UYIRODU VILAIYADU 20

UYIRODU VILAIYADU 20
(உலகத்தில் நிஜ ஹீரோ, சாதாரண மனிதனை விடத் துணிச்சலானவன் அல்ல. ஆனால், அவர் ஐந்து நிமிடங்கள் அதிகமாக, சாதாரண மனிதனை விடச் சூழ்நிலையை, எதிர்த்து நிற்பதில் இருக்கிறது அவர் ஹீரோயிசம். ”ஆல் ரால்ப் வால்டோ எமர்சன்.)
அத்தியாயம் 20
Haboob- அரேபிய மொழியில் மணல் புயல்.
அதிகளவு ஈரப்பதத்தால் நீர் மழையாகப் பொழிவதற்கு பதில், காற்றின் வீச்சால் தளர்வான மணல் துகள்கள் உறிஞ்சப்பட்டு, வறண்ட நிலப்பரப்பு பகுதிகளில் மணல் புயலாக வீசும்.
பகல் இரவாகி போனது போன்ற நிலை. அருகில் நிற்பவர் கூடக் கண்ணால் பார்க்க முடியாத இருள். Zero visibility.
அந்தக் கிராமத்தின் வானத்தில் கருமை நிற போர்வை கொண்டு மூடியது போல், மணல் போர்வையால் மூடப்பட்டது.
apoclypse/ உலகமே அழிகிறதோ என்ற எண்ணம் தோன்றும் வண்ணம், மணல் புயல் வானத்தை ஆரஞ்சு நிறமாக மாற்றுவதற்கும், பகல் நேர சூரியனையே காண முடியாத அளவிற்கு அந்தக் கிராமமானது இருளில் மூழ்கடிக்கப்பட்டது.
சுழன்றடிக்கும் காற்றின் ஓசையானது, ஆயிரம் அரக்கர்கள் ஒரே நேரத்தில் கர்ஜிப்பதை போன்ற பலத்த சப்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
பொறுமைக்கு உதாரணமாய் சொல்லப்படும் பூமி தேவியானவள், எப்படியொரு மென்மையான பெண்ணவள் கோபம் கொண்டு விட்டால், அவளின் கோபத்தை யாராலும் தாங்க முடியாது என்பதை நிரூபிப்பது போல் அங்கே ருத்ரதாண்டவமே ஆடி முடித்தாள்.
இது தான் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதோ!.
https://www.youtube.com/watch?v=JJDe0UmSU6c
ஒரு மணி நேரத்திற்கும் மேல், சுழன்றடித்த மணல் புயல் ஓய, நாட்டில் வீசிக் கொண்டிருக்கும் இன்னொரு புயலான பேராசை, தீவிரவாதம், உயிர் சேதம் என்னும் புயலை தடுக்க ரஞ்சித் சாகர் குழு கிளம்ப ஆயுத்தமானது.
இந்தப் புயலை இவர்கள் வெல்வார்களா, இல்லை இந்தப் புயல் இவர்களைத் தன் கோர பசிக்கு பலிவாங்கி கொள்ளுமா என்பதை காலம் தான் சொல்ல முடியும்.
“பாய்!… இதில் சாப்பாடு இருக்கு… வழியில் சாப்பிடுங்க…” என்றவள் கையில் வழியில் ரஞ்சித் குழு சாப்பிட தேவையான உணவுப் பை.
கள்ளம் இல்லா வெள்ளை புன்னகை.
‘இந்தியாவிற்கே உரித்தான, அதிதி தேவோ பவோ. விருந்தினர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள் என்று கருதும் நீங்களும் கடவுளாக ஆகிவிடுவீர்கள் என்று சொல்வது எத்தனை உண்மை!.
உலகின் மிகப் பெரிய தானம் அன்னதானம் என்று அதனால் தான் சொல்கிறார்களோ!
பெண்மை என்பது நம்முடன் வாழும் கடவுளின் மறு வடிவம் என்று சொல்வது எத்தனை பொருத்தமானது. இங்கே இந்தப் பெண் அன்னபூரணியாக உருவெடுத்து நின்று இருக்கிறதோ!
எதுவும் இல்லாத வீட்டிலும் ஒரு ராணியின் கம்பீரம், கடை ஏழு வள்ளல்களின் குணம். கணவன் தன் உயிரைப் பணயம் வைத்திருக்கிறான் என்பது எந்தப் பெண்ணையும் நடுங்க செய்யும். ஆனால், உயிர்மேல் ஆசை என்பதே இவர்களுக்குப் போய்த் தான் விட்டதோ!
எந்தக் கணம் வேண்டும் என்றாலும் மரணம் நிகழும் என்ற உண்மை, கண் முன்னே பிறந்ததிலிருந்து இருக்க, இவர்கள் மரண பயத்தை கடந்த யுத்த களத்தில் போர் புரியும் வீரர்களின் கர்ம யோகத்தை மேற்கொண்டு விட்டார்களோ…’ என்ற எண்ணம் ஓட ரஞ்சித் கைகள் அவனையும் அறியாமல் கூப்பியது.
“சுக்கிரயா பெஹன்!…” என்ற ரஞ்சித், அவள் தலையை வருடிக் கொடுக்க, அந்தப் பெண் முகத்தில் மகிழ்ச்சியே!.
ரஞ்சித் குல்ஷனை அணைத்து கொள்ள, “பாய்!… என்ன இது!… நீங்கப் போய் என்னை…” என்று நெளிந்தவனை, பார்த்துப் புன்னகை புரிந்தான் ரஞ்சித்.
“நீயும் எங்களைப் போல் இந்த நாட்டின் ராணுவ வீரன் தான் குல்ஷன். நீ செய்த உதவி, தியாகம் வேறு யாருக்கும் தெரியாமல் போயிருக்கலாம். இதற்கு உனக்குக் கிடைக்க வேண்டிய அங்கிகாரம், கெளரவம் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் நீ காப்பாற்றிய உயிர்கள் அதிகம்.” என்றான் ரஞ்சித்.
“போங்க பாய்…ஒவ்வொரு முறையும் இப்படி தான் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு நன்றி சொல்லிட்டு இருக்கீங்க…” என்றான் குல்ஷன்.
“அடுத்த முறை என்ற ஒன்று வராமல் போகலாம் இல்லையா குல்ஷன்… ” என்றான் ரஞ்சித் புன்னகையுடன்.
ரஞ்சித் குரலில் துயரம் என்பதில்லை. அதற்குப் பதில் இந்திய ராணுவ வீரன் என்பதில் திமிரே தெரிந்தது.
“பத்திரமாய் இருங்க பாய்…ஜெய் ஹிந்த்.”என்றான் குல்ஷன்.
“ஜெய் ஹிந்த்/ இந்தியா வெல்லட்டும்.” என்ற நான்கு குரல் ஒரே சமயத்தில் ஒலிக்க, அதைவிட மிகப் பெரிய இசை உலகிலிருந்து விடப் போகிறதா என்ன!
வாய் விட்டுச் சொல்லும் போதே தேகத்தில் ஓடும் சிலிர்ப்பை யாரால் தான் வர்ணிக்க முடியும்!
தேசப்பற்று வாழ்ந்து காட்டுவது.
இது போன்ற தன்னலம் அற்ற வீரர்கள் வீரர்கள் இருக்கும் வரை இந்தியா வெல்லுவதை எவனாலும் தடுக்க முடியாது தான்.
போரிடுவேனே!… போரிடுவேனே!
இது யுத்தம்
தீப்பிடிக்கும் எந்தன் உதிரம்
இறுதி வரைக்கும் நீடிக்கும்
ரத்த துளிகள் சொல்லுமடா
போலாம் வா… வா…. அந்த
சாவின் அச்சம் உதறி
நாம் தாக்க வேண்டும் திருப்பி
பயந்தோட வேண்டும் எதிரி… “ என்ற பாடல் வரிகள் சொல்வது போல், இந்தியாவை சிதைக்க முயலும் தீமையை எதிர்க்க, அடியோடு அழிக்க, ரஞ்சித் சாகரின் குழு வீரநடை போட்டுத் தன் பயணத்தைத் தொடங்கியது.
அந்தக் கிராமத்தின் நாடோடி ஆடையை உடுத்தி கொண்டு, குல்ஷன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு முதலில் ரெண்டு பேர், பத்து நிமிடம் கழித்து ரெண்டு பேர் என்று அந்தக் கிராமத்தில் உள்ள யாரின் கவனத்தையும் கவராமல் வெளியேறினார்கள்.
யாரின் கவனமும் கவர படவில்லை என்று தான் அவர்கள் நினைத்துக் கொண்டு தங்களின் ஆபத்தான பயணத்தைத் தொடங்கினார்கள்.
அவர்கள் செல்வதை கவனித்து கொண்டிருந்த ஒருவன், தன் வீட்டிலிருந்து அழைப்பை விடுத்தான்.
அதே சமயம் ரெண்டாயிரம் கிலோமீட்டர் தாண்டி, சென்னை சாலைகளில் ஓடிக்கொண்டிருந்த காரிலிருந்து தன் நண்பன் விக்ரமிற்கு விடாது அழைத்துக்கொண்டிருந்தாள் சம்யுக்தா.
யாரின் சமாதானமும் அவள் தொடர்ந்து அழைப்பதை நிறுத்தவில்லை.
விமானத்தில் பறந்து கொண்டிருந்த விக்ரம் அந்த அழைப்பை ஏற்கவும் இல்லை.
ஈஸ்வர் பொறுமை இழந்து, “பேபி!… எப்படியும் விக்ரமும் கோவாவுக்கு வரத்தானே போகிறான்!… போனில் பேசுவதை நேராய் பார்த்துப் பேசுமா… இப்படி டென்ஷன் ஆகாதே…” என்றான் சம்யுக்தா கையைப் பிடித்துக் கொண்டு.
அதைக் கண்டு செல்வம் முறைக்க, “என்னடா?…” என்றான் ஈஸ்வர்.
“அப்படியே அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வையேன்… ஆசிரியர் வேலையை விட்டுட்டு மாமா வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டே போலிருக்கே!… ஆசிரியர் வேலை போனாலும் இன்னொரு வேலையில் பொழைச்சுக்குவே!…” என்றவனை ஈஸ்வர் முறைக்க,
“முறைக்காதே!… செய்யிறது லூசு தனமான வேலை. இதுல முறைப்பு என்ன வேண்டிக் கிடக்கு உனக்கு? அந்த விக்ரம் இவளைக் காதலிக்கிறான் என்பதை சொல்லி, அவன் கிட்டேயிருந்து விலகி இருன்னு சொல்லிட்டு போறதை விட்டுட்டு, கொஞ்சிட்டு இருக்கே!… லூசாடா நீ?… ஆள் வளர்ந்த அளவுக்கு உனக்கு அறிவு வளரவே இல்லை.
பல்தேவுக்கு பிடிச்ச மாப்பிள்ளை விக்ரம் தான். நீயில்லை. அங்கே போனவுடன் கும்பலாய் நம்மை அந்தாள் போட்டுத் தள்ளவில்லை என்றால் உலகமே அழிஞ்சுடும். இவ கிட்டே வரும் போதே நாலு சுவர் எகிறி குதிச்சு எஸ்ஸாகிடுன்னு எத்தனை தடவை சொன்னேன்!…” என்றான் செல்வம் கடுப்புடன்.
“உலகத்திலேயே மிகச் சுலபமாய் எல்லோரும் எல்லோருக்கும் கொடுப்பது எது தெரியுமா செல்வம்?… அட்வைஸ்… என்னை நாலு சுவர் ஹை ஜம்ப் செய்து ஓடச் சொன்ன உன்னால், அதை ஏன் செய்ய முடியலை?…” என்றான் ஈஸ்வர் நக்கலாக.
“அது…. அது….” என்று செல்வம் தந்தி அடிக்க,
“அதே…அதே… அதே தான் செல்வம்…. சம்யுக்தா மாதிரிப் பெண் நம் வாழ்வில் வராத வரை தான் எல்லாமுமே நம் கையில்… இவளை மாதிரித் தேவதை பெண்களின் அறிமுகம் கிடைத்த பிறகு, அதுவும் இவள் காதல் என்னும் வரம், மனம் என்னும் அமிழ்தம் கிடைத்து விட்டால், விலகிச் செல்வது உயிர் அற்ற உடலாய் மட்டுமே இருக்கும்…
இந்த மாதிரி உன்னத பெண்களின் அன்பு, காதல் என்பது பிளாக் ஹோல் மாதிரி… அந்த ஆகர்ஷணத்தில் உள்ளே செல்ல மட்டுமே முடியும்.” என்றான் ஈஸ்வர் சம்யுக்தாவை கண்களால் விழுங்கிய படியே.
ஈஸ்வரின் கண்களில் சம்யுக்தாவிற்கான காதல் ஆயிரம் சூரியன் வந்தாலும் போட்டியிட முடியாத அளவு பிரகாசத்துடன் மிளிர்ந்து கொண்டிருந்தது.
செல்வத்தின் கண்களும் சம்யுக்தாவை தான் பார்த்துக் கொண்டிருந்தது. செல்வத்தையும் அறியாமல் பெருமூச்சு ஒன்று வெளியே வர, அவனைப் பார்த்துத் தலையைக் குலுக்கினான் ஈஸ்வர்.
“என்னவோ போ ஈஸ்வர்… இது போகாத ஊருக்கு வழின்னு தான் தோணுது. இப்போ நல்லா மாட்டிட்டு நீ முழிக்கிறது மட்டுமில்லாமல் எங்களையும் பலியாடு ஆக்கி வச்சிருக்கே!.. ” என்றான் செல்வம்.
“இப்போ கூட ஒன்றும் கெட்டு போய்ட லை… அப்படியே கதவைத் திறக்கிறேன். ஓடும் காரிலிருந்து ஸ்பைடர்மேன், ஹி மேன், ஐயன் மேன் வேலை பார்த்து எஸ்ஸாகிக்கோ. யாரும் உன்னைத் தடுக்க மாட்டாங்க. டூர் கைட் மாதிரி இத்தனை டிக்கெட்டை அழைச்சிட்டு போறோமேன்னு அந்த ஜெவியர் கடுப்பில் தான் இருக்கான்… நீ குதிச்சேன்னு வையென் ரொம்ப சந்தோசப்படுவான்… ட்ரை செய்து பாரேன்.” என்றான் ஈஸ்வர்.
“நக்கலு…சிரிப்பே வரலை… நம்மைப் போட்டுத் தள்ளிட்டு, அந்த ஆள் ஜாம் ஜாம்ன்னு பொண்ணுக்கு அந்த விக்ரம் உடன் திருமணத்தை நடத்த போறார். வானத்தில் ஆவியாய் வந்து நின்னு, அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்.
சோ, இப்படியொரு ஆங்கில் இருக்குன்னு தோ… ‘என் நண்பன்போல யாரு மச்சான்னு?…’ சோக கீதம் வாசிக்குது பாரு இந்த லூசு… அதுக்கு கொஞ்சம் வேப்பிலை அடிச்சு வை…” என்றான் செல்வம், ஈஸ்வரின் காதருகே அவரனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
செல்வம் சொல்வதில் உள்ள உண்மை புரிய, சம்யுக்தாவிடம், விக்ரம் அவளை விரும்புவதை சொல்ல வாயெடுக்க, அவன் தோளில் வாகாய் சாய்ந்து கொண்ட சம்யுக்தா, ஈஸ்வர் கையைத் தன்னுடன் பிணைத்துக் கொண்டு,
“ஈஸ்வர்!… விக்ரம் என் பெஸ்ட் தோழன். அம்மா இறந்த பிறகு எனக்கென்று, எந்தச் சுயநலமும் இல்லாமல் இருந்தவன். ஹேமாவை போலவே விக்ரம் எனக்கு ஸ்பெஷல் ஈஸ்வர்.” என்று சம்யுக்தா பேச ஆரம்பிக்க, ஈஸ்வர் பேய் முழி முழித்துச் செல்வத்தைப் பார்க்க, செல்வம் மனதிற்குள்,
‘கிழிஞ்சது…விளங்கிடும்.’ என்று எண்ணி கொண்டான்.
“விக்ரம் இருந்தால் அப்பாவைச் சமாளிப்பான். அவனுக்குத் தான் என் அப்பா எந்த மூடில் இருக்கார், எப்படி பேச வேண்டும் என்பதெல்லாம் தெரியும். எனக்கு ஏதாவது அப்பா கிட்டே வேலை ஆக வேண்டும் என்றால் இவனுக்குத் தான் ஐஸ் வைப்பேன்.” என்றாள் சம்யுக்தா.
‘யாரு அந்தப் புல் தடுக்கி பயில்வான்… தி கிரேட் பல்தேவை சமாளிப்பான்!… அவனே, ‘உலகே மாயம்… வாழ்வே மாயம்ன்னு ஆரம்பிச்சுட்டான். எல்லோரும் கோலத்தில் நுழைந்தால், உங்க அப்பன் புள்ளி குள்ளேயே நுழையும் ரகம். இதுல ….’ என்று செல்வம் மனதிற்குள் அலுத்து கொண்டான்.
“விக்ரம் அவன் கிட்டே சொல்லாமல் எதையும் நான் செய்ததே இல்லை. ஏன் நம் காதலை அவனிடம் சொல்லாமல் விட்டேன் என்றும் தெரியலை ஈஸ்வர். சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் அவனை அழைத்து மணிக்கணக்கில் பேசி இருக்கேன்… ஆனால், என் வாழ்க்கையின் அதி முக்கியமான விஷயத்தை அவனிடம் ஏன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை ஈஸ்வர்.
விக்ரம் முகம் ஏன் அப்படி இருந்தது ஈஸ்வர்?… அவனை என்றுமே அப்படி நான் பார்த்தது இல்லை. அவன் முகம் இருந்த நிலை… அதை என்னால் மறக்க முடியவில்லை!… ஏன் அப்படி இருந்தான்?… முதல் முறை அவனிடம் சொல்லாமல் ஒன்றை செய்தேன் இப்போ எப்படி அவனை மலை இறக்குவது என்று புரியவில்லையே!…” என்று பாவமாய் சொன்ன சம்யுக்தாவை கண்டு, காரில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
ஜெவியர், ஹேமாவிற்கு கூட விக்ரமின் காதல் தெரிந்தே இருந்தது. தெரிய வேண்டியவளுக்கு மட்டும் தெரியாமல் போனது காலத்தின் விளையாட்டு தான் போலிருக்கு.
எந்த மனம், எதனின் சரி பாதியாக வேண்டும் என்று என்றோ நம்மைப் படைத்தவன் நிர்ணயித்து விட்டதை மாற்றும் வல்லமை யாருக்கு தான் இருக்கிறது?
எப்படி நம்மால் நம் அன்னை தந்தையாக இவர்கள் வர வேண்டும் என்பதை பிறக்கும்போது நிர்ணயிக்க முடியாதோ, அதே போல் நம் மனம் ஒருவரின் மேல் காதலில் விழுவதையும் தடுக்க முடியாது.
யார் கரம், யாரின் கழுத்தில் புனிதமான பந்தத்தின் சின்னமான திருமாங்கல்யத்தை அணிவிக்கிறது என்பதும் நம்மை மீறிய தெய்வ செயல்.
மனம் யாரிடம் வேண்டும் என்றாலும் மயங்கலாம் விக்ரம் போல்…
இரு மனம் இணைந்து காதலில் கசிந்து உருகலாம் சம்யுக்தா, ஈஸ்வர் போல்…
ஆனால், இந்தக் காதலின் தொடக்கம், திருமணம் என்ற பந்தத்தில் தான் ஆரம்பமாகிறது. அந்தப் பந்தம் நம் கையில் இல்லை என்பதே உண்மை.
விக்ரம் சம்யுக்தாவை காதலிக்க, சம்யுக்தாவின் மனம் ஈஸ்வரிடம் இருக்க, இதில் தேஜ், ஹேமா, செல்வம், எமி, நிஷா இவர்கள் மனம் யாரிடம்?
சம்யுக்தா என்ற பெண்ணின் கணவன் ஆகப் போவது யார்?
இதற்கான விடையை நோக்கி, சம்யுக்தாவின் வாழ்வை அடியோடு மாற்ற, ஒன்றரை மணி நேர பயணத்தில், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து நின்றது அந்தக் கார்கள்.
சென்னை விமான நிலையம் இந்தியாவின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையம். இது சராசரியாக ஆண்டுக்கு 13 மில்லியன் பயணிகளைக் வந்து செல்லும் இடம்.
இந்தியாவின் முதல் விமான நிலையங்களில் ஒன்றான இது, தென்னிந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்துக்கு ஒரு முக்கிய மையமாக உள்ளது, மேலும் AAI இன் பிராந்திய தலைமையகமாகவும் செயல்படுகிறது.
சென்னை விமான நிலையத்திற்கு இரண்டு பெயர்கள் உள்ளன – உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜ் பெயரிடப்பட்டது, சர்வதேச முனையம் அண்ணாதுரை சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
விமான, ரயில், பேருந்து நிலையங்கள் உன்னிப்பாய் ரசித்துப் பார்ப்பவர்களுக்குப், ‘போதி மரம்’ போன்றது என்று சொன்னால் மிகையல்ல. சலசலப்பு, உற்சாகம் நிறைந்தது. வெவ்வேறு வாழ்க்கை முறை, பழக்க வழக்கம் கொண்ட மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
‘வாழ்க்கை என்னும் பயணத்தில் நாம் தனியாக இல்லை’ என்பதை நினைவூட்டுவதில் இந்த இடங்களுக்குத் தனியிடம் இருப்பது என்னவோ உண்மை.
உயிரோட்டம் இருக்கும் இடம் இவையெல்லாம்.
பரபரப்பான வாழ்க்கை முறையில் இந்த உயிரோட்டத்தை, தன்னை சுற்றி நடப்பதை எல்லாம் நாம் கூர்ந்து கவனித்து ரசிப்பதில்லை என்பது உண்மை.
கண்கள் கொண்டு பார்க்கிறோம்… ஆனால் நாம் பார்க்கும் காட்சிகள், வெறும் காட்சிகளாவே நின்று விடுகின்றன. அதில் உயிர்ப்பு இருப்பதில்லை.
வெற்று பார்வைகள்
Sometimes you find yourself in the middle of nowhere, and sometimes in the middle of nowhere you find yourself. என்ற பழமொழி நிஜமாகும் இடம் பயணம் தொடங்குமிடம்.
எண்ணற்ற புதியமுகங்கள், அதில் தென்படும் உணர்ச்சிகள், ஏக்கம், தவிப்பு, ஆயிரம் கனவுகள், லட்சம் கோடி எதிர்ப்பார்ப்புகள், வாழ்வின் மீது உள்ள பிரியம், ஆசை என்று நம்மைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்ற மனிதர்கள் கூடும் இடம்.
நாம் படிக்கும் கதைகள், நிழலாய் பார்க்கும் தொடர்கள், வெள்ளித்திரை படங்கள் நிஜத்தில் ஓடும் இடம் இவை.
இறைவனின் படைப்பில் எத்தனை விதமான, நுணுக்கமான மாற்றங்கள் கொண்ட படைப்பு இந்த மனித இனம். ஒருவரை போல் ஒருவர் இல்லாமல், ஆனால் ஒரே மாதிரியான மனிதர்கள்.
இந்தப் பிரபஞ்சம் என்ற அகன்ற வெளியில் நாமும் மற்றவர்களைப் போல் ஒரு துகள் என்பதும், இன்னொருத்தரில் நம்மைக் காணும்/self reflection கணங்களும் இங்கே அதிகம்.
நான் உணரும் உணர்ச்சிகள் அனைவராலும் உணரப்படுகின்றன, மேலும் வெவ்வேறு காலங்களில் இருந்தாலும் நாம் கடந்து செல்லும் பாதைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை என்பதை பாடமாய் சொல்கிறது.
பயணம்!… இது நம் வாழ்வின் ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு மாறுவதைக் குறிக்கும். இந்தப் பயண ஸ்தலங்கள் அன்றாட நடைமுறைகளின் கவனச்சிதறல்கள் இல்லாமல், நமது கடந்த காலத்தைப் அசைபோடவும், நமது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவும், புது தோழமைகளை பெறவும் ஆவண செய்கின்றன.
இங்கே, வேலை, பள்ளி மற்றும் குடும்பத்திலிருந்து தற்காலிகமாக மீட்கப்படுகிறோம். உங்கள் சக பயணிகள் வேடிக்கை பார்ப்பதில் எளிமை உள்ளது, அவர்களின் பின்னணி என்ன, அவர்களின் வீடுகள் எப்படி இருக்கும், மற்றும் போர்டிங் நேரம் நெருங்கும்போது அவர்கள் என்ன உணரக்கூடும்.
கண்ணீரோடு மலரும் புன்னகை, புன்னகையின் பின் மறைந்துள்ள பிரிவின் வலி, புதிய தோழமைகள், காதல்கள், தத்துவ சிந்தனைகள், பிரிந்த குடும்பங்கள் இணைவது, தொலைந்த நட்பு மீண்டும் கிடைப்பது, அறிமுகம் அற்றவரின் மனதை நெகிழ செய்யும் புன்னகை, சிறு தலையசைப்பு என்று உறவுகள் புதிதாய் உருவாவதும், புதுப்பிக்கப் படுவதுமான அழகிய தருணங்கள் இவை.
திருவிழாக்கள், சுப காரியங்கள், ரோடு, இது போன்ற வாழ்க்கை பயணம் எதை நோக்கியோ செல்லும் இடங்களிலிருந்து, தன்னை சுற்றி உள்ளவற்றை கூர்ந்து கவனித்து, ரசித்து உணர வேண்டிய உணர்வு அது.
ULTIMATE MOVIE EXPERIENCE IS THE LIFE ITSELF.
அப்படியொரு பயண அனுபவத்தைக் கொடுக்கும் சென்னை விமான நிலைய வாயிலில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கினார்கள்.
இங்கிருந்து தொடங்கும் இவர்கள் வாழ்க்கை பயணம் எங்கு, எப்படியெல்லாம் மாறப் போகிறதோ. விடை காலத்திடம்.
“உங்க எல்லோர் மொபைலை இந்தப் பையில் போடுங்க.” என்றான் ஜெவியர்.
“இதெல்லாம் ஓவர் ரா இல்லை?…” என்றான் செல்வம்.
“எங்களுக்கு இல்லை. எங்களுக்குப் பாதுக்காப்பு முக்கியம். இஷ்டம் இல்லையென்றால் இப்படியே கூடத் திரும்பி நடந்து போ…” என்றான் ஜெவியர்.
இது வழக்கம் என்பதால் சம்யுக்தா, ஹேமாவிற்கு புதிதாய் தோன்றவில்லை என்றாலும், ஈஸ்வரிடமும், அவன் நண்பர்களிடமும் இது மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்துவதை எப்படி தடுப்பது என்று புரியாமல் தயங்கி நின்றாள் சம்யுக்தா.
“இட்ஸ் ஒகே…”என்ற ஈஸ்வர் தன் மொபைலை நீட்ட, அதை அணைத்து ஒரு பையினுள் போட்டான் ஜெவியர்.
ஈஸ்வர் அப்படி செய்ததும் வேறு வழி இல்லாத செல்வம், எமி, ரிஷியும் முனங்கிக் கொண்டே தங்கள் மொபைலை ஜெவியர் வசம் கொடுத்தார்கள்.
அனைவரின் மொபைல் போடப்பட்ட பையை ஜெவியர், இன்னொருவனிடம் நீட்ட, அதை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றான் அவன்.
பாதுக்காப்பு செக்கிங் எல்லாம் முடிந்து, தனியார் விமானங்கள் நிற்கும் பகுதியில் இவர்களுக்காகக் காத்திருந்த விமானத்தில் ஏறச் சென்றார்கள்.
ரிஷி தலை தூக்கி மேலேயே பார்த்துக் கொண்டு வர, அதைக் கண்ட ஹேமா, செல்வத்திடம், “என்ன ஆச்சு உங்க தம்பிக்கு? கழுத்து சுளுக்கா?” என்றாள்.
ஹேமா பேச்சைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த செல்வம், ரிஷி மேலேயே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு, “என்னடா?” என்றான்.
“ஒண்ணும் இல்லை… பல்தேவ் ஏற்பாடு சும்மா அதிருது… சினிமாவில் ஹீரோ நடுவே வரச், சுத்தி அடியாட்கள் நடந்து வருவார்களோ அந்த எபெக்ட் இருக்கு…. அதான் இந்த சிட்டுவேஷனுக்கு மனசுக்குள், பாஷா படத்துல தலைவர், கோரஸ்
‘பாஷா!… பாஷா!… சொல்லிட்டு, SPB சார் வாய்ஸில்,
‘ஹே பாஷா பாரு!…. பாஷா பாரு!…
பட்டாளத்து நடைய பாருன்னு….’ மாஸ் காட்டி இருப்பாரே அதையும், KGFல, ‘தீரா!… தீரா!…’ பாட்டையும் பத்தி யோசிச்சு, இங்கே அதைச் சிங்க் செய்துட்டு இருக்கேன்.” என்றான் ரிஷி.
எமி, செல்வம் நின்று ரிஷியை, ‘லூசா நீ!…’ என்று லுக் விட, ஜெவியர் ஆட்கள் முறைப்புடன் கடந்தார்கள்.
‘ஆஹாங்!… துடைப்ப கட்டைக்குப் பட்டுக் குஞ்சலம் கேக்குதாம்…’ என்று புலம்பிய ஹேமா, “ரிஷி!… அதுக்கெல்லாம் ஒரு லெவல் இருக்கு… இங்கே அந்த அளவுக்கு ஒர்த் இல்லை… சோ, ‘தீப்பொறி திருமுகம் BGM… லாலே லாலாலா லாலா… ஆஹாங்…’ அதைக் கொஞ்சம் ட்ரை செய்…” என்ற ஹேமாவை வெட்டவா குத்தவா என்று முறைத்தான் ரிஷி.
“தேவையாடா இது உனக்கு?” என்றான் செல்வம் அவன் தலையில் தட்டி.
“ஏற்கனவே அவளுங்க ரெண்டு பேரும் நம்மை, நீயெல்லாம் எங்களுக்கு ஒரு ஆளா ன்னு நக்கல் பார்வை பார்ப்பாங்க. இதுல நீயே கன்டென்ட் வேற கொடுக்கலை என்று எவன் அழுதான்?” என்றாள் எமி .
“எல்லாம் ஒரு பில்ட் அப் தான். டாக்டர் மேடம் அப்பாவும், அந்தாள் ஆட்களும் கொடுக்கிற பில்ட் அப்புக்கு, நாமும் கொஞ்சம் மேட்ச் ஆகலாம் என்று தான்…” என்று இழுத்தான் ரிஷி.
“நீ ஆணியே புடுங்க வேண்டாம்… இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்காமல் மூடிட்டு வாடா…” என்று இழுத்து வந்தான் செல்வம்.
பல்தேவ், விக்ரம் பறந்து வந்து கொண்டிருந்த அதே falcon X போன்ற விமான அமைப்பில் இருந்தது இவர்கள் ஏறிய விமானமும்.
சிகப்பு நிற ரோஜா பூங்கொத்து கொடுத்துச் சம்யுக்தாவை அந்த விமான கேப்டன், பணிப்பெண்கள் வரவேற்க்க அரை புன்னகையுடன் அதை ஏற்றாள் சம்யுக்தா.
முன் பக்கம் இருந்த ரெண்டு இருக்கையில் சம்யுக்தா, ஹேமாவை அமர வைத்த ஜெவியர், விமானத்தின் கடைசி பகுதிக்கு ஈஸ்வரையும் மற்றவர்களையும் அனுப்பி வைத்தான்.
சம்யுக்தாவை கடந்து போகையில், “சும்மா சொல்லக் கூடாது பல்தேவ் ரசனைக்காரர் தான். மனுஷன் இருக்கும் பணத்தில் சுல்தான் மாதிரி தான் வாழ்கிறார்.” என்றான் செல்வம் நக்கலாக.
“ஏம்மா இளவரசி!… இந்த விமானம் சொந்தமா இல்லை வாடகைக்கு எடுத்து உங்கப்பா ஷோ காட்டிட்டு இருக்காரா?” என்றாள் எமி.
தன் இருக்கையில் அமர்ந்திருந்த சம்யுக்தா அதே கேள்வியைத் தான் ஹேமாவிடமும் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“ அட!… இந்தக் கூவம், இத்தனை நேரமாய் வாயை மூடிட்டு இருந்ததே என்று பார்த்தேன். ஆரம்பிச்சுட்டா!…. விடு சம்யு… அவளைக் கிழிச்சி தொங்க விட்டுட்டு வரேன்…” என்று ஹேமா கிளம்ப, அவளைத் தடுத்து நிறுத்தினாள் சம்யு.
சம்யுக்தா பதில் சொல்வதற்குள், “வாடகைக்கு எடுக்க வேண்டிய அவசியம் என் பாஸ்சுக்கு கிடையாது. இந்த விமானமும், அவர் வந்து கொண்டிருக்கும் விமானம் மட்டும் இல்லை, டஜன் கணக்கில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், சொந்தமாய் லக்சுரி கப்பல்கள், ரிஸார்ட்க்குள் கூட இருக்கு. தனி தீவு கூட வாங்க பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்கார்.” என்றான் ஜெவியர்.
ஜெவியர் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்க, செல்வம், எமி, ரிஷி முகத்தில் ஏளனத்தை பார்த்துச் சம்யுக்தாவிற்கு அப்படியே தரைக்குள் புதைந்து விட மாட்டோமா என்ற நிலையில் இருந்தாள்.
இவர்கள் பல்தேவின் பணத்தை, பின்புலத்தை பார்த்து ஈஸ்வர் பயந்தது போய், இப்பொழுது சம்யுக்தாவே பயப்படும் நிலையில் இருந்தாள்.
‘கார்களைத் தான் சிலர் வீட்டில் ஒன்றுக்கு பத்தாய் நிறுத்தி வைத்திருப்பதை பார்த்து இருக்கிறேன். என் டாடி என்ன விமானங்களைக் கார்கள் மாதிரி வித விதமாய் வாங்கி அடுக்கி வைத்திருக்கிறார்.
அந்த அளவுக்குப் பணம் கொட்ட, அப்பா என்ன வேலை பார்க்கிறார். ஒன்றுமே இல்லாதவர் எப்படி இத்தனை சொத்துக்களை சேர்க்க முடிந்தது?…. இதெல்லாம் நியாமான வழியில் வந்த சொத்துக்கள் தானா?’ என்ற எண்ணம் கலக்கத்தை கொடுக்க, திருவிழாவில் தொலைந்து போன குழந்தைபோல் தவிப்புடன் அமர்ந்து கொண்டிருந்த சம்யுக்தாவை பார்க்கவே மனதை போட்டுப் பிசையத் தான் செய்தது.
அதற்கு மேல் சம்யுக்தா தவிப்பதை தாங்க முடியாத ஈஸ்வர், எழுந்து வந்து அவளை தன் தோளில் இழுத்து அணைத்தான்.
என்னடா!…” என்றான் ஈஸ்வர் சம்யுக்தாவின் கலங்கிய கண்களைக் கண்டு.
“இறங்கிடலாம் ஈஸ்வர்… எனக்கு எதுவுமே சரியாய் படலை. ஸிரோவிலிருந்து கோடீஸ்வரர் ஆவது சாத்தியம் தான் என்றாலும், அதற்கென்று இந்த அளவிற்க்கு இப்படி மல்டி பில்லியனர் ஆவதெல்லாம் நேரான வழியில் சாத்தியம் தானா?… வேணாம் ஈஸ்வர். இப்படியே இறங்கிடலாம்… மனசு ஏனோ எல்லாமே தப்பாய் நடக்க போவதாய் சொல்லுதுடா…” என்றாள் சம்யுக்தா.
“லைப் லாங் நாம காதலிச்சுட்டு மட்டுமே இருப்பதற்கு எனக்கு ஒகே தான். ஆனால், காதலுக்கு இந்தச் சமூகம் ஒரு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்றால் அது திருமணத்தால் மட்டுமே முடியும். அந்தத் திருமண வாழ்த்து உங்க அப்பா கொடுக்கணும்.
ஓடி ஒளிவதாலோ, நெருப்புக்கோழி மாதிரி மண்ணுக்குள் தலை புதைத்துக் கொண்டால் மட்டும், உங்க அப்பா நம்மை அப்படியே விடுவார் என்று நினைக்கறியா?… எதிரே இருப்பது பேய்யா, பூதமா என்று பார்த்து விடலாம் கண்மணி.” என்றான் ஈஸ்வர் சம்யுக்தாவை அணைத்து கொண்டு.
இங்கே சென்னையிலிருந்து கோவாவிற்கு விமானத்தில் இவர்கள் பயணம் தொடங்கி இருக்க, ரெண்டாயிரம் கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் ரஞ்சித் குழு அவர்கள் பயணத்தைத் தொடங்கி இருந்தது.
ரஞ்சித் குழு ஆரம்பித்த பயணத்தைக் கவனித்து கொண்டிருந்தவன் யாருக்கோ அழைப்பு விடுக்க, அந்த அழைப்பு ஏற்கப்பட்டது.
“தேஜ் பேட்டா!… நான் தான் பேசுறேன்… பக்ரா/ பலியாடுங்க கிளம்பிடுச்சு.” என்றார் நக்கலுடன்.
“பக்ரா?…”என்றான் தேஜ் எதிர்பக்கத்திலிருந்து வியப்புடன்.
“பின்னே பலியாகப் போகிறவர்களை வேறு எப்படி சொல்வது?… அவங்களுக்கு கிடைத்த தகவல் எல்லாம் முழுமையானது இல்லை. இங்கேயிருந்து கிளம்பும் வண்டியில் மூன்று பேர் என்று தான் தகவல்.ஆனால் பின்னால் அந்த ஒன்பது பேருமே அறியாமல், பின்னால் துணைக்கு என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஒரு மாநிலத்தை இவர்கள் கடக்கும் வரை முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் அந்தந்த மாநில எல்லை வரை உடன் செல்வார்கள்.
இந்த வண்டிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லாத வரை அவர்கள் கிட்டே நெருங்கமாட்டார்கள். தவிர இவர்களை எதிர்க்க வரும் எத்தனை காவல் துறை அதிகாரிகளைப் போட்டுத் தள்ளுகிறார்களோ அதற்கு ஏற்பச் சன்மானம் என்ற தகவல் கொடுத்து இருக்காங்க. சோ எந்த அதிகாரியும் உயிரோடு வீடு திரும்ப முடியாது. “என்றார் அந்தப் பெரியவர்.
ஆக மொத்தத்தில் ரஞ்சித் சந்தேகப்பட்டது போல், இன்னும் சொல்லப் போனால் இன்னும் விஷயம் மிக மிக ஆபத்தானது தான். ஏழு அதிகாரிகளை எதிர்த்து முப்பதிற்கும் மேற்பட்ட அரக்கர்களைக் களம் இறக்கி இருக்கிறான் சத்ருஜித் . உடன் லட்ச கணக்கில் உயிரை எடுக்க வேறு பணம்.
தங்கள் உயிருக்குச் சத்ருஜித் டார்கெட் குறித்து விட்ட தகவல் அறியாத ரஞ்சித் குழு, அந்தப் பெரியவர் சொன்னது போல், பலியாடுகள் போல் வெட்டுப்பாறைக்கு சென்று கொண்டு இருந்தார்கள்.
“இந்தத் தடவை இந்தக் கிராமத்திலிருந்து உதவி செய்தது யார் என்று செய்தி கிடைத்ததா?” என்றான் தேஜ் அந்தப் பக்கம் இருந்து.
“ஹ்ம்ம்… இந்தக் கிராம தலைவரும் அவரின் மச்சானும். அந்த லாரி எல்லாம் அவனுக்குச் சொந்தமானது தான்.” என்றார் அந்தப் பெரியவர்.
“உங்க சன்மானம் உங்களைத் தேடி வரும்.” என்றவனை தடுத்தவர்,
“காசு பணம் எல்லாம் வேண்டாம் பேட்டா… சுத்தி அக்கம் பக்கமுள்ள கிராம பெண்கள் தண்ணீர் எடுக்க ரொம்ப தூரம் போக வேண்டி இருக்கு. தண்ணீர் டவ்ர் ஒன்று அமைக்கணும். மெடிக்கல் கேம்ப் வருவார்கள் தான் என்றாலும், கர்ப்பிணி பெண்கள் அந்தக் கேம்ப் ஆளுங்க வரும் வரை காத்திருக்க வேண்டி இருக்கு… இங்கே ஒரு டாக்டர், நர்ஸ்சுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா?
நீ துப்பு கொடுத்தால், எனக்குக் கொடுப்பதாய் சொன்ன பணம் வேண்டாம். அதற்குப் பதில் இந்த ரெண்டு உதவியும் செய்தால், அக்கம் பக்கமுள்ள கிராமத்து ஆட்களுக்கும் ரொம்பவே உதவியாய் இருக்கும்.” என்றார் அவர்.
சற்று நேரம் தேஜ் பக்கம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
“பணத்தை நான் என்ன அள்ளி அள்ளித் தின்னவா போறேன்?.. நான் ஒண்டி கட்டை. என் மனைவி எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் செத்து போச்சு.
ஆறடி நிலம் கூட எவனுக்குமே சொந்தம் கிடையாது தான். நாம் புதைக்கப் படப் போகும் இடத்தில், இதற்கு முன் எத்தனை பேரைப் புதைத்து இருக்கிறார்களோ, நாம் புதைந்து போனால் நம் மேல் இனி எத்தனை பேரைப் புதைப்பார்களோ தெரியாது.
அவ்ளோ பணத்தை வச்சிட்டு நான் என்ன செய்யப் போறேன். கொடுப்பதாய் சொன்ன பணத்திற்கு பதில் இந்த உதவி செய் பேட்டா… பல பெண்களின் உயிரைக் காப்பாற்றிய புண்ணியம் உனக்குக் கிடைக்கும்.” என்றார் பெரியவர்.
“நிச்சயம் ரெண்டு வாரத்திற்குள் நீங்கக் கேட்டதை ஏற்பாடு செய்கிறேன்.” என்ற தேஜ் அழைப்பைத் துண்டித்து விட்டு, இன்னொரு நம்பருக்கு அழைத்தான்.
“யெஸ் பாஸ்…” என்றது நிஷா தல்வாரின் குரல்.
“உன் மொபைலுக்கு ரெண்டு போட்டோ அனுப்பி இருக்கேன். இனி நீ அங்கே இருக்க வேண்டாம்.” என்ற தேஜ் அழைப்பைத் துண்டிக்க, நிஷாவின் இதழில் புன்னகை பிறந்தது.
உறங்கிக் கொண்டிருந்த ரக்ஷத்தை தட்டி எழுப்பியவள், “கிளம்பலாம்…” என்றாள்
இவர்கள் வேன் தேஜ்ஜூக்கு தகவல் சொன்ன பெரியவர் வீட்டைக் பத்து நிமிடம் கழித்து கடந்தபோது, அவர் மாட்டு தொழுவத்தின் அருகே இருந்தது பாலிதீன் பையில் சுற்றப்பட்டு இருந்த கட்டான பணம்.
அதே சமயம் அந்தக் கிராமத்தின் எல்லையை அடைந்து இருந்த ரஞ்சித் குழு, அங்கிருந்த மெக்கானிக் ஷாப்பில் இருந்த ஒருவன் நீட்டிய சாவியை வாங்கி கொண்டு அங்கு நின்றிருந்த ஜீப்பில் ஏறினார்கள்.
அவர்கள் ஓட்டி வந்த ஆட்டு கூட்டம், அந்த மெக்கானிக் ஷாப் பின்புறம் இருந்த பட்டியில் அடைக்கப்பட்டது.
“மூன்று லாரி கிளம்பி பத்து நிமிஷம் ஆகுது. இது தான் லாரி நம்பர். இங்கே இருந்து போகும்போது நீங்கச் சொன்னது போல் ட்ராக்கர் டார்ட் ஒட்டிட்டேன்…. இனி நீங்க ட்ராக் செய்துக்கலாம்.” என்றவன் கையில் கத்தையாகப் பணத்தை கொடுத்தார் ஹர்ஷன்.
அதே சமயம் ரெண்டாயிரம் கிலோமீட்டர் தாண்டிப் பரபரப்பாகப் போலீஸ் கெடுபிடியால் திணறிக் கொண்டிருந்த சென்னை நகரத்தில் வேர்க்க விறுவிறுக்க ஒரு பெண் ஓட்டமும் நடையுமாகத் தன் ஹாஸ்டல் அறைக்குள் நுழைந்தாள்.
அது சென்னையின் மிகப் பிரபலமான ஹாஸ்டல். படிக்கும், வேளைக்கு செல்லும் பெண்களுக்காக இயங்கி கொண்டிருந்தது.
‘மழைக்கு முளைக்கும் காளான்போல் இது போன்ற பெண்கள் தாங்கும் விடுதிகள் தெருவிற்கு ஒன்று முளைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. தினசரி வாழ்வில் இவற்றை வெளியிலிருந்து பார்த்துக் கடந்து விடுகிறோம்.
பெற்றோர்களும் தங்கள் பெண் பிள்ளைகள் படிக்கச் வேலைக்குச் செல்ல என்று கண் காணாத தூரத்தில் இப்படி பட்ட இடங்களில் தங்கள் பெண்களை நம்பி விட்டுத் தான் செல்கிறார்கள்.
அந்தச் சுதந்திரத்தை, விடுதலையாக எண்ணி கொண்டு, பற்றி எரியும் நெருப்பில் சிக்கி விட்டில் பூச்சிகள் போல் வாழ்வை, உயிரை, மானத்தை இழந்த பெண்கள் இங்கே அதிகம்.
இந்தத் தங்கும் விடுதிகள் நிரந்தர மரண பள்ளத்தாக்குகளாய் மாறி இந்தப் பிள்ளைகளை விழுங்கி விடுகின்றன. ஒவ்வொரு தங்கும் விடுதிக்கும் பின்னும் வெளியே தெரியாத இது போன்ற மரணங்கள் மிக அதிகம்.
‘ஹாஸ்டல் தற்கொலை, காதல் தோல்வி.’என்று வரும் செய்தி எல்லாம் தற்கொலையாக இருப்பதில்லை.
சில மனித வக்கிரத்தின் பிடியில் சிக்கி கொண்டு மீள முடியாத இளம் பெண்கள், தங்களை மீட்டு கொள்ள, காத்து கொள்ள கடைசி சரணாகதி இவை.
விட்டத்தில் ஆடும் ஒவ்வொரு கயிற்றின் பின் என்ன வேதனை, வலி, கொடூரம் மறைந்து உள்ளதோ
கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பதம் அறியாததும் ஒரு காரணம்.
ஹாஸ்டளுக்குள் தோழமை என்று நினைத்துப் பழகுபவர் உண்மையில் மரண தூதராய் இருக்கும் வாய்ப்பு மிக அதிகம்.
போதை மருந்து, நீல படம், பணம், பகட்டுக்காக ஜஸ்ட் லைக் தட் வாழ்ந்து பாரு என்று அறிவுரைகள் எல்லாம் இங்கே சகஜம்.’ இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் தன் வீட்டில் தான் ஒருத்தி இறந்து போனாள். இவர்களும் அவள் செய்த அதே தப்பை செய்கிறார்களே என்பது தான் தன் அறைக்குள் நுழைந்த பெண்ணின் எண்ணமாய் இருந்தது.
சாதாரணமாய் தெருவில் நாம் கடக்கும் பொது மக்களில் அந்தப் பெண்ணும் ஒருத்தி.
தன் அறைக்குள் நுழைந்தவள் முகத்தில் அப்படியொரு கலவரம்.
வியர்வையை கைக்குட்டை கொண்டு துடைத்தவள், தன் அறை கதவை மூடித் தாள் இட்டு, ஒன்றுக்கு ரெண்டு முறை கதவு சரியாகத் தாள் இடப்பட்டு உள்ளதா என்பதை சோதித்து தன் சூட்கேஸ் பூட்டை திறந்து அதில் இருந்த மொபைல் ஒன்றை வெளியில் எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள்.
தண்ணீர் குழாயைத் திறந்து விட்டவள், அதன் சத்தத்தில் அந்த மொபைலில் பதியப்பட்டு இருந்த unknown நம்பர் ஒன்றுக்கு அழைத்தாள்.
ஆட்டம் தொடரும்…