இதய வேட்கை ♥ 3

 

மிதிலாவின் பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள்.  இருவரும் திருமணம் செய்ததோடு, கண்ணனின் தந்தை தந்த ஆதரவினால், மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு குடிவந்திருந்தனர்.

டிரைவராக சரக்கு வண்டிகளில் பணி செய்து, நல்ல வருவாய் ஈட்டி, சிறந்த தலைவனாகத் திகழ்ந்தார் மிதிலாவின் தந்தை.

தனது குடும்பத்தை நன்றாகக் கவனித்து கொண்டதோடு, பிழைப்பிற்காக வந்த இடத்தில், சிறுக சிறுக சேமித்து, தங்களது தேவைக்கு ஏற்ப சிறிய இடம் ஒன்றை வாங்கி, ஓட்டு வீடு ஒன்றைக் கட்டியிருந்தார். 

வீட்டை கட்டிய பிறகு, சில காலம் கழித்து வீட்டைச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவரையும் எடுத்திருந்தார்.  பெரும்பாலும் பணி காரணமாக ஓட்டுநர் பணியில் நாட்கணக்கில் வெளியில் தங்க நேரிடுவதால், மனைவி மகளின் பாதுகாப்பினை யோசித்து அங்ஙனம் செய்திருந்தார் மனிதர்.

மகிழ்வான அந்தக் குடும்பத்தில், திருஷ்டி பட்டது போல… மிதிலாவிற்கு பன்னிரெண்டு வயது இருக்கும் போது, எதிர்பாரா விபத்தில் சிக்கி மரணமடைந்திருந்தார் மிதிலாவின் தந்தை.

கணவனின் விபத்து மிகுந்த கவலையைத் தந்திருந்தாலும், தனது ஒற்றை மகளுக்காக அதனைத் தனக்குள் வைத்து, குறைந்த பட்ச தேவைகளுக்காக வேண்டி வெளியில் வேலைக்குச் செல்லத் துவங்கினார், மிதிலாவின் தாய் கமலா.

இந்நிலையில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வந்த போது, தாய் மற்றும் மகளுக்கு ஒத்தாசையாக கண்ணனின் குடும்பமும் இருந்தது.

மிதிலாவின் தாயார், யாருக்கும் தொந்திரவு கொடுக்காமல், தனது உழைப்பால் மகளை நல்ல முறையில் வளர்ந்திருந்தார்.

பள்ளிக் கல்வியோடு, கல்லூரிக் கல்வியையும் தனது உழைப்பால் யாருடைய தயவுமின்றி மகளுக்கு வழங்கியிருந்தார்.

அதிகம் படித்திராததால், தனக்கு தெரிந்த சமையலை உள்ளூரிலேயே செய்து, பொருளீட்டி மகளை ஆளாக்கினார்.

ஒற்றை மகளுக்காக வேண்டி தனது உடல் உபாதைகளைத் தாங்கிக் கொண்டு, பெரும்பாலும் அடுக்களையிலேயே போராடியபடி வாழ்ந்திருந்தார் அந்தத் தாய்.

மகளுக்கு தகுந்த வாழ்க்கைத் துணையை ஏற்படுத்தித் தருவதில் சில இடர்பாடுகள் எழவே கலங்கிப் போனார் கமலா.

காதல் திருமணம் செய்தவர்கள் பெண்ணின் பெற்றோர் என்பதைக் கேட்டவுடன், பலரும் மேற்கொண்டு திருமண விபரம் பேசாமல் நழுவுவதைக் கண்டு, தனது பருவத்தில் செய்த செயலுக்கு, மகள் இன்று பலியாகி விடுவாளோ எனும் கிலி அவரை மிகுந்த கவலைக்குள்ளாக்கியிருந்தது.

அன்றைய செயலுக்கு இன்று வருந்தி பயனொன்றும் இல்லை என்பது புரிந்தாலும், மகளின் எதிர்காலம் பற்றி எண்ணியே மன அழுத்தமும் உடன் சேர்ந்து, நோயை அதிகப்படுத்தியிருந்தது.

மகளின் எதிர்கால நலன் கருதி, தான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவிட, உடல்நிலையும் ஒத்துழைக்காது போகவே, எந்த இனத்தைச் சார்ந்த மணமகனாக இருந்தாலும் சரி எனும் முடிவோடு, கண்ணனின் தந்தையிடம் வரன் பார்க்க பணித்திருந்தார் கமலா.

“அண்ணே… எங்க விசயத்தை மறைக்காம சொல்லிருங்க… அத்தோட எங்க நிலைக்கு ஒத்து வர மாதிரி, நல்ல ஒழுக்கமா, குணமா, பாக்க லட்சணமா இருக்கற வரனா பாத்துச் சொல்ல முடியுமாண்ணே…”, என்று தயக்கத்தோடு திருநாவுவிடம் கமலா கேட்க

“அதுக்கென்னம்மா… சீக்கிரமா… நீ ஆசைப்பட்ட மாதிரி மாப்பிள்ளைய கொண்டு வரது என்னோட கடமைம்மா”, என்றிருந்தார்

அப்படி அவசர அவசரமாகக் கொண்டு வந்த வரன்தான் விஷ்வா.

விஷ்வாவைப் பற்றிய தகவலை கமலாவிடம் தெரிவிக்கும் முன்,

தனது மகன் கண்ணனது, மிதிலாவின் மீதான ஆர்வமான பார்வையை ஓரளவு யூகித்திருந்த திருநாவு, தனது மனைவியிடம் மகனின் பார்வைக்கான  யூகத்தைப் பற்றிய பேச்சைத் துவங்கியிருந்தார்.

கண்ணனின் தாயார், “திலாவ எனக்கும் ரொம்பப் பிடிக்கும்ங்க.  ஆனா… அதுக்காக என் ஒரே மகனுக்கு அந்தப் புள்ளைய மருமகளா கொண்டு வர எண்ணம் என்னிக்குமே எனக்கு இருந்தது கிடையாது! 

நீங்க பிரியப்பட்டா நல்ல மாப்பிள்ளையா பாத்து அவளுக்கு வேற பையனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க.  நான் வேணாணு சொல்லல.  அதுக்காக நம்ம பையனுக்கு அந்தப் பொண்ணு வேணாம்”, என்ற மனைவியின் பேச்சை யோசனையோடு கேட்டபடி நின்றிருந்தவரை நோக்கி

“ஏன் நான் இப்டி சொல்றேனு யோசிக்கிறீங்களா?  அந்த அண்ணன் நம்ம இனம்.  அந்த அண்ணி வேத்தாளு. அந்த மாதிரி ஒரு சம்பந்தம் நமக்கு வேணாங்க!  பழக்கம் வேற, வாழ்க்கை வேற.  அதான்…”, என இழுத்தவர் அதற்குமேலும் விளக்கவேண்டி வராது என்னும் முடிவோடு,

“இன்னுமொன்னு… நாளைக்கு அந்தப் புள்ளைக்கு நல்லது கெட்டது பாக்க யாருமில்ல.  அப்படி கல்யாணம் செஞ்சு நம்ம வீட்டுக்கு வந்தாலும், நம்ம காலத்துக்கு பின்ன வேற எந்த உதவியும் இல்லாம நம்ம பையன் தான் ரொம்ப கஷ்டப்படுவான்.  மச்சின உதவி இல்லைனாலும், மாமியா வீடுன்னாவது ஒன்னு அவனுக்கு வேணும்ல.

வெறும் வீட்டை வச்சு மனுச, மக்க இல்லாம அவன் கஷ்டப்படனுமா?

இப்ப நாம அவளுக்கு வேற எடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்தாலும், எவ்வளவு நாளு நாம அவளுக்குப் பாப்போம் சொல்லுங்க…!

அவங்க அப்பாவோட பழகன பழக்கத்துக்கும், அந்த அண்ணிக்கு செஞ்சு கொடுத்த வாக்கைக் காப்பாத்தவும் நல்ல பையனா வேணா பாக்கலாம்.

இப்பவாவது நான் ஏன் வேணானு சொன்னேனு புரியுதா!”, என்று ஒரே தடவையில் முழு மூச்சாக தனது எதிர்ப்பைச் சொல்லியிருந்தார் கண்ணனின் தாய்.

பெற்றோர் பேசிக் கொண்டதை அறிந்திராத கண்ணன், திலாவின் மீதான தனது ஆசையைக் கூற தகுந்த தருணம் பார்த்துக் காத்திருந்தான்.

அதற்குள் விஷ்வாவைப் பற்றி மிதிலாவிற்காக தந்தை வந்து தன்னிடமே விசாரிக்க, தந்தையின் பேச்சை மீறும் துணிச்சல் இன்றி அத்தோடு தனது ஆசையை தனக்குள் வைத்து அமைதியாகியிருந்தான் கண்ணன்.

இது எதைப் பற்றியும் அறியாதவளோ, தாயின் உடல்நிலையையும், தனது பணியையும் மட்டுமே கவனத்தில் கொண்டிருந்தாள் மிதிலா.

தன்னிடம் உதவி கேட்டதற்கிணங்க, கமலாவின் வார்த்தைகளுக்கு செவி சாய்த்து, விஷ்வாவைப் பற்றிய சில உண்மைகளை மருத்துவ உறவினர் மூலம் கேட்டறிந்திருந்தார் திருநாவு.

ஆனால் ‘பணங்காசு கைல மிதமிஞ்சிப் புழங்கும்போது… கட்டுப்பாடு இருந்தாலே கண்ணைக் குத்திட்டு, குடி, கூத்தினு போயிருவானுங்க.  இவனைக் கேக்க யாருமில்லை. அதான் பய வாழ்க்கைய… அவனுக்கு தோணுன மார்க்கமா… மனசுபோல வாழ்ந்து பாத்துருக்கான்.  கல்யாணத்துக்கு முன்ன எப்டியிருந்தாலும், ஒரு கால்கட்டைப் போட்டா எல்லாஞ் சரியா வந்திரும்’, என தனக்குத்தானே சமாதான வார்த்தைகளைக் கூறி, விசயத்தை கமலாவிடம் கொண்டு வராமல் இருந்திருந்தார் திருநாவு.

அதற்குமேல், அலைந்து மெனக்கெட மனமும் இல்லாமல் இருந்தது திருநாவிற்கு.

விஷ்வா பற்றிய செய்திகளை அறிந்திருந்தும், திருமணம் பேசி முடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் திருநாவு.

கமலாவிற்கு கடைசி வரை எந்த செய்திகளும் மருமகனைப் பற்றி தெரியாமலேயே போயிருந்தது.

விஷ்வாவின் பொருளாதாரம், அந்தஸ்தைக் கண்டு திலாவின் தாய் கமலா முதலில் மிகவும் தயங்க,

“அந்தப் பையனுக்கு அப்பா அம்மா யாருமில்லைங்கறீங்களேண்ணே”

“ஆமாமா, இப்பலாம் வரன் தேடறவங்க… மாமியார் இல்லாம இருந்தா நல்லது.  நாத்தனார் இல்லாம இருக்கணும்னெல்லாம் சொல்லி வச்சிருந்துல்ல வரன் தேடுறாங்க… நீ என்னன்னா இல்லாததுக்கு போயி இவ்வளவு வருத்தப்படற?”, என்று கமலாவிடம் இன்றைய நிலையைக் கூறி வினவினார்.

“மத்தவங்க எப்டி வேணா இருந்திட்டுப் போகட்டும்.  எங்களையே எடுத்துங்க… வயசுல தனியா வந்து நாங்க என்னத்தை பெருசா வாழ்ந்திட்டோம். இதுவே பெரியவங்க கூட இருந்திருந்தா இன்னிக்கு இவ்வளவு கஷ்டம் வந்திருக்காதுல்ல”, என்றவர்

“சரிண்ணே, உங்களுக்கு பையனை எப்டி யார் மூலமா தெரியும்?  நீங்க சொல்றதை வச்சிப் பார்த்தா, இதுவரை நம்ம விசேசங்கள்ல பாத்த உறவு மாதிரி தெரியலையே! பழக்கமாண்ணே?” 

“அவங்க பேமிலி டாக்டர் எனக்கு தூரத்துச் சொந்தம்மா.  ஆறு மாசமாவே அந்தப் பையனுக்கு பொண்ணு தேடிட்டுதான் இருக்காங்க”

“நம்ம நிலைமைய சொல்லிட்டீங்களா?  ஏன் கேக்கறேன்னா பையன் ரொம்ப வசதியா இருக்கறமாதிரி சொல்றீங்க.  அவங்க நம்மளோட சம்பந்தம் பண்ண யோசிப்பாங்கள்ல”, யோசித்து யோசித்து கேட்டார் கமலா.

“டாக்டரு… அந்தப் பையனுக்கு… எதாவது நல்ல குடும்பப் பொண்ணா, பணங்காசு இல்லைனாலும், குணமுள்ள பிள்ளையா இருந்தா பரவாயில்லை, சொல்லுங்கனு சொன்னாரும்மா, அதான் நம்ம திலாவைப் பத்தி சொன்னேன்.  போன தடவை அவரைப் பாத்தப்போ நம்ம திலா போட்டோவ அனுப்பச் சொல்லி அவுக ஆபீஸ்ல இருந்து அனுப்புச்சேம்மா”

“ஆமா அதுக்கு எத்தனை தடவை அவகிட்ட சொல்லி சொல்லி என் ஆவி போச்சுங்கறீங்கண்ணே?”, என திருநாவிடம் கமலா கூற

“ஏம்மா திலாவுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லையா?”, என பதறிக் கேட்டார் திருநாவு.

“அப்டியில்லணே… அது என்னை தனியா விட்டுட்டு எங்கயும் போக யோசிக்குது.  நான் இன்னும் எத்தனை நாளைக்கு?”, என்றவர்,

“அப்ப நம்ம திலாவைப் புடிச்சிருக்காமாண்ணே”, என ஒருவித எதிர்பார்ப்போடு கேட்டார் கமலா.

“திலா போட்டோவ மாப்பிள்ளை பாத்துட்டு சரின்னு சொன்னப்பறம்தான்மா வந்து உங்கிட்ட சொல்றேன்”, என்று கமலாவிடம் எடுத்துக் கூற

“அண்ணே… என்னால அங்க இங்க போயி அலைஞ்சு திரிய முடியாத நிலை.  உங்க புள்ளைக்கு மாதிரி நல்லா நாலு இடத்துல விசாரிச்சு, உங்களுக்கு திருப்தியா இருந்தா மட்டும் சொல்லுங்க…! அந்தப் பையனுக்கே முடிச்சிருவோம்”, என்று கமலா கூறினார்.

“நல்லா விசாரிச்சாச்சும்மா!  நம்ம திலா வேலை பாக்கற மரக்கடை ஓனர் பையன்தான் அவரு!  பையனோட அப்பா ஒரு வருசத்துக்கு முன்ன தவறிட்டாரு!  அம்மா சின்ன வயசிலயே இல்லை, இவரு ஒரு பையன்தான்”, என்று விஷ்வாவின் குடும்பத்தைப் பற்றிக் கூறினார்.

“பெரிய மனுசங்க உதவிதான் இல்ல… சரி… கூடப் பிறந்தவங்களாவது இருப்பாங்கனு பாத்தா அதுவும் இல்லையா?  வேற இடம்னா பாருங்களேண்ணே!”, என்று கமலா மனதில் உள்ளதை விளக்க

“அம்மாடி… நம்ம கண்ணனையே விசாரிச்சிட்டேன்.  நல்ல குடும்பத்துப் புள்ளை. எழநூறு பேருக்கு மேல வேலைக்கு ஆளு வச்சு சம்பளம் குடுத்து நிர்வாகம் பண்றதுனா சும்மாவா? பையன் நல்ல மாதிரினு கண்ணன் சொன்னான்…! நல்ல தொழில் அணுகுமுறை, நல்ல வருமானம்னும் சொன்னான்.  இதுக்கு மேல என்ன வேணும். வெளி நாட்டுல எல்லாம் வியாபாரம் பண்ற அளவுக்கு நல்ல திறமை. நம்ம புள்ளையும் படிச்சிருக்கு.  ரெண்டு பேரும் சேந்து தொழிலை இன்னும் விஸ்தாரமா எல்லா நாட்டுக்கும் கொண்டு போவாங்க.  வேணா நீ பாரேன்”, என்று சமாதான வார்த்தைகளோடு, ஆசை வார்த்தைகளையும் கூறி கமலாவின் தயக்கத்தை போக்கினார் திருநாவு.

“விரலுக்கு தகுந்த வீக்கம் வேணுணே.  நம்ம புள்ளை நமக்கு உசத்தி.  ஆனா அங்க போயி எதுவும் சிரமம்னு வந்தா நம்மால எதுவும் சமாளிக்க முடியாது”, நிதர்சனத்தை உணர்ந்து கேட்டார் கமலா.

“நீ பயப்படறதுக்கு ஒன்னுமே இல்லை.  பையனே நம்ம திலா போட்டோவைப் பாத்திட்டு, கல்யாணத்தைப் பத்தி மேற்கொண்டு பேசச் சொன்னதா, டாக்டரு சொன்னாரு.  உன் திருப்திக்கு மாப்பிள்ளையவும் கூட்டியாரேன்.  நீயும் வேணா நேருல பேசிப் பாரு”, என்று கூறியவர், அத்தோடு ஓரிரு நாளில் விஷ்வாவை நேரில் அழைத்து வந்திருந்தார் திருநாவு.

ராஜ களையுடன் கம்பீரமாக வந்தவனை, அந்தத் தாயிக்கு மறுக்கும் உத்தேசமில்லை.

அந்தஸ்து பேதமில்லாமல், தனது ஓட்டு வீட்டிற்குள் வந்து, சம்பந்தம் பேசியவனை, ஏனோ தங்களை குறிப்பாக தன் மகளைக் காக்க வந்த தேவ தூதனாகவே பார்த்தார் கமலா.

பக்குவாக, பதவிசோடு வந்து சென்றவனை, கமலாவிற்கும் நெருடல் இல்லாமல் பிடித்திருந்தது.

தாயை தனியே விட்டுவிட்டு, திருமணம் செய்து கொண்டு செல்லும் மனநிலை தனக்கில்லை என்று மறுத்தவளை, அதட்டி, மிரட்டி, தனது உடல்நிலையைக் காரணமாக்கியே திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தார் கமலா.

செங்கோட்டையைப் பொறுத்தவரை சத்யநாதனின் மகன் சத்யநாதனைப் போல சத்யவான் என்று பேர் இருக்க, சென்னையில் நேரில் சென்று விசாரிக்க, உடல்நலம் ஒத்துழைக்காததால் சிரத்தை எடுக்கவில்லை கமலா.

அடுத்து வந்த பதினைந்து நாளில் ஆலயத்தில் வைத்து மிகவும் எளிய முறையில் திருமணத்தை வைக்க ஏற்பாடு நடந்தது.

திருமணம் முடிந்த பிறகு, வரவேற்பினை சென்னையில் வைப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டு, அதனை செயல்படுத்தத் துவங்கியிருந்தான் விஷ்வா.

திருமண வேலைகள் அனைத்தையும் தனது பொருளாதாரத்தின் வலிமையோடு, வேலையாட்கள் உதவியோடு, திலாவின் வீட்டினருக்கு சிரமம் இல்லாது பார்த்துக் கொண்டான்.

மற்ற பெண்களைப் போன்று திருமணம் கனவுகள் எதுவுமில்லாமல், தாயின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, விஷ்வாவைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் திருமணத்திற்கு தயாராகியிருந்தாள் மிதிலா.

திருமணம் முடிந்து சென்னையில் வந்து மகளை விட்டுவிட்டு, வரவேற்பு முடிந்த திருப்தியோடு கிளம்பியிருந்தார் கமலா.

பெண் வற்புறுத்தியும், அங்கிருக்காமல் கிளம்பியவர்,

“அங்க மறுவீடு நீங்க வரும்போது உங்களோட நானும் வந்தா நல்லாவா இருக்கும்.  இன்னிக்கே போனாதானே அங்க போயி வேணுங்கறதை பாத்து வைக்கலாம்”, என்று முன்பே கிளம்பியிருந்தார் கமலா.

திருமண அலைச்சல் மற்றும் பயண களைப்பு இரண்டும் சேர்ந்து, வந்த ஓரிரு நாளிலேயே, இயலாமையினால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கமலா.

மகளை நல்ல இடத்தில் மணமுடித்த திருப்தியோடு, மகள் செங்கோட்டைக்கு வருமுன் மரணமடைந்திருந்தார் அந்தத் தாய்.

தாயின் மரணத்திற்குப் பிறகு அடுத்தடுத்து வந்த நாள்கள் முழுமையும், தாயின் நினைவோடும், ஏக்கத்தோடும் பெண்ணிற்கு கழிந்திருந்தது.

பதினைந்து நாள்களில் அனைத்தையும் முன்னின்று செய்தவன், அடுத்து வந்த நாள்களில் மனைவியை தன்னோடு சென்னைக்கு அழைத்துச் சென்றிருந்தான் விஷ்வா.

திருமணத்திற்கு முந்தைய சந்திப்புகளில் வார்த்தையாடியதைப் போன்று இல்லாமல் பெண் அமைதியாக இருந்ததே, விஷ்வாவிற்கு பெண்ணை நெருங்குதற்கு தடையாக இருந்தது.

இயல்பாக இல்லாதவளை தொந்திரவு செய்யாமல் இருந்தான்.

தாயின் மறைவிற்குப் பின், நிகழ்விற்கு வந்தவளை, கேட்டதற்கு பதில் என்றிருந்தவளை புன்னகையோடும், அரவணைப்போடும் எதிர்கொண்டிருந்தான் விஷ்வா.

இயல்பாக இல்லாதபோதும், சற்றே தெளிந்து வீட்டிற்குள் வளைய வந்தவளை, எதிர்பாரா வேளையில் எதிர்பாரா தருணத்தில் தன்னவளாக்கிக் கொள்ள முயன்றபோதும், எதிர்த்தாளில்லை.

தேவை முடிந்ததோடு, தேவையில்லாமல் போனவளின் அருகாமைக்கே விஷ்வா செல்லவில்லை.

இணங்கியவள், சுணங்கி ஒதுங்கியபோதும் அதனை உணரும் நிலையில் விஷ்வா இல்லை.

அதனைக் கவனிக்கவும் தோன்றவில்லை.  அடுத்து வந்த நாள்களில் பெண்ணது இயல்பில் வந்திருந்த சிறு முன்னேற்றம், பல மடங்கு பின்னேற்றமடைந்ததை அறியாமல், விஷ்வாவின் பணிகளில் கவனம் செலுத்தியிருந்தான்.

நிராகரிக்கத் துவங்கிய பெண்ணை, உணராமலே நாள்கள் சென்றிருந்தது.

திடுமென ஒருநாள், “ஊருக்குப் போகணும்”, என்று வந்து எதிரில் நின்றவளை

“ம்… போகலாமே”, என்று மறுப்பேதும் கூறாமல் ஆமோதித்த கையோடு, தானே பெண்ணை செங்கோட்டைக்கு அழைத்தும் வந்திருந்தான்.

வந்தவள், தான் இனி செங்கோட்டையில் உள்ள அவளது வீட்டிலேயே தங்கிக் கொள்வதாகவும், விஷ்வா வேறு பெண்ணைத் திருமணம் முடித்து வாழ தனக்குத் தடையேதுமில்லை என்பதால், விவாகரத்திற்கு சம்மதிப்பதாகவும் கூற, பெண்ணின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளவே விஷ்வாவிற்கு முழுமையாக மாதங்கள் தேவைப்பட்டது.

///////////////

தலையைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக தன்னை தனது வீட்டிலிருந்து அனுப்பியவளின் மீது கோபம், குறை எதுவுமின்றி அவளுக்கே அலைபேசியின் வாட்சப் வாயிலாக செய்தி அனுப்பினான்.

“ஸ்ட்ராபெர்ரி…”

“…”, பெண்ணிற்கு இது வழமையான ஒன்று என்பதால் அமைதியாக எடுத்துப் பார்த்துவிட்டு வைத்தாள்.

வைத்த அடுத்த நிமிடம் அடுத்த டெக்ஸ்ட் வந்தமைக்கான நோட்டிஃபிகேசன் வர..

“மிஸ் யூ”

“…”

“ஆர் யூ தேர்?”

“…” இதற்குமேல் பேசாது இருந்தால் நேரில் வந்துவிடுவான் என்று பயந்தவள்,

“ம்…” , என்று அடித்து அனுப்பினாள்.

“என்ன பண்ணுற”

“…”, ‘என்னத்தைச் சொல்ல’

“ரிப்ளை பண்ணு, பிக் அனுப்பு”

“…”, தனது பழைய அதாவது கடந்த மாதம் எடுத்த புகைப்படம் ஒன்றை எடுத்து கடனே என அனுப்பிவிட்டு இருந்தாள்.

“பழசை அனுப்பச் சொல்லலை.  இப்ப எடுத்து அனுப்பு”, விஷ்வா

“…”, ‘உடும்பன் விடமாட்டான்’ (கணவனின் பிடிவாதம் கண்டு அவ்வாறு பெயர் வைத்திருக்கிறாள்) சற்றே களைப்பாக இருந்தாலும், செல்ஃபி ஒன்றை எடுத்து அனுப்பினாள்.

“நைஸ்”, மனதில் தோன்றியதை டெக்ஸ்ட் செய்திருந்தான்.

“…”, ‘எதுக்கு இந்த ஐஸ்’ மிதிலா

“பிஸினெஸ் பாக்க நான் இங்க வரலைனு உனக்கு நல்லா தெரியும்.  எதுக்கு வந்தேன்னு ஒவ்வொரு தடவையும் சொல்றேன்.  ஏன் எதுவும் பேசாம இப்டி அவாய்ட் பண்ற?”

“…”, தனது நிலையை எண்ணி அழுகை வந்தது பெண்ணிற்கு.

“இருக்கியா?”

“…”

“இப்டியே இருந்து என்னைக் கொல்லப் போறீயா?”

“…”

“நான் இன்னிக்கு அங்கதான் ஸ்டே பண்ணப் போறேன்… டிசைட் பண்ணிட்டேன்.  இதோ பத்து நிமிசத்துல வரேன்”

ஐயோ என மனம் பதறினாலும், எதையும் கேட்கமாட்டான் என்று மறுப்பேதும் கூறாமல் இருந்தாள்.

மூன்று நிமிடங்கள் எதாவது கூறுவாளா எனப் பொறுத்தவன் அதற்குமேல் அங்கு நிற்காமல் கிளம்பியிருந்தான்.

எது நடக்கக்கூடாது என்று நினைத்து பயந்து இருந்தாளோ அது இன்று நடக்கப் போகிறது.  ‘நடக்கறது நடக்கட்டும்!

வீட்டில் யாராவது போயி கதவைத் திறக்கட்டும்!’

பூட்டிய கதவை எழுந்து சென்று சரிபார்த்தவள், மீண்டும் தனது படுக்கையில் வந்து விழுந்தாள்.

சரியாக அடுத்து வந்த பதினேழாவது நிமிடத்தில் கார் சீறிப் பாய்ந்து உள்ளே நுழையும் சப்தம் கேட்டது.

எளிதில் கோபம் கொள்ளாதவனை கோபப்படுத்தியவள், பாவமாகப் படுக்கையில் படுத்தவாறே அனைத்தையும் செவி வழியே உணருகிறாள்.

அடுத்தடுத்து வேலையாட்கள் பேச்சு, அனைத்து அரவமும் கேட்டவாறே அறைக்குள் அமைதியாக படுத்திருந்தாள் மிதிலா.

வந்தவன், “அந்த ரூம்ல படுக்க ஏற்பாடு பண்ணுங்க செல்லம்மா”, என்று செல்லம்மாவிடம் கூறுவதும் பெண்ணிற்கு மெதுவாகக் கேட்டது.

மிதிலா தங்கியிருக்கும் அறைக்கு அடுத்த அறை அது.

“சுத்தமா இருக்கு.  டெயிலி அந்த ரூம்ல சுத்தம் பண்றதால நீங்க போயி இப்ப படுக்கலாம் சின்னய்யா”, செல்லம்மா

“பாலு எடுத்துட்டு வரவா சின்னய்யா”, செல்லம்மா

“இல்லை வேணா”, என்றவனின் குரல் அதன்பின் கேட்கவில்லை பெண்ணுக்கு.

இதுவரை தன்னைத் தன் போக்கிலேயே விட்டவன், இந்த முறை வந்தது முதல் மாறிப் போன மாயம் என்னவோ என்று புரியாமல் விழித்திருந்தாள் மிதிலா.

வந்தவன் முதலில் சற்று நேரம் படுத்து உறங்கினான்.   இல்லை உறங்குவதாக அனைவரையும் நம்ப வைத்தான் விஷ்வா.

அடுத்து வந்த ஒரு மணித் தியாலத்திற்கு பிறகு வீடு நிசப்தமாகியிருந்தது.

மிதிலாவிற்கு அன்றைய அலைச்சலோடு, மாதாந்திர தொந்திரவும் சேர்ந்து உறங்கத் துவங்கியிருந்தாள்.

எழுந்தவன், மிகச் சிறு வயதில் தந்தை, தாய் இருவரும் அவரவர் அறையில் இருக்க, அங்கு சிறிது நேரம், இங்கு சிறிது நேரம் என்று போக, வர பயன்படுத்திய வழியினைப் பயன்படுத்தி பெண்ணது அறைக்குள் வந்திருந்தான்.

வந்தவன், விடிவிளக்கின் வெளிச்சம் பட ஓவியம்போல, ஆனால் ஏதோ வேதனையைச் சுமந்த வாடிய வதனத்தோடு பெண் உறங்குவதைக் கண்டான்.

‘கியூட் அண்ட் சாஃப்ட்’, என தனக்குள் கூறிக் கொண்டவன் உறங்குபவளின் நிழல்படத்தை தனது அலைபேசியில் எடுத்து பத்திரப்படுத்தினான்.

அலைபேசியை விட, நேரில் அழகாகத் தோன்ற… அருகில் அமர்ந்து காணக் கண்கோடி வேண்டும் என்பதுபோல, காணாதவளை கண்டவனாகப் பார்த்திருந்தான்.

தொடத் துடித்த கரங்களை கட்டுப்படுத்தியவன், இதழைக் கவ்விச் சுவைக்கத் துடித்த உதடுகளைக் கட்டுப்படுத்தியவாறு விழி சிமிட்டாமல் மனையாளைப் பார்த்திருந்தான்.

ஆயிரமாயிரம் பெண்கள் தனது பார்வைக்குக் காத்திருக்க, தன்னைக் காத்திருக்க செய்து, காவலனாக்கியதோடு, அதுவே தெரியாமல் கடனே என பெண் உறங்குவதை எண்ணி புன்னகை பூக்கிறது விஷ்வாவின் இதழ்களில்…

“என்னடி இருக்கு உங்கிட்ட? பித்துப் பிடிக்கிற அளவுக்கு ஒன்னுமே பண்ணல… ஆனா உம்பின்னாடியே பித்தனாட்டாம் தெரிய வைக்கிறே…”, என மெதுவாக கூறுகிறான்.

“விட்டுட்டு வந்தப்போ ஒன்னுந் தெரியலை.  ஆனா எதையோ இழந்த மாதிரி ஃபீல்… எது எதனால… உனக்கும் அப்டியிருக்கா?”, என பிதற்றுகிறான்.

வசீகரீக்கும் ஸ்ட்ராபெர்ரி நிற இதழை தனது விரல்களால் மெதுவாக தொட்டு தனது இழந்து போன ஆற்றலை புதுப்பிக்கும் முயற்சியில் கரங்கொண்டு தொட முயற்சிக்கிறான்.

விரல் நடுங்க… மெதுவாக… தொட்டவன்… விரலை வாயில் வைத்து சுவை அறிய முயல்கிறான்.

தேனை விடத் தித்திப்பினை உணர்ந்தவன், தீண்டிய விரலைக் கொண்டு, மீண்டும் ஸ்ட்ராபெர்ரி உதடுகளைத் தீண்ட…

தீண்டலில் உறக்கம் கலைந்தவள், அருகே ஏதோ உருவத்தைக் கண்டு கத்தியிருந்தாள்.

எதிர்பாரா தருணத்தில் பூட்டிய அறைக்குள் தான் தனித்து உறங்கியதை உணரவே பெண்ணிற்கு இயலவில்லை.

சத்தம் வருமுன் இதழைக் கரங்களினால் முற்றுகையிட்டு சத்தம் வெளிவராமல் செய்திருந்தான் விஷ்வா.

பெண்ணின் இதயச் சத்தம் விஷ்வாவின் காதுகளுக்குக் கேட்டது.

வாயைப் பொத்தியதை மீறி, எழுந்து வாரிச் சுருட்டி எழுந்து பின்னே சென்றவளின் கண்களில் கண்ட பயத்தைக் கண்டவனுக்கு, ஏதோ தோற்றுப்போன உணர்வு. 

வருத்தம் மேலோங்க, “சாரி ஸ்ட்ராபெர்ரி!”, என்றவாறு இரு கைகளைகளையும் பெண்ணை நோக்கி யாசிப்பது போல வா என அழைத்தான்.

கணவனின் செயலுக்கு ஒத்துழைக்கும் மனநிலையில் இல்லாமல் பெண் நின்ற நிலையில் விஷ்வாவைப் பார்த்திருந்தாள்.

“…”, உடல் நடுங்க இன்னும் கணவனையே பயப்பார்வை பார்த்து சுவரோடு ஒதுங்கினாள் பெண்.

பெண்ணின் ஒதுக்கம் விஷ்வாவைச் சுட அருகே சென்றவன், “இப்டி ஏண்டி பாக்கறே?  நான் என்ன பூதமா? இல்லை தான… ஒரு புருசன பாக்கற பார்வை இல்லைனாலும் பரவால்ல… இப்பிடிப் பாத்து என்னை இன்னும் டென்சன் பண்ணாத”, கோபமாக என்றாலும் மெல்லிய குரலில் பேசினான்.

“எ..ப்டி.. உள்ள வந்தீங்க?”, மெதுவாக தனது நெஞ்சை ஆறுதலாக தடவியவாறே கேட்டாள்.

“ரொம்பத் தேவை?”, கடுப்போடு பதில் கூறினான்.

“இல்ல… நான் … கதவைப் பூட்டிட்டுத்தான் தூங்குனேன்”, என்று கணவனுக்கு விளக்கம் கூறினாள்.

வேறு வழி இருப்பது பெண்ணுக்கு இன்னும் தெரியாது.  தன்னவன் வந்த வழி என்று அவள் நினைத்த வாயிலோ, அவள் பூட்டியதைப்போலவே மாறாமல் இருந்தது.

“ஆமா… அதுக்கென்ன இப்ப… பூட்டுன ரூமுக்குள்ள வந்திட்டேன்…! வா… உக்காந்து இன்னிக்கே எல்லாத்தையும் பேசித் தீக்கலாம்!  இதுக்குமேல எனக்கு பொறுமை இல்ல!”, என்று மிதிலாவை அழைத்தான்.

அதுவரை உடலில் இருந்த நடுக்கம் சற்று மட்டுப்பட…

“இந்த நேரத்துலயா?”, என்று கேள்வியெழுப்பியவள், “இப்ப போயி உங்க ரூமில தூங்குங்க… நாளைக்கு காலைல பேசிக்கலாம்”, மிதிலா

“நானும் உங்கூட இங்கேயே தூங்கறேன்”, கட்டளையான பதில்.

“இங்கேயா?”, அதிர்வாகக் கேட்டாள் பெண்.

“ம்…”, தலையை அசைத்து ஆமோதித்தான்.

“இல்லை… நீங்க உங்க ரூம்லயே போயி படுங்க”, விஷ்வாவை ஏறெடுத்துப் பார்க்கும் துணிவு குறைய, குனிந்தவாறே பதில் கூறினாள் பெண்.

“ம்ஹூஹும்” என்றவன் பெண் படுத்திருந்த படுக்கையில் சென்று படுத்திருந்தான்.

இதற்குமேல் இவனை எங்ஙனம் அறையிலிருந்து அப்புறப்படுத்த என்று புரியாமல்,

“ஏங்க… நான் வீட்டுக்கு தூரம்”, என மெதுவாக பாவம்போல முகத்தை வைத்தபடி, உண்மையை உள்ளவாறு, குனிந்தவாறே கூறினாள்.

“நீ எதுக்கு வீட்டுக்கு தூரம்?”, என்று அடுத்த கேள்வியை எழுப்பியவனின் முகத்தை, சடாரென்று நிமிர்ந்து புரியாத பார்வை பார்த்தாள் மிதிலா.

‘என்ன இது கேள்வி?  தெரிஞ்சுதான் பேசுறாரா?  இல்லை…’, எனும் பார்வை விஷ்வாவை ஆராய்ச்சிப் பார்த்தவாறே நின்றிருந்தாள் பெண்.

பெண்ணின் பார்வை விளங்காமல், படுக்கையில் இருந்து எழுந்து பெண்ணின் அருகே வந்திருந்தான் விஷ்வா.

“எனக்கு மென்ஸ்ஸூரேசன் டைம்… அதான் நீங்க உங்க ரூம்ல போயி படுங்க”, என மீண்டும் விளக்க முயல

“அப்டினா?”, உண்மையில் விளங்காமல்தான் அப்படி கேட்டான் விஷ்வா.

‘உடும்பா என்னடா கேள்வியிது?’

“அப்டினா… அப்டிதான்”, என்றவள், “நீங்க போயி அங்க படுக்கலைனா… நாம்போயி அங்க படுக்கறேன்”, என்று நகர எத்தனிக்க…

அதுவரை பொறுமையோடு அருகே நின்றவன், நகர்ந்தவளை தனது கரங்களால் வளைத்திருந்தான்.

உண்மையின் பெண் கூறுவது அவனுக்கு விளங்கவில்லை.  அப்டியே ஏதோ புரிவதுபோல இருந்தாலும், அதற்கு தன்னை எதனால் அறையை விட்டுப் போகச் சொல்ல வேண்டும் என்று நிச்சயமாகப் புரியவில்லை.

கணவனின் செயலைக் கண்டு, “நிஜமாத்தாங்க சொல்றேன்”, என்று மீண்டும் தயக்கமாகக் கூற

“என்னமோ சொல்லிட்டுப் போ… ஆனா இன்னிக்கு நீ வேணும் எனக்கு”, என்று பெண்ணது முகத்தை தனது இரு கரங்களால் ஏந்தி தனது முகத்தருகே கொண்டு சென்றவனை பயப்பார்வை பார்த்தாள் பெண்.

“இப்ப எப்டிங்க முடியும்… அது என்னால முடியாது…”, என்று கூறியவளின் அதரங்கள் தனது நிலையை எண்ணித் துடித்து, பெண்ணது அழுகையின் அளவைக் கூட்டிக் காட்ட…

“என்ன கேட்டுட்டேன்னு இப்ப அழற? வேணாம் அவ்வளவுதான? சரி போ”, என்றவன் பெண்ணது பயப்பார்வை உண்டாக்கிய கோபத்தில், மிதிலாவைப் பிடித்து பலம் கொண்ட மட்டும் படுக்கையை நோக்கித் தள்ளிவிட்டு, கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றிருந்தான் விஷ்வா.

பலவீனமான மனம், உடல் இரண்டோடும் நின்றவள் பரிதாபமாகச் சென்று படுக்கையில் விழுந்திருந்தாள்.

அறைக்குள் சென்றவன், தன்னை ஆசுவாசப்படுத்த நீண்ட நேரம் எடுத்துக் கொண்டான்.

பிறகு உதட்டின் வழியே ஆறுதலைத் தேட எண்ணி அடுத்தடுத்து இரண்டு, மூன்று என்று பற்ற வைத்து, புகைந்த நெஞ்சை புகை விட்டு ஆற்றி தன்னை நிலைப்படுத்தினான்.

அறையெங்கும் புகை நிரம்பியிருக்க, மனதில் ஓடிய பெண்ணின் வார்த்தைகளுக்கு, கையிலிருந்து அலைபேசியில் விளக்கம் வேண்டித் தேடத் துவங்கினான்…

உடும்பனின் ஆசை நிறைவேறுமா?

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!