Sontham – 2

அந்த அழுத்தமான காலடி ஓசை தன்னை நெருங்கி வரும்போதே வருவது யாரென்று புரிந்துக் கொண்டவள் திரும்பிப் பார்க்காமல் அமர்ந்திருந்தாள் தமயந்தி.

அவளின் அருகில் வந்து அமர்ந்த தாமோதரன், “என்ன தமயந்தி என்ன சொல்றாங்க என்னோட மகள்கள்” அவனின் முகத்தை திரும்பிப் பார்த்து பளிச்சென்று புன்னகைத்தவள்,

“எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு மாமா. என்னோட கருவில் இப்போ நம்ம குழந்தை” அவளின் முகம் மலர கணவனின் முகமும் பிரகாசமானது.

அவளுக்கு குழந்தை என்றால் கொள்ளை விருப்பம் என்று தாமோதரனுக்கும் தெரியும். அவளின் இரண்டு குழந்தை கருவிலேயே கலைந்துவிட ரொம்பவே சோர்ந்து போனாள் தமயந்தி.

மீண்டும் அவளை மீட்டுக்கொண்டு வந்தது தாமோதரனின் காதல் மட்டுமே. அந்த அன்புக்கு சாட்சியாக மீண்டும் அவள் கருவுற்றாள். இது அவளுக்கு ஏழாவது மாதம்.

அவளின் பளிங்கு கன்னத்தை விரலால் வருடிய தாமோதரனின் கைகளின் வித்தையில் பெண்ணவள் விழிமூடி மயங்க, “நான் சொன்னேன் இல்ல தாமு. உன் நல்ல மனசுக்கு கடவுள் உனக்கு இரட்டிப்பாக கொடுப்பார் என்று. இப்போ பாரு நீ இழந்த இரு குழந்தைக்கும் சேர்த்து இரட்டிப்பாக இரட்டை குழந்தை கொடுத்திருக்கிறாரு..” என்று சொன்னவன் அவளின் வயிற்றில் கைவைத்து வருடிக்கொடுத்தான்.

அவனின் பேச்சில் பட்டென்று விழி திறந்தவளின் பார்வை அவனின் மீதே நிலைத்தது. அலையலையாக கேசமும், நேரான நெற்றியும், அடர்ந்த புருவமும், சிவந்த கண்களும், அழகான மூக்கும், அதற்கு கீழ் அமைத்திருந்த அளவான மீசையும், சிகரெட் கரையே படியாத உதடுகளும் என்று அவளின் பார்வை அவனைத் தழுவிச்சென்றது.

அதை கவனித்த தாமோதரன், “என்ன மேடம் பார்வை பலமா இருக்கு” குறும்புடன் அவன் கண்சிமிட்ட உள்ளிருந்து அவனின் குரலைக் கேட்ட சிசுவோ, ‘இது அப்பாவோட குரல்’ என்று சந்தோசமாக கூறி உள்ளுக்குள் துள்ள குழந்தையின் அசைவை அவனின் கை உணர்ந்தது.

தாமோதரன் நிமிர்ந்து மனைவியின் முகம் பார்க்க, “உங்க மகள்தான்” என்றவளின் கன்னங்கள் இரண்டும் வெக்கத்தில் சிவந்தது.  அந்த இடத்திலிருந்து எழுந்த கணவனை தமயந்தி கேள்வியாக நோக்கினாள்.

“அம்மா உன்னை கூட்டிட்டு வர சொன்னங்க..” என்று சொல்லிவிட்டு மனைவி எழ உதவியாக அவளின் கரம்பிடித்து தூக்கிவிட்டான்.

“வா வீட்டுக்குள் போலாம்” என்று தமயந்தியை அழைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றான்.  இருவரின் வரவையும் எதிர்பார்த்து டைனிங் ஹாலில் காத்திருந்தார் ராஜலட்சுமி.

மகனும், மருமகளும் கீழே வருவதை பார்த்த ராஜலட்சுமி, “டேய் தரன் பார்த்து மெதுவாக கூட்டிட்டு வாடா” என்று அவர் மகனை அதட்ட அவனோ மனைவியைப் பாவமாக பார்த்தான்.

“இந்த கரிசனம் எல்லாம் உங்களுக்குத்தான் மேடம்” என்றவனின் முகத்தில் துளியும் பொறாமை இல்லை. அதைவிட மனநிறைவு அதிகமாக இருந்தது. இருவரின் முகத்திலும் இருக்கும் சந்தோசத்தைப் பார்த்த ராஜலட்சுமி முகத்திலும் புன்னகையின் சாயல்.

“என்னம்மா இந்த மாதிரி நேரத்தில மாடியில வேண்டாம்னு சொன்ன கேட்காம மாடிக்கு போய் உட்கார்ந்துக்கிற” சிரித்துக்கொண்டே மருமகளைக் கண்டித்துவிட்டு அவள் அமர ஒரு சேரை இழுத்துப் போட அதில் அமர்ந்த தமயந்தி,

“எனக்கு ஒரு பயிற்சி மாதிரி இருக்கும் இல்ல அத்தை அதுக்குதான்” என்றாள் தன் செயலுக்கான விளக்கத்தைக் கொடுக்க, “அதுக்குன்னு கவனம் இல்லாமல் இருக்க கூடாதும்மா” என்றார்

அப்போது கண்ணம்மா வந்து தமயந்திக்கு காபி கொடுக்க அதை வேகமாக வாங்கிய மனைவியை முறைத்த தாமோதரன், “காபி குடிக்க போறீயா உதை விழும்..” என்று செல்லமாக மிரட்ட தமயந்தி முகம் வாடியது.

அதற்குள் அவர்களின் இடையே புகுந்த ராஜலட்சுமி, “டேய் அதுக்கு ஏன்டா புள்ளைய திட்ற” என்று மகனை அதட்டிவிட்டு அவளுக்கு பிடித்த மாதுளை பழத்தை ஜூஸ் போட்டு எடுத்து வந்தார்.

அவரின் செயலில் அவனின் கோபம் கொஞ்சம் தணிந்த போதும், “அம்மா நீங்க கொடுக்கிற செல்லத்தில இவ என்னோட பேச்சு கேட்காமல் எல்லா சேட்டையும் பண்ற” என்று புகார் சொன்ன மகனைப் பார்த்த ராஜலட்சுமியின் மனம் மகிழ்ச்சியில் திளைக்க,

“நீ என்னடா சின்ன குழந்தை போல கோல் சொல்லிட்டு இருக்கிற?” என்று அதற்கும் மகனையே அதட்டிவிட்டு மருமகளின் கையில் ஜூஸ் கொடுத்தார்.

அதை கையில் வாங்கிய தமயந்தி, ‘எங்க அத்தைகிட்ட நீங்க ஜெய்க்க முடியுமா’ கணவனைப் பார்த்து நாக்கைத் துருத்திக் காட்டினாள் மனைவி.

“உனக்கு செல்லம் கொடுக்க ஆள் இருக்குன்னு தைரியம். மேல வாடி மகளே உனக்கு இருக்கு” மிரட்டிய மகனின் மிரட்டலை ரசித்தபடியே மருமகளின் அருகில் அமர்ந்தார் ராஜலட்சுமி.

தாமோதரன் தாயை முறைக்க, “என் மருமகளும் நானும் ஒற்றுமையா இருப்பதைப் பார்த்து உனக்கு பொறாமை” என்றதும் ஜூஸ் குடித்தபடியே அத்தைக்கு ஹை-பை கொடுத்தாள் தமயந்தி.

இருவரும் செய்யும் சேட்டையைப் பார்த்த தாமோதரன் முகம் கோபத்தில் சிவக்க அதைப்பார்த்த தமயந்தி முகத்தில் கீற்றாக ஒரு புன்னகை வந்து சென்றது.

அவனின் கோபத்தை அதிகரிப்பது போல, “அப்படி சொல்லுங்க அத்தை..” என்று அத்தையுடன் கூட்டு சேர்ந்த மனைவியைப் பார்த்த தாமோதரனின் கோபம் எல்லாம் வெயிலை கண்ட பனிபோல மறந்துவிட, “என் அம்மாவுக்கு ஏற்ற மருமகள்” வாய்விட்டுச் சிரித்தான்.

தாமோதரன் இயற்கையாகவே செல்வாக்கு படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் அவருக்கு தமயந்தியின் ஏழ்மையும், அவளின் கம்பீரமும் பிடித்துவிட அவளை காதலித்து திருமணம் செய்தான்.

அவன்தான் தன்னுடைய உலகம் என்று வாழ்ந்த ராஜலட்சுமியும் தன் மகனின் விருப்பத்திற்கு தடை சொல்லவில்லை. தாயில்ல தனக்கு அத்தை தான் உலகம் என்று இருக்கும் தமயந்தியின் அடையாளம் கலெக்டர்.

ஆசரமத்தில் வளர்ந்த தமயந்தி தாமோதரன் காதலுக்கு கட்டுபட்டு அவனின் கரம் பிடித்தாலும் தன்னுடைய அடையாளத்தை மாற்றிக்கொள்ள அவர் நினைக்கவும் இல்லை. அதை மாற்றிக்கொள்ள சொல்லி அவளை யாரும் வற்புறுத்தவும் இல்லை.

அம்மா – மகன் பாசத்தில் இவள் தலையிடாமல் இருக்க மருமகளையும், தன்னுடைய மகளாக பாவித்து இருவருக்கும் சரிசமமாக பாசத்தை வாரி வழங்கும் பாசத்தின் மொத்த உருவம் ராஜலட்சுமி. மூவரும் ஒரு இடத்தில் இருந்தால் அங்கே சந்தோசம் நிலையாக இருக்கும்.

காலை நேரம் இருள் சூழ்ந்திருந்த வானத்தைக் கண்டு மிரளாமல் தேவாலயத்தின் உள்ளே நுழைந்த அந்த எட்டு வயது சிறுமி. தேவனின் முன்பு மண்டியிட்டு கண்ணீர் அழுக அவளின் முன்னே ஒரு ஒளிபரவ அந்த ஒளியைப் பார்த்தவள்,

“நான் என்ன தப்பு பண்ணினேன்? என்னோட உயிரை ஏன் பறிச்சீங்க?” என்று கேட்டதும் அந்த ஒளி பரவிய இடத்தில் ஆழ்ந்த அமைதி நிலவுவதை உணர்ந்தவள் மெல்ல கண் விழித்தாள்.

அது கனவு என்று புரியாத வயதில் எதை பற்றியும் கவலை இல்லாமல் எழுந்தவள் அறையில் காலை பொழுதின் விடியலுக்கான வெளிச்சம் பரவுவதைக் கண்ட அந்த சின்ன மொட்டு எழுந்து தளிர்நடை போட்டுக்கொண்டு முகம் கழுவச் சென்றது.

குளிர்ந்த நீரை அடித்து கழுவியவளின் தூக்கம் பறந்துவிட, “இன்னும் விடியலையா?” என்று தனக்குதானே கேள்வி கேட்டுக்கொண்டு தோட்டத்தை நோக்கி நடந்தாள்.

அவளின் எதிரே வந்த எஸ்தரின் முகம் பார்த்த சில்லிவண்டு, “அக்கா உனக்கு ரோஜா பூ வேண்டும் என்று சொன்னீங்க இல்ல?” என்றதும் அவளின் முன்னே மண்டியிட்டு அமர்ந்தாள் எஸ்தர்.

“ஆமாண்டா என்னோட பட்டுக்குட்டி” அவளின் கன்னம் பிடித்து கிள்ளினாள்.

“சரி நான் தோட்டத்துக்கு போறேன் வரும் பொழுது பறிச்சிட்டு வந்து தரேன் அக்கா” என்றதும், “சரிடி செல்லம்” என்று சொல்ல அவளை விட்டு விலகிச்சென்றாள்.

அவள் செல்லும் திசையைப் பார்த்த எஸ்தர் சிரித்தபடியே தன்னுடைய அறையை நோக்கி நடந்தாள். பனியில் நனைந்த பூக்கள் எல்லாம் அவளின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பது போலவே சோலையில் பூத்திருந்தது.

விடிந்தும் விடியாத காலை பொழுதினில் தோட்டத்தின் உள்ளே நுழைந்தவள் பூக்களின் அருகே சென்று, “என்ன எல்லோரும் எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று கிளிபோல் கிள்ளை மொழி பேசினாள் ஜெனிதா.

அவளின் கிள்ளைமொழி கேட்ட செடியின் கிளைகள் எல்லாம் காற்றில் ஆட அவளின் உதட்டில் அழகாக மலர்ந்த புன்னகையோடு, “அதுதான் நான் வந்துட்டேன் இல்ல. உங்களுக்கு வலிக்காம பூ பறிச்சுட்டு போறேன். அப்பா என்னை எதிர்ப்பார்த்துட்டு இருப்பார்” என்று சொல்லியவள் பூக்களை பறிக்க ஆரம்பித்தாள்.

அவளின் கைகள் ஒவ்வொரு பூவாக பறிக்க பறிக்க அவளின் குழந்தை முகத்தை கிள்ளி செல்வது போல மெல்ல வீசிய தென்றல் காற்றில் அவளின் கூந்தல் கலந்து காற்றோடு கைகோர்த்தது.

அந்த சோலையில் இருந்த பூக்களைப் பறித்து முடிக்கும் பொழுது சூரியனின் உதயமாகிவிட அந்த சோலையின் பூக்கள் எல்லாமே தங்க நிறத்தில் ஜொலிப்பது போல ஒரு பிரம்மையை உணர்ந்தவள் விழிகள் இரண்டும் விரிந்தது.

“எல்லோரும் ரொம்ப அழகா இருக்கீங்க” என்று சொல்லிவிட்டு பூக்களை எடுத்துக்கொண்டு நேற்று வைத்த செம்பருத்தி செடியின் அருகில் சென்றாள்.

அந்த செடியில் மொட்டு விரியாமல் இருக்க “நீ இன்னும் பூ பூக்களையா..? நாளைக்கு நான் வருவேன் சீக்கிரம் நீ மொட்டு விடனுன்னு சாமிட்ட வேண்டிக்கிறேன்” என்று செம்பருத்தி செடியிடம் பேசியவள் பூக்களை எடுத்துச் சென்றாள்.

அப்பொழுதுதான் எஸ்தரின் நினைவு வர நாக்கைக் கடித்தவள், “அக்காவுக்கு பன்னீர் ரோஜா பூ பறிக்க மறந்துட்டேன்” என்று சொல்லிகொண்ட மீண்டும் தோட்டத்தின் உள்ளே நுழைந்தவள் பன்னீர் ரோஜா செடியைப் பார்க்க அந்த செடியில் எல்லா மலருமே மலர்ந்திருந்தது.

சிலநொடி அங்கேயே நின்று அந்த பூக்களின் அழகை ரசித்தாள். இயற்கையில் இருப்பது அனைத்துமே அழகுதான். இறைவனின் படைப்பும் ரொம்ப அழகுதான். அந்த படைப்பில் இவளும் அழகிதான். இவளும் இந்த தோட்டத்தில் பூத்த ஒரு மலர்ந்தானே?! 

அந்த மலர்களில் ரொம்ப அழகாக இருந்த மலரைப் பார்த்து, “நீ ரொம்ப அழகாக இருக்கிற. அதனால உன்ன பறிக்க எனக்கு மனசு வரல” என்று சொல்லிவிட்டு அடுத்திருந்த பூவைப் பார்த்தாள்.

மீண்டும் அவள் தோட்டத்தை விட்டு வெளியே வந்து தேவாலயம் நோக்கி நடக்க அப்பொழுது தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்த குணசேகரனின் பார்வை அவளின் மீதுபட்டது.

அழகான நெற்றியும்,  சின்னதாக வில்லென வளைந்த புருவமும், சின்ன சின்ன கண்களும், அழகாக மூக்கும், சிவந்த உதடும், காதில் சின்ன கம்மல், கழுத்தில் வெள்ளை நிறத்தில் பாசியும், கையில் சின்னஞ்சிறு வளையல்கள் அணிந்து கையில் சின்ன பூ கூடையுடன் திரும்பிப் பார்த்தவளின் உதட்டில் புன்னகை பூக்க அவரின் மனம் வலித்தது.

‘இந்த எட்டு வயதில் அனாதை என்ற பட்டத்தை இவளுக்கு எதுக்கு கொடுத்தார் அந்த ஆண்டவன்’ என்று நினைத்தவர் அவளை நோக்கிச் சென்று அவளின் எதிரே நிற்க தன் முன்னே வந்து நிற்பது யாரேனே பார்த்த ஜெனிதாவின் முகம் தாமரை மலரென மலர்ந்தது.

அவளின் உதட்டில் பூத்த புன்னகையைப் பார்த்தவர், “ஜெனிதா குட்டி பூக்கள் பறிச்சிட்டீங்களா?”  அவரின் கேள்விக்கு வேகமாக தலையசைத்த ஜெனிதா.

 சிவப்பு வண்ணத்தில், பச்சை நிற கரை உடைய பட்டுப்பாவாடை சட்டை அணிந்து நேரான நேரேடுத்து இரட்டை குதிரை வால் போட்டிருக்க அந்த முடி அவளின் மார்பில் தவழ்ந்தது.

 “ம்ம் பூ எல்லாம் பறிச்சிட்டேன்பா. இந்தாங்க இந்த பூ எல்லாம் சாமிக்கு கொடுத்திருங்க” என்றவள் கையில் இருந்த பூக்களை எல்லாம் அவரிடம் கொடுத்தாள். அந்த பூக்கூடையை வாங்கியவர் ஜெனிதாவின் முகத்தைப் பார்த்தார்.

அவளின் முகத்தில் இருந்த புன்னகையைப் பார்த்த குணசேகரன், “ஜெனிமா என்ன கஷ்டம் இருந்தாலும் உன்னோட இந்த புன்னகை முகம் அதையெல்லாம் மறக்க வைத்துவிடுகிறது” என்று சொல்ல வாய்விட்டுச் சிரித்தது அந்த சில்லிவண்டு.

குழந்தைகளின் முகத்தில் புன்னகை கண்டே கணநேரத்தில் மனதில் இருக்கும் கவலைகள் தீராதோ?!

அவளின் கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை சிரிப்பில் மனதில் இருந்த கவலையை மறந்தவர், “வாடா கண்ணா நாம் போய் பூஜை செய்யலாம்” என்றழைக்க அவளின் பின்னோடு அமைதியாக சென்றாள் ஜெனிதா. 

ஜெனிதா எட்டு வயது மட்டுமே ஆனா சின்னஞ்சிறு குழந்தை. அப்பா, அம்மா யார் என்று அறியாமலே அந்த ஆசரமத்தில் வருபவள்.

குணசேகரன் உடன் நடந்த ஜெனிதா, “இன்னைக்கு பிரேயர் முடிந்ததும் நான் ஸ்கூலுக்கு போகணும்பா” என்று சொல்லிவிட்டு வேகமாக தன்னுடைய அறைக்கு சென்றவள் குளித்துவிட்டு பிரேயருக்கு சென்றாள்.

எல்லா குழந்தைகளின் அங்கே பிரேயர் பண்ணும் இடத்தில் இருக்க அவளும் அதில் கலந்துக் கொண்டாள். அந்த பிரேயர் முடிந்ததும் தன்னுடைய அறைக்கு சென்ற எஸ்தரின் முன்னே சென்று நின்றாள். 

“அக்கா இந்தாங்க உங்களுக்கு பிடிச்ச ரோஜா பூ” என்று சொல்ல அவளிடம் இருந்து பூவை வாங்கிய எஸ்தர், “தேங்க்ஸ் செல்லகுட்டி..” என்று சொல்லி அந்த பூவை தலையில் சூடிக்கொண்டாள்.

அவள் பூவை வைத்ததும், “அக்கா ரொம்ப அழகாக இருக்கீங்க” என்றதும் வாய்விட்டுச் சிரிக்க அவளுடன் இணைந்து சிரித்தாள் ஜெனிதா.

அந்த சிரிப்பில் எஸ்தரின் மனம் மயங்க அவளின் அருகில் மண்டியிட்டு, “பட்டுமா உன் சிரிப்பும் ரொம்ப அழகாக இருக்குடா. உன்னோட இந்த வெள்ளை சிரிப்பில மனசுல இருக்கும் கவலை எல்லாமே மறந்து போகுதுடா” என்று சொல்ல அதன் அர்த்தம் புரியாத ஜெனிதாவின் புன்னகை அழகாக மலர்ந்தது.

“எனக்கு நீங்க என்ன சொல்றீங்கன்னு தெரியல” அவள் உதட்டைப் பிதுக்க அவளின் கன்னத்தைக் கிள்ளிய அவளின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

ஜெனிதாவும் எஸ்தரின் கன்னத்தில் முத்தமிட அங்கிருந்த பள்ளிக்கூடத்தில் பெல் சத்தம் கேட்டதும், “அக்கா நான் ஸ்கூல் போறேன்” என்று சொல்லிவிட்டு ஓடியவளைப் பார்த்த எஸ்தர் தன்னுடைய வேலையை கவனிக்க சென்றாள்.

அவள் அலுவலக அறைக்குள் நுழைய அங்கே வேலை பார்த்த தனம், “எஸ்தர் ஜெனிதா ஸ்கூல் போயிட்டாளா?” என்று கேட்டாள்.

“ம்ம் இப்போதான் போறா” என்றாள்.

 “அவளுக்கு பிடித்த புளிசாதம் கொண்டு வந்தேன் அதான் கேட்டேன்” அவள் தன்னுடைய வேலையின் பக்கம் கவனத்தை திருப்பிவிட நேரம் விரைந்து சென்றது.

அந்த ஆசரமத்தில் எல்லோருக்குமே அவள் செல்லப்பிள்ளை. ஜெனிதாவை எல்லோருக்கும் பிடிக்க காரணமே அவளின் உதட்டில் மலர்ந்திருக்கும் புன்னகை. ஜெனிதாவின் குழந்தை மனம் எல்லோருக்கும் நல்லதே நினைத்தது.

இந்த ஜெனிதா கண்ட கனவு இன்று நிறைவடையவே இல்லை. அந்த கனவுக்கும் அவளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? அந்த கனவு பலிக்குமா?  தாமோதரன் – தமயந்திக்கும் தம்பதிக்கும் இவளுக்கும்  இடையே ஏதாவது சொந்தம் ஏற்படுமா? அவர்கள் இவளைப் பார்ப்பார்களா?