ThiththikkumTheechudare – 3

தித்திக்கும் தீச்சுடரே – 3

முகிலன் அந்த பெண்ணை சந்திக்க வேண்டும் என்று சொல்லிவிட்டானேயொழிய அவன் மனம் சற்று அலைப்புற்றது. ‘இது வரைக்கும் எத்தனையோ பிரச்சனைகளை பார்த்தாச்சு. ஆனால், பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் சிக்கியது கிடையாது. அப்படி எதிலும் என் பெயர் அடிபட்டுவிட கூடாது. இந்த பொண்ணு கிட்ட பதமா பேசி, என்ன விஷயமுன்னு மட்டும் கேட்டுட்டு அனுப்பிடனும்’ அவன் தன் மார்பை நீவிக்கொண்டான்.

‘ஜெயசாரதி தான் காரணமா இருக்குமோ? தன்னால் பண்ண முடியாததை அவன் பொண்ணை வைத்து பன்றானோ?’ அவனுள் சந்தேகம் கிளம்பியது. தன் கண்களை சுருக்கி தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.

அவனுக்கு பழைய  சம்பவம் ஒன்று நினைவில் வந்தது.

முகிலனின் ஆர்வம் படத்திலும் நடிப்பிலும் மட்டுமே. அவனுக்கு அரசியலில் எல்லாம் ஆர்வம் இல்லை.   அவன் திரை உலகத்திற்கு வந்து சில வருடங்களில், அவன் வளர்ச்சி உச்சத்தை தொட்டு கொண்டிருந்த பொழுது அரசியல் சார்ந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அவன் அதை தன் நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பாக மட்டுமே பார்த்தான். அவன் அப்பொழுது நடித்த படத்தில், ஆளுங்கட்சியாக இருந்த ஜெயசாரதியின் கட்சியை தாக்குவது போல் படத்தில் சில காட்சிகள் நகைச்சுவை கலந்து அமைந்திருந்தது. பட வெளியீட்டு விழாவில் பொதுவாக  பேசியிருந்தான் முகிலன். படத்தின் கருப்பொருள் காரணமாக அவன் பேச்சும் சர்ச்சையாக்கப் பட்டது.

அதன் பின் முகிலனின் இரண்டு படங்கள் வெளிவரவே மிக சிரமப்பட்டன. அதை வெளியிட, எதிர் கட்சியே துணை நின்றது. அன்று தான் அவனுக்கு அரசியலில் முதன் முதலில் ஆர்வம் ஏற்பட்டது. அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால், அரசியல் கட்சிகளோடு தொடர்பு வைத்து கொள்ள வேண்டும் என்ற பெரும் அவா ஏற்பட்டது. அதை செய்து கொள்ளவும் ஆரம்பித்தான்.

அப்பொழுது தான் ஜெயசாரதியிடமிருந்து அவனுக்கு அழைப்பும் வந்தது.  ஜெயசாரதி, அரசியல் கட்சியில் முக்கிய பதவியில் இருப்பவர். அந்த வேளையில் என்ன ஏது என்று அவனுக்கு தெரியவில்லை. ஜெயசாரதியின் அழைப்பை ஏற்று அவர் அலுவலகத்திற்கு சென்றிந்தான் முகிலன். கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது. நாள் முழுக்க அவனை காக்க வைத்திருந்தார் ஜெயசாரதி. முதலில் பதட்டம், பின் நேரம் செல்ல செல்ல அவனை கொஞ்சம் பயம் தொற்றி கொண்டது. தன் நெற்றியில் இருந்த வியர்வை துளிகளை துடைத்து கொண்டு காத்திருக்க காத்திருக்க அவன் பதட்டமும் பயமும் மறைந்து சலிப்பு ஏற்பட்டது.

சலிப்பு பொறுமையின்மையை எட்ட அவனுக்கு கோபம் வந்திருந்தது. ‘அப்படி என்ன பெரிய அரசியல்வாதி? எனக்கும் நேரம் பொன்னானது தானே?’ என்ற கேள்வி எழுந்தது. கடுப்போடும் கோபத்தோடும் காத்திருந்த முகிலனை  பல மணிநேர காத்திருப்புக்கு பின் உள்ளே அழைத்தது பேச ஆரம்பித்தார் ஜெயசாரதி.

அன்று அவர் முகிலனை பேசவிடவில்லை. சற்று மிரட்டலாகவே தான் ஆரம்பித்தார். “என்ன சினிமாவில் ஹீரோன்னா பெரிய ஆளுன்னு நினைப்பா. படம் நடிக்கணுமுன்னு அப்படியே மூடிக்கிட்டு போய்கிட்டே இருக்கனும். படம் படமாத்தா இருக்கனும். நடிகன் நடிகனா மட்டும் தான் இருக்கனும். அதை தாண்டி ஏதவாவது பேசின, உன் எதிர்காலம் இருள் மயமாகிரும்”  ஜெயசாரதியின் மிரட்டல் இன்றும் அவன் காதில் எதிரொலிக்க, முகிலனின் கைமுஷ்டி இறுகியது.

அன்று சூழ்நிலை கருதி அமைதியாக வெளியே வந்தான் முகிலன். அன்று  அவனுக்கு அரசியல் மீது தீவிர எண்ணம் வந்தது.  முகிலனின் தந்தை கோவிந்தராஜன் அந்த வட்டாரத்தில் பலருக்கும் தெரிந்த தொழிலதிபர். சில அரசியில் புள்ளிகளோடு தொடர்பு உள்ள நபரும் கூட. ஆனால், அவர் எந்த ஆர்பாட்டத்தையும் விரும்பாத நபர்.

முகிலனும் அப்படி இருக்கத்தான் விரும்பினான். ஆனால், ஜெயசாரதியின் சீண்டல் முகிலனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. ‘எதை செய்ய கூடாது’ என்று ஜெயசாரதி சொன்னாரோ, அதை முகிலன் செய்ய ஆரம்பித்தான்.

அவன் திரைப்படங்களில் அரசியல் வசனங்கள் அனல் பறந்தது. நாட்டு நடப்பு நயாண்டி செய்யப்பட்டது. முகிலனுக்கு ரசிகர்கள் கூட்டம் ஆஹா ஓஹோ என்று வளர்ந்தது. எதிர்க்கட்சியின் ஆதரவு வலுத்தது. 

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல் ஆகிவிட்டது என்று  ஜெயசாரதி சிந்திக்க ஆரம்பித்து வெளி உலகத்திற்கு அவர் அமைதியானார். ஆனால், பல வழிகளில் அவர் முகிலனுக்கு  கொடுத்த குடைச்சல் அவருக்கு தோல்வியை மட்டுமே கொண்டு வந்தது. முகிலன் எங்கு அரசியலில் தனக்கு போட்டியாக வந்துவிடுவானோ என்ற ஐயம் அவருக்கு வர ஆரம்பித்தது.

அதன் பின் அவர்கள் இருவரும் ஒரு பொது மேடையில் சந்திப்பது போல் நேரந்தது. ஜெயசாரதி அவன் அருகே அமர்ந்திருக்க, தன் கால் மீது கால் போட்டு அமர்ந்தான் முகிலன். தன் ஆள் காட்டி விரலால் தன் தாடையை தடவி யோசனையோடு அவரைப் பார்த்து புருவத்தை உயர்த்தினான்.

அவர் புரியாமல் பார்க்க, “என் வளர்ச்சியை ஒன்னும் செய்யவே முடியலைல?” என்று நக்கலாக கேட்டான். ஜெயசாரதி மௌனம் காக்க, அவன் தொண்டையை கணைத்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தான். “இந்த அரசியிலில் எனக்கு விருப்பமில்லை. நான் உங்க வழியில் வரலை. நீங்களும் என் வழியில் வராதீங்க. நான், நான் உண்டு. என் சினிமா உண்டுன்னு போய்கிட்டே இருப்பேன்” அவன் கூற, ஜெயசாரதி இப்பொழுது சிரித்தார்.

முகிலன் இப்பொழுது மௌனம் காக்க, “கட் அவுட்டுக்கு பால் உதுறவெனலாம் ஒட்டு போட மாட்டான் தம்பி. உங்களுக்கு உலகமும் தெரியலை. அரசியலும் தெரியலை. கை தட்டி விசில் அடிக்கிறவனெல்லாம், விவரம் இல்லாத சின்ன பசங்க. அவங்களை நம்பி களத்தில் இறங்கி அசிங்க பட்ட நடிகர்கள் ஏராளம். அசிங்க படமா தப்பிச்சிக்கிறது உங்க சாமர்த்தியசாலித்தனம்.” அவர் நக்கல் தொனியில் பேச,  முகிலனின் புருவம் நெரிந்தது.

“உங்க வளர்ச்சியில் பயந்துட்டேன்னு நினச்சிடீங்களா? உங்களை வளர விட்டு வேடிக்கை பார்க்குறேன். இன்னுமும் என் சொல் சொல்லாவே தான் இருக்கு தம்பி. உங்க வேலையை நீங்க பார்த்துகிட்டு அமைதியா போனால், நானும் அமைதியா இருப்பேன். இல்லை…” அவர் சிரித்து கொண்டே தன் தோளில் இருந்த துண்டை சரி செய்தார்.

அன்று அவர் மிரட்டலுக்கு பயந்த முகிலன் இன்று இல்லை. அவனும் அமர்த்தலாகவே சிரித்தான். “நீங்க உங்க வழியில் போய்கிட்டே இருந்தா, நானும் அமைதியா போய்கிட்டே இருப்பேன். இல்லை…” என்று அவரை பார்த்து நக்கலாக சிரித்து கொண்டு வேறு பக்கம் திரும்பி கொண்டான்.

ஜெயசாரதியால், அவனுக்கு இருக்கும் அரசியல் ஆதரவை கணித்துக் கொள்ள முடிந்தது. எதிர்பாராமல் அவர்களுக்குள் ஒரு மோதல் ஏற்பட்டுவிட்டது. ஆனால், இருவரும் இதுவரை அதை அமைதியாகவே கையாண்டு கொண்டிருந்தனர்.

அதன் பின் இருவரும் சந்தித்து கொள்ளவும் இல்லை. பேசிக்கொள்ளவும் இல்லை. இருவர் வழியிலும் ஒருவருக்கு ஒருவர் குறுக்கிட்டவும் இல்லை. அவர் அரசியில் வழியில் செல்ல, முகிலன் சினிமா வழியில் சென்று கொண்டிருந்தான்.

முகிலன் தன் நினைவுகளிலிருந்து முழுதாக வெளியே வந்தான். சுருங்கிய தன் நெற்றியை நீவிக்கொண்டான். ‘இத்தனை நாள் இல்லாமல், இந்த பெண் இயல்பாக வருகிறாளா? இல்லை அவள் தந்தையின் உந்துதலில் வருகிறாளா?’ அவனால் சரிவர கணிக்க முடியவில்லை.

‘வேற எதுவும் நடந்திருக்குமா? நம்ம பக்கத்திலிருந்து எதுவும் நடந்ததா?’ அவன் சுய அலசலில் இறங்கினான். பதில் எதுவும் அவனுக்கு கிட்டவில்லை. தான் எடுத்த முடிவு சரியென்று முடிவுக்கு வந்தான்.

‘நான் அந்த பெண்ணை பார்க்க வேண்டும். அவளிடம் பேச வேண்டும். ஏதாவது தப்பா இருக்கட்டும், அதுக்கு அப்புறம் தான் இருக்கு என் ஆட்டம்’ என்று அருகே இருந்த மேஜையை ஒரு தட்டு தட்டினான்.

*** * ***  *  *** ** **

மறுநாள் காலையில்,

இடம்: தேவசேனா பத்திரிகை அலுவலகம்.

மீரா ஜீன்ஸ் அணித்திருந்தாள். தொளதொளவென்று சட்டை அணிந்திருந்தாள். முடியை ஒரு பெரிய கிளிப்பின் கீழ் அடக்கியிருந்தாள். அவன் தோழி அவளிருக்கும் இடத்திற்கு வந்து மீராவை முறைத்து பார்த்தாள்.

“என்ன டிரஸ் இது மீரா? அவ்வளவு அழகா இருக்க. முகமும் சரி, உடற்கட்டும் சரி வடிவா இருக்கு. ஆனால், டிரஸ் என்னவோ தொளதொளன்னு இருக்கு. முகத்திற்கு எந்த அலங்காரமும் கிடையாது. சும்மா ஒரு சின்ன பொட்டு அத்தோட சரி. உன்னை எல்லாம்…” அவள் கூற, மீரா சிரித்தாள்.

“மேக்கப் பண்றதெல்லாம் தப்பு சரி எல்லாம் கிடையது கீதா. ஆனால், எனக்கு பிடிக்கல்லைனு கூட சொல்ல முடியாது. அதெல்லாம் பண்ண தோணலைன்னு வச்சுக்கோயேன்” மீரா சிரிக்க, கீதா தலையில் அடித்துக்கொண்டாள்.

“சரி விடு. நீ வந்த விஷயத்தை சொல்லு” மீரா கூற, “அந்த முகிலன் கூட சும்மா இருப்பார் போல. ஆனால், அவர் ஃபென்ஸ் தொல்லை தாங்கலை. உன்னை பத்தி தான் திரும்புற பக்கம் எல்லாம் மீம்ஸ் போடுறாங்க. இந்த பொண்ணு யாரு? பெரிய பருப்பா? மீராவா சுறாவா? என் தலைவரை சொல்ல இவ என்ன கொக்கா? அப்படினு நெட்டிசன்கள் தொல்லை  தாங்க முடியலை” கீதா கடுப்பாக கூற, மீராவின் நெற்றி சுருங்கியது.

“கீதா, நான் எந்த தப்பும் பண்ணலை. படத்தை விமர்சனம் பண்ணேன். தட்’ஸ் இட்.  இவங்க ஆடுற ஆட்டத்துக்கெல்லாம் நாம பதில் சொல்ல முடியாது. கண்டுக்காம விட்டுட்டா தானா அடங்கிருவாங்க. ரிவியூ பண்ணத்தோட என் வேலை முடிச்சிருச்சு” மீரா கூற, “இதுக்கு பின்னாடி முகிலன் சப்போர்ட் இருக்குமோ?” கீதா சந்தேகமாக கேட்க, மீரா சிரித்தாள்.

“ஏன் மீரா சிரிக்கிற?” என்று கீதா புரியாமல் கேட்க, “நான் ஒரு சாதாரண யூடியூபெர். என் ரிவியூ பார்த்து பதில் சொல்றது தான் ஹீரோவுக்கு வேலையா? ஏன்மா? ஏன்மா? என்னை எல்லாம் ஏன் பெரிய ஆள் ஆக்குறீங்க?” என்று மீரா கலகலவென்று சிரித்தாள்.

“சாதாரண மீராவை யாரும் கவனிக்க மாட்டாங்க. ஆனால், ஜெயசாரதி பொண்ணு சாதாரண விஷயமில்லை” கீதா கூற, “கீதா” அலறினாள் மீரா.

“ஷட் அப்” என்று மீரா உறும, கீதா மௌனித்தாள். “ஜெயசாரதின்னு பெயரை சொல்லிட்டு எவனாவது வந்தான், மவுனே அவனை அங்கையே கொன்னு புதைச்சிடுவேன்.” மீரா கர்ஜிக்க, “உன் கோபமும், கர்ஜனையும் உண்மையை மாத்தாது மீரா” கீதா சற்று பொறுமையாகவே கூறிவிட்டு தன் இடம் நோக்கி சென்றாள்.

மீராவின் கோபம் சுர்ரென்று ஏறியது.

“ப்ளடி பிஸ்கேட்ஸ். நான் ஒரு ரிவியூ போட்டது, இத்தனை குத்தமா?” என்று மீராவின் இதழ்கள் முணுமுணுத்தாலும், தன் அலைபேசியில் வலைத்தளத்தை நோண்டினாள். முகநூல், இன்ஸ்ட்டா என் எங்கும் முகிலனின் பெயரும், இவள் பெயரும் இருக்கவே அவளுக்கு முகிலனின் மீது சந்தேகம் திரும்பியது.  மீரா, சட்டென்று கீதாவின் இடத்திற்கு சென்றாள். அங்கு அவர்கள் தோழன் ராமும் இருந்தான்.

“ஒரே ஒரு ரிவியூ ரொம்ப ஓவரா போகுதோ?” என்று மீரா சந்தேகம் கேட்க, “இதைத் தான் நாங்க முதலிலையே சொன்னோம். வீடியோவை எடுத்திருன்னு. நீ கேட்கலை. இப்ப இதை யார் பண்றங்கன்னு தெரியலை. முகிலன் சப்போர்ட்டோட யாரும் பண்றங்களா? இல்லை கட்சிக்காரங்க யாரும் பண்றங்களா?” என்று ராம் கேள்வியாக நிறுத்த,

‘முகிலனுக்கு பின்னாடி சினிமாவும் இருக்கு. அரசியலும் இருக்கு. மறுத்தாலும் என் பின்னால் அரசியல் இருக்கிறது.’ அவள் சிந்தை பல கணக்கு போட்டது.

“மிஸ்டர் ஜெயசாரதி கூட விளையாடி பார்க்கலாம். அவருக்கு முகிலனை பிடிக்காது” என்று மீராவின் முகத்தில் சிந்தனை பரவ, “மீரா, உங்க அப்பா அப்படி பண்ண மாட்டாங்க. அவருக்கு உன் மேல பாசம் உண்டு.” என்று கீதா தெளிவாக கூற, “ம்… ச்…” மீரா சலிப்பாக உச் கொட்டி வேறு சில விஷயங்களை பேசிவிட்டு, அவர்களோடு சேர்ந்து வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

அப்பொழுது அவளுக்கு அலைபேசியில் சில குறுஞ்செய்திகள் வந்தன. தீர்க்கப்படாத பல கணக்குகள் அவள் மண்டையை குடைய, மேலும் மேலும் வந்த குறுஞ்செய்திகளில் தன் நண்பர்களிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு தன் பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினாள்.

**** ****  *** ***

மீரா பைக்கை எட்டி ஓர் உதய் உதைக்க, அவள் பைக் “உர்… உர்…” என்று சீறியது. அவள் கியரை மாற்றி ஆக்சிலேட்டரை மிதிக்க அது பாய்ந்தது. வேகமாக அவள் பைக்கை செலுத்த, அவளை மூன்று, இரு சக்கர வாகனங்கள் தொடர, , ‘வாங்க… வாங்க… உங்களைத் தானே எதிர்பார்த்தேன்’ என்று எண்ணியபடி அவள் சிரித்துக் கொண்டாள்.

மீராவின் வண்டியை வெளியே செல்ல விடாமல் அவர்கள் அடைப்பு கொடுக்க எத்தனிக்க, வேகம் எடுத்து அவர்களுக்கு ஆட்டம் காட்டினாள் மீரா. அவர்களும் வேகம் எடுக்க, ‘சாலையில் எந்த ஆபத்தும் வந்துவிட கூடாது’ என்ற பொது நலன் கருதி, மெல்லிய புன்னகையோடு அவளே அந்த மூன்று சக்கர வாகனத்திற்கு இடையில் தன் வாகனத்தை பொருத்தி கொள்ள, அவள் முன்னே ஒரு கார் வந்து அரணாக அமைந்து கொள்ள, எந்த வித கேள்வியுமின்றி அவள் மெதுவாக அந்த காரை பின் தொடர்ந்தாள்.

அந்த கார் மெல்ல மெல்ல ஊருக்கு வெளியே சென்று மிகப்பெரிய கெஸ்ட் ஹவுஸிற்குள் நுழைந்தது. ‘தெரிந்து வருகிறாளா? இல்லை இயல்பாக வருகிறாளா?’ என்ற சந்தேகம் அவளை துரத்தி கொண்டு வந்தவர்களுக்கு வந்தது.

தனக்கு பிடித்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, மடமடவென்று உள்ளே நடந்தாள் மீரா. அவளை சிலர் பின் தொடர, சற்று நேரத்தில் அவள் பின்னே யாருமில்லை. கதவு திறக்க உள்ளே நுழைந்தாள் மீரா.

அந்த மிகப் பெரிய அறையில் சோபாவில் அமர்ந்திருந்தான் முகிலன். கதவு தானாக மூடிக்கொண்டது.

“என்ன என் ஆளுங்க உன்னை பத்திரமா என் இடத்திற்கு கூட்டிகிட்டு வந்துட்டாங்களா?” என்று நக்கலாக கேட்டான் முகிலன்.

மறுப்பாக தலையசைத்து, “உங்க ஆளுங்களுக்கு சிரமம் கொடுக்காம நான் அவங்களை கஷ்டப்படுத்தாம பத்திரமா உங்க கிட்ட கூட்டிகிட்டு வந்துட்டேன்” அவன் முன் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக அமர்ந்தாள் மீரா.

“அட, ஊருக்கு வெளிய இப்படி கூட்டிகிட்டு வந்தும் கொஞ்சம் கூட பயம் இல்லாம பேசுற ஒரு பெண்ணை பார்த்தா என்னக்கு ஆச்சரியமா தான் இருக்கு” என்று முகிலன் புன்னகையோடு அவளை மேலும் கீழும் பார்க்க,

“என்ன பொண்ணுங்கன்னா கரப்பாம்பூச்சிக்கு பயப்படுற ஆளுங்கன்னு நினைசீங்களா?” அவள் புருவம் உயர்த்த அவன் சிரித்து கொண்டான்.

அவன் சிரிப்பை மனதில் கணக்கிட்டு கொண்டு, மேலும் தொடர்ந்தாள் மீரா. “ஒரு சாதரண பெண்ணின் ரிவ்யூக்கு பயந்து அந்த பெண்ணையே கடத்திட்டு வர அளவுக்கு பயம் கொண்ட ஹீரோவை பார்க்க எனக்கும் ஆச்சரியமா தான் இருக்கு” அவளும் அவனைப் போலவே அவனை மேலும் கீழும் பார்த்து கொண்டே கூறினாள்.

ஆனால், அவன் அடுத்து கூறிய வார்த்தையில், அவன் தலையைப் பதம் பார்த்திருந்தாள் மீரா.

தித்திப்புகள் தொடரும்…