Babysara050215_1t

அத்தியாயம் – 30

அன்று நடந்ததை மதுவிடம் சொன்ன கௌதம், “உனக்கு பிரச்சனைன்னு தெரிஞ்சு அப்பா, அம்மாவை பெண்கேட்டு வீட்டுக்கு அனுப்பும்போது இப்படியொரு குழப்பம் வரும்னு தெரிஞ்சுதான் மதியிடம் விஷயத்தை சொன்னேன்” என்றவன் நிறுத்திவிட்டு மதுவின் முகம் பார்த்தான்.

“அதுக்கு மதி என்ன சொன்னாள்?” என்று குழப்பத்துடன் கேட்டாள்.

“அன்னைக்கு என் அம்மா ஸ்ரீயைப் பெண்கேட்டு வீடு வருவதற்குள் பாட்டிகிட்ட பேசி பெரிய ரகளையே பண்ணிட்டா. அதுக்குப்பிறகு நான் மதுரை கிளம்பிச் சென்றபிறகு நீ வீட்டில் அப்சட்டாக இருக்கும் விஷயத்தை சொல்லி அவன்தான் அன்னைக்கு காலேஜ் வர வச்சா” என்று மதியைப் பற்றி மதுவிடம் அனைத்தையும் கூறினான்.

கடைசியாக, “நம்ம கல்யாணம் நடக்கனும்னு ஊரைவிட்டுப் போகக்கூட தயாராக இருந்தவளுக்கு இப்படியொரு நிலை என்றால் எப்படி மது ஏத்துக்க முடியும்” என்றவன் சொல்லி முடிக்கும்போது வெடித்து அழுதாள் மது.

அனைவரிடமும் திமிர் பிடித்தவள் என்று பெயர் வாங்கி வைத்திருந்த மதியின் நல்ல குணம் மதுவிற்கு மட்டுமே தெரியும். தன் உயிர் போகும்போது கூட வருணை விட்டுவிடும்படி சொன்னவள் கடைசிவரை தனக்காக அவள் செய்த உதவிகளை வாய்திரக்கவில்லையே என்று எண்ணி அழுதாள்.

கௌதம் அவளை அணைத்து ஆறுதல்படுத்தி, “ஸாரி மது இதெல்லாம் உன்னிடம் முன்னாடியே சொல்ல நினைச்சேன். ஆனால் உன் பிறந்தநாள் அன்று ஒரு பைல் எடுக்கும்போது மதியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கைக்கு கிடச்சுது. அன்னைக்கு அந்த கேஸ் பற்றி விசாரிச்சிட்டு வீடு வந்ததும் மதியை மட்டும் நினைக்க சொல்லவும் எனக்கு கோபம் வந்திருச்சு. அதன் உன்னை அன்னைக்கு அடிச்சேன்” என்று என்றோ செய்த தவறுக்கு அவளிடம் மன்னிப்புக் கேட்டான்.

பட்டென்று நிமிர்ந்த மது, “உங்க மேலே எந்த தப்புமே இல்ல கௌதம். அன்னைக்கு உங்க இடத்தில் நான் இருந்திருந்தாலும் அதையேதான் செய்திருப்பேன்” என்றவளின் கைகளைப்பிடித்து முத்தம் பதித்தவன்,

“அன்னைக்கு குடிச்சிட்டு வந்து உன்னை வற்புறுத்தியதாக நினைக்காத மது. தாம்பத்தியம் என்பது இரண்டு மனங்கள் சேரும் புனித பந்தம். உன்னை அடித்துவிட்ட கோபத்தில் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தபோது நான் வாங்கிகொடுத்த சேலையைக் கட்டிக்கொண்டு நெற்றியில் குங்குமம் வைத்துகொண்டு அழகாக இருந்தா. உன் நெற்றியில் இருந்த குங்குமம் பார்த்து என் மனசு தடுமாறிடுச்சு மது. நீ வேண்டான்னு விலகி இருந்தால் கூட நான் உன்னை வற்புறுத்தி இருக்க மாட்டேன். அதுக்காகவும்..” என்றவன் தொடங்கும்போதே அவனின் இதழை தன் இதழை பதித்தாள்.

அவளின் கண்களில் கண்ணீர் வழிய அவனின் கண்களும் லேசாக கலங்கியது. இருவருக்கும் மூச்சு முட்டும் வரை இதழ் முத்தம் நீடித்தது. அவள் அவனிடமிருந்து விலகிய மதுவை நோக்கி வா என்பது போல கரங்களை விரித்து அவளை கண்ணால் அழைத்தான் கௌதம்.

அவனின் கண்களில் வலி அப்பட்டமாக தெரியவே மறுபேச்சு இன்றி அவனின் கையில் சரண்புகுந்தாள் மது. கெளதம் அவளை இறுக்கியணைத்து கொண்டு எதுவும் பேசாமல் இருந்த கௌதமின் கண்கள் கலங்கி அவளின் தோள் வளைவில் பட்டுத் தெரித்தது.

அவளிடம் உண்மையைக் கேட்டு வாங்கிவிட அவனுக்கு இரண்டு நிமிடம் போதும்.  அவன் இதுவரை அவளிடம் ஒரு வார்த்தை அது பற்றிக் கேட்டதில்லை.  திருமணத்திற்கு முன்னும் சரி, திருமணத்திற்கு பின்பும் சரி அவளிடம் அவன் எந்தவிதமாக விளக்கத்தைக் கேட்கவில்லை.

ஒரு பெண்ணின் காதலனாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி அவளை சந்தேகப்படாமல் இருந்தாலே போதுமே அவள் சந்தோசமாக இருப்பாள். கௌதம் அப்படிதான் அவளைப் பார்த்துக் கொண்டான்.

பிறந்தநாள் அன்று அவன் தடுமாறியது உண்மை என்றபோதும் அதை காரணமாக வைத்து அவளோடு தினமும் உறவாடவில்லை. அவளின் மீது கொலைப்பழி விழுந்தபோது கூட, ‘என் மனைவி தவறு செய்யவில்லை. அதை என்னால் நிரூபிக்க முடியும்’ என்று சொன்னவனிடம் உண்மையை மறைத்துவிட்ட குற்ற உணர்வில் அவளின் கண்களில் கண்ணீர் பெருகியது.

அன்று நடந்த விஷயத்தை அவள் சொல்வதை பொறுமையாக கேட்ட கௌதமிற்கு மதுவின் மீது கோபம் வந்தது. மதியின் சத்தியம் அவளை கட்டிப்போட்டு இருப்பதை நினைத்து தன் கோபத்தைக் கட்டுபடுத்திக் கொண்டான்.

அவனின் நெஞ்சில் முகம் புதைத்த மது, “ஸாரி கௌதம் உன்னிடம் உண்மையைச் சொல்ல எனக்கு ஒரு நிமிஷம் போதும். ஆனால் மதிக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக மௌனமா இருந்தேன் கௌதம்” தன் செயலுக்கான காரணத்தை அவனிடம் சொன்னாள்.

கௌதம் அமைதியாக இருக்கவே, “உயிருக்கு உயிராக காதலிச்ச உன்னிடம் கூட உண்மையைச் சொல்ல முடியாமல் எப்படி தவிச்சேன் தெரியுமா? மதி இறந்த அன்னைக்கு நீ அழுத அழுகையை என்னால் மறக்கவே முடியாது. நான் உயிரோடு இருக்கும்போதே நீ எனக்காக அழுத இல்ல” என்றவளின் கண்களில் கண்ணீர் பெருகியது.

தனக்குள் புதைந்திருந்தவளை வலுக்கட்டாயமாக விலக்கிய கௌதம் அவளின் கண்களை இமைக்காமல் பார்த்து, “என்னைவிட நீதான் மது அதிக வலியும், வேதனையும் அனுபவிச்சி இருக்கிற! ஒருபக்கம் மதியின் மரணம், இன்னொரு பக்கம் என்னிடம் உண்மையைச் சொல்ல முடியாமல் நீ தவிச்ச தவிப்பு எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறீயா?” என்று அழுத்தத்துடன் கேட்டான்.

இத்தனை நாளும் அவள் அனுபவித்த வலிக்கும், வேதனைக்கு மருந்திடுவது போல இருந்தது கௌதமின் வார்த்தைகள். அவள் கால்களில் கண்ணீர் அருவியாக பெருகிட பேரு விரலால் கண்ணீரைத் துடைத்துவிட்டு நெஞ்சுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

மீண்டும் அவனின் மார்பில் முகம் புதைத்த மது, “என்னை எப்படி கண்டுபிடிச்ச கௌதம்! அன்னைக்கு அவ்வளவு தூரம் அழுதவன், வீட்டைவிட்டுப் போகும்போது கூட சொல்லாமல் போன.. அப்புறம் எப்படி இறந்தது நான் இல்ல மதின்னு கண்டுபிடிச்ச?” என்று கேட்டாள்.

அவளை விலக்கி அமர வைத்த கௌதம், “முதலில் ஒரு வாரம் உன் நடவடிக்கையில் வித்தியாசத்தை கண்டு பிடிக்க முடியல. ஆனால் அன்னைக்கு ரூமிற்கு நீ வந்து பேசிட்டுப் போனதுக்கு பிறகு உன் பார்வையும், பேச்சும் கண்டு மனசுக்குள் உறுத்தலாக இருந்தது. என்னை பார்த்தால் ஆயிரம் கதை சொல்லும் உன் விழிகளில் அன்னைக்கு என்னிடம் ஏதோ சொல்ல துடிப்பதைப் போல உணர்ந்தேன்” என்இவனை அவள் இமைக்காமல் பார்த்தாள்.

“அந்த பார்வை என்னை ரொம்பவே குழப்பவே சந்தேகத்துடன் மாடிக்கு வந்து பார்க்கும்போது நீ சத்தமே இல்லாமல் அழுதுட்டு இருந்தாய். என்னிடம் அழுகையே வரலன்னு சொல்லிட்டு வந்து நீ அழுததை பார்த்தும் என் சந்தேகம் தொடங்கியது” என்று சொல்லவே திகைப்புடன் அவனை பார்த்தாள்.

அன்று அவனிடம் சண்டைபோட்டுவிட்டு மாடிக்கு சென்ற மது, ‘தன் காதலனிடமே நடிக்க வேண்டி இருக்கிறதே’ என்று அழுதது இப்போது நினைவு வந்தது.

“அதுக்குபிறகு நான் வீட்டைவிட்டு கிளம்பிப்போகும் போது என்னை நீ தூரத்தில் நின்று பார்ப்பது போல உணர்ந்ய்ஹு பட்டுன்னு திருப்பிப் பார்த்தேன். வீட்டின் வாசலில் யாருமில்ல. ஆனால் அன்று நீ என்னோடு பேசும்போது அமர்ந்திருந்த்த ஜன்னலின் வழியாக உன் துப்பட்டா பறப்பதைக் கண்டு என் சந்தேகம் அதிகமாச்சு” என்றவன் சொல்லவே அப்போதேவா என்ற கேள்வி அவளின் மனதில் எழுந்தது.

“அந்த சம்பவத்திற்கு பிறகு நடுராத்திரியில் காட்டுக்குள் நாலு பேரை ஓடவிட்டது நீதான்னு உன்னை அங்கே பார்த்தும் புரிஞ்சிகிட்டேன். அதுக்குபிறகு பாட்டியின் இஷ்டத்திற்கு நீ உடனே கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னதில் என் சந்தேகம் உறுதியாகிருச்சு” அவன் சொல்லவே மது மெளனமாக அமர்ந்திருந்தாள்.

“முதலிரவு அன்னைக்கு நீங்க என்னை தொட்டால் நான் விலக மாட்டேன்னு சொன்னபோது, ‘அன்னைக்கு விபத்தில் இறந்தது மதின்னு’ முடிவே பண்ணிட்டேன்” என்றவுடன் சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் மது.

“அப்புறம் ஏன் என்னிடம் விலகியே இருந்தீங்க” என்று அவள் சந்தேகமாகவே கேட்டாள்.

“என்னதான் நீ இறக்கலா என்று மனசுக்கு நிம்மதி கிடைத்தபோதும் மதியின் இறப்பில் மறைந்திருந்த மர்மத்தை கண்டுபிடிக்க நினைச்சேன். உன்னிடம் கேட்டால் மதியாக நடிக்கும் நீ கண்டிப்பா உண்மையைச் சொல்லாமல் மறைப்ப என்று தெரிஞ்சே ரகசியமாக கேஸ் பைல் பண்ணி அந்த விபத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பிச்சேன் மது” என்றவன் குண்டைத்தூக்கி போடவே அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“நீங்க ஏன் இப்படி பண்ணினீங்க கௌதம்” என்றாள் மது கோபத்துடன்.

அவளை முறைத்த கௌதம், “அதுக்காக அவனை சும்மா விட சொல்றீயா மது? இவனை மாதிரி இன்னும் எத்தனை பேரு தப்பை செய்துவிட்டு தலை நிமிர்ந்து நடக்கறாங்க தெரியுமா” என்று கொதிப்புடன் கேட்டான்.

“நான் அப்படி சொல்லல கௌதம். வீட்டில் இருந்தவர்களுக்கு இந்த உண்மையெல்லாம் தெரிய வந்தால் என்ன ஆகுமோன்னு தான் அப்படி சொன்னேன்” அவனுக்கு புரியும்படி எடுத்துக் கூறினாள்.

கௌதம் போலீஸ் அவனுக்கு உண்மை தெரிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பான் என்று தெரிந்தும், “கௌதம் இந்த கேஸை க்ளோஸ் பண்ணிடுங்க. அவனுக்கு தான் அடிப்பட்டுவிட்டதே. நானும் சாகலன்னு உங்களுக்கு தெரிஞ்சிருச்சு இல்ல” என்று அவனிடம் கெஞ்சினாள்.

 “நீ சாகல என்ற காரணத்திற்காக கேஸை க்ளோஸ் பண்ண முடியாது மது. அந்த இடத்தில் நீ இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேனோ அதைத்தான் இப்பவும் செய்ய போறேன்” என்றபிறகு அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

மது தூங்கியபிறகு அவளை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அறைக்குள் நடைபயின்ற கௌதம் ஒரு முடிவுடன் தன் செல்போனை கையில் எடுத்து தனத்திற்கு அழைத்தான்.

வீட்டின் வேலைகளை முடித்துவிட்டு படுக்கைக்கு செல்லும்போது செல்போன் அடிக்கவே திரையில் தெரிந்த மகனின் பெயரைக்கண்டு உடனே போனை எடுத்தாள் தனம்.

“ஹலோ கௌதம் என்னடா இந்த நேரத்தில் போன் பண்ணியிருக்கிற?” என்று கேட்டவர் அங்கிருந்த படுக்கையில் அமரவே யுகேந்திரன் மனைவியைக் கேள்வியாக நோக்கினார்.

‘கௌதம்’ என்று சைகை செய்துவிட்டு, “என்னடா அமைதியாக இருக்கிற?” என்று அவனின் சிந்தனையைக் கலைத்தார்.

“இல்லம்மா நம்ம வீட்டில் யாராவது இறந்து போயிருக்காங்களா?” என்று யோசனையோடு கேட்டான்.

திடீரென்று இப்படியொரு கேள்வியை அவனிடமிருந்து எதிர்பார்க்காத  தனம், “ஏன் என்னாச்சு?” என்று கேட்டாள்.

“இல்லம்மா எனக்கு தெரிஞ்சுக்கணும். பிளீஸ் சொல்லுங்க அம்மா” அவன் காரணத்தை சொல்லாமல் மேலோட்டமாக கேட்டான்.

“ம்ம் இருபது வருஷத்துக்கு முன்னாடி எஸ்தர் கற்பழிக்கப்பட்டு இறந்தாள். அவ இறந்த கொஞ்சநாளில் ராஜேந்திரன் அண்ணாவும் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க. அவர் இறப்பதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னாள் தான் உன் அக்கா ஜெனி காணாமல் போனாள்” என்றவரின் கண்களில் கண்ணீர் பெருகிட முந்தானையால் கண்ணீரைத் துடைத்தார்.

‘ஜெனியா’ என்றவன் சிந்திக்கும்போதே, “உன்னை நான் போலீஸ் ஆக்கியதற்கு காரணமே ஜெனிதான். நீ போலீசானால் கண்டிப்பா அவளை தேடி கண்டுபிடிக்க சான்ஸ் இருக்குன்னு தான் உன்னை ராணுவத்திற்கு அனுப்பாமல் தடுத்தேன்” என்றவரின் குரல் கௌதமின் கவனத்தை ஈர்த்தது.

“ஜெனி அக்காவா?” என்று சிந்தனையோடு கேட்டான் கௌதம்.

“ஆமாண்டா உனக்கு அவளை ஞாபகம் இல்லையா? மதுவும், மதியும் பிறப்பதற்கு முன்னாடி நீயும், ஜெனியும் தான் எங்க எல்லோருக்கும் செல்ல பிள்ளைகள். அதுவும் உன்னை ஜெனிக்கு ரொம்ப பிடிக்கும். எந்த நேரமும் தம்பி என்று சொல்லி உன் பின்னாடியே சுத்தி வருவாள். அவ கூட இருந்தா நீ எங்களை எல்லாம் கண்டுக்கவே மாட்டா” என்று அந்த நாளின் நினைவில் சொல்லிக்கொண்டே சென்றாள் தனம்.

அவர் சொல்வதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட கௌதம், “அவங்க எப்படிம்மா திடீரென்று காணாமல் போனாங்க?” என்று சந்தேகத்துடன் கேட்டான்.

“ராஜேந்திரன் – எஸ்தரும் அவளை தத்தெடுத்து வளர்க்க நினைச்சாங்க கௌதம். அந்த நேரத்தில் தான் எஸ்தரை மகேஷ் கற்பழிப்பிச்சு கொன்றான். அன்னைக்கு மது ஆக்சிடெண்ட் நடந்த இடத்தில் தான் அதுவும் நடந்துச்சு” என்று தெளிவாக கூறவே கௌதம் புருவங்கள் முடிச்சிட்டது.

“அதுக்குபிறகு என்ன நடந்துச்சும்மா?” என்று அவன் நிதானமாக கேட்கவே, “எஸ்தரின் இறப்பை கேஸாக பதிவு பண்ணி விசாரணை நடந்து மகேஷ்க்கு மரண தண்டனை கொடுத்தான். அந்த கேஸில் முக்கியமான சாட்சியே உன் ஜெனி அக்காதான். அந்த வயதிலும் அவ நினைச்சதை மட்டும் நேர்மையாக செய்வாள்” என்றார்.

அவன் எதுவும் பேசாமல் இருக்கவே, “அந்த கேஸ் முடிஞ்ச கொஞ்சநாளில் ஜெனி யாரிடமும் சொல்லாமல் காணாமல் போயிட்டா. இந்த விஷயத்தை கேட்ட ராஜேந்திரன் அண்ணா ஊட்டியிலிருந்து வரும் வழியில் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க. அதன்பிறகு ஜெனி எங்கே தேடியும் கிடைக்கல” என்று விரக்தியுடன் கூறிய தனம் கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.

தன் மனைவியின் கையிலிருந்து போனை வாங்கிய யுகேந்திரன், “கௌதம் நீ போலீஸ்தானே? இப்போ ஜெனி எங்கே இருக்கான்னு கொஞ்சம் கண்டுபிடிப்பா. ரொம்ப நல்ல பொண்ணுடா. இந்நேரம் உன்னை மாதிரி படிச்சு பெரிய பொறுப்பில் இருப்பா என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. எங்களுக்காக அவளை கொஞ்சம் தேடி கண்டுபிடி கௌதம்” என்றார்.

“ம்ம் சரிங்க அப்பா” என்றவன் சிறிதுநேரம் பேசிவிட்டு போனை வைத்தபிறகு தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தான் கௌதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!