UYS 22

1662455813139-d849073d

UYS 22

அத்தியாயம் 22

 

இரண்டு நாட்கள் ஆகிவிட்டிருந்தது மகா கல்லூரியில் சேர்ந்து.

என்னென்ன சப்ஜெக்ட், பாடத்தின் சிலபஸ், பாட அறிமுகம்  என்று பொதுவாகவே வகுப்புகள் சென்று கொண்டிருந்தது.

போர்டில் ஆசிரியர்கள் எழுதுவதை சலிக்காமல் எழுதித் தள்ளும் மகாவை பார்த்த அவள் தோழி கவியோ,

“ஏன் மகா கை வலிக்கல?” என கைகளை உதறிக்கொண்டே பாவமாக கேட்க,

பதிலுக்கு, “இல்லையே…” என்று சிரித்தாள்.

வகுப்பில் பலருடன் தோழியாகியிருந்தாள். ஆசிரியர்கள், சக தோழிகள், சீனியர்கள் அனைவருமே இனிமையானவர்களாகவே இருந்தனர்.

அவள் டிபார்ட்மென்ட்டை சேர்ந்த, மூன்றாம் வருடம் படிக்கும் மாணவிதான் அவள் வரும் பேருந்தில் மகா முதல்நாள் பிடித்த நட்பு.

சீனியர், ஜூனியர் என்ற பந்தா இல்லாமல் அவர்களே வந்து இவர்களிடம் பேசிவிட்டு சென்றனர்.

வீட்டில் உணரும் தனிமையால் சிறுவயதிலிருந்தே மகாவிற்கு பள்ளி செல்வது மிகவும் பிடிக்கும்.

அப்படியிருக்க இப்போது இந்த இருநாள் கல்லூரி அனுபவமும் அவளுக்கு நன்றாகவே இருந்தது.

இடது பக்கம் தொடர்ந்து வகுப்பறைகள். வலது பக்கமும் தொடர்ச்சியான வகுப்பறைகள். அந்த ப வடிவ வளாகத்தில் நடு பக்கமும் இதே போல.

இடையிடையேயே கீழே செல்வதற்க்கான ஸ்டெப்ஸ் மற்றும் ஸ்டாஃப் ரூம் என கட்டிடம் இருந்தது. 

தொடர்ந்த மூன்று வகுப்பறையை கொண்டதில், மகா இருந்த கிளாஸ் ரூம் இறுதியாக படிக்கட்டின் அருகே அமைந்திருந்தது. 

தேர்டு இயர் மாணவர்கள் இவர்கள் வகுப்பைக் கடந்துதான் படிக்கட்டின் மூலம் கீழே செல்ல முடியும்.

முதல்வருட புது மாணவிகள் சேர்ந்திருப்பதால், வயதுக்கே உரிய குறும்பால் அவர்களை சைட்டடித்துக் கொண்டு, அவர்கள் முன் கெத்து காட்ட சில தேர்டு இயர் மாணவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

இதோ… தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன் என ஆசிரியரிடம் அனுமதி வாங்கிவிட்டு, அவர்கள் அறைக்கு வெளியே இருக்கும் டேப்பை விடுத்து, படிக்கட்டுக்கு அருகே இருக்கும் டேப்பில் தண்ணீர் அருந்துகிறோம் என்று பெயர் பண்ணிக் கொண்டு, பர்ஸ்ட் இயர் வகுப்பை நோட்டம் விட்டவாறே நின்று கதை பேசிக் கொண்டிருந்தனர் ஜீவாவும், நந்துவும்.

கீழே ஒரு வேலையாக சென்றுவிட்டு மேலே வந்த அந்த டிபார்ட்மென்ட் ஹெச்.ஒ.டி மேம் கண்டது இவர்களிருவரையும் தான்.

“இங்க என்னடா செய்றீங்க?” என்ற கண்டிப்பான குரலில் அவர்களிருவரும் பதறி திரும்பி பார்த்தனர்.

சித்ரா மேம்…

மாணவர்களிடம் நன்றாகவே பேசுவார். நன்கு புரியும் படி பாடம் நடத்துவார்.

ஸ்டுடென்ட்ஸிற்கு ஏதேனும் உதவி, ஒரு பிரச்சனை என்றால் துணையாக இருப்பது என்று மாணவர்களுக்கு மிகவும் பிடித்த பெண்மணிதான்.

ஆனால் அவரிடம் ஒரு கண்டிப்பு இருக்கும். அதை அவரிடம் படிக்கும் மாணவர்கள் நன்றாகவே உணர முடியும்.

இயல்பாக பேசி சிரித்தாலும், ஏதும் தவறு செய்தால் பயங்கரமான மண்டகப்படி கிடைக்குமென்று அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கண்டிப்பு.

இதுதான் பிற்பாடு சூர்யா ஆசிரியரான பின், அவன் கடைபிடிப்பது.

திருதிருவென விழித்தவர்கள், “தண்ணி குடிக்க வந்தோம் மேம்…” என திணறலாக சொல்ல, அவர்களை நம்பாத பார்வை பார்த்தவர், எதிரே தேர்டு இயர் வகுப்பறைக்கருகே உள்ள டேப்பை பார்க்க,

“அங்க தண்ணி வரல மேம்.” என்று அடித்துவிட்டனர்.

அவர்கள் போறாத நேரம், அப்போதுதான் சூர்யாவிற்கு தாகமாக இருக்க, ஆசிரியரிடம் கேட்டுவிட்டு வெளியே வந்தவன், அவர்கள் சொன்ன தண்ணி வராதா டேப்பில் தண்ணீர் அருந்திவிட்டு கிளாஸ் கவனிக்கும் மும்முரத்தில் உடனே உள்ளே சென்றுவிட, அப்போது திட்ட ஆரம்பித்தவர், இன்டெர்வல் வரை திட்டி முடித்த பாடில்லை.

உள்ளே உட்கார்ந்திருந்த முதல் வருட மாணவிகளுக்கு கூட அவரின் அன்பான ஏச்சுக்கள் கேட்க, சிரித்துக் கொண்டனர்.

இவர்களுக்குதான் ‘ஒரே அசிங்கமா போச்சு குமாரு.’ மொமன்ட்.

இன்டெர்வலில் வெளியே பரத்துடன் வந்த சூர்யா இவர்களிடம் வர, அவர்களோ இவனை முறைக்க, இவன் ஏன் என்பது போல புரியாமல் பார்த்தான்.

கீழே படிகட்டில் இறங்கிக் கொண்டே, “ஏன்டா… சரியா அப்போவேதான் உனக்கு தண்ணி தாகம் எடுத்துச்சா?” என ஜீவா எகிற,

“எப்போடா?” என்றான் சூர்யா அப்போதும் புரியாமல்.

“ம்ம்… கொஞ்ச நேரம் முன்ன. நீ தண்ணி குடிச்சதால நாங்க எவ்ளோ திட்டு வாங்குனோம் தெரியுமா?” என,

“இது என்னடா வம்பா போச்சு! தண்ணி குடிச்சது ஒரு குத்தமா?” என பரத்திடம் கேட்டான்.

அவனோ, “எதுனா பண்ணி மாட்டிருப்பானுங்க மச்சி. அதான் இப்படி பொங்குறானுங்க.” என்றுவிட்டு என்ன நடந்தது என கேட்க,

நடந்ததை சோகமாக கூறியவர்கள், “பாரு காதுல இருந்து ரத்தம் வருது.” என வராதா… இல்லாத ரத்தத்தை விரலில் காமிக்கவும், அவர்களை ஒரு லுக்கு விட்ட இருவரும் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பிக்க, இவர்களிருவரும் கடுப்பாக முறைத்துப் பார்த்தனர்.

சூர்யா, பரத், ஜீவா, நந்து நால்வரும் கல்லூரியில் திக்கு ப்ரண்ட்ஸுங்கோ!

கல்லூரி சேர்ந்து நாளிலேயே உருவான நட்பு… நாட்கள் போக போக இன்னுமின்னும் அவர்களிடையே பிணைப்பு கூடிக்கொண்டே தான் போகிறது.

இதுபோல கேலி, கிண்டல், சண்டை பேச்சுக்கள் இல்லாது கல்லூரி நாட்கள் எப்படி செல்லும்?

கேன்டீனிலும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருக்கும் இருவருக்கும் எக்ஸ்ட்ரா ரெண்டு சமோசா வாங்கிக் கொடுத்தே சமாதானம் செய்ய முடிந்தது.

ஆனாலும் மதிய உணவு உண்ணும் சமயம், “ஏன்டா… பரத் கமிட்டட். அதால நல்லவனா யாரையும் சைட்டாடிக்காம இருக்கான். நீயேன் மச்சி அநியாயத்துக்கு நல்லவனா இருக்க? பொண்ணுங்ககிட்ட பிரண்ட்லியா பேசினாலும் லவ் பண்ணணும்ன்ற தாட் இல்லையா?” நீண்ட நாட்களாக கேட்க நினைத்ததை ஜீவா கேட்க,

அழகான ஒரு புன்னகையை சிந்தியவன் தண்ணீரை அருந்திவிட்டு பதில் கொடுக்காமல் இருக்க, மீண்டும் கேட்கவும்,

“என்னடா தெரியணும் உனக்கு? இப்போ இந்த கேள்வி ரொம்ப தேவையா?” என்றான் நண்பனின் விடாத கேள்வியில் சற்றே கடுப்பாக.

இப்போது அவர்களோடு பரத்தும் சேர்ந்து கொண்டான்.

படிப்பு படிப்பென்றே சுத்திக்கொண்டு இருக்கும் சூர்யாவிற்கு ல்தகா சைஆ உண்டா என்பதே அவர்களின் ஆர்வத்திற்கு காரணம்.

பொதுவாக இதுபற்றி பேசினால் தவிர்க்க பார்ப்பான். இன்று ஏனோ, எப்படியும் பதில் வாங்காமல் விடமாட்டார்கள் என புரியவும் குரலைச் செருமியவன்,

“லவ் பண்ண இதுவரை நெனச்சதில்லடா. அத பத்தி யோசிக்க எனக்கு டைமும் இல்ல. காலேஜ் முடிஞ்சதும் அங்க கடைக்கு போய்ட்டு திரும்பி வீட்டுக்கு போய் சாப்ட்டு தூங்கதான் டைம் இருக்கு. இதுல எந்த கேப்புல நான் இதை பத்திலாம் யோசிக்க?” என சிரித்தான்.

எதார்த்தமாகதான் அவன் சொன்னான். உண்மையும் அதுவே. அவன் இருக்கும் நிலையில் காதல் பற்றி இதுவரை யோசிக்க தோன்றவில்லை. யோசிக்கும் படி அவன் கண்களில் யாரும் சிக்கவுமில்லை.

ஆனால் இனி?

சூர்யா வீட்டின் நிலைமையை அவன் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், ஓரிரு முறை அவன் வீட்டுக்கு சென்றபோது கற்பகம் நடவடிக்கையிலே ஓரளவு விஷயம் புரிந்துவிட, அவன் பார்ட் டைம் ஜாப் எல்லாம் கண்டும் அவனிடம் இதை கேட்டிருக்க கூடாதோ என்று அவர்கள் முகம் சுருங்கியது.

“இப்போதைக்கு படிப்பு… அப்பறோம் எப்படி ஒரு நல்ல காலேஜ் ப்ரோபஸ்ஸர் ஆகறதுன்றதுல தான் எண்ணம் முழுக்க இருக்கு.” என்றவனிடம்,

“கண்டிப்பா லைப்ல ஒரு நல்ல பொசிஷனுக்கு வருவ மச்சான்.” என மனதார கூறியவர்கள், அவனை கட்டியணைக்க, அதில் நெகிழ்ந்தாலும்,

‘ஓவரா பீலிங்கா பேசிட்டாமோ?’ என தன்னையே கடிந்தவன், அவர்களை சிரிக்கவைத்து இயல்பாக்கிய பின்னே நிம்மதியானான்.

இதற்குமேல் இப்படி பேசி அவர்களை வருத்தக்கூடாது என முடிவும் செய்து கொண்டான்.

முதல் பெல் அடிக்கவும், அதற்குமேல் தாமதித்தால் மீண்டும் ஹெச்.ஒ.டி யிடம் அரச்சனை கிட்டுமென்பதால் கிளாஸிற்கு விரைந்தனர்.

கல்லூரி நாட்கள் இப்படி அழகாகவே சென்றது.

இருவாரங்கள் கழிந்த நிலையில் பிரெஷ்ஷர்ஸ் டே செலிப்ரேஷனுக்கு அனுமதி வழங்கப்பட, அந்த வார வெள்ளியன்று கொண்டாட்டமென முடிவு செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவருக்கும் அதில் அத்தனை உற்சாகம்.

சீனியர்கள் ( சூர்யா, ஜீவா, பரத், நந்து ) வந்து எல்லாரும் ஆளுக்கு எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும், அன்று என்ன விளையாட்டெல்லாம் நடக்கும், என்ன சாப்பாடு மற்றும் ஸ்னாக்ஸ் என்றெல்லாம் சொல்லியவர்கள், எத்தனை பேர் வெஜ், நான் வெஜ் எனவும் கேட்டு தகவலை பெற்றுக் கொண்டு சென்றார்கள்.

அன்று எல்லாரும் செட் சாரீதான் கட்டவேண்டும் என பெண்கள் குழு உடனே ஒரு ப்ளூ நிற சிம்பிளான அழகான புடவையை குரூப்பாக ஆர்டர் செய்து, பக்கத்திலிருக்கும் ஒரு கடையில் அதனை இரண்டு நாட்களுக்குள் தைத்து தரும்படியும் கூறிவிட்டனர்.

மகாவிற்கு அப்போதெல்லாம் சாரீயே கட்ட தெரியாத சமயமது. ஆனாலும் ஆசையாக இருக்க, பூம் பூம் மாடு போல தலையை ஆட்டிவிட்டாள்.

ஆனால் அன்று அதற்கு அவள் படப்போகும் பாடுதான் என்னென்னவோ!

 

தொடரும்…

Leave a Reply

error: Content is protected !!