Thanimai – 22

8fac5a3956803e0d17defb404f43628a-34f49759

குழந்தையை பிரியும் கீர்த்தனா

விடுமுறை தினத்தில் இருவரும் போட்டி போட்டு செஸ் விளையாடினர். கிட்டத்தட்ட எட்டு மாதமாக இருளின் பிடியில் இருந்தவனுக்கு கீர்த்தியின் வரவு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

தன்னுடைய சோகமான பக்கங்களை விசாரிக்காமல் தன்னுடன் அவள் இயல்பாக பழகியது அவனுக்குப் பிடித்திருந்தது. கர்ப்பிணிப் பெண் என்பதைக் கடந்து அவளின் அருகே இருக்க அவனின் மனம் விரும்பியது. அதற்கான காரணத்தை உணராமல் வலம் வர தொடங்கினான்.

மேகலாவுடன் அவள் தங்கியிருந்தாலும் எந்நேரமும் அவரிடம் என்ன பேசுவது என்று அவளுக்கு புரியவில்லை. அதே நேரத்தில் அமைதியாக இருந்தால் தேவையில்லாத விஷயங்களை யோசித்து தலைவலியே மிஞ்சியது. அந்த நேரத்தில் அரவிந்தனுடன் பேசுவது அவளுக்குப் பிடித்தது.

இருவரின் இடையே ஏதோவொரு பிணைப்பு ஏற்படுவதை கவனித்த மேகலா, ‘காமாலைக் காரனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்று சொல்வது சரியாகத்தான் இருக்கு. அவங்க இயல்பாக பழகுவதை நானே தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறேனே’ என தன்னை திட்டிகொண்டு அவர்களை நெருங்கினார்.

அன்றும் வழக்கம்போல இருவரும் தீவிரமாக விளையாட, “கீர்த்தி உனக்கு பிறக்க போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று போட்டியை வைத்து முடிவு பண்ணலாமா?” என்ற கேள்வியுடன் அவர்களின் அருகே அமர்ந்தார்.

அவர் சொன்னதைக்கேட்டு அரவிந்தனின் முகம் பளிச்சென்று பிரகாசமாக, “பெண் குழந்தையாகத் தான் இருக்கும்” என்றான் குறும்புடன் அவளை வம்பிழுக்கும் விதமாக.

அவனை முறைத்த கீர்த்தி, “நான் பெண்ணாக பிறந்து அனுபவிக்கும் கொடுமை போதாதா? அந்த குழந்தையும் பெண்ணாக பிறக்கும்னு சொல்றீங்க?” என்று அவனிடம் சண்டைக்கு வந்தாள்.

“ஆண் குழந்தையைப் பெத்துகிட்ட மட்டும் நல்லதுன்னு நினைக்கிறீயா? நாளைக்கே அவன் வேறொரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்தால் என்ன பண்ணுவ” என அவளை மடக்கி கேள்வி கேட்க திருதிருவென்று விழித்தவளை பார்த்து மேகலாவின் உதடுகளில் புன்னகை அரும்பியது.

“இல்ல எனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும். அந்த குழந்தை தவறு செய்யாதபடி நான் வளர்ப்பேன்” அவள் தன்னை மீறி சொல்ல வார்டனின் மனமோ பதறியது. அவள் கை குழந்தையோடு சென்று நின்றால் என்ன நடக்குமென யோசித்தவருக்கு குப்பென்று வியர்த்தது.

அதற்காக தாயையும் – மகவையும் பிரிக்கும் அளவிற்கு அவர் கெட்டவர் இல்லைதான். ஆனால் நடப்பதெல்லாம் வைத்து பார்க்கும்போது அவர் நினைப்பது  அனைத்தும் நடந்துவிடுமோ என பயந்தார். தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தவரின் கவனத்தை ஈர்த்தது அரவிந்தனின் குரல்!

“இங்கே பாரு கீர்த்தி ஆண் குழந்தை பிறந்தால் என்ன செய்வீயோ எனக்கு தெரியாது. ஆனால் உனக்கு பெண் குழந்தை பிறந்தால் என்னிடம் கொடுத்துவிடு. அந்த குழந்தையை நானே வளர்த்துக்கிறேன்” தன் தனிமைக்கு முற்றுப்புள்ளியாக நினைத்து அவளிடம் கேட்டான்.

“அதெல்லாம் குழந்தை பிறந்தபிறகு யோசிக்கலாம்” என கூறியவளுக்கு செக் வைத்து போட்டியில் வெற்றியடைந்தான் அரவிந்தன்.

“உனக்கு பிறக்க போகும் குழந்தை பெண்தான்” என்றவுடன் அவள் கோபத்துடன் செஸ் போர்டை கலைத்து காய்களை அங்கும்மிங்கும் வீசினாள்.

அதைக்கண்டு, “என்ன கீர்த்தி கண்ணா உன்னிடம் விளையாட்டுக்கு சொல்றான். இந்த மாதிரி நேரத்தில் கோபப்படக்கூடாது” என்று அவளை நிதானத்திற்கு அழைத்து வந்தவர் அரவிந்தனை முறைக்க அவன் அங்கிருந்து ஓடிவிட்டான்.

இப்படி நாளும் ஒரு ரகளையுடன் இருபது நாட்கள் ஓடி மறைந்தது.

அன்று வெள்ளிகிழமை என்பதால் அருகே இருக்கும் கோவிலுக்குச் சென்று வருவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் மேகலா. அவர் சென்ற கொஞ்ச நேரத்தில் கீர்த்திக்கு வலியெடுக்க தொடங்கியது. முதலில் சாதாரண வழியென்று சமாளித்தவளால் ஒரு கட்டத்திற்கு மேல் வலியைத் தாங்க முடியாமல், “அம்மா” என கத்தினாள்.

அரவிந்தன் வேலைக்கு செல்ல படிக்கட்டில் வேகமாக இறங்கிவரும்போது கீர்த்தனாவின் குரல்கேட்டு, “என்னாச்சு..” என்ற சிந்தனையுடன் வேகமாக வீட்டிற்குள் சென்றான்.

அங்கே கீர்த்தி வழியில் துடிப்பதைக் கண்டு, “ஹே கீர்த்தி வலிக்குதா? அம்மா எங்கே?” என பார்வையைச் சுழற்றியபடி அவளின் அருகே சென்றான்.

“அவங்க கோவிலுக்கு போயிருக்காங்க. என்னால் வலியைத் தாங்க முடியல” என கதறியவளை விட்டுவிட்டு வேகமாக ஓடிச்சென்று ஆட்டோவை அழைத்து வந்தான். அவள் அடியெடுத்து வைக்க முடியாமல் திணறுவதை கண்டு குழந்தை போல இரு கைகளில் ஏந்தி சென்று ஆட்டோவின் பின்னோடு அமர வைத்தான்.

அவள் அம்மாவென்று கதறி துடிக்க அவனின் உள்ளமும் சேர்ந்து பதறியது. கீர்த்தனா ஆட்டோவின் கம்பிகளைப் பிடித்துகொண்டு காத்திட, “கொஞ்சம் பொறுத்துக்கோ கீர்த்தி. இதோ ஹாஸ்பிட்டல் பக்கம் வந்துட்டோம்” என அவளை சமாதானம் செய்து அவளை மருத்துவமனையில் சேர்த்தான்.

அவளுக்கு நன்றாக வலி பிடித்து ஹாஸ்பிட்டல் வந்திருந்த காரணத்தினால் உடனே குழந்தை பிறக்க, “உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு” என சொல்லி அவனிடம் கொடுத்தாள் செவிலியர்.

அவரின் கையிலிருந்து பூவைப்போல இருந்த குழந்தையைக் கையில் வாங்கியவனின் கண்களில் தன்னையும் மீறி கண்ணீர் அரும்பியது. தன்னுடைய குழந்தையாக பாவித்தவன் நெற்றியில் இதழ் ஒற்றி எடுக்க, ‘ங்..’ என சிணுங்கியது.

“அச்சோ மீசை குத்துதா குட்டிம்மாவுக்கு” என செல்லம் கொஞ்சியவனை தந்தையாக நினைத்த குழந்தையோ அவனின் விரலைப் பிடித்துக் கொண்டது. அதில் அவனின் உள்ளம் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றது.

அந்த மழலையிடம் மனதைத் தொலைத்து அமர்ந்திருந்தவனின் தோளில் ஒரு கரம் விழுந்தது. சட்டென்று நிமிர்ந்து பார்க்க மேகலா அம்மா நின்றிருப்பதை கண்டு, “கீர்த்திக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு” என்றான் சந்தோஷத்துடன்.

அவரிடம் நடந்த விஷயத்தை சொல்லி, “உங்களுக்கு யார் தகவல் சொன்னது?” என விசாரிக்க, “ஆட்டோ டிரைவரோட பொண்டாட்டி சொன்னாங்க..” என்றார்.

அவனிடமிருந்து குழந்தையை வாங்கிய மேகலா, “அப்படியே கீர்த்தி மாதிரியே மூக்கும் முழியுமாக இருக்கிற இல்ல” என்று கூற அவனும் ஒப்புதலாக தலையசைத்தான்.

அதற்குள் கீர்த்தி கண்விழித்த விஷயம் அறிந்து வேகமாக சென்றவன், “உனக்கு பெண் குழந்தை.. அப்படியே உன்னை மாதிரி இருக்கு கீர்த்தி. நான் ரொம்ப சந்தோசமாக இருக்கேன் தெரியுமா?” என்றவன் கண்ணிமைக்கும் நொடியில் அவளின் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தான்.

அதை உணரும் நிலையில் அவளில்லை. அவளின் மனநிலையோ வேறாக இருந்தது. தன் சுமையை இறங்கிவிட்டது என நினைத்தாலும் இனி குழந்தையோடு எங்கே செல்வதென்று மனம் குழம்பிட கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார் மேகலா.

அவரின் கையிலிருந்த குழந்தையை கீர்த்தியிடம் கொடுத்து, “இப்போதான் எனக்கு நிம்மதியாக இருக்கு” என்று கண்ணீரோடு அவளின் நெற்றியில் இதழ் பதித்தார். அதற்கு முன் நடந்த எதுவும் அவருக்கு தெரியவில்லை.

தன் கருவில் சுமந்த குழந்தையை கையில் ஏந்திய கீர்த்தனாவின் கண்களில் கண்ணீர் பெருகிட, “இந்த மாதிரி நேரத்தில் அழுக கூடாது” என்று அவளை சமாதானம் செய்தார். அதன்பிறகு அவள் சோர்வுடன் உறங்கிவிடவே குழந்தையைத் தன் பொறுப்பில் வைத்து கொண்டான்.

பால் கொடுக்கும் நேரம் தவிர மற்ற நேரம் அவனின் கையில் தான் குழந்தை இருந்தது. கீர்த்தியை டிச்டார்ச் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். இதில் பத்துநாள் ஓடி மறைய சிந்தனையோடு அமர்ந்திருந்தவளிடம் பேச வந்தார் மேகலா.

“கீர்த்தி இன்னும் பதினைந்து நாளில் உனக்கு காலேஜ் ஸ்டார்ட் ஆகுது” என நினைவுபடுத்தினார்.

அவள் மெளனமாக அவளையே பார்க்க, “நீ குழந்தைப் பற்றி இனிமேல் யோசிக்காதே. உன்னோட எதிர்காலத்தை மட்டும் பாரு. இங்கிருந்து போய் ஒழுங்க படிச்சு ஒரு நல்ல வேலைக்கு போ. அதுக்குப்பிறகு திருமணம்னு சொன்னால் உனக்கு என்ன தோணுதோ அதை மட்டும் செய்” என அவளின் தலையை வருடியபடி கூறினார்.

“அப்போ குழந்தை” என்று கேட்டவளை பார்க்க பாவமாக இருந்தது.

ஆனால் அவளிடம் கோபத்தை காட்ட மனசில்லாமல், “நீ குழந்தையோடு போனால் உன்னை யாரும் உத்தமின்னு சொல்ல மாட்டாங்க. உன்னை பாசத்தோடு வளர்த்த உன்ன பெத்தவங்க உன்னை தூக்கி எறிவாங்க. அப்போ குழந்தையை வளர்க்க என்ன செய்வ கீர்த்தி” என கேட்க அவர் சொன்னதை யோசித்தவளுக்கு வாழும் வழி தெரியவில்லை.

பக்குவமற்ற வயதில் யாரோ செய்த தவறுக்கு தான் சிலுவையை சும்மா வேண்டி இருக்கிறதே என்ற கழிவிரக்கம் கண்ணீரை வரவழைத்தது.

“அர்ஜூன் என்ற பெயரைத் தவிர மற்ற அனைத்தும் பொய். அதனால் அவனை தேடி போவது நடக்காத காரியம். அதே நேரத்தில் குழந்தையோடு நீ வாழ நினைப்பது நடக்காது கீர்த்தி. இது பொல்லாத உலகம். இங்கே அர்ஜூன் மாதிரி நிறைய பேர் இருக்காங்க” என்ற கசப்பான நிதர்சனத்தை அவளுக்கு போதித்தார்.

பிறகு அவளின் கையில் அழுத்தம் கொடுத்து, “நீ படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு போ. அப்போ உனக்கு ஒரு தெளிவு கிடைக்கும் அதுபடி முடிவெடு. உன்னை உனக்காக நேசிக்கும் ஒருவன் கட்டாயம் வருவான். அவனுக்கு மட்டும்தான் உன் மனநிலை புரியும்” என கூறி அவளை அங்கிருந்து கிளம்ப சொன்னார்.

அவள் அழுகையுடன் போக மறுத்து, “என் குழந்தையை ஒரே முறை என் கண்ணில் காட்டுங்க அம்மா” என்றாள் தாய் பாசத்தின் மிகுதியில்..

தன் நெஞ்சைக் கல்லாக்கிக்கொண்டு, “ம்ஹும் நீ குழந்தையைப் பார்த்தால் அதை வளர்க்க போறேன்னு சொல்லி உன் எதிர்கால வாழ்க்கையை வீணடிச்சுக்குவ. அப்புறம் நான் செய்த உதவி அனைத்தும் வீணாய் போய்விடும். அதனால் நீ குழந்தை முகத்தை பார்க்க நினைக்காதே” என மிரட்டி அவளுடன் சென்று வழியனுப்பி வைத்துவிட்டு வந்தார்.

அவள் செல்லும் வரை குழந்தைப் பற்றி யோசிக்காத மேகலா கவலையோடு வீடு திரும்பியவர், “நான் செய்வது சரியா தவறான்னு என் மனசாட்சிக்கு தெரியும். அந்த பொண்ணோட வாழ்க்கை நல்லா இருந்தால் அது போதும்” என புலம்பியவர் கவலையுடன் மனதை தேற்றிக் கொண்டார்.

கீர்த்திக்கு நல்வாழ்வு அமைய வேண்டும் என நினைத்தவருக்கு அப்போதுதான் குழந்தையின் நினைவு வரவே, “அரவிந்தனிடம் குழந்தையை விட்டுட்டு போனேன். இந்நேரம் குழந்தைக்கு பசி எடுத்து இருக்குமே” என பதறியடித்துக்கொண்டு வேகமாக மாடியேறி சென்றார்.

அங்கே அவர் கண்ட காட்சியில் திகைத்து நின்றார்.

அரவிந்தன் குழந்தையை குளிக்க வைத்து அலங்காரங்களை முடித்து மடியில் போட்டு பால் டப்பாவில் குழந்தைக்கு பால் புகட்டி கொண்டிருந்தான்.

அவன் பேசும் வார்த்தைகள் புரியாத போதும் அவன் சொல்வதற்கு கைகால்களை உதைத்தபடி கதைகேட்டது குழந்தை. இருவரும் அவர்களுக்கான தனி உலகில் சஞ்சரித்து இருக்கும் காட்சியைப் பார்க்கவே அழகாக இருந்தது.

தந்தை – மகள் போன்றொரு தோற்றத்தை உருவாக்கிட சட்டென்று தன் சிந்தனையிலிருந்து விடுபட்டு, “நீ கீர்த்தியிடம் குழந்தையைக் கேட்டபோது விளையாட்டாக நினைச்சேன் கண்ணா. ஆனால் குழந்தையை இவ்வளவு அக்கறையுடன் பராமரிப்பதைப் பார்க்கும்போது மனசுக்கு சந்தோஷமாக இருக்கு” என்றவரின் குரல்கேட்டு நிமிர்ந்தான்.

கதவின் அருகே நின்றிருந்தவரை பார்த்தும், “உங்க கடமையை சரியாக செஞ்சிட்டு வந்த மாதிரி தெரியுதே வார்டன் அம்மா” என்றான் குறும்புடன்.

கீர்த்தனாவை அங்கிருந்து அனுப்பியதை அவன் மறைமுகமாக சொல்வதைக் கவனித்தவர், “நான் வார்டன் என்று உனக்கெப்படி தெரியும்?” திகைப்புடன் அவனை ஏறிட்டார்.

“உங்களை அவள் அம்மான்னு சொன்னாலும் அதில் உயிர்ப்பு இல்லை. சில நேரங்களில் பயத்துடன் வார்டன் என்று உச்சரித்தது, தனக்கு தெரியாமல் தன்னைப்பற்றி அவள் கூறிய சில விஷயங்களை வைத்து நானே யூகித்தது தான்” என்றான் சாதாரணமாக.

ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்த சேரில் அமர்ந்தவர், “நீ சொல்வது உண்மைதான். கீர்த்தி என்னோட மகளில்லை. அதே நேரத்தில் அவன் சொன்னது அனைத்தும் பொய் என்று தெரிந்தபிறகு அவனை எங்கிருந்து தேடுவது? அவளுக்கு நடந்த அவலத்தை வெளியே சொல்லவோ அதை செய்தவனை தேடவோ எங்களுக்கு அவகாசமும் கிடைக்கல. அவள் கருவுற்று இருந்த விஷயமே ஆறு மாதமான பிறகுதான் எங்களுக்கு தெரிந்தது” என தனக்கு தெரிந்த விஷயத்தை மேலோட்டமாக சொல்ல மெளனமாக அமர்ந்திருந்தான்.

சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவிட, “காலேஜ்ல ரொம்ப நல்லா படிக்கும் பொண்ணு என்பதால் இந்த உதவியைச் செய்தேன். இப்போ குழந்தையோட முகத்தைக் கூட கண்ணில் காட்டாமல் அனுப்பிட்டேன்” என கவலையுடன் தன் மனபாரத்தை அவனிடம் இறக்கி வைத்தார்.

தன் மடியில் படுத்திருந்த குழந்தையின் மீது பார்வையை பதித்த அரவிந்தனின் முகம் கனிந்தது. யாரோ செய்த தவறுக்கு குழந்தையை பாவம் சொல்வது தவறு. அதே நேரத்தில் மேகலாவின் கூற்றும் அவரை யோசிக்கவே வைத்தது. கீர்த்தனாவின் படிப்பும், பக்குவமற்ற வயதையும் நினைத்து அவரெடுத்த அந்த முடிவு சரியாக தோன்றியது.

“அம்மா இந்த குழந்தையை என்ன செய்ய போறீங்க?” அவரின் முகத்தில் பார்வையைப் பதித்துக் கேட்டான்.

ஒரு பெருமூச்சுடன், “நல்ல ஒரு ஆசரமத்தில் சேர்க்கலாம்னு நினைக்கிறேன். இந்த வயதில் குழந்தையை வளர்க்க என்னால் முடியும்தான். எனக்கு மற்றவர்கள் மாதிரி பின்னணி என்று சொல்ல ஒன்றுமே இல்ல. அந்த வார்டன் வேலை கூட தற்காலிகமாக சேர்ந்தது தான். இந்தமாதிரி சூழ்நிலையில் குழந்தையை வளர்க்க முடியும்னு எனக்கு தோணல” என்று கூறினார்.

அடுத்து அவன் சொன்னதைகேட்டு அதிர்ச்சியின் உச்சிக்கு சென்றார் மேகலா. தன் முடிவில் மாற்றம் இல்லை என்பதுபோல அவரின் பதிலை எதிர்பார்த்தான் அரவிந்தன்.