Thithikkum theechudare – 13

TTS

Thithikkum theechudare – 13

தித்திக்கும் தீச்சுடரே – 13

இரவு நேரம், ஜெயசாரதியின் வீட்டில். அவர் நிம்மதியாக தூங்க, வள்ளியம்மை தூக்கம் வராமல் புரண்டு படுத்தார். அவருக்கு நிம்மதியாக உறங்கும் ஜெயசாரதியைப் பார்த்து சற்று கோபமாகவும் பொறாமையாகவும் இருந்தது. வள்ளியம்மை தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடக்க, அவர் காலடி ஓசையில் ஜெயசாரதி எழுந்து அமர்ந்தார்.

“என்ன வள்ளி தூங்கலையா?” என்று அவர் பரிவோடு கேட்க, “உங்களுக்கு எப்படி தூக்கம் வருதுன்னே எனக்கு புரியலை. முகிலன், கழுகு மாதிரி நம்மை சரிக்க காத்துகிட்டு இருக்கான். அவன், என்ன ஏதுன்னு பட்டியலிட முடியாத படி… உங்களால் பல இடங்களில் அவமான பட்டிருக்கான். எல்லாம் தாண்டி அவன் சினிமாவில் விஸ்வரூப வளர்ச்சியில் நிக்கறான். அரசியல் அனுபவம் இல்லாத அவனுக்கு, அவன் முகத்தை மட்டும் பார்த்து நம்ம மக்கள் வோட்டு போடுவாங்கன்னு சொல்ல முடியாது. அதே மாதிரி, போட மாட்டாங்கன்னும் சொல்ல முடியாது” வள்ளியம்மை படபடக்க,

“நீ ஏன் இவ்வளவு பதட்டப்படுற? அதுக்கு முதலில் முகிலன் அரசியலுக்கு வரணுமே” அசட்டையாக கூறினார்.

“முகிலன் அரசியலுக்கு வருவான். நம்மை அழிக்க ஆயுதம் கண்டுபிடிச்சிட்டு வருவான்.” வள்ளியம்மை கூற, “அதெல்லாம் அவனால முடியாது. அப்படி நடக்கவும் நான் விட மாட்டேன். என்னை மீறி எனக்கு அரசியலில் போட்டியா எவனும் வர முடியாது. நான் நினைக்கிற இடத்திற்கு அடுத்த ஆள் நான் தான். ” அவர் சிங்கமென்ன கர்ஜிக்க,

“அதுக்கு மீரா அங்க போயிருக்க கூடாது. நம்ம வீட்டிலையே நமக்கு எதிரி இருக்கு.” வள்ளியம்மை முணுமுணுக்க, “மீரா நாளைக்கு நம்ம வீட்டில் இருப்பா” அவர் உறுதியாக கூற, ‘அவளை போட்டு தள்ளிட்டா பாதி பிரச்சனை இல்லை. இது இந்த மனுஷனுக்கு புரியாது’ வள்ளியம்மை யோசித்தபடி அவரை மெளனமாக பார்த்தார்.

“முகிலனுக்கு மரண பயம் காட்டிருக்கேன். அவனுக்கு அவன் தயாரிப்பு நிறுவனம் தான் உயிர். அதில் விழுந்திருக்கு பெரிய அடி. அவன் இனி மீராவை இப்படி கூட்டிகிட்டு போக மாட்டான்.” அவர் கூற, “ஒருவேளை, மீராவுக்கும் முகிலனுக்கும் காதல் கீதல்ன்னு…” வள்ளியம்மை இழுக்க, “…” ஜெயசாரதி இப்பொழுது சிரித்தார்.

“மீரா யாரையும் காதலிக்க மாட்டா. அவளுக்கு காதல் மீது நம்பிக்கை கிடையாது. அப்படி, முகிலன் மீரா கிட்ட காதல்ன்னு நெருங்கினா அவன் அத்தோட தொலைஞ்சான்.” ஜெயசாரதி கூற, “வீட்டுக்கு வர்ற மீராவை நாம இனி வெளிய விட கூடாது ” வள்ளியம்மை அழுத்தமாக கூறினார்.

“வள்ளி, இது நடக்குற காரியமா சொல்லு? மீரா, நாம அவளை கட்டுப்பாட்டில் வச்சிருக்கோமுன்னு தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்கா. ஏன் தெரியுமா? அவ சுதந்திரம் ரொம்ப பாதிக்கப்படலை. அந்த எல்லைக் கோட்டுக்குள் நீயும், நானும் போனோம்ன்னா, மீராவோட செயல் எப்படி இருக்குமுன்னு சொல்ல முடியாது. அவ்வளவு கட்டுப்பாட்டுக்கு இப்ப அவசியமில்லை. அவளை விட்டுப் பிடிப்போம். மீரா வீட்டுக்கு வரட்டும். நாம, நம்ம பிடிமானத்தில் இருக்கிற இடத்தில் அவளுக்கு இந்த வருஷத்திற்குள் கல்யாணம் செஞ்சி வச்சிடுவோம்” ஜெயசாரதி கூற, வள்ளியம்மை ஆமோதிப்பாக தலையசைத்தார்.

“இப்ப நிம்மதியா தூங்கு” ஜெயசாரதி கூற, வள்ளியம்மை எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டார்.

அதே நேரம் அந்தத் தீவில்.

 மிக நெருக்கமான இருவரின் துணை கொண்டு அந்த பங்களாவுக்குள் மீராவை தேடினான் முகிலன். பங்களாவின் காவலாளி யாரும் வெளியே செல்லவில்லை என்று உறுதியாக கூறினான். ஆனால், மீரா வெளியே சென்றுவிட்டாள் என்பதே முகிலனின் கணிப்பு. அவர்கள் தோட்டத்தைச் சோதனையிட சொல்ல, அங்கு ஒரு கயிறு கிடந்தது.

மீராவின் சாமான்கள் அங்கு தான் இருந்தது. ‘ஆக, திரும்பி வரும் நோக்கோடு தான் சென்றிருக்கிறாள். ஆனால், எங்கே?’ என்ற கேள்வியோடு அவளைத் தேடி வெளியே செல்ல,

ஏதோ உந்த அவன் கடற்கரை நோக்கி சென்றான், அங்கு ஒரு படகு தட்டுத் தடுமாறி செல்வது தெரிந்தது. அவள் தான் என்று அவன் மனம் உறுதியாக நம்ப, அவன் கடற்கரை நோக்கி விரைந்தான்.

அவர்கள் இருப்பது ஒரு தீவில். அந்த தீவின் சிறப்பம்சம் என்னவென்றால், அவர்கள் வசிக்கும் பெரிய தீவிற்கு பக்கத்தில் ஆங்காங்கே சின்ன சின்ன தீவுகள் இருக்கும். சில தீவுகளில் ஒரே ஒரு குடில் மட்டுமே இருக்கும். அங்கு சில வேலைகளைச் செய்வார்கள். அந்த சின்னச்சின்ன தீவுகள் கொஞ்சம் தூரத்தில் இருக்கும். அவற்றுள் சில தீவுகள் சற்று தூரத்தில் இருக்கும். கடற்கரையில் இருந்து அவள் படகு செலுத்துவதை பார்த்துக் கொண்டிருந்தான் முகிலன்.

‘இதுல இவ எந்த தீவுக்கு போறா?’ அவன் சிந்திக்க, அருகே இருக்கும் தீவை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

அவள் தீவை நெருங்கும் வரை காத்திருந்தவன், “நான் என் ஸ்பீட் போட்டில் போறேன். நான் மீராவை கூட்டிகிட்டு வரேன். நீங்க போங்க. ஏதாவது பிரச்சனைன்னா நானே கூப்பிடுறேன்.” கூறிவிட்டு வேகப்படகில் அவளுக்கு முன் தீவில் சென்று நின்றான். தீவுக்கு அருகே சென்ற மீரா அவனைப் பார்த்ததும் திருப்ப முடியாமல், வேறு வழியின்றி தீவை நோக்கி அந்தப் படகை செலுத்தினாள். கொஞ்சம் தூரமாக இருந்தாலும், படகு செலுத்தி பழக்கமில்லாத மீரா மிகவும் சோர்வாகிவிட்டாள்.

‘முகிலன் ஏன் வரணும்?’ அவள் சிந்தை சுணங்கி கொண்டாலும், ‘நல்லவேளை முகிலன் கூப்பிட்டு போயிருவாங்க’ சோர்வு கொண்ட அவள் உடலின் ஒவ்வொரு அணுவும் அவன் வருகையை வரவேற்றது.

அவள் படகை நிறுத்த முடியாமல் தடுமாற, அந்த சிறிய படகு, “மடார்…” என்ற சத்தத்தோடு கவிழ்ந்தது.

அந்த கடலின் ஆழம் அவனுக்கு தெரிந்ததால், கவிழ்ந்த அவளை சிறிதும் கவலையின்றி கைகளை தன் மார்பின் குறுக்கே கட்டியபடி பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், ஆழம் தெரியாத மீரா, “அம்மா….” என்று கைகளை மேலே தூக்கி அச்சத்தில் அலறினாள். சில நொடிகள் அச்சத்தில் கடல் நீரில் “தத்தக்க… புத்தக்க…” என்பது போல் அவள் உடல் பாவனை காட்ட, அவள் மூளை அவளை நீச்சல் அடிக்க சொல்லி செய்தி அனுப்ப, சட்டென்று நீந்த ஆரம்பித்தாள்.

அவள் கால்கள் தரையை தொடவும், “ச்சீ… இவ்வுளவு தானா?” என்று எழுந்து நின்றாள். இவள் செய்த மொத்த ஆர்பாட்டத்தையும் முகிலன் குறுஞ்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்தாள் மீரா. அவன் சிரித்துக் கொண்டு நின்றதில் அவள் கோபம் விண்ணைத் தொட்டது.

 “மொந்த்… மொந்த்…” என்று நடந்து அவன் அருகே வந்தாள். வெள்ளை நிற சட்டை அணித்திருந்தாள். அந்த சட்டை நீரில் நனைந்து, அவள் உள்ளே அணிந்திருந்த அவள் தேக நிற உடையைப் பளிச்சென்று காட்டியது. அந்த வெள்ளைச் சட்டைக்குள்ளும் ஏதோ ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்திருப்பாள் போலும். அவள் அங்க வடிவையும், அவள் கைகளின் பளபளப்பையும் அவள் உடை தெளிவாக காட்டியது. அடங்காமல் பறந்து கொண்டிருக்கும் அவள் சிகை, இன்று கடல் நீரால் அடக்கப்பட்டு அவள் முதுகை தீண்டி கொண்டிருந்தது. ‘நானும் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இவளை போன்று இது வரை இல்லை.’ அவன் மனம் கொஞ்சம் துள்ளாட்டம் போட்டது.

‘இவள் இது வரை தன்னை அலங்காரம் செய்து கொண்டதே இல்லை. இன்றைய கோலம் இன்னும் மோசம்.’ அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

‘சும்மாவே கோபமா தான் இருப்பா. இப்ப சிரிச்சா, அவ்வளவு தான்.’ மிகவும் கடினப்பட்டு தன் நகைச்சவை உணர்வைத் தள்ளி வைத்தான்.

அவள் மிக கோபமாக அவனை நெருங்கினாள். “ஒருத்தி தண்ணீரில் மூழ்கினா காப்பாத்தறது இல்லையா? மூழ்கி சாகட்டுமுன்னு கைகட்டி வேடிக்கை பார்த்துட்டு இருப்பீங்களா? இல்லை, என்னை தண்ணீரில் முக்கி சாகடிக்க தான் கூட்டிட்டு வந்தீங்களா?” அவள் கோபமாக கேட்க, “மேடத்தை நான் கூட்டிகிட்டு வந்தேனா? இல்லை நீங்களா வந்தீங்களா?” அவன் புருவம் உயர்த்தி நமட்டு சிரிப்போடு கேட்டான்.

“அதெல்லாம் தேவை இல்லாத கேள்வி. நான் தண்ணீரில் மூழ்கி சாகப் போகும் பொழுது, நீங்க ஏன் என்னை காப்பாத்தலை?” அவள் கேட்க, “யாரு சாகப் போனா? நீ சாகப் போன?” அவன் குரலில் மீண்டும் நக்கல். “நீ நாலு பேரை சாகடிப்ப” அவன் முணுமுணுக்க, அவள் மிக கோபமாக அந்த பாறையின் மேல் அமர்ந்தாள்.

அப்பொழுது தான் அவள் முடிக்கு கீழே இடைப் பக்கம் பார்த்தான். “அசையாமல் இரு மீரா” அவன் குரலில் கட்டளை மிதமிஞ்சி இருந்தது. அவளைத் தீண்டாமல் அவள் சட்டையை சிறிதும் அசைவின்றி கழட்டி எறிந்தான்.

அவள் அவன் செய்கையில் விகல்பம் கொள்ளவில்லை. அவனை யோசனையோடு பார்த்து கொண்டிருந்தாள். “நான் என்ன பண்ணிட்டு இருக்கேன். நீ ஏன்னு கோபம் படமாட்டியா?” தான் செய்தது தவறு என்ற குற்ற உணர்ச்சியில் அவன் கேட்க, “காரணம் இல்லாமல் நீங்க ஏதையும் பண்ண மாட்டீங்க?” அவள் ஆழமான குரலில் கூற, “உனக்கு என் மேல் அவ்வளவு நம்பிக்கையா?” அவள் அருகே சென்றவன், அவளுக்கு மிக அருகாமையில் நின்று கொண்டே கேட்டான். ‘ஆம்…’ என்று அவள் தலையசைக்க, அவள் சுவாசக் காற்று அவனை தீண்டி அவள் அவன் மீது வைத்திருந்த நம்பிக்கையை கூறியது. அவள் சுவாசக் காற்றின் தீண்டலில் அவன் உள்ளம் நடுக்கம் கொண்டது.

“என்னை எப்படி இவ்வளவு நம்புற மீரா?” அவன் தன் மீதே நம்பிக்கை இல்லாமல் கேட்க, “நல்லவங்க கூட வாழறவங்களுக்கு கெட்டவர்களை கண்டுபிடிக்க முடியாது. ஆனால், கெட்டவங்க கூடவே வாழறவங்களுக்கு நல்லவர்களை கண்டுபிடிக்க தெரியும். இந்த நண்பர் ரொம்ப நல்லவர்ன்னு எனக்கு தெரியும்.” அவள் எங்கோ பார்த்தபடி தன் முகத்தில் விரக்தி புன்னகையை சிந்தினாள்.

அவன் அவளைத் தன் பக்கம் திருப்பினான். “உன் நண்பன் மீது நீ வச்சிருக்கிற நம்பிக்கை ஒரு நாளும் மாறாது தானே?” அவன் அவள் கண்களை பார்த்து கேட்க, அவள் விழிகள் அவன் மீதான நம்பிக்கையை கூறியது. “நான் நம்பிக்கையை இழக்குற அளவுக்கு நீங்க எதுவும் பண்ண மாட்டீங்க” அவள் உறுதியாக கூறினாள்.

“அப்படி நான் என்ன பண்ணினாலும், அதில் ஒரு நியாயம் இருக்குமுன்னு நீ நம்புவ தானே?” அவள் தோள் தொட்ட அவன் கரங்கள் நடுங்க, அவன் தீண்டல் ஏதோ சொல்ல, அவள் சட்டென்று விலகி நின்றாள். விலகி நின்றதும் அவள் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் நினைவு வர,

 ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போல் இருந்த அவள் உடையை மெல்லிய சங்கோஜம் கொண்டவளாக தன் ஆள் காட்டி விரலால் முடியை முன்னும் பின்னும் தொங்கவிட்டாள்.

ஆர்ப்பாட்டமில்லாத அவள் செய்கை அவனை கவர்ந்தது.

“இப்படி நீ முடியை வச்சி மறைக்குற அளவுக்கு ஒண்ணுமில்லை. அப்பவே தண்ணீர் பட்டு, நாங்க எல்லாம் பார்த்துட்டோம்” அவன் கேலி போலவே கூற, அவள் கோபமாக அவனை முறைத்தாள்.

“ட்ரெஸ்ஸில் எதுவும் பூச்சி இருந்ததா?” எல்லை மீறிய அவன் பேச்சை லாவகமாக தன் சட்டையை பார்த்தபடி அவள் திசைத் திருப்ப, “ஆமா, நண்டு. அது உன்னை கடித்து செத்து போய்ட போகுதுனு உன் சட்டையை அதுக்கு தானமா கொடுத்து காப்பாத்திட்டேன்” அவன் கூற, “சட்டை என்னது. அதனால் புண்ணியம் எனக்கு தான்.” அவன் கேலியை அவள் தொடர, அவன் பெருங்குரலில் சிரித்தான்.

“வந்தாச்சு. தீவை பார்த்தாச்சு. போலாமா?” அவன் கேட்க, “நான் வந்த வேலை முடியலை” அவள் அழுத்தமாக கூற, “என்ன வேலை?” அவனும் அதே அழுத்தத்தோடு கேட்டான். “சொல்லாம விட மாட்டிங்களா?” அவள் சற்று சலிப்பாக கேட்க, அவன் அழுத்தமாக நின்றான். அவள் கடல் பக்கம் திரும்பி நின்றாள்.

“உஸ்…” என்ற கடல் காற்றில் அவள் நடுங்க, அவன் தன்னிடமிருந்த ஜெர்கினை அவளிடம் நீட்டினான். அவள் அணிந்து கொண்டாள். அந்த கதகதப்பு அவளுக்கு தேவைப்பட்டது போல் அவள் தேகம் அந்த வெப்பத்தில் குளிர் காய்ந்தது. கடலை வெறித்து பார்த்து நின்றாள். அவளைப் பேச வைத்து விட வேண்டும் என்பதில் அவன் தீர்க்கமாக இருந்தான்.

அவன் தன் ஸ்பீட் போட்டில் இருந்த காமெராவை அலைப்பேசி மூலமாகவே இயக்கினான்.

அவன் கொடுத்த ஜெர்கின் குளிர்ந்த அவள் தேகத்திற்கு என்று எண்ணினாள் அவள். இல்லை, உன்னை படம் பிடித்து கொண்டிருக்கிறேன். பல்லாயிர கணக்கானவர்கள் பார்க்கும் பொழுது தன் தோழியின் உடை எப்படி இருக்க வேண்டும் என்று கவனம் கொண்டான் அவன்.

“நான் இதை யார்கிட்டையும் சொன்னதில்லை. உங்க கிட்ட மட்டும் தான் சொல்றேன். உங்களை நம்பி சொல்றேன்” அவள் பீடிகையோடு தொடங்கினாள். அவள் வார்த்தையில், ‘தான் செய்வது தவறோ?’ என்ற தடுமாற்றம் அவனுள் வந்தது.

‘எவெரி திங் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார் (Everything is fair in love and war)’ போருக்கு தயாராக இருந்த அவன் தனக்கு தானே உருப்போட்டுக் கொண்டான். ஜெயசாரதியின் மகளை அழைத்து வந்ததன் காரியம் நிறைவடையும் மகிழ்ச்சியில் இருந்தான் முகிலன்.

அவன் மகிழ்ச்சி அவன் குற்ற உணர்ச்சியை முழுதாக விழுங்கி கொண்டது. ‘நான் செய்யப் போவது ஜெயசாரதிக்கு எதிரானது மட்டும் தான். மீராவை எப்படியாவது என் பாதுகாப்பு வளைவிற்குள் வைத்துக் கொள்வேன்.’ அவன் செய்து கொண்டிருக்கும் செயல் மீராவை பாதிக்கும் என்று அறியாமல் அவன் உறுதி எடுத்துக் கொண்டான்.

அவள் ஹீரோ

அவளுக்கு வில்லனாகினான்

அவளறியாமல்!

அவன் மனம் கவர்ந்தவளுக்கு

வில்லனாகினான்

அவனறியாமல்!

ஹீரோ வில்லனாகி போனான்!

அவளறியாமல்! அவனறியாமல்!

தித்திப்புகள் தொடரும்…

error: Content is protected !!