UMUV22

UMUV22
22
“வர்ஷா…”
“ம்ம்…”
“இப்படியே எவ்ளோ நேரம் நிக்கலாம்?” சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தன் மார்பில் சாய்ந்திருந்தவள் உச்சந்தத்தலையை மென்மையாக வருடினான்.
“விலக மனசே வரலியே…ஏன் கால் வலிக்குதா?” பிடியைத் தளர்த்தாமலே வர்ஷா கேட்க,
“பசிக்குது” என்றான் ரிஷி.
வேகமாக விலகியவள், “இதுக்கு தான் சொன்னேன் அங்க கொஞ்சமாவது சாப்பிட்ருக்கலாம்ல?” அவனை அண்ணாந்து முறைத்தாள்.
“அப்போ பசிக்கலையே! இப்போ மனசு கூல் ஆச்சு சோ பசி தெரியுது”
“மனசுக்கும் பசிக்கும் என்ன சம்பந்தம்? நான்லாம் சோகமாவோ ஸ்ட்ரெஸ்டாவோ இருக்கும் போது தான் இன்னும் நிறைய சாப்பிடுவேன்!”
“பெருமை!” அவளைப் பழித்தவன், “வா” என்று அவள் முன்னே நடக்க, வாசனை பிடித்தபடி அவனைப் பின்தொடர்ந்தாள்.
உணவைப் பரிமாறிக் கொண்டு அமர்ந்தவர்கள், மெல்லச் சாப்பிட்டபடியே பேசத் துவங்கினர்.
“நந்தா இதெல்லாம் கனவு இல்லல?” தட்டிலிருந்த உணவை ஆசையாகப் பார்த்தபடி அவள் கேட்க,
“இல்லமா, நான் நிஜமாவே உன் கூடதான் இருக்கேன்” அவன் கண்களில் காதலுடன் சொல்ல, கண்களைத் தட்டிலிருந்து விலக்காதவளோ,
“இந்த சாம்பார் சாதமும் உருளைக் கிழங்கு ரோஸ்ட்டும், தாங்கவே முடியலை நந்தா. இது கனவில்லல?” என்றபடி ஒரு ஸ்பூன் சாதத்தை உண்டவள், கண்களை மூடி மெய்மறக்க,
‘டேய் ரிஷி, உனக்கு கடைசியில் போட்டி லூகாஸ் இல்ல சோறுதான் போல’ சிரித்துக்கொண்டவன், அவளுக்கு வேண்டியதைப் பரிமாறினான்.
ஒரு வழியாக உணவைக் கொஞ்சி முடித்தவள் கவனம் இப்பொழுது டென்ட்டின் வாசலில், கையை நெருப்பில் காட்டி தேய்த்துக்கொண்டு அவ்வப்போது மொபைலை பார்த்தபடி அமர்ந்திருந்த நந்தாவின் மேல் திரும்பியது.
நெருப்பின் வெளிச்சம் அவன் முகத்தில் பட்டுத் தெறிக்க, மின்னும் அவன் முகத்தை ரசித்தபடி, அவனருகே சென்றவள், “நந்தா…” என்று ஆசையா அழைத்தாள்.
“ம்ம்” என்றவன் கவனமோ எங்கோ இருக்க,
அவன் சட்டை நுனியைப் பிடித்து இழுத்தவள், “கேக்கறீங்களா இல்லையா?”
“கேக்கறேன் மா” என்றபடி அவள் பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டவன் முகமெங்கும் ஏதோ குழப்பம்.
“ஆர் யு ஆல்ரைட் நந்தா?”
“உன்கிட்ட ஒன்னு சொல்லணும்னு ரொம்ப நாளா நினைக்கிறேன்…”தயங்கியவன், சட்டெனக் கோவமான குரலில், “ ஹே நீ வேற டிரஸ் போட்ருக்கேன்னு தான சொன்ன?” மிரட்ட,
‘என்ன டிரஸ்?’ விழித்தவள் மனதில் ரிஷிக்கு மெசேஜ் செய்தது நினைவிற்கு வர, ‘மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டியே பேபி’ மெல்லிய புன்னகையுடன் இன்னும் நெருக்கமாக அமர்ந்துகொண்டாள்.
“கேட்டுட்டே இருக்கேன்! டிரஸ் எப்போ மாத்தின?”
“என்ன டிரஸ் நந்தா?” அவள் அப்பாவியாகக் கேட்க,
“அதான் அந்த…” கோவத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டவன், மொபைலில் முன்னொருநாள் அவள் அனுப்பிய செல்ஃபியை காட்டியவன், “இந்த கர்மத்தை” என்று முறைக்க,
“இதை நான் போட்டுக்க போறதா உங்ககிட்ட சொல்லவே இல்லையே!” அவள் புருவம் சுருக்க,
“பொய்! நீ தான் சொன்ன!” என்றவன், அவள் மெசேஜை காட்டினான்.
“அட! நான் ரிஷிக்கு அனுப்புறதா நினைச்சு உங்களுக்கு அனுப்பியிருக்கேன் பாருங்களேன்” அவள் தலையில் அடித்துக்கொண்டு மீண்டும் நெருப்பைப் பார்க்க,
“வர்ஷா…நீ…”
“நான்?” அவன் புறம் பார்வையைத் திரும்பியவள், புன்னகையுடன் கேட்க,
“அந்த டிரஸ்…”
“டிரஸ்?” புன்னகை மாறாத அவள் பார்வையில் மௌனமாகிவிட்டான் அவன்.
விறகைப் பற்றிக்கொண்டு முன்னேறிக்கொண்டிருந்த நெருப்பின் சத்தமும், குளிர்காற்றின் ரீங்காரமும், இரவு நேர உயிரினங்களின் சப்தங்களும் அத்துவான காட்டின் அமைதியில்லாத அமைதியை நிரப்பிக் கொண்டிருக்க,
வெளியே மௌனமும் உள்ளே எண்ணிலடங்கா கேள்விகளும், குழப்பங்களும் எழுப்பும் கூச்சலில் எங்கிருந்து தொடங்குவதென்ற தவிப்புடன் இருவரும் அமர்ந்திருந்தனர்.
குளிர்காற்றுடன் சில்லென்ற தூறல்கள் மேலே விழ, டக்கென எழுந்த ரிஷி, “வா டெண்ட்க்குள்ள போகலாம்” அவளை நோக்கிக் கையை நீட்ட,
“தேங்க்ஸ்” என்றவள் அவன் கையைப் பற்றாமலே எழுந்து நின்றாள்.
“ஏன் கைய பிடிக்க கூடாதோ?” ரிஷி மிரட்டலும் நக்கலுமாகக் கேட்க,
“ஓவரா யோசிக்காதீங்க” என்றவள், தன் உள்ளங்கைகளைக் காட்ட, அவை அழுக்கும் சேறுமாக இருந்தன.
“நான் பாட்டுக்கு எதோ யோசனையில மண்ணை நோண்டிகிட்டு இருந்துருக்கேன். அதுக்கு யோசிச்சா…” என்றவள் கைக்கழுவிக்கொண்டு, அவனுடன் டென்டிர்குள் அமர்ந்து கொண்டாள்.
சற்றே பலத்த தூறலில் எழுந்த மண் வாசம் நாசி முழுவதும் நிரம்பியது.
ஆழ்ந்து சுவாசித்தவள், “செம்ம ரொமான்டிக் இடம், கிளைமேட்டும், எப்படி இப்படிலாம் அசத்துறீங்க?” அவனை ஆர்வமாகப் பார்க்க, அவனோ கன்னத்திற்குக் கோர்த்த கைகளை முட்டுக்கொடுத்து சிந்தனையில் மூழ்கியிருந்தான்.
“இதுக்கு பருத்திமூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாம்” அவள் அலுத்துக்கொண்டதில், அவள் புறம் திரும்பியவன், ‘என்ன’ என்பதைப் போல் பார்க்க,
“என்ன யோசிக்கிறீங்க?”
“ம்ம்?” என்றவன் பார்வை அவள் மேலிருந்தாலும் கவனமில்லை.
“அப்படி என்னத்த யோசிக்கிறீங்க நந்தா?”
“ம்ம்?”
“எனக்கு போர் அடிக்குது” என்றாள் குறையாய்.
“ம்ம்?”
“நந்தா! எனக்கு உன் மேல இப்போ லவ் இல்ல!” என்றாள் கோவமாக,
அதற்கும் அவன் “ம்ம்?” என்றதில் பொறுமை இழந்தவள்,
“அடேய்! லூசாடா நீ? என்ன ம்ம் ம்ம்?” என்று முறைத்தபடி கத்த, அப்பொழுதுதான் விழித்தவன் போல அவளைக் கண்களைச் சுருக்கி பார்த்தவன்,
“என்ன மா? என்னாச்சு?” என்று கேட்க, வாய்வழியே அலுப்பாய் மூச்சைவிட்டவள்,
“என்னடா யோசனை? இப்புடி எங்கயோ பாத்துகிட்டு, என்னமோ யோசிச்சுகிட்டு, உம்முனு இருக்குறதுக்கு…ரெண்டு மணிநேரம் ட்ராவல் பண்ணி இந்த காட்டுக்கு வரணுமா? இதுக்கு வீட்லயே இருந்துருக்கலாம்” அவள் படபடத்துவிட்டு வெளியே கிட்டத்தட்ட அணைந்துவிட்ட நெருப்பின் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.
ஒருமுறை ஆழமாகச் சுவாசித்தவன், “வர்ஷா…நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும். பலநாள் சொல்ல நினச்சேன், ஆனா ஏதாவது காரணம் வந்து சொல்ல முடியாம பண்ணிடுச்சு…ப்ளீஸ் நான் பேசிடறேன், நீ அப்புறமா கேளு…” பேசவந்தவளைக் கைகாட்டி தடுத்தவன், தொடர்ந்தான்,
“நான் உன்கிட்ட ஒரு பெரிய உண்மையை சொல்லாம மறைச்சுட்டேன்…நான் ஏற்கனவே ஒரு பொண்ண காதலிச்சேன்!
இதே கனடால நான் படிச்சப்போ எனக்கு ஜூனியர்…நாலு வருஷத்துக்கிட்ட ரிலேஷன்ஷிப்ல இருந்தோம்” வெறுமையாக வெளியே இருளை வெறித்தவன்,
“பிரிஞ்சுட்டோம்! எனக்கு விஷ்ணுவை தான் எங்கப்பா அம்மாவை விட முக்கியம், அவ்ளோ பிடிக்கும், என் உயிர் எல்லாமே அவன் தான்னு உனக்கும் தெரியும்ல?” அவன் பார்க்க, தலையசைத்து ஆமென்றவள் பார்வையால் தொடரச் சொல்ல, தொடர்ந்தான்
“அவளுக்கு, விஷ்ணுவுக்கும் முன்னாடி அவதான் இருக்கணும்னு எண்ணம். அது என் மேல இருக்க அன்புனாலன்னு நினைச்சேன்…
விஷ்ணு வந்து போறது பிடிக்கலைன்னா…விஷ்ணு பத்தி பேசினா கோவப்பட்டா…அவன் கூட பேசினாகூட மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு வாரக்கணக்குல பேசாம இருந்தா…
அவ என்னை இக்னோர் பண்ணது, பேசாம இருந்தது, கோவப்பட்டது எதுவுமே எனக்கு பெரிசா தோணலை. ஏனோ எனக்கு அது கொஞ்சமும் வருத்தத்தை தரலை.
விஷ்ணுவுக்கு டைஃபாய்டு வந்து சீரியஸா இருக்கான்னு தெரிஞ்சு, நான் இந்தியா கிளம்பினப்போ, அவ பிறந்த நாளைக்கு அவகூட இல்லாம ஊருக்கு போறேன்னு சண்டை போட்டா. நான் வேணுமா இல்லை, விஷ்ணு வேணுமான்னு கேட்டா…” என்றவன் மௌனமாகிவிட,
“ம்ம்” என்றவளுக்குத் தெரியும் அவள் நந்தாவின் பதில் என்னவாக இருந்திருக்குமென.
“விஷ்ணுகிட்ட என் பிரேக்கப் காரணத்தையே இங்க வரதுக்கு முன்னாடி தான் சொன்னேன். பாவம் ரொம்ப வருத்தப்பட்டான்” ரிஷி முகம் வாட, அவன் முதுகை மென்மையாக வருடியவள்,
“எல்லாம் நல்லதுக்கே. ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் உன் எக்ஸ்சோட மனசு தெரிஞ்சுருந்தா உங்களுக்கு பெரிய அதிர்ச்சியா ஆகியிருக்கும், விஷ்ணுவுக்கும் குற்றவுணர்ச்சி வந்திருக்கும். தேவையில்லாம எல்லாமே சிக்கலாயிருக்கும். விடுங்க எல்லாம் நன்மைக்கே”
சிலநொடிகள் மௌனமாக இருந்தவன், பேசத் துவங்கினான்.
“இந்த மாதிரி உன்னோட எல்லா பிறந்த நாளுக்கும் என்னால ஸ்பெஷலா எதுவும் செய்ய முடியாம போகலாம்…
வேலை ஸ்ட்ரெஸ்ஸ்னு உன் பிறந்தநாளை நான் மறந்தே கூட போகலாம் …
அதெல்லாம் வச்சு எனக்கு உன்மேல அன்பு குறைஞ்சுபோச்சுண்ணு நினைக்க கூடாது…
மனசுக்குள்ள இருக்க அன்பை நான் உணரவே எனக்கு இவ்ளோ நாளாகி இருக்கு…
உன்னை மாதிரி காதலை உருகி உருகி எனக்கு சொல்ல வராது…ஆனா உன்னை எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு உன்கூட வாழ்ந்து உனக்கு எப்போவும் உணர்த்திக்கிட்டே இருப்பேன்” என்றவன் அவள் கையைப் பற்றிக்கொண்டான்.
“நான் இதெல்லாம் உங்ககிட்ட கேட்டேனா நந்தா? நான் காதலிக்கிறேன்னு சொன்னப்போ கூட பதிலுக்கு உங்க மனசை நான் தெரிஞ்சுக்க நினைக்கல.
இங்க வந்ததும் நிறையவே ஏங்கி போனேன். இப்போ சந்தோஷத்துல நீங்க சொல்ற எதுவுமே எனக்கு தப்பா தெரியாம இருக்கலாம்.
ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கும் இவ்ளோ உருகுற பழக்கம் குறையலாம். என்னடா பின்னாடியே ஜொள்ளு விட்டுக்கிட்டு வந்தாளே, இப்போ பிகு பண்றாளேன்னு நீங்க நினைக்க கூடாது. எப்போவும் நான் உங்க விசிறிதான் அதுல எந்த சேஞ்சும் இருக்காது” அவள் புன்னகைக்க,
“டன்” என்று சிரித்தவன், அவளை உற்றுப்பார்க்க, பார்வையைத் தாழ்த்திக்கொண்டவள் கண்கள் தன் கையைப் பற்றியிருந்தவன் விரல்களில் பதிய, கண்கள் விரிந்தவள், அங்கிருந்த விளக்கின் ஒளியில் அவன் கையை இழுத்துவைத்துப் பார்த்தாள்.
“நந்தா இது…இந்த மோதிரம் என்னோடது மாதிரி இருக்கே”
“உன்னோடது தான்” என்றான் வெட்கப் புன்னகையுடன்.
“என்னோடதா? எப்படி?”
“சுட்டுட்டேன்” என்று தோளைக் குலுக்கியவன், “முழிக்காத…உன்ன ஏர்போர்ட்ல விட உங்க வீட்டுக்கு வந்தேனே…மதுக்கூட வீட்டை சுத்தி காட்டினாளே…அப்போ தான் உன் ரூம்லேந்து சுட்டேன்” பெருமையாகச் சொன்னவன், தன் சுட்டுவிரலிலிருந்த மோதிரத்தைத் தடவிக்கொண்டான்.
“இவ்ளோ பிடிக்குமா என்ன?” அவள் ஆசையாகப் பார்க்க, அவள் கன்னத்தை மெல்லப் பற்றியவன், “இதுக்கெல்லாம் மேலையே பிடிக்கும்” என்று கண்சிமிட்ட,
அவன் மூக்கை பிடித்து ஆட்டி, “அப்போ இவ்ளோ நாள் சொல்லர்துக்கு என்ன?” என்று மூக்கை சுருக்கி மிரட்ட,
“அதான் சொல்றேனே எனக்கே தெரியலன்னும் போது, எங்கிருந்து சொல்ல?” என்றவன், மொபைல் ஒலிக்க, “விஷ்ணு” அழைப்பை ஏற்றான்.
வீடியோ காலில் அழைத்திருந்த விஷ்ணு, வர்ஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவிட்டு,
“அப்புறம் அண்ணி சொல்லுங்க” என்று சிரிப்பை கட்டுப்படுத்த திணற,
உரக்கச் சிரித்துவிட்ட வர்ஷா “ஐயோ ப்ளீஸ் இப்படிலாம் கூப்பிடாதே. வர்ஷானே கூப்பிடு” என்று வாயைப் பொத்திக்கொள்ள,
“ஆமா டா. என்னாலேயே தாங்க முடியல” ரிஷியும் சிரித்துவிட்டான்.
“அப்புறம் என்ன சொல்றான் என் அண்ணன்?”
“என்னென்னமோ சொல்றான். அப்போ அப்போ எங்கேயோ யோசனைல மூழ்கிடுறான். திடீர் திடீர்ன்னு ரொமேன்டிக்கா லுக் வேற! ஒன்னும் சரியா படல…அவசரப்பட்டு ஐ லவ் யூ சொல்லிட்டேனோன்னு இருக்கு பா” வர்ஷா வம்பிழுக்க,
“அதெல்லாம் முடியாது! சொன்னது சொன்னதுதான்!” ரிஷி தர்க்கம் செய்தான்.
“அய்ய ஆச தோச! எனக்கு வேற யாரையான பிடிச்சா, நான் சைட் அடிக்க போயிடுவேன். என்ன விஷ்ணு சரிதானே?” வர்ஷா கேட்க,
“அதானே! ஒரே ஆளை எவ்ளோ நேரம்தான் காதலிக்கிறது. போர்!” என்றான் விஷ்ணு.
“நீ ஃபோனை வைடா. இவ்ளோ நேரம் ஒழுங்கா தான் இருந்தா. உன்கூட சேர்ந்து தான் இவ்ளோ கொழுப்பு வாய்ல ஏறுது. வாங்க போங்கன்னு பேசினவ, இப்ப அடா புடான்னு பேசறா” ரிஷி மிரட்ட,
“நீ ஃபோனை வைக்காத விஷ்ணு!” என்று அதட்டியவள், “இன்னும் அஞ்சு நிமிஷத்துல எங்கேயோ வெறிச்சு வெறிச்சு பார்த்துகிட்டு இருக்க போறான் . நீ பேசு எனக்கு பொழுதாவது போகும்லா”
“என்ன நக்கலா, நான் போரா?” ரிஷி முறைக்க,
“நீ போர் தான்! போடா டுபுக்கு!” வர்ஷாவும் முறைக்க,
இருவருக்கும் வாக்குவாதம் துவங்கியதில் சில முறை சமாதானம் செய்ய முயன்ற விஷ்ணு,
“பேசாம போத்திக்கிட்டு தூங்குங்க!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
ஆளுகொருபுரம் திரும்பிக் கொண்ட வர்ஷாவும் ரிஷியும் தங்கள் மொபைலில் மூழ்கிவிட, வாட்சப்பில் ரிஷிக்கு மெசேஜ் செய்தாள் வர்ஷா.
‘ரிஷி, நந்தா கூட ஃபாரெஸ்டுக்கு வந்திருக்கேன். பர்த்டே சர்ப்ரைஸ்! மை லவ்னு பேனர் வச்சிருக்கான்’ என்றவள் புகைப்படங்களை அதனுடன் அனுப்பி வைத்தாள்.
‘கங்கிராட்ஸ்!’ என்று ரிஷியின் பதில் வர, அதற்குப் பதில் என்று சில நிமிடங்கள் ரிஷியுடன் சேட் செய்தாள்.
‘வர்ஷா நீ நந்தா கூட பேசு. இப்போ என்கிட்டே பேசினா அவன் தப்பா நினைக்க போறான்’
‘அவன் அதெல்லாம் நினைக்க மாட்டான்!’
‘எப்படி சொல்றே?’
‘பக்கி என்ன பாக்காம, மொபைலை பாத்துகிட்டு வெட்டியா இருக்கு. என்னடா பக்கத்துல லவ்வர் இருக்காளே, இவ்ளோ அழகான இடம், சில்லுன்னு காத்து, கொஞ்சம் கூட ரொமென்ஸ் பண்ண தெரியாம மொக்கையா…
நாங்க வந்து ரெண்டு மணி நேரமாச்சு தெரியுமா? இவனை காதலிச்சதுக்கு நான் சும்மாவே இருந்திருக்கலாம்’ என்றவள் சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு ரிஷியின் புறம் திரும்பாமல் இருக்க,
ரிஷியின் மூச்சுக் காற்று அவள் பின்னங்கழுத்தை தீண்டச் சிலிர்த்தவள், மெல்ல ஓரக்கண்ணால் பார்க்க, அவள் முகத்திற்கு வெகு அருகே இருந்த அவன் முகத்தைக் கண்டு உறைந்து விட்டாள்.
அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், “இந்த ரொமான்ஸ் போதுமா இல்ல?” என்று விஷமமாக அவள் இதழைப் பார்க்க, அவனைத் தள்ளிவிட்டு மிரட்க்ஷியுடன் அவனைப் பார்த்தவள்,
“லூ…லூசாடா நீ? எ…என்…என்ன பண்றே” என்று திணற,
“உனக்கு தான் என் திறமை மேல டவுட் போல இருக்கே” என்றவன் நக்கலாக மீண்டும் அவளை நெருங்க, அவன் நெஞ்சில் கைவைத்துத் தடுத்தவள்,
“நான் எப்போ அதெல்லாம் சொன்னேன்?” என்று விழிக்க,
“என்னை காதலிக்கிறதுக்கு சும்மாவே இருக்கலாமோ?” அவளை முறைக்க, சிரிப்பை அடக்க உதட்டை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
“ரிஷிக்கு மெசேஜ் பண்றதா நினைச்சேன்” அவள் உதட்டைக் கடித்துக்கொண்டாள்.
முகம் இறுகியவன், “வர்ஷா நான் இன்னொரு உண்மையை உன்கிட்ட சொல்லணும்…” என்று இழுக்க,
“மறுபடியுமா? எவ்ளோ உண்மையை தான் இன்னிக்கி சொல்ல போற நீ? எவ்ளோ மறைச்சுருக்கே அப்போ?” வர்ஷா சிரித்ததில், புன்னகைத்தவன்,
“இது கொஞ்சம் சீரியஸ்…நீ பேசுற அந்த ரிஷி…”
“ஆமா ரிஷி என் ஃபிரென்ட்” அவள் இயல்பாகச் சொல்ல.
“அதில்லடா…அந்த ரிஷி…” உதட்டைக் கடித்துக் கொண்டேன், பதட்டத்துடன் அவளைப் பார்க்க, அவளோ கண்களால் தொடரச் சொன்னாள்.
“எப்படி சொல்லணும்னு தெரியல வர்ஷா. அந்த ரிஷியும் நான் தான்!” என்றவன், மூச்சை பிடித்துக்கொண்டு வர்ஷாவையே பார்க்க,
அவளோ சலனமே இல்லாமல் அவனையே அமைதியாகப் பார்த்ததில் ரிஷிக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது.
“ஏற்கனவே ரெண்டு மூணு தடவ சொல்ல நினைச்சேன். நான் தான் வர்ஷா உன் கூட தினமும் பேசுற ரிஷி. என் முழுப்பேர் ரிஷிநந்தன்….
வர்ஷா அவனையே பார்க்க..
ஏதாவது பேசு, சொல்லு, கோவப்படு இல்ல அடிச்சுரு….
ஏன்டி இப்படியே பாத்துகிட்டே இருக்க?…வர்ஷா!” அவள் தோளை பிடித்து உலுக்கியவனின் உடல் பதற்றத்தில் சில்லிட்டிருந்தது.
மெல்லப் புன்னகையுடன் அவன் கன்னத்தைத் தடவியவள், செல்லமாக அதைத் தட்டி, “எவ்ளோ வாட்டி தான் இதையே சொல்லுவ? அதான் சென்னலையே எப்போவோ சொல்லிட்டயே” என்று அவன் கன்னத்தைக் கிள்ள, அதிர்ந்தான் ரிஷி!
“என்ன? சொல்லிட்டேனா ? உனக்கு புரியலன்னு நினைக்றேன்…நான் ரிஷியா உன்கிட்ட ஃபோன்ல பேசிப் பழகி, நிஜத்துல நந்தவா உன்கூட இருக்கேன். புரியுதா நான் உன்னை இவ்ளோ நாளா ஏமாத்தியிருக்கேன். வர்ஷா டூ யு அண்டர்ஸ்டேன்ட் மீ?” அவளை அவன் மீண்டும் உலுக்க,
“அடேய்! இவ்ளோ வாட்டி என்னை குலுக்கினா சாப்பிட்டதெல்லாம்… வேணாம் விடு!” கத்திவிட்டவள், “அதான் தெரியும்னு சொல்றேன்ல? நீ தானே சொன்ன?” என்றாள் புருவம் சுருக்கி.
“எப்போ ஹாஸ்ப்பிட்டல்லயா?” புருவம் முடிச்சிட யோசனையில் ஒரு கணம் ஆழ்ந்தவன், “இருக்காதே, நீ தான் மயக்கமா இருந்தியே…விஷ்ணு சொன்னானா? இல்ல என்னிக்காவது தூக்க கலக்கத்துல பேசும்போது நானே…” அவன் நெற்றியைப் பிடித்துக்கொண்டான்.
“ஸ்ஸ்ஸ் இரு” என்றவள் வேகமாகப் புகைப்படம் ஒன்றை தன் மொபைலில் அவன் ரிஷிநந்தன் என்று கையெழுத்திட்ட புகைப்படத்தைக் காட்டி,
“பாரு ரிஷிநந்தன்னு! எழுதியிருக்கா? எழுதினது நீ தானே? தூக்கத்துல எழுதலலா? தெளிவாத்தானே இருந்த அப்போ?” என்று அவனை உற்றுப்பார்க்க,
“ஓ! ச்சே!” அவன் நெற்றியில் அடித்துக்கொண்டு அசடு வழிந்தான்.
அவன் முகத்தை கைகளில் ஏந்தி கொண்டவள், அவன் உதட்டில் மென்மையாக முத்தமிட்டாள்!
சிலநொடி ஆழந்த மௌனத்தைச் சுகித்தவர்கள், மெல்ல விலகி அமர்ந்தனர்.
“என் மேல கோவமே இல்லையா?” அவன் தயக்கத்துடன் அவளைப் பார்க்க,
“இல்ல” கண்சிமிட்டியவள், “எனக்கு ரிஷியா பெஸ்ட் ஃபிரெண்டா தான் இருந்த, இருக்க இருப்ப! இதுவரை ஒருநாள் கூட தப்பா பேசல, பழகல… நீ நினைச்சிருந்தா என்னை என்ன வேணா செஞ்சுருக்கலாம்…நான் உன்மேல பைத்தியமா இருக்குறது தெரிஞ்சும். அதுக்கும் நீ அட்வான்டேஜ் எடுத்திருந்தா கூட அதை உணர்ற நிலைல நான் இருந்திருக்க மாட்டேன்…”
“ஹே! ச்சே! நோ வே!” ரிஷி வேகமாக மறுக்க, சிரித்தவள்,
“நானும் அதான் சொல்றேன்!…சீரியஸா போகுது…விடு…என்ன சொல்லிட்டு இருந்தேன்?…ம்ம் எஸ்! இங்க தனியா இருக்கும் போதுலாம் நிறைய கோவப்பட்டிருக்கேன்…
பாரு ரிஷியா எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டாலும் நந்தாவா ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறானேன்னு கடுப்பாகும். சிலநாள் வேணும்னே உன்ன வெறுப்பேத்தி பாக்கவும் அதை பயன் படுத்திக்கிட்டேன்” அவள் கண்ணடிக்க, சிரித்தவனோ,
ஆர்வமாக “எப்படி எப்படி?”என்றபடி அவளை அணைத்துக் கொண்டு கேட்க,
அவன் மார்பில் சாய்ந்து கொண்டவள், “லூகாஸ் பேரைச் சொன்னாலே சாருக்கு தான் கோவம் வருமே! எவ்ளோ நாள் தனியா வெளில போகும் போது கூட லூகாஸ் கூடன்னு உங்க கிட்ட சொல்லிட்டு சிரிப்பேன் தெரியுமா?
இதெல்லாத்தையும் விட ஜோக் அந்த டிரஸ் மேட்டர்!
ஏன் சார், இங்க அடிக்கிற பனிமழைல அந்த குட்டிப்பாப்பா டிரஸ, போட்டுக்கிட்டு திரிஞ்சா உறைஞ்சு செத்துட மாட்டேனா? நானே தெர்மல்ஸ், சட்ட பேண்ட் ஸ்வெட்டர் ஜெர்கின்ன்னு பல அடுக்கு பாதுகாப்பு போட்டும் கூட குளிர் எலும்பு வரை பாயுது.
இதுல சாருக்கு தம்மாத்தூண்டு செக்ஸி டிரஸ் போட்டு டேட்டிங் போவேன்னு நெனப்பு வேறயா? அந்த டிரஸ நான் வாங்க கூட இல்ல!” வர்ஷா சிரிக்க, அவள் மண்டையில் கொட்டு வைத்தவன்,
“அடிப்பாவி! அந்த போட்டோவ பார்த்து பயந்து பதறி, ஊருக்கு போயிகிட்டு இருந்தவன்…வேக வேகமா பெரியவங்க கிட்டலாம் உண்மையை சொல்லி, கையில கால்ல விழுந்து சம்மதம் வாங்கி, இங்க ஓடி வந்தேனே! அது எல்லாம் வேஸ்ட்டா?” அவன் முறைக்க,
“அப்படித்தான் போலயிருக்கு” சிரித்தவள், அதிர்ச்சியுடன் விலகி அவன் முகம் பார்த்து,
“என்ன பெரியவங்க கிட்ட சொன்னியா? ஐயோ என்னத்த சொல்லி வச்ச? அவங்க என்ன சொன்னாங்க? யார் வீட்டு பெரியவங்க? உண்மையை சொல்லு” அவள் பதற,
“கூல் டவுன்! ரெண்டு பேர் வீட்லேயுமே சொல்லிட்டேன். உன் தாத்தா காலுலேயே விழுந்து மன்னிப்பும் கேட்டுட்டேன். நான் தான் ரிஷி அண்ட் நாந்தான்னு சொல்லி.. உனக்குத்தான் லாஸ்ட்டா சொல்றேன்”
“அடப்பாவி! என்ன சொன்னாங்க? ஐயோ எங்கம்மா! போச்சு போச்சு!” அவள் கையை உதறிப் படபடக்க,
“கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு வாக்கு கொடுக்க சொன்னாங்க, நிச்சயம் பண்ணிக்கிட்டா தான் உன்னை பார்க்க இங்க தனியா போகலாம்னு எல்லாருமா கண்டிஷன் போட்டாங்க…”
“நிச்சயமா? ஐயோ! எப்படி சமாளிச்சே?”
“சரின்னு சொன்னேன், பெரியவங்க தட்டை மாத்திக்க போறாங்க…நாளைக்கு” என்றவன் சோம்பல் முறிக்க,
அதிர்ந்தவள் “அப்போ நான் உன்னைத்தான் கல்யாணம் செஞ்சுக்கணுமா? அடகொடுமையே!” தலையில் கைவைத்துக்கொண்டாள்.
“எஸ்” என்று பெருமையாகத் தலையாட்டியவன், “வேற வாய்ப்பே இல்ல உனக்கு நான் தான் நான் மட்டும் தான் ” என்றான் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சொல்ல,
“லவ் யு ரிஷி!” என்று உறக்க சொன்னப்படி திடீரென்று அவனை அணைத்துக்கொண்டாள்.
“என்னடா?” அவன் குரலில் தெரிந்த அதிர்வில், “லவ் யூன்னு தானே சொன்னேன்?” என்று அவள் விழிக்க,
“சடனா கட்டிப்பிடிக்கிற, திடீர்னு கிஸ் பண்றே ஒண்ணுமே புரியல, கொஞ்சம் சொல்லிட்டு செய். பதறுதுல” அவன் வம்பிழுக்க,
“சொல்லிட்டு செஞ்சா என்ன கிக்!” என்று புன்னகைத்தவள், அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.
அவள் தலையை மென்மையாகக் கோதி, “உன்கிட்ட ஒண்ணு காட்டணும், வா இங்க படுத்துக்கோ” என்றவன் டென்டின் மேற்புறம் இருந்த சின்ன சதுரமான ஜிப்பை திறந்து, டென்டில் எரிந்துகொண்டிருந்த பேட்டரி விளக்கை அணைத்துவிட்டு, அவள் அருகில் படுத்துக் கொண்டான்.
அவன் கையை நீட்டி வைத்து அதில் தலை வைத்தவள், அவனை ஆர்வமாகப் பார்க்க, “மேல பாரு” என்று அவன் சொல்ல, பார்வையை மனமின்றி மேலே இருந்த ஜன்னல் வழியே பார்த்தாள்.
“வாவ்!” என்றவள் மூச்சைப் பிடித்துக் கொண்டாள்.
அத்துவான காட்டின் கும்மிருட்டில், நாகரீகத்திற்கு அப்பாற்பட்ட இயற்கையின் இருளில் அவர்கள் முன்னே விரிந்திருந்தது பால்வெளி!
“மில்கி வே! எப்படி?” அவள் வியக்க,
“இங்க சுத்தமா லைஃட் பொலுயூஷன் இல்ல, அதான் இப்படி வானம் தெளிவா தெரியுது. ரொம்ப நேரம் பார்த்தா இன்னும் குட்டி குட்டி நட்சத்திரங்கள் எல்லாம் தெரியும்”
“ரொம்ப அழகா இருக்கு! நான் இப்படி பார்த்ததே இல்ல” அவள் அவன் முகம் பார்க்க, அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவளை மென்மையாக அணைத்துக்கொண்டான்.
உடல் சிலிர்ப்பைத் தாண்டித் தலையில் எதுவோ தோன்ற, “என்னடா மோப்பம் பிடிக்கிறே?” இருட்டில் அவன் முகம் தெரியாததால் கண்களைச் சுருக்கி அவள் கேட்க,
“உன் வாசனை!” ஆழமாகச் சுவாசித்தவன், “நீளமான தலைமுடினாலே ரொம்ப பிடிக்கும் இதுல எனக்கு சொந்தமானவன்னா இன்னும் ஸ்பெஷல்லா” அவன் மெய்மறக்க,
“அது எங்க இங்க இருக்கு? என் பாதி முதுகுக்கு தானே முடி இருக்கு? ஸ்ட்ரெஸ்ல இன்னும் கொட்ட வேற செய்யுது. விட்டா எலிவால் மாதிரி ஆயிடும். இதுல நீ வே…” பேசவிடாமல் அவள் இதழ்களைச் சிறைபிடித்திருந்தான்!
நொடிகளோ நிமிடங்களோ உணரமுடியாமல் போக, விருட்டென அவளை விலக்கிவிட்டு எழுந்தவன், வேகமாக டெண்டைவிட்டு வெளியேறினான்.
கண்களை மூடிக் கொண்டவள், ‘அவனா கிஸ் பண்ணான், அவனா தள்ளிவிட்டு போயிட்டான். என்னை பார்த்தா பேக்கு மாதிரி இருக்கா அவனுக்கு?’ கோவமாக எழுந்து வெளியே சென்றாள்.