thirumana malargal tharuvaya?

thirumana malargal tharuvaya?

திருமண மலர்கள் தருவாயா?

– அபிராமி

வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை
எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

ஓ காதல் கண்மணி படத்தின் பாடல்தான். வைரமுத்துவின் வரிகளில் எ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்த பாடல்தான். வரிகளால் பாடல் அருமையாக உள்ளதா? அல்லது இசையால் பாடல் அருமையாக உள்ளதா? அல்லது பாடுபவளின் பாவத்தால் பாடல் மனதிற்கு இதம் தந்ததா? அந்தப் பங்களா முழுக்க, இந்தப் பாடலை இருபதிற்கும் மேல் கேட்டுக் கொண்டிருப்பவர்களிடம் இக்கேள்வியைக் கேட்டால், நிச்சயம் ஒருவர்கூட பதில் சொல்லத் தெரியாமல் முழிப்பார்கள். காரணம் மனதிற்கு அத்தனை இதமாகப் பாடிக்கொண்டிருந்தாள் ஆராதனா.

தினமும் கோவிலில் நாம் எல்லாரும் ஆராதிக்கும் அம்மன் சிலை போன்ற அழகு கொண்டவள் அவள். கைதேர்ந்த சிற்பி வடித்த அம்மன் சிலையாக விளங்குபவள் அவள். உலகளிலுள்ள அத்தனை ஜீவனிற்கும் தாயாக விளங்கும் அந்தப் பார்வதி தேவியின் அன்பு எப்படி பட்டதாய் இருக்கும் என்று யாரேனும் கேட்டால் அந்தக் குடும்பத்தினர் எடுத்துக்காட்டாக அவளைத்தான் சொல்லுவார்கள். அன்பென்ற வார்த்தைக்கு அர்த்தமாய் விளங்குபவள் அவள்.

அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் அவளது பாடலால் கவரப்பட்டு, தாங்கள் செய்துகொண்டிருந்த வேலையைக் கூட மறந்து போய் இருந்தனர். எப்படி கண்ணனின் புல்லாங்குழல் இசைக்குக் கோபிகைகள் மெய்மறந்து நிற்பார்களோ அப்படி நின்று கொண்டிருந்தனர். அவளது குரலில்தான் எத்தனை வசீகரம் இருந்தது.

“எத்தனை விலை உயர்ந்த பொருளை நாம் மற்றவர்களுக்குக் கொடுத்தாலும் இன்னும் இன்னும் வேணும் என்றுதான் அவர்களுக்குத் தோன்றுமே தவிர, ஆஹா இந்தப் பொருளை நம்மிடம் கொடுத்துருக்காங்களே என்று யாருக்குமே தோன்றாது. அது மனிதனா பிறந்தவனோட இயல்பு. அதை நாம் குற்றமாகவும் சொல்ல முடியாது. வேணும்ங்கிற அளவு கொடுத்தா போதும் என்று மனிதன் நினைப்பது, அவன் பசி என்று கேட்கும்போது அவன் வயிறு நிரம்பும் அளவிற்கு சாப்பாடும், அவன் மனசு நோகும்போது ஆறுதலா சொல்லும் வார்த்தையும்தான். அதை நான் என்னால முடிஞ்ச அளவுக்குச் செய்யுறேன். இதுல என்ன தப்பு இருக்கு?” ஆராதனா அடிக்கடி தன்னுடைய தாய் அவளிடம் ‘ஏன் இப்படி வெகுளியாக இருக்க’என்று கேட்கும்போது, அவள் கூறும் வார்த்தைகள்தான் அவை.

இசையில் திளைத்த யாவரும் அவளது மனதில் இருந்த பாரத்தை அறியவில்லை. அதை அவள் அறியவிடவும் முயற்சிக்கவில்லை எனலாம். “நம்ம கஷ்டம் நம்மோடு” என்ற ரீதியில் வலம் வருவாள். அதோடு யாரும் அவளைத் துளைத்தெடுக்கவுமில்லை. சுற்றம் இருந்தும் அவளது மனதை அறிந்து நடக்க அவளுக்கென்ற ஒரு ஜீவன் அங்கே எவரும் இருக்கவில்லை, அவளது தாயைத் தவிர.

ஆராதனா இருபத்தி ஆறு வயது நிரம்பிய யுவதி. அண்ணா, தம்பி, தங்கை, அக்கா, அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, அவர்களது பிள்ளைகள் என்ற கூட்டு குடும்பத்தில் பிறந்த பெண்.

அவர்களது குடும்பம் வக்கீல் குடும்பம். தாத்தா காலம் முதல் அவளது அண்ணாவின் காலம் வரையென மூன்று தலைமுறையாக வக்கீலாக இருப்பவர்கள். ஆராதனா மட்டும் அதில் விதிவிலக்காக இருப்பவள். அவளிற்கு ஏனோ வக்கீலாக இருந்து கோர்ட் கேஸ் என்று ஓடுவது பிடிக்காத ஒரு அங்கமாகவே இருந்தது. அதற்காக அவள் கவலை பட்டதும் கிடையாது.

அவள் வக்கீலாக விளங்கவில்லை என்றாலும் அவள் தனது குடும்பத்தினர் கையில் எடுக்கும் கேஸில் ஏதாவது குழப்பம் நேர்ந்தாலோ, அல்லது கேஸ் கொஞ்சம் சிக்கலாகத் தெரிந்தாலோ, அல்லது அடுத்த கட்டம் எப்படி எடுத்துக் கொண்டு போவது என்று அவர்கள் தடுமாறினாலோ, அவர்களுக்குத் தனது புத்தி சாதூரியத்தால் உதவி செய்து, அந்தக் கேஸில் அவர்கள் வெற்றி பெறவும் செய்துவிடுவாள்.

ஏனோ அவளது நாட்டம் எல்லாம் இன்பத்திலும் துன்பத்திலும் தனக்கு நண்பனாக இருக்கும் இசையின் மீதே இருந்தது. அவளது மனதின் உணர்வுகளை எல்லாம் அவள் பாட்டின் மூலமாக வெளி உலகிற்கு வெளிப்படுத்தியிருக்கிறாள். அவள் மகிழ்வாக இருந்தால் துள்ளலான பாடலைப் பாடுவாள். வருத்தமாக இருந்தாலோ மனதை வருடும் மெல்லிசைப் பாடலைப் பாடுவாள். ஏனோ பாட்டில் மூழ்கும் மக்கள் அவளது உணர்வுகளை எப்போதுமே உணரவில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஏதோ விளையாட்டாக அவள் பாடிக்கொண்டிருக்கிறாள் என்றே நினைத்துக் கொள்வார்கள். அதை அவளும் தப்பாக நினைத்ததுமில்லை.

அவளது கவலைகளுக்கான காரணம் ஒன்றே ஒன்றுதான். மனதை வெள்ளையாகப் படைத்த இறைவன் அவளது நிறத்தையும் அவனைப் போலவே படைத்ததுதான் காரணம். அதுவும் குடும்பத்தில் யாரும் அவளைப் போல் கற்சிலை நிறத்தில் இல்லாமல், சிவந்த பால் நிறத்திலிருந்து, அவள் மட்டும் தனித்து இருப்பது, அவளது கவலையை மேலும் கூட்டியது எனலாம். அதுவும் புறஅழகுக்கு மதிப்பு கொடுக்கும் இந்த உலகத்தில் பிறந்து வாழும் ஆராதனாவின் மன உளைச்சல்களைக் கேட்கவும் வேண்டுமோ?

“ஏன் அண்ணா, அக்கா, தம்பியோட எல்லாரும் சகஜமா பழகிட்டு நம்மக்கிட்ட மட்டும் வித்தியாசமாகப் பழகுறாங்க? எனக்கேன் நெருங்கிய நண்பர் கூட்டம் இல்லாம இருக்கு? ஏன் முன் தினம் வந்த ஆண்ட்டி அம்மாவிடம் நிஜமாகவே நான் அவங்க குழந்தையானு கேட்டாங்க? ஏன் அண்ணன் கூட இப்பொழுது எல்லாம், அவனோட வெளில கூட்டிட்டு போக யோசிக்கிறான்? ஏன் நான் மட்டும் தனியா இருக்குற மாதிரி உணருகிறேன்? ஏன் அம்மா இப்பொழுது எல்லாம் அக்கா தங்கச்சிக்கு கொடுக்காத முகத்திற்கு பூசிக் கொள்ளும் கிரீம் எல்லாம் தந்து என்னை மட்டும் பூசிக்க சொல்றாங்க? ஏன் பெரிய அண்ணா அவன் படிக்கற ஸ்கூலில் நான் படிக்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் பண்ணுகிறான்? ஏன் தாத்தா கூட இப்பொழுது எல்லாம் என்னை அவரோட கோவிலுக்குக் கூட்டிட்டு போக யோசிக்குறாரு?”

இப்படி பட்ட விடை தெரியாத பல கேள்விகள் அவளுள் எப்போதும் சுழலும். சிறுபிள்ளையாக இருந்தபோது விளங்காத பல கேள்விகள், வளர வளர அவளே அந்த விடையைத் தேடி உணர்ந்து கொண்டிருந்தாள். ஆனால் உணர்ந்து கொண்ட விடயம்தான் அவளால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை.

“வெளி அழகுக்கு மதிப்புக்கொடுக்குற இந்த மனிதர்கள், என் மனசுக்கு கொடுத்திருந்தால் நானும் அவங்களில் ஒருத்தியாக இருந்திருப்பேனோ என்னவோ? ஆனா மனித இயல்பு நம்மைப் பற்றி மத்தவங்க என்ன நினைக்குறாங்க என்பதிலேயே இருக்குதே. இதெல்லாம் எப்போ மாறுதோ அப்போதான் என்னை போல கருப்பா பிறக்குறவங்களுக்கு விடிவுகாலம் வருமோ என்னமோ? யாருக்கண்டா என்னைப் புரிந்து கொள்ளும் மனிதர்கள் கூட வரலாம். ஒருவேளை வரவில்லை என்றாலும் கூட அம்மா இருக்காங்க. என்னோட இசை, நான் எப்படி இருக்கேன் என்ன நிறத்தில் இருக்கேன் என்று தெரிந்து கொள்ள விருப்ப படாமல், ஆறுதல் தந்துட்டு தான இருக்கு. இது போதுமே. இந்த வாழ்க்கையை வாழ்வதற்கு. அதோடு அம்மாதான் எனக்கு ஏற்கனவே சொல்லி இருக்காங்கலே நான் எப்படி இருக்கணும்னு. அதுபடி இருந்துட்டு போறேன். இதில் என்ன காசா பணமா செலவழியபோகுது. விடு ஆராதனை. உனக்குன்னு இருக்குறவங்க ஒருத்தன் கூட போதும். அதுகூட இல்லாம அன்புக்காக ஏங்குறவங்க இங்க நிறைய பேர் இருக்காங்க”

தூங்காத இரவுகளில் அவளே அவளைச் சமாதானம் படுத்திக்கொள்ள கூறும் வார்த்தைகள் அவை. ஆணா, பெண்ணா என்று கூட தெரியாமல், முகம்கூட பார்க்காமல் அன்புகொள்ளும் தாயினம்தான், அவளது அத்தனை சோகத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்திருந்ததே. எங்கே சுற்றி இருப்பவரின் ஒதுக்கம் அவளை மனதளவில் பாதிக்குமோ என்று பயந்த அவளது தாய் பிரேமா அவளிற்கு போதிருந்தாள்.

“இங்க பாரு ஆறுமா. உலகத்தில் நிறைய பேர் நாம எப்படி இருக்கோம்னுதான் பார்ப்பார்கள். பர்ஸ்ட் இம்பிரஷன் பெஸ்ட்ன்னு சொல்லுவோம்ல அந்த மாதிரி. அதுக்காக அது எல்லாம் சரினு நான் சொல்லமாட்டேன். ஆனா அதுக்காக அவங்க கூறியதை எல்லாம் நாம நம்ம மனசுல போடுக்க கூடாது. என்னைப் பொறுத்த வரைக்கும் நம்ம கஷ்டப்படுத்துருவங்களுக்கு நாம கொடுக்கற மிகப்பெரிய தண்டனை அவங்க மேல அன்பு வைத்து அதை அவங்க உணர்கிற மாதிரி செய்யறதுதான். எல்லாருமே கெட்டவங்க கிடையாது. ஏதோ நேரம், அவங்க நமக்கு நம்ம மனசு கஷ்டப்படுற மாதிரி பேசிடுறாங்க. அதெல்லாம் மறக்கக் கத்துக்கிட்டாதான் நமக்கும் நல்லது, நம்மைச் சுத்தி இருக்கறவங்களுக்கும் நல்லது”

சிறுவயதில் முதன்முதலில் அவளது நிறத்தைக் கண்டு அவளே வெறுத்தபோது, அவளது அம்மா கூறிய வார்த்தைகள், அவளது பிஞ்சு மனதில் ஆழமாகப் பதிந்து போனது. அன்று முதல் இன்று வரை அவள், அவளின் அம்மா கூறியபடிதான் வாழ்ந்து வருகிறாள். அதையும் மீறி அவளது மனம் சஞ்சலமாகும்போது அவள் நாடுவது மெல்லிசையைதான்.

அன்று அவள் மிகவும் வருத்தமாகப் பாடிக்கொண்டிருந்தாள். பழகிய விடயம்தான் என்றாலும் அன்று அவள் மிகவும் உடைந்து போய் இருந்தாள். பெண் பார்க்கும் நிகழ்வு. ஒவ்வொரு பெண்ணும் வெக்கதோடு எதிர்பார்த்து காத்திருக்கும் வைபவம். ஆனால் ஆராதனாவிற்கோ அது சலிப்புத்தட்டும் விடயமாகவே திகழும். அவளின் பின், அவளது தங்கைக்குக் கூட திருமணம் நிச்சயிக்கப் பட்டுவிட்டதால், மனம் பொறுக்காமல் அவளது தாய் தொடர்ந்து மாப்பிள்ளை வேட்டையைத் கையில் எடுத்திருக்க, இவள்தான் அதில் வெறுப்பின் உச்சத்திற்கு சென்றிருந்தாள்.

“என்னைப் புரிந்து கொள்ள, இத்தனை நாள் கூடவே இருந்த அக்கா, தம்பி, அண்ணா கூட இல்லாதபோது, எங்க இருந்தோ வந்தவன் மட்டும் இருப்பான்னு நான் எப்படி நம்பினேன். எத்தனை அவமானம்? எத்தனை ஏச்சுபேச்சு? எத்தனை அழுகை? எத்தனை தூங்கா இரவுகள்? இத்தனை வருடமாக என்னோட தொடரும் இந்தக் கருப்பி என்கிற அடையாளத்தைத் தாண்டி எனக்கு வேறென்ன கிடைச்சிருக்கு? இன்னும் நான் எதுக்கு இப்படி வாழுறேன்? யாருக்காக இருக்கேன்?” வெறுப்பின் உச்சத்தில் அவள் செல்லும்போது அவள் மனதோடு கேட்கும் கேள்விகள் அவை.

“ஆச்சு. இன்றைக்கோட இருபத்தி நாலு. இப்படியே போனால், அரை சதம் கூட அடிப்பேன்போல” ஆத்திரமும் பச்சாதாபமும் அடங்கிய நொடி, அவளே அவளுக்குப் பயத்தோடு சொல்லிக்கொண்டாள்.

“அம்மா… போதும்மா… எத்தனை பேருதான் பார்ப்பீங்க. தம்பிக்கு இருபத்தி நாலு வயசாச்சு. அவன் ஏதோ பெண்ணை விரும்புவதாகக் கேள்விப்பட்டேன். அவனுக்கு அடுத்து செட்டில் பண்ணுங்கமா. என்னைப் பத்தி யோசிக்காதீங்க!” அவளது பொறுமையும் எல்லையைக் கடந்திருந்தது.

“நல்ல விடயம் சொன்ன அக்கா. உனக்கும் நான் கல்யாணம் ஆகும் ஆகும்னு வெயிட் பண்ணிட்டே இருக்கேன். எங்கே? நடக்கவே மாட்டேங்குது. நிரம்ப கடுப்பாக இருக்குக்கா. பேசாம நான் கல்யாணம் பண்ணிருக்கேன். என்னோட அழகான என் மனைவி வர நேரத்துக்காவது உனக்குக் கல்யாணம் ஆகுதான்னு பார்போம்” தாயும் பெண்ணும் பேசுவதைக் கேட்டு அங்கே வந்த அவளது தம்பி ஆரவ் விளையாட்டு என்ற போர்வையில் அவளது மனதைத் தெய்க்க,

“ஆரவ் அது யாருடா உன் மனைவி? எனக்குத் தெரியாம?” அவளது அக்கா அமிர்தா ஆரவிடம் கேட்க,

“அவள்தான் என் லவ் பண்ற பெண் அக்கா. செம்ம அழகா இருப்பா, தெரியுமா. சுண்டிவிட்டா சிவக்குற அளவுக்கு அழகு. உன்னைவிட அவ அவளோ வெள்ளை” பெருமையாகச் சொன்னான் அவன். ஆராதனா உள்ளுக்குள் உடைவதை அறியாமல். ‘எல்லா பசங்களும் இப்படிதான நினைப்பார்கள். என் பொண்டாட்டி அழகுன்னு. அதான் என்னை யாருக்கும் பிடிக்கல. கருப்பாகப் பிறந்தது என் தப்பா என்ன?’

நினைத்த அடுத்த நொடியே அவள் தெளிந்து இருந்தாள். காலத்திற்கு நன்றி கூற வேண்டுமோ? அவளது மனதை எப்படி அடக்க வேண்டும் என்று கற்று தந்ததிற்கு? “என்ன லூசுத்தனமா யோசிக்கறேன். தம்பி பொண்டாட்டி அழகா வந்த நல்லது தன? ஆனா இந்த ஆரவ் ஏன் நிறத்திற்கு மதிப்பு கொடுக்குறேன். அவனுடை பேசணும்” தீர்மானம் எடுத்திருந்தாள் ஆராதனா.

“ ஆரவ் இன்னிக்கு நீ லீவ்தானடா? கொஞ்சம் பீச் வரை போய்ட்டு வரலாமா?” தானே வந்து ஆராதனா கேட்க, இது அவர்களுள் வாடிக்கைதான் என்று உணர்ந்து கொண்ட ஆரவும் “கிளம்புக்கா போலாம்” என்று புறப்பட்டிருந்தான்.

மெரினா. மனிதனின் மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் அவனது குழந்தை தனத்தையும் வெளிக் கொணர்ந்து வந்து, அவனை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருக்கும் அழகிய நங்கை அவள். ஆராதனாவிற்கு நெருங்கிய நம்பியும்கூட. கால் புதைய புதைய கடல் மண்ணில் நடக்க அவளிற்கு அத்தனை பிடிக்கும்.

ஆள் நடமாட்டம் குறைந்த இடமாகப் பார்த்து அமர்ந்து கொண்டவர்கள், “சொல்லு ஆரவ். உனக்கு ஏன் அந்தப் பெண்ணை அத்தனை பிடிச்சிருக்கு?” சுற்றி வளைக்காமல் நேரடியாக அவள் விடயத்திற்கு வர,

“தெரியாத மாதிரி கேக்குற. அதான் அப்போதே சொன்னேனே. என் ஆளு செம்ம அழகுன்னு”

“சொன்னதான்டா. ஆனா அவளை உனக்குப் பிடிக்க வச்சது அவளோதானாயென?” கிண்டலாக இவள் கேட்க, “வேறென்ன பிடிக்க இருக்கு?” என்று கூறி முகம் சுளித்தான்.

“அப்போ நான் கேட்குற கேள்விக்குப் பதில் சொல்லு. அவளுக்கு ரொம்ப பிடிச்ச நிறம் என்ன? அவளுக்கு உங்கிட்ட ரொம்ப பிடிச்ச விடயம் என்ன? அவளோட வீடு எங்க இருக்கு? அவளுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடு என்னது? அவளுக்கு ஒத்துக்காத வடயம் என்ன? அவள் எதைப் பார்த்து ரொம்ப பயப்படுவா? அவளுக்கு எதைப் பண்ணினா ரொம்ப கோவம் வரும்? அவளோட வாழ்க்கை லட்சியமா என்ன வச்சிருக்கா? அதுக்கு நீ எப்படி அவளுக்கு உதவபோர? எல்லாத்துக்கும் பதில் சொல்லவில்லை என்றாலும் அட்லீஸ்ட் ஒன்னுக்காச்சும் சொல்லுடா!”

புருவங்கள் முடிச்சுட்டு ஆரவ் அப்படியே அமர்ந்திருந்தான். காரணம் அவனிற்கு ஒன்றிற்கு கூட பதில் தெரிந்திருக்கவில்லை. “என்ன ஆரவ் ஒண்ணுக்கு கூட பதில் தெரியல தான?” கேட்ட ஆராதனாவை அவன் ஆச்சரியமாகப் பார்த்தான்.

“எப்படி எனக்குத் தெரிஞ்சுருக்கும்னு பார்க்குறியா? தெரியும்டா. உனக்கு அவ அழகா இருக்காங்கிற ஒன்று மட்டும் லவ் பண்ண போதுமானதா இருக்கலாம். ஆனா அதுவே நாளைக்கு கல்யாணமானா, அவளுக்கு நீ உனக்கு அவ என்று வாழும்போது, அப்போது நான் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் தெரிஞ்சு, அதற்கு ஏற்ற மாதிரி வாழ்ந்தால் கூட, அதுவே பற்றாமல் இருக்கும். இது மார்டன் வேர்ல்ட்டா. இங்க எத்தனையோ உப்பு பெறாத காரணத்திற்காக டிவோர்ஸ் வாங்குவது எல்லாம் சர்வ சாதாரணமா போச்சு. நிறம் லவ் பண்ண போதும். ஆனா வாழ்க்கைக்கு மனசு புரிஞ்சி நடக்குற பக்குவம் வேணும்டா. என்னடா இவளுக்கே கல்யாணம் ஆகல இதுல இவ நமக்கு அட்வைஸ் கொடுக்கறானு யோசிக்காத. நான் இந்த வெளி அழகு இல்லாம நிறைய கஷ்டபட்டுட்டேன். அதே கூடுதலாக இருக்குற காரணத்துனால இன்னொரு பொண்ணு கவலை படக் கூடாதுன்னுதான் சொன்னேன். நீ புத்திசாலி பையன். உன் வாழ்க்கையை எப்படி கொண்டு போகணும்னு உனக்கே தெரியும். பொறுமையா தனியா உட்காந்து யோசி. நான் கொஞ்சம் காலாற நடக்குறேன்”

நீளமாகப் பேசியவள், எழுந்து சென்றுவிட, அவள் கூறியதை அவன் மட்டும் அல்லாது இன்னொருவனும் கேட்டு, அவனும் ஆழ்ந்த யோசனைக்குச் சென்றான், என்று தெரியாமல், அவள் அலையோடு விளையாடியபடி இருந்தாள். விளையாடும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவன், சிரித்துக் கொண்டான், தான் செய்த மடத்தனத்தை எண்ணி.

அடுத்த நாள் ஆராதனாவிற்கு சலிப்பான நாளாகத்தான் இருந்தது. “நேற்றுதான் ஒருத்தன் வந்தான் என்றால், இன்றைக்குமா ஒருத்தன் வருவான். கடவுளே இதிலிருந்து எனக்கு விடுதலைக் கொடு. என்னால நிஜமாவே முடியலை. வரவனோட இருபத்தி அஞ்சு முடிஞ்சுபோச்சு. இதுக்குமேல முடியாது. கண்ணா காப்பாற்று!” கண் விழித்தவுடன், அவளது முதல் வேண்டுதல் இதுவாக இருக்க, அவளது கண்ணனோ “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லுவது போல் சிரித்துக்கொண்டு இருந்தான்.

பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் பலமாக ஏற்பாடாகி இருக்க, “இந்த நிச்சயம் கண்டிப்பா நல்லபடியா முடிஞ்சுடும் ஆறுமா. நீ சந்தோஷமாக உன் மனசுபோல வாழுவ பாரேன்” இந்த அம்மாவிற்குதான் எத்தனை பேராசை என்று மனதில் நினைத்துக் கொண்டாள் ஆராதனா.

முதல் முறை என்றால் வெட்கம் இருக்கும். கொஞ்சமே கொஞ்சம் கூச்சம் எட்டிப்பார்க்கும். இதுவே வாடிக்கையானால்? யாருக்குதான் அலுப்புத்தட்டாது! ஆராதனாவிற்கும் மாப்பிளை படலத்தில் அலுப்பு தட்டி இருந்தது. ஒருவகையான இயந்திர தன்மையோடுதான் அங்கு வந்திருந்தாள். ஆனால் மாப்பிள்ளையாக அமர்ந்திருந்தவனைப் பார்த்தவுடன் அவளது முகம் சூரியனைக் கண்ட சூரியகாந்தி பூவாக மலர்ந்தது.

“நீங்களா?” அவளையும் அறியாமல் அவளது உதடுகள் முணுமுணுத்தது. ஆம்! ஆராதனாவிற்கு விஸ்வகர்மாவை முதலிலேயே தெரியும். அவளை முதன்முதலில் பெண் பார்க்க வந்த மாப்பிளை அவன்தான். அவளது நிறத்தைக் குறைகூறி சென்ற மாமனிதர்களுள் அவனும் ஒருவனே! ஆனால் ஏனோ அதன் பின் அவளிற்கு மாப்பிள்ளை அமையவில்லை. அவனிற்கும் அமையவில்லை. ஏனோ அவனிற்கு எந்தப் பெண்ணைப் பார்த்த போதும், அவளது கண்ணீர் படிந்த முகம் ஒரே ஒரு முறையேனும் வந்து செல்லும். அவனது மனம் குழப்பத்தில் இருக்கும்போது அவளது முகம் தோன்றி அவனை ஆறுதல் படுத்தும். அத்தனை கஷ்டத்திலும் அவனையும் அறியாமல் உதட்டோரம் சிறியதாகச் சிரிப்பைப் பூக்க வைக்கும். அந்த முகத்தை அவன் மறக்க வேண்டுமென்றுதான் நினைத்திருந்தான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அந்த முகம் மட்டுமே அவனுக்குத் தோழியாக மாறி இருந்தது நேற்றுவரை. அப்படிதான் அவனும் நினைத்திருந்தான். எப்பொழுது அவள் அவளது தம்பிக்குக் கூறியதை கேட்டானோ, அப்போதுதான் அவன் உணர்ந்திருந்தான், அவனையே அறியாமல் அவள்மீது அவனுக்கு விருப்பம் வளர்ந்திருப்பதை.

பெண் பார்த்தபிறகு, சில நாட்கள் கழித்து, அவளே அறியாமல் அவளை அவன் நோட்டம் விட்டிருந்தான். அவளைப் பற்றி அவளிடம் கேலாமலே அறிந்து கொண்டிருந்தான். அதற்கெல்லாம் அவனிடம் காரணம் கேட்டால், ‘ஏதோ தோணிச்சு செய்யுறேன்’ என்ற பதிலே வரும். அவள் நேற்று பேசப் பேச, தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவை, ஆராதனா மனதளவில் செதுக்கினாள் என்றே சொல்லலாம், அதுவும் அவளை அறியாமலே. அவனது மனதை அவளே அறியாமல் அவனிற்கு உணர்த்தி இருந்தாள். அவளது மனதை வெல்ல அவன் முயற்சி செய்ததில்லை. ஆனால் நேற்று அவனிற்கு தோன்றியது, அவளிடம் தன் மனமாறறத்தை உடனே கூற வேண்டும் என்று.

ஆனால் கல்யாணம் செய்தபின் வரும் காதலிலே ஆராதனாவிற்கு நம்பிக்கை இருப்பதால் மட்டுமே அவன் இங்கு இப்போது அவள் முன்னே மாப்பிள்ளை தோரணத்தில் அமர்ந்திருந்தான். அவனது கண்களைக் கண்டே அவனது மனதை உணர்ந்த ஆராதனா, ‘நிச்சயம் இவரோட கண்ணில் வெறுப்பாக இல்ல. அப்போ என்ன புடிச்சுதான் வந்திருக்காரா? அப்போது எனக்கும் அவருக்கும் கல்யாணம் நடக்குமா? முதன்முதல் என்னைப் பார்க்க வந்தவர் இவர்தான். எத்தனை பேர் அதற்குப் பிறகு பார்த்தாலும் அவருடைய முகம் மட்டும்தான் இப்போவரை எனக்கு நினைப்பில் இருக்கு. அதே மாதிரிதான் அவருக்கும் இருக்குமா? மறுபடியும் மூலையில் கேள்விகள் உதித்து விட்டதே? ஐயோ கடவுளே. இதென்ன என்னை வைத்து நீ இப்படி விளையாடுற?’ மனதோடு புலம்பியபடியே அவள் அவனைப் பார்க்க, கண்களிலே பேசும் அவளைப் பார்த்திருந்தான். “எவளோ அழகான கண்கள் இவளுக்கு” என்று எண்ணியபடியே.

“அடுத்தென்ன ஆராதனாவைப் பாட சொல்லலாமா சம்பந்தி?” ஆராதனாவின் தந்தை ஆர்பாட்டமாகக் கேட்க,

“எப்போதும் ராதாதான மாமா பாடுவா. ஃபார் அ சேன்ஞ், நான் பாடுறேனே” விஷ்வா உரிமையாக அவளது கண்களைப் பார்த்து ‘எனக்கு நீ உனக்கு நான்’ என்றபடியாகக் கேட்க,

“கேட்டுட்டு இருக்கீங்க மாப்பிள்ளை. பாடுங்க” மாப்பிள்ளை எட்டடி என்றால் மாமனார் பத்தடியாகப் பாய அவனும் ஆராதனாவின் கண்களைப் பார்த்துப் பாட ஆரம்பித்திருந்தான்.

முதல் வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டுவாழும்
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயெ
வானே வண்ண மீனே
மழை வெயில் என நான்கு காலம் நீயே
எங்கேயும் காதல் விழிகளில்
வந்து ஒவ்வொன்றும் பேச

அவனது காதலை மொத்தமாய் குரலில் தேக்கியபடி. அதைச் சரியாகப் புரிந்துகொண்ட ஆராதனாவும் வெட்கப்பட்டு சிரிக்க “கடவுளே அவருக்கு என்னை நிஜமாவே பிடிச்சிருக்கு. என்னோட வாழ்க்கையில் எனக்காக ஒருத்தரைக் கொடுத்திருக்க. உனக்கு என்னோட நன்றிகள்” மாயக்கண்ணனிற்கு அவள் மனதார நன்றி கூற,

அப்பொழுதே மோதிரமும் மாற்றும் வைபவத்தையும் விஷ்வா ஏற்பாடு செய்திருக்க “காத்திருந்த காலத்திற்கும் சேர்த்து நான் உன்னை நல்லா வச்சிப்பேன் ராதாமா. என்ன நம்பு! உனக்கு நான் எல்லாமுமே இருப்பேன். உனக்கு நான் எனக்கு நீங்கிற அழகான வாழ்க்கையை நான் உனக்கு நிச்சயமா கொடுப்பேன். நீ ஆசைப்பட்ட படியே நாம வாழலாம் சரியா?” மோதிரம் போடும்போது அவன் அவளிடம் தணிந்த குரலில் கூற, கண்ணில் நீர் கோர்க்க ‘சரி’ என்றபடியாக அவள் தலையாட்டினாள்.

‘வெள்ளை நிறம் உடலில் அல்ல, மனதில் இருந்தால்தான் வாழ்க்கை இன்பமாக இருக்கும்’ என்று விஷ்வாவை ஆராதனா அவளது தூய்மையான அன்பால் செதுக்க, விஷ்வாவோ ‘நீ காட்டும் அன்பிற்கு நான் என்றும் அடிமை’ என்று அவளைத் தினமும் ஆராதித்து வந்தான். இனி அவர்களது வாழ்வில் எல்லாம் ஆனந்தமே!

*_* முற்றும் *_*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!