Thithikkum theechudare – 8

TTS

Thithikkum theechudare – 8

தித்திக்கும் தீச்சுடரே – 8

முகிலனின் சிரிப்பு சத்தம் அந்த கடலின் ஆர்பரிப்போடு இணைந்து கொண்டது. அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும். அவள் கவனமும் இங்கில்லை. அவன் சட்டென்று அவள் கவனத்தை திசை திருப்புமாறு, அவன் கரங்களை முன்னே நீட்டினான்.

அவள் கவனம் அவன் பக்கம் திரும்பியது. ஆனால், நீட்டிய அவள் கரங்களை அவள் பற்றிக்கொள்ளவில்லை. ஆராயும் விதமாக அவனை பார்த்தாள்.

“இது காதல் கரங்கள் இல்லை. நட்புக்கரம்” என்றான் அவன் தெளிவாக. “எல்லார் கிட்டையும் நான் நட்பு பாராட்டுறதில்லை” அவள் பதில் பளிச்சென்று வந்தது.

“காதல் கரங்களா இருந்தால் யோசிக்கணும். நட்பு கரங்களுக்கு யோசிக்கணுமா என்ன?” அவன் புன்னகையோடு கேட்டான்.

“காதல் கரங்களா இருந்தால் கூட யோசிக்க தேவையில்லை. ஏமாற்று வேலையும், பித்தலாட்டமும் நிறைந்தது தானே காதல். காதலிக்கறதும் கழட்டி விடறதும் யாருவேணுமினாலும் செய்யலாம். ஆனால், நட்பு அப்படியில்லை. அது உண்மையும், நம்பிக்கையும் நிறைந்தது. அதுக்கு நேர்மையா இருக்கணும். சட்டுன்னு நட்பு கரம் நீட்ட முடியாது” அவள் ஆழமான குரலில் சொன்னாள்.

‘சில நாட்களுக்கு முன் இவள் நட்பு ரீதியில் பேசினாளா இல்லையா?’ என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. ‘ஆனால், இவள் குழப்பத்தில் இருக்கிறாள்’ என்று அவன் சிந்தை அவனுக்கு தெளிவாக உணர்த்தியது.

“ஆக, என் மேல் நம்பிக்கை இல்லாமல் தான் இவ்வளவு தூரம் தனியா வந்தியா?” அவன் நீட்டிய கைகளை தன் பக்கம் இழுத்துக்கொண்டு, அவளிடம் கேட்டான். கோபம் என்று வெளிப்படையாக காட்டாவிட்டாலும், அவன் குரலின் ஒதுக்கம் அதை தெளிவாக காட்டியது.

“நான் உங்க கூட தனியா வரலை. உங்க டீம் கூட வந்திருக்கேன்” அவள் கூற, அவன் மெளனமாக நின்றான். அங்கு மீண்டும் கடலின் ஓசை மட்டுமே. அவன் பேசவில்லை. அவள் பேசினாள்.

“நட்புக்கரம் நீட்டிய பின், நீங்க மட்டும் தான் என் நம்பிக்கைக்கு பாத்திரமா இருக்கணும்னு அவசியமில்லை. நானும் இருக்கணுமே” அவள் நக்கலாக கூற, அவன் அவளை கொஞ்சம் அதிர்ச்சியாக பார்த்தான்.

“மிஸ்டர் ஜெயசாரதி பொண்ணு, உங்களை சிக்கலில் மாட்ட வச்சிட்டா?” அவள் ஒற்றை புருவம் ஏறி இறங்கியது. “நான் அப்படி இல்லைன்னு, உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?” அவள் கேட்க, அவன் அவள் பக்கம் மீண்டும் கைகளை நீட்டினான், அவன் நம்பிக்கையின் உறுதியை காட்டியபடி.

நீட்டிய கரங்களின் கைகளை அவள் பற்றிக்கொண்டாள். “எந்த நேரத்திலும், என்னை…” அவள் பேச, “நான் உன்னை ஜெயசாரதியின் திட்டத்தோட சம்பந்தப்படுத்தவே மாட்டேன். நீ என்னை நம்பலாம். ஆனால், நாம வெளிப்படையா பேசணும்” என்று அவன் கூற, அவள் தலையசைத்தாள்.

அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். “இந்த நேரத்தில் இப்படி மேல தனியா நின்னு பேச வேண்டாம். நாம நம்ம கேபின்ல இருக்கிற பால்கனில உட்கார்ந்து பேசுவோம்” அவன் கூற, அவன் கூற்றில் இருந்த நியாயத்தில் அவள் படியிறங்கி சென்றாள்.

கடல் அலை தொட்டு செல்வது போல் இருந்த பால்கனி. கண்ணாடி போன்ற நாற்காலி. அவன் அமர, அவள் எதிரே அமர்ந்து கொண்டாள். கடந்து செல்பவர்கள் இவர்களை பார்க்க முடியும். இவர்கள் சத்தமாக பேசினால் கேட்க முடியும். ஆனால், இவர்கள் மெல்லமாக பேசினாள் இவர்கள் பேசுவதை யாராலும் கேட்க முடியாது.

“உனக்கு என்ன வேணும்?” என்று அவன் நேரடியாக கேட்க, “நீங்க இப்ப போற தீவிலிருந்து இங்க இருக்கிற எல்லா தீவுக்கும் போக முடியும் தானே? நான் இங்க இருக்கிற எல்லா தீவுக்கும் போகணும்” அவள் அவன் கண்களை பார்த்தபடி கூறினாள்.

‘கோபம், திமிர், அலட்சியம், அகங்காரம் இவை அனைத்தையும் இதுவரை காட்டிய அவள் கண்கள் இன்று கெஞ்சுகிறதோ?’ என்று அவன் மூளை வேலை செய்தது.

“எதுக்கு?” என்று அவன் கேட்க, ‘அதைப் பற்றி உனக்கு என்ன?’ எரிந்து விழவே அவள் எண்ணினாள். ஆனால், இப்பொழுது அது சரியில்லை என்று அவள் சிந்தை அவளுக்கு அபாய மணியடிக்க, “தொலைந்து போன என் வாழ்க்கையை தேட” அவள் மொட்டைத் தட்டையாக கூற, “என்ன காதலனை தேடியா?” அவன் நமட்டு சிரிப்போடு கேட்க, அவள் பாம்பென சீறுவது போல் அவனைப் பார்த்தாள்.

அவன் சட்டென்று சுதாரித்துக் கொண்டான். “உன் பெர்சனல் விஷயம் எனக்கு தேவையில்லை. ஆனால், இதுக்கு தான் என் படத்திற்கு விமர்சனம் போட்டு என் கிட்ட வந்தியா?” அவன் நேரடியாக கேட்டான்.

“என் விமர்சனம் உண்மை. விமர்சனம் போட்டது இயல்பா நடந்தது. ஜெயசாரதி பொண்ணுன்னு சந்தேகத்தில் என்னை கூப்பிட்டு பேசினது நீங்க. ஆனால், உங்களைப் பார்க்க வரும் பொழுது இங்க நடக்க போற ஷூட்டிங் பத்தி தெரிஞ்சிகிட்டேன்.” அவள் கூற, “…” அவனிடம் மௌனம்.

” எனக்கு சாதகமா பயன்படுத்திக்க முயற்சி பண்ணினேன்.” அவள் கூற, “இதுக்கு எதுக்கு என் உதவி. மிஸ்டர் ஜெயசாரதி கிட்ட இல்லாத பணமா? நீ நினைச்சிருந்தால் வந்திருக்கலாமே” அவன் கேட்க, “…” இப்பொழுது அவளிடம் மௌனம்.

“வெளிப்படையா பேசனுமுனு நான் சொன்னேன். ஆனால், இப்ப வரைக்கும், இந்த குருஸ்க்கு வரும் பொழுது ஏற்பட்ட விபத்தை, இல்லை உனக்கு ஏற்படுத்தப்பட்ட விபத்தை பத்தி நீ சொல்லவே இல்லை” அவன் கூற, அவள் அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

“உங்களுக்கு எல்லாம் தெரியுமா?” என்று அவள் ஆச்சரியமாக கேட்க, “ம்… உன்னை வர விடாம தடுக்க நடந்த வேலைகள் தெரியும். நீ அங்க இங்க மாத்தி, எல்லார் கண்ணுளையும் மண்ணை தூவிட்டு வந்தது தெரியும். ஆனால், என் கூட நீங்க வரக்கூடாதுன்னு நடக்குற வேலைன்னு நான் நினச்சேன்” அவன் இழுக்க, “இல்லை, அதுமட்டுமில்லை. நான் இந்த இடத்திற்கே வர கூடாதுன்னு நடந்த வேலை. உங்க கூட வந்தா ஒரு பாதுகாப்பு இருக்கும்னு தான் நான் எப்படியோ குருஸில் ஏறிட்டேன்” அவள் படபடக்க, அவன் அவளை ஆழமாக பார்க்க, சட்டென்று நாக்கை கடித்து கொண்டு அவள் தன் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

அவளின் அந்த செய்கை அவனுக்கு பிடித்திருந்தது. “இதெல்லாம் நான் உனக்கு எதுக்கு பண்ணனும்?” அவன் காரியத்தில் கண்ணாக கேட்டான்.

“உங்களுக்கு என்ன வேணும்?” அவள் வியாபாரம் பேச, “என்ன கேட்டாலும் கிடைக்குமா?” அவன் இப்பொழுது அழுத்தமாக கேட்டான்.

“என் சுயமரியாதைக்கு இழுக்கு வராத எதை கேட்டாலும் கிடைக்கும்.” அவள் அழுத்தமாக கூற, “நட்பு, உறவு, பிசினெஸ் இதெல்லாம் போட்டு குழப்பிக்குற ஆள் நான் கிடையாது. அதே நேரத்தில், ஒரு பொண்ணோட சுயமரியாதை வைத்து வியாபாரம் பண்ற ஆள் நான் கிடையாது.” அவன் கூற, அவள் அவனை ஆழமாக பார்த்தாள்.

எதிரே இருப்பவளை மறந்து அவன் சிந்தனை பழைய நினைவுகளை சுற்றியது. முகிலன் மேல் உள்ள வெறுப்பால் ஜெயசாரதியால் அவன் படப்பிடிப்பு தடங்கலாக, ப்ரொடியூசர் அவனை அவமான படுத்தியதும், அதற்கு அவன் ஜெயசாரதியிடம் கெஞ்சி கொண்டு நின்ற காலம் நினைவலைகளாக வந்து போக, அவன் கண்களில் புலியின் வெறி, சிறுத்தையின் வேகம். அவள் அவனை பார்த்துக்கொண்டே இருந்தாள்.

‘ஜெயசாரதியை அழிக்க, சரியான துருப்பு சீட்டு’ அவள் மூளை வேங்கையாக இயங்கியது.

அவன் சட்டென்று நனவுக்கு வந்து, அவள் கைகளுக்கு மேல் தன் கைகளை வைத்து, “நீ வந்த செயலுக்கு நான் உறுதுணையா நிற்பேன்” அவன் வாக்குறுதி கொடுத்தான், தன் காரியத்தில் அவள் பயன்படுவாள் என்ற எண்ணத்தின் உறுதியோடு. அவன் கைகளுக்கு மேல் தன் கைகளை வைத்து, “அதுக்கு கைமாறா, நீங்க எதை கேட்டாலும் நான் செய்வேன்” அவளும் வாக்குறுதி கொடுத்தாள்.

இருவரும் இருக்கரங்களை வியாபார ரீதியாகவே நீட்டிக்கொண்டனர். ஆனால், அவர்கள் ஸ்பரிசம் அதை தாண்டி எதையோ உணர்வது போல், கட்டுண்டு அமைதி கொண்டன.

அவள் விடைபெற்றுக் கொண்டு அவள் அறையை நோக்கி சென்றாள்.

நேரம் சில பல பொழுதுகளை தாண்டி இரவை எட்டியிருந்தது. மீரா ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்.

    அப்பொழுது அங்கு முகிலனின் மேலாளர் முகிலனின் அறைக்கு வந்தார். “சார்” அவர் தயங்க, “ஏதாவது பிரச்சனையா?” என்றான். “குருஸில் ஒரு பிரச்சனையும் இல்லை சார். ஆனால், மீரா…” அவர் அவள் பெயரை கூற முகிலனின் முகம் அசூயயை காட்டியது.

“சொல்லுங்க” என்றான், செய்தி அறிந்து கொள்ளும் நோக்கோடு. “சார், அந்த பெண்ணால் நமக்கு ஏதோவொரு பெரிய பிரச்சனை இருக்கு சார்” என்றார் உறுதியாக.

“என்ன பிரச்சனை?” என்று அவன் புருவங்களை உயர்த்த, “அந்த பெண்ணை கொலை செய்து அந்த பழியை உங்க மேல போடுறது தான் திட்டம்முனு நமக்கு தகவல்” மேலாளர் கூற, “இது ஜெயசாரதியின் திட்டமா?” முகிலனின் ஒற்றை கண் சுருங்கியது.

“இல்லை சார், யாருனு தெரியலை. ஆனால், ஜெயசாரதியின் திட்டம் வேற.” மேலாளர் கூற, முகிலனின் செவிகள் கூர்மையாகியது. “மீராவை கடத்தி, பழியை உங்க மேல போடுறது” மேலாளர் கூற, முகிலன் தன் நெற்றியை தடவினான்.

“சார், அந்த பெண்ணை பத்திரமா திரும்பி அனுப்பிருவோமா?” மேலாளர் கேட்க, “தான் பெண்ணையே கடத்துற அளவுக்கு மோசமானவரா ஜெயசாரதி?” யோசனையாக கேட்டான் முகிலன் மேலாளரின் கோரிக்கையை பின்னுக்கு தள்ளி.

“சார் அந்த பொண்ணு ஏற்கனவே ஹவுஸ் அர்ரெஸ்ட் மாதிரி தான் இருக்குனு சொல்றாங்க. வெளிய பார்க்க சுதந்திரமா இருந்தாலும், மீரா பண்ற எல்லா விஷயமும் அவங்க அப்பாவுக்கு உடனடியா போய்டும் போல. அந்த பெண்ணை கண்ட்ரோலில் வைக்க தான் தேவசேனா பத்திரிக்கையில் வச்சிருக்காங்க. மீராவும் தன்னால் முடிஞ்ச இடைஞ்சலை தேவசேனாவுக்கு கொடுத்தாலும், தேவசேனா மீராவை வச்சிருக்கிற காரணம் இது தான்” மேலாளர் கூற,

‘தேவசேனாவை நான் சமாளிப்பேன்’ மீரா கெத்தாக சொன்ன வார்த்தைகள் அவனுக்கு நினைவு வந்தது. அதற்கு பின் இத்தனை வலிகளா? அவன் மனம் அவளுக்காக இளகியது.

“சார், அந்த பெண்ணை சுத்தி நிறைய பிரச்சனைகள் இருக்கு. நமக்கு எதுக்கு சார் பிரச்சனை? நாம, அந்த பெண்ணை பத்திரமா திருப்பி அனுப்பிருவோம்.” மேலாளர் கூற, “மீரா , நம்மளோட ஏன் இந்த இடத்துக்கு பிடிவாதமா வரணும்னு, உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” முகிலன் தன் காரியத்தில் கண்ணாக கேட்க, “சார்…” முகிலனின் தீவிரத்தில் அவர் தடுமாறினார்.

“அந்த பொண்ணை நான் திரும்ப அனுப்பறது பத்தி பேசிட்டு இருக்கேன்” அவர் கொஞ்சம் ஆதங்கத்தோடு கூற, “இல்லை, அது நடக்காது. மீரா நம்மளோட தான் இந்த ஷூட்டிங் முழுக்க இருப்பாங்க. நாம, பத்திரமா பார்த்துக்கலாம்.” முகிலன் கூற, மேலாளர் அச்சத்தோடு விழித்தார். “அந்த பொண்ணு, நான் இருக்கிற இடத்தில இருக்கணும். என் பக்கத்தில் இருக்கணும். நம்ம குரூப் ஆளுங்க கிட்ட சொல்லி வைங்க. புது ஆளுங்களை உள்ள விட வேண்டாம்.” அவன் அடுக்கி கொண்டே போக, “இது நமக்கு தேவையா சார்?” என்று மேலாளர் யோசனையாக கேட்டார்.

‘மற்ற வியாபாரத்திற்கு அரசியல் சகவாசம் வேணுமோ வேண்டாமோ எனக்கு தெரியாது. ஆனால், சினிமா துறைக்கு கண்டிப்பா வேணும். மிஸ்டர் ஜெயசாரதி பத்தி ஏதோவொரு விஷயம் நமக்கு கிடைக்குமுன்னு நான் நினைக்குறேன். இதில் ஜெயசாரதி மட்டும் நம்ம கிட்ட சிக்க போறதில்லை. ஜெயசாரதியின் துருப்பு சீட்டு, எதிர்கட்சியையும் நம்ம கிட்ட சாதகமா நடந்துக்க வைக்கும்.’ அவன் மனக்கணக்கு ஓட, ‘ஆம்’ என்று அழுத்தமாக தலை அசைத்தான்.

அதே நேரம்,

       ஓர் உருவம், “மீரா…மீரா…” என்று கீனமான குரலில் ஒலிக்க, மீரா திடுக்கிட்டு எழுந்தாள். அந்த உருவம் அவள் கண்களுக்கு புலப்படவில்லை. ஆனால், அந்த அழைப்பு. பல வருடங்களுக்கு முன் அவள் செவிகளில் கேட்கும் அந்த அழைப்பு. பல வருடங்களாக அவள் மனதை குடையும் அந்த அழைப்பு. “ஆனால், இப்பொழுதெல்லாம் கேட்குறதில்லையே. ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு ஏன்?” அவள் தன் கேபினிலிருந்து வெளியே வந்தாள். அனைத்து அறைகளும் மூடி இருந்தது. வேகமாக அந்த குருஸ் முழுக்க நடந்தாள். எங்கும் யாருமில்லை.

“எல்லா இடமும் இருள். என் வாழ்வை போல்” அவள் இதழ்கள் முணுமுணுக்க, அவள் கால்கள் தோய்ந்து க்ரூஸில் அவள் அறையை ஒட்டிய பால்கனியில் கிடந்த நாற்காலியில் கண்ணீர் மல்க கடலை வெறித்தபடி அமர்ந்தாள்.

தித்திப்புகள் தொடரும்…

error: Content is protected !!