Sontham – 29

646958c0b9eb787dade9914686ce921a

அத்தியாயம் – 29

அவள் அந்த இடத்தை நெருங்கும்போது கார் மரத்தில் மோதி இருப்பதைப் பார்த்து பதட்டத்துடன் காரை நிறுத்தி வேகமாக இறங்கியவள், “மதி” என்ற அழைப்புடன் அவளின் அருகே சென்றாள்.

அங்கே மதி கிடந்த நிலையைக் கண்டு வேகமாக உடைகளை சரி செய்த மது அழுகையுடன், “மதி” என்று அவளின் கன்னம் தட்டினாள்.

மதி கண்திறந்து பார்த்தவுடன், “மது என்னை வருண் கேடுட்டுத்தான்” என்று விம்மி விம்மி அழுதாள். மதுவிற்கு அவள் சொன்னதைகேட்டு தலையே சுற்றியது.

“ஏய் என்னடி சொல்ற” என்று மது பதட்டத்துடன் கேட்கவே நடந்த அனைத்தையும் அவளிடம் கூறவே, ‘படுபாவி நல்லவன் மாதிரி நடித்தானே? இப்படியொரு காரியம் செய்தானா?’ என்று அவளின் உள்ளம் கொதித்தது.

“சரி வா நம்மா ஹாஸ்பிட்டல் போலாம்” என்றழைக்க மறுப்பாக தலையசைத்த மதி, “இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிர்தானவே போயிரும் மது. எனக்காக நீ ஒன்னு செய்வியா?” என்று அழுகையுடன் கேட்டாள்.

மது மறுப்பு சொல்லாமல் அழுகையுடன் சரியென்று தலையசைக்க, “எனக்கு இப்படியொரு விஷயம் நடந்தது அம்மா, அப்பாவுக்கு தெரியக்கூடாது மது. நான் ரொம்ப தைரியமான பொண்ணுன்னு நினைச்சிட்டு இருப்பவங்களால் இந்த உண்மையை தாங்க முடியாது. அதனால் நீ மதியாக இருந்து அவங்களை பத்திரமாக பார்த்துப்பேன்னு சத்தம் பண்ணிக்கொடு” என்று உயிரை கண்ணில் தேக்கிக் கேட்டாள் மதி.

“என்னடி இப்படி பேசற?” என்றபடி மது அவள் நீட்டிய கையில் கை வைத்தவளின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“மது இன்னொரு விஷயம். வருணிடம் நான் மதுன்னு அவனை நம்ப வெச்சிட்டேன். தன் தோழியை தானே கெடுத்து கொன்னுட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் இருப்பான். அதனால் அவனால் உனக்கு எந்தவொரு ஆபத்தும் வராது. நீ என்னை மாதிரி தைரியமாக இருப்பதைவிட புத்திசாலியாக இருக்கணும் மது” என்று மூச்சுவாங்க பேசியவளை கண்டு மது கதறி அழுதாள்.

அந்த நிலையிலும் மதி பயப்படாமல், “மது நீ வருணை பழிவாங்க வேண்டாம் சரியா? அவன் செய்த தவறுக்கு தண்டனை கொடுக்க நம்ம யாரு சொல்லு பார்க்கலாம். அவனுக்கான முடிவை ஆண்டவன் குறிக்கட்டும்” என்று சொல்லவே மதுவிற்கு சுள்ளேன்று கோபம் வந்தது.

“என்னடி அவனை சும்மா விட சொல்ற?” என்று எரிந்து விழுகவே, “என் மானம் போனது உனக்கும், எனக்கும் மட்டும் தெரிஞ்சதாக இருக்கட்டும். மற்ற யாருக்கும் இந்த விஷயம் தெரியக்கூடாது. நான் யாருக்கும் கெடுதல் நினைக்காத போதே எனக்கு இப்படியொரு நிலை. இதில் சாகப்போகும்போது அவனை பழிவாங்கணும்னு நினைச்சா நானெல்லாம் மனிஷியே இல்ல” என்ற மதி மதுவையை இமைக்காமல் பார்த்தாள்.

மது அழுகையுடன் அவளைப் பார்க்க, “என்னை மாதிரி இன்னொரு உயிர் இப்படி போகாமல் பார்த்துக்கோ மது. உன்னால் முடிஞ்சவரை மத்தவங்களை இப்படிபட்ட ஆபத்திலிருந்து காப்பாத்து..” என்று சொல்லும்போது மதியின் உயிர் அவளைவிட்டு பிரிந்து சென்றது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான். திணை விதைத்தவன் திணையருப்பான். மதி நல்லதொரு சிந்தனையை மதுவின் மனதில் விதைத்துவிட்டு சென்றாள். அவள் இறந்த இடத்தில் மறுபடியும் ஜெனித்தாள் மது.

சற்று நேரத்தில் மது இறந்த தகவல்கேட்டு எல்லோரும் வந்துவிட்டனர். அங்கிருந்த அனைவரும் மனதளவில் கலங்கி இருந்ததால் மது கொடுத்த பேட்டியை யாரும் கவனிக்கவில்லை என்பதைவிட அவர்கள் மனம் உண்மையை உணரும் நிலையில் இல்லை என்று சொல்லலாம். 

மதியின் போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட் வாங்க சென்ற மது டாக்டரிடம், “இந்த உண்மை யாருக்கும் தெரிய வேண்டாம் சார். என் அக்காவோட மானம் போகக்கூடாது. மதிக்கு நடந்தது விபத்துன்னு சொல்லுங்க” என்று கையெடுத்து கும்பிட அவரும் சரியென்று தலையசைத்தார்.

மது இறந்துவிட்டால் என்று தெரிந்ததும் கௌதம் கதறியபோது கூட உண்மைச் சொல்ல மனமில்லாமல் செய்து கொடுத்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு மௌனம் சாதித்தாள். மதி இறக்கும்போது சொன்னது போலவே அவளைப் பார்க்கும் வேலையில் குற்ற உணர்ச்சியோடு அவளைவிட்டு விலகினான் வருண்.

இதற்கிடையே மதி இறந்த இடத்திற்கு சென்றபோது, ‘மத்தவங்கள காப்பாற்ற நினைக்கும்போது என் பக்கத்தில் இருந்த நீ இப்போ என் உடன்பிறந்தவளை காப்பாற்ற முடியாமல் செய்துவிட்டாயே’ என்று வலியுடன் நினைத்தாள். 

அவள் மனதின் கேள்விக்கு அங்கே விடை கிடைக்காமல் போனது. ஆனால் அதன்பிறகு மதியைப் போல பலரைக் காப்பாற்ற தொடங்கினாள்.  தன் உயிர் காதலன் தன்னை பிரிந்து வாடுவதை பலமுறை வெகுதூரத்தில் நின்று அவனை பார்த்திருக்கிறாள். அதன்பிறகு பாட்டி அவளிடம் கௌதமை கல்யாணம் செய்ய சொன்னபோது மறுக்காமல் சம்மதித்தாள்.

அப்போது கூட அவள் அவனிடம் உண்மையைச் சொல்லாமல், ‘உன் அருகில் இருப்பதே போதும்’ என்ற எண்ணத்துடன் வலம்வர தொடங்கினாள்.

அதன்பிறகு நடந்த அனைத்தையும் நினைத்துப் பார்த்து கலங்கிய மது, “வீட்டுக்குள் உட்கார்ந்து இருந்தால் இப்படிதான் நினைக்க தோன்றும்” என்று பட்டென்று எழுந்து உடையை மாற்றிவிட்டு வெளியே செல்ல ஸ்கூட்டியை எடுத்தாள். அவள் வீட்டிலிருந்து கிளம்பிய சற்று நேரத்தில் வருணுடன் பேசிவிட்டு வெளியே வந்த கௌதம் மனம் தெளிந்திருந்தது.

அவனின் மனதில் இருந்த குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கவே, “வருண் நான் கிளம்பறேன்” கௌதம் கிளம்பவே வருணும் தன் பைக்கை எடுத்துகொண்டு திரும்பிய சமயம் கௌதமிற்கு அசோக்கிடம் இருந்து போன வரவே அவன் வண்டியை நிறுத்திவிட்டு பேச தொடங்கினான்.

வருண் கிளம்புவதாக சைகை செய்துவிட்டு, “ம்ம் ஓகே” என்றான் கௌதம்.

அவன் பைக்கை எடுத்துக்கொண்டு செல்வதை சிந்தனையோடு பார்த்து கொண்டிருந்தபோதே எதிரே வந்த டேங்கர் லாரியில் மோதிவதை கண்டவன், “வருண்” என்ற அழைப்புடன் அவனை நோக்கி ஓடினான்.

அதே சாலையின் மற்றொரு புறம் வந்த மதி அந்த விபத்தைப் பார்த்தும் வண்டியை நிறுத்துவிட்டு இறங்கி அவனின் அருகே சென்றாள். வருண் ரத்த வெள்ளத்தில் பார்த்த்தும் உடனே ஆம்புலன்ஸ்க்கு அழைத்துவிட்டு விவரம் சொல்லும்போது கௌதம் அவனருகே வந்தான்.

அவளை அங்கே பார்த்தவுடன், ‘இவதான் ஏதாவது பண்ணியிருப்பாளோ’ என்ற எண்ணம் அவனின் மனதில் எழுந்தபோது ஆம்புலன்ஸ் அங்கே வந்தது.

அதற்குள் அங்கே மக்கள் கூட்டம் கூடிவிடவே, “யாரும்மா போன் செய்தது?” என்று டாக்டர் கேட்கவே, “நான்தான் மேடம்” என்றாள்.

“இவரைப்பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டதற்கு கௌதம் அவளின் பதிலை எதிர்பார்த்தான்.

“ம்ம் என் நண்பன்தான் மேடம்” என்றவள் பதில் கொடுத்துவிட்டு வருணின் வீட்டு முகவரியும் கொடுத்து அவனை ஆம்புலன்ஸில் ஏற்றும்வரை தன் உணர்வுகளை கட்டுபடுத்திக்கொண்டு நின்றிருந்தாள்.

கௌதம் கண்கொத்தி பாம்பு போல அவளையே பார்க்க ஆம்புலன்ஸ் சென்றவுடன் அவளின் கண்களில் கண்ணீர் பெருகியது. ஆனால் அதற்கு நேர்மாறாக அவளின் உதட்டில் புன்னகை அரும்பிட உணர்ச்சி குவியலாக நின்றவளை இமைக்காமல் பார்த்தான்.

அன்று மதி சொன்னதுபோலவே அவன் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்துவிட்ட சந்தோசம் அவளின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

அவளின் முகத்தில் தோன்றி மறையும் உணர்வுகளை படித்தபடி அவளின் அருகே வந்தவன், “வருணுக்கு நீ செய்தது சரிதானா?” என்றபடி அவளை கேள்வியாக புருவம்  உயர்த்தினான்.

“அவனை பழிவாங்கும் எண்ணம் எனக்கு இல்ல. நான் வீட்டில் அடைந்துகிடக்க வேண்டாம்னு வெளியே கிளம்பி வந்த இடத்தில் அவனுக்கு ஆக்ஸிடெண்ட் நடக்கும்னு நான் எதிர்பார்க்கல. இப்போ இங்கே நின்றிருக்கேன் என்பதற்காக நான் கொலைகாரின்னு நீங்க முடிவு செய்தால் அது உங்க முட்டாள்தனம்” அவனின் மனதைப் படித்துபோல  பதில் கொடுத்துவிட்டு தன் ஸ்கூட்டியை நோக்கி நடந்தாள்.

அவளின் மனதில் வருணின் மீது கட்டுகடங்காத கோபம் இருப்பது கௌதமிற்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவன் உயிருக்கு போராடுவதை கண்டு ஆம்புலன்ஸிற்கு போன் செய்தது அவளின் இளகிய மனதை அவனுக்கு படம்பிடித்துக் காட்டியது.

“மதி ஒரு நிமிஷம்” என்று அவன் தடுக்கவே அவளோ நிற்காமல் நடந்தாள்.

அதிலிருந்தே அவள் தன் மீது கோபமாக இருப்பதை புரிந்துகொண்டு, “மதி” என்று பொறுமையுடன் அழைத்தான்.

அவள் அதை காதில் வாங்காமல் வேகமாக செல்லவே, “மது பிளீஸ் நில்லுடி” என்றவனின் அழைப்பைக்கேட்டவுடன் சட்டென்று திரும்பி அவனைப் பார்த்தாள் மது.  

கௌதம் அவளின் அருகே சென்று, “வீட்டுக்குப் போலாமா?” அவன் சிரிப்புடன் கண்ணடித்துக் கேட்டான். ஏற்கனவே கௌதமிற்கு உண்மை தெரியும் என்ற விஷயம் தெரிந்ததால் தான் பிறந்தநாள் அன்று அவனின் செயலைத் தடுக்காமல் அதற்கு விருப்பத்துடன் உடன்பட்டாள்.

இன்று அவன் தன்னை பெயர் சொல்லி அழைத்ததில் அவளின் மனம் தடுமாறிய போதும், “நீங்க உங்க பைக்கில் எடுத்துட்டு வீட்டுக்குப் போங்க. நான் என் ஸ்கூட்டியில் வீட்டுக்கு வரேன்” அவள் பிடிகொடுக்காமல் பேசினாள்.

சட்டென்று அவளின் கையிலிருந்த ஸ்கூட்டியின் சாவியை கௌதம் பிடுங்கிக்கொண்டு, “இப்போ என் பைக்கில் போலாமா” என்று நடுரோட்டில் அவளிடம் வம்பு வளர்த்தான்.

அவனை முறைத்து பார்த்தவள், “நான் வீட்டுக்கு நடந்தே வரேன். நீங்க முதலில் இங்கிருந்து கிளம்புங்க கௌதம்” கோபமாக இருப்பதுபோல அவனிடம் காட்டிக்கொண்டாள்.

“இந்த ஐடியா இன்னும் நல்லா இருக்கு மது. வீட்டுக்கு நடந்தே போகும்போது நிறைய டைம் கிடைக்கும். நிறைய விஷயத்தை தெளிவாக பேசலாம்” என்று அவன் சொல்லிக்கொண்டே செல்ல அவனிடமிருந்து சாவியை பிடுங்கிக்கொண்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.

“நீங்க வீட்டுக்கு வந்தாலும் சரி. இல்ல இப்படியே போனாலும் சரி. எனக்கு கவலையில்லை” அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள். கௌதமின் மீது அவளுக்கு எள்ளளவும் கோபமில்லை என்று அவளின் செயலில் உணர்ந்தவன் தன் பைக்கை எடுத்துகொண்டு வீடு நோக்கி சென்றான்.

மது வீடு வந்து சேர்ந்தவுடன் குளித்து உடைமாற்றிகொண்டு வெளியே வரும்போது கையில் ஒரு பார்சலோடு வீடு வந்து சேர்ந்தான் கௌதம். அவன் அறைக்குள் சென்று மறையவே சமயலறைக்கு சென்ற மது சிந்தனையோடு சமையலை செய்து அனைத்தையும் டைனிங் டேபிளில் கொண்டுவந்து வைத்தாள்.

அவன் வந்து சாப்பிட அமர மது அவனுக்காக பரிமாறிவிட்டு அவனின் எதிரே அமர்ந்து மெளனமாக சாப்பிட தொடங்கினாள். இருவருக்குமிடையே பேசித் தீர்க்க வேண்டிய விஷயம் ஏராளமாக இருந்ததால் நேரத்தை வீணடிக்காமல்  சிந்தனையோடு சாப்பிட்டுவிட்டு எழுந்தனர்.

மது சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்துவிட்டு ஹாலில் இருந்த சோபாவில் சென்று அமர அவளின் பக்கத்தில் வந்து அமர்ந்த கௌதம், “என்னிடம் ஏதாவது கேட்கணுமா மது?” என்றான்.

சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்த மது தயக்கத்துடன், “நான் மதுன்னு தெரிஞ்சதால் தானே அன்னைக்கு என்னிடம் அப்படி நடந்துகிட்டிங்க” என்று கேட்டதற்கு அவளின் கைவிரலைப் பற்றி ஒப்புதலாக தலையசைத்தான்.

அவளுக்கு போன உயிர் திரும்ப வந்தது போல இருந்தது. அவன் போதையிலும் மது என்ற அழைப்புடன் அவளை கட்டியணைத்தபோதே அவனுக்கு உண்மை தெரிந்துவிட்டது என்று புரிந்து கொண்டாள். தன் மீது உயிரையே வைத்திருந்த கௌதமை தடுக்க முடியாமல் மகிழ்ச்சியுடன் அவனின் செயலுக்கு உடன்பட்டாள் மது.

மறுநாள் அதே காரணத்தோடு அவன் அணைக்காமல் விலகியபோது அவளின் மனம் அமைதியடைந்தது. அதே நேரத்தில் அவனின் மதி என்ற அழைப்பு அவளின் மனதை கொள்ளாமல் கொன்றது.

திடீரென்று மனதில் எழுந்த சந்தேகத்துடன், “என் இடத்தில் இப்போ மதி இருந்திருந்தால் நீங்க என்ன பண்ணியிருப்பீங்க கௌதம்” என்று ஆழ்ந்த குரலில் கேட்டாள்.

சட்டென்று திரும்பிப் பார்த்த கௌதம், “உன் இடத்தில் மதி இருந்திருந்தால் தலைகீழாக நின்றாலும் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருக்க மாட்டா. அதையும் தாண்டி அப்படியொரு நிலை வரும்னு தெரிஞ்சதும் மேல் படிப்புக்கு வெளிநாடு போயிருப்பாள்” அவன் சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள் மது.

அந்த பிரச்சனை நடந்த அன்று தனக்கு பார்க்க பட்டிருந்த மாப்பிள்ளை பற்றி அவள் மூச்சுவிடவில்லை. அதே நேரத்தில் மீறிக் கட்டாயப்படுத்தினால் மேல் படிப்பிற்கு வெளிநாடு சென்றுவிடுவேன் என்று வீட்டிலிருந்த அனைவரின் தலையிலும் குண்டைத்தூக்கி போட்டு இருந்தாள்.

அன்று மதி சொல்லும்போது பெரிதாக தெரியாத விஷயம் இப்போது மனதில் பூதாகரமாக எழுந்து மதுவை மிரட்டியது. அவள் குழப்பத்துடன் கௌதமை ஏறிட்டாள்.

அவளின் அதிர்ச்சியைக் கண்டு, “என்ன மது சந்தேகமாக இருக்கா? நீயும், நானும் லவ் பண்ற விஷயம் அவளுக்கு எப்பவோ தெரியும். சரியா சொல்லனும்னா உங்க அப்பா, அம்மா கல்யாண நாளுக்கு வீட்டுக்கு வந்த அன்னைக்கே அவ உண்மையை கண்டுபிடிச்சு மறுநாளே என்னை நேரில் வந்து சந்தித்தாள்” என்றவனின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.

அன்று ஆபீசில் வேலையில் தீவிரமாக இருந்தவனிடம், “ஸார் உங்களைப் பார்க்க ஸ்ரீமதின்னு ஒருத்தங்க வந்திருக்காங்க” என்றான் கான்ஸ்டபிள்.

அவளின் பெயரைக் கேட்டதும், “ம்ம் உள்ளே அனுப்புங்க” என்றான் கௌதம்.

கொஞ்சநேரத்தில் அறைக்குள் நுழைந்த மதியைப் பார்த்தும், “வா மது! என்ன திடீர்ன்னு என்னைப் பார்க்க ஆபீஸ் வரை வந்திருக்கிற?” என்று சாதாரணமாக கேட்டான்.

“கௌதம் நீங்க மதுவை லவ் பண்றீங்களா?” எந்தவிதமான கல்மிசமும் இல்லாமல் நேரடியாக கேட்டாள்.

“ஆமா மதி!” என்றான் தெளிவாக அவளைப் பார்த்தபடி.

“அப்போ குற்றாலத்தில் இருந்து வந்தபிறகு குங்குமம் கண்டாலே காண்டாகும் மதுவின் செயலுக்கு நீங்கதான் காரணமா?” என்று சிரித்தபடியே கேட்டாள்.

“ம்ம்” என்றவன் ஒப்புக்கொள்ளவே, “நல்லவேளை கௌதம் இப்போதான் மனசுக்கு நிம்மதியாக இருக்கு” என்றவளை அவன் புரியாத பார்வை பார்த்து வைத்தான்.

“மது என்னைமாதிரி ரொம்ப போல்ட். ஆனால் நான் அவளை மாதிரி இருப்பதால் தனித்தன்மை வேணும்னு அமைதியான பெண்ணாக மாறிட்டா. எனக்கு குறும்புத்தனம் செய்யும் மதுவை ரொம்ப பிடிக்கும் கௌதம். இப்போ அவ சிடுசிடுன்னு பேசுவது, எதுக்கு எடுத்தாலும் எரிந்து விழுவது எல்லாம் பார்க்கும்போது நான் ரொம்ப ஹாப்பியாக இருக்கேன். அதுக்கு உங்களுக்குத்தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்” என்று படபடவென்று பொரிந்து தள்ளிய மதியின் பேச்சில்  கவரப்பட்டான்.

கௌதம் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி, “ஹப்பா என்னது படபடன்னு பட்டாசு மாதிரி பேசற மதி. நீ பேசுவதை கேட்கும்போது எனக்குமே சந்தோசமாக இருக்கு” என்றான்.

“இதுவரை எனக்கு இருந்த ஒரே பேஸ்ட் ஃப்ரெண்ட் என் மதுதான். இப்போ அவளையும் நீங்க காதலால் டிஸ்டப் பண்ணிட்டீங்க. அதனால் இனிமேல் நீங்களும் என் பேஸ்ட் ஃப்ரெண்ட் தான். எங்கூட நட்பாக பழகுவதில் உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே” புன்னகையோடு அவனை நோக்கி நட்பு கரம் நீட்டினாள் மதி.

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல மதி” என்று சொல்லி அவளின் நட்பு கரத்தைப்  பற்றி குலுக்கினான் கௌதம்.

“இந்த சாக்லேட். சரி நான் கிளம்பறேன் கௌதம். உன் லவ்க்கு என்னிடமிருந்து என்ன ஹெல்ப் வேண்டும் என்றாலும் தாரளமாகக் கேளு” அவனிடமிருந்து விடைப்பெற்று கிளம்பினாள்.