Uyir Vangum Rojave–EPI 8

ROSE-7b396f18

Uyir Vangum Rojave–EPI 8

அத்தியாயம் 8

இன்னிக்கு ஒரு பொண்ணுக்காக அம்மா அப்பா எல்லாரயும் விட்டுட்டு வருவ

நாளைக்கு இன்னொரு பொண்ணுக்காக என்ன விடமாட்டன்னு என்ன நிச்சயம்?

(ஷாலினிஅலைபாயுதே)

 

ஹாஸ்பிட்டல் கட்டிலில் சாய்வாக அமர்ந்து பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்தான் வேந்தன். இன்றோடு இங்கே தங்கி மூன்று நாட்கள் ஆகி இருந்தன. இந்துவோ அவன் பக்கத்தில் அமர்ந்து அவனுக்கு வந்திருந்த கொன்டினென்டல் ப்ரெக்பஸ்டை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார்.

“வேந்தா, இந்த ரொட்டி எல்லாம் எப்படிடா வட்ட வட்டமா வெட்டி இவ்வளவு அழகா செஞ்சிருக்காங்க? சாப்பிடவே மனசு வரலடா. இது என்னடா பழம் இது, ஆரஞ்சி கலருல இருக்கு. செம்ம ருசிடா”

“அது பேரு அப்ரிகோட் மா”

“என்னா சொல்லு வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்டா. பழத்துக்கு கூட கோட்டு சூட்டு மாட்டுறான் பார்த்தியா. ஆப்புசம்டா”

“அம்மா அது ஆவ்சம், ஆப்புசம் இல்ல. இங்கிலீஸ் தான் தகிங்கனத்தோம் போடுதுல. அப்புறம் எதுக்கு?”

“போடா, நாமளும் நாலு வார்த்தை பீட்டர் விடுவோம்னு பார்த்தா உனக்கு பொறுக்காதே. ஏன் இங்கிலீச உனக்கும் உன் தங்கச்சிகளுக்கும் மட்டும் தான் பட்டா போட்டு குடுத்துருக்காங்களா? சிலிர்த்துக்கிறியே. நீ பெரிய இவன்னா, நான் கேக்குற கேள்விக்கு கோகுல கேக்காம பதில் சொல்லுடா பார்ப்போம்”

“கோகுலா? அது யாருமா எனக்கு தெரியாத நம்ம சொந்தம்?”

“அதான்டா லட்டு போனுல எப்பவும் கேள்வி கேட்டுக்கிட்டு இருப்பாளே, கோகுலு”

“ஓ!!!! கூகுளா?” மனம் விட்டு சிரித்தான் வேந்தன். இந்து முறைத்தபடி பார்க்கவும், சிரிப்பை அடக்கியவன் கேள்வியை கேட்கும்படி சைகை செய்தான்.

“கோட்டு சூட்டுன்னு சொல்லுறமே, அந்த கோட்டுக்கு தமிழ் வார்த்தை என்னன்னு சொல்லு பார்ப்போம்? பதில் தெரியலைன்னா இன்னிக்கு உனக்கு குடுக்கற மத்தியான சாப்பாட்டையும் நான் தான் சாப்புடுவேன். உன் தங்காச்சி செஞ்சு எடுத்துட்டு வர ரச சாதத்தை நீ தான் சாப்பிடனும்? ஓகேவா?”

‘என் சாப்பாட்டை ஆட்டைய போடுறதுக்கு இந்தம்மா என்ன ஒரு பிளான் போடுது பாரேன். கோட்டு கோட்டுன்னு தானே சொல்லுவோம். தமிழ் வார்த்தை வேற இருக்கா அதுக்கு?’

“எனக்கு தெரியலைம்மா. நீங்களே சொல்லுங்க”

“அதான், தனக்கு தான் எல்லாம் தெரியும்னு ஆட கூடாது. கோட்டுக்கு தமிழ் பேரு குப்பாயம்”

“என்னாது? குப்பாயமா? கதை விடாத மா.”

“இப்ப போன தட்டி பாரு, தெரியும். நாங்களாம் யாரு? தமிழ் களஞ்சியம்டா” என சேலை ரவிக்கையை காலர் போல் தூக்கி விட்டுக் கொண்டார் இந்து.

அப்பொழுது கதவு தட்டப்படும் ஓசையில் இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு கதவை நோக்கினர். உள்ளே ராகவனும் கார்த்திக்கும் ஒன்றாக நுழைந்தனர்.

“வாங்க சார், வா கார்த்திக்” என வரவேற்றான் வேந்தன்.

“அம்மா இவரு என்னோட முதலாளி ராகவன் சார். சார் இவங்க எங்க அம்மா” என அறிமுகப் படுத்தி வைத்தான்.

இந்துவுக்கு வணக்கம் சொன்னவர் வேந்தனின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். கார்த்திக் இந்துவை பார்த்து புன்னகைத்துவிட்டு ராகவனின் அருகில் நின்று கொண்டான்.

“எப்படிப்பா இருக்க? இன்னும் வலி இருக்கா?” என கேட்டார் அவர்.

“இப்ப பரவாயில்ல சார். இன்னும் மூனு நாளுல டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்க”

“நல்லதுப்பா. உன் கிட்ட ஒரு விஷயம் பேசலாம்னு தான் வந்தேன். அம்மாவும் கூட இருக்காங்க. நல்லதா போச்சு” என ஆரம்பித்தார்.

வேந்தன் அவர் முகத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். எப்பொழுதும் அவர் முகத்தில் காணும் மலர்ச்சி மிஸ்ஸிங். அவருக்கு கீழ் வேலை பார்த்தவன் தானே. அவரைப் பற்றி ஓரளவு தெரியும்.

“சொல்லுங்க சார்”

“அது வந்து வேந்தா, என் மகளுக்கு உன்னை பிடிச்சிருக்காம். உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறா” அவர் போடி லேங்குவேஜை கவனித்துக் கொண்டு தான் இருந்தான் வேந்தன். அவர் முகத்திலேயே தெரிந்தது இந்த விஷயத்தில் அவருக்கு விருப்பமில்லை என்று. கட்டாயத்தின் பேரில் தான் பேசுகிறார் என நன்றாக புரிந்தது வேந்தனுக்கு.

‘இவ்வளவு கஸ்டப்பட்டு எதுக்கு என்னை தேடி வரணும்? ஏழையா இருந்தா நாங்க கேவலமானவங்களா? இல்லை இவரு கீழ கை கட்டி வேலை செய்யுறம்னு இளக்காரமா? என்னமோ இதான் சாக்குன்னு அப்படியே இவங்க சொத்தை வளைச்சி பிடிச்சுருவன்னு பயப்படுறாரா?’ நினைக்கவே இவனுக்கு அருவருப்பாக இருந்தது. முகத்தில் எதையும் காட்டாது அவர் பேசுவதை கேட்டிருந்தான். இந்து தான் திறந்த வாய் மூடாது அதிர்ச்சியில் உறைந்திருந்தார்.

“என் மக கேட்டு எதையும் என்னால மறுக்க முடியாது. அதோட உன்னை தவிர என் கிட்ட அவ வேற எதையும் இது வரைக்கும் கேட்டதும் இல்ல. நீ என்னப்பா சொல்லுற?” வேண்டாம் என சொல்லிவிட மாட்டானா என்ற எதிர்ப்பார்ப்பு அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அவரது சொத்து எல்லாம் தேவியின் பெயரில் இருந்தது. மகள் இப்படி ஒரு அன்னாடங்காச்சியை கல்யாணம் செய்து அவனுக்கு தன் சொத்து போய் சேர்வதா எனும் மனப்புழுக்கத்தில் இருந்தார். அவர் கொள்கையே பணம் பணத்தோடு சேர வேண்டும் என்பதுதான். சொத்தின் அதிபதியான மகளை எதிர்க்கவும் துணிவில்லை அவருக்கு.

“சார், மேடத்த அப்படி ஒரு எண்ணத்தோட நான் பார்த்ததே இல்ல. இனி பார்க்கவும் மாட்டேன். இது நடைமுறைக்கு சரி வராது. என்னை மன்னிச்சுருங்க” என மறுத்துவிட்டான் வேந்தன்.

“பூவோட சேர்ந்த நாரும் மணக்கும்கிற மாதிரி, என் மகள கட்டிகிட்டா உன் பொருளாதாரம் இன்னும் உயரும் வேந்தா. கொஞ்சம் யோசிச்சு பதில் சொல்லு” என அவன் தன்மானத்தில் அடித்தார் ராகவன். வேலை விஷயத்தில் அவன் கெட்டி தான் என்றாலும் தன் மருமகன் ஆக இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதே அவரின் மறைமுக தாக்குதலுக்கு காரணம்.

“சார் வாழை நாரை முகர்ந்து பார்த்திருக்கீங்களா? அதுக்கு தனி வாசம் இருக்கும். அது போல பூவுக்கும் தனி வாசம் இருக்கு. ரெண்டும் அதோட தனித்துவத்தோட இருந்துட்டு போகட்டுமே. எதுக்கு இணைக்கனும்? அப்புறம் என் வாசம் உனக்கு வந்துருச்சு, உன் வாசம் எனக்கு வந்துருச்சுன்னு எதுக்கு பஞ்சாயத்து வைக்கனும்?” தன் மறுப்பை சூசகமாக சொன்னான் வேந்தன்.

இவர்கள் பேச்சை கேட்ட கார்த்திக் தான் தலை சுற்றிப் போனான்.

‘இங்க என்னடா நடக்குது? இவரு சம்பந்தம் பேச வந்தாரா? இல்ல பூ வாங்க வந்தாரா? இவங்க ரெண்டு பேருக்கும் எதுல ஒத்துப் போகுதோ இல்லையோ, இப்படி பூடகமா பேசுறதுல ஒத்துப் போகுது. கிரகம், என்னை இன்னிக்கு இவங்க கிட்ட கோர்த்து விட்டுருக்கு’

“கடைசியா உன் பதில் என்னப்பா?”

“முதல்ல இருந்தே என் பதில் முடியாதுங்கறது தான் சார்”

தாடையை தடவி கொண்டே அவனை ஏறிட்டுப் பார்த்தார் ராகவன். அவரது பார்வையை சளைக்காமல் தாங்கி நின்றான் வேந்தன்.

“சரிப்பா. அப்ப நான் கிளம்புறேன். உடம்ப பார்துக்க” என எழுந்தார் அவர். கை கூப்பி அவரை அனுப்பி வைத்தான் வேந்தன்.

பின் தங்கிய கார்த்திக்,

“என்ன மச்சி, வலிய வந்த சீதேவிய கெட் அவுட்டுன்னு சொல்லிட்ட? அம்மா நீங்களாச்சும் அவனுக்கு எடுத்து சொல்லக்கூடாதா?”

“கார்த்திக், பிள்ளைங்க கல்யாண விஷயத்துல நான் தலையிட மாட்டேன்யா. வச்சி வாழ போறவங்க அவங்க. தனக்கு எந்த துணை சரி வரும்னு அவங்களுக்கு தெரியாதா?”

கார்த்திக்கின் முகத்தில் பல்ப் எரிந்தது.

“பொம்பள பிள்ளைகளுக்கும் இதே கொள்கை தானாம்மா?”

“அதெல்லாம் கிடையாது. நான் பார்த்து ஓகே பண்ணா தான், நம்ப தங்கச்சிகளுக்கு கல்யாணம்” என நடுவில் புகுந்தான் வேந்தன். இந்து பக்கத்தில் இருக்கவும் வாயில் வந்த கெட்ட வார்த்தையை அடக்கிக் கொண்டான் கார்த்திக்.

“டேய், கல்யாணம் வேண்டாம்னா உன்னை விட்டுருவாங்களா? நல்லா உடம்பை தேத்திகிட்டு ரெடியா இரு மாப்பிள்ளை. சீக்கிரம் மேடம் வந்து உன் கழுத்துல தாலிய கட்டி இழுத்துக் கிட்டு போவாங்க.” என வேந்தனை கடுப்பேற்றியவன், இந்துவிடம்,

“நான் போய்ட்டு வரேன்மா” என விடைப்பெற்றான். வெளியே வந்தவன் இது வரை ஓன்னில் இருந்த போனை வெளியே எடுத்து,

“மேடம், எல்லாம் கிளியரா கேட்டுச்சா? இப்ப போனை அடைச்சிருவா?” என கேட்கும் போதே தேவி அங்கெ டிஸ்கனேக்ட் செய்திருந்தாள்.

‘என் கிட்டயே கேம் ஆடி பார்க்கறீங்களா மிஸ்டர் ராகவன். உனக்கும் உன் மருமகனுக்கும் சேர்த்து வைக்கிறேன் ஆப்பு. நீங்க ரெண்டு பேரும் விளையாடி பார்க்க நான் என்ன , கார்த்திக் அடிக்கடி யூஸ் பண்ணுவானே அந்த வோர்ட் என்ன?ஹ்ம்ம் டொமெட்டோ தொக்கு. யா யா, நான் என்ன டொமெட்டோ தொக்கா? நோ!!! நான் டொர்னெடோ(tornado). உன் கிட்ட மட்டும் என் பாச முகத்தைக் காட்டனும்னு நினைச்சேன் மலர், ஆனா நீயும் என் ரோச முகத்தைத் தான் பார்க்க விரும்பற. இதுக்கு மேல உன் வாழ்க்கையில நடக்கப் போகும் இன்னலுக்கு எல்லாம் இந்த மின்னல் தான் காரணமா இருப்பேன்.’ அவள் கோபத்தில் தூக்கி அடித்ததில் ஆபிஸ் ரூமில் இருந்த ப்ளாவர் வாஸ் சுவற்றில் மோதி கீழே விழுந்து நொருங்கியது.

 

அவர்கள் போனவுடன் மகனைப் பார்த்து இந்து,

“பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே

என் சின்ன ராசா

உன் தோளுக்காக தான் இந்த மாலை ஏங்குது

கல்யாணம் கச்சேரி எப்போது?” என பாடினார்.

மெல்ல புன்னகைத்தவன்,

“அம்மா, இப்பத்தான் சரியான சிட்டுவேஷன் சோங் பாடியிருக்கீங்க.” என்றான்.

“வேந்தா, நான் கேட்க கூடாது தான். இருந்தாலும் மனசு கேக்கல. ஏன்பா மேடத்தை வேணாம்னு சொல்லிட்ட? அவங்க என்ன ஒரு அழகு. சரஸ்வதியோட சேர்ந்து லெட்சுமியும் அவங்க கிட்ட குடியிருக்கா. அப்புறம் ஏன்பா?”

“இப்ப நீ சொன்ன வாக்கியத்தையே திரும்ப, அவங்க சொன்ன இடத்துல அவ போட்டு சொல்லிப்பாருமா”

“அதெப்படிப்பா மரியாதை இல்லாம அப்படி சொல்ல முடியும்?”

“அதுக்குத்தான்மா வேண்டாம்னு சொல்லுறேன். அவங்க இருக்கற உயரத்துக்கு நாம மரியாதையா மேடம்னு தான் கூப்பிட முடியும். ஆசையா கூட, வாடி போடின்னு கூப்பிட முடியாதும்மா. பணம், வசதி எல்லாம் ஒரு ஆம்பிளை சொந்தமா சம்பாதிக்கனும். பொண்டாட்டி கொண்டு வருவான்னு எதிர்பார்க்கக்கூடாது. அப்படி எதிர்பாக்கிறவன் ஒரு கேவலமான விஷ ஜந்து. அப்படி நீ என்னை வளர்க்கலம்மா. அதோட உங்கண்ணன் படற பாட்டை பார்த்தும் நான் எப்படி மா அந்த மாதிரி குழியில விழுவேன்?”

இந்துவின் அண்ணன் சிதம்பரம் பணக்கார இடத்தில் தான் திருமணம் செய்திருந்தார். அவர் மனைவி தாமரைக்கு ஜாதகம் சரியில்லாமல் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே போனதால், வேறு வழியில்லாமல் வசதி குறை இருந்தாலும் பார்க்க நன்றாக இருந்த சிதம்பரத்தை கட்டி வைத்தார்கள். மனைவி நில் என்றால் நின்று உட்காரு என்றால் உட்கார்ந்து, இருக்கும் இடம் தெரியாமல் தான் இன்னும் வாழ்கிறார். அவர் செய்த ஒரே ஒரு நல்ல காரியம் கணவன் இழந்த தங்கையை அரவணைத்துக் கொண்டது தான். ஆனாலும் மனைவியின் முன் கண்ணால் கூட அவரால் பாசத்தை வெளிப்படுத்த முடியாது. ஆடி தீர்த்து விடுவார் தாமரை.

மனைவி தன் தங்கையை வேலைக்காரியை விட கேவலமாக நடத்துவதைப் பார்த்தும் ஒன்றும் செய்யமுடியாமல் மறுகுவார். தாமரை வீட்டிலில்லாத சமயங்களில் மட்டும் சரக்கடித்துவிட்டு வந்து தங்கையை கட்டிக் கொண்டு கண்ணீர் சிந்துவார்.

கணவர் இறந்த போது இந்துவுக்கு முப்பது வயது தான் இருக்கும். சின்னஞ்சிறு பிள்ளைகளை வைத்துக் கொண்டு தவித்தவரை இவர் தான் மனைவியின் காலில் விழாத குறையாக கெஞ்சி வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்துவிற்கு இருந்த ஒரே சொத்தான வீட்டை விற்று பாதியை பிள்ளைகள் படிப்பு செலவுக்கும் மீதியை இவர்கள் தங்கும் செலவுக்காக தாமரையிடம் கொடுத்தார் இந்து. பணத்தையும் கொடுத்து விட்டு சம்பளம் இல்லாத வேலைக்காரியாகவும் மாறிப்போனார் அவர். முதலில் வேந்தனை மட்டும் தான் ஹாஸ்டலில் விட்டிருந்தார். லாவண்யா அத்தையிடம் எதிர்த்து வாயடிக்க ஆரம்பிக்கவும், இன்னொரு பிரளயம் வேண்டாமென்று அவளையும் அழுது கொண்டே ஹாஸ்டலில் சேர்த்தார். அனுவை மட்டும் தன்னுடனே இருத்திக் கெண்டார். அவள் பிறந்ததிலிருந்தே கொஞ்சம் நோஞ்சான் தான். ஊருக்குள் வரும் எல்லா வியாதியும் இவளுக்கு வந்து ஹலோ சொல்லிவிட்டு தான் போகும். அதனாலேயே கூடவே வைத்துக் கவனித்துக் கொண்டார். அதுவே அவர்களுக்கு வினையாகவும் ஆகிப்போனது.

சிதம்பரத்தின் மகன் மதன் வெளிநாட்டில் படித்த வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை ஓடியது. அவன் திரும்பி வந்து , நான் மதன் இல்லை மன்மதன் என்பது போல் அனுவிடம் நடந்து கொள்ளவும் தான் பூகம்பமே வெடித்தது. அனு, லாவண்யா போல் உலக அழகி லெவலில் இல்லாவிட்டாலும் உள்ளூர் அழகி லெவலில் இருந்தாள். அமைதியான , அடக்கமான அவளது சுபாவமே மற்றவர்களை கவர்ந்து விடும். அதில் கவரப்பட்ட மதன், காதலில் விழுந்தேன் என பிதற்றிக் கொண்டு, குளித்துவிட்டு தங்க சிலையென வந்த அனுவைக் கட்டிப் பிடித்து விட்டான். அனு போட்ட கூச்சலில் வீடே ரணகளமாகி விட்டது. படித்து முடித்து மென்சனில் தங்கி வேலைத் தேடிக் கொண்டிருந்த வேந்தன் வீட்டுக்கு வந்து மாமன் மகனை அடிப்பின்னி எடுத்து விட்டான்.

தாமரை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், அனுதான் அவனை மயக்கி இப்படி செய்யுமளவுக்கு தூண்டி விட்டாள் என அவள் கூந்தலை பிடித்துப் அடிக்க வீடே போர்க்களமாகி இருந்தது. கடைசியில் இவர்களின் துணிமணி எல்லாம் தூக்கி வெளியே எறியப்பட்டு நடு ராத்திரியில் நடு வீதியில் நின்றார்கள். சிதம்பரத்தினால் துண்டை வாயில் வைத்துக் கொண்டு அழ மட்டுமே முடிந்தது. வேந்தனுக்கு வெறுத்துப் போய் விட்டது. லாட்ஜில் தங்கியவர்கள், மறுநாள் அவர்களை தேடி வந்த நண்பன் ஒருவன் உதவியால் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தனர். அனு கழுத்தில் போட்டிருந்த மெல்லிய சங்கிலி, மருமகளுக்காக வைத்திருந்த இந்துவின் தாலி சங்கிலி எல்லாவற்றையும் விற்று தான் அங்கே குடியேறினர். வீட்டுக்கு தெரியாமல் அங்கே வந்த சிதம்பரம் தான் வேந்தனுக்கு இந்த வேலையை வாங்கிக் கொடுத்தார். பணக்கஸ்டத்தினால் மாமாவிடம் முகத்தைக் காட்டாது கிடைத்த வேளையில் அமர்ந்தான் அவன். இப்படித்தான் அவர்கள் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள்.

பழையதை நினைத்துப் பார்த்த இந்துவுக்கு பெருமூச்சு கிளம்பியது. அப்படியே மகனை நினைத்துப் பெருமையாகவும் இருந்தது. தன் சுகத்தைப் பார்க்காமல் தங்களுக்காகவே வாழும் மகன் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கடவுளை வேண்டிக் கொண்டார்.

“சரி விடுப்பா. கல்யாணம் உன் இஸ்டம் தான். அம்மா அதுல ஒன்னும் தலையிட மாட்டேன். சொல்லேன் உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்னு, நானும்தான் தெரிஞ்சிக்கிறேன்”

வெட்கத்துடன் சிரித்தவன்,

“தங்கச்சி கூட பொறந்தவனுக்கெல்லாம் எங்கம்மா இந்த மாதிரி கற்பனை இருக்கும். முதல்ல அவங்க லைப்ல செட்டல் ஆகனும். அப்புறம் தான் எதையும் நாங்க நினைக்க முடியும்.”

“பொய் சொல்லாதடா. அக்கா, தங்கச்சி இருந்தா ஆம்பிள்ள பசங்களுக்கு கற்பனை கனவு கன்னி கூடவா இருக்காது? நான் நம்ப மாட்டேன். அம்மா கிட்ட என்னடா வெட்கம்?”

“சரி, சொல்லுறேன். அதுக்கப்புறம் சிரிக்கக் கூடாது. ஓகேவா இந்து டார்லிங்?”

“அப்படினா நான் சிரிக்காத மாதிரி சொல்லு”

“மெட்ராஸ் படம் பார்த்திருக்கியாமா? அதுல ஒரு பொண்ணு வருமே, அது தான்மா என் கனவு கன்னி”

“யாருடா, கேத்ரின் தெரெசாவா?” வாயைப் பிளந்தார் இந்து.

“நம்ப லெவலுக்கு அதெல்லாம் செட் ஆகாதுமா. அதான் ஹிரோவோட ப்ரெண்ட் வைப்மா. பேரு கூட எனக்கு தெரியாது”

“ஓ, அந்தப் பொண்ணா? அவங்க பேரு ரித்விகா. மாநிறமா குடும்பப்பாங்க இருப்பாங்க”

“அதே தான், அதே தான்” சொல்லும்போதே முகத்தில் ஒரு வெளிச்சம்.

“மீதத்தையும் சொல்லு கேப்போம்”

“அந்த மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும். இதுல ரெண்டு சிட்டுவேஷன் இருக்கும்மா. ஒன்னு என் பொண்டாட்டி வேலை செய்யாம இல்லத்தரசியா இருக்காளாம். நான் வேலை முடிஞ்சு களைச்சு போய் வரேன். தழைய தழைய சேலைக் கட்டிகிட்டு வாய் நிறைய சிரிப்போட வாசலிலே நிக்கிறா. நான் சிரிச்சிகிட்டே அவ கன்னத்தை தட்டிட்டு வீட்டுகுள்ள வரேன். அவ எனக்கு பேன போட்டுட்டு குடுகுன்னு உள்ளே போய் காப்பி கலந்து எடுத்துகிட்டு வரா. நான் சுத்தி முத்தி பார்த்துட்டு அவளை மடியில உக்கார வச்சிக்கிறேன். காப்பிய அவ எனக்கு ஊட்ட, நான் அவளுக்கு ஊட்ட அப்படியே கண்ணுலயே லவ்ஸ் ஓடுது”

“அட, அட அட.”

“அப்புறம். நீ என்னடா சத்தத்தையே காணோம்னு முன்னுக்கு வந்து பார்த்துட்டு ‘ கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், காதல் என்று அர்த்தம்னு” பாடற. நாங்க பதறி போய் எழுந்து நிக்கிறோம்”

“எனக்கு கற்பனை இல்லை கனவு இல்லைன்னு சொல்லிட்டு, என்னமா மனசுல சீன் ஓட்டியிருக்க நீ. அப்புறம் ரெண்டாவதையும் சொல்லு கேப்போம்”

“அதுல என் பொண்டாட்டியும் என்னை மாதிரியே வேலைக்கு போறாளாம். மாலையில் களைச்சி போய் நாங்க வீடு திரும்பறமாம். நல்ல மாமியாரான நீங்க என்ன செய்யுறீங்களாம், நீ அக்கடான்னு உட்காரும்மா நான் காப்பி கலந்துட்டு வரேன்னு சொல்லுறீங்களாம்”

“அந்த மாதிரி எல்லாம் நான் சொல்ல மாட்டேனே”

“கற்பனை தானேம்மா. அதுல சொல்லுறீங்களாம். நாங்க ரெண்டு பேரும் காப்பிய குடிக்கிற சாக்குல கண்ணாலயே ஒருத்தர ஒருத்தர் பருகிக்கிறோம். அப்ப ஹாலுக்கு வர நீங்க ‘கண்ணும் கண்ணும் நோக்கியா, நீ கொள்ளை கொல்லும் மாபியா”ன்னு பாடவும் பதறி போய் நாங்க எழுந்து நிக்கிறோமாம். எப்படிமா? நல்லா இருக்கா?”

“கற்பனைல கூட நீ டீசண்ட் தான்டா. உன்னைக் கட்டிக்கிறவ குடுத்து வச்சவடா”

“இன்னொன்னும் கேளுமா. இதையே நான் மேடத்தை கல்யாணம் செஞ்சா என்ன நடக்கும் தெரியுமா? அவங்க வீட்டுக்கு வர முன்னுக்கு ஓடி போய் நல்லா பவுடர், பர்பியும் எல்லாம் போட்டுகிட்டு வாசலில நிக்கனும். அவங்க வந்தவுடனே ப்ரிப்கேச வாங்கிக்கிட்டு அவங்க பின்னாலெயே குடுகுடுன்னு ஓடி வரனும். அவங்க உட்கார்ந்ததும், கால தூக்கி என் மடியில வச்சி அமுத்தி விடனும். அப்போ என் மைன்ட என்ன பாட்டு ஓடும் தெரியுமாமா? ‘அட பொன்னான மனசே பூவான மனசே வைக்காத பொண்ணு மேல ஆசை , நீ வைக்காத பொண்ணு மேல ஆசை’ ன்னு பாடிக்கிட்டே மனசுக்குள்ளேயே கொட்டாங்குச்சிய தட்டிக்கனும். தேவையாமா?” என கேட்டு சிரித்தான் வேந்தன்.

அவன் அப்படி பேசியது தான் அவன் வாழ்க்கையில் நடக்க போகிறது என்பதை யார் அவனிடம் சொல்லுவது?

 

உயிரை வாங்குவாள்….

Leave a Reply

error: Content is protected !!