UUU–EPI 10

UUU–EPI 10
அத்தியாயம் 10
ப்ரான்ஸ் மிலிட்டரி லீடர் நெப்போலியன் ஒரு சாக்லேட் பிரியர். மிலிட்டரி கேம்ப் செல்லும் போது கூட சாக்லேட் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார் இவர்.
எப்போதும் போல அன்றும் கபேயை மூடியதும் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கின. இரவு பத்துக்கு க்ளோஸ்ட் சைனை தொங்க விடுவார்கள் இவர்கள். அதற்கு முன்னே வந்திருக்கும் கஸ்டமர்கள் கதை பேசி, சிரித்து, வெளியேற சில சமயம் பத்தரைக்கும் மேல் கூட ஆகும். கடையில் வேலை செய்பவர்களும் வீட்டுக்குப் போக வேண்டும், பிள்ளை குட்டிகளைப் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் இல்லாமல் சில சமயம் இன்னும் நேரமாக்குவார்கள். அந்த மாதிரி நேரங்களில் அழகாய் சிரித்த முகமாய் பேசி அவர்களை அனுப்பி விடுவான் ரிஷி.
கிச்சனில் உள்ளவர்கள் அங்கே சுத்தப்படுத்தி, நாளைக்குத் தேவைப்படும் ஐட்டங்களுக்கு ப்ரீபேரேஷன் செய்து விட்டு கிளம்பி விடுவார்கள். கவுண்ட்டர் பார்த்த ஆள் கபேயைக் கூட்டி மாப் செய்து அன்றைய நாளை முடிக்க வேண்டும். ரிஷி கணக்கு வழக்குகளை முடித்து கடைசி ஆளாய் அலார்ம் செட் செய்து கடையை மூடி விட்டு செல்வான். ஏறக்குறைய பதினொன்று முப்பது ஆகிவிடும் அவன் எல்லாவற்றையும் முடித்து தனது இடத்துக்கு செல்ல.
ரிஜிஸ்டரில் சில பட்டன்களை தட்டினால் அன்றைய டோட்டல் சேல் ப்ரின்ட் அவுட் எடுத்துக் கொடுக்கும். அதை வைத்துதான் எவ்வளவு பணவரவு, என்ன என்ன விற்றது என கணக்கு எடுக்கப்படும். பொதுவாகவே அந்தந்த வியாபார ஸ்தாபனங்களுக்கு ஏற்றது போல கொஞ்சமாய் பணம் எப்பொழுதும் கேஷ் ரிஜிஸ்டரில் மேய்ண்டேய்ன் செய்வார்கள். ரிஷியும் ஐம்பது ரிங்கிட்டை, இருபது ஒரு ரிங்கிட்டையும், சில்லறையாக காசாக பத்து ரிங்கிட்டையும், 4 ஐந்து ரிங்கிட்டையும் எப்பொழுதும் கேஷ் ரிஜிஸ்டரில் வைத்திருப்பான். அந்த ஐம்பதுக்கு மேல் வந்ததை தான் வரவாக பதிந்து வைப்பான் அவன்.
கிச்சனில் அடுத்த நாள் என்ன வேலை, புதிதாக என்ன ஆர்டர் வந்திருக்கிறது, எவ்வளவு செய்ய வேண்டும் என்பதை எல்லாம் குட்டி மீட்டிங் போட்டு பேசி முடித்து கவுண்ட்டர் பக்கம் வந்தான் ரிஷி.
கவுண்டர் பார்ப்பதை இரண்டு ஷிப்டாக வைத்திருந்தான் ரிஷி. காலையில் ஷீலா ஆரம்பித்து முடிக்கும் போது, ஒரு தடவை அவளே சேல்ஸ் பிரிண்ட் அவுட் எடுத்து காசை எண்ணி ரிஷியிடம் கொடுத்து விட்டு சென்று விடுவாள். அது வரை கிச்சனில் இருக்கும் சிம்ரன், அதற்கு மேல் கவுண்ட்டர் பார்க்க வருவாள். சிம்ரன் புதிய ஆளாக இருப்பதால் அவள் வேலையை முடிக்கும் போது கணக்கை ரிஷியே பார்த்து, மறுநாளுக்கு வேண்டிய ஐம்பது ரிங்கிட்டை கேஷ் ரிஜீஸ்டரில் வைத்து கல்லாவை மூடுவான்.
கவுண்ட்டருக்கு வந்தவனை கண்டு கொள்ளாமல் தரையை மட்டும் பார்த்து மாப் போட்டுக் கொண்டிருந்தாள் சிம்ரன். பெரிய பூக்களிட்ட பலவித கலவை நிறம் கொண்ட பிளவுஸ் அணிந்திருந்தவளை சற்று நேரம் பார்த்தப்படி நின்றான் ரிஷி. காலையிலேயே கவனித்திருந்தான் அவளின் ப்ரவுன் கலர் பூனை கண்ணை. அந்த கண்ணை உருட்டி உருட்டி அவள் பேசிய போதெல்லாம் இவனுக்கு லேசாக பயமாக கூட இருந்தது. ஆனாலும் பார்வை அடிக்கடி அந்த பூனைக்கண் மோகினி பிசாசையே சுற்றி வந்தது.
பெருமூச்சுடன் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான் ரிஷி. மொத்த சேல்சை பிரிண்ட் அவுட் எடுத்து, கேஷ் ரிஜிஸ்டரில் இருந்த பணத்தை எண்ணினான் அவன். எண்ணி முடித்ததும் நெற்றி சுருங்கியது ரிஷிக்கு. சிம்ரனை ஏறிட்டுப் பார்க்க, அவள் பாட்டுக்கு வேலை செய்துக் கொண்டிருந்தாள். ப்ரிண்ட் அவுட்டையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு,
“சிம்ரன்! என் ஆபிஸ் ரூமுக்கு வா” என சொல்லி சென்றான்.
அவசர அவசரமாக வேலையை முடித்தவள், கதவைத் தட்டி விட்டு அவன் ஆபிஸ் அறைக்குள் நுழைந்தாள்.
“என்ன நந்தா சார்?”
அவளை ஏறிட்டுப் பார்த்தவன்,
“முதல்ல உட்காரு” என சொன்னான்.
அவன் மேசை முன் இருந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்தாள் சிம்ரன்.
“சேல்ஸ் டோட்டல்ல நூறு ரிங்கிட் குறையுது சிம்ரன்!” என சொன்னவனின் பார்வை அவன் முன் இருந்த கம்ப்யூட்டர் திரையின் மேல் இருந்தது.
“குறையுதா? இருக்காதே! நான் கரேக்டா தானே காச ஹேண்டில் பண்ணேன்”
“கரேக்டா இருந்திருந்தா ஏன் குறையுது?”
படாரென எழுந்து நின்றாள் சிம்ரன். முகம் சூடேற, கண்கள் லேசாக கலங்கிப் போனது அவளுக்கு.
“நான்..நான் அந்த காச திருடிட்டேன்னு சொல்றீங்களா? நா..பிசாத்து நூறு வெள்ளிய இந்த சி…சிம்ரன் திருடிட்டான்னு சந்தேகப்படறீங்களா?” முடிக்க முடியாமல் கண்ணில் ஒரு சொட்டு நீர் வழிந்து விட்டது. சட்டென திரும்பி நின்றுக் கொண்டாள் அவள்.
“சிம்ரன்!”
இவள் திரும்பிப் பார்க்கவில்லை. அவமானத்தில் உடல் லேசாக நடுங்கியது.
எழுந்து அவள் முன்னே வந்து நின்றான் ரிஷி.
“சிம்ரன்” என மென்மையாய் அழைத்தவனின் கரம் அவள் கண்ணீரைத் துடைக்க உயர்ந்து பின் அப்படியே நின்றது. தலையை இடம் வலமாக ஆட்டிக் கொண்டவன், கையை பேண்ட் பாக்கேட்டில் விட்டுக் கொண்டான்.
“சொல்ல வந்தத முழுசா கேட்காம இது என்ன கண்ணீர்?”
“தப்பு செய்யாம, உங்களப் பார்த்து திருடன்னு சொன்ன சும்மா இருப்பீங்களா? கோபம் வரும் தானே! முதலாளியா இருந்தா என்ன வேணா சொல்லலாமா?” என படபடவென பொரிந்துக் கொட்டினாள் சிம்ரன்.
“ஹேய் கலர் குருவி! உன்னை நான் திருடின்னு சொல்லவே இல்ல! கவனமா இருந்திருந்தா இப்படி நடக்க சான்ஸ் இல்லன்னு தான் சொல்ல வரேன்!” என சொன்னவன் மேசை மேல் இருந்த டிஷ்யூ பேப்பரை அவளிடம் நீட்டினான்.
“கண்ணைத் துடைச்சுக்கோ சிம்ரன்! கண்ணீர் வழிஞ்சு மேக்கப்லாம் கரையுது பாரு! அப்புறம் ஒரிஜினல் முகத்தைப் பார்த்து நான் பயந்துட போறேன்!” என வம்பிழுத்தான்.
முகத்தைத் துடைத்துக் கொண்டவள்,
“இந்த சிம்ரன் மேக்கப் போட்டா ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ சிம்ரன் மாதிரி இருப்பா! போடலனா ‘நெஞ்சில் ஜில் ஜில்’ சிம்ரன் மாதிரி இருப்பா! எப்படி இருந்தாலும் இவ அழகு, அழகுதான்” என சொல்லியவள் நார்மலாகி இருந்தாள்.
மெல்லிய சிரிப்புடன் தனது இடத்துக்கு சென்று அமர்ந்த ரிஷி, அவளையும் அமர சொன்னான்.
“நம்மள மாதிரி வியாபாரம் செய்யறவங்க எப்பவும் கேர்புல்லா இருக்கனும் சிம்ரன். கண்ணு ரெண்டையும் ஆந்தை மாதிரி முழிச்சுப் பார்க்கணும்! குதிரை மாதிரி காதை தீட்டி வச்சிருக்கனும்! கையும் காலும் ச்சீட்டா மாதிரி சட்டுன்னு இயங்கனும். எந்நேரமும் அலர்ட்டா இருக்கனும். இங்க வா!” என அவளை தன் அருகில் அழைத்தான் ரிஷி.
அங்கே இருந்த கம்ப்யூட்டரில் அவள் வேலை நேரத்தில் பதிவாகி இருந்த சீசீடிவீ ரேக்கார்ட்களை ஓட விட்டான். கவுண்ட்டர் பின்னால் கஸ்டமர்கள் கண்ணுக்குத் தெரியாதபடி ஒரு கேமரா செட் செய்திருந்தான் ரிஷி. அதன் வழி பதியப்பட்ட ரெக்கார்டிங்தான் அவை. அவன் சுட்டிக் காட்டிய இடத்தை கூர்ந்து நோக்கினாள் சிம்ரன்.
“இந்தப் பையன் இன்னிக்கு ப்ரேண்ட்ஸ் கூட வந்தான் டோனாட் வாங்க! அடப்பாவி,சிரிச்சு சிரிச்சுப் பேசனானே!” வாயைப் பிளந்து அந்த காட்சிகளைப் பார்த்தாள் சிம்ரன்.
அந்தப் பையன் டோனட்டும் காபியும் ஆர்டர் செய்ய, இவள் ரெடி செய்து விட்டு பணம் வாங்கி கேஷ் ரிஜிஸ்டரில் போடும் நேரம் பார்த்து பானத்தைத் தட்டிவிட்டு விட்டான். கவுண்ட்டர் டாப்பில் ஊற்றி அப்படியே தரையில் வழிந்தது காபி.
“சாரி அக்கா, சாரி! எடுக்கற அவசரத்துல கை சுட்டிருச்சு!” என அவன் சொல்ல இவள் அவசரமாக துணி கொண்டு கவுண்ட்டரைத் துடைத்து கீழேயும் துடைக்க குனிய, அவன் எக்கி கேஷ் ரிஜீஸ்டரில் இருந்த, கைக்கு அகப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டான். இவள் நிமிரும் போது நல்லவன் போல் நின்றிருந்தான். அங்கே தான் காணாமல் போனது அந்த நூறு ரிங்கிட்.
“படுபாவி! ஸ்கூல் படிக்கற வயசுல திருட்டு வேலையைப் பார்த்தீங்களா சேகர்! உடனே போலீசுக்குப் போகலாம்! ராஸ்கல்” என படபடத்தாள் சிம்ரன்.
“நீ சொன்ன மாதிரி ஸ்கூல் பையன் தான். அடிக்கடி கபேக்கு பேமிலியா வந்துப் பார்த்துருக்கேன். நெக்ஸ்ட் டைம் பேரேண்ட்ஸ் காதுல இந்த விஷயத்தப் போட்டு வைக்கறேன். அவன கூப்டு மிரட்டியும் வைக்கறேன். இந்த வயசுல இதெல்லாம் ஒரு த்ரீல்லா நெனைச்சு செஞ்சிடறாங்க! அதோட நன்மை தீமைகளை யோசிச்சுப் பார்கறது இல்ல. அடுத்த முறை கவுண்ட்டர் பார்க்கறப்போ நீ இன்னும் கவனமா இரு!”
“ஹ்ம்ம் சரி!”
“இன்னிக்கு ரொம்ப அழுதுட்ட நீ! அத கம்பண்சேட் பண்ண டின்னர் வாங்கி குடுக்கவா சிம்ரன்?”
“சூப்பர் சூப்பர். ஈக்கான் பாக்கார்(கிரில் செய்யப்படும் மீன். அதில் உறைப்பான சம்பல் போட்டு சாதத்தோடு கொடுப்பார்கள்) வாங்கி குடுக்கறீங்களா நந்தா சார்?”
புன்னகையுடன் சரியென்றான் ரிஷி. அழுதவளை சிரிக்க வைத்தே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என தோன்றியது அவனுக்கு.
நந்தனாவுக்கு போன் போட்டு வெளியே சாப்பிட்டு வருவதாக சொன்னவள், ரிஷி வேலை முடித்து கடையை பூட்டும் வரை காத்திருந்தாள். நிறைய உணவு கடைகள் வரிசைக் கட்டி நின்ற ஓரிடத்திற்கு அழைத்துப் போனான் ரிஷி. காரை பார்க் செய்து விட்டு உள்ளே நுழைந்தார்கள் இருவரும். மலாய், தமிழ், சீன உணவு கடைகள் நிறைய இருந்தன அவ்வளாகத்தில். ஓரிடம் பார்த்து சிம்ரனை அமர்த்தியவன், அவள் கேட்ட உணவை ஆர்டர் கொடுக்கப் போனான். அதற்குள் குடிக்க என்ன வேண்டும் என வந்த ஆளிடம் அவனுக்கும் சேர்த்து அசாம் போய் லீமாவ்(சவர் ப்ளம் போட்ட எலுமிச்சை பானம்) ஆர்டர் செய்தாள் சிம்ரன்.
பேசிக் கொண்டே உணவருந்தினார்கள் இருவரும்.
“ஏன் சிம்ரன் உனக்கு ப்ரேக் ஆப் ஆச்சு?” என கேட்டு வைத்தான் ரிஷி.
“என்னை யாரால ஹேண்டில் பண்ண முடியும்! விக்கினால முடியல, சோ போடின்னு சொல்லிட்டான்! நானும் போடான்னு சொல்லிட்டேன்! எல்லா ஆம்பிளைங்கலாலும் சுயமா சிந்திச்சு இண்டிபெண்டனா இருக்கற பொண்ணுங்கள ஏத்துக்க முடியாது! ஒரு பொண்ணு எவ்ளோ படிச்சிருந்தாலும், காரியர்ல டாப்பா இருந்தாலும், ரிலேஷன்ஷிப்னு வரப்போ ஆணுக்கு கீழத்தான் இருக்கனும்னு நெனைக்கற மூடர்கள் நெறைஞ்ச உலகம் இது. இங்க யாரும் மேல கீழன்னு இருக்க வேணா! சரி சமமா இருந்தாலே போதும்! என் வைப் வேலைக்குப் போறா, கார் ஓட்டுறா, இதை செய்யறா அதை செய்யறா! அந்த அளவுக்கு நான் சுதந்திரம் கொடுத்திருக்கேன்னு பீத்திக்க வேண்டியது! தெரியாமத்தான் கேக்கறேன், நீ யாரு அவளுக்கு சுதந்திரம் குடுக்க! அவ என்ன உன் அடிமையா? லூசுத்தனமா இல்ல! இந்த விக்கி இருக்கானே, அவனுக்கு நான் என்ன செய்யறேன், எங்க போறேன், என்ன சாப்டேன்னு ஒவ்வொன்னும் அப்டேட் குடுக்கனும்! ஆரம்பத்துல நம்ம மேல என்ன ஒரு அக்கறைன்னு புல்லரிச்சுப் போச்சு! போக போக மூச்சு விட முடியாத அளவுக்கு டார்ச்சரா போச்சு! நான் அப்படி செய்யலன்னு ஆனதும், அடிக்கடி சண்டை, பிரச்சனை! அதான் பிரிஞ்சாச்சு! ஆனா இப்போ நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன்! விக்கிய விட்டு பிரிஞ்ச நானும், கொக்கிய விட்டு ஓடுன மீனும் என்னைக்கும் நிம்மதியா இருப்போம்!” என சொல்லியவள் பீர் அடித்த பீவர்(நீர் எலி) போல இளித்து வைத்தாள்.
“நீ எடுத்த முடிவு ரொம்ப சரி சிம்ரன்! இந்த மாதிரி ஆளுங்க கூடலாம் உன்னால வாழ முடியாதுதான்!”
“அப்போ எந்த மாதிரி ஆளுங்க கூட என்னால வாழ முடியும்?”
“அது..திடீர்னு கேட்டா என்னன்னு சொல்ல! ஹ்ம்ம்!!!உன்னைப் புரிஞ்சிகிட்டு, உனக்கு பெர்சனல் ஸ்பேஸ் குடுத்து, ஆசையா, பாசமா, காதலா, அன்பா, அரவணைப்போட, கைக்கோர்த்து சரி சமமா மதிச்சு மரியாதையா பார்த்துக்கற ஆள் கிடைச்சா சட்டுன்னு ஓகே சொல்லிடு”
“அப்படிப்பட்ட ஆள் கிடைக்குமா நந்தா சார்?”
“கண்டிப்பா கிடைக்கும்! கண்ண நல்லா தொறந்து தேடு, உன் முன்னுக்கே கூட இருப்பான்”
“என் முன்னுக்கு ஒரு சீன கிழவன் தான் இருக்கான். அவன் வேற மொத புடிச்சு என்னையே உத்து உத்துப் பார்க்கறான். ஓர் அழகான பொண்ணு இந்த நாட்டுல வெளிய தெருவ நடமாட முடியல. எல்லாப் பயபுள்ளைங்களும் நம்மளேயே பாக்கும்ங்க! ச்சை!” என சலித்துக் கொண்டாள் சிம்ரன்.
‘போதும்டி என் அழகு ராட்சசி! எப்போ பாரு நான் அழகி நான் அழகின்னு தண்டோரா போடாத குறையா சொல்லிட்டே திரியறது. பார்த்து சொக்கிப் போற எங்களுக்கு தெரியாதா நீ பெரிய பியூட்டின்னு! அதையே சொல்லி சொல்லி சாகடிக்காத என்னை! முன்னுக்கு இருப்பான் பாருடின்னா, பல்லு போன கிழவன பார்க்கறா! அறிவுக் கொழுந்து!’ மனதிலேயே புலம்பினான் ரிஷி.
“கெளம்பலாமா? நந்து உனக்கு வேய்ட் பண்ணுவா! ரொம்ப லேட்டாச்சு. நான் உள்ள வந்தா சீனி பாப்பா தூங்கமாட்டேன்னு அடம் பண்ணுவா. அதனால உன்ன மட்டும் இறக்கி விடறேன். இந்த மீன் நந்துவுக்கும் பிடிக்கும்! அவளுக்கு குடுத்துடு சிம்ரன்” என தான் பார்சல் வாங்கி இருந்ததை அவளிடம் கொடுத்தான்.
சிம்ரனை நந்தனாவின் வீட்டில் இறக்கி விட்டவன், தனது இடத்துக்கு கிளம்பி விட்டான்.
தனது சாவி கொண்டு கதவைத் திறந்து உள்ளே போனவள், உணவை டைனிங் ஹாலில் வைத்து விட்டு சாப்பிட அழைக்க நந்துவைத் தேடிப் போனாள். ரூம் கதவை மெல்ல தட்டினாள் சிம்ரன் ஆனால் கதவு திறக்கப்படவில்லை. ரூமில் இருந்த டீவியில் பாட்டு சத்தம் வர, சிம்ரனே பூட்டாமல் இருந்த கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.
அங்கே சன் மியூசிக்கில் நின்னையே சகியென்று பாட்டு ஓடிக் கொண்டிருக்க, நந்தனா தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்தாள்.
“நந்து! என்னாச்சு?” என இவள் அவசரமாய் அவளை நெருங்கினாள்.
கட்டிலில் அமர்ந்திருந்த நந்தனா, அருகில் வந்த சிம்ரனை இடையோடு அணைத்துக் கொண்டாள்.
“இந்தப் பாட்டு..இது.. என் ரவிபாரதி என்னைப் பார்த்து பாடனது சிம்ரன். எங்க யூனி(யூனிவர்சிட்டி) தமிழ் கலைநிகழ்ச்சியப்போ அத்தனை பேர் மத்தியில என் பாரதி என் கண்ணப் பார்த்து,
‘மாரனம் புகலென் மீது வாரி வாரி வீச-நீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா’ ன்னு பாடன போது ஒவ்வொரு உருக்கமான கண்ணம்மாவுக்கும் பூட்டி வச்ச என் மனசோட பூட்டுக்கள் ஒவ்வொன்னும் தகர்ந்து உடைஞ்சி மாயமாப் போச்சு சிம்ரன். அந்த நொடி ஆழமா என் மனசுல இவர்தான் உன் எல்லாமும்னு பதிஞ்சு போச்சு! ஆனா இப்போ அம்பு தச்ச கிளியா நான் மரணகாயம் அனுபவிச்சுட்டு இருக்கேன். ஏன் சிம்ரன் இப்படி செஞ்சாரு? நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன்! வலிக்குது சிம்ரன், நெஞ்செல்லாம் வலிக்குது! என் வலிய சொல்லி அழ கூட எனக்கு யாரும் இல்ல. நந்தா கிட்ட என் கலக்கத்த காண்பிக்க முடியாது! என் கண்ணு லேச கலங்கனா கூட உடைஞ்சி போய்டுவான் அவன்! அவனுக்கு எல்லாமே நான் தான். அவனுக்காக என் துக்கத்த எல்லாம் உள்ளே பூட்டி வச்சு சிரிச்சிட்டே திரியறேன் சிம்ரன்” என கண்ணீர் ஆறாய் வழிய திக்கித் திணறி பேசினாள் நந்தனா.
“நந்து! நந்தும்மா! இந்த மாதிரி டைம்ல இப்படிலாம் அழ கூடாதுடா! நந்தா கிட்ட சொல்ல முடியலைனா என்ன, இனி நான் இருக்கேன் உனக்கு! எல்லாத்தையும் என் கிட்ட சொல்லி ஆறுதல் தேடிக்கலாம்! சரியா! அழாதடா!” என தேற்றிய சிம்ரனுக்கும் கண்ணீர் வழிந்தது.
தாயின் அழுகுரலில் எழுந்த சின்னவளும் அழ ஆரம்பித்தாள். சிம்ரனின் அணைப்பில் இருந்த நந்தனாவுக்கு அழுகையை அடக்கவே முடியவில்லை.
குழந்தையை சமாதானம் செய்ய நந்தனாவை மெல்ல விலக்கினாள் சிம்ரன். இவள் விலக்க, அப்படியே கட்டிலில் மல்லாக்க சரிந்தாள் நந்தனா.
“நந்து!!!!!!!!!!!!”
(உருகுவான்…..)
(போன எபில ஹலால்னா என்ன மலாய்க்காரங்க எல்லாம் இஸ்லாமிய மதத்த சேர்ந்தவங்களான்னு கேட்டிருந்தாங்க சிலர். ஆமாம், இங்க மலாய் சமூகத்தினர் எல்லாம் இஸ்லாமிய மதத்த சேர்ந்தவங்க தான். அவங்க ஹலால் முத்திரை பதித்த உணவு வகைகளையும் கடையிலும் தான் உணவு சாப்பிடுவாங்க. சிலர் வேறுபாடா நடக்கலாம். ஆனா மோஸ்ட்லி இப்படித்தான். இந்த மாதிரி உணவகங்களில் அவங்க மதத்தில சொன்ன மாதிரி வேதம் ஓதி தான் உணவுக்கான கோழிய வெட்டுவாங்க. பன்றி சார்ந்த எதையும் சேர்த்துக்க மாட்டாங்க. நீங்களே கூட இத கூகிள் செஞ்சு பார்க்கலாம் டியர்ஸ். எனக்கு தெரிஞ்ச அளவுக்கு சொல்லிருக்கேன். காலை வணக்கம் -செலாமாட் பாகி, அந்தியில- செலமாட் பெத்தாங், இரவுல- செலாமாட் மாலாம். பொதுவா வணக்கம்னா செலாமாட் செஜாத்தேரா. இத கூட ஒரு ரீடர் கேட்டிருந்தாங்க.
எபில போட்ட நின்னையே பாட்டை இன்னிக்கே ஒரு ஐம்பது தடவை கேட்டிருப்பேன். ஏற்கனவே தெரிஞ்ச அறிஞ்ச பாரதி பாட்டுன்னாலும், எபியோட கனேக்ட் பண்ணறப்போ, என்னமோ நெஞ்ச அடைக்கற பீலீங். நீங்களும் கேட்டுப்பாருங்க. நந்தனாவோட வலி புரியும். லவ் யூ ஆல். அடுத்த எபில சந்திக்கலாம் டியர்ஸ்)