Thithikkum theechudare – 4

Thithikkum theechudare – 4

தித்திக்கும் தீச்சுடரே – 4

முகிலனின் சிரிப்பை மனதில் கணக்கிட்டு கொண்டு, மேலும் தொடர்ந்தாள் மீரா. “ஒரு சாதரண பெண்ணின் ரிவ்யூக்கு பயந்து அந்த பெண்ணையே கடத்திட்டு வர அளவுக்கு பயம் கொண்ட ஹீரோவை பார்க்க எனக்கும் ஆச்சரியமா தான் இருக்கு” அவளும் அவனைப் போலவே அவனை மேலும் கீழும் பார்த்து கொண்டே கூறினாள்.

அவள் கூற்றில் அவன் சிரித்து கொண்டான். “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” அவன் நிறுத்த, அவளும் சிரித்து கொண்டாள். இருவரின் சிரிப்பிலும் நக்கலும் ஏளனமும் வழிந்து ஓடியது.

“ஒரு சாதாரண பெண்ணின் ரிவியூ வேற. மிஸ்டர் ஜெயசாரதியோடு சேர்ந்து குள்ளநரித்தனம் பண்ற அவர் பொண்ணு வேற இல்லையா? நான் பயந்து தான் ஆகணும். யோசிச்சுத்தான் ஆகணும்.” அவன் பேச அவள் பற்களை நறநறத்தாள். தன் கைகளை இறுக மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தாள்.

“போதும் நிறுத்துங்க” அவள் வார்த்தைகளை கடித்து துப்பி, அவனை கோபத்தோடு எச்சரித்தாள். “நிறுத்துன்னு சொன்னால் என்ன அர்த்தம்? ஜெயசாரதி பொண்ணுக்கு என் படம் ஓடுற சினிமா தியேட்டரில் என்ன வேலை? அப்பாவுக்கும் பொண்ணுக்கும் என்ன திட்டம்?” அவன் பேசி கொண்டே போக, அருகே இருந்த அழகு சாமானை எடுத்து அவன் மீது வீசியிருந்தாள் மீரா.

முகிலன் வேகமாக விலகி கொள்ள, அந்த பொருள் அவன் தலை பகுதியை மட்டும் பதம் பார்த்து விட்டு சென்றது. முகிலன், மட்டும் விலகி இருக்காவிட்டால் அந்த பொருள், அவன் முகத்தை பதம் பார்த்து அங்கு இரத்த கிளறியாக்கிருக்கும்.

பொருளை எறிந்துவிட்டு அவனை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா. முகிலனின் கோபம் எல்லை தாண்டியது. ஆனால், அவன் அதிர்ச்சி அதை விட எல்லை தாண்டி இருந்தது. அவன் ஒரு பெண் பிள்ளையிடமிருந்து இத்தனை ஆங்காரத்தையும் அகங்காரத்தையும் எதிர்பார்க்கவில்லை.

‘பிசினெஸ் மேன் முகிலனுக்கும் ஹீரோ முகிலனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஹீரோ முகிலனுக்கு பொறுமை அதிகம் இருக்கனும்.’ தன் தாய் கூறும் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் அசை போட்டு பொறுமையை கொண்டு வந்தான்.

‘யாரை அடிக்கவும் அழிக்கவும் காலம் பார்த்து செய்ய வேண்டும்.’ தான் கற்று கொண்ட பாடத்தையும் நினைவுறுத்திக்கொண்டு பொறுமை காத்தான்.

‘ஒரு பெண்ணை அடித்து என்னவாகப் போகுது? அம்பு தான் இது. எய்தவனை கொல்லும் வெறி’ அவனுள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. நிதானமாக சிந்திக்க ஆரம்பித்தான்.

‘இவளை ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.’ வழக்கமாகவே சற்று நிதானத்தை கையாளும் முகிலன் இன்னும் இன்னும் நிதானத்தை கையிலெடுத்துக் கொண்டான்.

“நீ என் இடத்தில இருக்க” அவன் அழுத்தமாக கூற, அவன் பார்வை அவளை முழுதாக தொட்டு மீள, அவன் மூளை அவளை கணக்கிட்டு கொண்டது. முழுதும் அவளை மறைத்த ஆடை. சிறிதும் அவள் அழகை வெளிப்படுத்தாத ஆடை.

‘இந்த உடை அவளின் தன்னம்பிக்கையா? இல்லை அலட்சியம் நிறைந்த திமிரா?’ அவனுள் கேள்வி வந்தமர, அவன் பார்வையின் போக்கை பார்த்த படியே, “ஸோ வாட்?” என்றாள் எங்கோ பார்த்தப்படி. “நான் உன்னை என்ன வேணும்ன்னாலும் பண்ண முடியும்” என்று அவன் இதழ்கள் ஏளனமாக வளைய, “என்ன பண்ண முடியும்?” என்று அவள் புருவத்தை உயர்த்தினாள்.

அவன் பார்வை கூர்மையாக, “அடிப்பியா? அடி பார்க்கலாம். இல்லை நீ என்னை அடிச்சி தான் பாரேன். கராத்தே மட்டுமில்லை. பல கலைகள் தெரியும் எனக்கு. ஆள் வச்சி அடிப்பீங்களா?அதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை.எங்க எப்படி தப்பிக்கணும்முன்னு எனக்கு தெரியும்.” அவள் அசட்டையாக கூற, “உன்னை அடிக்க மட்டும் தான் முடியுமா?” அவன் சிரிப்பினோடே கேட்டான்.

“என்ன பண்ண முடியும்? படத்தில் மட்டும் தான் ஹீரோவா? நிஜத்தில் வில்லனா?” கிஞ்சித்தும் அச்சமின்றி அவளும் சிரிப்பினோடே கேட்டாள். “சரி சொல்லுங்க. என்ன பண்ண முடியும்?” அவள் கேட்க, அவன் தர்மசங்கடத்திற்கு ஆளானான்.

அவன் தடுமாற, அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. “சொல்ல கூட முடியலைல. ஹீரோ முகிலன் இப்டித்தான்னு எங்களுக்கு ஒரு கணிப்பு இருக்கு” அவள் நட்புக்கரம் நீட்ட, அவன் முகத்தில் சிந்தனை பரவியது.

தகாத சொற்களை கூட பேச தயங்கும் அவன் தடுமாற்றம் அவள் கணக்கீட்டில் அவனை சற்று உயர்வான இடத்தில் அமர்த்தியது. அவள் அவனைப் பார்த்தாள். அவள் உள்ளம், ‘ஹீரோ முகிலன்…’ என்று துள்ளாட்டம் போட்டது. நொடி பொழுதில், கல்லூரி பருவத்தில் அவன் படங்களை ரசித்த கணம் வந்து போனது. அந்த நொடிப்பொழுதில் அவனை ரசிக்க அவள் தவறவில்லை.

அந்த நொடிக்கும் குறைவான பொழுதில், அவள் கண்களில் தோன்றிய ரசனை பார்வையை கண்டுகொண்ட அவன் மிரண்டு போனான். தன்னை பார்த்ததும், “முகிலன்” என்று மயங்கிய பல பெண்களை அவன் பார்த்திருக்கிறான்.

ஆனால், வந்த நொடி முதல் சிறிய சலனமும் தடுமாற்றமும் இல்லாமல் தன்னிடம் சவால் விடும் பெண்ணை அவன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான். அதை மறைக்கவும் அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான். அதற்கிடையில் அவள் வீசிய ரசனை பார்வையில் சற்று நிலைகுலைந்து போனான் என்று தான் சொல்ல வேண்டும்.

‘இவ அவங்க அப்பாவை விட பயங்கரமான ஆளா இருப்பா போலையே’ அவன் சிந்திக்க, “நீங்க சொல்ற சில்லறை விஷயத்துக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்” அவள் அறிவிக்க, அவனுக்கு அந்த பேச்சு ருசிக்கவில்லை. ஒரு பெண் பிள்ளையை தனியே கூட்டிவந்து அனாவசியமான பேச்சுகளுக்கு இடம் கொடுக்க அவன் விரும்பவில்லை.

“உண்மையை சொன்னால் கோபம் வந்து சொல்றவங்க மண்டையை உடைப்பியா?” அவன் விட்ட இடத்தில தொடர்ந்தான். “எது உண்மை?” அவள் கேட்க, “உன் குள்ள நரித்தனமானா வேலை. உன் சதி” அவன் அடுக்கி கொண்டே போக, “இதுக்கெல்லாம் எனக்கு கோபமே வரலை. காரியம் ஆகணுமுனா, நான் எதுவேணுமினாலும் பண்ணுவேன்” அவள் குரலில் மீண்டும் அசட்டை.

“அப்ப எதுக்கு இந்த கோபம்?” அவன் இப்பொழுது உண்மையில் புரியாமல் கேட்டான். “ஜெயசாரதி என் அப்பான்னு சொன்னது எனக்கு பிடிக்கலை. அவர் கூட நான் சேர்ந்து வேலை பார்க்குறேன்னு சொன்னது எனக்கு பிடிக்கலை. இதெல்லாம் சொல்றவங்க யாரா இருந்தாலும் நான் மண்டையை உடைப்பேன். கொலை கூட பண்ணுவேன்” அவள் உடலில் அவள் கண்களில் அவள் குரலில் அத்தனை ரௌத்திரம்.

சற்று முன் அவள் தாக்கியது அவனுக்கு சுத்தமாக மறந்து போனது. இல்லை, அவன் மறக்கவில்லை. மனதில் குறித்து வைத்துக்கொண்டு தீர்க்க படவேண்டிய பல கணக்குகளோடு அவளை ஆழமாக பார்த்தான்.

‘ஜெயசாரதியை வீழ்த்த, இதை விட சிறந்த வலை ஒன்றுமில்லை’ என்று அவனுக்கு தோன்றியது. அவன் அவளை சுவாரசியமாக பார்த்தான்.

“ஓகே. அவள் தன் கைகளை தட்டி கொண்டு எழுந்தாள்” அவன் எதுவும் பேசவில்லை. “காலையிலிருந்து, நீங்க என் கிட்ட பேச முயற்சி பண்ணறீங்கன்னு தெரியும். எப்படியும் இப்படி ஏதாவது நடக்குமுன்னு எதிர்பார்த்தேன். அது தான் நானே வந்துட்டேன். தக்க பாதுகாப்பை பண்ணிட்டு தான் வந்திருக்கேன். இதுக்கும், எங்க அப்பாவுக்கும் சம்பந்தமிருக்குமுன்னு நீங்க நினைச்சிருந்தா, அது உங்க அறீவீனம். எனக்கும் எங்க அப்பாவுக்குமே சம்பந்தம் கிடையாது.” அவள் சற்று மூச்செடுத்து கொண்டாள்.

“விமர்சனம் என் தனிப்பட்ட கருத்து. என் மனதில் பட்டத்தை நான் முழுசா சொன்ன கருத்து. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. உங்க அடுத்த படமும் இப்படி இருந்தா, நான் இப்படித்தான் விமர்சனம் பண்ணுவேன். எந்த கொம்பனாலும் என்னை தடுக்க முடியாது. ஆனதை பார்த்துக்கோங்க. உங்களால், ஒரு ம… மண்ணும் புடுங்க முடியாது.” அவள் கிளம்ப எத்தனிக்க, அவன் சிரித்தான். சற்று சத்தமாக.

அவள் பேச்சில், அவளை எட்டி அறையும் ஆவேசம் அவனுள் எழுந்தது. ஆனால், கைகளை இறுக மூடி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். ‘இவளை, என் கைக்குள் வைக்க வேண்டும்’ அவன் அறிவு கணக்கிட, ‘முடியுமா? இவளை பார்த்தால் அது முடிகிற காரியம் மாதிரி தெரிகிறதா?’ என்று அவன் அறிவு எதிர் பக்கம் நின்று அவனை கேள்வி கேட்டது. எட்டாக் கனியை எட்டி பறிக்க மனம் விழைவது இயல்பு தானே என்பது போல, ‘ஒரு முயற்சி செய்து பார்க்கலாமே’ என்று அவன் மனம் ஆர்வம் கொண்டது.

அவன் அமர்தலான சிரிப்பில், அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.

“நீங்க இருக்கிறது என் இடம். நான் போக அனுமதித்தால் தான் போக முடியும். நான் உன்கிட்ட மோசமா நடந்துக்குற அளவுக்கு கேவலமான ஆள் கிடையாது. எங்க அம்மா என்னை அப்படி வளர்க்கலை.” அவன் கூறிய, ‘அம்மா…’ என்ற சொல்லில் அவள் அவன் முன் மௌனமாக அமர்ந்தாள்.

“என் இடத்துக்கு வந்துட்டு எதுவும் சாப்பிடாமல் போனா எப்படி?” அவன் மணி அழுத்தி அழைக்க, அவர்களுக்கு உணவு வந்தது.

குட்டி குட்டியாக நறுக்கப்பட்ட பழங்கள், சில காரமான பதார்த்தங்கள் , ஜூஸ். “உங்களுக்கு எது பிடிக்குமுன்னு தெரியலை. அதுதான் இப்படி. காபி, டீ, மசாலா பால் இப்படி தான் பிடிக்குமுன்னா சொல்லுங்க, அதை கொண்டு வர சொல்றேன்” அவன் கரிசனத்தோடு கேட்க, அவள் அவனை புன்சிரிப்போடு பார்த்தாள்.

“நாம இன்னும் கொஞ்சம் வெளிப்படையா பேசலாமுன்னு நினைக்குறேன்” அவள் கூற, “நாம இவ்வளவு நேரம்…” அவன் ஆரம்பிக்க, “நாம அப்படி பேசலை” அவள் மறுப்பாக தலையசைத்தாள். அவள் செய்த விமர்சனம் பற்றிய வாக்குவாதம் நிச்சியம் இருக்கும் என்று அவள் எதிர்பார்த்தாள். பேசிவிட்டு தான் போகணும் என்று அவளும் எண்ணியிருந்தாள்.

அவன் அவளை ஆழமாக பார்க்க, “கொஞ்சம் ஐஸ்கட்டியும் நாப்கினும் கொண்டு வர சொல்ல முடியுமா?” என்று மீரா கேட்க, எதற்கு என்று தெரியாவிட்டாலும் அவன் வேலை ஆட்களை அவள் கேட்டதை கொண்டு வரும் படி ஏவினான்.

அவர்கள் கொண்டு வந்ததும், ஐஸ்கட்டியை நாப்கினில் சுற்றி அவனிடம் நீட்டினாள். அவன் புருவம் உயர்த்த, “உங்க நெற்றி வீங்கிருச்சு. இதை வைங்க” அவள் கூற, அவள் கரிசனத்தில், அவன் இப்பொழுது பெருங்குரலில் சிரித்தான்.

“சாரி, நான் வேணுமின்னு பண்ணலை.” அவள் கூற, அந்த நொடி அவளிடம் தவறு செய்த ஒரு குழந்தையின் பாவனை மட்டுமே. எந்த பாவனையும் பார்க்க விரும்பாதவன் போல், “நான் இருக்க வேண்டாமுன்னு பண்ணினியா?” அவன் உணர்ச்சி துடைத்த குரலில் கேட்க, “இல்லை, என்னை ஜெயசாரதி பொண்ணுன்னு சொன்னால் எனக்கு பிடிக்காது. நான் நிறுத்த சொல்லியும், நீங்க அவர் பொண்ணுன்னு பேசிக்கிட்டே இருந்தீங்க… அது தான்…” அவள் கூற, அவ பேசுவதை கேட்டுக்கொண்டே அவன் ஐஸ்கட்டியை தன் தலையில் வைத்துக் கொண்டான்.

“எனக்கு கொஞ்சம் முன் கோபம் அதிகம்” அவள் கூற, “கொஞ்சமில்லை… ரொம்ப… அப்புறமா அது முன் கோபமில்லை. மொத்த உருவமும் கோபம் தான் போல” அவன் சிரிக்க, அவள் அவனோடு அவன் கேலியை ரசித்து சிரித்தாள்.

முகிலனுக்கு அவனுக்கு தெரிய வேண்டிய விஷயம் கிடைத்துவிட்டது. மீராவிடம் கோபமும் திமிரும் இருக்கிறது. ஆனால், பொய்யில்லை. அவன் அவளை கண்டு கொண்டான். ‘இதில் ஜெயசாரதியின் தலையீடு இல்லை. இவள் தான் ஏதோ முந்திரிக்கொட்டை தனம் செய்திருக்கிறாள்’ அவன் அவள் பேச்சில் வரையரைத்துக் கொண்டான்.

ஆனால், அவன் மூளை வேலை செய்யும் அதே வேகத்தில், அவன் மனமும் வேலை செய்தது. அவளிடம் மேலும் பேச வேண்டும் என்ற அவா எழுந்தது.

“படம் ரிவியூ தாறுமாறா போட்டதுக்கு காரணம்?” மெட்டுவிடாமல் அவன் கேட்க, “படம் கேவலமா இருந்தா…” அவள் கூற, “கேவலமுன்னு சொல்றதுக்கு உங்களுக்கு என்ன தெரியும்?” என்று அவன் அவளை இடைமறித்தான்.

“என்ன தெரியணும்? ஒரு பார்வையாளனுக்கு படம் எப்படி இருக்குனு சொல்ல தெரிஞ்சா போதும்” அவள் அழுத்தமாக கூற, அவன் இப்பொழுது நக்கலாக சிரித்தான்.

“இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?” அவள் கேட்க, “பார்வையாளன் எல்லாம் விமர்சகன் ஆன விந்தையை நினைச்சி சிரிச்சேன்” அவன் மீண்டும் ஏளனமாக சிரித்தான்.

“ஓ, அப்ப படம் எடுக்குற உங்களுக்கு எல்லாம் தெரியும். படம் நடிக்கிற உங்களுக்கு தான் எல்லாம் தெரியும். நாங்கள் எல்லாம் முட்டாள்?” அவள் அவன் முன் கேள்வியாக நிற்க, “முட்டாள்ன்னு நான் சொல்லலை. ஆனால், எதுவும் தெரியாமல், இப்படி மடத்தனமா கமெண்ட் சொல்ல வேண்டாமுன்னு சொல்றேன்” அவன் அவளை மறைமுகமாக எச்சரித்தான்.

தான் மட்டும் பேசுபொருளாக இருக்க வேண்டிய இடத்தில் அவளும் பேசு பொருளான கோபம் அவன் எச்சரிக்கையில் இருந்தது. “விமர்சனம் சொல்ற ஒவ்வொருத்தரையும் கூப்பிட்டு இப்படி கோபப்படுற நீங்க முட்டாளா? இல்லை விமர்சனம் சொல்ற நாங்க முட்டாளா?” அவள் கேட்க,

“ஒவ்வொருத்தரையும் கூப்பிட்டு சொல்ற அளவுக்கு நான் வேலை வெட்டி இல்லாமல் இல்லை. உன் மேல் எனக்கு பல சந்தேகம், அது தான் பேச வேண்டியதாகிருச்சு” அவளுக்கு ஏன் விளக்கம் கொடுக்கிறோம் என்று புரியாமல், அறியாமல் விளக்கம் கொடுத்தான்.

“சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிட்டு எனக்கு மடச்சி பட்டம் வேற?” அவள் கேட்க, “சினிமாவை பத்தி கொஞ்சம் கூட அறிவு இல்லாதவங்க கண்டபடி விமர்சனம் பண்ண கூடாது. அப்படி விமர்சனம் பண்றவங்களை, நான் அறிவில்லாதவங்கன்னு தான் சொல்லுவேன்” அவன் ஆணித்தரமாக கூறினான்.

“கதையை விமர்சனம் பண்ண அவன் வாசகனா இருந்தால் போதும். வாசகனுக்கு எழுத தெரியணுமுன்னு அவசியமில்லை. எடுத்த புகைப்படத்தை விமர்சனம் பண்ண அவன் ரசிகனா இருந்தால் போதும். அவனுக்கு புகைப்படம் எடுக்க தெரியணும்னு அவசியமில்லை. ஒரு படத்தை ரசிக்க அவன் ஒரு படத்தின் பார்வையாளனா இருந்தால் போதும். அவனுக்கு படம் எடுக்க தெரியணும்னு அவசியமில்லை. பொது இடத்தில் வைக்கப்பட்ட எல்லா பொருட்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவை. இப்பவும் எப்பவும் நான் அப்படித்தான் விமர்சனம் பண்ணுவேன்” அவள் சவாலாகவே கூறினாள்.

“அப்ப, உன்னை உன் விமர்சனத்தை இப்படி தான் எல்லா இடத்திலையும் கேள்வி கேட்பாங்க. நக்கல் அடிப்பாங்க.” அவன் அசட்டையாக கூற, “அப்ப, என்னை பத்தி வர்ற மீம்ஸ் எல்லாம் உங்க வேலையா?” அவள் கோபமாக கேட்க, “அது என் வேலை இல்லை” அவன் மறுத்தான்.

“ஆனால், எப்படி எங்கள் படைப்பு வெளிய வந்தா விமர்சனத்துக்கு உட்பட்டதோ, அதே மாதிரி உன் விமர்சனம் பொதுவெளியில் வந்துட்டா விமர்சனத்துக்கு உட்பட்டது” அவன் கூற, “நான் மறுக்கலை. உங்க வேலையான்னு மட்டும் தான் கேட்டேன். ஆனால், யார் என்ன சொன்னாலும், ஐ டோன்’ட் கேர்” அவள் உதட்டை சுளித்தாள்.

“நீ என்ன பேசினாலும் சரி. சுத்தமா சினிமா அறிவே இல்லாம படம் ஆரம்பிச்சு கால் மணி நேரத்தில் போடுற ரிவியூ, இன்டெர்மிஸ்ஸின்ல போடுற ரிவியூ நீ முதல் நாளில் போடுற ரிவியூ எல்லாமே கேணைத்தனமான விஷயம் தான். ஒரு படம் எடுக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? எவ்வளவு செலவு தெரியுமா? என்ன ஏதுன்னு தெரியாம சும்மா மொக்கை, நீளம், சீரியல்,ரம்பம் அப்படின்னு சொல்லிற வேண்டியது” அவன் கூற,

“இவ்வளவு அக்கறை இருந்தா, செலவு செய்யறோமுன்னு பொறுப்பிருந்தா அந்த படத்தை ஒழுங்கா எடுக்க வேண்டியது தானே?” அவள் வெடுக்கென்று கேட்க, “லூசா நீ, அறிவில்லாமல் ஏதாவது பேசிகிட்டு” அவன் கூற, “என்ன அறிவில்லை அறிவில்லைனு சொல்லிகிட்டே இருக்கீங்க. அப்ப சொல்லிகுடுங்க. என்னை உங்க கூட ஷூட்டிங் ஸ்பாட் கூட்டிகிட்டு போங்க. நான் ஒரு படம் உங்க கூட ஒர்க் பண்றேன். எனக்கு சொல்லி கொடுங்க. சினிமா கத்துக்கிட்டு என் அறிவை வளர்த்துக்கிட்டு உங்கள் திரை உலகத்தை நான் விமர்சனம் பண்றேன்.” அவள் கோரிக்கையில் அவன் ஸ்தம்பித்து நின்றான்.

“என்ன முடியாதா? சொல்லி கொடுக்கத்தானே சொல்றேன். இப்படி பேயடிச்ச மாதிரி நிக்கறீங்க?” என்று அவள் கேட்க, அவன் அவளை கூர்மையாக பார்த்தான்.

“என்ன பயமா இருக்கா? இன்னும் உங்களை எல்லாம் கிழி கிழின்னு கிழிப்பேன்னு பயமா இருக்கா?” அவள் ஒற்றை புருவம், அவன் ஒற்றை புருவம் சுருங்கியது.

“என்ன யோசனை? முடியும் இல்லை முடியாது. ஒற்றை பதில் சொல்ல எதுக்கு இவ்வளவு நேரம்?” அவள் அவன் முன் சவாலாக நின்றாள்.

தித்திப்புகள் தொடரும்…

error: Content is protected !!