Uyir Vangum Rojave–EPI 22

ROSE-e3a1d47f

அத்தியாயம் 22

ஆம்பிளை புள்ளைங்க அழக்கூடாதுடா

ஹ்ம்ம். ஆம்பிள புள்ளைங்கள அழ வைக்கக் கூடாதுன்னு பொம்பள பிள்ளைங்ககிட்ட போய் சொல்லு

(ரெமோ — சிவகார்த்திகேயன், சரண்யா)

 

“ரோஜா !”

“ஹ்ம்ம்” காலையில் கிளம்பி கொண்டிருந்தவளை அழைத்தான் வேந்தன்.

“வீக்கேன்ட் குல தெய்வம் கோயிலுக்குப் போறோம். ஞாபகம் இருக்குத்தானே?”

“ஹ்ம்ம்” ஒற்றை வார்த்தை பதில்.

இவனும் வேலைக்குக் கிளம்பி இருந்தான். காலையில் அவள் கிளம்பி மேக்கப் போடும் நேரத்தை அனுமானித்து எதாவது சாக்கு சொல்லி ரூமுக்குள் இருப்பான் வேந்தன். அவள் லிப்ஸ்டிக் ஒற்றுவதையும், முகத்துக்கு பவுடர் போடுவதையும், அவளை மாதிரியே அடங்காத குட்டை முடியை சீவுவதையும் ஓரக் கண்ணால் பார்த்து சைட் அடிப்பான். திருமணம் ஆகியும் மனைவியை சைட் அடிப்பவன் வேந்தன் ஒருவனாகத் தான் இருக்கும். கார்த்திக் கைங்கர்யத்தால் நடந்த கூடலுக்குப் பிறகு, இருவரும் அதைப் பற்றி பேசுவதையோ மீண்டும் பரீட்சித்துப் பார்ப்பதையோ தவிர்த்திருந்தார்கள்.

அவனே ஆரம்பிக்கட்டும் என அவளும், காதல் இல்லைன்னு வீர வசனம் பேசிட்டு எப்படிடா தொங்கி கொண்டு போவது என அவனும் காலத்தைக் கடத்தினார்கள்.

வேலைக்குப் போவது போல் அணியாமல், முட்டி வரை இருக்கும் வெள்ளை டிரஸ் அணிந்திருந்தாள் தேவி.

“வேற எங்கயாவது போறயா ரோஜா? எப்பவும் வேலைக்குப் போடற மாதிரி இல்லையேன்னு கேட்டேன்”

“ஹ்ம்ம்” கடுப்பாகி விட்டது வேந்தனுக்கு.

“இந்த ஹ்ம்ம்கு என்ன அர்த்தம்? கேட்ட கேள்விக்கு எல்லாம் அதே பதில்தான் வருது”

“ஹ்ம்ம்னா , ஆமாம்னு அர்த்தம். பதில் சொல்ல பிடிக்கலன்னு அர்த்தம். எரிச்சலா இருக்குன்னு அர்த்தம். இன்னும் கொஞ்ச நேரம் நீ பேசுனா, எதாவது பறக்க போகுதுன்னு அர்த்தம்” முகம் சிவக்க கத்தியவளை ஆர்வமாகவும் ஆச்சரியமாகவும் பார்த்தான் வேந்தன்.

‘என் செல்லத்துக்கு ஏன் இப்படி கோபம் வருது இன்னிக்கு? கோபத்துல கூட அழகாத்தான் இருக்கா. செவ செவன்னு தக்காளி மாதிரி. அடச்சே! அம்மாகிட்ட பேசி, நமக்கும் இந்த தக்காளி வந்து ஒட்டிக்கிச்சே’

“ரோஜாம்மா! என்னடா பிரச்சனை? ஏன் ஒரு மாதிரி இருக்க?” அருகில் சென்று கையைப் பிடித்துக் கேட்டான்.

அவள் கண்கள் லேசாக கலங்கியது போல் இருந்தது. வேந்தனுக்கு தாங்கவே முடியவில்லை. பாசமாக அணைத்துக் கொண்டான். சிறிது நேரம் அவன் அணைப்புக்குள் அடங்கியவள்,

“நான் போகனும்” என்றவாறே விலகினாள்.

“எங்கடா?”

“எங்கயோ போறேன். உனக்கு என்ன? அப்படியே பாசக்காரன் மாதிரி நடிக்காத” கத்தியவள், அவனது மாறிய முகத்தைக் கண்டு விடுவிடுவென வெளியேறி விட்டாள். கார்த்திக் கார் எடுக்க வருவதற்குள் தானே ஓட்டிக் கொண்டு சென்றுவிட்டாள்.

நண்பர்கள் இருவரும் புழுதி பறக்க செல்லும் காரைப் பார்த்தபடியே வாசலில் நின்றார்கள்.

“என்ன மச்சி, உங்க மேடம் டிமிக்கி குடுத்துட்டு போய்ட்டாங்களா?”

“அதெல்லாம் நமக்கு புதுசா மச்சி. உன் முகம் ஏன் இப்படி செத்து சுண்ணாம்பா இருக்கு? அடி பலமோ?”

“போடா டேய்! உள்ள வாங்குனாலும், ஒன்னுமே நடக்காதது போல கெத்தா நடப்போம்டா நாங்க. உங்க மேடம் இவ்வளவு வேகமா எங்கடா போறாங்க? உனக்கு ஏதாவது தெரியுமா?”

“எனக்கு எப்படி மச்சி தெரியும்? வா, மச்சி! சாப்பிடர வேலைய பாப்போம்.”

கார்த்திக்கை ஆழப் பார்த்தான் வேந்தன். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை.

‘எமகாதகன்டா நீ! தெரிஞ்சா மட்டும் சொல்லவா போற? அடிமை நம்பர் ஓன் ஆச்சே. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் ஆகப் போகுது. இன்னும் நான்  அடிமை நம்பர் டூ தான்.’ பொறாமை லேசாக எட்டிப் பார்த்தது வேந்தனுக்கு.

இருவரும் சாப்பிட உள்ளே நுழைந்தனர்.

“அப்புறம் மச்சி, மூவி நைட் எப்படி இருந்துச்சு? என் பிரச்சனையில இத பத்தி கேக்க மறந்துட்டேன்”

“உனக்கு என்னப் பிரச்சனை மாமு? சொல்லு நான் தீர்த்து வைக்கிறேன்.”

‘பிரச்சனைய சொன்னா என்னையல தீர்த்துருவ. போடா! இந்த சென்டிமென்டுக்கெல்லாம் மயங்கி நான் வாய திறக்க மாட்டேன்’

“அதெல்லாம் பெருசா ஒன்னும் இல்லை மச்சி. பச்சா மேட்டர் தான். விட்ட அறையில, எல்லாம் செட்டல் ஆயிருச்சு”

“அறையா?”

“ஐ மீன், என் வீட்டுல அறை ஒன்னு வாடகைக்கு விடலாம்னு இருக்கேன். சும்மா பூட்டித்தான இருக்கு.”

“ஓ! சரி மச்சி. நீ குடுத்த ஐடியா செம்ம மச்சி. பட்சி இன்னைக்கு வரைக்கும் ஜாலி மூட்ல தான் இருந்துச்சு. இப்ப என்னான்னா ‘மாச்சோ என்னாச்சோ, நல்ல மூட் எங்க போச்சோன்னு’ என்னை பாட விட்டுட்டா. அவ கோச்சிகிட்டா என் மனசுல ரத்தம் கொட்டுது மச்சி”

‘ரத்தம் கொட்டுதாம்! டேய் விட்டுட்டு போக பார்த்தவன் தானேடா நீ? இப்ப வந்து சீன போடுற. கேக்கறவன் கேணைன்னா, கே.எப்.சில கூழ் ஊத்துறாங்கன்னு சொல்லுவ. மவனே, இன்னும் இன்னும் உன்னை சோதிச்சிக்கிட்டே இருப்பேன்டா, நீ மேடத்துகிட்ட பாசம் வச்சிருக்கியா இல்லே வேசம் போடறியான்னு தெரிஞ்சுக்க’ வெளியே சிரித்துக் கொண்டே மனதில் ஓட்டி எடுத்தான் கார்த்திக்.

“கவலைப்படாதே மச்சி. ஊருக்கு போய் நல்லா வேண்டிக்கிட்டு வரலாம். எல்லாம் சரியா ஆகிரும்”

“அதுவும் சரிதான். வேண்டிக்கிட்டு வாங்கன்னு சொல்லாம, வரலாம்னு சொல்லுற? உன்னை நான் கூப்புடவே இல்லையே?”

“மேடம்தான் வர சொன்னாங்க. ரெண்டு பேரும் புது மாப்பிள்ளை. கார் ஓட்ட ஆள் வேணாம்?” புழுகு மூட்டையை அவிழ்த்துவிட்டான்.

லாவண்யாவை இரண்டு நாட்கள் கண் குளிர பார்க்கும் பாக்கியத்தை எப்படி நழுவ விடுவான் அவன். சமாதானம் செய்து வீட்டில் விட்டு விட்டாலும், அதற்கு பிறகு அவள் போனையே எடுப்பதில்லை. மேசேஜையும் ரிப்ளை செய்வது இல்லை. ஓல்டு குருடி, டோரை தொறடி கதையாக ஆகிவிட்டது.

“ரோஜா சொன்னா சரிதான். சரி மச்சி நைட்டு பார்ப்போம். “ இரவு நடக்கப் போகும் பிரளயத்தைப் பற்றி தெரியாமல் கிளம்பினான் வேந்தன்.

அங்கே இந்துவின் இல்லத்தில்,

“அனும்மா!” வீராதான் மனையியைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.

சமையல் அறையிலிருந்து அடித்துப் பிடித்து ஓடி வந்தாள் அனு. ஹாலில் வேட்டி ஜிப்பாவில் நின்று கொண்டிருந்தான் அவன். என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தாள் அனு. திருமணத்திற்கு முன்பு பேசியவள் தான். இப்பொழுது என்னமோ வெட்கம் வந்து தடுத்தது.

“கிளம்பி வா!”

“எ எங்க?” திக்கியது அனுவுக்கு.

“இன்னைக்கு என்னோட ‘வந்த’ டே. அதான் கோயிலுக்குப் போய்ட்டு வரலாம்”

“வந்த’ டேவா?” அனுக்கு மண்டை குழம்பியது.

‘இவரு என்ன சொல்லுறாரு? வயசுக்கு வந்த நாளா இருக்குமோ? ஆம்பிளைங்களுக்கும் இதெல்லாம் இருக்கா? அண்ணனுக்கு அம்மா சடங்கு ஒன்னும் செய்யலியே?’ திரு திருவென முழித்தாள் அனு.

“ஆமாடா. பொறந்த தேதி தெரியாது. ஆஸ்ரமத்துக்கு வந்த தேதிதான் தெரியும். அதையே அங்க, என் பொறந்த தினமா கொண்டாடுவாங்க. அழகா ஒரு சேலை கட்டிட்டு வா. லாவண்யாவை காலேஜில விட்டுட்டு போய்ட்டு வரலாம்.”

சரி என தலையாட்டியவள், ரூமுக்கு ஓடினாள் சேலை கட்ட.

‘எப்ப பாரு ஓட்டம் தான் என் அழகு புஜ்ஜிமாவுக்கு. அந்த ஓட்டத்தை என் கிட்ட வராம இருக்க பாவிக்கறதுதான் காண்டாயிருக்கு. சீக்கிரமா என்னை நோக்கி ஓடி வர வைக்கிறேன்.’

“என்னை மாப்பிள்ளை, வேட்டி சட்டையில ஜமாய்க்கிறீங்க? என்ன விசேசம்?” கரெக்டாக ஆஜராகினார் இந்து.

“என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை. இன்னிக்கு என் பொறந்த நாளு மாதிரி” காலைத் தொட்டு வணங்கினான் வீரா.

“தக்காளி ! நல்ல துட்டோட, சோக்கா என் மக கூட குஜாலா குடும்பம் நடத்தி செம்மையா இருப்பா” என அழகாக வாழ்த்தினார் இந்து.

கேட்ட வீராவுக்கே ஒரு நிமிடம் நெஞ்சில் இருந்த மஞ்சா சோறு வெளியே வந்துவிடும் போல் இருந்தது.

“அத்தை, உங்க கால்ல விழுந்து கேக்குறேன் இனிமே நல்ல தமிழுலே பேசுங்க ப்ளிஸ். என்னால காது குடுத்து கேக்க முடியல.”

“அப்படியா மேட்டரு? அப்ப வுடு. இனிமே நல்ல தமிழுலே பேசுறேன் ங்கொய்யால”

“அம்மா! போதும்மா போதும். இனிமே இப்படி பேசுனா, நான் வீட்டுக்கே வர மாட்டேன். திரும்பவும் ஹாஸ்டலுக்கே போயிருவேன்” மிரட்டியவாறே வந்தாள் லட்டு.

“விடுடி ! இங்லீஸ் பேசுனாலும் பிடிக்காது, தமிழு பேசுனாலும் புடிக்காது. எல்லாருக்கும் தாஸ்மாக் பேர்னிங்”

புரியாமல் முழித்தான் வீரா.

“ஸ்டமாக் பெர்னிங்கை தான் இப்படி சொல்லுறாங்க மாம்ஸ். நீங்க எங்க மாப்ஸ் மாதிரி கிளம்பிட்டீங்க?” அவனை வம்பிழுத்தாள் லட்டு.

“கோயிலுக்கு தான், உங்க அக்கா கூட” 

“வாவ், மாம்ஸ். கலக்குங்க”

நீல நிற சேலையில், நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டு அன்ன நடை நடந்து வந்த அனுவை மூவருமே கண் கொட்டாமல் பாசமாகப் பார்த்தனர். அனுவை அணைத்துக் கொண்ட இந்து,

“வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே..“ என பாடினார்.

லட்டுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அம்மா! மாம்ஸ் பாட வேண்டிய பாட்ட நீங்க பாடுறீங்க. அவரு இப்ப பாட்டுக்கு எங்க போவாரு?” என வீராவை கலாய்த்தாள்.

“உங்க மாம்ஸ் பாடுனா, நான் ஏன்டி பாட போறேன்? அவர பாட சொல்லு நான் நிறுத்துறேன், வெண்டைக்காய்”

“தக்காளி என்னமா ஆச்சு?”

“மாப்பிள்ளை தக்காளிய விட சொல்லிட்டாரும்மா.” பாவமாக சொன்னார் இந்து.

சிரித்தபடியே மூவரும் அவரிடம் விடைப்பெற்று சென்றனர். லாவண்யா இறங்கியவுடன், அவர்கள் இருவர் மட்டும் கோவிலுக்கு சென்றனர்.

அர்ச்சனை தட்டு வாங்கி கொண்டு, உள்ளே சென்று முதலில் விநாயகரை வணங்கினர். அர்ச்சனை செய்யும் போது, ராசி, நட்சத்திரம் கேட்ட அர்ச்சகரிடம் சாமி பேருக்கே செய்ய சொன்னாள் அனு. பிறந்த நாளே தெரியாதவனுக்கு ராசி எங்கே தெரியப் போகிறது என சரியாக அனுமானித்த மனைவியைக் கண்டு மென் முறுவல் வந்தது வீராவுக்கு.

கடவுள் தரிசனம் முடிந்தவுடன், பொங்கலை வாங்கிக் கொண்டு ஒரு இடம் தேடி அமர்ந்தனர் இருவரும்.

“சாப்பிடு அனு”

“உங்களுக்கு எடுத்துக்கலையா?”

“நீ சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரி.” என சிரித்தான் வீரா.

கொஞ்சமாக பொங்கலை கையில் எடுத்தவள் அவன் வாயருகில் கொண்டு சென்றாள். அதிர்ச்சியில் வாயைத் திறக்காமல் அமர்ந்திருந்தான் வீரா.

“நான் கொடுத்தா சாப்பிட மாட்டீங்களா?” கண்களில் நிராசையுடன் கேட்டாள் அனு.

“நீ குடுத்தா பினாயில கூட குடிப்பேன் அனு”

குமட்டிலேயே இடித்தாள் அவள்.

“என்ன பேச்சு இது” கடிந்து கொண்டவளைப் பார்த்து விழித்தான் வீரா.

‘இவளா என்னை இடிச்சது? யாரோ மல்லிப்பூவ கன்னத்துல உரசுன மாதிரி இருந்துச்சே’ என சிலிர்த்தான் வீரா.

அவள் கொடுக்க கொடுக்க வாயைத் திறந்து வாங்கிக் கொண்டான். கையைக் கழுவிக் கொண்டு மனம் நிறைய சந்தோஷத்துடன் வீராவும், வெட்கமும் குழப்பமாக அனுவும் கிளம்பினார்கள். கார் கடற்கரையில் நின்றது. திரும்பி வீராவைப் பார்த்தாள் அனு.

“கொஞ்சம் பேசனும் அனும்மா. வீட்டுல உன்னை தனியாகவே பிடிக்க முடியலை” கண்களால் கெஞ்சினான். காரிலிருந்து இறங்கினாள் அவள்.

இருவரும் மெல்ல நடந்து ஒரு இடம் தேடி அமர்ந்தார்கள். காலை இளம்வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்திருந்தாலும், கடல் காற்று சூட்டை தணித்திருந்தது. இருவரும் கடலைப் பார்த்தவாறே அமைதியாக அமர்ந்திருந்தனர்.

“என்னமோ பேசனும்னு சொன்னீங்க?”

“நான் இப்படி லோக்கல் பார்ட்டியா இருக்கறது உனக்கு பிடிக்கலையா அனு? இல்ல என்ன பார்த்தா அறுவறுப்பா இருக்கா?”

“ஏன் இப்படி பேசுறீங்க?”

“இல்ல, இப்பலாம் என் முகத்த கூட நிமிர்ந்து பார்க்க மாட்டிகிற. நான் தாலி கட்டுனது உனக்கு பிடிக்கலையோன்னு ஒரே பயமா இருக்கு. என்னை நீ பார்க்கிற பார்வையில எப்பவும் ஒரு பாசம் தெரியும். நம்ம கிட்ட வேலை செய்றவன் தானேனு ஒரு அலட்சியம் இருக்காது. அத நம்பி தான் நான் தாலி கட்டுனேன். ஹாஸ்பிட்டலில சொன்ன மாதிரி தான், உன் மேல எனக்கு ஒரே லவ்வு. உன்னை பார்க்கிற முன்னாடியே. அத்தை உன்னை பற்றி பேசிக்கிட்டே இருப்பாங்க. இன்னமும் அம்மா கை பிடிச்சி தூங்குற பொண்ணா அப்படின்னு ஒரு ஆச்சரியம். உன் பயந்த சுபாவம் பற்றி சொன்னப்ப, உன்னை பாதுகாப்பா வச்சிக்கனும்னு ஒரு வெறி. அப்புறம் உன்னைப் பார்த்த நொடி நான் பிளாட் ஆயிட்டேன். உன்னை கண்ணுல இருந்தும் மனசுல இருந்தும் விலக்க முடியல அனும்மா. போராடி தோத்துட்டேன். அப்புறம் தான் குடுத்த வாய்ப்ப புடிச்சு தாலிய கட்டிட்டேன். அம்மாவை நேசிக்கற ஆம்புள, தன் பொண்டாட்டியை நல்லா வச்சிக்குவானாம். அதே மாதிரி அம்மா பிள்ளையா உள்ள பொண்ணும் புருஷன நல்லா வச்சிக்குவாளாம். யாருடா இப்படிலாம் சொன்னதுன்னு நினைக்கறீயா? ஹிஹி. நான் தான்! பாசம்னா என்னான்னு தெரியாத எனக்கு, காதல மட்டும் இல்லாம பாசத்தையும் நீ பரிமாறுவன்னு ஒரு நம்பிக்கை. அது நம்பிக்கையா இருக்குமா இல்ல நிராசையா போய்டுமான்னு இன்னிக்கு எனக்கு தெரியனும். சொல்லு அனும்மா”

அமைதியாக அவனை ஆழப் பார்த்தாள் அனு.

“நானும் பாடனாத்தான் பதில் வருமா?”

லேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது அனுவிடம்.

“அப்போ கேளு என் பாட்ட!

‘மச்சி மன்னாரு என் மன்சுக்குள்ள பேஜாரு
டச்சு பண்ணாரு டக்கரா நின்னு போனாரு
டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்
நோவு ஒரு நோவு புரியாம ஏறும்
தாரேன் ஒத்தமையம் பூவே”

அவன் பாடி முடித்ததும் சில்லறையைக் கொட்டிவிட்டது போல் விழுந்து விழுந்து சிரித்தாள் அனு. அவளுக்கு கண்களில் தண்ணீரே வந்துவிட்டது.

அவள் சிரிப்பதை ஆசையாக பார்த்திருந்தான் வீரா. மெல்ல கை நீட்டி அவள் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்து விட்டான் அவன்.

“நீ எப்பொழுதும் இப்படியே சிரிச்சி கிட்டே இருக்கனும் அனும்மா. அது போதும் எனக்கு”

“அப்போ உங்க கூட குடும்பம் நடத்த வேணாமா?” இடக்காக கேட்டாள் அவள்.

என்ன சொல்வது என தடுமாறினான் வீரா.

“அமைதியா இருக்கன்னு நினைச்சா, திடீர்னு வக்கணையா பேசி என்னை ஆப் பண்ணிருறடி. “ அவள் கைகளைக் கையில் எடுத்துக் கொண்டவன், அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“என்ன பற்றி உங்களுக்கு என்ன தெரியும் மாமா?”

“என்ன கூப்பிட்ட அனு?”

“மாமான்னு கூப்பிட்டேன். அப்புறம் எப்படி கூப்பிடனும்? யோ, மாமு, கஸ்மாலம்னா?” சிரித்தாள் அவள்.

“நீ கஸ்மாலம்னு கூப்பிட்டா கூட எனக்கு கணவான்னு கூப்புடற மாதிரி தான் இருக்கும் அனும்மா. நீ மாமான்னே கூப்பிடு” குதூகலித்தான் வீரா. பின்,

“நீ அன்னிக்கு ராத்திரி பேசனது எல்லாத்தையும் நான் கேட்டேன் அனும்மா. நான் உன்னை என்னிக்கும் தப்பா நினைக்க மாட்டேன். நீயே நினைச்சாலும் உன்னால தப்பு பண்ண முடியாதுடா. அவன் உன்னை ஏதாவது பண்ணி இருந்தாலும், நான் உன்னை கட்டி இருப்பேன். எனக்கு நீ தேவதை. தேவதை கிட்ட ஏது கலங்கம்? இந்த ஊரே உன்னை கலீஜா பேசினாலும், எனக்கு என் பொண்டாட்டி பத்திர மாத்து தங்கம்டா. மனசளவுல, உடல் அளவுல நீ பலம் இல்லாம இருக்கலாம். பெரும்பாலான பெண்கள் அப்படி தான் இருக்காங்க. அதுல உன் தப்பு என்னடா? இனிமே உன்னை போற்றி பாதுகாக்க நான் இருக்கேன். அதுவே உனக்கு மனபலம் தான். கண்டதையும் நினைச்சி மனச ஒளப்பிக்காதடா. இந்த மாமன நம்பு. உன் வாழ்க்கைய என் கையில கொடு. உன்னை எப்படி மாத்துறேன்னு மட்டும் பாரு”

கண்களில் கண்ணீர் குளம் கட்டியது அனுவுக்கு.

“குடுத்துட்டேன்” அழுகையின் ஊடே சொன்னாள்.

“என்னடா? “ பதறினான் வீரா.

“என் வாழ்க்கைய உன் கிட்ட குடுத்துட்டேன்டா மன்னாரு” சந்தோசமாக கத்தினாள் அனு. ஆசையாக அப்படியே அவளை அலேக்காக தூக்கி தட்டாமாலை சுற்றினான் வீரா. குலுங்கி அவள் சிரித்த சிரிப்பு கடல் காற்றோடு கலந்து காவியம் பாடியது.

இரவில் கார்த்திக், வேந்தன் வீட்டுக்கு வந்தும் தேவியைக் காணவில்லை. குட்டி போட்ட பூனை மாதிரி வேந்தன் சுற்றிக் கொண்டிருந்தான். அவளது போனும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

“எங்கடா உங்க மேடம்?”

“வருவாங்க விடு மச்சி. அவங்க என்ன கிரீன் பேபியா? மச்சி இன்னிக்கு நான் இங்கயே தங்கிக்கவா?”

கார்த்திக்கை உற்று நோக்கினான் வேந்தன். என்னமோ சரியில்லை என அவனுக்கு தேன்றியது.

“ஏன்? உனக்கு வீடு வாசல் இல்லையா?”’ கடுப்பாக கேட்டான்.

“அதெல்லாம் இருக்கு. வீட்டுல கரண்டு தான் இல்ல மச்சி. பவர் கட்.”

நம்பாத பாவனை வேந்தனிடம்.

“நம்பு மச்சி. இப்படியே சோபா ஓரமா படுத்துக்குவேன். உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. விடு விடுவென உள்ளே நுழைந்தாள் தேவி. ஹாலில் இருந்த இவர்களை கண்டு கொள்ளவே இல்லை.

“ரோஜா!” என அழைத்தான் வேந்தன்.

பதில் கொடுக்காமல் ரூமுக்கு சென்று விட்டாள். வேந்தனுக்கு கார்த்திக்கின் முன் அவமானமாக போய் விட்டது. அவனும் விடு விடுவென ரூமுக்கு செல்ல படி ஏறினான்.

“பாத்து மச்சி! சேதாரம் இல்லாம நடந்துக்க. நான் சொன்னது உனக்கு” கார்த்திக்கின் குரலில் ஆத்திரம் வந்தது வேந்தனுக்கு.

உள்ளே நுழைந்தவன்,

“எங்கடி போன இவ்வளவு நேரமா?” என கத்தினான்.

திரும்பி பார்த்த தேவியின் கண்கள் செவசெவ என சிவந்திருந்தது.

‘அய்யோ! கேப்டன் மாதிரி பாக்குறா. தெரியாம சிக்கிட்டமோ. சிக்கி சீரழிஞ்சிருவோமோ?’ வேந்தனுக்கு அவள் பார்வை வீச்சில் அள்ளுவிட்டது.

 

உயிரை வாங்குவாள்….