UYS – 18.2

UYS – 18.2
அத்தியாயம் – 18.2
காலையில் எழுந்தபின் பிறந்தநாள் என அறிந்து கொண்ட மாமனாரிடமும் ஆசி வாங்கினாள்.
‘இதற்குத்தானா… நேற்று அத்தனை போராட்டம்.’ என்று நினைத்துக் கொண்டவருக்கு மகன் செயலில் அத்தனை மகிழ்ச்சி கொண்டார்.
காலையில் எழுந்ததிலிருந்து நாய்க்குட்டியை கொஞ்சியவாரு சுற்றியவளை முதலில் சற்று கண்டு கொள்ளாமல் தான் இருந்தான். ஆனால் நேரமாவதை உணர்ந்தவன்,
“இப்போ நீ போய் கிளம்பல… நான் அங்க போக லேட் ஆகிடும். அதால நான் அப்படியே கிளம்பிடுவேன்.” என கூறவும் உள்ளே புறப்படச் சென்றுவிட்டாள்.
‘அதட்டுனா தான் சொன்னதை கேக்குறா.’ என பெருமூச்சு விட்டவாரு நகர்ந்தான்.
லீவு போட நினைத்தது நினைப்பாகவே போனது.
ஒரு முக்கியமான மீட்டிங்கிற்கு வெளியே செல்ல வேண்டுமென கடமை அழைக்க, இருநாட்கள் வெளியே வேலை. அவனும் அவளிடம் முன்பே கூறிவிட்டான்.
கொஞ்சம் நேரம் முன்பு,
“என்னங்க…”
“ம்ம்…”
“இன்னைக்கு… கோவிலுக்கு போய்ட்டு வரலாமா?” எனக் கேட்க,
‘போய்ட்டு வரலாம்னு சொல்லாம வரலாமானு கேக்கறாளே.’ என சற்று மனம் சுணங்கினாலும்,
இன்றைக்கு உள்ள மீட்டிங் பற்றி சொன்னவன், “சரி.” என்றான்.
அவள் இன்னும் நகராமல் அங்கேயே நின்று கொண்டிருக்க, மீண்டும் என்ன என்பது போல ஒரு பார்வை.
“அது… அது…” என இழுத்தவள், “கோவிலுக்கு என்ன பார்க்க அம்மா அப்பா ப்ரீத்திலாம் வராங்க. உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?” எனக் கேட்டாள். அவள் குரலில் அத்தனை தயக்கம்.
அதைக் கேட்டு அவன் மனதுக்கு உண்மையிலேயே கஷ்டமாக இருந்தது.
அவளை என்றும் அவர்கள் யாரிடமும் பேசக் கூடாது என்றெல்லாம் அவன் கூறியதில்லை. அதேசமயம் அவர்களுடன் அவனும் பெரிதாக பேசியதில்லை.
ஆனால் தன் நடவடிக்கை அவளை எப்படியெல்லாம் பாதித்துள்ளது என நன்கு புரிந்தது.
‘இதுலாம் எப்போ சரியாகும்?’ என ஆயாசமாக அவளை நோக்கியவன்,
“அதுல எனக்கு என்ன பிரச்சனை வர போகுது?” என கேட்டுவிட்டு,
“சீக்கிரம் கிளம்பு.” என நகர்ந்துதும் மனதில் குஷியாகிவாறு புறப்படச் சென்றாள்.
»»»»
கோவிலுக்கு புறப்பட்டுவிட்டு, சாவகாசமாக சோபாவில் சாய்ந்து கொண்டு டிவியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
கொஞ்சம் முன்னவே கோவில் செல்வதால் மீண்டும் யூனிபார்மிற்கு மாறி சென்றுவிடலாமென காக்கியை விடுத்து, கருப்பு நிற பாண்ட்டும் வெள்ளை நிற ஷர்ட்டும் அணிந்திருந்தான். கம்பீரமாக அழகாக இருந்தான்.
அவன் முறுக்கேறிய கையில் புதிதாக ஒரு காப்பு குடியேறி இருந்தது.
திருமணத்திற்கு முன்புமே இருவரும் பெரிதாக பேசியதில்லை.
‘நம்மகிட்டதான வரப்போறா அப்போ பேசிப்போம்.’ என்றே அகத்தியன் நினைத்திருந்தான்.
ஆனால் நடந்த பிரச்சனையும், அதன் பின்னான மனைவியுடனான வாக்குவாதமும் அவனை மனைவியிடம் இயல்பாக பேச விடவில்லை.
கல்யாணத்திற்கு முன் ஒரு சமயம் அவள் வீடு செல்லும்போது, டிவியில் ஒரு கதாநாயகன் காப்பை ஏற்றிவிட்ட சீனைக் கண்டு, “கெத்தா இருக்குல காப்பு போட்ருந்தா. அவரும் இப்படி ஒரு காப்பு போடலாம்.” என அவள் சொல்ல, ப்ரீத்தி ஓட்டித் தள்ளி விட்டாள்.
ஆனால் அவன் உள்ளே வரவும் மூஞ்செலி கணக்காய் கீர்த்தி அறைக்குள் ஓடிவிட்டாள் என்பது வேறுவிடயம்.
விஷயமறிந்து கொண்டானல்லவா ஆடவன்.
அப்போதே திருமணத்திற்கு பின் அணிய வேண்டும் என வாங்கி வைத்தது. இன்றுதான் அவன் கைகளுக்கு வந்திருந்தது.
அவள் சென்று அரை மணி நேரத்திற்கு மேல் இருக்கும்.
‘அப்படி என்ன தான் பண்றாளோ!பொண்ணுங்க புறப்பட லேட் ஆகும்ன்றது எவ்ளோ சரி.’ என்பது போல நினைத்துக் கொண்டு அவர்கள் அறையின் கதவை அவ்வப்போது கண்டவாரு தொலைக்காட்சியை நோக்கிக் கொண்டிருக்க… கதவு திறக்கும் சத்தம் கேட்க திரும்பி பார்த்தான்.
அதன்பின் அவன் கண்கள் வேறெங்கும் செல்லவில்லை.
அவளை மட்டுமே பார்த்தது… பார்த்தது… பார்த்துக் கொண்டே இருந்தது.
பச்சை நிற பட்டு சீலை உடுத்தியிருக்க, க்ளிப்பால் சிறு பகுதி கூந்தல் சிறை பெற்றும், மீதம் காற்றில் நடனமாடிக் கொண்டும் இருந்தன.
தோட்டத்தில் இருந்த மல்லிகையை கட்டி அவள் கூந்தலில் சூட்டியிருந்தாள்.
கழுத்தில் எப்போதும் இருக்கும் தாலியோடு ஒரு தங்க நகை, வளையல், தோடு என ரொம்ப மிகையான அலங்காரம் அல்லாமல் சரியாக செய்திருந்தாள்.
அவளை நேரடியாகவே ரசித்து பார்த்தான்.
போதும்… கண்ணாமூச்சியெல்லாம். முதலில் சில காரணங்களால் பாராமுகம். பின் அவன் சிறு திட்டம். ஆனால் இன்று… இனி… அதுவெல்லாம் முடிந்த கதை என மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
கீர்த்தியோ… நேற்றிலிருந்து அவனிடம் ஒரு சின்ன நெருக்கம் தோன்றிவிட்டது போலதான் உணர்ந்தாள்.
புறப்பட்டு வெளியே வர அவள் கண்டதென்னவோ அவளவனின் கம்பீரமான தோற்றத்தைத்தான்.
அவளுமே அவனை சைட்டடித்தாள். ஆனால் சில நொடிகளிலேயே தன்னை காணும் அவன் பார்வையை உணர்ந்தவள்தான் வெட்கம் கொண்டு தலையயை குனிந்து கொள்ள வேண்டியதாகிவிட்டது.
அவன் இதற்கு முன் அவளை பார்த்துள்ளான்தான். ஆனால் கண்களில் இத்தனை ரசனையோடு அவளை நோக்கும் இந்த பார்வை அவளுக்கு புதிது.
பார்வைக்கே அவள் கன்னங்கள் வெட்கத்தால் சிவப்பை பூசிக்கொள்ள… மனதுக்குள் பதற்றத்துடன் மகிழ்ச்சி.
‘அன்று கண்டு கொள்ளாதது போல இன்றும் கண்டுக்கமாட்டரோ?’ என லைட்டாக நினைத்தாள்.
ஆனால் அந்த நினைப்பையெல்லாம் துகளாக்கி… அவளை வைத்த கண் வாங்காமல் சைட்டடித்துக் கொண்டிருந்தான் அவள் கணவன்.
அவன் கண்களோ அவளை மேலிருந்து கீழாக ரசித்துக் கொண்டே… அவள் இடையில் வந்து நின்றது.
உடனே பார்வையை வெகு பிரயத்தனப்பட்டு திருப்பிக் கொண்டான்.
‘என்னடா… பண்ற?’ அவன் மனம் கடிந்து கொள்ள,
மற்றொரு மனமோ, ‘நானென்ன தவறு செய்தேன்?’ என பாவமாக கேட்டது.
தவறு என கூறுவதற்கியில்லைதான். ஆனால் நேற்றிரவே தயக்கமாக இருந்த போதும் அவளிடம் சில விஷயங்கள் பற்றி பேச நினைத்தான்.
நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தவளின் புடவை இடை பக்கம் சற்று விலகி அவன் கண்களுக்கு காட்சியளிக்க, அவனுக்கு அதற்கு மேல் எங்கிருந்து பேச வரும்?
அவளிடம் கூறவும் முடியவில்லை. கண்கள் அங்கு செல்வதை தடுக்கவும் முடியவில்லை. ஆதலாலே சட்டென தூங்கு பிறகு பேசிக் கொள்ளலாம் என்றான்.
என்னதான் அவளுக்குத் தன் முந்தைய நடவடிக்கையால் மீது பெரிதாக கோபம் இல்லையென அறிந்த போதும்… அவனுக்கு குற்றவுணர்வாக இருந்தது.
மனைவி என ரசிக்கிறான். சில விஷயங்களை செய்கிறான். சில விஷயங்களை மாற்றிக் கொள்ள நினைக்கிறான்.
ஆனால் மனம் விட்டு அவளிடம் சில விஷயங்கள் பேசிய பின்னே, அவளிடம் முழு உரிமை எடுத்துக் கொள்ள வேண்டுமென முடிவு செய்திருந்தான்.
அப்படியிருக்க, ‘காலையிலேயே என்னை சோதனைக்குள்ளாக்குகிறாளே!கிராதகி.’ என நினைத்தவன் செவியில் விழுந்தது டிவியில் ஓடிக்கொண்டிருந்த சிட்டுவேஷன் சாங்.
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
அதைக் கேட்டவன் ஒரு அழகான புன்னகையோடு தன் கேசத்தைக் கோதி தன்னை கொஞ்சம் சமன்படுத்தினான்.
அவனிடம் அவள் வர… வெளியே யாரோ கீர்த்தியை அழைத்தனர். பக்கத்து வீட்டு பெண்ணாகத்தான் இருக்கும்.
அழைக்கும் சப்தம் கேட்டதால், ‘ப்ச்… அவர்ட்ட போலாம்னு பார்த்தா…’ என கொஞ்சம் சலித்துக் கொண்டாலும் வெளியே செல்ல சில அடிகளை எடுத்து வைக்க… அதை கவனித்தவன் பதறிச் சென்று அவள் கைகளை பிடித்தான்.
‘வெளியே யாரும் இருக்கலாம். சாலையில் செல்லலாம். ஒழுங்கா சீலைய காட்டாம படுத்தி எடுக்கிறாளே.’ என கடுப்பானவன் அவளை பிடித்துக் கொண்டான்.
ஆனால், ‘எப்படிக் கூற?’ எனத் தடுமாறினான்.
அவள் மீது இருந்து வந்த வாசம் வேறு அவனை என்னவோ செய்தது.
அவளுக்கு கணவன் பிடியில் உள்ளுக்குள் சற்று உதறினாலும், என்ன என்பதுபோல அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
நெருக்கத்தில் மனைவியின் முகம் கண்டவன் தன்னை மறந்து, “அழகா இருக்க…” என ஆழ்ந்த குரலில் கூற, வெகுவாக நாணம் கொண்டாள்.
தன் கணவன் தன்னை ரசித்து தன்னிடம் ஒரு வார்த்தை கூற வேண்டும் என்ற பல நாள் ஆசையும் நிறைவேறிவிட்டது.
சில நொடி அவள் வெட்கத்தை ரசித்து பார்த்தவன் தன்னை மீட்டுக்கொண்டு,
“உன்…என கொஞ்சம் இழுத்தவன், “சாரீய சரி பண்ணு.” என கடிந்த குரலில் விஷயத்தை கூறி உடனே சென்றுவிட்டான்.
அவன் சென்ற பின் தன்னை ஆராய்ந்து உடனே சீலையை சரி செய்தவள், ‘உங்க பார்வை ஏன் அங்க போச்சு?’ என மனதுக்குள் கூச்சம் கொண்டு சிணுங்கினாலும்,
‘அதக் கூட சாப்ட்டா சொல்ல மாட்டாரா? இவ்ளோ நேரம் சைட்டடிச்சிட்டு, அழகா இருக்கேன்னு சொல்லிட்டு எப்படிதான் சட்டுனு பழைய மோட்க்கு போறாரோ! சரியான சிடுமூஞ்சி.’ எனக் கறுவினாள்.
அவன் வழக்கம் போல வெளியே அவள் பெயரை “கீர்த்தி…” என கத்தவும்… வெளியே விரைந்து வந்தாள்.
தயானந்தனிடம் கூறியவர்கள், கிளம்ப, பைக்கில் ஏறாமல் நின்றிருந்தவனை புரியாமல் பார்த்தாள்.
அவளைப் பார்த்தவாறே காப்பு போட்டிருந்த கையினால் கூலர்சை போட்டவன், பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
அவள் விழிகள் ஒருக்கணம் வியப்பால் விரிந்தது. குஷியாக அவன் தோளில் கை வைத்து பைக்கில் அவனருகே கிட்டத்தட்ட உரசியவாறு அமர்ந்தவள் கையை எடுக்கவும் இல்லை.
அதில் அவன் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை.
இருவரும் மகிழ்ச்சியான மனநிலையில் கோவிலுக்குச் சென்றனர்.