Uyir Vangum Rojave–EPI 4

ROSE-40d902de

அத்தியாயம் 4

காதல் கற்பூரம் மாதிரி

அந்த வாசம் நிறைய பெண்களுக்குத் தெரியறதே இல்லை !!!

(நான் இல்லைங்கலவ் டுடேவிஜய்)

 

உடல் நடுங்க, கீழே குனிந்து அவன் கால்களை  பார்த்தவள் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்தது. அவன் ரத்தத்தை தன் கையால் தொட்டவள்,

“கார்த்திக்!” என கத்தினாள்.

கீழே கண்ணீரோடு மண்டியிட்டு அமர்ந்திருந்த தேவியைப் பார்க்க வேந்தனுக்கு பதட்டமாக இருந்தது.

“மேடம், எழுந்திரிங்க ப்ளிஸ். ஒன்னும் இல்ல. சின்ன காயம் தான்” என வலியையும் பொறுத்துக் கொண்டு சொன்னான்.

அதற்குள் தேவியின் பயந்த குரலைக் கேட்டு அடித்துப் பிடித்து ஓடி வந்தான் கார்த்திக்.

அவன் பார்வை வட்டத்தில் வேந்தன் மட்டும்தான் தெரிந்தான். மண்டியிட்டு அமர்ந்திருந்த தேவி தெரியவில்லை.

“எங்கடா மேடம்? ஏன் சத்தம் போட்டாங்க? என்னடா பண்ண அவங்கள?” என பாய்ந்து வந்து வேந்தனின் சட்டையைப் பிடித்திருந்தான் கார்த்திக்.

காலணி அணிந்திருந்ததால் கண்ணாடி சில்லுகள் குத்தாமல் ஓடி வர முடிந்தது அவனால்.

கார்த்திக் திடீரென சட்டையைப் பிடிக்கவும், ஏற்கனவே வலியில் இருந்த வேந்தன் மடிந்து அப்படியே கீழே அமர்ந்தான்.

அப்பொழுதுதான் கீழே கண்ணீருடன் அமர்ந்திருந்த தேவியையும், ரத்தம் சொட்ட இருந்த தரையையும் கவனித்தான் கார்த்திக். பார்த்த உடனே என்ன நடந்திருக்கும் என அனுமானித்தவன்,

“சோரிடா மச்சான். மேடம் பதட்டமா கத்தவும் உன்னை ஓன் செகண்ட் தப்பா நினைச்சிட்டேன்” என்றான்.

‘யாரு யாரடா தப்பா நினைக்கிறது? இது அந்த கடவுளுக்கே பொறுக்காதுடா’ வலியில் வேந்தனுக்கு வார்த்தை வரவில்லை.

கர்ர்த்திக்கும் கீழே அமர்ந்து வேந்தனின் பாதங்களை ஆராய்ந்தான்.

“பாதத்துக்கு கீழே கண்ணாடி குத்தலை மச்சி. மேலே பல இடங்கள்லே பதம் பார்த்துருக்கு. அப்படியே புடிச்சு தூக்குறேன். கார் வரைக்கும் என் தோளை புடிச்சுகிட்டு நடந்துரு. ஹாஸ்பிட்டல் போயிரலாம்” என்றவன்,

தேவியைப் பார்த்து,

“மேடம், எழுந்திரிங்க. இதுக்கு போயா அழுவுறீங்க. அழாதீங்க. பச்சா மேட்டரு இது. பெருசா ஒன்னும் இல்லை. நான் இவரை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன். உங்களுக்கு கோல் பண்ணி இன்னொரு கார் வர சொல்லுறேன். வீட்டுக்கு போங்க. அழுது, அழுது களைப்பா தெரியறீங்க” என்றான்.

‘டேய்! கால்ல அடி பட்டு , ரத்தம் வெளிய போய் நான் தான்டா களைப்பா இருக்கேன். அழுதவங்க களைச்சி போய்ட்டாங்கன்னு சொல்லுற பார்த்தியா, எங்கயோ போய்ட்டடா! விட்டா ‘உன் கண்ணீல் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ன்னு பாடுவான் போல.ஷப்பா ’

“கார்த்திக்! மலர தூக்கு. நானும் ஹாஸ்பிட்டலுக்கு வரேன்” அழுகை குறைந்து தேறியிருந்தாள்.

“வேண்டாம், நான்” பார்த்துக்குவேன் என சொல்ல வந்தவனை ஒரு முறைப்பால் அடக்கினாள்.

வேந்தனை தூக்க முடியாமல் தூக்கி நிறுத்தினான் கார்த்திக்.

‘என்ன கணம்டா. இவன் தங்கச்சியும் இப்படிதான் இருப்பாளோ? இனிமே ஜிம்முல தண்டால், பஸ்கிலாம் சேர்த்து எடுக்கணும்’ என எண்ணிக் கொண்டான்.

கார்த்திக்கின் தோள் மேல் கையைப் போட்டு விந்தி விந்தி நடந்த வேந்தன் திடீரென தடுமாறினான். சட்டென்று மறுபக்கம் வந்து அவனைத் தாங்கிக் கொண்டாள் தேவி. இரு ஆண்களுமே அதிர்ச்சியில் வாயைப் பிளந்தனர். வேந்தனின் இன்னொரு கையைப் பிடித்து தன் தோள்களில் போட்டுக் கொண்டாள் அவள். தீ சுட்டாற் போல் பட்டேன கையை எடுத்துக் கொண்டான் அவன்.

“கை போடு மலர்!” குரலில் தெரிந்த அதிகாரத்தில் மீண்டும் கையை அவள் தோள் மேல் போட்டுக் கொண்டான் வேந்தன். இந்தக் காட்சியைக் கண்ட கார்த்திக்குக்கு தான், கண்கள் இரண்டும் வெளி வந்துவிடும் போல் தெறித்தது.

தனது பாரத்தை அவள் பக்கம் அழுத்தாமல் கார்த்திக்கை சார்ந்தே நடந்து வந்தான் வேந்தன். பில்டிங் கீழே வரைக்கும் எப்படியோ வந்து விட்டார்கள். சுவற்றில் சாய்த்து வேந்தனை நிறுத்திய கார்த்திக்,

“இங்கயே இருங்க. காரை கொண்டு வரேன்” என விரைந்தான்.

வேந்தனின் கை இன்னும் தேவியின் தோள் மேலேயே இருந்தது. அவளைப் பார்க்காமல் கார்த்திக் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

“மலர்” அவள் தான் அழைத்தாள்.

விழிகளை திருப்பி அவளைப் பார்த்தான்.

“ரொம்ப வலிக்குதா?” குரலில் அக்கறையை மீறி வேறு ஏதோ இருப்பது போல் அவனுக்கு தோன்றியது.

இல்லை என்பது போல் தலையை அசைத்தான். பிறகு தான் கவனித்தான் வெளீரென இருந்த அவள் முகத்தில் அப்பியிருந்த அவன் ரத்தத்தை. அவன் காலில் இருந்த ரத்தத்தை தொட்டவள், அப்படியே முடியை ஒதுக்கும் போது முகமெல்லாம் ஒட்டியிருந்தாள். பேன்ட் பாக்கேட்டில் இருந்து தனது கைக்குட்டையை எடுத்து மென்மையாக அவள் முகத்தை துடைத்தவன் கைகள், அவள் நெற்றியில் பொட்டு போல் ஒட்டி இருந்த தன் ரத்தத்தை பார்த்ததும் நடுங்க தொடங்கியது. வெள்ளை நெற்றியில் குங்குமம் போல் இருந்த அதை பார்த்தவனுக்கு சுனாமி அலைகள் கரம் கொண்டு தன்னை தழுவுவது போல் ஒரு மாயை ஏற்பட்டது. அவன் கை நடுக்கத்தை கண்டவள் இதழ்களில் ஒரு மெல்லிய சிரிப்பு.

“மை மலர்” அவள் உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.

காரை அவர்கள் அருகே நிறுத்திவிட்டு, இறங்கி வந்தான் கார்த்திக். வேந்தனை மெல்ல நடத்தி கார் பின் சீட்டில் உட்கார வைத்தனர் இருவரும். ரத்தம் நிற்காமல் வெளியேறி கொண்டிருந்தது. கண்ணாடி சில்லுகள் ஏறியிருப்பதால் துணி வைத்தும் கட்ட முடியாத நிலைமை. முன் பக்க கதவை தேவிக்கு திறந்து விட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டான் கார்த்திக். இவளோ அந்த கதவை சாத்தி விட்டு வேந்தனின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

கார்த்திக் பேய் முழி முழித்தான் என்றால், வேந்தன் தர்மசங்கடத்தில் நெளிந்தான்.

“சீக்கிரமா போ கார்த்திக். ப்ளட் லோஸ் ஹெவியா இருக்கு” என படபடத்தாள் அவள்.

ஹாஸ்பிடல் போகும் வழியில் யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் தேவி நன்றாக திரும்பி உட்கார்ந்து வைத்த கண் எடுக்காமல் வேந்தனையே பார்த்துக் கொண்டு வந்தாள்.

கார்த்திக் ரியர்வியூ கண்ணாடி வழியே தேவியைக் கவனித்துக் கொண்டு தான் வந்தான்.

‘மேடம் எதுக்கு இவனை கண்ணாலயே சாப்பிட்டுகிட்டு இருக்காங்க? அந்த அளவுக்கு இவன் வொர்த்து இல்லையே. நான் வெளிய போன சைக்கிள் கேப்ல என்ன நடந்துருக்கும்? ‘ இந்த மாதிரி அவளை பார்த்திராத கார்த்திக்குக்கு தலை சுற்றியது.

வேந்தனோ,

‘என்னடா எனக்கு வந்த சோதனை. இவங்க ஏன் நாலு கண்ணால என்னை உத்து உத்து பார்க்குறாங்க? லைட் போட்ட மாதிரி முகம் வேற ஜொலிக்குது. ஏற்கனவே டால் அடிக்கும், இப்ப கண்ணே கூசுதே. கண்ணை மூடி தெரியாத மாதிரி படுத்துக்குவோம். அப்படியாவது பார்க்கறதா நிறுத்துவாங்களானு பார்ப்போம்’ கண்ணை இருக மூடிக் கொண்டான்.

வலியில் தான் இப்படி இருக்கிறான் என நினைத்த தேவியோ அவனை நெருங்கி அமர்ந்து, அவன் கைகளை தன் கைகளுக்குள் எடுத்து ஆறுதலாக பிடித்துக் கொண்டாள்.

பட்டென கண்களை திறந்த வேந்தன் அவளையும், கோர்த்திருந்த கைகளையும் கலவரமாக பார்த்தான். குப்பிட் சும்மா விடுமா? அவர்கள் மேல் அம்பை எய்து, கரேக்டாக ரேடியோவில் சிட்டுவேஷன் சோங்கை போட்டு விட்டது.

‘இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
 முதல்முறை காதல் அழைக்குதோ
 பூஜ்ஜியம் ஒன்றோடு
 பூவாசம் இன்றோடு
 விண்மீன்கள் விண்ணோடு
 மின்னல்கள் கண்ணோடு
 கூகுள்-கள் காணாத
 தேடல்கள் என்னோடு ‘

“பயப்படாதீங்க மலர். பெஸ்ட் டாக்டர் கிட்ட கூட்டி போறேன். நல்லா போயிரும்”

‘நான் பயப்படறதே உன்னைப் பார்த்து தான்மா. பொசுக்குன்னு கையப் பிடிக்கிற, ஒரு மார்க்கமா பார்க்குற, புன்னகை சிந்துற, கண்ணீர் விடற. ஒரே நாள்ல இத்தனை ரியாக்சன் குடுத்த தைரியமா இருக்குற எந்த ஆம்பிளைக்கும் டப்பா டான்ஸ் ஆடிரும்மா.’ மெல்ல கைகளை உருவிக் கொண்டான் வேந்தன்.

பின்னால் நடந்த இந்த காட்சியைப் பார்த்த கார்த்திக்கின் முகம் முதலில் கோபத்துக்கு போய் பிறகு மெல்ல புன்னகைக்கு மாறியது.

ஹாஸ்பிட்டல் வந்தவுடன், முதலில் எமர்ஜென்சி அறைக்கு அழைத்து சென்றார்கள். செக் செய்த டாக்டர், கண்ணாடி துண்டுகளை அகற்ற சிறிய சர்ஜரி செய்ய வேண்டும் என சொல்லிவிட்டார். வேந்தனிடம் சைன் வாங்கியவர்கள், அவனை ஸ்ட்ரெச்சரில் ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றனர். உள்ளே போவதற்கு முன், போனை கார்த்திக்கிடம் கொடுத்து அம்மாவிடம் சொல்லிவிடுமாறு கூறி சென்றான்.

அவன் உள்ளே செல்லும் வரை அவனையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தேவி. அவளது கவலை முகத்தைக் காண சகியாது உள்ளே செல்லும்முன் பயப்படாதீங்க எனபது போல் ஒரு தலை அசைப்பை கொடுத்தான் வேந்தன். மலர்ந்து சிரித்தவள், நடந்து சென்று காரிடாரில் இருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

கையில் இருந்த தொலைபேசியை அப்படியே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் கார்த்திக். பின் ஒரு பெருமூச்சுடன், இந்து டார்லிங் என பதிவிட்டிருந்த எண்ணுக்கு அழைத்தான். சில ரிங்குகளில் போன் அட்டேன்ட் செய்யப்பட்டது.

“ஹலோ”

சற்று நேரம் இவனிடம் இருந்து பதிலே இல்லை. அதற்குள் மறுமுனையில்,

“சொல்லுங்க அண்ணா” என்றாள் லாவண்யா.

மணியைப் பார்த்தான் கார்த்திக்.

‘காலேஜ் போகாம வீட்டுல என்ன செய்யுறா இந்த நேரத்துல’

அதற்குள் மறுமுனையில் பல அண்ணாக்கள் வந்து விட்டது. சுதாகரித்தவன்,

“கார்த்திக் பேசுறேன்”

இப்பொழுது அங்கே அவளிடத்தில் மௌனம்.

“ஹலோ! கேட்குதா லட்டு?”

“லட்டு புட்டுன்னே கண்ணை நோண்டிருவேன். “

கார்த்திக்கின் உதட்டில் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது.

‘நீ இன்னும் மாறவே இல்லடி என் பட்டுக் குட்டி’

“நல்லா இருக்கியா மை லாவ்?”

“என் பேரு லாவண்யா. ஒழுங்க அப்படியே கூப்புடு. இவரு பெரிய வெள்ளைக்கார துரை, சுருக்கி கூப்பிடுறாராம். சகிக்கல”

“லாவ்னுதானே கூப்பிட்டேன். லவ்னா கூப்பிட்டேன்? எதுக்கு இப்ப எகிறுறே?”

“லவ்னு வேற கூப்புடுவியா? எங்க, கூப்பிட்டுதான் பாரேன். சிலிப்பிகிட்டு இருக்குற உன் குடுமிய என் ரெண்டு கையாலயே பிச்சு போட்டுறுவேன். யாருகிட்ட!”

“செய் செய். அப்படியாச்சும் உன் கை என் மேல படுதான்னு பார்க்கிறேன்”

“நீ அடங்கவே மாட்டடா. எப்படியோ போய் தொலை. இப்ப எதுக்கு எங்க அண்ணன் போன்ல இருந்து கோல் பண்ணுற?”

“ஓ அதுவா? உங்கொண்ணனை இங்க ஹாஸ்பிட்டல்லே அட்மிட் பண்ணி இருக்கோம். அதை சொல்லதான்”

“என்னது!!! அட்மிட்டா? என்ன ஆச்சு அவங்களுக்கு?” கண்களில் நீர் வழிய தேம்ப ஆரம்பித்திருந்தாள் அவள்.

“ஒன்னும் பெருசா இல்லைடா லட்டு. நீ அழாதே. என்னால தாங்க முடியாது. என் பட்டு செல்லமில்ல அழாதீங்க. லேசா காலுல கண்ணாடி விழுந்துருச்சி. சின்ன சர்ஜரி தான். அம்மாவ கூட்டிட்டு நீ வா.”

அதற்குள் தேறிக் கொண்டவள்,

“ஏன்டா ட்ரீஹேட் (மரமண்டை)! போன் அடிச்சவுடனே இதை சொல்ல மாட்டே? அதுக்குள்ள என்ன கொஞ்சல் வேண்டி இருக்கு உனக்கு. எந்த ஹாஸ்பிட்டல்னு லோகேசன் அனுப்பு. இப்ப வரோம். கேப் கிடைச்சா இவரு பெரிய ரேமோவா ஆயிருவாரு. மூஞ்சியும் முகரையும்” திட்டிக் கொண்டே போனை வைத்தாள்.

போனை வெறித்துப் பார்த்தவன்,

‘ரெமோவா இருக்கற என்னை அந்நியனா மாத்திடாதடி, என் பொண்டாட்டி’ மனதில் தான் கவுன்டர் கொடுத்தான். நேரில் தான் கிழித்து தொங்கவிட்டு விடுவாளே.

அவனும் தேவியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான். அரை மணி நேரத்தில் இந்துவும் அவர் இரு பெண்களும் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.

“ஏன்பா கார்த்திக், எங்கப்பா வேந்தன்? சர்ஜரி அப்படி இப்படின்னாலே இவ.” பதட்டமாக கேட்டார் இந்து.

“மா, இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சுரும். பயப்படாதீங்க, டாக்டர் பெருசா ஒன்னும் இல்லைனு சொல்லிட்டாரு” என அவரை தேற்றினான் கார்த்திக்.

நிமிர்ந்து இந்துவை மட்டும் பார்த்து ஒரு சின்ன தலை அசைப்பை கொடுத்து விட்டு மீண்டும் கீழே குனிந்து கொண்டாள் தேவி. அவனின் தங்கைகளை ஏறேடுத்தும் பார்க்கவில்லை.

அதை கவனித்த லாவண்யாவுக்கு சுறுசுறுவென கோபம் ஏறியது.

‘ஏன் எங்கள பார்த்து தலை அசைச்சா அவங்க சொத்து குறைஞ்சிருமா? வெள்ளை பணியாரத்துக்கு ஏத்தம்தான்’ மனதிலே வறுத்தெடுத்தாள்.

கார்த்திக்கோ அனுவிடம் மட்டும் நலம் விசாரித்தவன், லாவண்யா அங்கிருப்பதையே கவனிக்காதது போல் தேவியின் அருகில் சென்று நின்று கொண்டான்.

“மேடம், நீங்க இன்னும் லன்ச் கூட சாப்பிடல. அதான் வேந்தனோட குடும்பம் வந்துட்டாங்களே. நீங்க வீட்டுக்கு போங்க” என வற்புறுத்தினான்.

“மலர் வரட்டும்” குரல் அழுத்தமாக வெளிவந்தது.

‘மேடம், மேடம்னு பம்முறத பாரு. நான் ஒருத்தி இங்க நிக்கறேன், ஐயாவுக்கு கண்ணு தெரியல.’ இத்தனை வருடங்கள் கழித்து அவனை இப்பொழுதுதான் நேரில் பார்க்கிறாள். அன்று டிவியில், மண்டையும் கொண்டையும் மட்டும்தான் தெரிந்தது.

‘அப்படியே டோட்டலா மாறிட்டடா நீ. சோடா புட்டி கண்ணாடிய காணோம். முருங்க மரத்துக்கு தோல் போர்த்தி விட்ட மாதிரி இருந்த உடம்பை காணோம். எண்ணெய் தேய்ச்சு படிய வாறுன முடிய காணோம். இப்படி இன்னும் எத்தனை காணோம்னு தெரியலையே.’ ஆராய்ச்சியோடு அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

மகளின் அருகே வந்த இந்து,

“லட்டு, அது இத்தாலி கட்டில்தானே? அவங்க இங்க என்ன பண்ணுறாங்க?” என ரகசியமாக கேட்டார்.

“உங்க மகனை மாப்பிள்ளை பார்க்க வந்திருப்பாங்க. போம்மா! நானும் உன் கூட தானே வந்தேன். எனக்கு எப்படி தெரியும்?” சலித்துக் கொண்டாள் அவள்.

இன்னும் அரை மணி நேரம் கடந்து, வேந்தனை சர்ஜரி ரூமிலிருந்து நோர்மல் வார்டுக்கு மாற்ற வெளியே கொண்டு வந்தார்கள். பாய்ந்து சென்ற தேவி, அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்.

“மலர், ஆர் யூ ஓகே?” கண்களில் இரு சொட்டு கண்ணீர் வழிந்தது.

அதைப் பார்த்த இந்து ஒரு கையில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, விழாமல் இருப்பதற்காக மறு கையால் மகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

‘போச்சு போ! இந்த வயசான காலத்துல என்னை இங்கிலீஸ் கீளாசுல சேர வச்சிருவாங்க போல இருக்கே. எனக்கு இங்கிலீஸுல தெரிஞ்ச மூனு வார்த்தை யெஸ், நோ, ஷட் அப் பண்ணுங்க தானே’ மகளையும் இழுத்துக் கொண்டு நாற்காலியில் சரிந்து அமர்ந்தார் இந்து.

 

(உயிரை வாங்குவாள்..)