sontham – 13

images (52)

அத்தியாயம் – 13

ஒரு வாரம் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது. வார இறுதியில் விடுமுறை விட்டவுடன் குற்றாலம் செல்வதை பற்றிய தீவிரமான சிந்தனையோடு ஹாலில் அமர்ந்திருந்த பேத்தியின் அருகே வந்து, “என்ன ஊர் சுத்த போகும் வானரம் வாலை சுருட்டிட்டு உட்கார்ந்து இருக்கு” என்று ஸ்ரீமதியை கிண்டல் செய்தபடி இன்னொரு சோபாவில் அமர்ந்தார் ராஜலட்சுமி.

அவரை முறைத்த மதியோ, “பாட்டி ரொம்ப போர் அடிக்குது. நானும், மதுவும் குற்றாலம் போலாம்னு நினைச்சோம். ஆனால் நீங்க எல்லாம் தனியாக விடமாட்டீங்களே அதுதான் அமைதியா வாலை சுருட்டி கம்முன்னு இருக்கேன்” என்று சோகமாக கீதம் வாசித்தாள் பேத்தி.

அவளின் முகம் வாடி இருப்பதை கவனித்த ராஜலட்சுமி சிறிதுநேரம் சிந்தனைக்குப் பிறகு, “நீ மட்டும் தனியாக போக வேண்டாம்னு தானே சொன்னதாக ஞாபகம்? மதுவைக் கூப்பிட்டு போறன்னு சொல்றது தான் கொஞ்சம்  யோசனையா இருக்கு..” என்று இழுத்தார்.

தமயந்தி கோவிலுக்கு சென்று இருக்க, தாமோதரன் வழக்கம்போலவே ஆபீஸ் சென்று இருக்கவே, “மதுவுடன், காயத்ரியும் எங்கக்கூட வருவதாகச் சொல்லி இருக்கிற பாட்டி. இப்போ கிளம்பினாலும் இவினிங் நாங்க வீட்டுக்கு வந்துவிடுவோம். பிளீஸ் நாங்க மூணு பேரும் போயிட்டு வரோமே?” என்று அவரின் தாடையைப் பிடித்து செல்லம் கொஞ்சினாள்.

பேத்தியின் தைரியம், துணிச்சல் இரண்டும் அவருக்கு அத்துபடி என்பதால், “சரிடா செல்லம் நீங்க மூணு பேரும் போயிட்டு வாங்க” அவர் அனுமதியளிக்கவே, “ஹுரே” என்று கத்தியபடி வேகமாக மாடியேறிச் சென்றாள்.

அவளின் சந்தோஷத்தை பார்த்த ராஜலட்சுமி எழுந்து அவரின் அறைக்கு செல்ல அங்கே பியானோ வாசிக்கும் முயற்சியில் கீபோர்டுகளில் ஒவ்வொரு விரல்களால் அழுத்தி கர்ண கொடூரமாக இசை எழுப்பி அந்த அறையில் அதிர்வை ஏற்படுத்திக்கொண்டு இருந்தாள் மதுஸ்ரீ.

அந்த இசையைக்கேட்டு, “அடியேய் வாசிக்க தெரியாமல் பியானோவை வாங்கி வைத்துகொண்டு நீ பண்ணும் அலப்பறை தாங்க முடியல மது” என்றவள் வேகமாக சென்று கிளம்பினாள்.

மதி தன்னை கிண்டல் செய்வது தெரிந்தும், “நீ வேண்டுமானால் பாரு நானே பியானோ வாசிக்க சீக்கிரம் கத்துகிட்டு சூப்பராக வாசிச்சு முதல் பரிசு வாங்குவேன்” என்று சவால்விட்டாள் மது.

“அது இந்த ஜென்மத்தில் நடக்காது. அதனால் இதை ஓரம்கட்டிவிட்டு சீக்கிரம் தயாராகு மது. நம்ம இன்னைக்கு குற்றாலம் போயிட்டு நைட் வீட்டிற்கு வரணும்” என்று அவளை அவசரமாக கிளம்பிச் சொன்னவள் காயத்ரிக்கு தகவல் கொடுத்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் மூன்று பேரும் காரில் குற்றாலம் கிளம்பிச் சென்றனர். காலையில் ஏழு மணிக்கு கிளம்பியவர்கள் அங்கே செல்லும்போது மணி பத்தை நெருங்கி இருந்தது.  

அதே நேரத்தில் டெல்லியில் இருந்து டூர் கிளம்பிய கௌதம் பல சுற்றுலா இடங்களுக்கு சென்றுவிட்டு கடைசியாக குற்றாலம் வந்து சேர்த்தனர். மதி கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியதும், “நான் நேர அருவிக்கு குளிக்க போறேன். நீங்க இருவரும் என்னோடு வரீங்களா இல்ல கோவிலுக்குப் போயிட்டு அப்புறம் அருவிக்கு குளிக்க வரீங்களா?” என்று கேட்டாள்.

அப்போது அங்கே ஒரு கார் வந்து நிற்கவும் அதிலிருந்து கௌதம், அசோக் இன்னும் சிலர் இறங்குவதை பார்த்த காயத்ரி, “நாங்க கோவிலுக்குப் போயிட்டு வரோம். நீ முதலில் அருவிக்குப் போ” என்று சொல்லிவிட்டு மதுவை பேசவே விடாமல் பதில் கொடுத்துவிட்டு வேகமாக காரிலிருந்து இறங்கினாள்.

காயத்ரி சொன்னபிறகு மறுப்பு சொல்ல வேண்டாம் என்ற எண்ணத்தில், “நீ முன்னாடி போ. நாங்க கோவிலுக்குப் போயிட்டு பின்னாடியே அருவிக்கு வரோம்” என்ற மதுவும் காயத்ரியுடன் கோவிலுக்கு செல்ல எப்போதும் போலவே தோளை குலுக்கிவிட்டு அருவிக்கு சென்றாள்.

மதி வழக்கமான துள்ளலோடு அருவிக்கு செல்ல மற்ற இருவரும் கைலாசநாதரை தரிசிக்க கோவிலுக்குள் நுழையவே, “டேய் கோவிலுக்கு எதுக்குடா இழுத்துட்டு வரீங்க? நேராக அருவிக்கே போயிருக்கலாம்” என்று சலித்துக்கொண்டான் அசோக்.

“ஏண்டா ஒரு இடத்துக்கு வந்தால் இது என்ன கோவிலுக்கு வர மாட்டேன்னு அடம்பிடிக்கிற?” என்று அவனின் தலையில் செல்லமாக தட்டினான்.

அவர்கள் பின்னோடு வருவதை தெரிந்துகொண்டே காயத்ரி பசங்களை சைட் அடித்தபடி, “மது பசங்க எல்லாம் சும்மா சூப்பரா இருக்காங்க இல்ல? எனக்கு யார் செட் ஆவாங்கன்னு கொஞ்சம் பார்த்து சொல்லு” மெல்லிய குரலில் கேட்டவளை பார்த்து தலையிலடித்துக் கொண்டாள்.

“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. நீ கோவிலுக்குப் போலான்னு வேகமா சொன்னதுக்கு இதுதான் காரணமா? மகளே ஒழுங்கா சாமியை கும்பிட்டுவிட்டு கிளம்பும் வழியைப் பாரு” அவளை மிரட்டிவிட்டு முன்னே நடந்த மதுவின் பேச்சை இந்த காதில் வாங்கி அந்த காதின் வழியாக விட்ட காயத்ரி தான் வந்த வேலையை சரியாக செய்தாள்.

அவளுக்கு முன்னாடி சென்ற மது சாமியைக் கும்பிட்டுவிட்டு அங்கிருந்த பிரகாரத்தில் ஒரு ஓரமாக நிற்க காயத்ரி வழக்கம்போல வந்த பசங்களை நோட்டம் விட்டபடி சாமியை கும்பிட்டுவிட்டு மதுவின் அருகே சென்றாள்.

அவர்களுக்கு முன்னாடி நின்று அசோக் அவனின் நண்பர்களோடு பேசிக் கொண்டு இருக்கவே, “இவனை இன்னொரு முறை பார்க்கணும்னு மனசு  பிராண்டுது” என்று காயத்ரி அவனை பார்த்து பெருமூச்சுவிட அந்த இடமே அனலாக மாறியது.

“ஆமா எங்கே கௌதமை காணோம்” என்று அசோக் கேட்க, “அவன் சாமி கும்பிட்டுட்டு வரேன்னு சொன்னான். அங்கே பாரு சந்நிதானத்தில் கண்மூடி அமைதியாக நின்னுக்கிட்டு இருக்கான்” என்று மற்றொருவன் பதில் கொடுத்தான். இதை எல்லாம் காதில் வாங்காத மது அங்கிருந்த இயற்கை சூழலையும், அமைதியையும் வெகுவாக ரசித்து கொண்டு இருந்தாள்.

அவளின் நெற்றியில் குங்குமம் இல்லாததை கவனித்த காயத்ரி, “என்னடி சாமி கும்பிட்டுட்டு குங்குமம் வைக்காமல் நின்னுட்டு இருக்கிற? இரு நான் போய் குங்குமம் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி அவள் அங்கிருந்து நகரவே, ‘இவ இன்னைக்கு ஒரு முடிவுடன் தான் கிளம்பி வந்து இருக்கிறா’ என்று மனதினுள் நினைத்தபடி மெளனமாக நின்றிருந்தாள்.

அவளை விட்டு நகர்ந்ததும் அசோக்கை சைட் அடித்தபடி காயத்ரி அங்கிருந்து செல்லவே, “அவன் சாமி கும்பிட்டுவிட்டு அருவிக்கு வரட்டும் நம்ம முன்னாடி போலாம் வா அசோக்”  மற்றவர்கள் அவனை இழுத்துச் சென்றனர்.

அதே நேரத்தில் கௌதம் தன் கையில் குங்குமத்தை எடுத்துகொண்டு, “இவனுங்க கூட வந்ததே தப்பு. நினைச்ச இடத்தில் எல்லாம் காரில் நிறுத்தி ஊரை சுற்றிவிட்டு வராணுங்க” என்று சலித்துக்கொண்டே அவர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி சென்றான்.

அப்போது தனத்திடம் இருந்து போன் வரவே, “ஹலோ அம்மா சொல்லுங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று விசாரிக்கவே மறுபுறம் இருந்து வழக்கம்போல சரம்வாரியாக திட்டித் தீர்த்தார் தனம்.

“என்னடா ஒரு வாரத்திற்குள் குற்றாலம் போயிட்டு வருவேன்னு சொன்ன. அதுக்கு மேல் இரண்டுநாள் ஆச்சு? அதுமட்டும் இல்லாமல் உனக்கு வேலையில் சேர சொல்லி அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்திருக்குடா” என்றதும் கௌதம் முகம் மலரவே நண்பர்கள் நிற்கும் இடத்திற்கு வந்துவிட்டதாக நினைத்தபடி தாயுடன் பேசினான்.

“சூப்பர் குட் நியூஸ் சொல்லி இருக்கீங்க அம்மா” என்றவன் காயத்ரி மீது இருந்த கடுப்பில் திரும்பி நின்றிருந்தவளிடம், “இந்த குங்குமம் எடுத்துக்கோ” என்று கையை நீட்டினான்.

அந்த குங்குமத்தை பார்த்தும், “ஏண்டி ஒரு குங்குமம் எடுத்துட்டு வருவதற்கு இவ்வளவு நேரமா?” என்றவள் அவன் நீட்டிய கையிலிருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துவிட்டு திரும்பி, “சரியாக இருக்கான்னு பாரு” என்றவள் திரும்பி நின்று நிமிரவும், மதுவின் குரல்கேட்டு கௌதம் அவளை பார்த்தான். இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொண்டது.

இடது கையில் போனும், வலது கைகளில் குங்குமத்தை நீட்டியவனின் தோற்றத்தை அளந்தது அவளின் பார்வை. அலையலையாக கேசம், அளவான நெற்றி அதில் கீற்று போல குங்குமமும்,  அடர்ந்தப் புருவங்கள், குறும்பு மின்னும் விழிகளில் கொஞ்சம் ரசனை மின்னியது. கூர்மையான நாசிகள், அளவான மீசை, அழுத்தமான உதடுகள். கட்டுகோப்பான உடலமைப்புடன் ஆறடி உயர ஆண்மகன் வெள்ளை நிற சர்ட், ப்ளூ ஜீன்ஸில் தன் முன்னே நின்றிருப்பதைப் பார்த்தும் அவளின் விழிகள் மெல்ல கோபத்தில் சிவந்தது.

மற்றொரு புறம் தன் பின்னோடு சுற்றும் பெண்களை திரும்பியும் பார்க்காத கௌதம் மதுவைப் பார்த்தும் அசந்துதான் போனான். கோணலாக நேர் எடுத்து தலையை அழகாக பின்னியவளின் கூந்தலில் மல்லிகை சரங்கள் இருபுறமும் தொங்கியது.

அழகான நெற்றியில் சின்ன போட்டு அதற்கு மேல் அவன் கொடுத்த குங்குமம், வில்லென புருவங்கள், சாந்தமான மீன்விழிகள் அவனை பார்த்தும் கோபத்தை பிரதிபலித்தது. கூர்மையான நாசி, அழகான உதடுகள். பால் நிறத்திற்கு எடுப்பாக சிவப்பு நிறத்தில் பாவடையும், சந்தன நிறத்தில் தாவணியும் அணிந்து நின்றிருந்தவளைப் பார்த்ததும் அவன் உள்ளம் அவளிடம் பறிபோனது.

இருவரும் தங்களை சுற்றி இருக்கும் உலகத்தை மறந்து நின்றிருக்க, “கௌதம்” என்று கத்திய தாயின் குரல்கேட்டும் தன்னிலைக்கு மீண்டு, “அம்மா நான் அப்புறம் பேசறேன்” என்றவன் அழைப்பை துண்டித்தான்.

ஒரு ஆண் தனக்கு குங்குமம் கொடுத்ததையும், அதை தான் நெற்றியில் வைத்ததையும் நினைத்து கோபத்தில் விழிகள் சிவக்க, “ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணுக்கு குங்குமம் கொடுக்க கூடாது என்றுகூட உங்களுக்கு தெரியாதா? பெண்களைப் பார்த்தும் எல்லோரும் வழிசல் கேசுன்னு நினைச்சிட்டு இருப்பீங்க போல” என்று கோபத்தில் அவனை சரம்வாரியாக திட்ட தொடங்கினாள்.

அவள் திட்டுவதை சுவரசியமாக கேட்ட கௌதம், “ஹலோ இது இயல்பாக நடந்த ஒரு விஷயம். இப்போ இந்த நிமிஷம் வரை உங்களை பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்ல. இது எதிர்பாராமல் நடந்தது. அதுக்காக நான் ஸாரி கேட்டுக்கிறேன்” என்று குறுஞ்சிரிப்புடன் அவளைப் பார்த்து கண்சிமிட்டி, “ஸாரி” என்றான்.

அதில் இன்னும் கடுப்பான மது அவனை திட்டும் முன்னரே, “மது இந்தா குங்குமம்” என்றபடி அங்கே வந்த காயத்ரி அவளின் நெற்றியில் இருந்த குங்குமத்தையும், கௌதமையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு அசட்டுத்தனமான கற்பனையுடன் சிரித்தவளை முறைத்தாள் மது.

“ஏண்டி உனக்கு எல்லாம் அறிவு இருக்கா இல்லையா?” என்று அவள் எரிந்துவிழுக, ‘இது மதுவின் இயல்பே இல்லையே?! அவளுக்கு கோபமே வராதே’ என்று அவளின் எதிரே நின்ற புதியவனையும் சிந்தனையோடு பார்த்தாள்.

மதுவின் கோபத்தை ரசித்து பார்த்த கௌதம், ‘நான் நினைக்கவே இல்லடி உன்னை இங்கே பார்ப்பேன்னு. நான் நினைச்சமாதிரி என் கண்முன்னாடி நின்று கோபப்படும் உன்னை இப்படியே தாலிகட்டி தூக்கிட்டு போலாமான்னு தோணுது. ஆனால் அதுக்கும் நீ சண்டை போடுவியே?’ என்று மனதிற்குள் நினைத்தான்.

‘அதுக்கு எல்லாம் பயந்தவன்தான் அவ முன்னாடியே நின்னு கன்னசைக்காமல் அவளை சைட் அடிக்கிறியோ’ என்ற மனதை நல்ல வார்த்தைகள் சொல்லி திட்டிவிட்டு அவளின் மீதே பார்வையை செலுத்தினான்.

அவனை கோபத்துடன் முறைத்தவள், “நான் கேட்ட கேள்விக்கு இதுதான் பதிலா? ஊர் பேர் தெரியாத பொண்ணுக்கு குங்குமம் கொடுக்கத்தான் சார் கோவிலுக்கு வரீங்களோ?” என்று எரிந்து விழுக அவனின் நெஞ்சிலோ சில்லென்ற மலைச்சாரல் வீசியது.

அவனை ஒன்றும் செய்ய முடியாத கோபத்தில், “எல்லாம் உன்னால வந்தது” என்று காயத்ரியை திட்டியபடி அவள் அங்கிருந்து செல்ல நினைத்து இரண்டு அடி எடுத்து வைத்திருப்பாள்.

அதற்குள் சொடக்குபோட்டு அவளின் கவனத்தை ஈர்த்த கௌதம், “இன்னைக்கு நடந்த விஷயம் எதிர்பாராமல் நடந்ததுன்னு சொல்லிட்டேன். இப்போகூட உன் உன் பேரு, ஊர் எதுவும் தெரியாது. ஆனால் நீ எனக்கானவன்னு நினச்சா உன்னை தேடி வருவேன். உன் கையில் குங்குமம் கொடுத்த மாதிரியே உன் கழுத்தில் தாலியும் கட்டுவேன்” அவன் சவால் விடுவதுபோல கூறவே பார்த்து அவளின் முகம் மாறியது.

“ஆமா கண்டுபிடிச்சு வரும் மூஞ்சிப் பாரு” என்று அவள் தாடையைத் தோளில் இடித்துக்கொண்டு முகத்தை திருப்பினாள்.

“என்னை விளையாட்டனவன்னு நினைக்காதே” என்று சிரிப்புடன் எச்சரித்துவிட்டு அவன் அங்கிருந்து செல்ல, “வெவ்வெவ்வ இவன் மனசில் ஹீரோன்னு நினைச்சிட்டு இருக்கிறான். என்னை தேடி வருவானாம். இதை நினைச்சிட்டு நாங்க கனவில் டூயட் பாடிட்டு இருப்போம்னு கனவு காண்கிறான்” என்று கௌதமை திட்டியபடி மது முன்னே சென்றாள்.

இருவரின் இடையே நடந்த வாக்குவாதத்தை பார்த்த காயத்ரி, “இது என்னடா புது வம்பாக இருக்கு. நல்ல இருந்த பொண்ணை கொஞ்ச நேரத்தில் கொவக்காரியாக மார்ரிவிட்டுடானே?!” தனியாக புலம்பியபடி மதுவை பின்தொடர்ந்தாள்.

கௌதம் தன் நண்பனைத் தேடி அருவிகரைக்கு செல்ல அங்கே அருவியை வேடிக்கைப் பார்ப்பதை விட்டுவிட்டு எல்லோரும் பெண்களை சைட் அடித்துகொண்டு இருந்தனர்.

அதை பார்த்தும், “ஏண்டா என்னிடம் சொல்லாமல்  கிளம்பி வந்தீங்க. ஆமா இங்கே என்ன அதிசயத்தை பார்க்கிற மாதிரி பார்த்துட்டு இருக்கீங்க” நண்பர்களிடம் சண்டைக்கு போனான்.

“கௌதம் இந்த பொண்ணை கொஞ்ச நேரத்திற்கு முன்னாடிதான் கோவிலில் சாதாரண பாவாடை தாவணியில் பார்த்தோம். இப்போ பாரேன் இவ கிரண்டான உடையில் குளிச்சிட்டு இருக்கிறா பாரு” என்று அங்கே ஒரு பெண்ணை கைகாட்டினான் அசோக்.

அவன் கைகாட்டிய திசையைத் திரும்பிப் பார்த்த கௌதமின் விழிகள் வியப்பில் விரிந்தபோதும் அவள் அணிந்திருந்த உடையைப் பார்த்தும், “இவ நம்ம கோவிலில் பார்த்த பொண்ணு இல்லடா. அவ கீழே தான் இருக்கிற” என்று சொல்லி அவன் சட்டென்று திரும்பிப் பார்க்க அங்கே காயத்திரியுடன் வந்து கொண்டிருந்தாள் மது.

அவனோட நண்பர்களும் அதிசயம் போல வாயைப் பிளக்க, “டிவின்ஸ்” என்றதும், “இதுதான் கௌதமின் பச்சைக்கிளி. சும்மா கார சாரமாக வம்பிழுக்கும் ஆசைக்கிளி” என்று மதுவைப் பார்த்தவனின் விழிகளில் காதல் மின்னி மறையவே அசோக் அவனை ஓட்ட தொடங்கிவிட்டான்.

காயத்ரி அருவியில் நனைய, “நீயும் வாடி” என்று மதி அவளை அழைத்தாள்.

அதே நேரத்தில் கௌதம் தன் நண்பர்களோடு அருவியில் குளிப்பதையும், அவனின் பார்வை அவளின் மீது படிவத்தைக் கண்டு, “இல்ல நான் வரல நீங்க குளிச்சிட்டு வாங்க” என்றவள் சொல்லிவிட்டு ஓரமாக நின்றுகொண்டாள்.

அருவி என்றாலே ஆனந்தமாக நனையும் மதுவே இன்று ஒதுங்குவதை விநோதமாக பார்த்தபோதும் அவள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. காயத்ரிக்கு விஷயம் புரிந்தபோதும் அவள் அசோக்கை சைட் அடிக்கும் வேலையை மட்டும் சரியாக செய்தாள்.

அதன்பிறகு அவர்கள் குளித்துவிட்டு குற்றாலத்தில் இருந்து கிளம்பும் போது கௌதம் மதுவை விழியால் தேடினான். அப்போது மதியின் அருகே நின்றிருந்தவளைப் பார்த்து குறும்புடன் சிரித்தவனை முறைத்தவள், ‘ஜாக்கிரதை’ விரல்நீட்டி எச்சரித்தாள்.

அவன் முத்தமிடுவது போல இதழ்குவித்து அவளை பார்த்து ஊதவே குப்பென்று சிவந்த முகத்துடன் அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள் மது. கௌதம் தன் நண்பர்களோடு டெல்லி கிளம்பிடவே, அவர்கள் மூவரும் தேனி நோக்கி சென்றனர்.