Sontham – 20

crop (1)

Sontham – 20

அத்தியாயம் – 20

முதல்நாள் மதுவிடம் சொன்னது போலவே மறுநாள் அவளை வீட்டிற்கு வந்து அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றான். பெரிய காம்பவுண்ட் சுவரின் உள்ளே அவனின் பைக் நுழையவே சுற்றிலும் பார்வை சுழற்றினாள்.

சின்ன குடில்கள் போன்ற அமைப்புடன் இருந்த இடத்தைச் சுற்றிலும் நிறைய மரங்கள் நேர்த்தியாகவும், பார்க்க அழகாகவும் இருந்தது. கௌதம் ஓரிடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு, “மது இறங்கு” என்றான்.

அவள் இறங்கியவுடன், “இந்த இடம் உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.

“ம்ம் ரொம்ப அமைதியாகவும், அதே நேரத்தில் மனசுக்கு நிறைவாகவும் இருக்கு” என்று சொல்லவே இருவரும் சேர்ந்து அந்த தியானப்பள்ளியை நடத்துபவரை பார்க்க சென்றனர். அவர்கள் ஆபீஸ் அறைக்குள் நுழைய அங்கே அமர்ந்திருந்த முகுந்தன் அவர்களை புன்னகையுடன் வரவேற்றார்.

“ஹலோ சார்! நான் நேற்று சொன்னது இவங்களைப் பற்றிதான். பெயர் மதுஸ்ரீ. இப்போ காலேஜ் பைனல் இயர் படிக்கிறாங்க. ஆனால் அடிக்கடி அவங்களைச் சுற்றி ஏதோ தவற நடக்கபோவதை உணர்ந்து பயப்படுறாங்க” என்று கௌதம் தெளிவாக கூறினான்.

“ஓ! இவங்க அந்த இடத்திற்கு போகும்போது அந்த இன்சிடெண்ட் நடந்து முடிந்து விடுகிறதா?” என்று தன் சந்தேகத்தை கௌதமிடம் கேட்டார்.

அவன் மதுவைத் திரும்பி ஒரு முறை பார்த்துவிட்டு, “இவங்க அங்கே போனபிறகு அந்த செயலை நடக்க விடாமல் தடுக்குறாங்க” என்றான்.

சிறிதுநேரம் சிந்தனைக்குப் பிறகு, “சரி கௌதம் நீங்க மதுவை இங்கேயே விட்டுட்டுப் போங்க. தினமும் அவங்க தியானம் செய்து மனதை ஒரு நிலை படுத்தட்டும். அதன்பிறகும் இந்த குழப்பம் நீடித்தால் என்னிடம் சொல்லுங்க” என்றார்.

அவனும் சரியென்று தலையசைத்துவிட்டு, “மது நீ கொஞ்சநேரம் தியானம் பண்ணிட்டு வா. நான் உனக்காக வெளியே வெயிட் பண்றேன்” என்றான்.

அவள் சம்மதமாக தலையசைக்கவே கௌதம் எழுந்து வெளியே செல்ல, “மது அந்த மரம் இருக்கு இல்ல அதுக்கு கீழே உட்கார்ந்து மனசை ஒருநிலைப்படுத்தணும். அதாவது மரத்தில் இருக்கும் குருவிகளின் சத்தம் உன் மனதை கலைக்கும். ஆனால் அதெல்லாம் தாண்டி நீ ஒரு பொருளோ, ஒரு நபரையோ மனக்கண்ணில் கொண்டுவந்து நிறுத்தணும்” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தார்.

மது உற்சாக அந்த மரத்தின் அடியில் சென்று பத்மாசனத்தில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு அந்த மரத்தில் இருக்கும் குருவிகளில் சத்தத்தை ஒவ்வொன்றாக கவனித்துவிட்டு, ‘பியானோ’ என்று நினைத்துகொண்டு மனதில் அந்த வடிவத்தை கொண்டுவரும் முயற்சியில் இறங்கினாள்.

அவள் மெல்ல மெல்ல அங்கிருந்த சத்தத்தில் இருந்து தன் மனதை ஒரு நிலைபடுத்தி மனக்கண்ணில் பியானோவின் வடிவத்தைக் கொண்டுவந்து நிறுத்தினாள். ஆனால் அதற்கு நேர் மாறாக அவளின் எதிரே அமர்ந்திருந்த புகைமண்டலமோ அந்த இசையை மீட்ட தொடங்கியது.

அந்த இசையைக்கேட்டு அவளின் மனம் சந்தோசமடைய, ‘நான் கற்பனை பண்ணியது பியானோவைதானே? அப்புறம் எப்படி இந்த இசை  கேட்குது?” என்ற சந்தேகம் அவளின் மனதில் எழுந்தவுடன் அவளின் மனம் மீண்டும் அலைபாயத் தொடங்கிவிடவே பட்டென்று விழி திறந்தாள்.

அவளின் கண் முன்னே குட்டி பியானோ வைக்கபட்டு இருப்பதை கண்டு மற்றதை மறந்தவளாக, “வாவ் குட்டியா அழகாக இருக்கு. இதை கௌதம் தான் வாங்கி இருப்பான்” அதை கையில் எடுத்து பார்த்த மதுவின் முகம் பளிச்சென்று மாறியது.

அப்போது அங்கே வந்த முகுந்தன் ,‘இல்லயே வழக்கமாக தியானம் செய்தால் மனம் தெளிவுதானே அடையும். ஆனால் இந்த பெண்ணின் முகமோ இவ்வளவு பிரகாசமாக இருக்கு’ என்ற சிந்தனையோடு அவளிடம் தியானத்தைப் பற்றி கேட்டாள்.

“ம்ம் இப்போ மனசு ரிலாக்ஸா இருக்கு சார்” என்றாள் புன்னகையுடன்.

“அப்போ சரிம்மா. இன்னைக்கு உனக்கு பயிற்சி இவ்வளவுதான். நாளையிலிருந்து அனைத்தையும் தெளிவாக கற்றுத் தருகிறேன்” என்று அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

அந்த இடத்திற்கு வரும்போது இருந்த குழப்பம் அனைத்தும் காற்றில் கலந்த கற்பூரமாக மாறிபோகவே தெளிந்த மனதுடன் கௌதமை தேடிச் சென்றாள்.

பைக்கில் சாய்ந்து அவளுக்காக காத்திருந்தவனின் அருகே சென்று, “கௌதம் இங்கே பாரு குட்டி பியானோ. ரொம்ப அழகாக இருக்கு இல்ல. நிஜமாவே நீ செலக்ட் செய்த கிப்ட் சூப்பர். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றதும் கௌதம் சற்று குழம்பித்தான் போனான்.

“நான் உன்னை அங்கே விட்டுவிட்டு வந்தபிறகு இங்கேயே தான் நிற்கிறேன்.  நீ என்னவோ பியானோ கிப்ட் என்று சொல்ற! எனக்கு எதுவும் புரியல” என்ற கௌதம் சொல்லவே அவனிடம் அந்த பியானோவை காட்டினாள்.

“அப்போ இது நீ வாங்கி தந்தது கிடையாதா?” அவள் குழப்பத்துடன் கேட்டாள்.

அவளின் உள்ளங்கை அழகாக இருந்த பியானோவை பார்த்து, “இங்கே கொடு பார்க்கலாம்” என்று வாங்கிய கௌதம் கை தவறி கீழே விழுந்து உடைந்தது. 

“ஏன் கௌதம் பியானோவை உடைச்ச? இப்போ அந்த மாதிரி பியானோ வாங்க முடியுமா? ஏண்டா இப்படி பண்ணின?” என்று அவனின் நெஞ்சில் கோபம் தீர குத்தினாள்.

“ஹே அது கீழே விழுந்து உடையும்னு நான் என்ன கனவா கண்டேன். சரி வா நான் உனக்கு அதே மாதிரி குட்டிப்பியானோ வாங்கித்தரேன். இதுக்காக இப்படி அடிக்காதடி ராட்சசி” அவளின் கைகளை தடுத்தபடி அவன் குறும்புடன் சிரித்தான்.

அவளுக்கு கோபம் தலைக்கு ஏற, “இப்போவே கிளம்பு. இன்னைக்கு பொழுது ஆனாலும் சரி நீ இந்த மாதிரி பியானோ வாங்கி தராமல் உன்னை சும்மா விடமாட்டேன்” மது குழந்தைபோல அடம்பிடித்தாள்.

அவளின் அந்த செய்கை அவனின் மனத்தைக் கவரவே, “சரி வண்டியில் ஏறு. அதே மாதிரி வாங்கித்தரேன். ஐயோ குமரின்னு நினைச்சு காதல் பண்ணினேனே! இப்படி குழந்தை மாதிரி நடந்துக்கறாளே. இதுக்கே இப்படின்னா கல்யாணத்திற்கு அப்புறம் இவளிடம் எதுக்கு எல்லாம் கெஞ்சனுமோ?” என்று சலித்துக் கொண்டான் கௌதம்.

அவன் இருபொருள் பட கூறியதை சரியாக புரிந்துகொண்ட மது, “நீ எல்லாத்துக்குமே என்னிடம் கெஞ்சனும்” என்றவள் கலகலவென்று சிரித்தாள். அதன்பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்பி செல்ல கீழே விழுந்த உடைந்த பியானோ சற்று நேரத்தில் புகைமண்டலமாக மாறி காற்றோடு கலந்து மறைந்தது.

கௌதம் அவளை அழைத்துக்கொண்டு தேனியில் பெரிய காம்பிளக்ஸிற்கு அழைத்துச்சென்று அவள் கேட்டது போலவே குட்டி பியானோ வாங்கி கொடுக்க, “ஐ சூப்பரா இருக்கு” என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தாள். மது நாள் தவறாமல் அந்த வகுப்புகளில் கலந்துகொண்டு மனத்தெளிவை  பெற தொடங்கினாள்.

அவளின் மனம் மெல்ல தெளிவடைய தொடங்கியது. தினமும் வகுப்பில் நடக்கும் விஷயங்களை மறக்காமல் கௌதமிடம் பகிர்வதை வழக்கமாக மாற்றிக் கொண்டாள். ஒருபுறம் படிப்பு, மற்றொரு புறம் இந்த வகுப்பு என்று நாட்கள் ரேக்கைகட்டிகொண்டு பறந்தது.

அன்றைய வகுப்பில் அனைவரையும் ஓரிடத்தில் அமைதியாக அமர வைத்து தியானம் செய்ய சொன்னார் முகுந்தன். அந்த அறையில் கிட்டதட்ட இரு புறமும் காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருந்தது. பெரிய ஹாலில் அனைவரும் தகுந்தளவு இடைவெளிவிட்டு அமர்ந்து தியானம் செய்ய தொடங்கினர்.

“தியானம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் ஒரு கலைமட்டும் அல்ல. அது நம் உடலுக்கும், மனதிற்கும், ஆன்மாவுக்கு புத்துயிர் தரும். நம் மனதை பாதிக்கும் அனைத்து விஷயமும் உடலின் சமநிலையை கெடுக்கும். கோபம், எரிச்சல், பதட்டம், மன அழுத்தம் இவையனைத்தும் நம் உடல்நிலையை சீர் குழைத்துவிடும். அந்த நேரத்தில் நாம் தியானம் செய்வதன் மூலமாக உடலில் இருக்கும் செல்கள் புத்துணர்வு அடைந்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும் வைக்க பயன்படுக்கிறது” என்று முகுந்தன் மட்டும் அந்த அறையில் பேசும் குரல்கேட்டு அனைவரும் தியானத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மதுவும் தியானத்தில் ஈடுபட்டிற்கும் வேளையில் சில்லென்ற தென்றல் வழக்கம்போல வந்து அவளின் மேனியைத் தழுவிச் சென்றது. அதை உணர்ந்த மது மனதில் பதட்டம் அதிகரிக்க மனதை ஒருநிலைப்படுத்த நினைத்து அதற்கான செயலில் ஈடுபடவே, ஜாதிமல்லியின் வாசனை அவளின் நாசியை துளைத்தது.

அந்த புகைமண்டலத்தை நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு இடையே கொண்டுவந்து நிறுத்தினாள். அடுத்தநொடி அவளின் உடல்முழுவதும் முத்து முத்தாக வேர்க்க தொடங்கியது.

அவளின் கண் எதிரே அந்த புகைமண்டலம் நின்றிருப்பதை மனதால் உணர்ந்தவள் விழிகளைத் திறக்க முயற்சித்து அதில் தோல்வியைத் தழுவினாள். அப்போது அவளின் காதுகளில் மெலிதாக ஒரு குரல்கேட்டு அவளின் உடல் சிலிர்த்தது.

ஆனால் அந்த குரல் என்ன சொல்கிறது என்று அவளுக்கு புரியாமல் போகவே மீண்டும் அந்த புகைமண்டலத்தை மனக்கண்ணில் வெகு அருகில் கொண்டு வந்தாள். அப்போது அது பேசுவது அவளின் காதில் தெளிவாகக் கேட்டது.

“உன் வீட்டில் இருக்கும் ஒரு உயிருக்கு ஆபத்து நேரப்போகிறது. அந்த இழப்பை தடுக்க யாராலும் முடியாது” என்று குரல்கேட்டு அதிர்ந்தாள் மது.

“யார் நீ? உனக்கு எப்படி அது தெரியும்? என் வீட்டில் யாருக்கு ஆபத்து என்று சொல்லு” என்று அவள் கத்தி கூச்சலிடவே அனைவரும் கண்திறந்து மதுவை திரும்பிப் பார்த்தனர்.

அதை உணராத மது, “ஏய் சொல்லு யார் நீ?” என்று கத்தியவளின் குரல்கேட்டு வேகமாக அவளின் அருகே வந்தார் முகுந்தன். அப்போது அங்கிருந்து கலைந்த புகைமண்டலத்தை அவரால் பார்க்க முடியாவிட்டலும் உணர முடிந்தது.

இந்த பிரபஞ்சத்தில் அனைத்து நல்ல மற்றும் தீயசக்திகள் இருக்கவே செய்கின்றது. ஆனால் அவை தேவையில்லாமல் ஒருவரின் வாழ்க்கையில் தலையிடுவது கிடையாது. ஜாதகத்தை தாண்டி அவர்களின் பிறப்பின்போது போன ஜென்மத்தின் பாவ, புண்ணியங்கள் இப்பிறப்பிலும் கர்மாவாக அவர்களைப் பின் தொடருகிறது.

அவர்கள் நல்லது செய்திருந்தால் அதன் பிரதிபலனை இப்பிறப்பிலும் அவர்கள் அனுபவிக்க நேரிடும். அதே அவர்கள் பாவம் செய்திருந்தால் அதற்கு கைமாறு செய்து ஆன்மாவை தூய்மைப்படுத்த வேண்டும்.

ஆனால் ஒவ்வொரு மனிதனும் இதை உணராமல் அடுக்கடுக்காக தவறுகள் செய்கின்றனர். எல்லோரும் நான் தவறு செய்யவில்லை என்று தனக்குதானே சொல்லிக்கொண்டு அவர்களை ஏமாற்றிக் கொள்கின்றனர்.

ஒருவர் மற்றொருவருக்கு மனதளவில் கெடுதல் நினைத்தாலும், அதுவும் பாவத்துடன் சேர்க்கிறது. பிறந்த குழந்தையின் மனம் எவ்வளவு பரிசுத்தமாக இருக்குமோ அதுபோல இருக்கும் ஆன்மா மட்டுமே இறைவனின் திருக்கலடியை சேர்க்கிறது.

அதையெல்லாம் புரிந்து வைத்திருந்த முகுந்தன், “மது கண்ணைத் திறந்து பாரும்மா” என்றார். அதுவரை அவளை சூழ்ந்திருந்த ஜாதிமல்லி வாசனை அவளைவிட்டு அடியோடு அகன்றுவிட பட்டென்று விழி திறந்தாள் மது.

“மது இப்போ நீ யாருடன் பேசிட்டு இருந்த?” என்று கேட்டதற்கு அவளோ திருதிருவென்று விழித்தாள்.

உடனே அங்கிருந்த ஒருவரை அருகே அழைத்து, “மற்றவர்களை எல்லாம் அனுப்பி வைங்க” என்று சொல்லி அனுப்பியவர் மதுவை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார் முகுந்தன்.

தென்றல்காற்று மெல்ல அவளின் உடலைத் தழுவிச்செல்ல மதுவோ அந்த குரல் சொன்ன விஷயத்தை அசைபோட்டபடி தோட்டத்தின் செடிகளை வேடிக்கை பார்த்தாள். அவளின் அருகே நின்றிருந்த முகுந்தன் அவளின் நடவடிக்கையில் வித்தியாசத்தை உணர்ந்து அவர் பார்வை சென்ற திசையை நோக்கியவருக்கு ஒரு மாறுதலும் தெரியவில்லை.

ஆனால் மதுவின் கண்களுக்கு மட்டும் அங்கே நடப்பவை தெளிவாக தெரிந்தது. அந்த தோட்டத்தின் நடுவே பூக்கள் அழகாக பூத்து குலுங்கிட ஒரு குட்டிப்பெண் தன் தளிர் கால்களோடு உள்ளே நுழைகிறாள். மதுவின் கால்களும் அவளின் பின்னோடு சென்றது.

அங்கே ஒரு செடியில் ஒரு பூ மட்டும் மலராமல் இருப்பதை கண்ட மது அங்கேயே நின்று அந்த குழந்தையின் செயலை ஆர்வமாக கவனிக்க தொடங்கினாள். அந்த குட்டிப்பெண் தொட்டவுடன் மொட்டாக இருந்த பூ மலருவதை கண்டு மதுவின் முகமும் பளிச்சென்று மலர்ந்தது.

சற்றுமுன் தியான வகுப்பில் கத்தி கூச்சலிட்ட மது சாந்தமாக நின்றிருப்பதை கண்டு குழப்பமுற்ற முகுந்தன், “என்னம்மா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நிக்கிற” என்று அவளின் கவனத்தை திசை திருப்பினார்.

“நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரியாது மாஸ்டர். நீங்க கௌதமை கிளம்பி வரச்சொல்லுங்க, அவனுக்கு தான் நான் சொல்வது புரியும்” என்றவளின் குரலோ பயத்துடன் ஒலித்தது. அவளுக்குள் நிகழும் மாற்றத்தை அவளால் உணர முடிந்தாலும் தடுக்க முடியாமல் தோல்வியைத் தழுவினாள்.   

முகுந்தன் கௌதமிடம் நடந்ததை சொல்லி அவனை அங்கே வரவழைத்தார். அங்கே நடந்த விஷயமறிந்த கௌதம் பதட்டத்துடன் அங்கு வந்து சேர்ந்தான்

அவனைப் பார்த்த மது அழுகையுடன் ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொள்ளவே, “மது உனக்கு ஒண்ணுமில்ல. நீ ஏன் குழப்பிக்கிற” என்று அவளின் தலையை வருடி நெஞ்சோடு சேர்த்து அவளை அணைத்துக் கொண்டான்.

“இல்ல கௌதம் இப்போ கொஞ்சநேரத்திற்கு முன்னாடி அந்த புகை மண்டலம் என்கிட்ட பேசியது. எங்க வீட்டில் ஒரு உயிர் போகும்னு சொல்லுச்சு” என்று அவள் சொல்லவே, “எப்போன்னு சொல்லுச்சா?” என்று தீவிரமான பாவனையுடன் கௌதம் கேட்டதும் மீண்டும் மிரண்டு விழித்தாள் மது.

அவள் மறுப்பாக தலையசைக்கவே, “அப்புறம் எதுக்கு நீ தேவையில்லாமல் குழப்பிக்கிற?” என்றான்.

அவள் குழப்பத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க அவளின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு, “அரண்டவன் கண்ணுக்குக்கு இருண்டது எல்லாம் பேய்ன்னு சொல்வாங்க. நீயும் இப்போ அந்த நிலையில் தான் இருக்கிற அதுதான் உனக்கு இந்த மாதிரி தோணுது” என்றபிறகே அவள் மனம் அமைதியடைந்தது.

“அப்போ யாருக்கும் எந்த ஆபத்தும் வராது இல்ல” அவள் நம்பாமல் கேட்க, “யாருக்கும் எதுவும் ஆகாது. அப்படி ஆகவும் நான் விடமாட்டேன் போதுமா?” என்று சொல்லி அவளை சமாதானம் செய்தான்.

அவளை அங்கே நிற்க சொல்லிவிட்டு முகுந்தனிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு வந்த கௌதம், “மது எங்காவது வெளியே போலாமா?” என்று கேட்டதற்கு வேகமாக தலையாட்டி சம்மதித்தாள்.

Leave a Reply

error: Content is protected !!