Thanimai – 20

4e7fa4f9861e9579be8b140d49241715-be6a5619

Thanimai – 20

மேகலாவின் வருகை

அன்று காலையில் சமையலறையில் வேலையில் ஈடுபட்டிருந்த கீர்த்தனா மயங்கி சரிய, “அப்பா அம்மா மயக்கம்போட்டு விழுந்துட்டாங்க” என்று கத்திய உதயா தாயின் கன்னத்தை தன் பிஞ்சு கரங்களில் எழுப்ப முயற்சி செய்ய சத்தம்கேட்டு ஓடி வந்தான் அரவிந்தன்.

கீர்த்தனா மயங்கி விழுந்ததை கண்டு மகளின் அழுகை அதிகமாக, “அம்மாவுக்கு ஒண்ணுமில்ல பயப்படாத உதயா” என்றவன் மனையாளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப மெல்ல கண்விழித்தாள் கீர்த்தனா.

பிறகு மகளை நிர்மலாவிடம் விட்டுவிட்டு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அவளை பரிசோதனை செய்த டாக்டர் கர்ப்பத்தை உறுதி செய்தனர்.

தங்களின் அன்பை பறைசாற்றிட வந்த புது வரவினை எண்ணி மகிழ்ந்தவளின் கரங்களை பிடித்த அரவிந்தன் விழிகள் சந்தோஷத்தில் கலங்கிட, அதைக்கண்டு சிரிக்க முயன்ற கீர்த்தனாவின் விழிகளிலும் கண்ணீர் ஊற்றேடுத்தது.

மருத்துவமனையில் இருந்து திரும்பிய இருவரும் மற்றவர்களிடம் விஷயத்தைக் கூற, “ஹே வாழ்த்துகள்” என்று விக்னேஷ் மற்றும் மௌனிகா இருவரும் வாழ்த்தினர்.

நிர்மலாவின் கீர்த்தனாவின் தலையை வருடிவிட்டு மருகரத்தினால் அரவிந்தனின் கையைப்பிடித்து, “சந்தோசமாக இருக்கு” என்றார்.

இருவரும் விஷயத்தை மகளிடம் கூற, “ஹைய்யா என்கூட விளையாட தம்பி வர போறானே” என ஆர்பரித்த மகளைத் தூக்கி சுற்றி இறக்கிவிட்டான்.

அந்த மாத இறுதியில் தேவகி வந்து தன் மகளுக்கு வளைகாப்பு போட்டு மகளை அழைத்து சென்றார். அதைக்கண்ட கீர்த்தனா மனதில் பெற்றவர்களின் முகம் மின்னி மறைந்தது. அவளின் கண்களில் ஏக்கத்தை கண்ட அரவிந்தன் அவளின் வீட்டினரிடம் பேச நினைத்தான்.

அவனை வேண்டாமென்று தடுத்த கீர்த்தி, “அவங்களே புரிஞ்சிகிட்டு வரட்டும் விடுங்க ரவி” என்றாள் சாதாரணமாக. அதன்பிறகு அவன் அதைபற்றி பேசவில்லை.

இந்நிலையில், பக்கத்து வீட்டை காலி செய்து பொறுப்பை அரவிந்தனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டு ஓனர் சொந்த ஊருக்கு பயணமானார். அந்த ஏரியாவில் வீடு வாடகைக்கு கிடைக்குமா என விசாரிக்க வந்த வயதான பெண்மணியின் கண்களில் விழுந்தது அந்த போர்டு.

மளிகை கடைக்கு சென்று திரும்பிய நிர்மலாவிடம், “இந்த வீடு யாரோட பொறுப்பில் இருக்குங்க” என வீட்டைக் கைகாட்டி விசாரித்தார்.

“பக்கத்து வீட்டில் இருக்கும் அரவிந்தனிடம் சாவி இருக்கு. அவன் மனைவி கீர்த்தனாகிட்ட கேளுங்க” என்றவர் சொல்ல சரியென தலையசைத்துவிட்டு வீடு நோக்கி சென்றார்.

வீடு திறந்திருக்க வாசலில் விளையாடிக்கொண்டு இருந்த உதயாவிடம், “பாப்பா உங்க அம்மாவை கூப்பிடுமா” என்றார்.

“கீத்தும்மா” என்ற அழைப்புடன் வீட்டிற்குள் ஓடியவள் வரும்போது தாயுடன் வந்தாள். வாசலில் நின்றிருந்தவரை கண்டவுடன் கீர்த்தி இன்ப அதிர்ச்சியில் உறைந்தாள். அவளைக் கண்ட வயதான பெண்மணியின் முகத்திலும் சந்தோசம் கீற்றாக பரவியது.

வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு மார்க்கெட்டில் இருந்து வீடு திரும்பிய அரவிந்தன் வாசலில் யாரோ நிற்பதைக் கண்டு, “உங்களுக்கு யார் வேணும்” என்றவனின் குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்டாள் கீர்த்தனா.

“பக்கத்து வீடு வாடகைக்கு விடுவதாக போர்டு பார்த்தேன் தம்பி. வீட்டு சாவி கொடுத்தால் கொஞ்சம் வசதியாக இருக்கும்” என்றவரை அடையாளம் கண்டு கொண்டவனின் கண்ணில் மின்னல் தோன்றி மறைந்தது.

“இதோ இருங்க சாவி எடுத்துட்டு வரேன்” என வீட்டிற்குள் விரைய,

அவரின் அருகே வந்த கீர்த்தனா, “அம்மா எப்படி இருக்கீங்க” என விசாரிக்க பாசத்துடன் அவளின் தலையை வருடியவரின் கண்கள் லேசாக கலங்கியது.

“நான் நல்ல இருக்கேன் கீர்த்தி. நீ எப்படி இருக்கிற?” என்றவரின் பார்வை அவளின் கையிருந்த குழந்தையின் மீது கேள்வியாகப் படிந்து மீண்டது.

“ம்ஹும் நான் நல்ல இருக்கேன் அம்மா” என்றாள்.

அதற்குள் சாவியுடன் வந்த கணவனை கைகாட்டி, “இவர் என்னோட கணவர் அரவிந்தன். இது என்னோட மகள் உதயா” என்று அவருக்கு அறிமுகப்படுத்தினாள்.

அவனின் முகத்தை ஆழ்ந்து கவனித்த மேகலாவிற்கு அவனின் முகம் பரீட்சையமான முகமாக தோன்றியது. வயதான காரணத்தினால் ஞாபகம் மறந்திருக்க, “சந்தோஷம்” என்றவரின் மனம் வேகமாக நினைவடுக்குகளில் அவனைத் தேடியது.

அரவிந்தன் புன்னகையுடன் அவரிடம் சாவியைக் கொடுத்துவிட்டு, “இவங்க உனக்கு தெரிஞ்சவங்களா கீர்த்தி” என்று மகளைத் தூக்கினான்.

வெகுநாட்களுக்கு பிறகு தன்னுடைய ஹாஸ்டல் வார்டனை கண்ட சந்தோஷத்தில், “ம்ஹும் ஆமாங்க” என்று தொடங்கியவள் பாதியில் நிறுத்திவிட்டு கணவனை சந்தேகத்துடன் நோக்கியவளை கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் சென்று மறைந்தான்.

‘இவருக்கு இவங்களை அடையாளம் தெரியலயா?’ என்ற கேள்வி மனத்தைக் குடைந்தது.

அதே நேரத்தில் “குழந்தை அப்படியே உன்னோட சாயலில் இருக்கிற கீர்த்தி” என்றவரின் குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்டாள். அதன்பிறகு அவரை அழைத்துச் சென்று வீட்டைச்சுற்றி காட்டினான். அவருக்கு வீடு பிடித்துப்போய்விட வீட்டு ஓனரிடம் பேசி அட்வான்ஸ், வாடகை என்ற விவரங்களை பகிர்ந்தான்.

அதை ஒப்புக்கொண்டு அடுத்த ஒரு வாரத்தில் வீட்டில் குடியேறிய மேகலா அருகே இருக்கும் பால்வாடியில் பகுதிநேர வேலைக்கு சேர்ந்திருந்தார். அத்தோடு கீர்த்தனாவின் மூலமாக நிர்மலாவின் குடும்பமும் அவருக்கு அறிமுகமானது.

அடுத்தடுத்து வந்த நாட்களில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவுடன் இருக்க தொடங்கினர். அதே நேரத்தில் அரவிந்தனைப் பார்க்கும்போது ரொம்ப நாளாக பேசி பழகிய தோற்றம் மனதினுள் தோன்றி மறைய காரணம் புரியாமல் குழம்பினார்.

அதற்கு காரணமானவனோ மௌனமாய் வலம் வந்தான்.

அன்று அவர் வேலையை முடித்துவிட்டு வீடு வரும்போது மகளுக்கு சாக்லேட்டை வாங்கி கொடுத்து அழைத்து வருவதைக் கண்டு, “இந்த வயசில் இவ்வளவு சாக்லேட் கொடுக்காதப்பா” என்றார்.

“உதயாவுக்கு சாக்லேட் அதிகம் கொடுக்க மாட்டேன் அம்மா. இன்னைக்கு ரொம்ப அடம்பிடிச்சதான் வாங்கி தந்தேன். இவ சாப்பிடுவதோடு இல்லாமல் அம்மாவையும் சேர்த்து கெடுத்து வச்சிருக்கிற” என புலம்பிய தந்தையைப் பார்த்து கிளுக்கென்று சிரித்த மகளோ அவனின் கையிலிருந்து நழுவி கீழிறங்கி ஓடினாள்.

“உதிம்மா மெல்ல போ” என எச்சரிக்கை செய்தவனை இமைக்காமல் பார்த்தவர்,

“உன்னை எங்கயோ பார்த்த ஞாபகம்.. ஆனால் எங்கே பார்த்தேன்னு யோசிச்சா நினைவே வரல தம்பி” என்றார் சிந்தனையோடு.

“எனக்கும் ஞாபகம் இல்லம்மா” என்றவன் வேகமாக அங்கிருந்து நகர்ந்தவனை கண்டு அவரின் சந்தேகம் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

இதற்கிடையே மேகலா வார்டன் தங்களின் வீட்டருகே குடி வந்திருக்கும் விஷயமறிந்து போனில் பேசினாள் மௌனிகா. அவளுடன் பேசிவிட்டு போனை வைத்து நிமிர்ந்து பார்க்க, “என்னம்மா வேலையெல்லாம் முடிச்சிட்டு உட்கார்ந்து இருக்கிறாயா?” என கேட்டபடி வந்தார் மேகலா.

அவரைக் கண்டவுடன் முகம் மலர, “ம்ஹும் இப்போதான் முடிச்சேன் அம்மா. அவரு ஏதோ வேலையாக வெளியே போனதால் சாப்பிடாமல் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்றாள்.

மெல்ல அவளின் அருகே அமர்ந்தவர், “உங்க அப்பா, அம்மா போன் பண்ணினாங்களா?” என விசாரிக்க மறுப்பாக தலையசைத்தவள் அவரின் மடியில் படுத்துக்கொள்ள ஆறுதலாக அவளின் தலையை வருடினார்.

சிறிதுநேரம் அங்கே மௌனம் நிலவியது.

“நீ திருமணமாகி கையில் குழந்தையோடு இருப்பதைப் பார்க்க மனசுக்கு நிறைவாக இருக்கு கீர்த்தி” ஆழ்ந்த குரலில் கூறினார்.

சட்டென்று அவரின் மடியிலிருந்து எழுந்தமர்ந்த கீர்த்தனா, “நானே இதெல்லாம் நடக்கும்னு யோசிக்கல அம்மா. ஆனால் நீங்க சொன்ன அறிவுரைப்படி படிப்பை முடிச்சு இரண்டு வருஷம் வேலைக்கு போனேன்” என்று தொடங்கி அதன்பிறகு நடந்த அனைத்தையும் அவரிடம் பகிர்ந்தாள்.

“அப்போ உதயா உன் மகள் இல்லையா?” என்ற கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தவள் தான் கருவுற்று இருக்கும் விஷயத்தையும் அவரிடம் பகிர்ந்தாள்.

ஆனால் உதயாவின் சாயலும், அவள் செய்யும் சேட்டைகளை இடைப்பட்ட நாளில் கவனித்தவர், ‘அப்புறம் எப்படி இவளோட சாயலில் இருக்கிறா?’ என யோசிக்க தொடங்க அவரின் சிந்தனையைக் கலைப்பது போல ஒலித்தது கீர்த்தனாவின் குரல்!

“அம்மா உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்” என்றவளை கேள்வியாக நோக்கினார் மேகலா.

“நான் வீட்டைவிட்டு கிளம்பும்போது அந்த குழந்தையோட முகத்தைக்கூட என் கண்ணில் நீங்க காட்டவே இல்ல. அதுக்குபிறகு உங்களை சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு அமையல. என் குழந்தையை என்னம்மா பண்ணினீங்க?” தன் மொத்த உயிரையும் கண்ணில் தேக்கி கேட்டாள்.

அவர் பதில் சொல்வதற்குள் வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம்கேட்டு, “இந்த மாதிரி நேரத்தில் மனசைப் போட்டு குழப்பிக்காமல் இரு..” என்று அதட்டிவிட்டு எழுந்து சென்றார்.

தன் எதிரே வந்தவனை ஆராய்ச்சி கண்ணோட்டத்துடன் நோக்கியபடி அவனைக் கடந்து செல்ல, அவரின் பார்வை தன்மீது படிவத்தை உணர்ந்தும் எதுவும் பேசாமல் வீட்டிற்குள் நுழைந்தான்.

கீர்த்தனாவின் முகம் வாடியிருப்பதை வைத்தே காரணத்தை யூகித்து, “இங்கே பாரும்மா. உன்னோட குழந்தை ரொம்ப பாதுக்காப்பான இடத்தில் பத்திரமாக இருக்குன்னு நம்புடா. இந்த சமயத்தில் மனசை சந்தோசமாக வச்சுக்கணும்” அவளை அணைத்து ஆறுதல் கூறியவனின் பார்வை படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகளின் மீது படிந்து மீண்டது.

இருவரும் உணவை முடித்துவிட்டு சற்றுநேரம் அமைதியாக சோபாவில் அமர்ந்தனர். காற்று இதமாக வீசிட காற்றின் மணி (விண்ட் செயின்) அசையும் சத்தம்கேட்டு இருவரின் நினைவுகள் எங்கோ பறந்தன.

அதே நேரத்தில் தன் வீட்டில் ஓய்வாக அமர்ந்த மேகலாவின் காதுகளில் மீண்டும் கீர்த்தனாவின் குரலே ரீங்காரமிட்டது. இத்தனை வருடங்கள் சென்றபிறகும் முதலில் ஈன்றெடுத்த பிள்ளையின் மறக்காமல் இருப்பதை நினைத்து வருத்தமாக இருந்தாலும், ஒரு தாயாக அவளின் மனநிலையைப் புரிந்து கொண்டார்.

அந்த குழந்தையின் நினைவில் ஆழ்ந்தவருக்கு ஆழ்மனதில் அவனின் பிம்பம் உருவெடுக்க, ‘கண்ணா’ என்ற அழைப்புடன் கண்விழித்தார். அவரின் நினைவுகளும் பின்னோக்கி நகர்ந்தது.

தங்களை அடையாளம் தெரியாத ஊரில் தேவையில்லாத பேச்சுகள் வருவதற்கு வாய்ப்பில்லை என்ற காரணத்திற்க்காக அங்கே வாடகைக்கு வீடு பிடித்து கீர்த்தியை விழுப்புரம் அழைத்துச் சென்றார்.

 “நம்ம இனிமேல் இங்கேதான் தங்க போகிறோம்” என்ற வீட்டின் மீது அவளின் பார்வை படிந்து மீண்டது. வீட்டின் முன்புறம் சிறிய கேட் அதற்கு அடுத்தாக கம்பியால் உருவாக்கபட்ட தடுப்பு. அதை இழுத்துவிட்டு பூட்டிவிட்டால் வீட்டில் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கலாம் என்ற காரணத்திற்காக வடிவமைத்திருந்தனர்.

அந்த வீதியில் இவர்களின் வீடு மட்டும் கொஞ்சம் பழைய கட்டிடம் போல தோன்றினாலும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. வீட்டின் உள்ளே நுழைந்ததும் ஒரு ஹால், சமையலறை, பூஜை அறை, படுக்கையறை என்று சகல வசதிகளுடன் இருந்தது. அதன் பின் வாசலில் பெரும்பகுதி காலியிடமாக கிடந்தது.

வீட்டைச்சுற்றி பார்த்தபடி பின்வாசலுக்கு சென்ற கீர்த்தியை மெளனமாக நின்றிருக்க திடீரென்று மாடியிலிருந்து யாரோ இறங்கி வரும் ஆரவாரம் கேட்டு அவளின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.

அழுத்தமான காலடியோசையின் சத்தம்கேட்டு சட்டென்று நிமிர்ந்து மாடியைப் பார்த்தாள். ஆறடி உயரத்தில் வெள்ளை நிற சர்ட், பிளாக் கலர் பேண்ட் அணிந்து ஆஜாகுபவனாக ஒரு ஆண்மகன் இறங்கி வந்தான்.

மற்றவர்கள்போல இல்லாமல் அவனின் முகம் சோகத்தில் இருந்து கிடந்தது. அர்ஜுன் தனக்கு செய்த காரியத்தை சட்டென்று நினைவுவர, ‘இங்கே யாருமே யோக்கியன் கிடையாது. எல்லோருமே கடைந்தெடுத்த கிருமினல் தான்’ என வெறுப்புடன் நினைத்தாள்.

டிப் – டாப்பாக உடையணிந்த ஆண்களெல்லாம் நல்லவர்கள் என்ற எண்ணத்தை சுக்குநூறாக உடைத்திருந்தான் அர்ஜூன். அவனால் இப்போது பார்க்கும் மற்ற ஆண்களையும் தவறாகவே நினைத்தாள் கீர்த்தி. ஆனால் முதல்நாள் பார்த்தவுடன் தான் ஏன் அவனைக் காரணமின்றி திட்டுகிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.

அவளொருத்தி அங்கே நிற்பதை கவனிக்காமல் சென்றவனை பார்த்த மேகலா, “இந்த பையன் மட்டும் மாடியில் குடியிருப்பதாக வீட்டுக்காரர் சொன்னார். அவன் பின்வழியாக தானே வந்து செல்கிறான் என்று நானும் அதை பெருசாக நினைக்கல” என்றார் சாதாரணமாக.

அதன்பிறகு வீட்டில் பொருட்களை சீரமைப்பதற்குள் மேகலாவிற்கு போதும் போதுமேன்றானது. கீர்த்தனா தன்னால் முடிந்த உதவிகளை செய்தாள். இரவு உணவை முடித்துவிட்டு இருவரும் பின்வாசலில் சென்று அமர்ந்தனர்.

அவளின் கவலை முகம் கண்டு காரணத்தை யூகித்தவர், “அம்மா – அப்பாவுக்கு தெரியாமல் செய்கிறோமே என்ற குற்ற உணர்வைத் தூக்கி தூரப்போடு. இந்த விஷயம் வெளியே தெரிந்தால் உன் எதிர்காலமே பாழாகிவிடும்” என்றார்.

அப்போதுதான் அவர் தனக்கு ஏன் இந்த உதவியைச் செய்கிறார் என்ற கேள்வி மனதில் எழுந்திட மறைக்காமல் கேட்டாள்.

“நான் ஆரம்பத்தில் வேலைக்கு சேர்ந்தபோது உன்னை மாதிரி ஒரு பொண்ணுக்கு நடந்தது. அவ நிறைய ஆண்களோடு பழகுவாள் என்பதால் தவறாக நினைச்சு அவ கர்பமாக இருக்கும் விஷயத்தை அவளோட வீட்டில் சொல்லிட்டேன்” என்றவர் பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

“அதனால் அந்த குடும்பமே தற்கொலை செய்துக்கொள்ள அந்த பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு. பாவம் என்னோட அவசரத்தினால் என்னவெல்லாம் நடந்துபோச்சுன்னு நினைக்கும்போது மனசு வலிக்கும்” என்றவர் அன்றைய நாளின் நினைவைப் பகிர்ந்தார்.

ஒரு உதவிக்குப் பின்னாடி இப்படியொரு விஷயம் மறைந்திருக்கும் என அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவள் மௌனமாக இருப்பதைக் கண்டவரின் முகம் இளகியது.

அப்போது பின் கேட்டை யாரோ திறக்கும் சத்தம்கேட்டு நிமிர காலையில் சென்றவன் வேலையை முடித்துவிட்டு தளர்ந்த நடையுடன் வந்தான். கீர்த்தனா வேண்டாவெறுப்பாக பார்த்துவிட்டு விறுவிறுவென எழுந்து வீட்டிற்குள் செல்ல, “தம்பி” என்றழைத்தார் மேகலா.

அவரின் குரல்கேட்டு நின்றவன், “என்னங்க அம்மா” என்றான்.

“உன் பெயரேன்னப்பா” என்றதும், “அரவிந்தன்” என்றான்.

“ஓஹோ எனக்கு ஞாபக மறதி கொஞ்சம் அதிகம். அதனால் எனக்கு கிருஷ்ணர் தான் பிடிக்கும் அப்போ கண்ணன்னு கூப்பிடவா” என்றதற்கு சம்மதமாக தலையசைத்தான்.

“தம்பி என் மகள் கர்ப்பிணி பெண். அதனால் அவசரத்திற்கு ஏதாவது உதவி வேண்டுமென்றால் உங்களை கூப்பிடலாமா?” என்றதும் அவனின் முகம் மாறியது.

அதை கவனித்த மேகலா, “நாங்க இந்த ஊருக்குப் புதுசு. இங்கே யாரும் பழக்கம் இல்ல” என்று காரணத்தைக் கூற சரியென தலையசைத்துவிட்டு மாடியேறி சென்றான்.

Leave a Reply

error: Content is protected !!