Thithikkum theechudare – 9

TTS

Thithikkum theechudare – 9

தித்திக்கும் தீச்சுடரே – 9

மீரா கண்ணீரோடு கடலை வெறித்தபடி அமர்ந்திருக்க, அதே நேரத்தில் வள்ளியம்மை அவர்கள் வீட்டில் தன் விரல்களை பிசைந்தபடி அமர்ந்திருந்தார். ‘நான் என்ன மீராவை சீராட்டி பாராட்டவா இந்த வீட்டில் வச்சிருக்கேன். அவள் என் பிடியில் இருக்கணும். சுதந்திரமா சுத்தி தெரிஞ்சாலும் லகான் என் கையில் தான் இருந்தது. ஊருக்கு தான் அவள் பத்திரிக்கைக்காரி, எனக்கு அவள் துருப்பு சீட்டு. ஆனால், இந்த முகிலன் கூட அவளுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டுச்சு?’ அவர் யோசனை பலமாகியது.

‘விமர்சனம் போட்ட ஒரு விஷயத்தில் முகிலன் கூட போற அளவுக்கு பழக்கம் வந்திருக்குமா? இல்லை, கடலில் மிதக்குறவனுக்கு கட்டை  போதுமுன்னு நினச்சி பிடிச்சிகிட்டாளா? இல்லை காதல், கீதல் அப்படி எதுவும் இருக்குமோ? ச்சீ அப்படி எல்லாம் இருக்காது. அது பெரிய சிக்கலாகிரும்.’ வள்ளியம்மை பலத்த யோசனையோடு தலையசைத்தார் .

அப்பொழுது அவர்கள் அறைக்குள் நுழைந்த ஜெயசாரதி, “என்ன வள்ளி யோசனை?” என்றார். “எப்படி யோசிக்காம இருக்க சொல்றீங்க? இன்னைக்கு மீரா முகிலனோட போயிருக்கா” அவர் கோபமாக கூற, “வள்ளி, நான் எவ்வளவோ தடுக்க பார்த்தேன். மீராவை நேரடியா அடக்குறது சிக்கலில் முடியும். அதுவும் அவ முகிலனோட கிளம்பும் பொழுது, நாம ஏதாவது அடக்குமுறை செய்து, அதுவே முகிலனுக்கு சாதகமாக முடிஞ்சிற கூடாது. இருந்தாலும், நான் மறைமுகமாக தடுக்க பார்த்தேன். நடக்கலை. இந்த ஒரு தடவை தானே. பார்த்துக்கலாம்” என்றார் நிதானமாக.

வள்ளியம்மை எதுவும் பேசாமல் இருக்க, “முகிலனுக்கு அரசியல் ஆசை உண்டு. அவன் நம்மை காலை வார பார்ப்பான். அவனுக்கு மீரா தூண்டில். நாம சிக்கிற கூடாது. நாம, மீரா விமர்சனம் போடுறப்பவே உஷாராகிருக்கனும். நான் அப்ப பெருசா நினைக்கலை. முகிலன் பெயர் தானே கெட்டு போகுதுன்னு சாதாரணமா விட்டுட்டேன். இவங்க ரெண்டு பேரும் கை கோர்ப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கலை” அவர் முகத்தில் யோசனை ரேகைகளோடு கூறினார்.

“முகிலன் கூட போறதை விட பெரிய பிரச்சனை மீரா போன இடம்” வள்ளியம்மை கடுப்பாக கூற, “பயப்படுறியா வள்ளி?” அவர் கேட்க, “எனக்கென பயம்?” அவர் அசட்டையாக கூறினார். “இது பறந்து விரிந்த உலகம். அப்படியெல்லாம் எதுவும் நடக்காது” அவரும் உறுதியாக கூறினார்.

‘இருந்தாலும் காலம் இவர்களுக்கு எதிராக நிற்குமோ? இல்லை என்றால், மீரா முகிலனின் நட்பு ஏற்பட்டிருக்காதோ?’ என்ற குடைச்சல் இருவர் மனதிலும் இருந்தது.

அதே நேரம், குருஸில்.

               மீரா சில மணி நேரமாக விழித்திருந்தாள் கடலைப் பார்த்தபடி.

மீரா, சுய அலசலில் இறங்கி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள். ‘தூக்கத்தில் தான் நான் எதையாவது உளறுவேன்னு டாக்டர் சொன்னாங்க. இது என்ன இப்படி முழிச்சி உட்கார்ந்து சிந்திக்கிறேன். இது நல்லதில்லை. என் தேடலுக்கு நல்ல விடையோ இல்லை கெட்ட விடையோ, ஒரு விடை எனக்கு தெரிஞ்சாகணும்.’ அவள் தலை விண்விண்ணென்று வலித்தது.

தலையை சிலுப்பிக்கொண்டு, தன் அறைக்குள் சென்றாள். தலை வலிக்கும், தூக்கம் வருவதற்கும் அவள் எடுத்து  கொள்ளும் ஒரு மாத்திரையை விழுங்கினாள். அந்த குருஸில் இருந்த சொகுசு  அறையில், மெத்தென்ற இருந்த மெத்தையில் படுத்தாள்.

‘இந்த குருஸ் படப்பிடிப்புக்கும் தேவை’ என்று அவர்கள் பேசிக்கொண்டது நினைவு வர, “அப்படி குருஸில் என்ன கதையோ?’ அவள் சிந்தை படத்தை பற்றியும் எண்ணிக் கொண்டது.

மாத்திரையின் வேகத்தில் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றாள்.

அதே நேரம், முகிலனின் மேலாளர் தூக்கம் வராமல் அவர் அறையின் இருட்டில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார். முகிலனின் மேலாளர். வயது ஐம்பதுகளிலோ, அறுபதுகளிலோ இருக்கலாம். ஒல்லியான தேகம். நரை முடி. முகத்தில் வயதிற்கு ஏற்றார் போல் முகச்சுருக்கங்கள். கண்ணாடி அணிந்திருந்தார். 

       ‘எனக்கு இந்த வாழ்க்கை கோவிந்தராஜன் ஐயா கொடுத்தது. கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தேன். அவர் கொடுத்த வேலை. முகிலன் சாரையும் சின்ன வயசிலிருந்து பார்க்கிறேன். வயது கம்மியா இருந்தாலும், முகிலன் எனக்கு சார் தான். முகிலன் திரைத்துறையில் கால் எடுத்து வைக்கவும், என்னை அவருக்கு பெர்சனல் மானேஜர் என்று சொன்னது அமிர்தவல்லி அம்மா தான். முகிலனுக்கு நான் நல்ல ஆலோசனை வழங்குவேன் என்றும்… நான் பாதுகாப்பா இருப்பேன்னும்…’ அவர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தன் வேகத்தை கூட்டினார்.

‘ஆனால், நான் அப்படி இருக்கேன்னா?’ அவர் மனசாட்சி கேள்வி எழுப்பியது. “இது வரைக்கும் இருந்தேன். இந்த மீரா பெண் வந்ததிலிருந்து தான் பிரச்சனை” அவர் முணுமுணுத்துக்கொண்டார்.

‘இதுவரைக்கும் முகிலன் சார், வீட்டில் சென்று குறை சொல்லும்படி நடந்து கொண்டதில்லை. அதனால், நான் மீரா விஷயத்தை பெருசா எடுத்துக்கலை. ஆனால், அப்படி நான் விட்டிருக்க கூடாதோ? முகிலன் சாருக்கு இளகின மனசு. மீரா மேல இரக்கப்பட்டு…’ அதற்கு மேல் சிந்திக்க முடியாமல், “ச்சீ… ச்சீ…” தன் சிந்தனை போக்கை நிறுத்திக் கொண்டார். இருந்தாலும் அவருள் குழப்பம் மேலே எழும்பியது.

‘இருந்தாலும், இந்த விஷயத்தை, கோவிந்தராஜன் ஐயா கிட்ட சொல்லிடனும்’ அவர் தன குழப்பத்திற்கு முற்று புள்ளி வைக்க முனைந்தார்.

அந்த முடிவிற்கு பின் தான் தூக்கம் அவர் கண்களைத் தழுவியது.

நேரம் நகர்ந்து நகர்ந்து நள்ளிரவையும் தாண்டியது. முகிலன் தூக்கம் வராமல், தன் தலைக்கு அண்டை கொடுத்து படுத்திருந்தான். ‘மேனேஜர் சொல்றது சரி தான். ஆனால், இந்த மீரா, என்னை ஏதோ செய்யுறாளே’ அவன் தன் நெஞ்சை நீவிக்கொண்டான்.

‘ஜெயசாரதியின் பெண். இது போதும் அவளை தூர நிறுத்த… ஆனால், ஜெயசாரதியால் பாதிக்கப்பட்ட பெண், என்ற இடைச்சொருவல் என்னுள் வருகிறதே. அது தான் நான் அவள் பக்கம் செல்லும் காரணம்.’ அவன் சிந்தையின் போக்கை அவன் உள்ளம் நம்பியது.

அப்பொழுது, அவன் செவியை தீண்டியது, ஓர் அழுகுரல்.

அவன் திடுக்கிட்டு எழுந்தான். “அம்மா…” அந்த அழுகுரல் அவன் இதயத்தை பிளந்தது. சோகமே வடிவாக, “அம்மா… அம்மா…” என்ற அழுகுரல். இல்லை இப்பொழுது கதறல். அவன் தன் அறையை விட்டு வெளியே வந்தான். “அம்மா…” என்ற கதறல். ஏக்கத்தின் வெளிப்பாடு மீண்டும் கேட்க, அவன் பரபரப்பாக இயங்கினான்.  எதுவும் பிரச்சனையோ, அவனுக்குள் கிலி பரவியது.

அப்பொழுது அவன் மேலாளரும் வர, இருவரும் சத்தம் வந்த திசையை நோக்கி சென்றனர். “மீரா ரூம்” என்று அவன் மேலாளர் கூற, அவன் அவள் அறையின் கதவை திறக்க முயன்றான். மீரா, கதவை உள்பக்கம் தாழிட்டிருந்தாள்.

அதற்குள் மேலாளர், அவள் அறையின் மற்றொரு சாவியை வாங்கி கொண்டு வந்தார். அவர் குரூஸின் பொறுப்பில் இருந்ததால், விஷயத்தை சொல்லி விரைந்து செயல்பட்டார்.

முகிலன் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல, அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

“அம்மா…” என்ற அழுகுரல் மட்டும். எந்த ஆபத்துமில்லை, என்றதும் அவர்களுள் கொஞ்சம் நிம்மதி பரவியது.

“மீராவோட அம்மா?” முகிலன் கேள்வியாக அவன் மேலாளரை பார்க்க, “அவங்க எங்கையோ ஓடி…” அந்த வார்த்தைகளை சொல்ல முடியாமல், “எங்கையோ போய்ட்டாங்கன்னு சொல்லுவாங்க சார்… இறந்துட்டாங்கன்னும் சொல்லுவாங்க சார்…” அவர் கூற, முகிலனின் நெற்றி சுருங்கியது.

‘அவ, அம்மாவை தேடி தான் வந்திருப்பாளோ? நான் வேற காதலன்னு நக்கல் பேசினனே’ அவன் உள்ளம் அவளுக்காக வருந்தியது. அவன் அவள் அறையை பார்வையிட்டான்.

“சார்…” மேலாளர் தடுமாற, “நீங்க கிளம்புங்க நான் வரேன்” முகிலன் அழுத்தமாக கூற, “சார்…” அவர் கண்கள் அச்சத்தில் விரிய, “உங்களுக்கு நாளைக்கு நிறைய வேலை இருக்கும். நான் ரெஸ்ட் எடுத்துப்பேன். கொஞ்ச நேரத்தில், நான் என் ரூமுக்கு போய்டுவேன்” முகிலன் கட்டளையாக கூற, வேறு வழியில்லாமல் மேலாளர் வெளியே சென்றார்.

‘ஆனால், இந்த பெண்ணைப் பற்றி நிச்சயமாக முகிலனின் வீட்டில் சொல்ல வேண்டும்’  என்று முடிவெடுத்துக் கொண்டார். மேலாளரின் பார்வையில், அவர் செய்யப்போவதை முகிலன் கணித்துக்கொண்டான்.

‘நான் என்ன தப்பா  பண்றேன். சொல்லட்டும்’ அவன் முகத்தில் மென்னகை.

முகிலன் மீராவின் அறையில் அவள் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். கத்தி, கயிறு போன்ற பொருட்களை பார்த்து அவன் புருவம் ஏறி இறங்கியது. அப்பொழுது மீரா, திரும்பி படுத்தாள். அவள் முகமெங்கும் கண்ணீர் துளிகள்.

அவன் அழுத்தமான காலடிகளோடு அவள் அருகே சென்றான். அவள் விழி நீரை துடைக்க, அவன் கைகள் அவள் முகம் அருகே சென்றது. கண்ணீரின் தீண்டல் அவன் விரல்களை நனைத்தது. ஆனால், அவன் விரல்கள் அவள் முகத்தை தீண்டவில்லை. சட்டென்று தன் கைகளை பின்னே எடுத்துக் கொண்டான்.

‘இவளுக்கு இதெல்லாம் செய்ய நான் யார்?’ அவனுள் கேள்வி எழும்ப, சட்டென்று ஓர் அடி பின்னே நகர்ந்தான். அவன் அருகாமையில் அவள் முகம் மலர்ந்தது. “அம்மா…” அவள் இதழ்கள் இப்பொழுது மென்மையாக அழைத்தது.

அவள் தாயின் நினைவில் அவள் முகம் மலர்ந்ததா? இல்லை அவன் அருகாமையில் மலர்ந்ததா? அவனறியவில்லை. ஆனால், அவன் பாதுகாப்பில், அவள் முகம் மலர்ந்தது என்று அவன் மனம் நம்ப ஆரம்பித்தது.

படபடவென்று அவன் பார்த்த மீராவை இப்படி குழந்தை போல் பார்க்க, அவனுக்கு ஏதோ செய்தது. அவள் தலை கோத, அவன் மனம் விரும்பியது. ‘ஜெயசாரதியின் பெண்…’ என்ற எச்சரிக்கை மணி அவன் சிந்தையில் அடித்தாலும்,  காரணம் தெரியாமல் அவன் தலை மறுப்பாக அசைந்தது.

 

 அவள் அறையில் நெடுநேரம் நிற்பது சரியில்லை என்று அறிந்தவன் போல் அவன் பாதம் விலக, தூக்கத்தில் அவள் கைகள் நீண்டது. நீட்டிய அவள் கரங்களுக்குள் அவன் விரல்கள் பொதிந்து கொண்டன.

அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். அருகே இருந்த மாத்திரை அவள் தூக்கத்தின் அளவை கூறியது. அவள் மெத்தை அருகே அவன் மண்டியிட்டான். மற்றோரு கையால், அந்த மாத்திரையை மீண்டும் ஆராய்ந்தான். மாத்திரை சாப்பிட்டு தூங்குற அளவுக்கு இவளுக்கு பிரச்சனையா?

அவள் கீனமான குரலில் முனங்க  ஆரம்பித்தாள்.

“அம்ம்மா…. அம்ம்மா…

என் நனவுகள் உன் நினைவுகள் அம்மா

என் காட்சியெல்லாம் உன் உருவம் அம்மா

எங்கும் உன் குரல் கேட்குதம்மா

என் திசையனைத்தும் நீ தானே அம்மா

என் நெஞ்சம் எல்லாம்  நீ அம்மா

அம்மா நீ எங்கே? எங்கே?

அம்மா நீ எங்கே? எங்கே?”

 

அவளிடம் ஒரு விம்மல். அவள் இதயம் ஏறி இறங்கியது.

 

“என் தேகம் உன் ஸ்பரிசம் தேடுதே

என் முகம் உன் மடி தேடுதே

நான் உன் அரவணைப்பை தேடுகிறென்னே அம்மா

அம்மா நீ எங்கே எங்கே?”

 

தூக்கத்தில் துக்கத்தில் அவள் புலம்பல்.

அவள் விழிகளில் நீர் இல்லை. அது வற்றி விட்டதோ என்னவோ, அவன் கண்களில் விழி நீர் திரண்டது.

“அம்மா, அரவணைக்க நீயில்லை என்றால்

இல்லை என்றால்…”

 

அவளிடம் விம்மல். கண்ணீர் இல்லா விம்மல்.

“அனைத்தும் நினைவுகளாக்குகிறேன்.

 அம்மா, என் மனம்

என் மனம் நீ நினைவல்ல

நனவு தான் நனவு தான் என்று சொல்லுதே அம்மா…

உன் குரல் எங்கும் கேட்குதம்மா”

 

அவள் உடல் தூக்கத்தில் குலுங்க, அவள் மூச்சு ஏறி இறங்க அவன் கைகள் அவள் கைகளை அழுந்த பற்றியது. அவளுக்கு ஆறுதல் கூறுவது போல். அவன் கைகள் அவள் நெற்றியை தடவியது அவளுக்கு பாதுகாப்பாக.

அவள் ஸ்பரிசத்தை அவன் தீண்டினான். தாயை தேடும் குழந்தை  போல் அவளிருக்க, அவளுக்கு தாயுமானவன் ஆக அவன் காதலனா இருக்க வேண்டுமா? கணவனாக இருக்க வேண்டுமா? நண்பனாக இருக்க வேண்டுமா? இல்லை உறவு எதுவும் வேண்டுமா? சகமனிதனாக இருந்தால் போதாதா? அவன் பதிலறிய விரும்பவில்லை. அவள் தேடலுக்கு விடை தேட அவன் முடிவெடுத்துவிட்டான், தாயுமானவனாக!

தாயுமானவனாக! அவள் முன் கரிசனத்தோடு நின்றான். அவளின் தாயுமானவனாக!

கேள்விகளும் தெரியாமல் பதிலும் அறியாமல் அவள் இருந்தாள் ஆழ்ந்த நித்திரையில். பிடிவாதக்கார முரட்டு குழந்தையாக!

தித்திப்புகள் தொடரும்…

error: Content is protected !!