sontham – 24

aba5066e86fcfb94c8f5535f1f86c58d

sontham – 24

அத்தியாயம் – 24

இதற்கிடையே கௌதம் ஒரு பெண்ணிற்கு ஆபத்து என்ற தகவல் வரவே அந்த இடத்திற்கு சென்றான். கிட்டதட்ட மணி இரவு பன்னிரண்டை நெருங்கும் நேரம் காடு முழுவதும் இருள் சூழ்ந்து இருந்தது.

கௌதம் தன்னோடு சில கான்ஸ்டபிளுடன் அந்த பெண் இருக்கும் இடத்தைத் தேட துவங்கிய சமயம் சருகுகள் மிதிபட யாரோ ஓடும் சத்தம்கேட்டு அந்த திசையை நோக்கி சென்றான் கௌதம். நான்கு ஆண்கள் ஒரு பெண்ணை துரத்திக்கொண்டு ஓடுவதை கண்டவன் அவர்களின் பின்னோடு ஓடிச்சென்று நால்வரையும் வளைத்துப் பிடித்தனர்.

“டேய் அந்த பொண்ணு எங்கடா? அவளை என்னடா பண்ணினீங்க?” அவன் மற்றவர்களை அடித்து விசாரிக்கவே, “ஐயோ சார் நாங்க ஒரு பெண்ணை கெடுக்க நினைச்சு கடத்திட்டு வந்தது உண்மைதான். ஆனால் இப்போ அந்தபொண்ணு மயக்கத்தில் கிடக்கிற. அந்தநேரத்தில் அவளைவிட அழகான ஒரு பெண்ணைப் பார்த்து அவளை துரத்திட்டு வந்து உங்ககிட்ட மாட்டிகிட்டோம் சார்” என்று ஒருத்தன் அடி தாங்க முடியாமல் உண்மை முழுவதையும்  உளறிவிட்டான்.

மற்ற மூவரும் அதையே சொல்ல, “எனக்கு அடிச்ச போதை ஓடிய ஓட்டத்தில் சுத்தமாகவே இறங்கிடுச்சு சார். அந்த பொண்ணு அவ்வளவு வேகமாக ஓடுது. எங்களால் அவளை கடைசி வரை பிடிக்கவே முடியல. அதே நேரத்தில் நாங்க கடத்திட்டு வந்த பெண்ணை எதுவும் செய்ய முடியல” என்று அவன் உளறினான்.

“ஓ இது உனக்கு ரொம்ப வருத்தம் போல” என்று சொல்லி அவனை அடித்து தோளை உரித்து வண்டியில் ஏற்றவே அப்போது அசோக் தன் பைக்கில் அங்கே வந்து சேர்ந்தான். சற்று நேரத்தில் அந்தப்பெண் மயங்கி இருந்த நிலையில் மீட்டெடுத்து அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்த சொன்னான்.

கான்ஸ்டபிள் கௌதமிற்காக வெயிட் பண்ணுவதை கண்டவுடன், “நீங்க கிளம்புங்க. நானும், அசோக்கும் பைக்கில் வரோம்” என்று அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு  நண்பனின் பக்கம் திரும்பினான்.

“உன்னை காயத்ரி பிறந்தநாள் கொண்டாடுன்னு சொல்லி அனுப்பிவிட்ட நீ என்ன இங்கே வந்து நிற்கிற” என்று கேட்கும்போது எந்தவிதமான சலனமும் இல்லாமல் தன் கையில் கேக் பார்சலோடு வந்த மதியைப் பார்த்து ஆண்கள் இருவருமே திடுக்கிட்டனர்.

“மதி நீ இந்த நேரத்தில் இங்கே என்ன பண்ற?” என்று அவளை அதட்டிட தன் கையிலிருந்த பார்சலை அவனிடம் காட்டியவள், “பார்த்த தெரியல பிறந்தநாள் கொண்டாட இங்க வந்தேன்” என்றாள் சிரிப்புடன்.

அதை பார்த்தும், “ஏய் உனக்கு என்ன பைத்தியமா? நீ இன்னும் சின்னக்குழந்தைன்னு நினைப்பா. நடுராத்திரியில் ஆள் நடமாட்டமே இல்லாத காட்டுக்குள் பிறந்தநாள் கொண்டாட போறேன்னு சொல்ற?” என்று எரிந்து விழுந்தான்.

ஆனால்  அவள் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், “பெரிய காடு. இதைக்கண்டு நாங்க பயப்படணுமா? ஆமா  இந்த நேரத்தில் நீ இந்த தேவாங்குடன் இங்கே என்ன பண்ற?” என்று கௌதமை  வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்தாள்.

“ஏய் என்னடி என்னையே கேள்வி கேட்கிற?” என்று அவன் எகிறினான்.

“இந்த அதட்டல், உருட்டல் வேலை எல்லாம் மதுவோட நிறுத்திக்கோ. என்னிடம் காட்ட நினைச்ச நான் என் கை வரிசையைக் காட்டிட்டுப் போயிட்டே இருப்பேன்” என்று அவனை எதிர்த்து நின்றாள் மதி.

இரண்டும் சண்டை கோழிகளாக சிலிர்த்துக்கொண்டு நிற்பதை கண்டு, “டேய் இதெல்லாம் காயத்ரி பிளான்டா. நானும் அவளோட பிறந்தநாளை கொண்டாட தான் இங்கே வந்தேன். ஆனால் வர வேண்டியவள் இன்னும் வரல. அதுக்காக நீங்க இருவரும் சண்டை போடாதீங்க. ஏற்கனவே காட்டை பார்த்து நான் பயந்து போயிருக்கேன். இப்போ இரண்டு பிசாசுகிட்ட மாட்டிகிட்ட மாதிரி ஃபில் வருதுடா” என்று அவன் பாவமாக சொல்லும்போது மூச்சிரைக்க ஓடி வந்தாள் காயத்ரி.

நெஞ்சில் கைவைத்து அழுத்திக்கொண்டு, “ஹப்பா என் பிறந்தநாளை  சந்தோசமாக கொண்டாட இவ்வளவு திர்ல்லிங்கான விசயத்தைக் கடந்து எப்படியெல்லாம் ஓடி வர வேண்டி இருக்கு” என்று சொன்ன காயத்ரியை கொலைவெறியுடன் பார்த்தனர் ஆண்கள் இருவரும்.

அவர்களை கண்டுகொள்ளாமல், “ஏய் காயூ நீ பயந்துட்டு வராமல் இருந்துவிடுவாயோ என்று நினைச்சேன். பரவால்லா உனக்கு செம தில்லுதான். நீ வா நம்ம கேக் வெட்டலாம்” என்று அவளின் கையைப்பிடித்து இழுத்து சென்றாள் இருவரும் அந்த இடத்தை கொஞ்ச நேரத்தில் அலங்கரித்தனர்.

கலர் லைட்ஸ், பலூன் என்று அலங்கரிப்பது கண்டு தலையிலடித்து கொண்ட கௌதம், “என்னடா நீ இப்படியொரு பைத்தியத்தை காதல் பண்ணி இருக்கிற” என்று கோபத்துடன் கேட்டான்.

“இந்த கொடுமை எல்லாம் பண்ணுவான்னு தெரிஞ்சா நான் லவ் பண்ணேன்” அசோக் தன் பங்கிற்கு புலம்புவதை கண்டு சிரித்த காயத்ரி மதியிடம் பேசிக்கொண்டே அனைத்தையும் அலங்கரித்து முடித்தாள்.

சிறிதுநேரத்தில் பெண்கள் இருவரும் சேர்ந்து அந்த இடத்தையே அலங்கரித்து முடிக்க காயத்ரி கேக் வெட்ட மற்ற மூவரும் வாழ்த்து பாடினர். கௌதம் மதியை மட்டுமே இமைக்காமல் பார்த்தான். ஏனோ அவளைப் பார்க்கும்போது மது சாகவில்லை. தன் கண்முன்னே உயிரோடு நடமாடிக்கொண்டு இருக்கிறாள் என்ற எண்ணம் அவனின் மனதில் தோன்றியது.

அப்போதுதான் மது இறந்த அன்று தன் உள்ளுணர்வு அவளுக்கு ஆபத்தில்லை என்று சொன்னது சட்டென்று நினைவு வரவே, ‘அவளுக்கு ஆபத்து இல்லன்னா அந்தக்குரல் அவளிடம் உண்மையைச் சொல்லி இருக்குமே?! அப்போ மதுவுக்கும் எதுவும் ஆகவில்லையோ? இறந்தது மதியா?!’ மனதில் எழுந்த கேள்வியோடு மதியை இமைக்காமல் பார்த்தான்.

அவள் சிரித்தபடி அவனுக்கு கேக் கொடுத்துவிட்டு அங்கே அமர்ந்து பேசவே, “உனக்கு இங்கே பிறந்தநாள் கொண்டலாம்னு யார் ஐடியா கொடுத்தாங்க காயூ” என்று திடீரென்று சிந்தனையோடு கேட்டான் கௌதம்.

“நான் மது, மதி மூவருமே எங்க பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடுவோம் கௌதம். அப்படி பிளான் பண்ணும்போது மதிதான் இந்த மாதிரி காட்டில் கொண்டாடலாம்னு ஐடியா கொடுத்தா. அவ காரில் எல்லாம் எடுத்துட்டு வரேன்னு சொல்லவும் நான் அசோக்கிற்கு தகவல் சொல்லி வர சொல்லிட்டு வந்துட்டேன்” என்று சாதாரணமாக சொல்லவே கௌதம் பார்வை அழுத்தமாக மதியின் மீது படிந்து மீண்டது.

மதியோ அங்கே அவனொருவன் இருப்பதை உணராமல், “காயூ வரும்போது எப்படி ஃபீல் பண்ண?” என்று ஆர்வமாக கேட்டாள்.

“அட நீவேற ஏன் மதி. ஒரு இடத்திற்கு மேல் வண்டியில் வர முடியாதுன்னு அங்கேயே ஸ்கூட்டியை நிறுத்தி பூட்டிட்டு திரும்பிப் பார்க்கிறேன் உன் கார் நின்றது. ஹப்பா மதி வந்துட்டா என்ற நம்பிக்கையில் காட்டுக்குள் கொஞ்சதூரம் பயமில்லாமல் நடந்துதான் வந்தேன். அப்போ நாலஞ்சுபேரு மட்டும் திபுதிபுன்னு கொடுவதைப் பார்த்தும் பயத்தில் கைகால்கள் எல்லாம் உதறல் எடுக்க ஆரம்பிச்சிருச்சு” என்று அவள் சொல்லிக்கொண்டே சென்றாள்.

“கௌதம் காதில் ரத்தம் வருதுடா” என்று அசோக் சத்தமாக சொல்லவே பக்கத்தில் இருந்த கட்டையை கையில் தூக்கிய காயத்ரியை பார்த்து,  “வேண்டாம்மா நான் உன் புருஷனாக வாக்கபடனும் இல்ல இந்த அப்பாவியை மன்னிச்சிரு” என்று அவன் சிரிக்காமல் சொல்லவே பக்கென்று சிரித்துவிட்டான் கௌதம். 

அசோக் அவன் சிரிப்பதை மனநிறைவுடன் பார்க்க காயத்ரி மீண்டும் தொடர்ந்தாள்.

“ஒரு இடத்துக்கு மேல் போலீஸ் வண்டி வரும் சத்தமெல்லாம் கேட்டு அங்கிருந்த மரத்தின் பக்கம் காயத்ரி மந்திரம் சொல்லிட்டு நின்னேன் மதி. அடுத்த நிமிசமே ஏதோ ஒன்னு என் காலைப் பிடிச்சு கீழே இழுத்துச்சு. நானும் மலைப்பாம்பு தான்னு நினைச்சு விட்டேன் ஒரு எத்து. அவ்வளவுதான் அது என்னாச்சுன்னு தெரியல அந்த இடத்தில் அடையாளம் வெச்சிட்டு வந்திருக்கேன். நாளைக்கு போய் அது எந்த மிருகம்னு பார்க்கணும்” என்று சொல்லவே வேகமாக அவளின் அருகே வந்த அசோக் எது பற்றியும் யோசிக்காமல் நங்குன்னு காயத்ரியின் மண்டையில் கொட்டினான்.

அவள் ஆவென்று அலறவே, “ஏண்டா அவளை அடிக்கிற” என்று இருவரின் இடையே புகுந்தான் கௌதம்.

“பின்ன என்னடா காட்டில் பிறந்தநாள் கொண்டலாம்னு வர சொன்னான்னு கிளம்பி வந்தேன். இவங்க எல்லாம் ஒரு  கட்டத்துக்கு மேல் வண்டியை ஓட்டிட்டு வராமல் நடந்தே வந்திருக்காங்க. நான் அது புரியாமல் ஊட்டுட்டு வந்து கீழே ஒரு பள்ளத்தில் விழுந்துட்டேன். பிடிச்சு ஏற வழியில்லாமல் மரம்னு நினைச்சு இவ காலை பிடிச்சிட்டேன் போல. இவ விட்ட உதையில் பாருடா கன்னம் வீங்கிபோயிருச்சு” என்று அசோக் பாவமாக சொல்லி முடிக்க அங்கே சிரிப்பலை பரவியது. கௌதம் விழுந்து விழுந்து சிரிக்க, மதியோ வயிற்றை பிடித்துகொண்டு சிரித்தாள்.

“அப்போ நான் உதைச்சது உன்னைத்தானா? நான் கூட சிங்கத்தை கொன்ற வீர பெண்மணி செல்வி. காயத்ரின்னு பேப்பரில் நியூஸ் வரும்னு எதிர்பார்த்தேனே எல்லாம் வீணாப்போச்சு” என்று புலம்பிட அசோக் மீண்டும் அவளை செல்லமாக அடித்தான்.

அதெல்லாம் பார்த்த கௌதம், “போதும் நிறுத்துங்கடா என்னால சிரிப்பை கட்டுபடுத்த முடியல” என்று சொல்லவே மதி சிரித்தபடியே கௌதமை பார்த்தாள். ஆனால் அவன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அன்றைய நாள் மதியின் மீது கௌதம் மனதில் எந்தவிதமான சந்தேகமும் வரவில்லை. மறுநாள் நிதானமாக யோசிக்கும்போது மதி அந்த இடத்திற்கு வந்தது அவனின் மனதை உறுத்தியது.

‘ஒரு பெண் பயமில்லாமல் நடுராத்திரியில் காட்டிற்கு போக முடியுமா?’ என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. ஏற்கனவே மதுவிற்கு இருக்கும் பாதிப்பு பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியுமே! அதனால் தான் மதுவின் செயலோடு ஒப்பிட்டுப் பார்த்தவனின் மனதில் சந்தேகம் உறுதியானது.

அதற்கு மறுநாள் கௌதம் எதிர்பார்த்த ஆர்.டி.ஓ. பரிசோதனை முடிவுகளின் ரிப்போர்ட் அவனின் கைக்கு வந்து சேர்ந்தது. அதிலிருந்த தகவல் அவனை அதிர்ச்சியடைய வைத்தது. அதில் கார் பிரேக் ஒயர் யாரோ வேண்டுமென்று வெட்டி விட்டிருக்க வேண்டும் என்று ரிப்போர்ட் பார்த்து கௌதம் சிந்தனையில் ஆழ்ந்தான்.

தங்களின் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடிவிட்டு கௌதமைப் பார்க்க கிளம்பி வந்திருந்தாள் காயத்ரி. வீட்டிற்கு வந்த பெண்ணை அவன் வரவேற்று உபசரிக்க, “ஸாரி அண்ணா நேற்று நாங்க போட்ட பிளான் உங்களை ரொம்ப டென்ஷன் ஆகிருச்சு. அதன் மனசு கேட்கல உங்கிட்ட சொல்லி ஸாரி கேட்க வந்தேன்” என்றாள்.

“இதெல்லாம் நான் அப்போதே மறந்துட்டேன் காயத்ரி விடு” என்றபோது அசோக் கௌதம் வீட்டிற்குள் நுழைந்தான்.  

அவன் வந்து காயத்ரியின் அருகே உட்கார்ந்து, “ஆமா காயூ நீங்க எல்லோரும் இப்படிதான் பிறந்தநாள் கொண்டாடுவீங்களா?” என்று கேட்டான்.

“நான்தான் நேற்றே சொன்னேனே.. நாங்க மூவரும் இப்படிதான் அலம்பல் பண்ணிட்டு இருப்போம்.” என்ற காயத்ரியை யோசனையோடு பார்த்து கொண்டிருந்த கௌதம் திடீரென்று அந்த கேள்வியைக் கேட்டான்.

“மது கிளாஸில் எல்லோரிடமும் எப்படி நடந்துக்குவா?” என்றான்.

சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்த காயத்ரி, “என்னண்ணா சந்தேகமாக விசாரிக்கிறீங்க? ஒருவேளை மதுவின் கேஸை ரகசிய விசாரணை பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று குறும்புடன் கண்சிமிட்டி சிரித்தாள்.

அவளிடம் இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காத அசோக் திகைத்து விழிக்க, “அதெல்லாம் இல்லம்மா சும்மா அவளைப்பற்றி கொஞ்சநேரம் பேசிட்டு இருந்தா மனசுக்கு ஆறுதலாக இருக்கும்னு கேட்டேன்” என்று அவளை சமாளித்தான்.

“மது கிளாஸில் ரொம்ப அமைதி அண்ணா. எல்லா கேள்விக்கும் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தருவா. கிளாசில் அவக்கூட சண்டைபோட யாருமே இல்ல. இந்த வருண் அவளை கிண்டலடிப்பான் அதைகூட பெருசாக நினைக்க மாட்டா. ஆனால் வருனுக்கும், மதிக்கும் ஆகவே ஆகாது. இருவரும் சண்டைக்கோழி மாதிரி சண்டை போடுவாங்க” என்று பேச்சு வாக்கில் அவள் சொல்லிவிட கௌதம் அசோக்கை பார்த்தான்.

அவனின் பார்வைக்கான அர்த்தம் புரிந்து, “அன்னைக்கு கல்யாணத்திற்கு யாரெல்லாம் போனீங்க இல்ல காயூ” என்று அப்படியே பேச்சை திசை திருப்பினான்.

“நான், மது, மதி, வருண் அப்புறம் இன்னும் சிலர் போனோம் அசோக்” என்ற காயத்ரி மணியைப் பார்த்தும், “ஸாரி அண்ணா லேட் ஆகிருச்சு நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அடுத்து அந்த கல்யாணத்தில் கலந்துகொண்ட மதுவின் வகுப்பில் இருப்பவர்களிடம் விசாரிக்க முடிவெடுத்தான்.

அந்த நேரத்தில்  தன் மகன் மதுவின் நினைவில் கலங்கி நிற்பதை பார்த்த தனலட்சுமி மனதில் ஒரு முடிவெடுத்து கணவனோடு தமயந்தி வீட்டிற்கு கிளம்பிச் சென்றார்.

மதுவின் இறப்பை கடக்க முடியாமல் கவலையோடு இருந்த குடும்பத்திடம் கல்யாண விஷயத்தை எப்படி பேசுவதென்ற தயக்கம் இருந்தபோது அதை மனதிற்குள் மறைத்துக்கொண்டு பேச்செடுத்தார் தனம்.

 “இப்படியொரு சூழ்நிலையில் இந்த விஷயம் பேசுவது மனசுக்கு கஷ்டமாக இருக்கு. ஆனால் இதை நான் பேசித்தான் ஆகணும்” என்ற தனம் பேச்சைத் தொடங்கவே மற்றவர்கள் கவனம் முழுவதும் அவளின் பக்கம் திரும்பினர்.

“என் மகன் கௌதம் உயிராக நேசித்தது மதுவைத்தான். அன்னைக்கு நீங்க மதுவைவிட மதி பொறுப்பாக இருப்பான்னு சொன்னப்போ சரின்னு சொல்லி என் மகனை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க நினைச்சதால் தான் அவன் ட்ரான்ஸ்பர் வாங்கிகொண்டு போயிட்டான். ஆனால் இன்னைக்கு அவன் நேசித்த பொண்ணு பூமியிலேயே இல்லன்னு நினைக்கும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கு” என்று அவர் சொல்லி முடிக்கும்போது வீட்டிற்குள் நுழைந்தாள் மதி.

தனம் கௌதம் பற்றி சொன்ன அனைத்தும் உண்மை என்று தெரிந்ததால் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு வேகமாக மாடியேறிய பேத்தியிடம், “மதி அவங்க கல்யாணத்தைப் பற்றிதான் பேச வந்திருக்காங்க. நீ ஒரு முடிவு சொல்லிட்டுப் போம்மா. எனக்கு இரண்டு பேத்தி இருந்தாங்க. ஏதோ துருதிஷ்டம் ஒரு பேத்தியை இழந்துட்டேன். உன்னோட கல்யாணத்தையாவது கண் குளிர பார்த்துட்டு போயிடுறேன்” என்றவர் கண்ணீரோடு கையெடுத்து கும்பிட்டார்.

தாமோதரன் – தமயந்தி இருவரும் மகளின் பதிலை எதிர்பார்க்கவே, “அவருக்கு என்னைக் கட்டிக்க சம்மதம் என்றால் நீங்க மற்ற வேலையைக் கவனிங்க பாட்டி. நான் கண்டிப்பாக கல்யாணம் பண்ணிக்கிறேன். அதற்காக கையெடுத்து கும்பிட்டு என்னை கஷ்டபடுத்தாதீங்க” என்று கூறியவள் வேகமாக மாடியேறிச் சென்றுவிடவே கண்ணீரை துடித்துகொண்டார் ராஜலட்சுமி.

“நீ கௌதம்கிட்ட பேசும்மா” என்று சொல்லவே சரியென்று தலையசைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார் தனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!