UYS 25

UYS 25
அத்தியாயம் 25
நாட்கள் நகர நகர மகாவின் மனமும் சூர்யாவை நோக்கியே நகர்ந்தது. அவள் எத்தனை கட்டுப்படுத்தியும் முடியாமல்!
எதேச்சையாக அவனை பார்ப்பது போய், தேடியே பார்க்க ஆரம்பித்தவள், ஒரு நாளில் ஒரு முறையேனும் அவனை பார்த்தேயாக வேண்டும் என்ற அளவில் வந்து நின்றாள்.
உள்ளுக்குள், ‘இதுவெல்லாம் எங்கு சென்று முடியுமோ?’ என்று கலக்கம் வந்தாலும், எதையும் யோசியாது பெண்ணவள் மனம் அவனிடம் ஓடியது என்பதே மறுக்க முடியாத உண்மை.
அவனை உற்று கவனிக்க ஆரம்பித்தாள். அவன் பேச்சை, புன்னகையை, நடையை, ஏன் அவனையே!
ட்ரிம் செய்யப்பட்ட தாடி, அளவான மீசை, புன்னகையும் குறும்பும் தாங்கிய முகம், நல்ல உயரமாக… அதற்கேற்ற உடல்வாகோடு பார்க்க நிஜமாக ஹண்ட்ஸம் ஹங்க்தான்.
இதுவரை அவள் கவனித்ததில் அவன் ஒரு ப்யூர் நயன்ட்டீஸ் கிட் என புரிந்தது. அதுதான் அவளை மிகவும் கவர்ந்தது.
அவனுமே மகாவை கவனிப்பான். ஆனால் ஒரு பதற்றம், தடுமாற்றம் இருக்கும்.
மகா அவன் பார்வையை சந்திக்காமல் இருந்தால் மட்டுமே அவன் பார்வை நொடிகள் நீடிக்கும். இல்லாவிட்டால் உடனே பார்த்தானா என்பது போல திரும்பிக் கொள்வான்.
உள்ளே… நிறைய போராட்டம் அவனுக்குள். தவறு செய்கிறோமே என்ற தவிப்பு. மனதை அடக்க, உணர்வுகளை கட்டுப்படுத்த மிகவும் முயன்றான்.
ஆனால் அத்தனை முறையும் பரிதாபமாக தோற்றல்லவா போகிறான்!
அந்த தடுமாற்றம் ஏனென்று அவளுக்குப் புரியவில்லை.
சூர்யாவின் பார்வையை அவளும், மகாவின் பார்வையை அவனும் நன்கு உணர்ந்திருந்தாலும், ஒருவருக்கொருவர் பேச முயற்சிக்கவில்லை.
அவர்களுடன் இருக்கும் நண்பர்களுக்கே சிலருக்குத்தான் இந்த விடயங்கள் தெரிய வந்தது.
அவர்கள் எதையும் வெளிப்படையாக காட்டிக் கொள்ளவும் இல்லை. இவர்கள் கேட்கவும் இல்லை.
என்றேனும் கேலி பேச்சுக்கள் வரும். அதை சூர்யா அவனின் ஒரு கண்டிப்பான பார்வையில் முடிவு கட்டிவிடுவான்.
இப்படியாக சென்று கொண்டிருந்த சமயம், மகா… சூர்யா பேச ஒரு வாய்ப்பு கிடைத்தது. கிடைக்க வைக்க முயற்சித்தாள் அனு.
ஆனால் பேசினார்களா?
மகா நன்றாக படிப்பவள்தான். இருந்தும் கணிதத்தில் அவளுக்கு கொஞ்சமே தடுமாற்றம் வரும்.
அலைட் சப்ஜெக்ட்டாக கணிதம் வர, இவளும் வகுப்பில் கவனிக்கும் போது கூட, கூடுதல் சிரத்தையாக தான் இருந்தாள்.
ஆனாலும்… உள்ளே தோன்றியுள்ள இந்த புதியவகை உணர்வுகள், இவளின் படிப்பிலிருந்த கவனத்தை கொஞ்சமே சிதறச் செய்தது.
மூன்றாம் வருட மாணவிகள் போலல்லாது, இரண்டாம் வருட மாணவிகள் கொஞ்சமே பந்தா பண்ண, ஓரிரு வார்த்தைகளோடு பேச்சை முடித்துக் கொள்வர் அவர்களிடத்தில்.
அதனாலே அவர்களை விடுத்து அனுவிடம் சந்தேகம் கேட்க நினைத்தாள். எப்படியும் படித்துதானே இருப்பாள் என்ற எண்ணத்தில்.
இன்டெர்வலில் விஷயத்தை சொல்ல, அவளோ கெக்கே பிக்கேவென சிரிக்க ஆரம்பித்திருந்தாள்.
“க்கா…” என்று அவள் கோபமாக பார்க்க, முயன்று அமைதியானவள்,
“மகா… வடிவேல் சார் ஒரு படத்துல என்னையும் மதிச்சு கடன் கேக்குற, ஆனா கொடுக்க காசு இல்லையே… அப்டினு சொல்வாருல, அதுமாறி என்ன மதிச்சு கேக்குற… ஆனா சொல்லிக் கொடுக்க எனக்கு ஞாபகம் இல்லையே.” என்றாள் சிரிப்பாக.
முதல் வருடம் படித்தது மூன்றாம் வருடம் எங்கனம் ஞாபகம் இருக்கும்?
அனு… ஆவரேஜ் ஸ்டுடென்ட்தான். வீட்டிலேயே இருந்தால் திருமணம் நிச்சயம் என்றே படிக்கிறேன் என கல்லூரி வந்து கொண்டிருந்தாள்.
அப்படியிருக்க அவள் அந்த கணக்கை எப்படி ஞாபகம் வைத்திருப்பாள்.
அவளின் சிரிப்பில் கலந்து கொண்டாலும், மகா முகம் கொஞ்சம் வாடிப் போனது.
ஆசிரியரிடம் ஏற்கனவே இரண்டு முறை அந்த தலைப்பின் கணக்கைப் பற்றிக் கேட்டுவிட்டாள். அப்போது புரியும்படி இருப்பது, பிறகு மறந்து போய்விடுகிறது.
மீண்டும் மீண்டும் கேட்க சங்கடப் பட்டே, இவளிடம் உதவி கேட்டாள். அனு இப்படி சொல்லவும், உள்ளே சோர்ந்து போனது.
அதை கவனித்த அனு, “மகா… ஏன் இப்போ மூஞ்ச தொங்க போடுற? நான் வேணும்னா ஒரு ஐடியா சொல்றேன். உனக்கு ஓகேன்னா…” பூடகமாக அவள் சொல்ல,
“சொல்லுங்க க்கா…” மகா அந்த கணக்க சொல்லித்தர எதோ வழி கிட்ட போகிறதென்பதால் ஆவலாக கேட்க,
“சூர்யா… அவனுக்கு கணக்கு பிடிக்கும். இந்த சம்லாம் ஞாபகம் இருக்க நெறய சான்ஸ் இருக்கு. நான் வேணா அவன்கிட்ட சொல்லி…” என அவள் பேசிக் கொண்டே செல்ல, ‘என்னது’ என்பதுபோல அவளை அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்தாள். அதற்குமேல் அனு சென்ன எதுவும் மகா காதில் விழவில்லை.
அவனிடம் பேச கிடைத்த வாய்ப்பை ஒரு மனம் பயன்படுத்திக்கொள்ள சொன்னது.
‘முதலில் அவன் சொல்லிக் கொடுப்பான? தெரியுமா? இதுலாம் தேவையா?’ என்று இன்னொரு மனம் சொல்ல, யோசனையில் உழன்றவள் தலையை மட்டும் எல்லா பக்கமும் அசைத்து வைத்தாள்.
இன்டெர்வல் முடிந்த பிறகு வந்த சூர்யாவிடம் கேட்க, ‘இருக்கும் பிரச்சனையில் இது வேறா? ஏன் இப்படி?’ என்பது போல பார்த்தான்.
அவனே உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறானே!
நண்பன் மனம் புரிந்து அவனருகே இருந்த பரத் அவளை முறைக்கவும், ‘ஆத்தி…’ என நினைத்தவள், தான் செய்தது அதிகம்தான் என புரிய தன்னையே கடிந்து கொண்டு அமைதியானாள்.
மகாவும் சரி என்று தலையாட்டிவிட்டு வகுப்பிற்கு வந்த சற்று நேரத்திற்குப் பின்னே, ‘நாம என்ன பண்ணிட்டு இருக்கோம்.’ என தன்னையே திட்டிக் கொண்டாள்.
ஏனோ… கல்லூரி சேர்ந்த போது முழுவதும் படிக்கும் எண்ணம் மட்டுமே அவள் மனதில் வியாபித்திருந்தது. ஆனால் இப்போது?
அதுவும் தனக்கு என்ன வயது இப்போதே இதுவெல்லாம் அவசியமா என்று அவளுக்கே அவள் செயல்கள் மீது ஒரு அதிருப்தி வந்தது.
வீட்டிற்கு சென்றபிறகு… இதே நினைப்பில் சமையல் செய்து கொண்டிருந்தவள் கவனம் அங்கில்லாததால் காய்கறிகளை வெட்டும்போது கத்தி அவள் விரலை பதம் பார்த்தது.
“ஸ்ஸ்…” என வலியில் கையை உதறியவள் கைகளில் வழியும் ரத்ததத்தைக் கண்டு பயந்துவிட்டாள்.
தோட்டத்தில் கறிவேப்பிலை பறிக்க சென்ற தயானந்தன், மகள் போட்ட சத்தத்தில் அங்கு விரைந்தார்.
அவள் கைகளில் வடியும் குருதியில் பதறியவர், “என்னமா கவனமா பண்ண வேணாமா? நெனப்புலாம் எங்க இருக்கோ?” என கடிந்துவிட, அவளுக்கு உள்ளுக்குள் சுருக்கென்றது.
அவர் என்னவோ இயல்பாகதான் கடிந்தார். அவளுக்குத் தான்… அலைபாயும் அவள் மனதை சுட்டிக் காட்டியது போல இருந்தது.
அதில் கண்ணீர் வந்துவிட, “வலிக்குதா… ஹாஸ்பிடல் போலாமா டா…” மகள் அழுகையில் அவர் கேட்க,
அவர் கண்களிலுள்ள கலக்கத்தை அப்போதே புரிந்து கொண்டவள், “இல்ல… இல்லப்பா…ஒன்னுமில்ல. மருந்து போட்டா சரியாகிடும். லைட்டாதான் வலிக்குது.” என்றாள்.
அதில் நிம்மதி பெருமூச்சு விட்டவர், அவள் கைகளை கழுவி சுத்தப்படுத்தியப் பின், மருந்தை போட்டுவிட்டு, அவளை சமைக்க வேண்டாம் என சொல்லியவரே சமைத்தும் முடித்தார்.
சாப்பாடு வேண்டாம் என்றவளிடம், “பிளட் வேற அவ்ளோ சிந்திருக்கு. சாப்பிடாம தூங்கக் கூடாது.” என கண்டிப்பான குரலில் சொன்னவர், இல்லாவிட்டால் அகத்தியனிடம் சொல்லிவிடுவேன் என்று சொல்ல அமைதியாகிவிட்டாள்.
அவனுக்கு தெரிந்துவிட்டால் அவ்வளவுதான். கண்டிப்பாக நிறைய… நிறைய திட்டு கிடைக்கும்.
ஆனால் கற்பனையில் கூட எப்போதும் போல அதிலிருக்கும் அண்ணனின் கண்டிப்பே அவள் கண்களுக்கு பெரிதாக தெரிந்தது.
ஏனந்த கண்டிப்பு என்று புரிந்திருந்தால், அவனிடம் பாசத்திற்கு ஏங்காமல் கண்டிப்பில் அதனை உணர்த்துகிறான் என புரிந்து கொண்டிருப்பாள்.
சாப்பிட்ட பிறகு… டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் உள்ளம் சிந்தனையிலேயே இருந்தது.
உறங்கச் செல்லும் முன் சில பல முடிவுகளை எடுத்தவள், அதன்பின்னே நிம்மதியாக உறங்கினாள்.
அடுத்த நாளிலிருந்து மகாவிடம் கல்லூரியில் படிப்பில் கூடுதல் கவனம் இருந்தது.
தயக்கம் விடுத்து ஆசிரியரிடமே அந்த கணக்கிற்கான விளக்கத்தை கேட்டு உடனே பாயிண்ட் போட்டு குறித்து வைத்துவிட்டாள்.
அதுவும் தெளிவாக புரிந்துவிட, மனமும் கொஞ்சம் தெளிவானது.
சூர்யாவும் முன் போல அவளைப் பார்க்காமல், இயல்பாக இருந்தான். இருக்க முயன்று அதில் கொஞ்சம் வெற்றி கண்டான் எனக் கூறலாம்.
மகாவை பார்த்து அவன் உள்ளத்தில் எழும்… புது வகை உணர்வுகளை கட்டுப்படுத்தவும் முடியாமல், முழுமனதாக அதனை ஏற்றுக் கொள்ளவும் இயலாமலே இத்தனை நாட்களாக சுற்றிக் கொண்டிருந்தான்.
ஆனால் அன்று அனு சொன்ன பிறகு, அவளின் படிப்பில் கவனம் சிதற தான் ஒரு முக்கிய காரணம் என்ற எண்ணம் மட்டுமே எழுந்தது.
‘இப்போதே இதுவெல்லாம் தேவைதான? அவ பர்ஸ்ட் இயர்… நான் தேர்டு இயர். அன்று நண்பர்களிடம் பேசிய பேச்சென்ன நடப்பது என்ன?’ என்றெல்லாம் கேள்விகள் மனதுக்குள் வந்தது. அதன்பொருட்டே எதையும் வெளிப்படுத்தாமல் இருக்க முயன்றான்.
ஆகமொத்தம் இருவருமே, ‘அவசரம் கொள்கிறோமோ.’ என்ற எண்ணத்தினால் இப்போதைக்கு மனத் தெளிவுக்கு… படிப்பில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்திருந்தனர்.
‘சாதாரண ஈர்ப்பா… அதையும் தாண்டிய காதலா…’ என்ற ஆராய்ச்சிக்கும் நாட்களை பயன்படுத்திக் கொண்டனர்.
காதல் சரியா தவறா… என்றால், அது காதலர்களைகளையும் அவர்களின் காதலின் ஆழத்தையும் பொறுத்தது என்பதே உண்மை.
காதல் செய்யலாமா வேண்டாமா… என்றால், உண்மையான பக்குவமான காதல் நல்லது.
இவர்களும் அந்த பக்குவத்தை நோக்கிப் போகவே முயல்கிறார்கள். வெற்றியடையுமா அந்த முயற்சி என பார்ப்போம்.
தொடரும்…