Thithikkum theechudare – 7

TTS

Thithikkum theechudare – 7

தித்திக்கும் தீச்சுடரே – 7

மீராவின் வீடு. மீரா தன் அறையில் தனக்கு தேவையானவற்றை அடுக்கி கொண்டிருந்தாள். ‘பல தரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின், அப்படி இப்படி நாள் மாறி நான் முகிலனோட ஷூட்டிங்ஸ் ஸ்பாட்டிற்கு போற நாளும் வந்திருச்சு’ அவள் சிந்தை ஒரு பக்கம் சிந்தித்து கொண்டிருக்க, அவள் கைகள் பரபரத்து கொண்டிருந்தது.

ஜீன்ஸ், ஜேக்கின்ஸ், முன் பட்டன் வைத்த காலர் சட்டை. உடையை வைத்து பார்த்தால் அது ஒரு பெண்ணின் பெட்டி என்று சொல்லத் தோணாத அளவுக்கு அவளின் உடை தேர்வு இருந்தது. ஒரு நொடி, தன் பெட்டியில் இருக்கும் உடையைப் பார்த்தாள். ‘என் வேலைக்கு இது தான் சரி.’ அவள் மனம் நம்பியது. தனக்கு தேவையான மின்னணு சாதனங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்து வைத்தாள்.

எல்லாம் முடிந்ததும், அவள் கண்கள் தன் அறையை ஒரு அலசு அலசியது. ‘என் ரூமுக்கு யாரும் வரமாட்டாங்க. ஆனால், இந்த மிஸ்டர் ஜெயசாரதி திடீர்ன்னு உரிமை கொண்டாட வாய்ப்பிருக்கு’ யோசனையோடு, வேகமாக சென்று தன் அறையின் உள் தாழ்ப்பாளை அடைத்தாள்.

தன் அறையில் மேல் அலமாரியில் வைத்திருக்கும் ஒரு பையை எடுத்தாள். அதனுள் இருந்து, பெப்பர் ஸ்பிரே, சில்லி பவுடர் ஸ்பிரே எடுத்தாள். ‘நான் புதுசா வாங்கி வச்சிருந்த, பாக்கெட் கத்தி எங்க?’ அவள் படபடவென்று தேடினாள். அந்த பையினுள் இருந்து, சின்னதாக ஒரு பொருள் கிடைத்தது. அவள் முகத்தில் ஆயிரம் கோடி புன்னகை. அதை திறந்து பார்த்தாள். சின்ன கத்தி பளபளத்தது. அதன் கூர்மையை பரிசோத்தித்து கொண்டாள். நீளமான கயிறு ஒன்றையும் எடுத்துக் கொண்டாள்.

தன் சின்ன கைப்பைக்குள், தனக்கு தேவையான பொருட்களோடு இதனையும் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

கதவு தட்டும் ஓசை கேட்க, அவள் தன் பெட்டி கைப்பையை எல்லாம் சட்டென்று பார்வையில் படாதபடி கீழே வைத்துவிட்டு, தன் கதவை திறந்தாள். வெளியே ஜெயசாரதி நின்று கொண்டிருந்தார் பாசம் தேக்கிய கண்களோடு. ‘நினைச்சேன் வருவார்ன்னு. அப்படியே வந்திற வேண்டியது. ஒரு எமோஷனல் ட்ராமா போட வேண்டியது’ தன் மனதிற்குள் அவரை வைதபடி, அறையின் வாசலில் எந்த ரகளையும் வேண்டாம் என்று வழிவிட்டாள் மீரா.

அவர் எப்பொழுதாவது தான் அவள் அறைக்கு வருவதுண்டு. ‘நீ முகிலனோடு போக போகிறாயா?’ என்று நேரடியாக பேச்சை ஆரம்பிக்க விரும்பாமல், அவர் அவள் அறையை நோட்டமிட்டார். ‘பயங்கர ஒழுங்கா இருக்கு.’ அவர் மனதிற்குள் தன் மகளை மெச்சிக்கொண்டார். சோஃபா அவள் அறைக்குள் நுழைந்ததுமே இருந்தது. அவர் அதில் அமர்ந்திந்தார். மீரா அடுக்கி வைத்த பெட்டிகள் அவர் கண்ணில் படவில்லை. பெட்டிகள் இருந்தால், அதை வைத்து பேச்சை ஆரம்பிக்கலாம்.

அங்கு சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தன. மீரா அவருக்கு எதிரில் அமர்ந்தாள். ‘என்ன கேட்க போறாருன்னு தெரியும். நாமளே சொல்லி இவரை வெளிய அனுப்பிருவோமா?’ அவள் மனம் கேட்க, ‘ரூமுக்கு வந்தவருக்கு என்ன ஈகோ வேண்டிக்கிடக்கு? கேட்க வேண்டியது தானே?’ அவள் தனக்கு எதிரே இருந்த தன் அலைபேசியில் மூழ்க ஆரம்பிக்க, “நீ இன்னைக்கு போக வேண்டாம்.” அவர் குரல் கட்டளையோடு ஒலித்தது.

“நான் உங்க கிட்ட கேட்கவே இல்லையே” அவள் குரல் வழக்கம் போல் ஏளனமாக ஒலித்தது. “நீ கேட்கலைன்னாலும், சொல்ல வேண்டியது என் கடமை.” அவர் கூற, “கடமை” அவள் குரல் இப்பொழுது வேதனையோடு ஒலித்தது. அவள் முகம் அதை அப்பட்டமாக காட்ட, ஜெயசாரதியின் கண்கள் கூர்மை பெற, சட்டென்று மீரா தன்னை சரிபடுத்திக் கொண்டாள்.

“பேச வேற ஒண்ணுமில்லைனா, நீங்க போகலாம்” அவள் கூற, “ஒரு சினிமா கவர் ஸ்டோரி பண்ண நீ போகணுமுன்னு அவசியமில்லை.” சற்று நிறுத்தி, “அதுவும் அந்த முகிலனோட” அவர் வெறுப்பாக கூற, “எனக்கு பிடிச்சிருக்கு. ஒரே மாதிரி ஊர் பிரச்சனையா பார்த்து பார்த்து எனக்கு சலிச்சி போச்சு. உங்களை மாதிரி அரசியல்வாதி இருக்கிற வரைக்கும் எந்த பிரச்சனையும் மாற போறதில்லை. எனக்கு ஒரு மாற்றம் வேணும்.” அவள் பேச, அவர் அவளை இடைமறித்தார்.

“உன்னை இந்த ரூமில் அடைத்து வைக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. நான் அதை பண்ணலை. அப்படி எல்லாம் பண்ண விரும்பலை.” அவர் தோற்றம் சட்டென்று மாறி கர்ஜிக்க, “அதை என்னைக்குனாலும் நீங்க பண்ணுவீங்கன்னு தெரிஞ்சி தான், நான் எல்லா பாதுகாப்போடும் இந்த வீட்டில் இருக்கேன்.” அவள் புன்னகை மாறாமல் கூறினாள்.

தன் மகளின் குணாதிசயங்கள் தெரிந்தாலும், அவள் பதிலில் அவர் நெற்றி சுருங்கியது. ‘ஷூட்டிங் நடந்தா தானே நீ போவ? நீ எப்படி போறேன்னு நானும் பார்க்குறேன்’ அவர் எதுவும் பேசாமல் வெளியே செல்ல, ‘என்னால் முகிலனுக்கு கஷ்டம் வருமோ?’ அவள் மனம் அவனுக்காக சிந்தித்தது.

முகிலனின் அலுவலகம்.

 ‘இன்னைக்கு சாயங்காலம் கிளம்பனும்’ , முகிலன் தன் வேலைகளை மும்முரமாகவும் வேகமாகவும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அறையின் கதவை ஒருவர் தட்ட, “எஸ் ப்ளீஸ்…” என்றான் அவன் தன் கோப்புகளை பார்த்தபடி.

 “சார்” நாற்பதுகளில் ஒருவர் அவர் முன் நிற்க, “வாங்க, நானே உங்க கிட்ட பேசனுமுன்னு தான் இருந்தேன். நான் என் சம்பந்தப்பட்ட வேலைகளை எல்லாம் முடிச்சிட்டேன். இனி, என் தேவைகள் இருக்காதுன்னு நினைக்குறேன். இன்னைக்கு ஈவினிங் ஷூட்டிங் கிளம்புறேன். ஏதாவது வேணுமின்னா அப்பா கிட்ட கேளுங்க. அப்பா ஆபீஸ் வருவாங்க.” முகிலன் கூற, “ஓகே சார்” என்றார் அவர்.

“சார்…” அவர் இழுக்க, அவன் அவரை கேள்வியோடு பார்த்தான். “உங்க ஃபிலிம் பெர்சனல் மேனேஜர் ரொம்ப நேரமா காத்துகிட்டு இருக்கார். உங்க கிட்ட எத்தனை தடவை சொல்றதுன்னு தான், சொல்லாம வெயிட் பண்ணோம்” அவர் தடுமாற்றத்தோடு கூற, “ஓ, சாரி” அவன் முகம் சுளித்தான். “அவரை வர சொல்லுங்க.” அவன் முகத்தில் தீவிர சிந்தனையோடு கூறினான்.

அவன் மேலாளர் வரவும், “என்ன விஷயம்? எதுவா இருந்தாலும் ஃபோனில் சொல்லிருக்கலாமே?” என்றான் அவர் இங்க வந்ததன் விருப்பமின்மையை முகத்தில் காட்டியபடி, “சார், ஷூட்டிங்க்கு நிறைய பிரச்சனைகள் வந்துகிட்டே இருக்கு” அவர் வருத்தத்தோடு கூற, “எல்லாம் எதிர்பார்த்தது தான். மிஸ்டர் ஜெயசாரதி வேலையா தான் இருக்கும்” என்று தன் கோப்புகளை பார்த்தபடி கூறினான்.

அவன் மேலாளர் அமைதியாக இருக்க, தன் கோப்புகளை மூடினான்.

“சொல்லுங்க” என்று அவன் நேரடியாக விஷயத்திற்கு வர, “அந்த பொண்ணு மீரா வரணுமா?” ஆயிரத்தி ஓராவது தடவையாக அவர் தன் எதிர்ப்பை தெரிவித்தார். “அவங்க வர்றது முடிவான விஷயம்.” முகிலன் அழுத்தமாக கூற,

“சார், அவங்க வர்றதால் தான் இவ்வளவு பிரச்சனையும்.” அவர் நேரடியாக கூற, அவன் அவரை ஆழமாக பார்த்தான். “சார் ஒரு அரசியல் பிரச்சனையா இருக்கு. ஷூட்டிங் நடக்குமா நடக்காதான்னு தெரியலை. பல கோடி ரூபாய் பட்ஜெட் சார்.” அவர் கூற, “நம்ம ப்ரொடக்ஷன் தானே பார்த்துக்கலாம்” அவன் தன்மையாக கூறினான்.

“கோடிகள் நமக்கு மட்டுமில்லை சார். நம்ம ஷூட்டிங் நம்பி நிறைய குடும்பங்கள் வாழுது. இந்த ஷூட்டிங் நடக்கலைனா…” அவர் பேச்சை இடைமறித்தான் முகிலன். “நடக்கும்” அவன் உறுதியாக கூற, “இது அரசியல் சார்ந்த பிரச்சனை சார்.” அவர் கூற, “இது வரைக்கும் நமக்கு அரசியல் சார்ந்த பிரச்சனைகள் வந்ததில்லையா?” அவன் கேட்க,

“அது இந்த அளவுக்கு இல்லை சார். இப்ப, படத்தையே ஆரம்பிக்க விட மாட்டாங்க போல. இதுக்கு முன்னாடி, அப்பப்ப பிரச்சனைகள் வரும். நாம சமாளிச்சிருக்கோம்” மேலாளர் கூற, “கரெக்ட். சமாளிச்சிருக்கோம். ஆனால், பதிலடி கொடுக்கலையே” அவன் கண்களில் ரௌத்திரம்.

முகிலன் மற்றவர்களின் கருத்துக்களை கேட்பான் தான். ஆனால், சில நேரங்களில் அது நடக்காது. அந்த முகபாவனையை கண்டதும், அவன் மேலாளர் எழுந்து கொள்ள, “உங்களை வருத்தப்படுத்திருந்தா என்னை மன்னிச்சிருங்க” முகிலன் கூற, “அய்யய்யோ” பதறிவிட்டார் மேலாளர்.

“இல்லை சார்” அவர் பதற, “எந்த பிரச்சனையும் பெருசாகாது. நீங்க எனக்கு பிரச்சனை ஆரம்பிக்கும் பொழுது சொல்லிடுங்க. நான் பார்த்துக்கிறேன். நான் தேவையான எல்லா இடத்திலையும் சொல்லிருக்கேன்” அவன் நம்பிக்கையோடு கூற, “ஓகே சார். நீங்க சொன்னால் சரி தான்.” மீரா வருவதை தடுத்துவிடலாம் என்ற எண்ணம் கைகூடவில்லை என்ற எண்ணம் அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிய,

“மீராவால் எந்த பிரச்சனையும் வராது” அவன் நிர்மலமான முகம் கூற, அவன் மேலாளர் சிரித்துக் கொண்டார். அந்த சிரிப்பின் அர்த்தம் அவனுக்கு புரிவது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது.

அப்பொழுது அவனுக்கு அவன் தாயிடமிருந்து அழைப்பு வந்தது.

 “முகிலா வீட்டுக்கு வந்துட்டு தானே கிளம்புவே?” அமிர்தவல்லி கேட்க, “அம்மா, வந்துகிட்டே இருக்கேன்.” முகிலன் கிளம்பியபடியே கூற, “கதை விடாத, நான் கூப்பிட பிறகு தான் கிளம்பிருப்ப” அவர் கூற, “அம்மா… அம்மா…” அவன் சிரித்துக் கொண்டே காரை நோக்கி நடக்க, “சீக்கிரம், பத்திரமா வா” அவர் பேச்சை முடித்துக் கொண்டார்.

முகிலன் வீட்டிற்குள் சென்றதும், அமிர்தவல்லி பெட்டியில் வைத்துக் கொள்ளுமாறு அவனுக்கு தேவையான சிலவற்றை கொடுத்தார். “அம்மா, நான் என்ன சின்ன பையனா?” அவன் புன்னகையோடு கேட்க, “எனக்கு என்னைக்கும் சின்ன பையன் தான் டா” அவர் கூற, அவன் தன் தாயின் தாடையை செல்லம் கொஞ்சி தன் அறை நோக்கி செல்ல எத்தனிக்க,

“என்ன அம்மாவும் மகனும் கொஞ்சல்ஸ் ஓவரா இருக்கு?” கோவிந்தராஜன்  கேட்க, “அப்பா, அதெல்லாம் எப்பவும் அப்படித்தான்” முகிலன் சத்தமாக சிரித்தான். “அமிர்தா, அவனை நம்பாத. எல்லாம் அவனுக்குனு ஒருத்தி வர்ற வரைக்கும் தான்” அவர் சிண்டு முடிய முனைய, “என் மகன் அப்படி இருந்தா, முதலில் சந்தோஷப்படுற ஆள் நான் தான்” அவன் தாய் வாஞ்சையோடு கூறினார்.

“அதெல்லாம், இப்ப அப்படிதான் சொல்லுவ. மருமகள் வந்ததும் சரியான மாமியார் ஆகிருவ” கோவிந்தராஜன் கூற, “அப்பா, நான் ஷூட்டிங் கிளம்பனும்.” அவன் தப்பித்துக் கொள்ள முயல, “நீ கிளம்புடா. உங்க அப்பா எப்பப்பாரு, இப்படித்தான் தேவை இல்லாம பேசுவாங்க” அமிர்தவல்லி கூற, “நல்லதுக்கு என்னைக்கு காலம் இருக்கு.” அவர் வருத்தத்தோடு கையசைத்தார்.

“முகிலன்” அமிர்தவல்லி ஆழமான குரலில் அழைக்க, “அம்மா” என்றான் . “நீ வரும் பொழுது நான் உனக்கு பெண் பார்த்து வைத்திருப்பேன். நிச்சியதார்த்தம் இருக்கும்” அவர் அன்பும் கண்டிப்பும் கலந்த குரலில் கூற, அவன் தன் தாயின் கைகளை பிடித்து கொண்டு, “உங்க விருப்பம் தான் என் விருப்பம் அம்மா” என்றான் உறுதியான குரலில்.

அதே நேரத்தில், அவனுக்கு மீராவிடமிருந்து ஓர் குறுஞ்செய்தி வந்தது. அந்த குறுஞ்செய்தில் அவன் புருவம் நெளிந்தது.

படபடவென்று அவன் அறைக்குள் நுழைந்தான். சிலருக்கு அழைப்புக்கள் விடுத்தான். ‘எனக்கே இவ்வளவு பிரச்சனைன்னா, மீராவுக்கு நிறைய பிரச்சனை இருக்குமோ?’ அவன் மனம் மீராவுக்காக வருந்தியது. சில நொடிகளில் தன்னை மீட்டுக்கொண்டான், ‘நாமளா வர சொன்னோம். அந்த பொண்ணு தானே வரேன்னு சொல்லி பிடிவாதமா வர்றா. அப்ப, அவ பிரச்சனை’ அவன் பிடிவாதமாக மீராவின் சிந்தனையை ஒதுக்கி விரைவாக கிளம்பினான்.

இரவு நேரம். சொகுசு கப்பலின் மேற்புறத்தில்.

         மீரா வானத்தை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். முழு நிலவு பிரகாசமாக அதன் வெள்ளி கிரகங்களால் அதன் ஒளியை பரப்பிக் கொண்டிருந்தது.

அவள் அந்த நிலவை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் ஏதோவொரு உருவம் தெரிவது போல் இருக்க, அவள் முகத்தில் மென்னகை பரவியது. அதே நேரத்தில், அவள் இங்கு வருவதற்கு முன் நடந்த நிகழ்வுகள் நினைவு வர அவள் முகத்தில் விரக்தி புன்னகை வந்தமர்ந்தது. ‘என்றாவது ஒரு நாள், என் வாழ்வில் அரங்கேறும் கொடுமைகளை சொல்ல எனக்குன்னு யாரவது இருப்பாங்களா?’ அவள் மனம் கேள்வி எழுப்பியது.

மனதின் கேள்வியில், அவள் கண்கள் பளபளத்தது. அது கண்ணீரா? இல்லை கொலைவெறியா? அவளுக்கே அவள் மனம் தெரியவில்லை. புரியவில்லை.

“அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ

அடிமன தாகம் விழியில் தெரியாதோ-ஏலோ-ஏலேலோ”

 

 அவள் இதழ்கள் பாடலை முணுமுணுக்க, ‘என் மனதின் தாகம் யாருக்கு தெரியும்?’ அவள் சிந்தை கேள்வி எழுப்பியது.

“பாதை மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ

வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ”

 

 ‘என் வாழ்வில் வானும் நீரும் என்றாவது ஒரு நாள் ஒன்று சேருமா?’ அவள் கண்கள் கண்ணீர் முத்துக்களை தெறிக்க எத்தனிக்க, அவள் கண்ணிமைகள் முந்திக்கொண்டு அவள் கண்களை இறுக மூடிக்கொண்டது.

கப்பலின் மேற்கூரையில், நிலவின் ஒளியில் தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு, தன் கண்களை இறுக மூடிக்கொண்டு இறுக்கமாக மிக இறுக்கமாக நின்று கொண்டிருந்தாள்.

அந்த சொகுசு கப்பலில் அனைத்தையும் சரி பார்த்துவிட்டு முகிலன் தன் அறைக்கு செல்ல அவனுக்கு மீராவின் நினைவு வந்தது. ‘மீராவை பார்க்கவில்லையே?’ அவன் மனம் கேள்வி எழுப்ப, அவன் தன் மேலாளரிடம் கேட்க, “சார், அவங்க வந்தது லேட். இப்பவும் சொல்ல சொல்ல கேட்காம இருட்டில் மேல போய் நின்னுட்டு இருக்காங்க. கீழே விழுந்தா கூட இப்ப யாருக்கும் தெரியாது சார்” அவர் குறைபட, “நான் பார்த்துகிறேன்” அவன் படபடவென்று மேலே சென்றான்.

அங்கு அவள் நின்று கொண்டிருந்த தோற்றத்தில் அவன் உறைந்து போனான். ‘இந்த சின்ன வயதில், இந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனையா இருக்கும்?’ அவன் அவள் அருகே செல்ல, அவள் அதை கவனிக்கவில்லை. அவள் கண்கள் இறுக மூடி இருந்தது. அவன் அவள் எதிரே நின்றான். அவளை ஆழமாக பார்த்து கொண்டிருந்தான்.

தூக்கி கட்டியிருந்த அவள் சிகை, அந்த கட்டுபாடுகளை மீறி கடல் காற்றின் வேகத்தில் சுதந்திரமாக பறந்து கொண்டிருந்தது. காற்றின் திசையை எதிர்த்து நிற்பது போல அவள் நின்று கொண்டிருக்க, ‘எதிர்த்து நிற்பது தான் அவள் வழக்கம் போலும்’ அவன் எண்ணங்கள் அவனை ஆக்கிரமிக்க, அவன் கண்கள் அவள் தேகத்தை தழுவியது.

கண்ணியமான பார்வை தான். ஆனால், ஒரு ஆணின் பார்வை. அவள் தொள தொள சட்டை கடல் காற்றின் வேகத்தில் பின்னே செல்ல, அது அவள்  அங்க வடிவை அப்பட்டமாக காட்டியது. அதற்கு மேல் அவளை பார்க்காமல், “மீரா” என்றான். தன் உலகத்தில் மெய்மறந்து நின்ற அவள் அவன் அழைப்பில் சட்டென்று தடுமாற, அவன் அவளை தாங்கி பிடித்தான்.

கொடி இடையால் அவன் கரங்களில் பொருந்தி நிற்க, அவன் ஸ்பரிசம் அவளை நட்போடு இல்லையில்லை பாதுகாக்க மட்டுமே அவளை தீண்டியது. ஆனால், அவள் ஸ்பரிசத்தில் ஒரு மாற்றம். அவளை பாதுகாக்க, அவளுக்கென பல ஆண்டுகளுக்கு பின் அவளை ஒரு ஸ்பரிசம் தீண்டுகிறது.

அவள் மூளை அனைத்தையும் மறந்து அந்த நொடியை அந்த பாதுகாப்பு உணர்வை ரசிக்க ஆரம்பித்தது. யாரும் அறியா ஆறுதலை விரும்பும் வல்லினமாக்கப்பட்ட அவள் மனம் பெரிதாக ஒன்றுமில்லாத அவன் கொடுத்த பாதுகாப்பு உணர்வில் சட்டென்று கரைய ஆரம்பிக்க, பலவீனமாகுமுன் அவள் சிந்தை விழித்து கொண்டது.

வெறுப்பான பார்வையோடு விலகி நின்றாள் மீரா. முகிலன் அவளின் பார்வையை மட்டுமே பார்த்து கொண்டிருந்தான். அவளை முழுதாக படிக்க முடியாவிட்டாலும், அவளை முடிந்தளவு கணித்துக் கொண்டிருந்தான். அவள் நெகிழ்வுகள் அவனை ஈர்க்கவில்லை.

அவன் அவளை சகஜமாக்க விரும்பினான். “உன் திட்டம் என்ன?” அதிகாரமாக வந்தது அவன் குரல். ‘திட்டம்?’ அவள் இருந்த குழப்பத்தில், அவள் அவனை பதிலேதும் கூறாமல் பார்த்தாள். “அப்பாவுக்கும் பொண்ணுக்கும் என்ன திட்டம்னு கேட்டேன்?” அவன் குரல் சாதரணமாக ஒலித்தாலும், அவன் கண்களில் குறும்பு மின்னியது.

அவன் கேள்வியில் அவளின் எண்ணங்கள் பின்னே சென்று கோபத்தை கிளப்ப, அவன் விழிகளில் தெரிந்த குறும்பில் அவள் சுதாரித்து கொண்டாள். “மிஸ்டர் ஜெயசாரதிக்கு அரசியலில் பெரிய ஆசை. பெரும் பதவி அடுத்ததா அவர் கைக்கு வரணும். அதில் அவருக்கு யாரும் இப்ப பெரிய இடைஞ்சல் இல்லை. ஆனால், ஹீரோவோட வளர்ச்சி இப்ப கொஞ்சம் அதிகமா இருக்கு. எங்க நீங்க அடுத்த தேர்தலுக்குள்ள அவருக்கு போட்டியா வந்திருவீங்களோன்னு பயம். அது தான் அவருக்காக, நாம போற தீவில் வைத்து உங்களை போட்டு தள்ளிரலாமுன்னு எங்க திட்டம்” அவள் குரல் தீவிரம் காட்டினாலும், அவள் கண்களில் குறும்பு மின்னியது. அவள் குறும்பு பேச்சை ரசித்து அவன் பெருங்குரலில் சிரித்தான்.

அவர்கள் பேச்சையும் அவன் சிரிப்பையும் கீழே இருந்து பார்த்துக் கொண்டிருந்த இரு ஜோடி கண்கள் அதை ரசிக்கவில்லை. அதே பொழுதில் அந்த கப்பலுக்கு கீழே இருந்த கடலோ, அவர்களுக்கு எழ போகும் பிரச்சனையை எண்ணி கோபமாக மிக கோபமாக ஆர்ப்பரித்தது. ‘தன்னால் அவர்களை காக்க முடியுமா?’ என்ற ஆதங்கத்தோடு வெண்ணிறத்தில் பொங்கி வழிந்தது.

தித்திப்புகள் தொடரும்…

error: Content is protected !!