Thanimai – 12

Thanimai – 12
எதிர்பாராத அதிர்ச்சி
அன்றைய காலைபொழுது வழக்கம்போலவே அழகாக விடிந்தது. சீக்கிரம் கண்விழித்த அரவிந்தனின் மனம் பழைய நினைவுகளில் சிக்கி சருகானது. தன் இரு தோள்களில் தூங்கும் மனைவி, மகளின் முகத்தை பார்த்தபடி அமைதியாக படுத்திருந்தான்.
சிறிதுநேரத்தில் ஒரு பெருமூச்சுடன் அவர்களைவிட்டு விலகி எழுந்தவன் குடித்ததும் மாடிக்கு சென்றான். கிழக்கு வானம் செவ்வானமாக மாறுவதைக் காண அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.
அவனின் மனதில் இதழினியின் பளிங்குமுகம் தோன்றி மறைய தன்னை மறந்து காற்றின் மணிகள் (விண்ட் சைம்) மீது பார்வை பதித்தான். அந்தரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த விண்ட் சைம் காற்றில் அசைந்து ஒன்றோடு ஒன்று மோதி மெல்லிய ஓசையை எழுப்பியது.
காலைநேரத்தில் இதமான காற்றும் உடலை தழுவி சென்றுவிட மணியோசை கேட்டு மனதின் துயரங்கள் தூரம் சொன்றது. தன் மனதை ஒருநிலைப்படுத்தி விழிதிறந்து பார்க்கும் போது கிழக்கில் தன் பயணத்தை தொடங்கியிருந்தான் கதிரவன்.
பறவைகள் இரைதேடி பறந்து செல்ல பக்கத்து கோவிலில் இருக்கும் மணியோசை சத்தமாக ஒலித்து இறைவனுக்கு பூஜை நடப்பதை நினைவுபடுத்திவிட்டு சென்றது. அரவிந்தன் எழுந்து கீழிறங்கி வந்தவன் வழக்கம்போலவே அவளுக்கு ஒரு சீட்டில் தகவலை எழுதி வைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
சீக்கிரம் எழுந்த கீர்த்தி வழக்கம்போல தன் வேலையைத் தொடர்ந்தாள்.
மற்றொரு பக்கம் விக்னேஷ் – மௌனிகா இருவருக்கும் குழந்தை வரம் வேண்டுமென்று வேண்டிக்கொண்டு பழனிக்கு பாதயாத்திரை கிளம்பி சென்றனர் தேவகியும், நிர்மலாவும்!
தன் மாமியார் இல்லாத காரணத்தினால் அனைத்து வேலைகளையும் தனியொரு ஆளாக அவளே சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவே விக்னேஷ் பகுதிநேரம் வேலைக்கு விடுப்பு எடுத்துகொண்டு மனைவிக்கு உறுதுணையாக வீட்டின் மற்ற வேலைகளை கவனித்தான்.
மௌனியின் கல்லூரி ஆல்பம் கைக்கு கிடைக்கவே, “மௌனி” என்ற அழைப்புடன் ஹாலுக்கு செல்ல, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஓய்வாக அமரவும் சரியாக இருந்தது.
கணவனின் கையிலிருந்த ஆல்பத்தை கண்டவுடன், “இந்த போட்டோஸ் இன்னும் நீங்க பார்க்கல இல்ல. இதில் நான் வின் பண்ணிய பரிசுகள், கோப்பைகள், அப்புறம் வழக்கம்போல எங்க பட்டாளம் ஆர்ப்பட்டம்னு ரொம்ப அழகான நினைவுகளை உள்ளடக்கிய ஆல்பம்” என்று அவனிடமிருந்து வாங்கினாள்.
“எங்க காலேஜ் போட்டோஸ் எல்லாமே ஹாஸ்டல் ரூம் காலி பண்ணும்போது மிஸ் பண்ணிட்டோம். சரி உன் ஆல்பத்தை காட்டு யாரெல்லாம் இருக்காங்கன்னு பார்க்கலாம்” சோகமாக கூறியவன் அவளின் ஆல்பத்தை பிரித்து பார்த்தான்.
ஒவ்வொரு புகைப்படமாக காட்டி நிகழ்வுகளை பகிர்ந்தவள் கலெக்டர் கையால் பரிசு வாங்கிய புகைப்படத்தைக் காணாமல்,“இதில் தானே வைத்திருந்தேன்” என்று யோசனையோடு அடுத்தடுத்து புகைப்படங்களில் வேகமாக தேடினாள்.
“அந்த போட்டோ இல்லன்னா விடு” விக்னேஷ் சாதாரணமாக சொல்ல,
“அதெல்லாம் முடியாதுங்க. அது செக்கேன்ட் இயர்ல ஆகஸ்ட் பதினைந்தில் நடந்த போட்டியில் கலந்துகிட்டு கலெக்டர் கையால் வாங்கியதை மட்டும் காணோம்” என்றவளின் மனதில் திடீரென்று அந்த நினைவு தோன்றியது.
“விக்கி அந்த போட்டோவை பேப்பரில் கூட போட்டு இருந்தாங்க. நம்ம கீர்த்திக்கு நியூ பேப்பர் சேகரித்து வைப்பது ஒரு ஹாபி. அவளிடம் இருக்கான்னு கேட்டுட்டு வரேன்” எழுந்து அரவிந்தன் வீடு நோக்கி விரைந்தாள்.
ஒரு போட்டோவிற்காக தன்னவள் பண்ணும் அலப்பறையைக் கண்டு சிரித்தவன், “ஹே நில்லு நானும் வரேன்” வீட்டைப் பூட்டிவிட்டு அவளை பின் தொடர்ந்தான்.
நேராக வீட்டிற்குள் சென்றவள், “கீர்த்தி” என்றழைத்தாள்.
“என்ன மௌனி..” என்ற கேள்வியோடு வெளியே வந்தவளின் முகத்தில் வாண்டு செய்து வைத்திருந்த வேலையைப் பார்த்து வாய்விட்டு சிரித்தாள்.
தன் தோழி சிரிப்பதை கண்ட சின்னவளின் முகம் வாடிவிட, “நான் நல்ல வரையவில்லையா கீத்தும்மா” கவலையோடு தாயின் முகம் பார்த்தாள்.
“என் உதிக்குட்டி அழகாக வரைஞ்சிருக்கீங்கடா. உன் அத்தைக்கு பொறாமை. அதுதான் வேணும்னே கிண்டல் பண்ற மாதிரி சிரிக்கிறா” என்று பழியை தூக்கி மௌனியின் தலையில் போட்டு மகளை சமாதானம் செய்தாள்.
அவள் அதற்கும் சிரிக்க, “ஏய் சிரிக்காமல் எதுக்கு கூப்பிட்டன்னு சொல்லு” என்று கீர்த்தி கோபத்துடன் அதட்டினாள்.
“இது என்ன அம்மாவும், மகளும் பெயிண்டிங் பண்றீங்களோ? என்னால் இந்த கொடுமையைப் பார்க்க முடியாது. எனக்கு ஒரு பேப்பர் வேணும்” மொட்டையாக சொல்ல கீர்த்தியோ திருதிருவென்று விழித்தாள்.
அவளின் பார்வைக்கான அர்த்தம் புரிந்த மௌனி நாக்கைக் கடித்தபடி, “நான் காலேஜ் படிக்கும்போது கலெக்டர் கையால் வாங்கிய பரிசு போட்டோவை எங்கயோ மிஸ் பண்ணிட்டேன். உன்னிடம் பேப்பர் கலெக்சன் இருக்கு இல்ல. அதில் கொஞ்சம் தேடி பார்த்து எடுத்து கொடுடி” என்றாள்.
“ம்ஹும் அந்த பேப்பர் இருக்கான்னு தெரியல. நீ எதுக்கும் வெயிட் பண்ணுடி நான் ரூமில் தேடிபார்த்துட்டு வரேன்” என்று சொன்ன கீர்த்தி வேகமாக மாடியேறிச் சென்றாள்.
தாய் அங்கிருந்து நகர்ந்ததும், “அத்தை நீ உட்காரு” என்று மௌனியை அமர வைத்து பேஸில் வர்ணங்களை பூச தொடங்கினாள்.
சிறிதுநேரத்தில் அங்கே வந்த விக்கி சிரித்தபடி மனையாளின் அருகே அமர்ந்தான். காலேஜ் படிக்கும்போது ஆர்வமாக தொடங்கிய பேப்பர் கலெக்சன். அதில் இருக்கும் தகவல்களுக்காக சேகரிக்க ஆரம்பித்து அதுவே ஒரு வேலையாக மாறிப்போனது. ஒரு ரூம் முழுவதும் அதற்காகவே ஒதுக்கி கொடுத்திருந்தான் அரவிந்தன்.
அங்கிருக்கும் ஒவ்வொரு பண்டலிலும் பொறுமையாக தேடினாள். நேரம் கடந்ததே தவிர மௌனிகா கூறிய தேதியுடைய பேப்பர் மட்டும் கீர்த்தியின் கைக்கு கிடைக்கவில்லை. கடைசியாக அவள் தேடிய பேப்பர் கிடைக்கவே உற்சாகத்துடன் கீழிறங்கி சென்றாள்.
அரவிந்தன் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நாளும், அந்த நிகழ்வும் அந்த பேப்பரில் இடம்பெற்று இருக்கும் விஷயம் அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
“மௌனிகா இதுதானே நீ தேடிய பேப்பர்” என்ற கேள்வியுடன் ஹாலுக்கு வந்தாள்.
அங்கே தன் மகள் செய்து வைத்திருந்த வேலையைக் கண்டு, “உங்களையும் இவ விட்டு வைக்கலயா?” என்றவள் மௌனிகா பரிசு வாங்கிய பக்கத்தைத் தேட தொடங்கும் முன்பே அவளிடமிருந்து அவசரமாக பேப்பரைப் பிடுங்கி ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டினாள்.
அவளின் கண்களுக்கு அந்த நிகழ்வு தட்டுபடாமல் போகவே, “எந்தப்பக்கம் போட்டாங்கன்னு கண்டுபிடிக்கவே முடியலங்க” என்று புலம்பிய மனைவியிடமிருந்து பேப்பரை வாங்கி கீர்த்தியிடம் கொடுத்தான் விக்னேஷ்.
“நீ தேடும்மா. இவளோட அவசரத்திற்கு எதுவும் கிடைக்காது” மனையாளை முறைத்துவிட்டு உதயாவிடம் விளையாட தொடங்கினான்.
மீண்டும் கீர்த்தி நிதானமாக தேட நான்காவது பக்கத்தின் இடது புறம் மௌனிகா கலெக்டரிடம் பரிசு வாங்கும் காட்சி புகைப்படமாக போட்டபட்டு இருப்பதை கண்டு, “இங்கே பாருங்க அண்ணா” என்று விக்னேஷிடம் பேப்பரை கொடுத்தாள் கீர்த்தனா.
அவன் அந்த பகுதியை வாசித்துவிட்டு, “மௌனி நீ செம ஆளுதான் போலவே.. கலெக்டரிடம் முதல் பரிசெல்லாம் வாங்கியிருக்கிற” என்று மனையாளை பாராட்டினான்.
அப்போதுதான் வெளியே சென்றிருந்த அரவிந்தன், “என்ன விஷயம் பாராட்டெல்லாம் பலமாக இருக்கு” வீட்டிற்குள் நுழைந்தான். அவனை நிமிர்ந்து பார்த்த கீர்த்தி சட்டென்று அவன் முகம் மாறுதலை கவனித்தாள்.
அரவிந்தன் எப்போதும் உற்சாகமாக வலம் வருவான். இன்று அவனிடம் ஏதோவொரு மாற்றம் தெரிவதையும், விழிகள் கூட லேசாக சிவந்திருப்பதை கண்டு, “என்னங்க ஒரு மாதிரி இருக்கீங்க? மார்க்கெட்டில் ஏதாவது பிரச்சனையா?” என்று அக்கறையுடன் விசாரித்தாள்.
மறுப்பாக தலையசைத்துவிட்டு மகளைத் தூக்கி முத்தமிட்டு விக்னேஷ் அருகே அமர, “நான் காலேஜ் படிக்கும்போது கலெக்டரிடம் பரிசு வாங்கிய போட்டோ பேப்பரில் பார்த்து பாராட்டி இருக்கார் அண்ணா” விஷயத்தை கூறினாள் மௌனிகா.
அரவிந்தனும் பாராட்டிவிட்டு அவளின் கையிலிருந்து பேப்பரை வாங்கி வாசித்துவிட்டு அடுத்த பக்கத்தில் பார்வையைத் திருப்பினான். அந்தப்பக்கத்தில் போடப்பட்டிருந்த நியூஸ் பார்த்தும் இதயத்தை யாரோ கசக்கி பிழிவது போன்ற வலியைக் கொடுத்தது.
தன் மனவலியை மறைத்துக்கொண்டு எதுவும் பேசாமல் எழுந்து மாடிக்கு சென்றுவிட்டான். நால்வரின் கவனமும் பேப்பரின் சுவாரசியத்தில் இருந்ததால் அவன் சென்றதை யாரும் கவனிக்கவில்லை.
கீர்த்தனா பேச்சின் இடையே அரவிந்தனை காணாமல், ‘எங்கே எழுந்து போனார்’ என்ற யோசனையில் அமர்ந்தாள். கடைசியாக அவனிடம் பேப்பரை படிக்க கொடுத்தது நினைவு வரவே சட்டென்று அந்த நாளிதழை எடுத்து அவரசமாக வாசித்தாள்.
மௌனிகா முதல் பரிசு வாங்கியதற்கு அடுத்த பக்கத்தில் பார்வையை பதித்த கீர்த்தியின் இதயம் பதறியது. சென்னை – விழுப்புரம் செல்லும் ரோட்டில் நடந்த பஸ் ஆக்ஸிடென்ட்டில் ஏற்பட்ட விபத்து பற்றி புகைப்படங்களோடு கொடுக்கப்பட்டிருந்தது.
அதில் ஒரு புகைப்படத்தில் அரவிந்தன் ஒரு பெண்ணை கையில் ஏந்திகொண்டு செல்வது போன்ற காட்சி இருக்க, ‘தன் மனைவியை காப்பாற்ற துடிக்கும் கணவன்’ என்று எழுதப்பட்டிருந்தது.
அந்த செய்தியைப் படித்தவளின் மனதிலும் வலி ஏற்படவே, ‘இந்த பேப்பர் இத்தனை நாளாக என்னிடம் இருக்கு. ஆனால் இந்த விஷயம் அறியாமல் இருந்திருக்கிறேனே’ என்றவளின் பார்வை தற்செயலாக காலண்டரின் மீது படிந்தது.
சட்டென்று மனதில் ஏதோவொரு வேகம் தோன்ற கீர்த்தி தன் கையிலிருக்கும் பேப்பரின் தேதியைப் பார்த்தாள். விபத்து நடந்த நாளும், அன்றைய தேதியும் ஒரே நாளாக இருந்தது.
தனக்கு தேவையான ஒவ்வொன்றையும் ஒரு பார்வையில் புரிந்துகொண்டு நிறைவேற்றி வைக்கும் கணவனின் மனதில் இவ்வளவு பெரிய காயமிருக்கும் என்று அவள் நினைக்கவில்லை. சற்றுமுன் அவள் கேட்ட கேள்விக்கு அவன் கொடுத்த பதில் இப்போது முரணாக தோன்றியது.
அதன்பிறகு விக்னேஷ் – மௌனிகா பேசிய எதுவும் அவள் மனதில் பதியவில்லை. ஒரு செய்தி போல வாசித்த தனக்குள் இப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயம் அவனுக்குள் எவ்வளவு பெரிய பிரளயத்தை உருவாக்கி இருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள்.
இதற்கிடையே கணவனும், மனைவியும் அவளிடம் விடைப்பெற்று சென்றதை கூட அவள் கவனிக்கவில்லை. அதை கவனிக்கும் மனநிலையில் அவளில்லை என்று சொல்லலாம்.
அதைக் கண்ட கீர்த்தியின் மனம் வேகமாக துடிக்க, ‘அப்போ அவரின் முக மாறுதலுக்கு இதுதான் காரணமா? இது தெரியாமல் மக்கு மாதிரி இருந்திருக்கிறேனே’ அவளின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. தன்னை உலுக்கிய மகளின் விரல் ஸ்பரிசத்தில் நடப்பிற்கு திரும்பியது கீர்த்தனாவின் மனம்.
அவளின் மடியில் நின்றுகொண்டு, “கீத்தும்மா பசிக்குது” என்ற மகளுக்கு உணவை ஊட்டிவிட்டு படுக்கையில் படுக்க வைத்தாள். சிறிதுநேரத்தில் உதயா ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல வேகமாக படியேறி மாடிக்கு சென்றாள்.
அரவிந்தன் காற்றில் ஆடும் விண்ட் சைம் மீது பார்வையை பதித்தபடி அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தான். சூரிய வெளிச்சம் வீட்டில் பரவியிருந்தது. தென்னங்கீற்றின் சலசலப்பும், விண்ட் சைம் செயின் ஓசையும் மெதுவாக கேட்டது.
அவனின் எதிரே சென்று அமர்ந்த கீர்த்தனா தயக்கத்துடன், “ஸாரிங்க அந்த பேப்பரில் இப்போதான் நியூஸ் பார்த்தேன். அதை பார்த்தும் உங்க மனசு வருத்தப்படும்னு தெரிந்திருந்தால் கண்டிப்பாக அந்த பேப்பரை உங்களிடம் கொடுத்திருக்க மாட்டேன்” என்றவளை எந்தவிதமான சலனமும் இன்றி நிமிர்ந்து பார்த்தான்.
தன் மனவருத்தத்தை புரிந்துகொண்டு அதற்காக அவளே வந்து மன்னிப்பு கேட்பது ஏதோவொரு விதத்தில் அவனின் மனதிற்கு நிம்மதியைக் கொடுத்தது. அரவிந்தன் எந்தநேரமும் சிரிப்புடன் இருந்ததால் அவனின் பின்னோடு மறைந்திருக்கும் காயத்தின் வீரியத்தை அறியாத கீர்த்தனாவின் பார்வை அவனின் மீது படிந்தது.
முகம் சற்று தெளிந்திருந்த போதும் சிறு வருத்தம் தென்படவே செய்தது. கீர்த்தியின் பேச்சு அவனுக்குள் இருக்கும் காயத்திற்கு மருந்தாக மாறுவதை உணர்ந்தவன் சிறிதுநேரம் அவளை பார்த்தபடி மெளனமாக இருந்தான்.
தன்னவளின் பார்வைக்கான அர்த்தம் புரிந்து, “அந்த பேப்பரில் பார்க்காமல் இருந்திருந்தால் மட்டும் இந்த தேதியை மறந்துவிடுவேனா கீர்த்தி” என்று சாதாரணமாக கேட்டான்.
என்ன பதில் சொல்வதென்று புரியாமல் அவள் தடுமாறிட, “உனக்கு என் கடந்தகால வாழ்க்கை பற்றி என்ன தெரியும்?” என்றான்.
அவள் எதுவும் தெரியாதென்று இடமும் வலமும் தலையசைத்துவிட்டு, “உங்க குடும்பத்தை ஒரு விபத்தில் இழந்துவிட்டதாக அப்பா சொன்னாரு. அது மட்டும்தான் தெரியும்” என்று நினைவு வந்தவளாக அவசரமாக பதிலளித்தாள்.
அவளை ஊடுருவிப் பார்த்தவன், “என் கடந்த காலத்தை உன்னிடம் சொன்னால் நீ தவறாக நினைக்க மாட்டியே” அவன் மீண்டும் கேட்க இடமும், வலமும் தலையசைத்தாள்.
“என்னிடம் சொல்வதால் உங்க மனசுக்கு ஆறுதலாக இருக்குமென்று நினைச்சா சொல்லுங்க. யாரிடமும் சொல்லி ஆறுதல் தேட முடியாமல் தனிமையை நாடி செல்வோம். அப்படிபட்ட தருணத்தில் மனநிலை எப்படி இருக்கும்னு எனக்கும் தெரியும்” என்றவள் அவன் பேசட்டுமென்று மௌனமாகிவிட்டாள்.
சிறிதுநேரம் இருவருக்கும் இடையே மௌனம் நிலவியது.
“நீ சொல்வதும் சரிதான் கீர்த்தி. நம்ம மனசில் இருப்பதை சொல்ல கூட ஆளில்லாத தனிமையை இங்கே இருக்கிற ஒவ்வொருவரும் ஏதோவொரு சூழ்நிலையில் அனுபவிச்சிருப்பாங்க. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சிரிச்சிட்டே கடந்து வர நினைக்கும் நானுமே அப்படியொரு தனிமையை அனுபவிச்சேன்” என்றவன் சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.
“என் வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப்போட்ட விபத்தை நினைத்தால் இன்னைக்கும் மனசு படபடன்னு அடிச்சுக்கும். நம்ம உயிராக நேசித்தவர்களை இரத்த வெள்ளத்தில் சாவின் கடைசி தருணத்தில் பார்க்கும் கொடுமை யாருக்குமே வரக்கூடாது கீர்த்தி” அன்றைய நாளின் நினைவில் கூறினான்.
கடந்தகாலம் மனக்கண்ணில் படமாக விரிந்திட நிகழ்காலத்தை மறந்து கடந்த காலத்தை நோக்கி பயணித்தது அவனின் மனம்.