UYS – 17

1662455813139-2b97e5ff

அத்தியாயம் – 17

 

ஊரிலுள்ள பலரும் குறட்டைவிட்டு தூங்கும் சமயம், அகத்தியன் தன் மனைவி தூங்கிக் கொண்டிருக்கும் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

என்றுமில்லாமல் அவன் கண்கள் அவளை அளவிட்டது.

சற்று பூசினார் போன்ற தேகம். சந்தன நிறம். கொழுகொழுவென இருக்கும் கன்னங்கள். அளவான கூந்தல். அதில் சில கற்றைகள் அவள் முகத்தில் பட்டு அவன் கவனத்தைக் கவர, மென்மையாக அதனை ஒதுக்கிவிட்டான்.

நாளை விடுப்பு எடுக்க நினைத்திருந்தான். உண்மையில் அவளை அழைத்துக் கொண்டு சுற்ற ஆசையாக இருந்தது.

பல விஷயங்களை அவளிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. இத்தனை நாட்கள் தான் அவளிடம் காட்டிய பாராமுகத்திற்கு மன்னிப்பு கேட்க நினைத்தான்.

ஆனால் ‘இதுவெல்லாம் கூறுவோமா? நடக்குமா?’ எனவும் சந்தேகமாக இருந்தது.

அவன் மனதில் யார்மீதாவது பாசம் வைத்திருந்தாலும் அதனை பெரிதாக வெளிப்படுத்த மாட்டான்.

அது அவன் இயல்பு. ஆனால் அவள் விஷயத்தில் அதை உடைக்கச் சொல்லி மனம் கூச்சலிட்டது.

நேற்று தான் செய்த வேலைகளையெல்லாம் எண்ணியவன், ‘வரவர போலீஸ்ங்கறத மறந்துட்டு பல திருட்டுத்தனம் பண்ணிட்டு இருக்கோம்.’ என சிரித்துக் கொண்டான்.

»»»»

முந்தையநாள் அத்தனை மெதுவாக பைக்கை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.

அவன் சர்ப்ரைஸாக வாங்கியதை ஒரு கையில் பாதுகாப்பாக அவனுக்கு முன்னால் வைத்துக்கொண்டு, வண்டி ஒட்டுவதை சிலர் புருவம் சுருக்கி பார்த்துவிட்டு சென்றனர்.

அவன் சென்று கேட்டைத் திறக்க, சரியாக அவன் ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்த பொருள் வந்தது.

அதைக்கண்டு அவன் நிம்மதி பெருமூச்சுவிட, வந்தவனோ, ‘உள்ளே செல்லலாமா? இவர்தான் ஆர்டர் செய்தாரா? இந்த வீட்டில் இருப்பவரா?’ என்றெல்லாம் அவன் காக்கி உடையை பார்த்து தயங்கி நின்றான்.

அகத்தியனுக்கு ஏற்கனவே அவன் போன் செய்திருந்தபடியால், விரைவாக சென்று பொருளை வாங்கியவன், கேஷ் ஆன் டெலிவரியாதலால் பணத்தை கொடுக்க, தான் கீழே விட்டதும் அந்த பக்கம் ஓடியதை ஓடிச் சென்று எடுத்துக்கொண்டான்.

வந்தவனுக்கு அவனின் செயல் வேடிக்கையாக இருந்தது போலும், நடப்பதை சிரித்தவாரு பார்த்திருந்தான்.

அதனை கவனித்த அகத்தியன் அவனை ‘என்ன’ என்பது போல ஒரு லுக்கு விட, சட்டென நன்றி கூறியவன் தன் வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

வீட்டின் வெளியே யாருமில்லையென உறுதி செய்தவன், மெதுவாக கையில் இரண்டையும் தூக்கிக் கொண்டு வாகனம் நிறுத்தும் அந்த சிறிய அறையில் நுழைந்து, அந்த டாக் கேஜ்ஜை கீழே வைத்துவிட்டு, அதனுள் தான் வாங்கிய நாய்க்குட்டியை வைத்து கதவை லாக் செய்தான்.

அது அவனை பாவமாக பார்க்க, அவனும் அதே போல பார்த்துவிட்டு, வெளியே நின்றிருந்த தன் பைக்கை உள்ளே கொண்டு வந்து நிறுத்தினான்.

‘நல்லவேளை யாரும் பாக்கல.’ என நினைத்து முடிப்பதற்குள்,

அவன் தந்தை, “தம்பி யாரும் வந்தாங்களா? சத்தம் கேட்டுச்சு.” என்றவாரு வீட்டின் தோட்டத்து பக்கம் இருந்து வந்தார்.

ஒரு நிமிடம் ஷாக்கானவன் உடனே, “இல்லப்பா.” என்றான் வியர்வையை துடைத்துக் கொண்டு.

“ஓஹ்… சரிப்பா.” என்றவர் திரும்ப,

“வவ் வவ்…” என அந்த பப்பி தன் பிஞ்சு குரலில் குரைத்து அவனுக்கு ஆப்பு வைத்தது.

“இவ்ளோ நேரம் அமைதியாதான இருந்த இப்போ என்ன? உஷ்… உஷ்…” என அதைக் கண்டு மெதுவான குரலில் கூறினாலும் கேட்காது, மீண்டும் குரைக்க, சத்தம் வந்த பக்கம் வந்து பார்த்தார்.

உடனே திரும்பி அகத்தியனை புன்சிரிப்புடன் நோக்க, அவனுக்கு கொஞ்சம் வெட்கமாக போய்விட்டது. தலையை கோதியவாரு முகத்தை திருப்பிக் கொண்டான்.

பின் சங்கடமான புன்னகையோடு அவரைப் பார்க்க, அவருக்கு மகன் செயலில் அத்தனை மகிழ்ச்சி.

என்ன காரணம் இப்போது இதை வாங்க என தெரியாவிட்டாலும், கண்டிப்பாக இந்த நாய்க்குட்டி அவன் மனைவிக்குத்தான் வாங்கி வந்துள்ளானென தெரிந்தது.

அன்று தையல் கடைக்கு சென்றுவந்த பின் மருமகள் அவள் பார்த்த நாய்க்குட்டியை பற்றி மகிழ்ச்சியாக கூறும்போதே அறிந்தார் அவளுக்கு பிடிக்குமென.

அவர் எதுவும் கூறவில்லை. ஏனென்று கூட கேட்கவில்லை. அவன் தலையில் கை வைத்தவர், சிரிப்போடு சென்றுவிட,

அவன் நாய்க்குட்டியை ‘மாட்டிவிட்டுட்டியே!’ என்பது போல திரும்பி பார்த்தான்.

அப்போது அமைதியாகத்தான் இருந்தது.

“அமைதியா இருக்க வேண்டிய நேரத்துல சத்தம் போட்டுட்டு, இப்போ சைலன்ட்டா இருக்கியா?” என கேட்டுக்கொண்டே அதனை பார்த்தான்.

கியூட்டான நாய்க்குட்டி. ஏனோ அதை முறைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

கதவைத் திறந்தவன், வெளியே வந்த நாய்க்குட்டியின் தலையை மெதுவாக நீவிக் கொடுத்தான்.

அது அவன் கையை நக்கிக்கொண்டு மெதுவாக குரைக்க, பசிக்குது போலுமென நினைத்தவன், மீண்டும் அதனை அந்த டாக் கேஜ்ஜில் வைத்து லாக் செய்துவிட்டு, தான் வாங்கி வந்த பால் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

அதனை கிட்சனில் வைத்துவிட்டு, உள்ளே சென்று வேகமாக குளித்துவிட்டு ட்ராக் பாண்ட், டீஷர்ட் போட்டவன், வெளியே வந்து அவன் மனைவியைத் தேட, வீட்டின் பின்புறம் நடந்தவாரு போன் பேசிக் கொண்டிருந்தாள்.

பொதுவாக அவள் அம்மாவிடம் பேசும்போதுதான் அங்கு செல்வாள். கவனித்துள்ளான். சிலசமயம் ஒருமணி நேரம் கூட ஆகும் பேசி முடிக்க. எப்போதும் அவன் அதைக் கண்டு கொண்டதில்லை. 

ஆனால் இன்று ‘நல்லது.’ என நினைத்தவன், வேகமாக சென்று பாலை காய்ச்சிவிட்டு அதனை ஆரவைத்து, ஒரு குட்டி கப்பை வெளியே எடுத்து வெளியே சென்றான்.

அவன் அப்பா அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தாலும், எதையும் கவனிக்காதது போல மனதுக்குள் சிரித்தவாரு அமர்ந்திருந்தார்.

அங்கு சென்று அந்த கப்பில் பாலை ஊத்தியவன் கதவை திறந்துவிட்டு அந்த நாய்க்குட்டிக்குத் தர, வேகமாக குடித்தது.

பின் அதனை மீண்டும் அதில் வைத்து பூட்டியவன், ஓரமாக சற்று மறைவாக டாக் கேஜ்ஜை வைத்துவிட்டு வெளியே வர, அவன் மனைவி வெளியே வருவதைக் கண்டான்.

சட்டென கையிலிருந்த கப்பை தூக்கி அந்த ரூமின் வெளியே உள்ள சிறிய ஜன்னல் திட்டில் வைத்தவன், ஒன்னுமே நடக்கவில்லை என்பது போல போனை எடுத்தான்.

“என்னங்க…” என அவள் கூப்பிட,

“ம்ம்…” என அப்போது தான் நிமிர்வது போல ஒரு பாவ்லா!

“வந்துடீங்களா… வெளிய இருக்கீங்களே… அதான் காபி போடவானு கேக்க வந்தேன்.” என்றாள்.

தான் பால் காய்ச்சிய பாத்திரம் ஞாபகம் வந்தது. ‘எத்தனை சோதனை?’ என நினைத்து பெருமூச்சுவிட்டவன் “வேண்டாம்.” என,

அவளோ, “இப்போ மாமா டீ குடுக்கும்போது தான காபி குடிப்பீங்க. இன்னைக்கு ஏனோ அவரே பால் காய்ச்சி குடிச்சேன்னு சொன்னாரு. அதான் உங்ககிட்ட கேக்க வந்தேன்.” எனவும், தந்தை தனக்கு உதவி செய்தது புரிந்தது.

பின் ஏன் மறுக்க வேண்டும்?

‘ரொம்ப நேரமா ஓடிட்டே இருக்க மாதிரி பீல்லா இருக்கு.’ என நினைத்தவன், “சரி எனக்கும் காபி போடு.” என்றதும்,

“சரிங்க.” என்றவள் திரும்ப, மீண்டும் அந்த நாய்க்குட்டி தன் பிஞ்சு குரலில் குரைத்தது.

‘நம்மள ஒரு வழி பண்ணாம விடாது போல.’ என நினைத்தவன் அவளை பார்க்க, அவளும் எங்கு சத்தம் வருகிறது என சுற்றி முற்றி தேடிக்கொண்டிருந்தாள்.

“என்னவோ சத்தம் கேட்டுச்சுல்லங்க?” என வினவ,

“இல்லையே…” என்றான் சாதாரணம் போல.

மீண்டும் அந்த பப்பி குரைக்க, அவள் மீண்டும் திரும்பினாள்.

‘நம்ம சாதாரணமா சொன்னா நகர மாட்டா. அந்த குட்டியும் கம்முனு இருக்காது.’ என புரிந்து கொண்டவன்,

“எனக்கு முக்கியமான ஒரு கால் பேசணும். தலை வலிக்குது. சீக்கிரம் போய் காபி போடு.” எனக்கூற,

ஆராய்ச்சியை நிறுத்தியவள், தலையை ஆட்டியவாரு உடனே உள்ளே சென்றுவிட்டாள்.

உண்மையிலேயே அவனுக்கு தலை வலித்தது.

‘எப்படி சத்தமில்லாமல் திருடுகிறார்கள்?’ என அந்த நேரத்தில் திருடர்களை பற்றி ஆச்சர்யமாக நினைத்த போதும், தப்பு செய்தால் வெளுத்து விடுவான் என்பது கவனிக்கப் படவேண்டிய உண்மை.

அதன்பின் அவன் முக்கியமான கால் என கூறி அடிக்கடி வெளியே வந்து அதை பார்த்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, அவள் தூங்கும் வரை ஒரு வழியாகிப் போனான்.

இதையெல்லாம் நினைத்து பார்த்தவனுக்கு சிரிப்புதான் வந்தது.

‘நானா இது?’ என கேள்வி கேட்டுக் கொண்டவன், நேரத்தை பார்க்க, பன்னிரண்டாக இன்னும் சில நிமிடங்களே இருந்தது.

வேகமாக வெளியே சென்றவன், அந்த நாய்க்குட்டியை தங்கள் அறைக்குள் தூக்கி வந்தான்.

அவனின் இத்தனை திருட்டுத்தனத்திற்க்கும்  காரணமானவளோ எதையும் அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தாள்.

 

காவல்காரனாய் இருந்த உன்னை

இன்று கள்வனாய் மாற்றிவிட்டேன்

»»»»

‘எழுப்பலாமா… இல்ல வேணாமா?’ என யோசித்து கொண்டு தயங்கி நிற்க, அந்த பப்பி, ‘நான் ஹெல்ப் பண்றேன்.’ என்பது போல குரைத்தது.

சட்டென ஒரு யோசனை வர, ‘பயப்படாம இருப்பாளா?’ என நினைத்தாலும், ‘பக்கத்துல தான இருக்கோம் பாத்துக்கலாம்.’ என அந்த குட்டியை பெட்டில் விட்டான்.

அதுவும் அவன் மனநிலையை புரிந்தது போல, கீர்த்தி பக்கம் சென்று, அவளை சுரண்டி கொண்டு, பிஞ்சு குரலில் “வவ் வவ்…” என சவுண்டு விட,

அந்த நாய்க்குட்டியின் ஸ்பரிசத்திலும், சத்தத்திலும் லைட்டாக தூக்கம் கலைய, மெதுவாக கண்ணைத் திறந்தாள்.

முதலில் அந்த குட்டியை பார்த்து அதிர்ந்தாலும் சட்டென எழுந்தவள், ஏனோ உடனே அதனை ஒரு சிரிப்புடன் கையில் எடுத்துக் கொண்டாள்.

சில நொடிகளுக்கு பின்னே கட்டிலுக்கு எதிரே கைக்கட்டி கொண்டு தன்னை பார்த்துக் கொண்டிருந்த கணவனை கவனித்தாள்.

‘இந்த நாய்க்குட்டி எப்படி இங்க வந்துச்சு? இவர் இன்னும் தூங்காம என்ன பண்றாரு?’

என்று தூக்கத்தில் இன்னும் முழுமையாக தெளியாதவள் குழம்பியவாறு அவனை பார்த்தாள்.

அப்போது அவன் மொபைலில் வைத்த ரிமைண்டர் அடித்தது, பர்த்டே டியூனாக.

அதில் தூக்கம் தொலைதூரம் சென்றுவிட, கண்கள் மின்ன அவனை நோக்கினாள்.

அவளின் முகபாவனையைக் கண்டவன் இம்முறை வெளிப்படையாக வசீகரமான ஒரு சிரிப்பை உதிர்த்தான்.

அவ்வளவுதான், அவளுக்கு மயக்கமே வந்துவிடும் போலானது.

‘இது கண்டிப்பா கனவுதான்.’ என தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள், கைகளை கிள்ளி பார்க்க, வலித்தது.

‘அப்போ நிஜமா?’

மனைவி செயலை பார்த்து அவன் புன்னகை இன்னுமே அதிகமானது.

அந்த சிரிப்புடன் அவளேதிரே பெட்டிற்கு அருகே வந்து நின்றவன், “ஹாப்பி பர்த்டே…” எனக் கூறினான்.

அவ்வளவுதான்… அதற்கு மேல் என்ன சொல்ல? அவனுக்குத் தெரியவில்லை. அமைதியாகிவிட்டான்.

‘அவளுக்கு நாய்க்குட்டியை பிடிச்சிருக்கு… ஆனா ஒரு ரியாக்ஷனும் கொடுக்காம இருக்காளே?’ என்றவாறு பார்க்க,

அத்தனை நேரம் இன்ப அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவள், அதற்குமேல் தாமதிக்காமல், நாய்க்குட்டியை ஓரமாக விட்டுவிட்டு கட்டிலிலிருந்து எழுந்து அவனை அணைத்துக் கொண்டு,

“தேங்க்யூங்க…” என்றாள் அளவில்லாத சந்தோஷத்துடன்.

அவளிடம் இருந்த அதிர்ச்சி அவனுக்குத் தாவியது.

அவளிடம் ரியாக்ஷனை எதிர்பார்த்தான்தான். ஆனால் இத்தகைய எதிர்வினையை அவன் அணுவளவும் எதிர்பார்க்கவில்லை.

தன் மனைவியின் செயலில் உறைந்து போய் நின்றான்.

ஆனால் அவள் அதையெல்லாம் கவனிக்க வில்லை. உண்மையை சொன்னால் அவள் என்ன செய்தாள் என்று கூட அவளுக்கு தெரியவில்லை.

அதீத சந்தோஷத்தின் வெளிப்பாடே அந்த அணைப்பு.

‘அவருக்கு பிறந்தநாள் நியாபகம் இருக்குமா?’ என நினைத்திருந்தவளை பன்னிரண்டு மணிக்கு எழுப்பி அவளுக்கு பரிசாக ஒரு கியூட்டான நாய்க்குட்டியை கொடுத்திருக்கிறான்.

அவளை எழுப்பி வாழ்த்தியிருந்தாளே அது அவளை பொறுத்தவரை பெரிய பரிசுதான்.

அப்டியிருக்க… இதுவெல்லாம் அவன் செய்தால் அவளும் என்னதான் செய்வாள்?

சின்ன வயதிலிருந்தே அவளுக்கு நாய்க்குட்டியை வளர்க்க ஆசை. ஆனால் அவள் அம்மாவிற்கு நாய்க்குட்டி, பூனைக்குட்டி வளர்ப்பதெல்லாம் பிடிக்காது.

அம்மா பேச்சை பெரிதாக மீறாதவள் அந்த ஆசையை விட்டுவிட்டாள்.

அப்படி அவள் ஆசைப்பட்ட ஒன்றை தான், கணவன் அவளுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்திருக்கிறான்.

அவர்கள் அறையின் கதவு திறந்திருக்க, அதன் வழியே வெளியே சென்ற பப்பியை பின் தொடர்ந்தவள், சற்று நேரம் அதனுடன் விளையாட எண்ணி, வெளி லைட்டை போட்டுவிட்டு கதவை திறந்து வெளியே வந்து அதனை கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

கதவு திறந்த சத்தத்தில் தன்னை மீட்டுகொண்டான்.

அவள் செயல் அவனுள் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தியது. அவனிதழ்கள் அழகான ஒரு மென்னகையை சிந்தியது.

உள்ளே அவள் இல்லை என உணர்ந்து, கதவு திறக்கும் சத்தம் கேட்டதால் வெளியே சென்றான்.

அன்று போல இன்றும் அதனை அன்பாக கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

சில நிமிடம் பொறுத்தவன், அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

பின் வேறு அறையிலிருந்த முன்பே வாங்கி வைத்திருந்த டாக் பெட்டை எடுத்து வந்தான்.

ஏனோ அந்த டாக் கேஜ்ஜில் அந்த குட்டியை வைத்து பூட்ட மனமே வரவில்லை. முன்பு அவள் பார்க்க கூடாது என நினைத்து வெளி அறையில் வைத்திருந்ததால் பாதுகாப்பிற்காக அதில் நாய்க்குட்டியை விட்டான். ஆனால் இப்போதுதான் தெரிந்துவிட்டதே.

அவள் கையிலிருந்த நாய்க்குட்டியை வாங்கியவன் அந்த குட்டி பெட்டில் அதை வைக்க, அதற்கு உறக்கம் வந்துவிட்டது போலும் சமத்தாக படுத்துக் கொண்டது.

கீர்த்தி தன் கணவனின் செயல்களையெல்லாம் இமைக்க மறந்து தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தாள்.

அவன் நிமிரவும் பேச வர, பழைய மோடிற்கு மாறியவன்,

“லேட் ஆச்சு… தூங்கு. காலையில பேசிக்கலாம்.” என மென்மையாக அதேசமயம் கண்டிப்பான குரலில் கூறினான்.

‘வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சு போல!’ என பெருமூச்சு விட்டவள் அவனை லைட்டாக முறைத்து பார்த்துவிட்டு தலையசைத்தவாறு படுத்துக் கொண்டாள்.

அந்த முறைப்பை ரசித்தாலும் அதை முகத்தில் காட்டது அவனும் அவளருகில் படுத்துக் கொண்டான்.

இனிமையான மனநிலையுடன் இருவரும் சிறுது நேரம் கழித்து உறக்கத்தை தழுவினர்.

 

தொடரும்…