Thanimai – 11

Thanimai – 11
வாழ்க்கையின் விடிவெள்ளி
மறுநாளில் இருந்து பெற்றவர்கள் மகள்களின் வாழ்க்கையைக் கண்டும் காணாமல் கவனித்தனர். கீர்த்தி, மௌனி இருவரும் புகுந்த வீட்டில் இயல்பாக பொருத்தி போயினர். அத்தோடு நிர்மலா இருவரின் மீது சரிவிகிதமான அன்பை வெளிபடுத்துவதை கண்டவர்கள் திருப்தியுடன் ஊருக்கு கிளம்பிச் சென்றனர்.
ஆரம்பத்தில் திருமணம் வேண்டாமென்று சொன்ன கீர்த்தனாவின் முகம் இந்த ஒரு வாரமாக மலர்ந்திருப்பதை கண்ட செல்வியின் மனம் நிம்மதியடைந்தது. கடந்த சில வருடங்களாக கடவுளிடம் வேண்டியது நிறைவேறிய சந்தோசம் அவரின் முகத்தில் தெரிந்தது.
தன் மகள் அரவிந்தன் கையில் ஒப்படைத்தும், ‘இனி கீர்த்தி என்னோட பொறுப்பு மாமா’ என்றவன் சொன்ன வார்த்தைகள் அவரின் மனதிற்கு அமைதியைத் தந்தது. தன் உயிர் நண்பனின் மகனுக்கே பெண்ணை மணமுடித்து கொடுத்துவிட்டதால் எந்தவிதமான கவலையும் இன்றி மற்ற வேலைகளை கவனித்தார்.
அடுத்து வந்த ஒரு வாரம் ரெக்கைகட்டி பறந்தது.
விக்னேஷ் வழக்கம்போல ஆபீஸ் செல்ல, அரவிந்தன் மார்கெட் செல்ல தொடங்கினான். அதிகாலை பொழுது விடியும் முன்னரே எழுந்தவன் உதயாவின் தூக்கம் கலையாதபடி கீர்த்தியின் அருகே படுக்க வைத்தான்.
மகளோ தாயின் நெஞ்சில் முகம் புதைத்து தூக்கத்தை தொடர கீர்த்தியின் கரங்களோ அவளை அரவணைத்து கொண்டது. அவனின் பார்வையில் கீர்த்தி, உதயா இருவருமே குழந்தைகளாகவே தெரிந்தனர்.
மகளுக்கு வெளியுலகம் அறிந்து கொள்ளும் வயதில்லை. அனைத்தும் அறிந்த மனைவியோ மனதளவில் குழந்தையாக இருப்பதை நினைத்து அவனின் மனம் கனிந்தது. தன் வாழ்க்கையில் விடிவெள்ளியாக வந்த இருவரின் நெற்றியிலும் முத்தமிட்டு விலகியவன் குளியலறைக்குள் புகுந்தான்.
சிறிதுநேரத்தில் தயாராகி வந்தவன் ஒரு சீட்டில் மார்கெட் செல்லும் விஷயத்தை எழுதி வைத்துவிட்டு கிளம்பி சென்றுவிடவே ஆறுமணிபோல எழுந்தாள் கீர்த்தி.
அவளின் அருகே உதயா ஆழ்ந்த நித்திரையில் இருக்க, “என் செல்லம்” நெற்றில் இதழ்பதித்து எழுந்து சென்றவள் குளித்துவிட்டு வந்து வாசலை தெளித்து கோலம் போட்டுவிட்டு சமையலறைக்கு சென்றாள்.
காலை சமையலுக்கு ஏற்கனவே மாவு ஆட்டி வைத்திருந்ததால் இட்டிலியும், தேங்காய் சட்னி, தக்காளி சாம்பார் வைத்துவிட்டு ஹாலிற்கு வரும்போது, “அப்பா பால்” கண்ணை கசக்கிக்கொண்டு வந்தாள் உதயா.
அவளுக்கு பாலை ஆற்றி கொடுக்கும்போது உள்ளே நுழைந்த அரவிந்தனை கண்டவுடன், “என்னங்க அதுக்குள் வந்துட்டீங்க? இவ்வளவு சீக்கிரமாக வேலை முடிஞ்சிடுச்சா?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள்.
“ஆமா கீர்த்தி.. எனக்கு மார்க்கெட்டில் வெங்காய வியாபாரம் மொத்தமாக விவசாயிகளிடம் வாங்கி வியாபாரிகளுக்கு விற்பது என் வேலை. காலை நேரத்தில் மட்டும் வேலை இருக்கு. மற்ற நேரங்களில் இங்கே உதயாவோடு வீட்டில் இருப்பேன்” என்றான் புன்னகையோடு.
அவன் மகளிடம் பேச்சு கொடுக்க உதயா அவனோடு பேசியபடியே கீர்த்தி கொடுத்த பாலை அருந்தினாள். தந்தை – மகளுக்கான நெருக்கத்தை ரசித்தபடியே அவர்களின் எதிரே அமர்ந்தாள்.
திடீரென்று அவனின் படிப்பு பற்றிய கேள்வி மனதில் எழவே, “நீங்க என்ன படிச்சிருக்கீங்க..” என்றாள்.
“எம்.பி.ஏ” அரவிந்தன் சாதாரணமாக கூற அவளோ விழி விரிய அவனை பார்த்தாள்.
“இவ்வளவு படிச்சிட்டு இந்த வேலையை எப்படி பார்க்கிறீங்க?” என்றவுடன் அரவிந்தன் நிமிர்ந்து பார்க்க, ‘ஐயோ தேவையில்லாமல் கேட்டுடோமோ?’ நாக்கைக் கடித்துக்கொண்டு நிலம் நோக்கினாள் மனையாள்.
“இங்கே படிச்ச நிறையப்பேர் கௌரவம் பார்த்து வேலை கிடைக்காமல் சுத்திட்டு இருக்காங்க கீர்த்தி. இந்த தொழிலில் எனக்கு தினமும் கிட்டதட்ட ஐயாயிரம் இலாபம் கிடைக்குது. இந்த பணத்தில் உனக்கும், உதயாவிற்கும் நிறைய வாங்கி கொடுக்க முடியும்” அவன் தெளிவாக கூறவே அவளோ கலங்கிய கண்களோடு அவனை ஏறிட்டாள்.
அவன் பேசிய வார்த்தைகள் அவளின் உள்ளத்தை காயப்படுத்தி இருப்பதை உணர்ந்த அரவிந்தன் மகளிடம் ஏதோ சொல்ல, “கீத்தும்மா..” என்று அவளிடம் தாவி சென்ற உதயா கன்னங்களில் வழிந்த கண்ணீரை தன் பிஞ்சு கரங்களால் துடைத்துவிட்டது.
அடுத்த நொடியே, “அப்பா ஸாரி சொல்லு” என்று அவனுக்கு கட்டளையிட்டாள் மகள்.
அவனும் குறும்புடன் இரண்டு காதிலும் கை வைத்துகொண்டு, “கீர்த்தி நீ கேட்டதை நான் தவறா நினைக்கல. பட் என் பேச்சு உன்னை காயப்படுத்தி இருந்தால் மன்னிச்சுக்கோ” என்று பவ்வியமாக சொல்ல அவளையும் அறியாமல் உதடுகளில் புன்னகை அரும்பியது.
“தேங்க்ஸ் குட்டிமா” என்று உதயாவின் கன்னத்தில் முத்தமிட, “வியாக்” என்று அவள் எச்சிலை துடைப்பதைக் கண்டு கீர்த்தி வாய்விட்டு சிரிக்க மகளும் அவளோடு இணைத்து சிரித்தாள்.
வெகுநாட்களுக்கு பிறகு தன் வீட்டில் சிரிப்பொலி கேட்பதை நினைத்து மனநிறைவோடு எழுந்து அறைக்கு சென்றான்.
காலையில் நிர்மலா எழுந்திருக்கும் முன்னே எழுந்து சாப்பாட்டு வேலைகளை முடித்துவிட்டு அறைக்குள் நுழைந்தாள் மௌனிகா. விக்னேஷ் இன்னும் தூங்கி கொண்டிருக்க, ‘நைட் எல்லாம் என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டு இப்போது தூங்குவதை பாரு’ மனதினுள் கணவனை திட்டி தீர்த்தாள்.
“விக்கி எழுந்திரிங்க.. ஆபீஸ் போக நேரமாகுது” அவனின் தோள்தட்டி எழுப்பினாள்.
“மௌனி கண்ணெல்லாம் எரியுது.. பிளீஸ் கொஞ்சநேரம் தூங்கவிடு” திரும்பிப் படுத்து தன் தூக்கத்தை தொடர்ந்தான்.
“என்னவோ பண்ணுங்க..” என்று அறையைவிட்டு வெளியேற நிர்மலா காபி குடித்தபடி சோபாவில் அமர்ந்திருந்தார்.
மருமகள் இன்னும் தலைவாறாமல் இருப்பதை கண்டு, “மௌனி சீப்பு எடுத்துட்டு வாம்மா” என்று சொல்ல அவள் எடுத்து வந்து கொடுத்தாள்.
அவளை இழுத்து அமர வைத்து தலைவாரி பின்னலிட்டு, ‘பிரிஜ்ஜில் பூவிருக்கும் எடுத்து வை” என்று மருமகளை விரட்டினார்.
அவள் சரியென்று தலையசைத்துவிட்டு எழுந்து செல்ல அலுவலகம் தயாராகி வந்த மகனிடம், “ஏண்டா சீக்கிரம் எழுந்திருக்கிற பழக்கமே உனக்கு வராதா? மௌனி காலையில் இருந்து எவ்வளவு முறை எழுப்பினா” என்று திட்டி தீர்த்தார்.
“அம்மா வழக்கமா மருமகளை தான் சீக்கிரம் எழுந்திருக்கல என்று திட்டுவாங்க.. நீங்க என்ன மகனை திட்டுறீங்க?” என்று புரியாமல் கேட்டான் விக்னேஷ்.
“மருமகள் காலையில் எழுந்து வீட்டு வேலைகளை கவனிக்கிறா.. அவளுக்கு உதவி செய்ய வேண்டிய மகன் படுத்து தூங்கிட்டு இருந்தால் கடுப்பாகி திட்டாமல் என்ன செய்யறது” என்று எதார்த்தமாக கூறினார்.
“அம்மா இத்தனை நாளாக நீங்க தனியா வேலை செய்தீங்க.. அதுதான் உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணேன்.. இப்போதான் மௌனி செய்யறா இல்ல.. அப்புறம் எதுக்கு நான் சீக்கிரம் எழுந்திரிக்கனும்” என்று சாப்பிட அமர்ந்த மகனுக்கு பரிமாறிய மௌனியின் முகம் வாடிப் போனது.
“அவளும் தனியாக வேலை செய்யறா கண்ணா.. நான் செய்யும்போது குழம்பு, ரசத்துடன் நிறுத்திப்பேன். இப்போ அவ காலையில் ஒரு விதம் இரவுக்கு என்று விதவிதமாக செய்யறா. நல்லா சமைச்சிருக்கிறான்னு சொல்லி கொட்டிக்க தெரியுது இல்ல. அதுமாதிரி அவளுக்கு ஹெல்ப் பண்ணனும்னு ஏன்டா மகனே உனக்கு தோணவே இல்ல” கேள்வி எழுப்ப தன் தவறை புரிந்து கொண்டவன் மௌனியை நிமிர்ந்து பார்த்தான்.
இரவில் அவன் கொடுக்கும் தொல்லைகளில் தூக்கத்தை துறந்தபோதும் தன் தாயின் உடல்நிலை கருதி சீக்கிரம் எழுந்து வேலைகளை செய்யும் மனைவியின் மனம் அவனுக்கு புரிந்தது.
“ஸாரி” என்றவன் அவளையும் அமர வைத்து, “நாளையிலிருந்து நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன் ஓகே வா” என்று சொல்ல அதுவரை இருந்த சோர்வு மறைய புன்னகையோடு தலையசைத்தாள் மௌனிகா.
நிர்மலாவின் வீட்டில் விக்னேஷின் விருப்பங்கள் நிரகாரிக்கபட்டு மௌனிகா வைப்பதே சட்டமென்று ஆனது. காலையில் எழுந்து மாமியாரும், மருமகளும் பேசி சிரித்தபடி காலை உணவை தயார் செய்து விக்கியை அலுவலகம் அனுப்பிவிட்டு சற்று நேரம் கீர்த்தியின் வீட்டிற்கு சென்று பேசி கொண்டிருப்பார்கள்.
உதயாவுடன் விளையாடுவது மௌனிக்கும் பிடித்து போய்விட நேரம் கிடைக்கும்போதெல்லாம் பெண்கள் மூவரும் விளையாட நிர்மலா அவர்களுக்கு சாப்பிட சிற்றுண்டி செய்து கொடுப்பார்.
கீர்த்தனா வந்ததில் இருந்து அரவிந்தனுக்கு சற்று ஒய்வு கிடைக்கும் நேரங்களில் வெங்காயத்தை எடுத்து வந்து சுத்தம் செய்து வெயிலில் காயப்போட்டு எடுத்து வைப்பதில் நேரம் போனது.
அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் காலையில் உணவை முடித்துக்கொண்டு கீர்த்தி உதயாவிற்கு புதிய விளையாட்டை கற்று தருவதாக மகளை தூக்கி சென்றாள்.
கீர்த்தியைத் தேடி வந்த மௌனிகா சமையலறைக்குள் பாத்திரம் உருட்டும் சத்தம்கேட்டு உள்ளே நுழைய அங்கே அரவிந்தனைக் கண்டதும், “அண்ணா கீர்த்தி எங்கே?” என்றாள்.
பச்சை பயிரை தாளிக்க தேவையானவற்றை நறுக்கியபடி, “வீட்டுக்கு பின்னாடி இருப்பாங்க பாரும்மா” என்றவன் வேலையில் கவனத்தை பதித்திருந்தான்.
தாயும், மகளும் கண்ணாமூச்சி விளையாடும் சுவாரசியத்தில் ஒளிந்துகொள்ள இடம்தேடி பின்வாசலின் வழியாக வீட்டிற்குள் வந்த கீர்த்தி, “நான் அந்த ரூமில் ஒளிஞ்சிக்கிறேன். உதயாவிடம் சொல்லாதே” மௌனியிடம் சொல்லிவிட்டு படுக்கையறைக்குள் சென்று மறைந்தாள்.
அவளின் பின்னோடு வீட்டிற்குள் வந்த உதயா மௌனியிடம் சைகையால் விசாரிக்க உதட்டை பிதிக்கி, ‘நான் பார்க்கல’ என்று கையை விரித்தாள்.
அடுத்ததாக சமையலறைக்குள் இருந்த தந்தையின் அருகே சென்று, “கீத்தும்மா எங்கே” என கேட்க, ‘நான் பார்க்கல’ என்றான் சைகையில்.
அவள் உடனே ஓடிச்சென்று பிரிஜ்ஜில் வைத்திருந்த டைரி மில்க் சாக்லேட்டை அவனிடம் கொடுத்து, “இப்போ சொல்லுங்க அப்பா” என்றதும் அவனோ படுக்கையறையை நோக்கி கைகாட்டினான்.
வேகமாக ஓடிச்சென்று கீர்த்தியை கண்டுபிடித்து, “ஹைய்யா.. எனக்கு சாக்லேட் கொடு கீத்தும்மா” சந்தோஷத்தில் வானத்திற்கும் பூமிக்கும் உதயா துள்ளிக்குதிக்க, காலை தரையில் உதைத்தபடி அறையைவிட்டு வெளியே வந்தாள் மனைவி.
அரவிந்தன் கேலியாக புன்முறுவல் நோக்க, “உங்களால் எனக்கு ஒரு டைரி மில்க் லாஸ் தெரியுமா?” பிரிஜ்ஜில் இருந்த சாக்லேட்டை எடுத்து மகளிடம் நீட்டினாள்.
உதயா குஷியாக சாக்லேட்டை வாங்கிகொண்டு ஓட்டம் பிடிக்க, “இந்த இதை நீ சாப்பிடு” என்று மகள் தனக்கு கொடுத்ததை மனையாளிடம் கொடுத்தான் அரவிந்தன்.
அவளும் மகிழ்ச்சியோடு அதை வாங்கிகொண்டு மகளின் அருகே சென்று அமர்ந்து, “இங்கே பார்த்தியா” என்று சொல்லி குழந்தைக்கு ஈடாக பழிப்பு காட்டி சாப்பிடுவதை ஓரக்கண்ணால் ரசித்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தான்.
அதுவரை அங்கே நடந்ததை கவனித்த மௌனி, “இவ்வளவு நாளாக இந்த கீர்த்தியைத்தான் நாங்க தேடிட்டு இருந்தோம் அண்ணா. இவளை இப்படி பார்த்து நாலு வருஷத்திற்கு மேலாகுது. இப்படியொரு மாற்றத்தை எதிர்பார்க்கல அண்ணா” மகிழ்ச்சியில் மௌனியின் கண்கள் கலங்கியது.
மாடி படிக்கட்டில் மகளுடன் அமர்ந்து குழந்தைபோல சாக்லேட் சாப்பிடும் மனையாளை ஏறிட்டவன், “என்னை பொறுத்தவரை கீர்த்தி வளர்ந்த குழந்தைதான் மௌனி.. அவளை இப்படி பார்க்க உனக்கு மட்டுமல்ல எனக்குமே சந்தோசமாக இருக்கு” என்றான் சாதாரணமாக.
தன் தோழியிடம் வந்திருக்கும் மாற்றத்திற்கும் அரவிந்தனின் பதிலுக்கும் இடையே ஏதோவொரு தொடர்பு இருப்பது போல மௌனிக்கு தோன்றினாலும் அதை வெளிப்படையாக கேட்க அவளால் முடியவில்லை.
அன்று இரவு உணவை முடித்து படுக்கை அறைக்குள் நுழைந்த விக்னேஷிடம் அன்று நடந்ததை கூறினாள்.
“கல்லூரி முதல் வருஷம் இவ இப்படித்தான் துறுதுறுன்னு இருப்பாங்க. செகேன்ட் இயரில் இருந்துதான் அவளின் நடவடிக்கை முற்றிலும் மாறிப்போனது. இப்போ கல்யாணம் பற்றி பேசும்போதெல்லாம் வேண்டான்னு சொல்லிட்டு இருந்தவ அண்ணனை பார்த்தும் எப்படி சம்மதிச்சன்னு சத்தியமா புரியல” என்று தன் போக்கில் புலம்பினாள்.
அவளை மார்போடு இழுத்து அணைத்து கொண்ட விக்கி, “அரவிந்தனும் அதே நிலையில்தான் இருந்தான் மௌனி. ஒற்றை குழந்தையை தனியாக வளர்ப்பது எவ்வளவு பெரிய சவால் தெரியுமா? அப்போதெல்லாம் திருமணம் பற்றி யோசிக்காதவனை போராடி சம்மதிக்க வைத்தது எங்க அம்மாதான்” சற்று இடைவெளிவிட மௌனி அவனை கேள்வியாக ஏறிட்டாள்.
“கீர்த்தனா போட்டோவை கொடுத்தவர் அவளோட கண்டிசன் பற்றி சொன்னதும் இந்த பொண்ணு ஓகேன்னு சொன்னான். கீர்த்தனா இப்படி சிரித்து சந்தோசமாக இருப்பதை பார்த்து ரொம்பநாள் ஆச்சுன்னு சொல்ற. எனக்கு என்னவோ அரவிந்தன் மீதுதான் சந்தேகமாக இருக்கு” என்ற கணவனை புரியாத பார்வை பார்த்தாள்.
அவளின் பார்வைக்கான அர்த்தம் புரிந்து, “முதல் மனைவி இறந்ததை மறந்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்வது கட்டாயத்தின் பெயரில் தான். இல்லையென்றால் தன் பிள்ளைகளின் எதிர்காலம் நினைத்து முடிவெடுப்பாங்க. ஆனால் அரவிந்தன் விஷயத்தில் இந்த இரண்டுமே இல்ல” என்று சொல்ல மௌனிக்கும் ஏதோ புரிவதுபோல இருந்தது.
“உதயாவை கை குழந்தையில் இருந்து வளர்த்தவனுக்கு இப்போது கீர்த்தியின் துணை தேவையில்லை. அதற்காக யாருடைய கட்டாயத்திற்காகவும் அவன் திருமணம் செய்யல. அதைக்கடந்து அவங்க இருவருக்குள் ஏதோ தொடர்பு இருக்கு. இவ்வளவு இயல்பாக ஒரு பெண்ணுடன் அரவிந்தன் பழகி நான் பார்த்ததே இல்ல” என்று சொல்ல சிந்தனையில் ஆழ்ந்தாள் மௌனிகா.
ஆனால் கடைசியில் இருவருக்கும் இடையே யார் பலமாக இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு அவர்களால் விடை கண்டறிய முடியவில்லை. நாட்கள் ரெக்கை கட்டி பறக்க தொடங்கியது. அரவிந்தன் – கீர்த்தனாவின் வாழ்க்கை சக்கரம் உதயாவினால் இனிமையாக நகர தொடங்கியது.
விக்னேஷ் – மௌனிகாவின் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. நிர்மலா இரண்டுபேரும் ஒற்றுமையுடன் வாழ்வதை கண்டு மனநிறைவை அடைந்தபோது பேரக்குழந்தையை எதிர்பார்க்கிறார் என்ற ஏக்கம் அவர் கண்களில் தெரிந்தது.
மற்றொரு பக்கம் கீர்த்தனாவின் தாயான செல்வியும் மகளிடம், ‘விசேஷம் ஏதாவது இருக்கிறதா?’ கேள்வி எழுப்ப அவளும் வாய்க்கு வந்த பொய்யை சொல்லி சமாளித்தாள். இருவரின் வாழ்க்கையும் தெளிந்த நீரோடை போல அமைதியாக நகர்ந்தது.