sontham – 19

download (2)

அத்தியாயம் – 19

அதன்பிறகு ஸ்ரீமதி, மதுஸ்ரீ எப்போதும் போலவே கல்லூரி சென்று வந்தனர். இறுதியாண்டு என்பதால் இருவருமே முழு மூச்சாக படிப்பில் தங்களின் கவனத்தை திருப்பினார்.

யுகேந்திரன் – தனலட்சுமி இருவரும் ஒரு வாரம் மகனோடு தங்கிவிட்டு மீண்டும் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். கௌதம் அவனின் வேலையைக் கவனிக்க நாட்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைய தொடங்கியது.

அதே நேரத்தில் மதுவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது அவனின் வழக்கமாக மாறிப்போனது.  அந்த வீட்டில் இருந்த யாருமே அவனை தவறாக நினைக்கவில்லை.

அதே நேரத்தில் கௌதமை தன் இரண்டு பேத்திகளில் ஒருத்திக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தார்.தாமோதரன் – தமயந்தி இருவருக்கும் அந்த ஆசை இருந்தபோதும் அவர்கள் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

கௌதம் மதுவின் வீட்டிற்கு வருவதற்கும் ஒரு காரணம் இருந்தது. இறுதியாண்டில் இருக்கும் மது அடிக்கடி லீவ் போட முடியாது. அத்தோடு அவர்கள் இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்துகொண்டே போனது. அதை காரணம் காட்டி அவள் வருத்தப்படவே அவனும் விடுமுறை நாளில் அவளை வந்து பார்த்து செல்வது வழக்கமாக மாறியது.

மதி வழக்கம்போலவே காயத்ரியுடன் ஷாப்பிங் கிளம்பி செல்ல, மது தன் வேலைகளை முடித்துக்கொண்டு படிப்பதற்காக ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தாள். அப்போது தான் அசைன்மெண்ட் எழுதாமல் இருப்பது ஞாபகம் வரவே புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அதை எழுத தொடங்கினாள்.

திடீரென்று சில்லென்ற காற்று அவளை வந்து மோதியதில் சட்டென்று கவனம் கலந்து நிமிர்ந்து பார்த்தாள். வீட்டின் வாசலை மறைத்து வெண்ணிற புகை மண்டலம் நிற்பதை கண்டு அவளுக்கு திக்கென்றது.

ஆனால் அதற்காக பயப்படாமல் மனதில் தைரியத்தை வரவழைத்துகொண்டு, ‘மதியான நேரத்தில் பனி மூட்டமாக இருக்குமா?’ என்ற கேள்வியுடன் எழுந்து வாசலுக்கு சென்று பார்க்க அங்கே வெளிச்சமாக இருப்பதை பார்த்து மூச்சை இழுத்து வெளியே விட்டாள்.

 “ச்சே ஒரு நிமிஷம் நானே பயந்துட்டேன்” என்று நினைத்தபடி அவள் மீண்டும் ஹாலில் சென்று அமர்ந்த சிலநொடிகளில் ஜாதிமல்லி வாசனை அவளின் நாசியைத் துளைத்தது. அந்த வாசனையை உணர்ந்து அவள் பட்டென்று திரும்பி பார்க்க சோபாவில் வெண்ணிற புகைமண்டலம் அவளுக்கு வெகு அருகில் அமர்ந்திருந்தது.

அதைப் பார்த்தும் பயத்தில் மனம் படபடவென்று அடித்துக்கொள்ள, ‘இது என்னது?’ என்ற கேள்வியுடன் புகை மண்டலத்தின் மீது கைவைக்க நினைத்தும் காற்றோடு கலந்து மறைந்தது. அடுத்த நொடியில் மதுவின் உடல் முழுவதும் வேர்த்துவிடவே அவளின் கைகள் எல்லாம் சில்லென்று ஆகிவிட்டது.

சற்றுமுன் நடந்த அனைத்தும் அவளின் மனதில் படமாக ஓடவே, ‘இத்தனை நாளும் தோட்டத்தில் தான் இந்த வாசனை வரும். இப்போ எல்லாம் நான் போகும் இடத்திற்கு எல்லாம் வருதே’ மது நினைக்கும்போது அவளின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. அடுத்த சில நொடிகளில் அவளுக்கு தலைவலி வின் வின்னேன்றது. 

தனக்குள் ஏற்படும் மாற்றங்கள் புரிந்தபோதும் அதை தடுக்க முடியாமல் ஒருவிதமான யோசனையுடன் வாசலைப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள். அப்போது வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம்கேட்டு சட்டென்று நிமிர்ந்து பார்க்க கௌதம் தன் பைக் சாவியைக் கையில் சுழற்றியபடி வீட்டிற்குள் நுழைந்தான்.

மது ஹாலில் அமர்ந்திருப்பதை கண்டவுடன், “அம்மா- அப்பா எல்லாம் எங்கே?” என்று கேட்டபடி அவளின் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான் கௌதம்.

“கொஞ்சம் ஆபீஸ் வேலையாக வெளியே போயிருக்காங்க” என்றபோது அவளுக்கு வார்த்தைகள் தந்தியடித்தது. அவளின் முகம் முழுவதும் முத்து முத்தாக வேர்ப்பதை கண்டு பதட்டத்துடன் எழுந்து அவளின் அருகே அமர்ந்தான்.

“மது என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கிற?” என்று விசாரித்தபடி அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தான்.

அது சில்லென்று இருக்கவே, “மது உனக்கு என்ன பண்ணுது? ஏன் உன் முகம் ஒரு மாதிரி களையிழந்து போயிருக்கு” என்று கேட்டபடியே வெடுக்கென்று எழுந்து சென்று தண்ணீரை எடுத்து வந்து அவளுக்கு குடிப்பதற்கு கொடுத்துவிட்டு தன் கச்சீப்பில் அவளின் முகத்தை துடைத்துவிட்டான்.

அவள் தண்ணீரைக் குடித்ததும் அவளின் கண்களில் லேசாக தெளியவே, “கௌதம் என்னன்னு தெரியல. மனசு எல்லாம் படபடன்னு அடிச்சுக்குது. யாருக்கோ எங்கோ ஆபத்துன்னு சொல்லுது. என் மனசு அந்த இடத்தை நோக்கி போக சொல்லுது” என்று மது சொல்லும்போது அவளின் மன கண்களுக்கு அந்த ஊரின் ஒதுக்குபுறமாக இருந்த ஒரு வீட்டிற்குள் ஒரு பெண்ணைத் தூக்கி செல்வது தெரிந்தது.

மது சொல்வதை பொறுமையாகக் கேட்டபிறகு, “மது அதெல்லாம் ஒண்ணும் இல்லடா. நீ தொடர்ந்து படிச்சிட்டே இருப்பதால் ரொம்பவே குழப்பத்துடன் இருக்கிற. அதுதான் இப்படியெல்லாம் தோணுது. நீ கொஞ்சநேரம் போய் ரெஸ்ட் எடு. எல்லாமே சரியாக போய்விடும்” என்று அவளின் நெற்றியில் முத்தம் பதித்து அவளை சோபாவில் படுக்க சொன்னான்.

அவள் சரியென்று தலையசைத்துவிட்டு சோபாவில் படுத்து கண் மூடவே கௌதமின் செல்போன் சிணுங்கியது. அவன்  அதை உயிர்ப்பித்து பேசவே, “டேய் இங்கே ஒரு பெண்ணைக் காணலன்னு கம்பிளைன்ட் கொடுத்து இருக்காங்க. அந்த பெண்ணைப் பற்றி விசாரித்தபோது ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக தகவல் வந்திருக்குடா. நீ உடனே கிளம்பி வா. நம்ம அந்த இடத்திற்கு போகணும்” என்ற அசோக் அந்த பெண் இருக்கும் இடத்தை மெசேஜ் அனுப்பி வைத்தான்.

கௌதமை கடமை ஒருபுறம் கைநீட்டி அழைக்க, மற்றொரு புறம் மதுவின் நிலையைக்கண்டு மனதிற்குள் கலங்கியவன், “மது நீ ரெஸ்ட் எடும்மா. எனக்கு ஒரு முக்கியமான வேலை முடிச்சிட்டு சீக்கிரமே வருகிறேன்” என்று சொல்லவே அவளும் அரை மயக்கத்துடன் சரியென்று தலையசைத்தாள்.

அதற்கு மேல் தாமதிப்பது சரியில்லை என்று உணர்ந்து கௌதம் உடனே அங்கிருந்து போலீஸ் ஸ்டேஷன் செல்ல அங்கே கான்ஸ்டபிளுடன் தயாராக நின்றிருந்தான் அசோக். உடனே கௌதம் அவர்களோடு சீப்பில் ஏறி அந்த இடத்திற்கு சென்றனர்.

அவர்கள் செல்லும் வழியில் ஒரு திருப்பத்தில் மது வேகமாக ஓடுவதை கண்ட கௌதம், ‘இவளை இப்போதானே ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு கிளம்பி வந்தேன். அதற்குள் இங்கே யாரைப் பார்க்க தலை தெறிக்க ஓடிட்டு இருக்கிற?’ என்று புரியாமல் வண்டியைத் திருப்ப சொல்லும் முன்னரே கான்ஸ்டபிள் அதை செய்தான்.

அதை பார்த்த  கௌதம், “இந்த பக்கமாக போற?” என்று அவன் குழப்பத்துடன் கேட்டான்.

“சார் அந்த இடத்திற்கு இந்த வழியாகத்தான் போகணும்” என்றான் கான்ஸ்டபிள்.

அதே வழியில் வேகமாக ஓடிக்கொண்டு இருந்த மதுவை அப்போதுதான் கவனித்த அசோக், “இந்த பொண்ணு எதுக்குடா இவ்வளவு வேகமாக ஓடுது. இந்த சீப் வேகத்தைவிட அந்த பொண்ணு ஓடும் வேகம் அதிகமாக இருக்கு” என்றான்.

மீண்டும் கௌதமின் கவனம் முழுவதும் மதுவின் புறமாக திரும்பிவிடவே, “மது” என்று அவள் பெயர் சொல்லி அழைத்தான். அவளின் கால்களில் வேகம் அதிகரித்ததே தவிர அவன் கூப்பிடும் சத்தம் அவளின் காதுகளுக்கு எட்டவில்லை.

ஆனால் மது ஓடுவதை நிறுத்தாமல் இருக்கவே திடீரென்று ஒரு திருப்பத்தில் அவர்கள் ஜீப் திரும்பியது. அவர்களின் முன்னாள் ஓடிக்கொண்டு இருந்த மது மாயமென மறைந்து போனாள். அவள் எந்தப்பக்கம் சென்றால் என்று புரியாமல் கௌதம், அசோக் இருவரும் குழம்பினர்.

அதே நேரத்தில் தன் மனக்கண்ணில் தோன்றிய வீட்டை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டு இருந்த மதுவிற்கு மேல் அந்த புகைமூட்டம் சென்று கொண்டிருந்தது. அந்த வீட்டிற்குள் நடக்கும் அனைத்தும் அவளின் மனக்கண்ணில் தெளிவாக தெரிந்தது.

கௌதம் அந்த இடத்திற்கு வந்து சேரும் முன்னரே அங்கு சென்று சேர்ந்த மதுவின் காதுகளுக்கு ஒரு பெண்ணின் கதறல் சத்தம் கேட்டது. அவள் சுற்றிலும் பார்வைச் சுழற்றிய மதுவின் கண்களில் கற்குவியல் ஒன்று தென்பட்டது. உடனே அதை கையில் எடுத்து வேகமாக ஓட்டின் மீது வீசினாள்.

அடுத்தடுத்து அவள் அங்கிருந்த கல்லை எடுத்து அவள் சரம்வாரியாக ஓட்டின் மீது விட்டெறியவே அந்த வீட்டின் கதவுகளைத் திறந்துகொண்டு நால்வர் வெளியே வந்தனர். அதற்குள் மது மாயமென மறைக்கப்பட்டாள் அந்த புகைமண்டலத்தினால்!

அதற்குமேல் மதுவினால் தாக்குபிடிக்க முடியாமல் அந்த வீட்டைவிட்டு சற்று தூரத்தில் இருந்த கட்டிலைநோக்கி நோக்கி நடந்து சென்றாள். அவள் நடந்து சென்றாளோ இல்லை அவளுக்கு ஆபத்து வரக்கூடாதுன்னு அந்த புகைமண்டலம் அவளின் மனதை திசை திருப்பியதோ?

அவ்வளவு தூரம் ஓடிவந்த களைப்பில் அவளுக்கு மூச்சிரைக்கவே நெஞ்சை அழுத்தி பிடித்துகொண்டு அமர்ந்தாள். அவளை தென்றல் தீண்டிச் செல்ல கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தாள்.

அவர்கள் வெளியே வந்து பார்க்கும்போது வாசலில் போலீஸ் ஜீப் வந்து நிற்கவும் சரியாக இருக்கவே, “ஏய் நீங்க எல்லாம் யாருடா? அசோக் இவனுங்களை எல்லாம் பிடிங்க. நான் போய் பார்த்துட்டு வரேன்” என்று சொல்லி அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.

அங்கே ஒரு பெண் அரைகுறை உடையோடு கை, கால்களில் கீறலோடு கிடப்பதை கண்டு வேகமாக அங்கிருந்த சீலையை தூக்கி அந்த பெண்ணின் மீது போட்டு அவளின் மானத்தை மறைந்தான் கௌதம்.

அந்த பெண் அழுகையோடு அவனை கையெடுத்து கும்பிட்டவே, “உனக்கு எதுவும் இல்லையே?” என்று விசாரிக்க, “அதற்குள் நீங்க வந்துட்டீங்க அண்ணா” என்றாள் அழுகையுடன்.

அவன் சரியென்று தலையசைத்துவிட்டு, “சீக்கிரம் உடையை மாற்றிவிட்டு வெளியே வாம்மா” என்றவன் வேகமாக வெளியே செல்ல அசோக் அந்த நால்வரையும் அடித்து துவைத்து வண்டியில் ஏற்றுவதை கண்டான்.

“அசோக் அந்த பொண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்ல. அவளை முதலில் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போ. இவனுங்களை கொண்டுபோய் லாக்கப்பில் வை” என்றவுடன் அசோக் மறுப்பு சொல்லாமல் சரியென்று தலையசைத்தான்.

அந்த பெண்ணை வண்டியில் அசோக்குடன் அனுப்பிவிட்டு, ‘இந்த மது இவ்வளவு வேகமாக இந்தப்பக்கமாகதானே ஓடி வந்தா? இப்போ எந்தப்பக்கம் போய் அவளை தேடுவது?” என்றவன் சிந்தனையோடு சுற்றிலும் பார்வையைச் சுழற்றினான்.

அந்த வீட்டிற்கு சற்று தூரத்தில் மாமரத்தின் அரியே அமர்ந்திருந்த மதுவை கண்டவுடன் வேகமாக அவளின் அருகே சென்றான். அவள் ஓடிவந்த வேகத்தில் அவளின் சுடிதார் முழுவதும் வியர்வையில் நனைந்திருக்கவே, “மது” என்றபடி அவளை நெருங்கினான்.

அதுவரை மதுவை சூழ்ந்திருந்த புகைமண்டலம் காற்றுடன் கலந்து மறையும்போது ஜாதிமல்லியின் வாசனையும் அவளைவிட்டு விலகுவதை உணர்ந்தாள் மது.

கௌதம் பதட்டத்துடன் அவளை நெருங்கி, “என்ன மது இது முட்டாள்தனம். நான்தான் களைப்பாக இருந்தால் தூங்குன்னு சொல்லிட்டு தானே அங்கிருந்து வந்தேன். நான் ஒரு பெண்ணைத் தேடி இங்கே வரும்போது ரோட்டில் அவ்வளவு வேகத்தில் ஓடிட்டு இருக்கிற? என் மனசு ஒரு நிமிஷம் என் கையில் இல்லை” என்றபடி அவளை இறுக்கியணைத்து கொண்டான் கௌதம்.

அவள் தன் கைக்குள் இருப்பதை அவனால் நம்ப முடியாமல் மெல்ல அவளின் கூந்தலை விலகி அவளின் பளிங்கு முகத்தைப் பார்த்தான்.

அவ்வளவு களைப்பிலும் அவனைப் பார்த்து பளிச்சென்று சிரித்தவள், “நீ வந்தபிறகு என்ன நடந்துன்னு எனக்கு தெரியல கௌதம். இவ்வளவு தூரம் ஓடி வந்தது மட்டும் தெரியும். அதுவும் நல்லதுக்குதான் ஒரு பெண்ணோட மானத்தைக் காப்பாற்ற முடிஞ்சது இல்ல” என்று அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.

அவளின் பேச்சில் இருந்த நியாயம் புரிந்தாலும், “அதுக்காக இப்படி ஓடிவர வேண்டுமா மது? ஏற்கனவே உன்னை வீட்டில் விட்டுட்டு வந்து மனசு கிடந்து தவிச்சுது தெரியுமா? இப்போ இவ்வளவு தூரம் வெயிலில் வெறும் காலோடு ஓடிவந்திருக்கிற? இதெல்லாம் எதுக்குன்னு கொஞ்சமாவது உனக்கு புரியுதா?” என்று பதட்டத்துடன் கேள்விகளை அடுக்கினான்.

அவன் கண்ணில் காதல் வழிவதை கண்ட மது, “எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் எனக்குள் என்னவோ மாற்றம் நடக்குது கௌதம். இப்போ எல்லாம் என்னை அடிக்கடி அந்த ஜாதிமல்லி வாசனை சுற்றி வருது. சில நேரங்களில் மனசு படபடன்னு அடிச்சுக்கும் காரணமே தெரியாது” என்றவள் கண்ணீருடன் அவனின் பரந்த மார்பில் முகம் புதைத்து அழுதாள்.

அவள் பேசுவது வித்தியாசமாக தோன்றியபோது இன்று அதை கண்கூடாக கண்டதால் அவனும் அதை ஏற்றுக் கொண்டான். அதற்கு தீர்வை கண்டுபிடிக்க சொல்லி மனம் வேகமாக யோசிக்க தொடங்கியது.

“கௌதம் உன்னை இதனால் நிரந்தரமாக இழந்துவிடுவேனோன்னு பயமாக இருக்கு கௌதம். ஒவ்வொரு செயலின் முடிவிலும் யாருக்கோ நல்லது நடக்குதுதான். ஆனால் அதுக்கான காரணம் தெரியாமல் முழி பிதுங்குது. சில நேரத்தில் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு” என்று இத்தனை நாளும் யாரிடமும் சொல்லாமல் மனதிற்குள் போட்டு புதைத்து வைத்தவள் அவனிடம் மனம் திறந்து அனைத்தையும் கூறினாள்.

கல்லூரியில் நடந்த பியானோ போட்டி, அன்று நடுரோட்டில் நின்றது, இன்று இவ்வளவு தூரம் ஓடி வந்தது எல்லாவற்றையும் அவனிடம் கூறினாள். கௌதம் அழுகும் அவளை அணைத்தபடி வெகுநேரம் அங்கே அமர்ந்திருந்தான். அவளைச் சுற்றி மாயவலை உருவாவதை அவனால் உணர முடிந்தது.

அது மட்டும் இல்லாமல் அவளுக்கு எந்த ஆபத்தும் வராமல்  தடுப்பது யாரென்ற கேள்விக்கு அவனுக்கு விடை கிடைக்கவில்லை. இந்தளவுக்கு அவளை பாதுகாக்க என்ன காரணம். அவளுக்கு அந்த ஜாதிமல்லி வாசனைக்கும் என்ன தொடர்ந்து என்று யோசிக்க தொடங்கினான்.

மது அவனின் மார்பில் புதைந்து அழுதுகொண்டே இருக்க, “மது உன்னை எதுக்காகவும் பிரிஞ்சுபோக மாட்டேன். நீ இதுக்கெல்லாம் பயப்படாதே. எல்லாமே சீக்கிரம் சரியாகும். நீ ரொம்ப குழம்பிப்போய் இருக்கிற அதனால் உன்னை நாளையிலிருந்து தியான கிளாஸ் கூட்டிட்டுப் போறேன். அங்கே போனால் எல்லாம் சரியாகும்” என்று அவளை ஆறுதல் படுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.