Thanimai – 8

8f75b4c2558e1fc485845c268d5be77f-c9a832a5

கீர்த்தனாவின் கண்டிசன்

மௌனிகா பேசுவதை காதில் வாங்காமல் கற்சிலை போல அமர்ந்திருந்தவளின் மனம் உலைகலன் போல் கொதித்தது.

 ‘ஐயோ யாரிடமும் சொல்லவும் முடியாமல், நடந்ததை மறக்கவும் முடியாமல் ச்சே.. இந்த லட்சணத்தில் கல்யாணம் பற்றி வேற பேசறாங்க. தவறு செய்தவன் எங்கோ சந்தோசமாக இருக்க ஒரு பாவமும் செய்யாமல் சிலுவையை சுமக்கிறேனே! சுமையை இறக்கி வைப்பதாக நினைத்து நிம்மதியை தொலைச்சிட்டு நிக்கிறேன்’ என்று மனம் கதறியது.

 “கீர்த்தி” தந்தையின் குரல்கேட்டு திரும்பிப் பார்த்தாள். 

வீட்டின் வாசலில் செல்வியும், ராமலிங்கமும் நிற்பதைக் கண்டு, “வாங்க” என்று இருவரையும் பொதுவாக வரவேற்று ஹாலில் அமர வைத்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். 

அவள் காபி போட்டு எடுத்து வரும்போது மௌனிகா குளியலறைக்குள் இருந்து வெளியே வந்து இருவரையும் வரவேற்றாள்.

 அவர்களின் எதிரே அமர்ந்த கீர்த்தனாவை ஓரக்கண்ணால் பார்த்த செல்வி அவளின் தெளியாத முகத்தை வைத்தே விஷயத்தை ஓரளவு யூகித்து, “என்ன முடிவெடுத்து இருக்கிற?” என்றார் நேரடியாகவே.

வீட்டிற்கு வந்ததும் வராததுமாக மகளிடம் திருமணம் பற்றி பேசும் மனைவியின் மீது கோபம் வரவே, “செல்வி என்ன பழக்கமிது” என்று அதட்டினார்.

அதை கண்டுகொள்ளாமல், “நீங்க உங்க மகளுக்கு சப்போர்ட் போடும் எண்ணமிருந்தால் என்னிடம் பேச வேண்டாம். எனக்கு இன்னைக்கே இதுக்கொரு முடிவு தெரியணும்” என்றவரின் பார்வையில் அனல் பறந்தது.

அவரின் கோபத்தை நேரில் கண்ட மௌனிகா தன் தோழியை ஏறிட்டாள். அவளோ சலனமே இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். 

அதிலிருந்தே ஏதோவொரு குண்டைத்தூக்கி போட போகிறாள் என்று நினைத்தாள்.

தன் தாயை ஏறிட்ட கீர்த்தனா, “அம்மா உங்க கேள்வியில் நியாயமிருக்கு. ஆனால் நீங்க பார்த்த எந்த மாப்பிள்ளையும் எனக்கு பிடிக்கல” தாய்க்கு வலை விரித்தாள்

அவளின் பேச்சிற்கான உள்நோக்கத்தை உணராமல், “உனக்கு எப்படி மாப்பிள்ளை வேண்டுமென்று சொல்லு. அதே மாதிரி நானும் பார்க்கிறேன்” அவள் விரித்த வலையில் தானாக வந்து விழுந்தார்.

“அது உங்களால் முடியாதும்மா” என்றாள் சர்வ நிச்சயமாக.

“அதெல்லாம் முடியும். சும்மா காரணம் சொல்லி தப்பிக்க நினைக்காதே” என்று மகளின் மீதான கோபத்தில் வார்த்தையை விட்டார். 

ராமலிங்கம் தன் மகளின் மனநிலை புரியாமல் இருவரின் இடையே நடக்கும் சண்டையை மட்டும் வேடிக்கை பார்த்தார்.

மௌனிகா சிந்தனையோடு அமர்ந்திருக்க, “கல்யாணமாகி கையில் குழந்தையோடு  மனைவியை இழந்து நிற்கும் நபரை கை காட்டுங்க. நான் உடனே ஓகே சொல்றேன்” அமைதியாக அணுகுண்டைத் போட்டாள்.

ராமலிங்கம் அதிர்ச்சியில் சிலையாகிவிடவே, ‘இவ என்ன இப்படி சொல்லிட்டா’ மௌனிகா திகைப்புடன் தோழியை ஏறிட்டாள்.

அடுத்த நிமிடமே செல்வி கோபத்துடன் எழுந்து வந்து, “ஏண்டி இப்படி வாழ வெட்டியாக இருப்பவனுக்கு வாழ்க்கை கொடுக்கத்தான் நான் உன்னை பெற்று வளர்த்தேனா?” என்று மகளின் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தார்.   

அவர் கையை உதறிவிட்டு நகர்ந்து நின்றவரின் பார்வை அவளின் சிவந்த கன்னங்களில் பதிந்தது. இத்தனை வருடங்களாக இல்லாமல் மகளை அடித்துவிட்டதை நினைத்து மனம் மருகிட, “கீர்த்தி நீ ஏன் இப்படி பேசற? அம்மா வேணும்னு உன்னை அடிக்கலடி. நீ அப்படி பேசியதும் ஒரு கோபத்தில்” என்றவர் மகளை இழுத்து அணைத்து கொண்டார். 

தாயின் வயிற்றில் முகம் புதைத்து அழுத கீர்த்தனா, “எனக்கும் கனவுகள் இருந்துச்சும்மா. ஆனால் இப்போ எல்லாமே கானல் நீராக மாறிபோச்சு. உங்களுக்கு சொன்னால் புரியுமான்னு சத்தியமா தெரியலம்மா. நானே இப்படியொரு முடிவிற்கு வருவேன்னு நினைக்காதபோது.. அம்மா என் இழப்பை புரிஞ்சிக்கோ.. ப்ளீஸ் அம்மா..” என்றவளின் கண்களில் கண்ணீர் பெருகியது.

நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கும் அவளின் அழுகை கண்டு தன்னை தேற்றிக் கொண்டவர், “உன் விருப்பம் படியே மாப்பிள்ளை தேடுறேன் நீ அழுகாதே பாப்பா.. அம்மா உன்னை திட்டினாலும், அடித்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கிற மாதிரி உன்னோட இந்த முடிவிற்கு பின்னாடியும் ஏதோவொரு காரணம் இருக்கும்னு நம்புகிறேன்” என்றவர் அவளின் முகத்தை நிமிர்த்தி கண்ணீரை துடைத்துவிட்டு நெற்றியில் இதழ் பதித்தார்.

தாய்க்கும், மகளுக்கு நடந்த சண்டை முடிவிற்கு வரவே, “அப்பா” என்ற அழைப்புடன் ராமலிங்கத்தின் அருகே சென்று அமர்ந்தாள் கீர்த்தனா.

அவளின் முடிவிற்கு பின்னால் மறைந்திருக்கும் ரகசியம் என்னவென்று புரியாதபோதும் மகளை மார்புடன் அணைத்தபடி மெளனமாக இருந்தார். 

அவரின் கரங்கள் மகளின் தலையை வருடிவிட கண்ணீரோடு தந்தையின் தோளில் சாய்ந்தாள் மகள். 

இருவருக்கும் இடையே மௌனம் ஆட்சி செய்ய, “என்னங்க கீர்த்தி மீது கோபமா” என்ற கேள்வியுடன் கணவனின் அருகே அமர்ந்தார் செல்வி.

இடது கையால் மனைவியின் கரத்தை பிடித்து அழுத்தி, “அவ இப்படியொரு வார்த்தை சொல்றன்னா அதுக்கு பின்னாடி அவள் எவ்வளவு பெரிய வலியை அனுபவித்து இருப்பாளென்று புரியுது செல்வி. நான் என்னைக்கும் அவ விருப்பத்திற்கு மறுப்பு சொல்ல மாட்டேன்” என்றவர் மகளின் நெற்றியில் இதழ்பதித்து அமைதியாக இருந்தார்.

ஒருப்பக்கம் தன் மகளின் முடிவு அவருக்கு வேதனையை கொடுத்தபோது காரணமே இல்லாமல் அரவிந்தனின் முகம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. 

கீர்த்தனாவின் கண்டிசனுக்கு அரவிந்தன் பொருந்தி போனான். தன் மனையாளிடம் சொல்லி சம்மதம் வாங்க சில நாட்கள் தேவைப்படும் என்ற முடிவிற்கு வந்தார்.

அன்றைய இரவு மௌனிகா சாப்பாடு செய்து மூவரையும் சாப்பிட அழைத்தாள். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட பிறகு, “பசியில்லம்மா நீ சாப்பிட்டுவிட்டு படு” என்றார் செல்வி.

தாயின் மனவேதனை புரிய கலங்கிய கண்களோடு நிமிர்ந்த கீர்த்தனா, “இரண்டு பேரும் எழுந்து வாங்க சாப்பிடலாம். மற்ற விஷயங்களை எல்லாம் ஓரம்கட்டி வைங்க” என்று பட்டென்று எழுந்து குளியலறைக்குள் புகுந்தாள்.

சிறிதுநேரத்தில் முகத்தை அலம்பிவிட்டு வந்தவள் மூவரையும் அமர வைத்து சாப்பாடு பரிமாறினாள். 

ராமலிங்கம் மகளையும் இழுத்து உட்காரவைத்து, “நீயும் சாப்பிடு” என்றார். நால்வரும் அமைதியாக சாப்பிட்டுவிட்டு எழுந்தனர்.

கணவனும், மனைவியும் ஹாலில் பாய் விரித்து படுத்துக்கொள்ள பெண்கள்  இருவரும் தங்களின் அறைக்குள் சென்றனர். 

மௌனிகா படுத்தும் உறங்கிவிட கீர்த்தனாவிற்கு தான் தூக்கம் வர மறுத்தது. தான் எடுத்த முடிவு சரியா என்ற சிந்தனையில் சுவற்றில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்தாள்.

கடிகாரமுள் நகரும் சத்தம் மட்டுமே அந்த அறையில் கேட்டது. அவள் கூறிய வார்த்தைகள் காதோரம் ரீங்காரமிட சட்டென்று அவளின் மனதில் அவனின் முகம் தோன்றி மறைய திடுக்கிட்டுப் போனாள். முகத்தில் முத்து முத்தாக வேர்த்துவிடவே, ‘ஐயோ இவரு முகம் ஏன் அடிக்கடி நினைவு வருது?’ என்று யோசித்தவள் வெறும் தரையில் படுத்து உறங்கிவிட்டாள்.

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது. செல்வி எழுந்ததும் பிள்ளைகள் இருவருக்கும் சமையலை முடித்து விட்டு வீட்டுக்கார அம்மாவிடம் சிறிதுநேரம் பேசினார். 

அவர்கள் இருவரும் குளித்து தயாராகி வெளியே வர, “பாப்பா நாங்க ஊருக்கு கிளம்பறோம்” என்று அறிவித்தார் ராமலிங்கம்.

தந்தையிடம் ஏற்கனவே இந்த பதில் வருமென்று தெரிந்ததால், “ஒருவாரம் தங்கிட்டுப் போங்கப்பா” என்றாள் கீர்த்தனா. 

செல்வி பொறுமையாக கணவனை பார்த்துவிட்டு, “இல்லடா ஊரில் வேலை நிறைய இருக்கு. நாங்க போனால் தான் சரிவரும்” என்று சமாளித்தார். 

அவர்களை போகவேண்டாம் என்று சொல்ல வார்த்தை தொண்டை குழிவரை வந்தது. ஆனால் சொல்ல முடியாமல் சரியென்று தலையசைத்துவிட்டு மௌனியுடன் கிளம்பிவிட்டாள் கீர்த்தனா.

அவளின் முகம் கல்லாக இறுகி கிடப்பதை கண்ட மௌனிகா, “ஏண்டி இப்படியொரு முடிவெடுத்த? உன்னோட அப்பா, அம்மா இருவருக்கும் இந்த விஷயம் எவ்வளவு கவலை தரும்னு தெரியுமா?” என்று பேருந்தில் அமர்ந்தபடி கேட்டாள்.

“உன்னைவிட எனக்கு நல்லாவே தெரியும். ஆனால் அதுக்காக என் முடிவை மாற்ற முடியாது மௌனி” என்று தீர்க்கமான குரலில் கூறியவள், ‘ஏனென்றால் என்னோட இழப்பு அத்தகையது. எந்தவொரு பெண்ணும் எடுக்காத முடிவுதான். இதைவிட்டால்  எனக்கும் வேற வழி தெரியலையே’ என்று மனதினுள் நினைத்தாள்.

அவளை விசித்திரமாக பார்த்த மௌனிகா, ‘காலேஜ் டேயில் இருந்து கூடவே இருக்கேன். எனக்கே தெரியாமல் என்ன ரகசியத்தை ஒளிச்சி வச்சிருக்கிற?’ என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள்.

சில நேரங்களில் விதிகளை கடந்து சில நிகழ்வுகள் நடக்கும்போது ‘விதிவிலக்கு’ என்று சொல்வோம். 

அப்படிதான் கீர்த்தனாவின் வாழ்க்கையில் அவளின் கனவுகளை கடந்து சில நிகழ்வுகள் நடந்துமுடிய இப்படியொரு கொள்கையை கடைபிடிக்கும் பெண்ணாக மாறிவிட்டாள்.

கணவனும் மனைவியும் ஊர் வந்து சேர்ந்து  ஒரு வாரம் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் சென்றது. 

ராமலிங்கம் அரவிந்தனை பற்றி பேச நினைத்து வாயெடுக்க, “தரகரிடம் கீர்த்தனாவின் ஜாதகத்தை கொடுத்துடுங்க. அவ சொன்னதை தெளிவாக அவரிடம் சொல்லுங்க” என்று  கணவனிடம் கொடுத்தார்.

“அதுக்கு முன்னாடி உன்னிடம் அரவிந்தன் பற்றி பேசணும் செல்வி” என்றவர் சொல்ல, 

“இங்கே பாருங்க தெரிஞ்சவங்களுக்கு பொண்ணு கொடுத்தால் ஆயிரத்தெட்டு கேள்வி வரும். அதுவும் உங்க மகள் எடுத்திருக்கும் முடிவுக்கு இன்னும் யார் யாருக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமோ” என்று கணவனிடம் பொரிந்து தள்ளியவர்,

“அவ தலைவிதி எதுவோ அதுபடி நடக்கட்டும். நீங்க நான் சொன்னதை மட்டும் செய்ங்க” என்று கணவனிடம் கூறிய செல்வி சமையலறைக்கு சென்றுவிட ராமலிங்கம் சிலநொடிகள் ஹாலில் நின்று மனைவியை பார்த்தார்.

செல்வி சொல்வதில் தவறில்லையே. ஒரு தந்தையாக அவரால் ஜீரணிக்க முடியாத விஷயத்தை தன்னவள் எப்படி இவ்வளவு இயல்பாக எடுத்துக் கொண்டாள் என்று புரியாமல் குழம்பினார். 

அங்கே சமையலறையில் நின்றிருந்த செல்வியின் கண்கள் கலங்கியது. செல்லம் கொடுத்து வளர்த்த மகளின் வருங்காலம் நினைத்து வருந்தியவர் சேலை தலைப்பில் கண்ணீரை துடைத்துவிட்டு வேலையில் ஈடுப்பட்டார்.

கீர்த்தனாவின் போட்டோ, ஜாதகம் இரண்டையும் எடுத்து சென்று தரகரிடம் விவரத்தை சொல்லி கொடுத்துவிட்டு தறிபட்டரைக்கு சென்ற ராமலிங்கம் மனமோ அரவிந்தனை நினைத்தது.

‘அவன் அங்கே குழந்தையை வச்சிட்டு கஷ்டப்படுகிறான். கீர்த்தனாவை அவனுக்கே கட்டி வைக்கலாம் என்று நினைத்தாலும் இப்போதைய சூழ்நிலையில் செல்வியை சம்மதிக்க வைக்க முடியாது. அவ தலையில் அரவிந்தன் தான் கணவனாக வரணும்னு எழுதியிருந்தா அதை யாரால் மாற்ற முடியும்’ என்று தன் வேலையைத் தொடர்ந்தார்.

இங்கே நிர்மலாவும் விக்கிக்கும், அரவிந்தனுக்கும் பெண் தேடிக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு ஜாதகமும் சரியில்லாமல் அமைய சோர்வடையாமல் இலக்கை நோக்கி பயணித்தார். 

இந்நிலையில் தான் தரகரிடமிருந்து சில பெண்ணின் ஜாதகங்கள் அவரின் கைக்கு கிடைத்தது.

அன்று விடுமுறை என்பதால் விக்னேஷுடன் பேசிக்கொண்டு இருக்கலாம் என்ற எண்ணத்தில் மகளோடு நிர்மலாவின் வீட்டிற்கு சென்றான் அரவிந்தன்.  

தாயும், மகனும் கையில் போட்டோவை வைத்துகொண்டு தீவிரமாக விவாதித்தில் ஈடுபட்டிருந்தனர். 

“அம்மா இந்த பொண்ணு என் நிறத்துக்கு மேச் ஆகமாட்டா” தாயிடம் போட்டோவை கொடுத்தான்

“இந்த குள்ள கத்திரிக்காவை எல்லாம் எதுக்கு பொண்ணுன்னு காட்டுறீங்க” என்று எரிந்து விழுந்தான்.

அடுத்ததாக இருந்த புகைப்படத்தை பார்த்து, “இந்த பொண்ணு அழகாக இருக்கு ஆனால் இவளோட கொள்கை சுத்தமா பிடிக்கல”  விக்னேஷ்  பல புகைப்படங்களை கையில் வைத்தபடி தாயிடம் குறை சொல்லி கொண்டிருந்தான்.

“என்ன விக்கி சத்தம் ரோடு வரை கேட்குது?” என்ற கிண்டலோடு அவனின் அருகே சோபாவில் அமர்ந்தான் அரவிந்தன். 

உதயா உடனே விக்கியிடம் தாவிவிடவே, “இந்த மாமாவுக்கு ஏற்ற அத்தை யாருன்னு நீங்க செலக்ட் பண்ணுங்க” என்று அவளிடம் கல்யாண பெண்ணின் புகைப்படங்களை கொடுத்தான். 

அவள் ஒவ்வொன்றாய் பார்த்துவிட்டு, “வியாக் எனக்கு யாரையுமே பிடிக்கல மாமா” என்று கீழே போட ஆண்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.

“அவனை சம்மதிக்க வைக்க நான் படும் போராட்டம் உனக்கெங்கே புரிய போகுது..” என்று சலித்துக் கொண்டு போட்டோகளை கையில் எடுத்தார்.

“இங்கே கொடுங்க நான் பார்க்கிறேன். ஒரு பொண்ணு கூடவாடா பிடிக்கல” என்ற கேள்வியுடன் புகைப்படங்களை ஒவ்வொறாக பார்த்தான். 

அப்போது டீம்பாயில் இருந்த போட்டோ ஒன்று கண்ணில் பட அதை கையில் எடுத்தான்.

“ஏய் அரவிந்தா அதை கீழே வை. அந்த பொண்ணும் அவளின் கொள்கையும்” காரணமே இல்லாமல் எரிந்து விழுந்த மகனிடம் வேறொரு கவரை நீட்டினார் நிர்மலா.

அவன் அதை வாங்கி பார்வையிட, “ஏனம்மா இவன் இவ்வளவு காண்டாகிறான்” என்று புரியாமல் கேட்டான்.

“அந்த பொண்ணுக்கு கல்யாணமாகி கையில் குழந்தையுடன் இருக்கும் மாப்பிள்ளைதான் வேணுமாம்” என்றவர் உதயாவை தூக்கிக்கொண்டு சமையறைக்குள் சென்றார்.

அவர் சொன்ன வார்த்தைகள் அவனின் காதில் ரீங்காரமிட, “இப்படியும் ஒரு கொள்கையா?” வாய்விட்டு கூறியபடி போட்டோவைத் திருப்பிப் பார்த்த அரவிந்தன் இன்ப அதிர்ச்சியில் சிலையென உறைந்தான். 

வான புளூ கலர் சேலையில் சோலையாக நின்றிருந்த கீர்த்தனாவை கண்டவுடன், ‘நீதானா?’ என்ற கேள்வி மனதினுள் எழுந்தது. 

தன் குடும்பத்தை இழந்தபிறகு எட்டு மாத இருள் வாழ்க்கைக்கு வெளிச்சம் வர காரணமானவள்.

அவளோடு அதிகம் பேசியதில்லை. ஆனால் அவளின் உணர்வுகளை புரிந்து வைத்திருந்தான். இருபது நாள் பழக்கம் கூட இருக்காது. அவள் தன்னுள்  ஏற்படுத்திவிட்டு சென்ற தாக்கம் இன்னும் மறையாமல் இருந்தது. 

அரவிந்தன் நிலையைக் கண்ட விக்னேஷ், “உனக்கு இந்த பெண்ணைத் தெரியுமா?” என்று கேட்டான். 

சட்டென்று கடந்தகால நினைவுகளின் தாக்கத்திலிருந்து மீட்டுக்கொண்டு மறுப்பாக தலையசைத்தான்.

இருவரின் குரல்கேட்டு ஹாலிற்கு வந்த நிர்மலாவிடம் போட்டோவை கொடுத்து, “இந்த பொண்ணைப் பாருங்கம்மா. இவங்க வீட்டில் பேசிட்டு ஒரு முடிவு சொல்லுங்க” என்று பட்டென்று முடிவெடுத்தவன் தன் குழந்தையைத் தூக்கிகொண்டு சென்றான்.

அரவிந்தன் சட்டென்று சம்மதம் தெரிவித்தது அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

திருமணமே வேண்டாம் என்ற முடிவில் இருந்தவனின் திடீர் முடிவு அவருக்குள் கேள்வியை எழுப்பினாலும், மலரும் அவனின் வாழ்க்கையை காண ஆசைகொண்டவர் அமைதியாக பெண்ணின் புகைப்படத்தில் பார்வையை பதித்தார்.

 “அம்மா இந்த பொண்ணு எனக்கு ஓகே” என்று மற்றொரு புகைப்படத்தை தாயிடம் நீட்டினான் மைந்தன்.

அதில் மௌனிகா சுடிதாரில் இருப்பதை கண்டவர், “இரண்டு பேரின் வீட்டிலும் பேசறேன். இப்படியாவது என் பிள்ளைகள் வாழ்க்கையில் வெளிச்சம் வந்தால் சந்தோசம் தான்” என்றவர் அடுத்து செய்ய வேண்டிய வேலையை மனதில் திட்டமிட்டபடி வீட்டு வேலைகளை கவனித்தார்.