து விடுகிறாளே என்று மனதிற்குள் புலம்பினாள்.

மூவரும் பேசியபடியே கல்லூரி வளாகத்திற்குள் செல்ல அங்கிருந்த ஆண்களின் பார்வை மதியின் மீதே படிந்தது. அவள் அணிந்திருந்த உடை அவளின் அங்க வளைவுகளை அழகாக எடுத்து காட்டிட, “இவ மட்டும் யாருக்குமே தலை வணங்காமல் இருக்கிற பாருடா. அந்த திமிரை அடக்கணும் மச்சி” அவளின் காதுபட பேசிய வருணை முறைத்தபடி அங்கிருந்து சென்றாள் மதி.

அவள் வேகமாக செல்வதில் இருந்தே மதி கோபத்தை புரிந்துகொண்டாள் மது. “மதியை மட்டும் அப்படி பேசற மதுவை ஏன் நீ கண்டுக்காமல் இருக்கிற” புரியாமல் கேட்டான் வருணின் நண்பன்.

“இவ சரியான பழைய பஞ்சாங்கம் மச்சி. சாமி, குலம், கோத்திரம்னு இருக்கிற. அது மட்டும் இல்லாமல் பணக்காரப்பெண் மாதிரி அவ கர்வமான நடந்துக்காமல் இருப்பது இவளிடம் இயல்பாக பல வைக்குது. ஆனால் மதி தன் பணத்திமிரை காட்டும்போது எரிச்சலாக வருதுடா” என்று அதற்கும் ஒரு பெரிய விளக்கத்தைக் கொடுத்தான்.

அவர்கள் அனைவரும் வகுப்பறைக்குள் நுழைய மது வழக்கம்போல மதியின் அருகே அமர்ந்து, “ஷ்.. கோபபடாமல் இருடி” என்றாள் மெல்லிய குரலில்.

“பெண்களுக்கு சமையலறையிலிருந்து விடுதலை கிடச்சாலும் இன்னுமும் ஆண்களுக்கு பயந்து வாழ்கின்ற வாழ்க்கையை தானே வாழ்ந்துட்டு இருக்கோம். இப்போ வருண் பேசின பேச்சும் அப்படிதானே இருந்தது” என்று எரிச்சலோடு கூறினாள்.

“சரி விடு அவனைப்பற்றி தான் உனக்கு தெரியும் இல்ல” என்று அவளை சமாதானம் செய்யவே, “மதி குற்றாலம் சீஷன் தொடங்கிருச்சு. இந்த வீக் எண்டுல நம்ம மூணு பேரும்  குற்றாலம் போலாமா?” என்று பேச்சை திசை மாற்றினாள்  காயத்ரி.

உடனே வருணின் பிரச்சனையை மறந்தவள், “ம்ம் போலாம் காயூ. எனக்குமே எங்காவது போலாம்னு தோணிட்டே இருந்துச்சு. நல்லவேளை நீயே சூப்பர் இடம் சொல்லிட்ட அடுத்த வாரம் அம்மாகிட்ட சொல்லிட்டு நம்ம போலாம்” என்றபோது வகுப்பறைக்குள் மேம் நுழைந்துவிடவே அந்த பேச்சு அதோடு முடிந்தது.

ஸ்ரீமதி, மதுஸ்ரீ இருவருக்கும் காயத்ரி ஒரே தோழி. ஆனால் மதியின் இந்த கோபமும், வேகமும் அவளிடம் ஒரு எல்லைக்கு மேல் பழக முடியாமல் அனைவருமே ஒதுக்கினர். அதனால் மதிக்கு தோழி என்றால் மது மட்டுமே!

ஆனால் மது எல்லோரிடமும் அன்பாக பழகுவதால் அவளை யாரும் ஒதுக்கி வைக்கவில்லை. எந்தநேரமும் அமைதியாக இருக்கும் அவளை சுற்றி பெரிய பட்டாளமே இருக்கும். இருவரும் ஒரே வகுப்பு என்பதால் நித்தமும் யார் ஸ்ரீமதி, மதுஸ்ரீ என்று கண்டு பிடிப்பதிலேயே பொழுது போய்விடும்.

வருணும் அவர்களில் ஒருவன் என்றபோது அவன் பார்வை எப்போதும் மதியை மீதே இருந்தது. அதற்கு விளக்கம் கேட்டால், ‘கொக்கு ஒன்றே மதி’ என்று சொல்லி அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பிவிடுவான்.

***

அதே நேரத்தில் டெல்லியில் நடுத்தர மக்கள் வாழும் வீதியில் அமைத்திருக்கும் மூன்று மாடிகளைக் கொண்ட குடியிருப்பு பகுதியது. காலை நேரம் என்பதாலோ என்னவோ அனைவரும் ஒருவிதமான பரபரப்புடன் அவரவர் வேலைகளை கவனித்தனர்.

அந்த குடியிருப்பில் பலதரப்பட்ட ஊரைச்சேர்ந்த பல மக்கள் வசித்து வந்தனர். அந்த காலையில் காதுக்கு இனிமையான சுப்ரபாதம் கேட்டு கண்விழித்தான் கெளதம். தாயின் வசீகரமான குரல்கேட்டு எழுந்து ஹாலுக்கு சென்றவன், “குட் மார்னிங் அப்பா” என்றபடி யுகேந்திரனின் அருகே அமர்ந்தான்.

“டேய் காலையில் எழுந்து ஜாக்கிங் போகாமல் இருக்கிற? என்ன விஷயம்?” என்று சிரிப்புடன் கேட்டார் யுகேந்திரன்.

“நைட் ப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டி போய் என்ஜாய் பண்ணிட்டு லேட் நைட் தான் வந்தேன். அதுதான் இன்னைக்கு ஜாக்கிங் போகல” என்று கொட்டாவி விட்ட மகனைக்கண்டு சிரித்த யுகேந்திரன் தன் கையில் இருந்த தி ஹிந்து பேப்பரில் மூழ்கிவிட்டார்.

அதற்குள் பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்த தனமோ, “ஏன்டா நைட் சீக்கிரம் வரணும் என்ற அறிவே உனக்கு வராதா? உன் வயசில் எல்லோரும் எவ்வளவு பொறுப்பாக இருக்காங்கன்னு தெரியுமா? நீயும் இருக்கியே” என்று வழக்கம்போல வசைபாட தொடங்கிவிட்டார்.

“அம்மா இதுதான் லைப் என்ஜாய் பண்ண சரியான வயசு. அப்புறம் காலம் முழுக்க பொண்டாட்டி, பிள்ளைன்னு சுமந்து வாழும் வாழ்க்கையிலேயே பசங்க லைப் முடிஞ்சு போயிருது” என்று தத்துவம் பேசும் மகனை நினைத்து தலையில் அடித்துக் கொண்டாள் தனம்.

“ஏன்டா ஒரு போலீஸ் ஆபீசர் மாதிரியாடா நீ பேசற?” என்று சிரித்தபடி சமையலறைக்குள் நுழைந்த தாயின் பின்னோடு சென்றவன் அவனுக்கு காய்கறி கட் பண்ணி கொடுத்துவிட்டு அவர் கொடுத்த காபியை வாங்கிகொண்டு அங்கிருந்த சமையல்மேடையில் அமர்ந்தவன்,

“அம்மா போலீஸ் ஆபீசர் என்றால் எந்த நேரமும் கண்ணில் சந்தேகத்தோடு சுத்தணும்னு சொல்றீங்களா?” என்று நக்கலோடு கேட்ட மகனின் தலையில் நறுக்கென்று கொட்டினார்.

“எந்த கேள்வி கேட்டாலும் உடனுக்குடன் பதில் கொடுக்கிற? அதெல்லாம் சரி நீ வாழ்க்கையை பற்றி என்ன நினைக்கிற?” என்று கோபத்துடன் கேட்டார்.

அவரின் தாடையைப் பிடித்து செல்லமாக கொஞ்சியவன்,“லைப் இப்படிதான் இருக்கும்னு பொதுவான கருத்து கணிப்பை மட்டும்தான் அம்மா சொன்னேன். ஆனால் என் வாழ்க்கையை நான் ரசித்து வாழ்வேன். ஒவ்வொரு மணித்துளிகளும் எனக்கான டைம் மட்டும்தான்” என்று உற்சாகமாக பதில் கொடுத்தான்

இவர்கள் இருவரும் பேசுவதை ஹாலில் அமர்ந்து கேட்டுக்கொண்டு இருந்த யுகேந்திரன், “கௌதம் இப்போவே நீ உன் வாழ்க்கையை ரசிச்சுதானே வாழ்ந்துட்டு இருக்கிற. காலேஜ் முதல் வேலை செய்யும் இடம் வரை உன் பின்னாடி சுத்தாத பெண்கள் இருக்காங்களா? எந்த நேரமும் ஃபிரெண்ட்ஸ், பார்ட்டி, கேல்ஸ் இப்படி ஒரு பிளே பாயாக இருக்கிற. இதுக்கு மேல் லைப் என்ஜாய் பண்ண வேற என்னப்பா இருக்கு?” என்றதும் காபி கப்புடன் வெளியே வந்த கௌதம் தந்தையை முறைத்தான்.

அவனின் பார்வையைக் கண்டு, “இப்போ இதுக்குடா அப்படி பார்க்கிற?” என்று புரியாமல் கேட்டார்.

“ஏன் அப்பா இத்தனை வயசான பின்னாடியும் ரிடேர்மென்ட் வாங்கிட்டு அம்மா புடவை முந்தாணியை பிடித்துகொண்டு சுற்றும் தந்தை பேசும் பேச்சா இது எல்லாம்” என்று சீரியசான முக பாவனையுடன் கேட்ட மகனைப் பார்த்து திருதிருவென்று முழித்தார் யுகேந்திரன்.

கணவனின் பார்வையும் மகனின் பேச்சையும் கேட்டு, “அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்து இருக்கான்” என்று சலித்துகொண்ட தனத்தின் முகம் மலர்ந்தே இருந்தது.

“இப்போ நான் என்னடா தப்பா சொல்லிட்டேன்” என்று மகனுடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.

அங்கிருந்த டைனிங் டேபிளில் சாய்ந்து அமர்ந்த கௌதம், “அப்பா என்ஜாய் பண்றது என்பது இந்த வயசில் செய்யறேன் தான். ஆனால் ஒவ்வொரு மணித்துளிகளையும் ரசித்து வாழனும் என்று சொல்றதுக்கு அர்த்தம் வேறப்பா” என்று தந்தைக்கு கிளாஸ் எடுத்தான்.

“டேய் இப்போ நீ என்னடா சொல்ல வர” பொறுமை இழந்தபடி சமையலறையில் இருந்து குரல்கொடுத்தார் தனம்.

யுகேந்திரனும் மகனை கேள்வியாக நோக்கிடவே, “ஆயிரம் பெண்கள் என்னைச்சுற்று வந்தாலும் அவங்க யாருமே என் மனசை இடம் பிடிக்கல. பியூட்டி என்று சொல்வதற்காக வாரம் ஒருமுறை பியூட்டிபார்லர் போகும் பெண்களை பார்த்து கண்பார்வை எல்லாம் குறைஞ்சிட்டே வருதுப்பா” என்று வருத்ததுடன் கூறிய மகனின் முன்னாடி கோபத்துடன் வந்து நின்ற தனத்தின் கையில் தயாராக இருந்தது சட்டுகம்.

அதைக்கண்டு வாய்விட்டு சிரித்த யுகேந்திரன், “ம்ம் இப்போ பேசு மகனே” என்றார்.

தாயின் மனநிலையை துல்லியமாக கணித்த கௌதமோ, “நல்ல கேட்டு மனசில் மனப்பாடம் பண்ணி வெச்சுக்கோங்க அம்மா. நாளைக்கு பொண்ணு பார்க்க போகும்போது இனி வரும் பாய்ண்ட்ஸ் எல்லாமே தேவைப்படும்” என்றான் மைந்தன் சீரியஸாக.

“நீ முதலில் சொல்லி முடி. உன்னை உருட்டுக்கட்டையில் அடிக்கலாமா? இல்ல என் புருஷனை வைத்து மண்டையைப் பிளக்கலாமான்னு நான் ஒரு முடிவுக்கு வரேன்” என்றார் தனம் சீரியசாகவே.

கௌதம் என்ன சொன்னாலும் கடையில் தன்னை கோர்த்து விட்டுவிட்டு எஸ்கேப் ஆவான் என்று உணர்ந்தவர், “தனம் நான் போய் குளிச்சிட்டு வரேன்” என்று அங்கிருந்து எழுந்தார்.

அவரின் நோக்கம் புரியவே, “அப்பா எங்க கிளம்பிறீங்க? நான் சொல்வதை முழுசாக கேட்டுட்டுப் போங்க” என்று குறுஞ்சிரிப்புடன் கூறிய மகனை முறைத்தவர் பதில் பேசாமல் திரும்ப அமர்ந்தார்.

“எனக்கு வரபோற பொண்ணு மத்த பொண்ணுங்க மாதிரி என் பின்னாடி சுற்றுபவளாக இருக்கக்கூடாதும்மா. என்னை அவ பின்னாடி சுற்ற வைக்கும் பெண்ணாக இருக்கணும். இயற்கையாவே அழகு அதிகமாகவும், யாருக்கும் கெடுதல் நினைக்காத மனம் உடையவளாக இருக்கணும். முக்கியமாக என்னிடம் அவள் பணிந்துப்போய் அடக்கமாகப் பேசக்கூடாது. நான் அவளை மிரட்டும் முன்னரே ஒரு கோப பார்வையால் என்னை அடக்கி ஆளும் பெண்தான் வேணும் அம்மா. அவ கண்கள் கூட என்னிடம் காதலை மட்டும் யாசிக்கணும்” என்று வரிசையாக பட்டியலிட்ட மகனின் ரசனையை புரிந்து கொண்டாள் தனம்.

இருபத்தி ஆறு வயதில் ஒரு பையனின் மனநிலை அப்படிதான் இருக்குமென்று தெரித்தால் அவரும் அதை பெரிதாக எடுத்துக்கொண்டார். ‘என் மகனுக்கு தகுந்த பெண்ணை நீயே அவனிடம் காட்டிவிடு கடவுளே’ என்று இஷ்ட தெய்வத்துக்கு மனு போட்டார்.

“இப்படியொரு பெண்ணை செலக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி வைங்க. இல்ல என்னால முடியாது என்றாலும் நான் இந்த மாதிரி பெண்ணைப் பார்த்தா சொல்றேன் அவளையாவது எனக்கு கட்டி வைங்க” என்று இரண்டு புறமும் கோல் போட்டான்.

“அப்பா உங்க செலேக்ஷன் கூட சூப்பராக இருக்கு” தந்தையை பார்த்து குறும்பாக கண்சிமிட்டிவிட்டு அவன் எழுந்து செல்ல தனமோ கணவனை முறைத்துவிட்டு சமையலறைக்குள் சென்று மறைந்தார்.

குணசேகரனை அழைத்துக்கொண்டு டெல்லி வந்த தனம் அதன்பிறகு தேனிக்கு போக முடியாமல் போனது. அவர்கள் அங்கே சென்றபோது யுகேந்திரனின் சித்தப்பா இறந்துவிட்டார். தனம், கௌதம் இருவருக்கும் பாதுகாப்பாக ஐந்து வருடம் இருந்தவர் இறைவனடி சேர்த்தபிறகு தேனி செல்லும் முடிவை கண்விட்டு டெல்லியிலேயே தங்கிவிட்டனர். தேனியிலிருந்து வந்தபிறகு தாமோதரன், தமயந்தியின் நட்பு விட்டுப்போனது.

யுகேந்திரன் போலவே ராணுவத்தில் சேர்வேன் என்ற மகனின் மனதை மாற்றி போலீசிற்கு படிக்க சொன்னார் தனம். கணவனை வருடத்திற்கு ஒருமுறை பார்ப்பது போல மகனையும் எதிர்பார்த்து காத்திருக்க முடியாது என்று சொன்னதால் அவனும் மறுப்பு சொல்லாமல் போலீசிற்கு படித்து, ட்ரைனிங் முடித்துவிட்டு போஸ்டிங்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான்.

அதுவரை தாய் – தந்தையும் வம்பு வளர்த்துவிட்டு அறைக்கு வந்தவன் ஒரு வாரத்திற்கு தேவையான துணிமணிகளை எடுத்து வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்று மறைந்தான். சிறிதுநேரத்தில் தயாராகி வந்த மகனை நிமிர்ந்து பார்த்தார் தனம்.

ஆறடிக்கும் குறையாத உயரம், மாநிறம் நிறம், அலையலையாக கேசம், தடித்த புருவங்கள்,  கண்ணில் குறும்பு மின்னும் பார்வை, நேரான நாசி அளவான மீசை, அழுத்தமான உதடுகள், கம்பீரமான கட்டுகோப்பான உடலமைப்பு.

ஜீன்ஸ் பேண்ட், மெரூன் கலர் ஷர்ட் அணிந்து முழு கையை சுருட்டி விட்டுக்கொண்டு, “அம்மா சமையல் ரெடியா” என்றபடி டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான்.

“எங்கே தம்பி கிளம்பிட்ட” என்று யுகேந்திரன் மகனை கேட்டார்.

“அப்பா இன்னும் கொஞ்சநாளுக்குள் போஸ்ட் போட்டுவாங்க. அதனால் வெளியே எங்கும் போக முடியாதுன்னு ப்ரெண்ட்ஸ் குற்றாலம் போக பிளான் பண்ணாங்க. இன்னைக்கு கிளம்பறேன். நான் திரும்ப வருவதற்குள் லெட்டர் வந்தால் போன் பண்ணுங்கள்” என்றவன் சாப்பிட அமர்ந்தான். தனம் வேறு எதுவும் பேசாமல் இருவருக்கும் சாப்பாடு பரிமாறினார்.

கௌதம் பற்றி தனத்திற்கு நன்றாகவே தெரியும். அவன் ஒரு முடிவெடுத்தால் யார் சொன்னாலும் அதை செயல்படுத்தாமல் விடமாட்டான். அதனால் அவனின் விருப்பத்திற்கு அவர் மறுப்பு சொல்லவில்லை. அவன் அவர்கள் இருவரிடமும் விடைபெற்று நண்பர்களோடு குற்றாலம் நோக்கி புறப்பட்டான்.