Thanimai – 21

Thanimai – 21
அரவிந்தன் – கீர்த்தனா சந்திப்புகள்
வீட்டிற்குள் நுழைந்தவுடன் தனிமை அவனை சூழ்ந்துகொண்டது. தன்னுடன் இயல்பாக பேச ஆளில்லாத தனிமையை நினைத்து மனதின் வெறுப்பு அதிகரித்தது. ஏன் வாழ்கிறோம் என்ற எண்ணம் அவனை கொல்லாமல் கொன்றது.
அவன் தனிமையை விரட்டியடிக்க குடியைத் தேடித் போய் உடல்நிலையைக் கெடுத்துகொள்ளவில்லை. ஆனால் மனதின் வெறுமையைத் தீர்க்க வழி தெரியாமல் திண்டாடினான். கதவைத் தாழிட்டு அதன் மீதே சரிந்து அமர்ந்தவனுக்கு தற்போதைய ஒரே ஆறுதல் அவன் வேலை செய்யும் நிறுவனம் மட்டுமே!
அவர் அரவிந்தனோடு பேசிவிட்டு வரும்போது அவள் உறங்க சென்றிருந்தாள். அவளின் அருகே அமர்ந்த மேகலாவிற்கு அவளின் வாழ்க்கையை நினைத்து கவலை அதிகரித்தது.
அவள் காதல் மயக்கத்தில் தவறு செய்திருந்தால் வீட்டில் இருப்பவர்களுக்கு தகவல் சொல்லி பெற்றோரை வரவழைத்து அனுப்பியிருப்பார். ஆனால் அவளுக்கு நடந்ததோ விபத்து. கல்லூரி நாட்களில் பட்டாம்பூச்சியாக சிறகு விரித்து பறந்த பெண்ணின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்றெண்ணி வருந்தினார்.
பெண்களுக்கு கல்வி அவசியம் என்று பேசும் இதே சமூகம் உண்மை தெரிய வந்தால் அவளின் ஒழுக்கத்தை கேள்வி குறியாக்கிவிடும். பெண் சிசு கொலை, தேவதாசி முறை போன்றவை ஒழிக்கபட்டு பெண்களின் பிறப்பையும், கல்வியையும் ஆதரிக்கும் வளர்ச்சி நிலைக்கு சமூகம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆனால் பாலியல் தொந்தரவினால் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவதும் சமநிலையில் வளர்ந்திருக்கிறதே என்று நினைக்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது.
ஆரம்பத்தில் பெண் குழந்தைகள் பிறப்பில் தொடங்கி செய்யும் செலவுகளை கணக்கிட்டு பெண் குழந்தைகள் என்றாலே கருவிலேயே கலைப்பது, அதுவே கருதேறித்து மண்ணில் பிறந்துவிட்டால் கள்ளிப்பால் ஊற்றி கொள்ளும் முறை இருந்தது. அதை ஒழித்து அடுப்படி இருட்டில் இருந்து கொஞ்சம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து இருக்கிறதே!
முதலில் பெண் குழந்தைகள் என்று சொன்னாலே பயப்படும் சமூகம் மாறிவிட்டது. ஆனால் பள்ளிக்குச் செல்லும் பெண்பிள்ளை வீடு திரும்பும் வரை பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். தினமும் நியூஸ் பேப்பரில் தொடங்கி ஊடங்களில் வெளிவரும் தகவல்களால் பெற்றோர்களின் மனம் படும்பாடு அவர்கள் மட்டுமே அறிந்தது. படிப்பதை தன் பிள்ளை தவறு செய்யாது என புரிந்தாலும் சுற்றத்தினர் பேசும் இழிவான சொற்களால் பெற்றவர்களின் மனம் இறுகி போய்விடுகிறது.
அதன்பிறகு அவளை வீட்டைவிட்டு நிரந்தரமாக வெளியே அனுப்புவதால் எந்தவிதமான ஆதரவும் இன்றி தனித்துவிட படுகிறாள். அது இல்லையெனில் தவறுகளை மறைத்து திருமணம் செய்து தினம் தினம் நடிக்க தொடங்கும் பெண்களின் நிலை அதோ பரிதாபம். அவளை புரிந்துகொண்ட கணவன் வாய்த்தால் அதிர்ஷ்டமே.
இந்த உண்மை வெளியே தெரிய வந்தால் அவள் படிப்பும், வாழ்க்கையும் வீணாகிவிடும் என்ற ஒரே காரணத்திற்காக தன்னால் முடிந்த உதவியைச் செய்ய முன் வந்தார்.
‘பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்த்த நன்மை பயக்குமெனில்’ என்ற வள்ளுவரின் வாக்கை மனதில் நினைத்து தன் வேலையைத் தொடங்கினார். அவள் தேர்வுகளை முடிக்கவும், மேகலாவின் வேலைக்கு நிரந்தமான மற்றொரு பணியாளை நியமிக்கவும் சரியாக இருந்தது.
தன் வேலையை ரிசைன் செய்துவிட்டு கீர்த்தனாவைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு விழுப்புரம் வந்துவிட்டார். “இவளுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்துட்டா போதும்..” தன் சிந்தனையை ஒதுக்கிவிட்டு அவளின் அருகே படுத்து உறங்கினார்.
இரவு வெகுநேரம் சென்று உறங்கியவன் காலையில் தாமதமாக கண் விழித்தான். கடிகாரத்தில் மணியைப் பார்த்தும், “இன்னைக்கு வேலைக்கு போன மாதிரிதான்” என்ற நினைவுடன் குளித்து கிளம்பி கீழே வரும்போது மணி பதினொன்றை தாண்டி இருந்தது.
மேகலா அம்மா மார்கெட் வரை சென்றிருக்க, தாய் – தந்தையின் கண்ணை மறைத்து செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டதே என மனதினுள் ஓய்வின்றி நடந்தவளுக்கு கால்வலி அதிகரித்தது. தன் கையில் வைத்திருந்த டெடிபியர் பொம்மையை மாடிபடியில் வைத்து சரிந்து அமர்ந்து அதன் மடியில் தலை வைத்தாள். காற்று இதமாக வருடிச்செல்ல தன்னை மறந்து உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
அவள் மாடியின் பாதையை மறைத்து உறங்குவதை கவனித்த அரவிந்தனுக்கு கோபம் வருவதற்கு பதிலாக பரிதாபமே மிஞ்சியது. ஆதரவற்ற குழந்தை உறங்குவது போல தோன்றவே அவளின் தூக்கத்தைக் கலைக்க மனமில்லாமல் ஏதோ சிந்தனையோடு படிக்கட்டில் அமர்ந்துவிட்டான்.
மார்கெட் சென்று வீடு திரும்பிய மேகலா படிக்கட்டில் உறங்கிய கீர்த்தியைக் கண்டு அவளை நெருங்கும்போது தான் படிக்கட்டில் அமர்ந்திருந்த அரவிந்தனைக் கவனித்தார்.
மேகலாவைக் கண்டவுடன், “ரொம்ப நல்லா தூங்கறாங்க. இவங்களோட தூக்கத்தைக் கெடுக்க மனசு வரல. அதுதான்..” என்று காரணத்தைக் கூற சிரிப்புடன்,
“அதுக்குன்னு வேலைக்குப் போகாமல் இப்படியா கண்ணா அமர்ந்திருப்ப.. இரு நான் இவளை எழுப்பறேன்” என்று கீர்த்தியை எழுப்பினார்.
அவள் கண்விழித்தவுடன் எதிரே அமர்ந்திருந்த அரவிந்தனைக் கண்டு பதறியடித்து எழுந்து நிற்க அவனின் கண்ணில் வலி மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்தது.
“அந்த தம்பி வேலைக்குப் போக வழியில்லாமல் படிக்கட்டில் படுத்து தூங்கிட்டியா கீர்த்தி. பாவம் உன்னால் அந்த தம்பி வேலைக்கே போகல” என்றவுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனின் மீதான தவறான எண்ணத்தைக் கைவிட்டு, “ஸாரி” என்றாள் மெல்லிய குரலில். அவன் சரியென தலையசைக்க வீட்டிற்குள் சென்று மறைய அரவிந்தன் எழுந்து வேலைக்கு சென்றான்.
அன்றைய நாளுக்குப் பிறகு அரவிந்தனைக் கண்டால் அவள் பயந்து ஒதுங்குவதில்லை. அவனும் மற்றவர்கள் போல பெண்ணைக் கண்டவுடன் வழிந்து வந்து பேசும் ரகம் இல்லை என்பதால் எந்தவிதமான பிரச்சனையும் நாட்கள் நகர தொடங்கியது.
காலையில் விடியலுக்கு முன்னரே கண்விழித்த கீர்த்திக்கு காபி குடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தன் உடல் சிரமத்தை நினைக்காமல் எழுந்து குளித்துவிட்டு வந்தவளின் வயிற்றில் இருக்கும் கரு உதைக்க, ‘ம்ஹும் நல்லா உதை.. நானா தவறு பண்ணேன்.. என்னை உதைக்கிற.. இன்னொரு முறை உதைச்ச உதை விழும் படவா..’ என மனதினுள் பேசியபடி காபியைக் கலந்து குடிக்க அமரும்போது எழுந்து வந்தார் மேகலா.
“என்ன பண்ற” என்ற கேள்வியில் சட்டென்று நிமிர்ந்தவள் கையில் இருந்த காபியையும் வார்டனையும் மாறி மாறி பார்த்துவிட்டு திருதிருவென்று விழித்தாள்.
அவளின் பார்வையில் திருட்டுத்தனத்தை கண்டுகொண்ட மேகலா, “காபி குடிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்க இல்ல. எனக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக குடிக்கலாமா?” என அதட்டியபடி அவளின் கையிலிருக்கும் காபி கப்பை வாங்கி வைத்துவிட்டார்.
“அம்மா இன்னைக்கு ஒரே நாள் மட்டும்” என்றவளை முறைத்துவிட்டு சமையலறைக்குள் சென்றார்.
அவள் சோகமாக வந்து மாடி படிதனில் அமர கையில் பிளாஸ்க்குடன் பின் வாசலின் வழியாக உள்ளே நுழைந்தவனைக் கண்டு அசட்டையாக அமர்ந்திருந்தாள்.
அவளின் முகம் சோகமாக இருப்பதைக் கவனித்த அரவிந்தன், “ஹலோ மேடம் நேற்று தூங்கிட்டீங்க ஓகே. இன்னைக்கு ஏன் மாடிப்படியில் வழி மறிச்சு உட்கார்ந்திருக்கீங்க” என கேலியுடன் அவளிடம் விசாரித்தான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “அம்மாவுக்கு தெரியாமல் காபி கலந்து குடிக்க போனேன் பிடிங்கி வச்சிட்டாங்க. கொஞ்சூண்டு குடிச்சுக்கிறேன்னு சொன்னேன் கேட்கல. அதுதான் இங்கே வந்து உட்காந்திருக்கேன்” தன் தவறை மறைத்து தாயின் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கும் குழந்தை போல அவனிடம் ஒப்பித்தாள்.
வெகுநாள் கழித்து தன்னைமறந்து வாய்விட்டு சிரித்த அரவிந்தன், “நீ செய்தது தப்புதானே? இந்தமாதிரி நேரத்தில் அதெல்லாம் குடிக்கக்கூடாது” என்று அவன் கண்டிக்க மௌனமாய் அவனை பார்த்துவிட்டு மீண்டும் கன்னத்தில் கை வைத்து சோகமாக அமர்ந்தாள்.
அவளின் செய்கைகள் அனைத்தும் குழந்தை போலவே இருக்க, “சரி இரு நான் உங்க அம்மாகிட்ட பேசி பார்க்கிறேன்” என்று சென்றவன் சிறிதுநேரத்தில் சோகமாக திரும்பி வர அவனைக் கண்டு சிரிப்பது இப்போது கீர்த்தியின் முறையானது.
“அவங்க எங்க காலேஜ் வார்டன். நீங்க சொல்லியா கேட்க போறாங்க” என்றாள் சிரிப்பை அடக்கியபடி.
தன் கையோடு மறைத்து வைத்திருந்த கப்பை எடுத்து ப்ளாஸ்க்கில் கொண்டு வந்த காபியை ஊற்றி அவளிடம் நீட்டினான். அதைப் பார்த்தும் காரணம் இல்லாமல் அர்ஜூன் முகம் மின்னி மறைய, “வேண்டாம்” பயத்தில் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.
அவளின் மனநிலையை ஓரளவு யூகித்த அரவிந்தன் தானே காபியைப் பருகிட, “என்ன எனக்கு தெரியாமல் அவளுக்கு காபி குடிக்க கொடுக்கிறீயா கண்ணா” என்றார்.
அவளின் எதிரே அமர்ந்திருந்தவனோ, “நல்லா கண்ணைத் திறந்து பாருங்க. உங்க மகளுக்கு நான் எதுக்கு காபி கொடுக்கணும். அப்படியே நான் கொடுத்தாலும் ஏதாவது கலந்து கொடுத்து என்னை ஏதாவது செஞ்சிருவானோ என்ற பயத்தில் அவங்க வாங்கக்கூட மாட்டாங்க..” என்று மறைமுகமாக அவளுக்கும் பதில் கொடுத்தான்.
திடீரென்று காரணமே இல்லாமல் அவன் வறுத்தெடுப்பதை கண்டு கேள்வியாக புருவம் சுருக்கினார். அவன் சொன்னதைகேட்டு கீர்த்தியின் முகம் வீழ்ந்துவிட்டது.
“ம்ஹும் நல்லா குடி.. நான் கடை வரைக்கும் போயிட்டு வரேன்” என கிளம்ப அரவிந்தனும், கீர்த்தியும் தனித்துவிடப்பட்டனர்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “இன்னைக்கு என்னோட நிலைக்கு காரணமே அன்னைக்கு அவன் கொடுத்த தண்ணியை யோசிக்காமல் குடிச்சதால் வந்தது தான். என்னையும் அறியாமல் உங்களை காயப்படுத்திட்டேன் ஸாரி” என்றாள்.
அவன் யூகித்த விஷயத்தை அவள் வாய் வழியாக கேட்டவுடன், “எல்லோரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதை முதலில் நிறுத்து. ஒருவன் செய்த தவறுக்காக அனைவரும் அதே எண்ணத்துடன் உன்னிடம் பழகுவாங்க என்று நினைக்காதே. அந்த நினைவுகள் உன் மீது உண்மையான பாசம் வைத்து இருப்பவர்களை காயப்படுத்திவிடும்” கண்டிப்புடன் கூறியவன் மற்றொரு கப்பை எடுத்து வந்து அவளுக்கு காபியை ஊற்றி கொடுத்தான்.
அவள் வாங்காமல் அவனை கேள்வியாக நோக்கிட, “இந்த காபியைக் குடிச்சிட்டு ஐந்து ரவுண்டு அதிகமா நடக்கணும்..” என்றவுடன் சரியென தலையசைத்தவள் காபியை பருகினாள். அதன்பிறகு அவள் எழுந்து நடக்க தொடங்க சிரித்தபடி மாடியேறிச் சென்றுவிட்டான்.
அலுவலகம் செல்ல கிளம்பி வந்தவனிடம், “நான் நடந்து முடிச்சிட்டேன். அம்மாகிட்ட காபி குடிச்ச விஷயத்தை சொல்லாதீங்க” என்று சொல்ல சரியென தலையசைத்துவிட்டு அவளிடம் விடைபெற்றான்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் தன்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை கீர்த்திக்கு செய்தான் அரவிந்தன். அந்த நேரத்தில் சுவையான உணவுகளை உட்கொள்ள மனம் ஏங்கும் என்று அறிந்து அங்குமிங்கும் அலைந்து நல்ல உணவை வாங்கி வந்தான். அவனின் இளகிய மனம் புரிந்து மேகலாவும் மெளனமாக இருந்தார்.
இந்நிலையில் கீர்த்தனாவின் மனம் வழக்கமாக பெண்கள் எதிர்பார்க்கும் வளைகாப்பை நினைத்து ஏங்கியது. அதைக் கண்டுகொண்ட மேகலா அக்கம்பக்கத்தினரை அழைத்து அவளுக்கு வளைகாப்பு செய்ய முடிவெடுத்தார்.
ஆனால் அறியாத ஊரில் கழுத்தில் தாலியின்றி இருப்பவளை கவனித்தால் மற்றவர்கள் அவளை காயப்படுத்திவிட கூடுமென்று யோசனையில் ஆழ்ந்தார். அடுத்த இரண்டு நாளில் வளைகாப்பு செய்ய தேவையானவற்றை தானே முன்னின்று செய்தவன் கடைசியாக மேகலா அம்மாவிடம் வந்து நின்றான்.
அவர் கேள்வியாக நோக்கிட, “அம்மா என்னதான் இருந்தாலும் அவளுக்கும் மற்ற பெண்கள் போல ஆசை இருக்கும் இல்ல. அதுதான் ஏற்பாடு செய்தேன். எங்கம்மா அப்போ சொன்னதை ஞாபகம் வச்சு கண்ணாடி வளையல், சுவீட், பழங்கள் எல்லாம் வாங்கிட்டேன். நீங்க பக்கத்தில் இருப்பவர்களிடம் தகவல் சொல்லி வர சொல்லுங்க. திருமணம் ஆகவில்லையா என்று கேட்டால் பையன் கிறிஸ்டியன் என்று சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.
மறுநாள் அவன் சொன்னது போலவே வளைகாப்பை நடத்தி வந்தவர்களுக்கு ஐவகை உணவு வகைகளை பரிமாறி அனுப்பி வைத்தார் மேகலா. தான் கையில் இருந்த வளையலை விளையாட்டாய் ஆட்டி பார்த்தவள், “உனக்கு சத்தம் கேட்குதா?” என்று குழந்தையிடம் கேட்ட தாயின் கருவறையை எட்டி உதைத்தது குழந்தை.
அப்போதுதான் காலையில் இருந்து அரவிந்தனை பார்க்கவில்லை என்ற நினைவு வந்தது. அவள் தன் கோலத்தைக் கலைக்காமல் பின்வாசலுக்கு செல்ல படிக்காட்டில் அமர்ந்து தனியாக செஸ் விளையாடிக் கொண்டிருந்தான்.
“நீங்க இங்கதான் இருக்கீங்களா?” என்ற குரலைக்கேட்டு நிமிர்ந்து கீர்த்தியைப் பார்த்தான். அழகான பச்சை வண்ண பட்டுடுத்தி வகிடு எடுத்து சீவிய கூந்தலை மல்லிகையும், முல்லை இரண்டைக் கொண்டு அலங்கரித்து இருந்தனர்.
காதில் ஜிமிக்கியும், கழுத்தில் ஆரம் போட்டிருந்த அவளின் கன்னத்தில் சந்தனமும், நெற்றியில் குங்குமமும், கைநிறைய கண்ணாடி வளையல் அணிந்து மலர்ந்த ரோஜாவைப் போல இருந்தவளைப் பார்த்தவனின் மனதிற்கு அமைதி கிடைத்தது.
“ஹப்பாடியோ எங்க கீர்த்தியா இது?” அவன் கேலியாக வினாவினான்.
“ஆமா என்னோட ஆசை தெரிஞ்சி வார்டன் அம்மா ஏற்பாடு பண்ணியிருக்காங்க. ஆமா நீங்க ஏன் சாப்பிட வரல” என்ற கேள்வியோடு அங்கிருந்த பாயில் அமர்ந்தாள்.
“நீ சொல்லு சமையல் எப்படி இருந்துச்சு” என்று ஆர்வத்துடன் கேட்டான்.
“ஐந்து வகை சாப்பாடு அவ்வளவு அருமையாக இருந்துச்சு. கொஞ்சம் சாப்பிட்டு இருந்தாலும் மனசுக்கு நிறைவா இருந்துச்சு” என்றாள் கீர்த்தி.
“அப்போ நல்ல சமையல் செய்யறேன்னு சொல்ற?” அவன் உண்மையைப் போட்டு உடைக்க விழிவிரிய அவனைக் கேள்வியாக நோக்கினாள் பெண்ணவள்.
“நீ வளைகாப்பை பற்றி நினைத்து ஏங்குவதை பார்த்து நான்தான் எல்லா ஏற்பாடும் பண்ணினேன். அம்மாவை எப்படியோ பேசி சரிகட்டிட்டு உனக்காக கஷ்டபட்டு சமைச்சு கையை சுட்டுகிட்டேன். ஆனால் இப்போ நீ நல்லாயிருக்கு என்று சொல்லும்போது அவ்வளவு சந்தோசமாக இருக்கு” அவனின் விழிதனில் உண்மையான அன்பைக் கண்டு அவளின் கண்கள் கலங்கியது.
“இந்த மாதிரி நேரத்தில் அழுகைக் கூடாது” என்று அவளை அதட்டிவிட்டு திரும்ப கையில் இலை மற்றும் உணவு என்று அனைத்தையும் கொண்டு வந்து அங்கிருந்த நிழல் குடை கீழே வைத்தவரை புரியாத பார்வை பார்த்தான் அரவிந்தன்.
“அவளுக்காக எல்லாம் செய்த நீ சாப்பிடாமல் நான் விடுவேனா? வா வந்து உட்காரு அம்மா உனக்காக பரிமாறுறேன்” என்றதும் மறுப்பின்றி சென்று அமர்ந்தவன் மேகலா பரிமாற வயிறார சாப்பிட்டான்.
கீர்த்தனா அவனை இமைக்காமல் பார்க்க, “எட்டு மாசத்துக்கு பிறகு இன்னைக்குதான் வயிறார சாப்பிடுறேன். என்னை சாப்டியானு யாருமே கேட்க மாட்டாங்க” என்றவன் கைகழுவ எழுந்து செல்ல கலங்கிய கண்களை சேலை முந்தாணியில் துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.